இளம்நண்பர் சுறுசுறுப்பர் சிறுகதையை நான் படித்தேன்.
மளமளென்று எழுதியது… மைகூடக் காயவில்லை…
இருந்தசிறு குறைகள்என் துருதுருப்பைக் குறைக்கவில்லை.
புரிந்து அதனைப் படித்து விட்டுப் பல மணிகள் சிந்தித்தேன்.
அன்புக்கு இலக்கணமாய் காதலுக்கோர் பொற்சிலையாய்
இன்சுவைகொள் இலக்கியமாய் மானிடத்தின் முதன்மையனாய்
என்னுளத்துள் இடம்பிடித்தான் கதைமாந்தன் என்னும் ‘அவன்” —
தன்-இனியாள் மறைவாய் மணந்தும் கடுகளவும் வெறுக்காதான்.
அடுத்தநாள் காலையிலே படுக்கைவிட்டு எழுமுன்னம்
நடுநிசியில் தொடங்கியஎன் நடுவு-நிலை ஆய்வுகளின்
முடிவுகள் முன்னிடம்பெற்று மனத்திரையில் ஓடுகையில்
சடுதியாய் என்கண்கள் சலக்குளமாய்ப் பனித்தன பார்!
என் நண்பர் கதை-ம(h)ந்தி சுயநலத்தாள் சிறுமனத்தாள்
தன்மனத்தை மாற்றிக் காதலனைத் துறக்க> அவளைக்
கலியாணச் சந்தையிலே பெற்றோர்கள் பார்த்து எடுத்த
சிலுவலன் மணந்து மூன்று மகவுகள் வர மறைந்தான்.
பத்தாண்டு போனபின்னும் பண்பற்றாள் அவனைக் கண்டு
‘இத்தினமே வருவோம் நாம் சத்தியமாய் நீ விரும்பின்”
என்றாளே அவன் காலின் தூசுக்கும் அருகதையற்றாள்@
முன்றானை முடிச்சுக்குள் மணாளரெனும் புன்நினைவாள்!
அன்றிரவென் படுக்கையிலே அந்நினைவு முற்றி நின்று
என்னவளின் ஞாபகத்தை இருந்தாற்போல் முன்கொணர
என்னையுமே அறியாமல் கண்மடல்கள் திறந்திருக்கச்
சின்னஞ்சிறிசாய் அரும்பிச் சீக்கிரம் என் போர்வையினைக்
கண்ணீர்மழை நனைத்துக் கசிந்து எனையும் குளிப்பாட்டி
மண்ணினிலே பிறந்தோர்கள் மரிப்பதை மறக்கச் செய்து
விண்சென்ற என்னவளை விதம்விதமாய் விதந்துருகிப்
புண்ணான என் கண்கள் பல தினங்கள் பனித்தன காண்!