கவிதை: இறந்துபோன சோழனின் தெருக்கள்…

- தம்பா (நோர்வே) -வருடங்கள் தொலைந்த போதும்
நாட்கள் நகரவில்லை.

ஊண் இன்றி உயிர் ஊன்றி
இரத்தம் உறையும் சத்தம் கேட்டு
ஊரும் உறையும்.
உதிர்த்தவனின் ஊமை சத்தம்
உறக்கத்தை கெடுக்கும்.

மாயம் தழுவிய கணவனும்
சோகம் தின்ற புத்திரருமாக
செழித்த மண்ணில் வறள்கிறது வாழ்வு.

விதியின் வீரியத்தை
வீதியில் விழுத்தி
விலகிப் போகிறது வியாக்கியானம்.

கள்வனைத் தீவிரமாக தேடும் அரசு
நல்லவனை நட்டாற்றில்
விட்டுவிடும் குதர்க்கம் பாரும்.

போரின் வீச்சம்
விண்ணின் விட்டத்தை
தாக்கிய போதினிலே
கெட்டவர் கயவரானது சில.
அமைதியில் ஆர்ப்பரிக்கும் ஆட்சியில்
பட்டவர் எல்லாம்
கயவராகும் காட்சி பாரும்.

அண்டவெளியின் துணிக்கைகளை
`சட்டலைட்டில் துப்பறியும் வல்லவன்
பத்து மைல் சுற்றளவில்
பல்லாயிரம் பேரை
பலகாலமாய் தேடும்
துர்பாக்கியம் பாரும்.

இருந்தவர் இறந்ததுண்டு
இறந்தவர் இருந்ததில்லை.

மனுநீதி கண்ட சோழனின் தெருக்களில்
மாய்ந்து மாய்ந்து மார்பில் அடிக்கும்
தாயின் குரல் கேட்ட
செவிடர்கள் யாருமுண்டோ?