குமரன் பொன்னுத்துரை : நினைவுகூரலும் கருத்துப் பகிர்வும்

குமரன் (பொன்னுத்துரை)தோழர் குமரன் பொன்னுத்துரை முதலாம் நினைவுப் பேருரையும் அதனைத் தொடர்ந்த தோழர்களின் நினைவுகூரலும் கருத்துப் பகிர்வுகளும்  நவம்பர் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் லா சப்பல் செயின்ட் புறுனோ மண்டபத்தில் நட்பார்ந்த சூழலில் நிறைவாக நடந்து முடிந்தது. பல்வேறு அரசியல் நம்பிக்கைகள் கொண்ட 75 நண்பர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அமர்வுக்கு தோழர். அசோக் யோகன் தலைமையேற்று தோழர். குமரன் தொடர்பாகத் தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். குமரனோடு பழகிய பல்வேறு நண்பர்கள் மற்றும் தோழர்களின் குமரன் குறித்த கூட்டுநினவுகளைப் பகிர்ந்துகொள்வதாக அசோக் யோகனின் நினைவுகூரல் அமைந்திருந்தது.

” குமரனின் மறைவின் நான்கு மாதத்திற்கு பின்னர் அவரின் வாழ்வை கௌரவிக்கு முகமாக நாம் இன்று   சந்திக்கிறோம். இன்று எமது நோக்கம் வாழ்ந்து மறைந்த குமரனின் வாழ்க்கையை பற்றிய மேலெழுந்தவாரியான போற்றிப் புகழ்தலையோ அல்லது தூற்றுதலையோ செய்வதல்ல. இந்த வகையான அணுகுமுறை அவரின் வாழ்வை வழிநடத்திய புறநிலை விதிகளைப் புரிந்துகொள்வதற்கோ மேலும் இன்றைய இளம் தலைமுறை அதிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொள்வதற்கோ எந்தப் பங்களிப்பையும் செய்யப்போவதில்லை. குமரன் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத ஜனநாயகக் கடமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் 1970 களில் ஈர்க்கப்பட்ட இளைஞர்களின் தலைமுறையை சேர்ந்தவர்களில் ஒருவராக இருந்தார். குமரன் ஒரு அரசியல் மனிதனாக தனது வாழ்க்கையின் பெரும் பகுதியினை வாழ்ந்திருந்தார். அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு தசாப்தங்களும்  உலக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களோடும் அது இலங்கையில் உண்டாக்கிய தாக்கங்களோடும் இணைந்து பல வேறுபட்ட பரிணாமங்களை கொண்டதாக இருந்தது. அவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு தசாப்தமும் மிகவும் முரண்பட்ட தன்மை கொண்டதாக இருந்தது. அவரது பலத்தையும் பலவீனத்தையும் புறநிலமைகளில் நிகழ்ந்த மாற்றங்களை பற்றிய ஒரு கவனமான படிப்பினைக்கூடாகவே அதனை புரிந்துகொள்ள முடியும் ”.

அசோக் யோகனின் நினைவுகூரலைத் தொடர்ந்து, ‘போராட்ட வாழ்வும் வரலாற்றில் வாழ்தலும்’ எனும் தலைப்பில் யமுனா ராஜேந்திரன் முதலாம் நினைவுப் பேருரையை ஆற்றினார். 75 நிமிடங்களில் அவரது உரை அமைந்திருந்தது.

‘போராட்ட வாழ்வும் வரலாற்றில் வாழ்தலும்’ எனும் தலைப்பில் யமுனா ராஜேந்திரன் முதலாம் நினைவுப் பேருரையை ஆற்றினார். 75 நிமிடங்களில் அவரது உரை அமைந்திருந்தது. “ விடுதலைப் போராட்டத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அறமும் வரலாற்றில் புரட்சியாளர்கள் வகித்த பாத்திரமும் குறித்ததாக அவரது உரை இருந்தது. மார்க்சீய ஆசான்களான மார்க்ஸ்,லெனின், மாவோ போன்றவர்கள் அறம் என்பது குறித்து விரிவாக எழுதியிருக்கிவில்லை. அவர்கள் அவாவிய தொழிலாளி வர்க்க சர்வதேசியம், சோசலிசம் மற்றும் அதனை அடைவதற்கான எல்லாச் செயல்பாடுகளும் அறத்தின் கீழ் நிரல்படுத்தக் கூடியதாக அவர்களைப் பொருத்து இருந்தது. நிலவிய ஒடுக்குமுறை சமூகம், சுரண்டல் சமூகம், அதனைக் காத்து நின்ற மதம் மற்றும் அரசு போன்றன தம்மை நிலைநாட்டிக் கொள்ள அறங்களையும் ஒழுக்கங்களையுமே ஆயுதங்களாகக் கொண்டிருந்தன. இந்தச் சமூகங்களை மாற்ற வேண்டியிருந்தவர்கள் நிலவிய அறங்களையும் நியமங்களையும் ஒழுக்கங்களையும் மீற வேண்டியவர்களாக இருந்தார்கள். இச்சூழலில் மாற்றத்திற்கான அரசியல் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்த மார்க்சிய ஆசான்கள் அறம் என்ற வலைக்குள் தாம் வீழ்ந்துவிடுவதிலிருந்து தம்மை விலக்கிக் கொண்டிருந்தார்கள்.

இக்காரணங்களால் அவர்களிடம் அறம் குறித்த அக்கறை இல்லை எனவும், அவர்கள் எதிர் மனிதாபிமானிகள் எனவும் மார்க்சீய மற்றும் போராட்டங்களின் எதிரிகளால் வசை பாடப்பட்டார்கள். ஒடுக்குமுறை, சுரண்டல், அந்நியமாதல் போன்றவற்றை ஒழித்து, மனித சாராம்சத்தை மீட்பதையும், மனித ஆற்றலான உழைப்பை சுதந்திரமாகப் பிரயோகிக்கக் கூடிய சூழலை உருவாக்க முனையும் போராட்ட வாழ்வை அவர்கள் தேர்ந்தமை அடிப்படையில் ஒரு அறம்சார் நடவடிக்கை என்பதனை மார்க்சிய எதிரிகள் மறந்துவிட்டர்கள். கார்ல் மார்க்ஸின் பொருளியல் தத்துவஞானக் கையெழுத்துப் படிகள், வெகுமக்களிடம் போராளிகள் கடைபிடிக்கவேண்டிய மாவோவின் ஒழுக்க நெறிக் கட்டளைகள், சே குவேராவின் சோசலிசமும் மனிதனும் எனும் குறுநூல் போன்றவையே மார்க்சிய அறத்தின் அடிப்படைகள்.

போராட்ட அறம் தொடர்பாக அறுபதுகளிலும் எழுபதுகளிலும் மேற்கிலும் ஜப்பானிலும் பாலஸ்தீனத்திலும் அக்காலத்திய போராளிகள் சிலவற்றை ‘நம்பினர்’. விமானங்களைக் கடத்துதல், விமான நிலையத் தாக்குதல்கள், ஆட் கடத்தல், பகாசுர நிறுவனக் கட்டிடங்களில் குண்டு வைத்தல், தற்கொலைத் தாக்குதல் போன்றன அல்ஜீரிய, பாலஸ்தீன போராளிக் குழக்களின், ஜெர்மனியின் ரெட் பிரிகேட், ஜப்பானின் ரெட் ஆர்மி போன்ற மார்க்சியக் குழுக்களின் போராட்ட முறைகளாக இருந்தன. மிகப் பெரும் ஆயுத வலிமையுள்ள எதிரியை எதிர்த்துப் போராடுவதற்கு, உலக நாடுகளின் வெகுமக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு, அரசுகளுக்கு அழுத்தம் தருவதற்கு இதைத்தவிர சிறுபான்மையினருக்கு வேறு வாய்ப்புகள் விட்டு வைக்கப்படிருக்கவில்லை என இதனை ஆதரித்த கோட்பாட்டாளர்களாக ழான் பவுல் சார்த்தரும், பிரான்ஸ் பெனானும் இருந்தனர்.

இன்னொரு புறம் ஆப்ரிக்காவிலும் இலததீனமெரிக்காவிலும் ஆயுதப் போராட்டத்தை வெகுமக்கள் போராட்டங்களுடன் இணைக்க முயன்ற பிடல் காஸ்ட்ரே, சே குவேரா, அமில்கார் கேப்ரல் போன்றவர்கள் தேசியக் கலாச்சாரம், கெரில்லா யுத்தம், எதிரிகள், நண்பர்கள், வெகுமக்களின்பால் போராளிகள் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகளின் அறம் குறித்து நடைமுறையில் திட்டங்களை வகுத்தவர்களாக, அதனைக் கோட்பாட்டுருவுக்குள் கொணர்ந்தவர்களாக இருந்தார்கள்.

வெகுமக்கள் மீது இவர்கள் தாக்குதல் தொடுக்கவில்லை. தற்கொலையை ஒரு ஆயுதமாக ஏற்கவில்லை. சகோதரக் கொலைகளை அரசியல் மாறுபாடுகளைத் தீர்க்கப் பாவிக்கவில்லை. சரணடைந்தவர்களின் ஆயுதங்களைக் களைந்துவிட்டு விடுவித்தார்கள். சிறார்களைப் படையில் சேர்ப்பதைத் தவிர்த்தார்கள். வெகுமக்கள் கூடுமிடங்களில் குண்டு வைக்கவில்லை. ஆட்கடத்தலை ஒரு அரசியலாகச் செய்யவில்லை. வாய்ப்புக்கேடாக, போராட்டத்தை மக்கள் மயப்படுத்த வேண்டியிருந்த ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் இத்தகைய அறங்கள் குறித்து அதிகமும் கவலைப்படவில்லை.

குமரன் பொன்னுத்துரை : நினைவுகூரலும் கருத்துப் பகிர்வும்போதைப் பொருள் கடத்தல், வங்கிகளைக் கொள்iளையடித்தல், வெகுமக்களின் மீது வரி அறவிடுதல், செல்வந்தர்களையும் ராஜதந்திரிகளையும் கடத்திக் கப்பம் கேட்டல் என்பன, தமது இயக்கங்களுக்கு நிதி சேர்க்கும் முறைகளாக உலகின் பெரும்பாலுமான போராட்ட இயக்கங்கள் ‘நம்பின‘. சித்திரவதைகளையும் சிறைகளையும் அவை கொண்டிருந்தன. சோவியத் யூனியனின் வீழச்சி, செப்டம்பர் 11 தாக்குதல், பின் புரட்சிகர சமூகங்கள் ஆயுதவிடுதலை இயக்கங்களை நிராகரித்தமை போன்றன இத்தகையை வழிமுறைகளை வழக்கொழிந்தவையாக ஆக்கின. போராட்டத்திற்கான அறமும் ஒழுக்கமும் வழிமுறையும் எனும் கேள்விகள் இப்போது அதிமுக்கியத்துவம் பெற்றன. போராட்ட வழிமுறைகளில் உதிர்க்கப்பட வேண்டிய ‘நம்பிக்கைகளும், கடைப்பிடிக்கப்பட வேண்டிய அறங்களும்’ இப்போது போராட்ட இயக்கங்களின் முன் மிகப்பெரும் கேள்விகளை எழுப்பின. இந்த கேள்விகளை ஈழ விடுதலைப் போராளிகளும் எதிர்கொள்ள வேண்டியிருந்தன. 

ஆயுத விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாத மார்க்சியர்களும் சரி, ஆயுத விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளும் சரி, தாம் ‘நம்பிய’ இலட்சியங்களுக்காக அவர்கள் நிலவிய அறங்கள், ஒழுக்கங்கள், நியமங்கள் போன்றவற்றை மீறியவர்கள் தான். அதையே தமது விடுதலைச் செயல்பாடு எனக் கண்டவர்கள் அவர்கள். இந்த மீறலின் வழி அவர்கள் நிலவிய வாழ்வை, உறவுகளை, சந்தோஷங்களை இழந்தவர்கள். மனைவியை, காதலியை, தாய் தந்தையரை, சகோத சகோதரியை, நட்புகளை, சொந்த இருப்பிடங்களை இழந்தவர்கள். பாசிசத்திற்கும், இனவாதத்திற்கும், ஒடுக்குமறைக்கும் எதிராக உயிரையும் இழந்தவர்கள். இந்த இழத்தலையே தமது விடுதலையாகக் கண்டவர்கள் இவர்கள். இந்த மீறலையும் இழப்பையும் மேற்கொண்ட அனைத்துப் போராளிகளும் நமது தலைவணங்குதலுக்கு உரியவர்கள். இவர்கள் வரலாற்றில் வாழ்கிறார்கள். ஆனால், இவர்களது அனைவரது வாழ்வும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா?
 
வாய்ப்புக் கேடாக, அது வரலாற்றில் நிகழவில்லை. ஜெர்மனியின் மகத்தான மக்கள் கவிஞன் பெர்டோல்ட் பிரெக்டின் ‘ஒரு படிக்கத் தெரிந்த தொழிலாளியின் கேள்விகள்’ எனும் கவிதை வரிகள் இவவாறு இருக்கின்றன :

இளைய அலெக்சான்டர்
இந்தியாவை வெற்றி கொண்டார்.
அவர் தனியனாகவா வெற்றி கொண்டார்?
சீசர் கால் பிரதேசத்தை வென்றார்.
அவருடன் ஒரு சமையல்காரர் கூடவா இருக்கவில்லை?
ஸ்பெயின் மன்னர் பிலிப்
தனது படையணிகள் வீழ்ந்தபோது குலுங்கி அழுதார்
அவர் மட்டும்தானா அழுதார்?
இரண்டாவது பிரெடரிக்
ஏழாண்டு கால யுத்தத்தில் வென்றார்
அவரோடு பிறர் எவர் வென்றார்?

ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு வெற்றி
வெற்றி பெற்றவர்களுக்கு விருந்தை
யார் சமைத்துப் போட்டார்கள்?
ஒவ்வொரு பத்தாண்டிலும்
ஒரு மாபெரும் மனிதர் உருவாகிறார்
யார் இவற்றிற்கு விலை கொடுத்தார்?

பல்வேறு அறிக்கைகள்
பல்வேறு கேள்விகள்

தத்துவவாதிகள், கோட்பாட்டாளர்கள், போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்கள் போன்றோரின் வாழ்வு பதியப்பட்டிருக்கிறது. இவர்களின் அளவே மீறலையும் இழப்பையும் மேற்கொண்ட போராளிகளின் வாழ்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? அதைப் பதிவு செய்ய வேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் இருக்கிறது. வரலாற்றில் வாழ்ந்த அந்த மனிதர்களின் வாழ்வு, போராட்டத்தினிடையில் மீறல்களுடனும் இழப்புக்களுடனும் வாழ்ந்த அந்தப் போராளிகளின் வாழ்வும், வெகுமக்களின் வாழ்வும் பதிவு செய்யப்பட வேண்டும். வணக்கத்திற்குரியது அவர்தம் வாழ்வு“

யமுனா ராஜேந்திரனின் உரையை அடுத்து அரசியல் செயல்பாட்டாளர்கள்  சுதன் ராஜா, உதயகுமார், துரை சிங்கம், வன்னியசிங்கம், மணிக்ஸ், எழுத்தாளர்கள் வி.ரி.இளங்கோவன், அருந்ததி, உயிர்நிழல் லக்சுமி, ஊடகவியலாளர் எஸ்.கே.ராஜன், குறும்பட இயக்குனர் குணா போன்றவர்கள் பங்கு பற்றிய கருத்துப் பகிர்வு இடம் பெற்றது. கருத்துப் பகிர்வில் தோழர்.குமரன் ஈழமக்களின் மீதான அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நிகழ்வுகளிலும் பங்கு பற்றிய நட்பார்ந்த மனிதர் எனும் அவரது கனிவான மனநிலை சுட்டிக்காட்டப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகளின் தனிப்பட்ட வாழ்வும் அவர்களது இலட்சியக் கடப்பாடும், தியாக மனப்பான்மையும் போன்றவை குறித்து தோழர்கள். ஜீவானந்தம், சண்முகதாசன் ஆகியோரது வாழ்வை முன்னிறுத்தி நினைவுகூரப்பட்டது. ஆயுத விடுதலைப் போராட்டத்தின் இடையில் விமர்சனத்திற்கான இடம், இனத்தேசிய விடுதலைப் போராட்டச் செயல்பாடுகளினூடே சாதிய விடுதலையும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் போன்றன குறித்தும் கருத்துப் பகிர்வு நிகழ்ந்தது. மரபான விளக்கம் போன்று சாதியம் என்பது மேற்கட்டுமானம் சார்ந்தது அல்ல; அது அடிக்கட்டுமானம் சார்ந்தது; உற்பத்தி சாதனங்களுடனும் உற்பத்தி உறவுகளுடனும் பிணைந்தது என்பது வலியுறுத்தப்பட்டது. விடுதலை பெற்ற ஈழம் சமூகம் என்பது சாதிய, பெண் விடுதலைச் சமூகமாகவும் இருக்க வேண்டும் எனும் பார்வை முன்வைக்கப்பட்டது.

பாலஸ்தீன ஆயுத விடுதலைப் போராட்டத்தினிடையிலும் விமர்சனத்தை வலயுறுத்திய கோட்பாட்டாளர்களாக எட்வர்ட் சைத், மஹ்முத் தர்வீஸ் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள், பெனான், காப்ரல். குவேரா போன்ற கோட்பாட்டாளர்களை ஆயுத விடுதலை இயக்கங்கள் தோற்றுவித்திருக்கிறது என்பன போன்ற கருத்துக்கள் சுட்டிக்காட்டப்பட்டன. எப்படி ஈழ நிலைமையில் ஒருவர் சமவேளையில் சாதிய, இன, பால் அடையாளங்களுடன் இருக்கிறார் எனவும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க்குற்றும் குறித்தும் ஈழத்துத் தலித்தியம் பேசுபவர்கள் பேசுவதேயில்லை என்பதும், இது விடுதலைச் செயல்பாடு அல்ல எனவும் சுட்டிக் காட்டப்பட்டது.

குமரன் பொன்னுத்துரை : நினைவுகூரலும் கருத்துப் பகிர்வும்மிகுந்த நட்புணர்வுடனும் தோழமையுணர்வுடனும் நடைபெற்ற இக்கூட்டத்தில் இறுதிவரையிலும் 75 பார்வையாளர்களும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள். விவாதம் நட்பார்ந்த சூழலில் இடம்பெற்றது. எவரும் எவரது பேச்சையும் இடையில் குறுக்கிட்டுப் பேசவில்லை. தங்குதடையற்ற பேச்சுச் சுதந்திரம் செயல்படுத்தப்பட்டது. மாலை நான்கு மணிக்குத்  துவங்கிய கூட்டம் இரவு எட்டரை மணி வரையிலும் நீண்டது. அசோக் யோகனின் அறிமுகவுரை 5 நிமிடங்கள், யமுனா ராஜேந்திரனின் நினைவுப் பேருரை 75  நிமிடங்கள், தேநீர் இடைவேளை 15 நிமிடங்கள் போக, 3 மணிநேரங்கள் முழுமையாக வந்திருந்தவர்களின் கருத்துப் பகிர்வுக்கெனவே ஒதுக்கப்பட்டிருந்தது மிகமிக ஆரோக்கியமான விஷயமாக இருந்தது. கூட்டத்திற்கு தோழர்.குமரன் பொன்னுத்துரை அவர்களது துணைவியாரும் அவரது மகனும் மகளும் வருகை தந்திருந்தார்கள்.

தோழர். வி.ரி.இளங்கோவன் சொன்னவொரு வார்த்தை இப்போது மறுபடியும் ஞாபகம் வருகிறது : ” பாரிசில் நடைபெற்ற கூட்டங்களில் மிகுந்த அறிவார்ந்த தளத்தில் நடைபெற்ற கூட்டமாக இது இருந்தது. இதுபோன்ற ஆழமான கருத்துப் பகிர்வுக்கான கூட்டங்களை நண்பர்கள் தொடர்ந்தும் ஏற்பாடு செய்ய வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார். அசோக் யோகன், ரமணன், வரதன், சந்திரமோகன், சுரேஷ் போன்ற நண்பர்கள் கூட்டத்தை மிகுந்த கட்டுப்பாட்டுடனும் கடப்பாட்டுடனும் ஒழுங்கு செய்திருந்தார்கள்.

தோழர்.குமரன் அவர்கள் குறித்த நினைவு கூரல் அவரொத்த தோழர்களும் குறித்த முழுமையான நினைவுகூரலாக நிறைவு பெற்றது

தகவல் : அசோக் யோகன்
ashokyogan@hotmail.com