கவிதை: நாமெனும் நான்காவது தூண்

கவிதை: நாமெனும் நான்காவது தூண்

வயிற்றுப்பிழைப்புக்கென இழவு வீடுகளில்
ஒப்பாரி வைப்பவள் ‘ருடாலி’
அப்படியும்
வாய்விட்டுக் கதறிமுடித்துக்
கூலியை வாங்கிமுடிந்துகொண்டு
வழியேகும்போதெல்லாம்
ஒவ்வொரு வீட்டின் ஆற்றொணாத் துயரமும்
அவள் மீதும் தவறாது ஒட்டிக் கொள்ளும்.
இரவு கயிற்றுக்கட்டிலில் படுத்தபடி
ஒரு கையறுநிலை மனதை சுருக்கிட்டு இறுக்க
அண்ணாந்து வானத்தை வெறிக்கும் அவள் கண்களில்
மாட்டிக்கொண்டு பதறும் காலம் உருண்டிறங்கும்
நீர்த்துளிகளாய்.
இழவுவீட்டில் அலறியழும்போதெல்லாம்
இறந்துவிட்ட கணவன்,
இரண்டு பிள்ளைகள்,
இளமை, யதன் இனிய மாலைகள்
வெள்ளம் அடித்துக்கொண்டுபோய்விட்ட தன் ஊர்மக்கள்
பள்ளத்தில் விழுந்து காலொடிந்து மடிந்த ஆட்டுக்குட்டி
மெள்ள மெள்ள அடங்கிப்போன பொன்னியின் உயிர்
எல்லாமும் உள்ளே தளும்பித் தளும்பி மேலெழும்பி
சொல்லுக்கப்பாலான பிளிறலாய் வெளிப்படும்
அவளைப் பிளந்து.

இன்றுமொரு இழவுவீட்டில் அழுதுமுடித்து வந்தவள்
கலைந்த கூந்தல் முடியாமல்,
கசங்கிய சீலையின் கிழிசலோடு
ஒரு கவளமும் உண்ணப்பிடிக்காமல்
ஒரு மூலையில் சுருண்டபோது_
கையெட்டும் தொலைவிலிருந்த எதிர்வீட்டின்
விரியத்திறந்த கதவுவழியே தெரிந்த
தொலைக்காட்சிப்பெட்டியினுள்ளே
அழுது புலம்பிக்கொண்டிருந்த
அந்த நான்குபேர்
அத்தனை திருத்தமான ஆடையணிகளில்
அத்தனை நரையையும்
அறவே காணதொழித்த கருப்புச்சாயத்
தலைமுடி மின்ன
ஒத்திகை பலமுறை பார்க்கப்பட்டதான
அதிதீவிர முகபாவங்களோடு
ஆக்ரோஷமாய் பேசிக்கொண்டிருந்தார்கள்.
‘அமைதி திரும்புதல்’ என்றொருவர்
சொல்லி முடிப்பதற்குள்
‘திரும்பலாகாது எதுவும் –
எப்போதும் முன்னேறிச்செல்லவேண்டும்’
என்று அடுத்திருந்தவர்
மனப்பாடமாயிருந்த வாசகத்தை எடுத்துவீச
கணநேரம் வாயடைத்துப்போன நெறியாளரை
ஆசுவாசப்படுத்த
கடமை தவறாமையில் கதிரோனையும் விஞ்சும்
‘அட அட என்ன அழகு’ விளம்பரம்
அரையாடையில்
காலகட்டி வீறிட ஆரம்பித்தது.

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

ramakrishnanlatha@yahoo.com