காலக் கடிதக் குறிப்புகளின் பயணம்.
சில கடிதங்கள் இன்னமும் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு முன் வந்திருந்த கடிதங்களில் குறிக்கப்பட்டிருந்த
அதே முகவரி.
கடிதம் அடைய வேண்டிய முகவரி மாறாதிருந்தாலும்
அதனை அனுப்பும்
நபர்களின் முகவரிகள் நிச்சயமாய்
வேறாகவே இருந்தது.
அதே போல் மற்றொன்றாக ஒரு தகவல்
அக்கடிதங்கள் வெவ்வேறு காலத்தில்
அதே முகவரியில் வாழ்ந்த வேறு வேறு நபர்களுக்கானது.
எனில், அது வேறு வேறு காலத்தில் எழுதப்பட்டவைகளே.
அவ்வெழுத்துக்களை வாசிக்க வேண்டுமெனில்
அந்நபரின் குறிப்புகளை முதலில் கண்டடைதல் வேண்டும்.
பழங்கால எகிப்திய நாகரீக ‘கியூனிபார்ம்’ எழுத்துக்களையும்,
சிதைந்த ‘சிந்து எழுத்து’ முறைகளுமாய் இருக்குமெனில்
நைல்நதியின் பாதையோடும்,
தோலால் வரையப்பட்ட மேப்பில் குறிக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு
ஈரானிய ‘மெசபடோமிய’ நாகரீகத்திற்குள் நுழைந்து
அந்நபர் குறித்த தகவலை நாம் திரட்டியாக வேண்டும்.
இக்கடிதத்தையும் பிரிக்க வேண்டாமென்ற குறிப்புகளோடு
எனது மேசையின் மேல் உறைகிழிக்கபடாமல்
வெறித்தப் பார்த்தன அவ்வெழுத்துகள்…
பெருநாட்டு நீண்ட அலகு பறவையாய்.
* கியூனிபார்ம், சிந்து எழுத்து – இரண்டும் பழங்கால சித்திர எழுத்து முறைகளுள் ஒன்று.
சகதியுடம்பு
சகதியில் பதிந்த கால்தடங்களில்
ஆட்டக்காரர்களின் வேகம் பதிந்துகிடக்கிறது.
மழை அவர்களுக்காகவே சடசடவென பெய்ததை
நடு கோட்டை தொடவேண்டி பாய்ந்தவனின் முகம்
அழுந்த பதிந்திருந்தது அச்சகதி நிலத்தில்.
சின்னஞ் சிறுவர்களின் புலிக்கால்கள்
எதிராட்டக்காரர்களின் மீது தாக்குதல் தொடுத்ததையும்
அவன் பறந்து போய் எல்லைக் கோடு தாண்டி விழுந்ததையும்
பதிந்து கொண்டது அதே சகதி.
மழைக்காலச் சகதியுடம்போடு
குதியாட்டம் போட்டவர்களின் புலிக்கால்கள்
பொக்லைன் கொண்டு தோண்டப்படுவதில்
சகதியுடம்பு மண்ணாய்ச் சிதறி
உடைபடுகிறது.
karigaikutty@gmail.com