கவிதை: காலம் மிகவும் வலியது!

காலம் மிகவும் வலியது!

காலம் மிகவும் வலியது.
முகநூற் பதிவொன்றுக்கு நண்பனொருவன்
இட்ட எதிர்வினையிது.
உண்மைதான் நண்பா!
காலம் மிகவும் வலியதுதான்.
நிலையற்ற காலம் கூடச்
சார்பானதுதான். இருந்தும்
காலம் மிகவும் வலியதுதான்.
இருப்பில் இருக்குமனைத்தையுமே
இங்கு
நினைவுகளாக்கி நனவிடை தோய
வைத்துவிடும்
காலம் மிகவும் வலியதுதான்.
உண்மைதான் நண்பா!
மின்காந்த அலைகளுக்குள் அனைத்தையும்
அடக்கிவிடும்
காலம் மிகவும் வலியதுதான்.

‘நேற்றுக்கேட்ட மொழி, நேற்றுப் பார்த்த விழி’
அனைத்தையுமே அகத்தினடுக்குகளுக்குள்
மின் விளையாட்டாக்கி வைத்துவிடும்
காலம் மிகவும் வலியதுதான்.
நினைவுச்சிலைகளுக்குள் இருப்பினை
நிறுத்திவிடும்
காலம் மிகவும் வலியதுதான்.
நண்பா! காலம் மிகவும் வலியதுதான்.
இருப்பில் மிஞ்சியிருப்பவை
பிரபஞ்சத்துக் காலவெளிகளினூடு
விரையும் அலைகள்தாம்; மின்காந்த அலைகள்தாம்.
பார்ப்பவை; கேட்பவை; ஏன் நினைப்பவை
அனைத்துமே அலைகள்தாம்.
அலைகளாக்கி அலைய வைத்துவிடும்
காலம் மிகவும் வலியதுமட்டுமல்ல
நண்பா! மிகவும் கொடியதும் கூடத்தான்.