கவிதை: வண்ணத்துப் பூச்சியின் எண்ணச்சிதறல்கள்!

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -வண்ணம் தோய்ந்த சின்னம் நான்.
வானவில்லின் சாரம் நான்.
சின்னஞ்சிறிய சிறகை அசைத்துச்
சீட்டாய்ப்பறக்கும் சிறுபறவைநான்.

கூட்டைப் பிளந்து  காற்றில் மிதந்து,
கண்டேன் காட்சி  கண்கொள்ளா….!
ஏட்டில் அதுவர , பாட்டில் மதுதர,
காட்டும் சொல்லுக்குத்  தமிழ் நில்லா….!

நித்தம் மலர்ந்தும், மதுவால் நிறைந்தும்,
சொக்கும் மலர்கள் தோழிகளே….!
சித்தம் குளிர்வேன்,  முத்தம் தருவேன்,
சுற்றம் அணைப்பேன், வாழியவே….!

கொட்டும் அருவியும் , முட்டும் மேகமும்,
சொட்டும் எழிலைச் சொல்வதற்கு….!
கட்டி அணைப்பதும், கனியாய் இனிப்பதும்,
சொக்கும் தமிழில்  வேறெதற்கு….?

குதித்தே ஓடும் ஓடைதன்னில்,
குளித்தே ஆடும் மீன்கூட்டம்….!
பதித்தே தடத்தைப் பரவும் அதனைப்
பார்ப்போர் கொள்வார்  முழு நாட்டம்….!

தென்றல்  தவழச்   சாரல் உதிரத்,
திங்கள் ஒளியில் திரள் காட்சி…..!
வந்திடும் உளத்தினில், வாழ்ந்திடும்  நினைப்பினில்,
வந்தனம் இயற்கை  வளம் சாட்சி…!

உங்கள்  நண்பன்  உற்றேன் உவகை….
உண்மை சொன்னால் பேருவகை….!
கண்ணில் கண்ட காட்சியை உரைத்தேன்,
கண்டீர் இதன்மேல்  ஏது(உ)வகை…?

மதுவை உண்ட  மயக்கத் தோடும்,
மனதில் கண்ட மகிழ்ச்சி யோடும்,
நிதமும் உறையும் கூட்டில் நானே,
நிறைவில்  மூழ்கி நித்திரை ஆனேன்….!

மின்னஞ்சல்: snrk1981@gmail.com