எக்கணமும் இக்குமிழி உடைந்து விடலாம்.
அவ்விதமே எனக்குத்தோன்றுகிறது.
தற்செயற் சாத்தியங்களில் சுழலுமிருப்பில்
அவ்விதம்தான் எனக்குத்தோன்றுகிறது.
சிறு மாற்றம் கூட சில வேளைகளில்
இருப்பினைக் கேள்விக்குறியாக்கும்
அபாயமுண்டு என்பதை
உணர்வதற்கு இயலாத
ஆட்டங்களில், ஓட்டங்களில்
விரைந்து செல்லும் வாழ்வு
இதனைத்தான் எனக்கு உணர்த்துகிறது.
இயலாமையிலிளகும் நெஞ்சினை
அயராத ஒன்றென மாற்றுதற்கு
அப்பொழுதெல்லாம் முயல்வதே
இருப்பின் பெரும் பொறுப்பாக
மாறி விட்டதெந்தன் இருப்பு.
இருப்பின் அழகை இரசிப்பதற்கு,
அதன் பின்னால்
பொதிந்திருக்கும் அறிவை,
ஆதியின் அடிப்படையை,
அந்தத்தின் காரணத்தை,
புரிதற்கு,
இருக்கும் பொழுது போதவில்லை
என்றே படுகிறது.
அப்பொழுதுதான் மீண்டும் , மீண்டும்
நெஞ்சிலொரு வினா எழும்:
ஏன்? ஏன்? ஏன்?
இருந்தும் இருப்பவற்றின்
இயல்பை, அழகை இரசிப்பதற்கு,
வியப்பதற்கு என் இனிய பொழுதினை
நான் பயன்படுத்துவதே அதிகம்.
ஏனெனில் அதில் அடையும்
இன்பத்தால்தான்.
கண்ணுக்குத்தெரியா சிற்றுடல்
தொடக்கம் , பெருவரை வரை
எனக்குத்தெரிவதெல்லாம்
நேர்த்தி மிக்க படைப்பின் தன்மைதான்.
அறிவின் ஆட்சிதான்.
அவ்வறிவினை அறிதற்கு முயலுதலே
அடியேனின் வழக்கமாகிக் கழியும் பொழுதில்
சிறக்குமென் வாழ்வு!