‘ஆறாவடு” நூல் குறித்த பிரஸ்தாபம் ஈழத்து வாசகர் மத்தியில், முகப் புத்தகப் பக்கங்களில் இவ்வாண்டு தை முதலே இருந்து கொண்டிருந்திருப்பினும், அதை அண்மையில்தான் வாசித்து முடித்தேன். நூலின் பின்னட்டையிலுள்ள படைப்பாளியின் போட்டோவிலிருந்தும், லண்டன் தீபம் தொலைக்காட்சியில் அவருடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடலிலிருந்தும் அவரது வயதைக் கணிப்பிடக்கூடியதாக இருந்தது. இது முக்கியம். ஏனெனில் நூல் தெரிவிக்கும் வெளியில் படைப்பாளியின் அனுபவ நிஜத்தை அதிலிருந்தேதான் வாசகன் கணிக்கவேண்டியிருக்கிறது. நிகழ்வுகளில் அதிவிஷேடத்தனங்கள் இல்லாதிருந்த நிலையில் களத்தில் நின்றிராதிருந்தும் நிகழ்வுகளை இணையம், பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் கவனித்திருக்கக்கூடிய ஒருவராலும் இந்தமாதிரி ஒரு கதையை மிகச் சுலபமாகப் புனைந்துவிட்டிருக்க முடியும். இந்நூல் ஒரு புனைவு என்ற தளத்திலிருந்தான நோக்குகைக்கு இத் தகவல்கள் ஒன்றுகூட அவசியமானவையில்லை. ஆனால் முகப் புத்தகத்தில் பெரிய ஆரவாரம் நடந்துகொண்டு இருந்தவகையில் இதுவும், இத்துடன் வேறுபல செய்திகளும் வேண்டியேயிருந்தன. தன்னைத் தானே முன்னிலைப்படுத்திக்கொண்டு படைப்பே பேசவெளிக்கிட்டது போன்ற நிலை படைப்பின்மீதான சந்தேகத்தை எவரொருவரிலும் கிளர்த்தமுடியும். அதுவே இந்தப் பிரதி விளைந்தது. இந்நிலையில் வெளியிலிருந்து வந்த தகவல்கள் தவிர்ந்து அவர்பற்றி வேறெதையும் அறிந்துகொள்ளும் சாத்தியமெதுவும் நூலில் கிடைக்காததும், தொலைக்காட்சி உரையாடலில் இல்லாததும் இதை எழுதுவதற்கான தாமதத்தை ஏற்படுத்தியது.
படைப்பாளி ஓர் ஆயுதப் போராளியாக இருந்தாரெனவும், பின் அவ்வியக்கத்திலிருந்து விலகியதோடு இலங்கையிலிருந்தும் வெளியேறி, தற்பொழுது சுவிஸ் நாட்டில் வசிக்கிறாரெனவும்போன்ற தகவல்களை அறிய முடிந்தபோது, அவரின் நூல் பல்வேறு எதிர்பார்ப்புக்களை என்னிடத்தில் ஏற்படுத்தியிருந்தது. என் வாசிப்பு அவர்மீதான என் எதிர்பார்ப்புக்களை பூரணப்படுத்தியது என்று சொல்லமுடியாது. நான் எதிர்பார்த்திராத சில அம்சங்களை நூல் கொண்டிருந்தவகையில் வாசிப்பு சுகமானதாக இருந்ததைச் சொல்லவேண்டும். ஆயினும் மிகநுட்பமான தளங்களில் அது பல சாதக, பாதக அம்சங்களைக் கொண்டிருந்ததையும் நான் கண்டேன்.
படைப்பாளியின் முதல் ஆக்கமென்ற தகவல் நூலின் பின்னட்டைக் குறிப்பில் இருக்கக் கண்டபோது, நூல் குறித்து விமர்சனம் எதுவும் வேண்டாமென்றே முதலில் எண்ணினேன். ஒரு சில நண்பர்கள் விமர்சனமாகவன்றி என் அபிப்பிராயங்களை ஒரு பதிவுக்காக எழுதவேண்டுமென்று கேட்டமை. தவிர்க்கவியலாதவாறு இவ்வுரைக்கட்டை அவசியமாக்கிவிட்டது. ஆனால் அபிப்பிராயமென்பதே சிறிய விமர்சனம்தான் என்பதையும் நானறிவேன். அவ்வாறான நிலையில் புதிய இல்லாவிட்டால் இளம் படைப்பாளியென்ற தயவுதாட்சண்யங்கள் என் அபிப்பிராயங்களை மழுங்கச் செய்துவிடுவதில்லை.
நூலுக்கு ஒரு மீள்பார்வை அவசியமாகி விட்டிருந்ததை நான் உணர்ந்தேன். ஒருவகையில் என் ரசனையோடு கூடிய முதல் வாசிப்பில் சிக்காத சில கூறுகள் அப்போது தீர்க்கமாய்த் தெரிந்தன. அவற்றை விரிவாக எழுதும் எண்ணம் திண்ணப்பட்ட பின்னரும், மேலும் அக்கறைப்பட வேண்டிய சில விபரங்களை நான் தேடவேண்டியிருந்தது.
புலம்பெயர் சூழலிலிருந்து வரும் ஒரு நூல் அதன் முன்பின்னான ஆக்கங்களின் தன்மையுடனான ஒத்திசைவை, மாறுபாட்டை கண்டிப்பாகக் கொண்டிருத்தல் சாத்தியமென்ற வகையில், சமகாலத்தில் வெளிவந்திருக்கக்கூடிய ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ என்ற கணேசனின் (ஐயர்) நூலும், சுமார் பத்தாண்டுகளின் முன் (1990இல்) வெளிவந்த ஷோபாசக்தியின் ‘கொரில்லா’வும் என் கவனத்திலாகின. ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற சி.புஸ்பராஜாவின் நூலும் பெருமளவு கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது. அருளரின் ‘லங்காராணி’யையும், கோவிந்தனின் ‘புதியதோர் உலக’த்தையும், பிரமிளின் ‘லங்காபுரிராஜா’வையும், எனது ‘கனவுச்சிறை’ மற்றும் ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரத்தை’யும் அவை கொண்ட பொருளும், குறிப்பிலுள்ள கால எல்லை தாண்டியிருந்தமையும் காரணமாக விலக்கிவிடுகிறேன். ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலகட்டமே இங்கு கருதப்படவேண்டிய காலவெளி.
நூலில் முதலாவதாய் என்னைக் கவனப்படுத்திய விஷயம், அதன் தலைப்புத்தான். ‘ஆறாவடு’ என்ற தலைப்பின் கருத்துக் குறித்து நண்பர்கள் சிலர் விசாரணை செய்திருந்தனர். வடு என்பதற்கான தழும்பு என்ற அர்த்தத்தையே உடலளவில் அல்லது மனதளவிலானதாக பலரும் உரைத்தது சரியாகப் படவில்லை. களங்கம் என்ற அர்த்தச் சேர்க்கையின்றி இந்த ஆறாவடு என்ற இணைச் சொல்லைப் பொருள்கொண்டுவிட முடியாது.
மாறாத களங்கம் என்ற அர்த்தத்தை வெளிப்படுத்தும் தனிநபர் சார்ந்த சம்பவம் எதுவும் நூலில் இல்லை. ஆனால் இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் தோல்வியை தமிழரின் தோல்வியாயும், அது காரணமாக விழுந்த வடுவாகவும் தவிர வேறு எதையும் ஆறாவடு குறிக்கவில்லை என்பதை ஒரு வாசகனால் சுலபமாகவே புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் 1987–2003ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைக் களமாகக்கொண்டு இயங்கும் இந்த நூலில் பல முக்கியமான தகவல்கள் விடுபட்டுப்போயிருக்கின்றனவென வரும் ஒரு வாசக முடிபை அப்படியல்லவென சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.
ஒன்றைச் சொல்வதின்மூலம் எடுக்கும் சார்புநிலைபோலவே, எதுவொன்றையோ பலதையோ சொல்லாமல் விடுவதின்மூலமும் தன் சார்புநிலையைத் தக்கவைக்க முடியும். அதனால்தான் மேலே சொல்லப்பட்ட காலவெளியின் ஆரம்பத்தில் வரும் மக்களின் பைபிள் காலத்திய exodus என்று குறிப்பிடப்படும் ஓர் ‘ஊர் வெளியேற்றம்;’ இரண்டொரு நிகழ்வுகளின் குறிப்புகளோடு முடிந்துபோகக் காரணமாகிறது. மாபெரும் அவலமும், அந்த அவலத்தின் மூலகாரணமும் இங்கு அலசப்படவேயில்லை. இன்னும் சற்று முன்னால் நிகழ்ந்த முஸ்லிம் மக்களின் புலம்பெயர் அவலத்தின் தொடர்ச்சியாக இதைக் காண்கிறபோது, இலங்கை ராணுவத்தின் ஒப்பறேசன் லிபறேசனால் வலி-வடக்கிலிருந்து ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் புலம்பெயர்ந்த அல்லது புலம்பெயர்க்கப்பட்ட நிகழ்வானது, மாபெரும் சோகத்தின் அம்சமாக நூலில் பதிவாகியிருக்கவேண்டும். ஆனால் அவ்வளவு சோகமும், சோகத்துக்கான மூலத்தின் தேடலும் படைப்பாளியிடம் காணப்படவில்லை.
படைப்பாளி முன்னாள் போராளியாக இருந்ததின் ஈர்ப்பை இழந்துகூட இருக்கமுடியும். இன்று அவர் ஓர் எதிர்மனநிலையைக் கொண்டிருப்பதும், குறைந்தபட்சம் பல்வேறு வினாக்களோடு தன் முந்திய மனநிலையில் பேதப்பட்டும்கூட இருக்கலாம். ஆனாலும் நூல் தன் பரப்பெங்கும் ஐயாத்துரை பரந்தாமனிடத்தில், அல்லது அமுதனிடத்தில் விளையும் கேள்விகளைப் பதிவுசெய்துகொண்டு சென்றிருப்பினும், கவிஞர் மகுடேஸ்வரனின் உதவியோடு தேர்வுசெய்யப்பட்ட தலைப்பு படைப்பாளியின் இயக்கச் சார்பைச் சந்தேகிக்கச் செய்வதாயில்லை.
நூலில் பல்வேறு இடங்களில் இயக்கத்தின் நடைமுறைச் செயற்பாட்டுக் குறைகளைச் சுட்டும் இடங்கள் நிறையவே வருகின்றன. தனிநபர்கள்மீதான கட்டுப்பாடுகளாக, குறிப்பாக இருவரின் மனமொத்த காதலைத் மறுதலிப்பதாக, இயக்கம் செயற்படுகிறபோது, இந்தக் குறைபாடுகள் வலியுறுத்தப்படுகின்றன. மற்றும் காதலே சுதந்திரத்தின் ஒற்றைப் பரிமாணமாக பல இடங்களில் வருவதுபற்றியும் யோசிக்கவுண்டு.
யாழ் குடாவின் பெரும்பகுதியும் இயக்கத்தின் ஆதிக்கத்திலிருந்த காலத்தில் பெரும்பாலும் நிஜ நிலைமைகள் வெளியே தெரியவரவில்லையென நினைக்கிற அளவுக்கு மக்கள் முதிர்ச்சியடைந்து இருந்திருக்கிறார்கள். ‘சனங்கள் கேள்வி கேட்கிறார்கள். பலநேரங்களில் பதில்சொல்ல முடிவதில்லை’ என்று அமுதன் வார்த்தைகளாய் வரும் இடங்கள்போல் பல இடங்களை ஒரு வாசகன் சந்திக்க நேர்கிறது.
நேருஐயாவின் பேச்சிலிருந்து இத்தகைய தனிமனித உணர்வுகளின் அடக்குதல்கள் மன அழுத்தங்களாக அம்மனிதரில் பதிவாவதும் தெரிகிறது. இருந்தும் ஒருசிலராலேயே இயக்கம் குறித்த விமர்சனங்களை அவர்களுக்கு முன்பாகவே கூறமுடிந்திருக்கிறது. இத்தகைய சூழல்களையும் ஒருவர் உன்னிப்பாய்க் கவனித்தே ஆகவேண்டும். பின்வரும் இடம் அதற்கு நல்ல ஒரு உதாரணம்: ‘புறப்படும்போது, “இயக்கத்தைப் பிடிக்காது. இயக்கம் செய்யிற ஒண்டும் பிடிக்காது. பிறகெதுக்கு இயக்கத்துக்கு வேலைசெய்யிறியள்” என்று நான் நேரு ஐயாவிடம் கேட்டேன். அவர் சிம்பிளாக, “சம்பளம் தாறியள்” என்றார். அப்படிச் சொல்லும்போது விரல்களால் பணத் தாள்களை எண்ணுவதுபோல் காட்டினார். “அப்ப ஆமிகாரனும் சம்பளம் தருவான். அவனிட்டையும் போய் வேலை செய்வியளோ” என்று றோட்டைப் பாத்துக்கொண்டு நின்று கேட்டேன். “ஒப் கோர்ஸ்” என்ற சத்தம் பின்னால் கேட்டது.’
துவக்கத்திலிருந்து முடிவுவரை கண்ணீரும், கண்ணீர் நின்ற இடத்திலிருந்து இரத்தமும் கொலையுமாய் மாறிமாறித் தொடர்ந்து கொண்டிருந்த நூல், முடியாது எனக் கருதக்கூடிய இடங்களிலும் ஒரு நகைச்சுவைத் தொனியை இழையோட விட்டிருக்கும். இது சாதாரணமாக முடிந்துவிடுவதில்லை. அதை பின்வரும் இடத்திலே கவனிக்க முடியும்: ‘இந்திய இராணுவம் வருகிறதாம் எனக் கதையடிபட்டபோது இவனுக்கு இந்தியாவைப்பற்றி மூன்று சங்கதிகள் தெரிந்திருந்தன. (1. இந்தியா ஒரு வெளிநாடு (2. இந்தியாவின் ஜனாதிபதி எம்.ஜி.ஆர். அவர் ஒரு தமிழர். (3. இந்தியாவில் ரஜினிகாந்த், கமல ஹாசன், விஜயகாந்த் முதலான நடிகர்களும் ராதா, அமலா, நதியா போன்ற நடிகைகளும் வாழ்ந்து வருகிறார்கள்.’
இதை நகுதற் பொருட்டானதாக எடுக்காவிட்டால், ஐயாத்துரை பரந்தாமன் குழந்தைப் போராளியாக இயக்கத்தில் சேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் மலிந்திருப்பதைக் கண்டுகொள்ள முடியலாம். இது சர்வதேச மனிதவுரிமைக் கழகங்கள் இயக்கத்தின் மீது சாட்டிய குற்றச்சாட்டுகளுக்கு இன்னொரு ஆதாரமாவதோடு, இக் குற்றச்சாட்டு தொடங்கிய காலத்தையும் கணக்கிட்டுக்கொள்ள வாய்ப்பாகிறது.
அரசியல் குறித்த இந்த விஷயங்களிலிருந்து மேலே இலக்கியம் சார்ந்த பகுதிக்குள் இனி பிரவேசிக்கலாம்.
ஐயாத்துரை பரந்தாமன் இத்தாலிக்குப் புறப்படும் காட்சிகளோடு நூல் ஆரம்பிக்கிறது. பின்னால் இரண்டாம் அத்தியாயத்திலேயே நாட்டின் கடந்த கால நிலைமைக்குத் திரும்பிவிடுகிறது. மறுபடி கடல் பயணக் காட்சிக்கு மாறும் கதை, மீண்டும் நாட்டு நிலைமைக்குத் தாவிவிடும். மறுபடி கடல் பயணத்துக்கும் நாட்டுநிலைமைக்குமாய் மாறிமாறி ஒரு சினிமாவைப்போல கதை நகர்த்தப்படுகிறது.
நாவலிலக்கியத்தில் நனவோடை உத்தியென்று ஒரு வகைமையுண்டு. சினிமாவில் Flash back உத்தி இதுபோன்றதெனினும், நனவோடை மிக நுட்பமானது. அதை குறுநாவலில், சிறுகதையில் கையாண்டு வெற்றிபெற்ற படைப்புக்கள் தமிழிலே அதிகமில்லை. நாவலில் நனவோடை தனியே முயற்சியளவுக்கு மட்டுமே இருந்திருக்கிறது.
நனவோடை உத்தியில் இயங்கும் நாவல்களின் மொழித் தளம் மிகவீச்சானதாக, ஆழமானதாக இருக்கும். ஆறாவடுவின் மொழியினால் நனவோடை உத்தியை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. நூலை இரண்டு மணி நேரத்தில் வாசித்துவிடலாம் என ஒரு நண்பர் சொன்னார். அது மிக்க சுவாரஸ்யமான நடைதான். மொழிப் பிரயோகமும் குடாநாட்டு வட்டத்துக்குள் நிலவும் நவீன மொழிப் பிரயோகம்தான். ஆனாலும் கனதியற்றது. அது வெகுஜன வாசிப்புக்கு மட்டுமானது. நூல் பெரும்பாலும் மொழியால் நடத்தப்படவில்லை. காட்சி மாற்றங்களால் விறுவிறுவேற்றப்பட்டு சம்பவக் கோவையால் நகர்வது. இத்தகைய கட்டுமானம் ஒரு நூலை இலக்கியத்தளத்தை நோக்கி உயர்த்தாமல் கீழே இறக்கிவிடுவதாகும்.
டான் பிறவுணின் ‘டாவின்சிக் கோட்’ 2003இல் வெளிவந்தபோது ஆங்கில வாசக உலகை ஒரு உலுப்பு உலுக்கியெடுத்தது. கண்ணை மூடித் திறப்பதற்குள் சினிமாவாகவும் எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அதையோர் இலக்கியப் பிரதியாக ஆங்கில இலக்கிய உலகம் கருதுவதில்லை. நவீன இலக்கிய வகைமைகளுள் துப்பறியும் கதைகளையும் உள்வாங்கிக்கொண்டிருக்கும் ஆங்கில இலக்கிய உலகம், ஒரு பிரதியை இலக்கியப் பிரதியாய்க் கொள்வதற்கு கதையை மட்டும் முதன்மையாக எடுப்பதில்லை. அதிர்ச்சி மதிப்புகளை அது ஒதுக்கிவைத்துவிடும். அதனால்தான் பல்வேறு துப்பறியும் கதைகளை ஒதுக்கிவைத்த ஆங்கில இலக்கிய உலகம் கிட்சொக்கினதும், அகதா கிறிஸ்டியதும், இயன் பிளெமிங்கினதும் சில நூல்களை நவீன இலக்கியங்களாக உள்வாங்கிக்கொண்டிருக்கிறது.
இலக்கியத் தகைமைக்கு மொழியும், பிரதியின் கட்டுமானமும், அது கட்டியெழுப்பி மெதுவாக யதார்த்தம் மீறாமல் வளர்த்துச் செல்லும் உணர்வுக் கோலங்களும் காரணங்களாகின்றன. ஆறாவடுவின் கட்டுமானம் வெகுஜனத் தளத்தில் நிகழ்ச்சிகளின் தொகுப்பாக மட்டுமே அமைந்து, அது அடைந்திருக்கவேண்டிய இலக்கைத் தவறவிட்டமை துர்ப்பாக்கியம்.
களத் தன்மைகளை விபரிக்கும் சில காட்சிகள் நெஞ்சை நிறைப்பவை. நூலின் முற்பகுதியில் வரும் சிவராசன், பின்னால் வரும் நிலாமதி, தொடர்ந்து தேவி போன்றோரது கதைகள் சயந்தனை ஒரு சிறந்த கதை சொல்லியாக முன்னிறுத்துகின்றன. நிலாமதியின் கதையை வாசிக்கையில், நோக்கங்களாலும் செயற்பாடுகளாலும் வித்தியாசமானவையாக இருந்தாலும் அதுபோன்ற ஒரு கதையை ஏற்கனவே வாசித்ததுபோன்ற உணர்வு ஒரு தீவிர வாசகனிடத்தில் தவிர்க்க முடியாதபடி எழவே செய்கிறது.
ஷோபாசக்தியின் ‘கொரில்லா’, நாவல் அல்லது குறுநாவல் என எந்த வகைமைப்பாட்டினுள் அதை அடக்க முடியுமாயினும், அதன் கட்டுமானமும், உணர்வோட்டத்தை விரித்துச் செல்லும் பாங்கும், அது கையாளும் நடையும் மொழியும் அற்புதமாயிருக்கும். அதிலே வருகிறாள் ஒரு நிலாமதி. இல்லை, பிரின்ஸி. அது ஒரு தனிச் சிறுகதையாகவே கட்டுருப் பெற்றிருப்பினும், நூலின் மொத்த உணர்வோட்டத்தினின்றும் சற்றும் விலகுவதில்லை. அந்தக் கதையை ‘கொரில்லா’ இவ்வாறு தொடங்கும்:
‘மூன்றாவது குறுக்குத் தெருவினால் வந்து பிரதான வீதியில் மிதந்து சைக்கிளை மிதித்தாள் பிரின்ஸி. பிரதான வீதியில் முழத்துக்கு முழம் இந்திய இராணுவத்தினர் நின்றிருந்தார்கள்’.
அந்தக் கதை, ‘மேஜர் ஒரு இளிப்புடன் கொஞ்சம் கீழே சாய்ந்து கண்களால் பிரின்ஸியின் மார்புகளைச் சுட்டி பிரின்ஸியின் முகத்தைப் பார்த்து மெதுவாய் கேட்டான், “இங்கே என்னா, பாம் வைச்சிருக்கேயா?”.
‘பிரின்ஸி பேனாவைக் கீழே போட்டுவிட்டு நிமிர்ந்தாள். மேஜர் இமைப்பொழுதில் எழுந்து இடுப்புத் துப்பாக்கியை உருவப்போக இவள் மேசையில் ஏறிவிழுந்து மேஜர் கல்யாணசுந்தரத்தைக் கட்டிப்பிடித்தாள்.
‘அவள் உதடுகள் ‘யேசுவே இரட்சியும்’ என்று சொன்னதும் அவளின் மார்பிலே பொருத்தப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததும் ஒரே கணத்தில் நிகழ்ந்தன.
‘முகாமின் பின்னால் தயாராகக் காத்திருந்த புலிகள் தடைமுகாமுக்குள் சுட்டுக்கொண்டும் ரொக்கட்டுக்களை ஏவியவாறும் புகுந்தார்கள்’ என முடியும்.
நான்கு கிரௌன் அளவான பக்கங்களில் ‘கொரில்லா’ கொண்டிருக்கும் காட்சி இது.
இதேபோல ஆறாவடுவிலும் ஒரு பிரின்ஸி வருவாள். இல்லை, நிலாமதி. ‘நிலாமதி அவனில் பாய்ந்தாள். குண்டினை வைத்திருந்த அவனது கை உடல்களுக்கிடையில் சிக்கியது. அவன் அவலக் குரல் எழுப்பித் திமிறினான். நிலாமதி இரண்டு கைகளாலும் அவனை இறுக்கிக்கொண்டாள். அவனது கழுத்திடையே தன் முகத்தை வைத்து அழுத்தினாள். காலினால் ஒரு பாம்பைப்போல அவனைச் சுற்றிப் பிணைத்துக்கொண்டாள். அவளது வெற்று மார்புகள் அவனது சாக்கினை ஒத்த தடித்த பச்சை உடையில் அழுந்தி நின்றபோது அவளிடமிருந்து வார்த்தைகள் வெளியேறின, ‘இப்ப பிடிச்சுக் கசக்கடா…’.
‘குண்டுவெடித்தபோது வெளியே நின்ற ஆமிக்காரர்கள் கண்டமேனிக்குச் சுடத் தொடங்கினார்கள்.’
பதின்மூன்று டெம்மி அளவான பக்கங்களில் விரிகிற சயந்தனின் இந்தக் கதை, ஏற்கனவே வெளிவந்திருக்கும் ஒரு கதையினை ஞாபகமூட்டுவதாயினும் சிறப்பாகவே இருக்கிறது. சிவராசனதும், தேவியினதும் கதைகளைவிட நிலாமதியின் கதை உச்சம். வெற்றி, நிலாமதியின் தாயார் போன்ற பாத்திரங்களையும், இராணுவத்தின் தேடுதலையும் அளவான தேர்ந்த மொழியில் விபரித்து ஒரு கள நியாயத்தினை உருவாக்கிக் காட்டுதல் சாமான்யமானதில்லை.
பிரின்ஸியில் ஒரு நிஜத் தன்மை இருக்கும். அவளைக் குறிப்பிடும் இடத்திலேயே படைப்பாளி, ‘கரும்புலி மேஜர் பொற்கொடி (ஏசுராசன் பிரின்ஸி நிர்மலா 1974-1990) என அவளை அறிமுகப்படுத்திவிடுவார். சயந்தனின் பாத்திரங்கள் புனைவுத் தன்மை கொண்டவையென தோற்றம் காட்டுவதற்கு இதுபோன்ற குறைபாடுகளும் காரணமாகலாம். இவ்வளவு கதைசொல்லும் ஆற்றலும், விபரங்களும் இருந்தும் ஏன் இந்த நூல் காத்திரமாகவில்லை? ஏன் இது ஒரு சிறந்த இலக்கியப் பிரதியாக உள்வாங்கப்படவில்லை? அதற்கு முக்கியமான காரணமாக ஒன்றைச் சொல்ல முடியுமென நினைக்கிறேன். கணேசனின் ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ என்ற நூல் இயக்கங்களின் ஆரம்பகாலத்திலிருந்து 1983 இனக் கலவர காலத்துக்கு சற்று முன்னர் வரையான நிகழ்வுகளைக் கூறுவது. வாசிப்புக்கு எரிச்சலூட்டாத கலாநேர்த்தி அக் கட்டுரைகளில் இருக்கும். ஒரு புனைவின் சுவை அந்நூலில் இருக்கிறது. ஆயினும் விவரண விபரிப்பு காலவாரியாகப் பதிவாகாமையினால் குறைவுபட்டே இருக்கிறது. இக் குறைபாட்டைக் களைந்ததாய் சி.புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சிய’த்தைச் சொல்ல முடியும். ஆறாவடு விவரண விபரிப்பின் தன்மையை பெரும்பாலும் கைவிட்ட ஒரு புனைவுப் பிரதியாகவே ஆக்கம் பெற்றிருக்கிறது. எந்த நிகழ்வும் ஆண்டு மாத நாள் வாரியான குறிப்புகளற்றவையாய் விபரிக்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை இந்த விபரணத் தன்மையை நூல்; பெற்றிருந்திருப்பின் அதன் தன்மையே வேறாகியிருக்கலாம்.
இந்நூலை ஒரு நாவலாக எடுக்கமுடியாதென பலபேர் கூறக் கேட்டிருக்கிறேன். இதுபற்றிய எழுத்து மூலமான விமர்சனமேதேனும் இதுவரை வெளிவந்ததா தெரியவில்லை. ஆனாலும் உரையாடல்களில் இந்த அபிப்பிராயம் மேலோங்கியிருந்ததைக் குறிப்பிடவேண்டும். ஆனால் இது ஒரு நாவலாக வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதே எனது கணிப்பீடு. நாவல் இலக்கியவகை தொடங்கிய காலம் தொட்டே யதார்த்தவகையான, நேர்கோட்டுக் கதைசொல்லல் முறையில் வாசிப்பினை நடத்திக்கொண்டிருந்த வாசக கூட்டம், திடீரென பின் அமைப்பியல், பின் நவீனத்துவம், Non – Linear பாணிகளில் நாவலாக்கம் தொடங்கியபோது வாசிப்பின் ரசனை போய்விட்டது எனக் குரலெடுக்கத் தொடங்கிவிட்டது. அந்த ரசனை இல்லாவிட்டால் நாவலை அது நாவலல்லவென மறுக்கும். அவர்களது வாசிப்பும் வால்டர் ஸ்காட், சார்ள்ஸ் டிக்கின்ஸன் எனவும் கல்கி, அகிலன், நா.பா. எனவும் ஆரம்பித்திருந்த வகையில் இந்த எதிர்மனநிலை அவர்களிடத்தில் உருவாவது தவிர்க்க முடியாததுதான். ஒரு பாதையில் நடந்து பழகிய கால்கள்போல் மனமுலாவிய தெருக்களின் உலவுகைக்கு இலகுவான ஒரு நடையை விரும்பிய வாசகர்கள் நவீனத்தின் அதிஉச்சத்தை சாதாரணமாக ஒதுக்கினார்கள். நேர்கோட்டுத் தன்மையற்ற கதை சொல்லல் முறையைப் பரீட்சார்த்தமாய்த் தொடங்கிய வேர்ஜீனியா வுல்ப், ஜோசப் கொன்ராட், வில்லியம் பால்க்னர் போன்றோர் பின்னாளில் அந்த முறையைக் கைவிட்டதன் காரணமும் இதுதான்.
இருந்தும் inter-textual போன்ற பின்-அமைப்பியல் தன்மைகளை விமர்சகர்கள் விதந்துகொண்டே இருக்கிறார்கள். பின்நவீனம் வழக்கிறந்து விட்டதாய்ப் பிரலாபிக்கும் தீவிர வாசகர்கள்கூட உட்பிரதியாக்க நாவல்களை விதந்தோதுகிறார்கள். ஆறாவடு நூல் இரண்டு கதைகளைக் கொண்டிருக்கிறது. ஒன்று சொல்லப்பட்ட இயக்கங்களினதும் இராணுவங்களினதும் கொடுமைகள் மலிந்த நேரத்தில் சமூகத்தின் இருப்பு எவ்வாறிருந்தது என்பதைக் கூறுகிறது. இன்னொன்று, கப்பல் பயணத்தில் பங்குபெறும் இரு ஓட்டிகள் தவிர்ந்த அறுபத்து நான்கு பேர்களைக் கொண்ட விபரிப்பற்ற கதை. உட்பிரதிக் கதையாக வளரும் இது Fishing trawler எனப்படும் மீன்பிடிப் படகு எரித்திரிய நாட்டோரக் கடலில் மூழ்குவதோடு முடிவடைகிறது.
இத்தாலியை நோக்கிப் பயணிப்பவர்களில் பத்துப் பேர் சிங்களவர், மீதி ஐம்பத்து நான்கு பேர் தமிழர். பயண ஆரம்பத்தில் சிங்களவர் தமிழர்களுக்கிடையில் பெரிதான நல்லுறவு நிலவுவதில்லை. பயண எல்லையின் இடைத் தூரமும் தெரியாத நிலையில் நாட்கள் நகர நகர இரண்டு இனப் பயணிகளுக்குமிடையே ஒரு புரிதல் உருவாகிறது. அவர்கள் நாடுபற்றிய எந்தச் சிந்தனையுமில்லாத தனி மனிதர்கள். உயிர்வேட்கை-உயிர் வாழும் வேட்கை-கொண்டவர்கள். அந்த மனிதர்களின் பிரதிநிதிகளாகத்தான் ஐயாத்துரை பரந்தாமனும், பெரிய அய்யாவும், பண்டாரவும் இருக்கிறார்கள்.
யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது, உரிமைக்காகப் போராடியவுனும் இயக்கத்திலிருந்து விடுபட்டு இத்தாலிக்கு ஓடிக்கொண்டிருக்கிறான். அதை அடக்கப் போராடும் இராணுவத்தில் கடமையாற்றியவனும் வேலையை விட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கிறான். வாழ்வின் அழைப்புகள் சகல மனிதர்களுக்கும் ஒன்றாகவே கேட்கின்றன. அதன் மேலான வியாக்கியானங்களே அவர்களைப் பேதப்படுத்துகின்றன. தன்னுடைய குழந்தைகளுக்காகவும் இளம் மனைவிக்காகவும் உழைப்பும் சமாதான மண் ஒன்றும் கனவாய் ஓடிக்கொண்டிருக்கிறவர் பெரிய அய்யா. பண்டாரவுக்கும் தன் தங்கையரையும் தாயாரையும் வாழவைக்கும் பொறுப்போடும் ஒரு போரற்ற நிலத்தின் தேடலோடும் ஓடுதல் தேவையாயிருக்கிறது.
வாழ்க்கையின் அழைப்பு இருவருக்கும் ஒரே வண்ணமே கேட்டிருக்கிறது. வியாக்கியானங்களின் மேலான அர்த்தப்பாடுகளினாலே உரிமைக்கான இயக்கங்களின் போராட்டமும், அதே காரணத்தினாலேயே அதை அடக்க அரசாங்கம் எடுக்கும் ராணுவ நடவடிக்கைகளும் தொடர்கின்றன. இதைச் சரியாக விளக்க ஒரு மார்க்ஸ்தான் வரவேண்டியிருக்கிறது. ஆனால் மார்க்ஸை அழைத்தால் முகத்தைச் சுழிப்பது ஒரு பாணியாகிவிட்டது இப்போது.
பயணிகள் எதிர்பார்த்திருந்தபடி அவர்கள் இத்தாலி போய்ச் சேர்ந்திருந்தாலும் உட்பிரதியின் தன்மை மாற்றமடையாமலேதான் இருந்திருக்கும். மொழியையும், மதத்தையும், இனம்சார் மற்றும் கூறுகளையும் ஒரு ஒற்றைவழிப் பயணமானது தேவைக்கானதை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை ஒதுக்கிவைத்துவிடுகிறது. அது கப்பல் பயணமாக மட்டும் இருக்கவேண்டிய அவசியமில்லை.
ஆறாவடு ஒரு சம்பவக் கோவை நூலாகவிருந்து நாவலாக நிமிர்கிற இடம் இந்த உட்பிரதிக் கூறினாலேயே நிகழ்கிறது.