கவிதை : “எண்ணச் சிறகுகள்!”

ஶ்ரீராம் விக்னேஷ்சிந்தனை   என்பது   பெருவானம்!  –  அதில்
சீறிப்   பறப்பது   அறிவாகும்! 
விந்தைகள்   புரிவது   அறிவாலே!  –  இதை
விளங்குவர்   இருப்பார்   நிறைவாலே!
சிந்தனை   வானில்   பறப்பதற்கு  –  எண்ணச்
சிறகுகள்   முளைப்பது   அவசியமே!
வந்தனை   செய்தே   வரவேற்போம்!  –  நல்ல
வளமிக்க   கருத்தினை  சிரமேற்போம்!

சிந்தனை வேறு ;  செயல் வேறு  –  வந்து
செறிந்திடும்   கருத்துக்கள்   பலநூறு!
வந்ததெல்   லாமரங்   கேறாது  –  அதில்
வடித்தெடுத்   தவையே   மாறாது!
இருபது   முடிந்து   நூற்றாண்டு  –  உலகு
எப்படியோ  வெல்லாம்   மாறியது!
ஒருபது   நூறின்   முன்னுள்ள  –  சில
உருப்படா   கருத்திங்கு   ஊறியது!
விஞ்ஞானத்தின்   வளர்ச்சியிலே  –  அவர்
விண்ணுல   கினிலே   பறக்கின்றார்!
அஞ்ஞானத்தில்   அழுந்தியதால்  –  இவர்
அசிங்கத்தினிலே   மிதக்கின்றார்!
ஜாதிச்சண்டை   மதச்சண்டை    –  அதில்
ஜாலப்பேச்சில்   நிலச்சண்டை!
ஏதும் வேறு   அறியாது  –  இதில்
ஏற்றம்   என்பது   கிடையாது!

கருத்துகள்   விதைத்துக்   காத்துவிட  –  பலர்
காலந்   தோறும்   அவதரித்தார்!
வருத்தங்கள்   கொண்டே   அவர்சென்றார்  –  அதை
வருந்திச்   சொல்ல   யார்வந்தார்!
கருத்துகள்   வருவது   போதாது  –  அதை
கவரும்   சிந்தனை   வரவேண்டும்!
அருத்தங்கள்   வாழ்வில்   அமைவதென்றால்  –  மனம் 
அடுத்தாரைப்   பேணும்  திறன்வேண்டும்!

bairaabaarath@gmail.com