ஈழத்தில் இசைக்காகவென்றே நிர்மாணிக்கப்பட்ட இராமநாதன் நுண்கலைக்கல்லூரியின் அதிபராகத் திகழ்ந்து சிறந்த இசை ஆசிரியராகப் புகழ்பெற்ற ஸ்ரீமதி சரஸ்வதி பாக்கிராஜா அவர்களின் மறைவு ஈழத்து இசை உலகின் மிகப் பெரிய ஆளுமையை இழந்து நிற்கும் சூனியத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது. தன் இறுதிக் காலங்களில் எனது ‘மகரந்தச் சிதறல்’ நிகழ்ச்சிக்காக அவரோடு நான் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நாட்களை மிகுந்த துயரத்தோடு நினைவு கூருகின்றேன். சுகவீனமான நிலையிலும் எனது கேள்விகளுக்கு பொறுமையாகவும், பரிவோடும் பதில் சொல்லிய அந்தப் பெருமனதை வியந்து பார்க்கின்றேன். எந்த நேரத்தில் தொலைபேசி எடுத்தாலும் சலிப்பில்லாமல் ஒரு தாயின் கனிவோடு என் கேள்விகளுக்கு அவர் பதில் தர முயற்சித்தும் சட்டென அவருக்கு நினைவுபடுத்தமுடியாத நிலையில் ‘மாலிக்கு இது தெரியும் அவரிடம் இதைக் கேட்டுப்பாருங்கள்’ என்று கூறுவதையும் நினைவுகூருகின்றேன். அவருடைய பேட்டியோடு எனது ‘மகரந்தச் சிதறல்’ நூல் சென்னையில் வெளியாகிவிட்ட போதிலும் அதனை அவரிடம், அவரின் கரங்களில் நேரடியாக கையளிக்கும் பாக்கியத்தை இழந்து போனேன் என்று நினைக்கும்போது நான் மேலும் துயரத்தில் ஆழ்கின்றேன். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து, அங்கு தனது இசைக் கல்வியையும் மேற்கொண்டு, பன்னிரண்டு வயதில் அரங்கேற்றம் கண்;ட சரஸ்வதி பாக்கியராஜா யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் நீண்ட காலம் இசையைக் கற்பித்தவராவார். மகாராஜபுரம் சந்தானம், ஏ.கல்யாணகிருஷ்ண பாகவதர், சித்தூர் சுப்ரமணியபிள்ளை, ஐயாக்கண்ணு தேசிகர் ஆகியோர் முதல்வர்களாயிருந்த சுன்னாகம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்று, ஐயாக்கண்ணு தேசிகர் ஓய்வுபெற்றதையடுத்து இராமநாதன் நுண்கலைக் கல்லூரியின் முதல்வராக சரஸ்வதி பாக்கியராஜா நியமனம் பெற்றார். இராமநாதன் நுண்கலைக் கல்லூரி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பி;ன்னரும் அப்பதவியில் தொடர்ந்தார். பின்னர், சிங்கப்பூர் நுண்கலை நிறுவனத்தில் இசை விரிவுரையாளராக பணியாற்றினார். 1984 இல் லண்டனுக்கு வந்து ‘ச.பா சபா’ என்ற சபாவை ஸ்தாபித்து இசையை வளர்த்த ஆரம்ப கர்த்தா ஆவார்;. விம்பில்டன் விநாயகர் ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெற்று வரும் தியாகராஜா உற்சவத்தை ஆரம்பித்து நடாத்தியவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மாத்திரமன்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற வானொலி தொலைக்காட்சிகளில் பிரபல்யமாக ஒலித்த கர்நாடக இசையின் குரலுக்குச் சொந்தக்காரியாவார்.
இத்தகைய ஆளுமைமிக்க ஸ்ரீமதி சரஸ்வதி பாக்கியராஜா லண்டனிலும் தனது இறுதிக்காலம் வரையிலும் இசையைப் பயிற்றுவித்து தனக்கென்று மிகப்பாரிய இசைமாணவ உலகை அவர் கொண்டிருந்தார் என்பது விதந்து உரைக்கப்பட வேண்டிய அம்சமாகும். ஈழத்து இசை உலகில் சிறப்பு மிக்கவர்களாக திகழ்ந்த ஸ்ரீமதி தையல்சுந்தரம் பரந்;தாமன், ஸ்ரீமதி நாகேஸ்வரி பிரமானந்தா ஆகியோரைத் தொடர்ந்து உதிர்ந்த இணையற்ற மற்றுமொரு நட்சத்திரமாக ஸ்ரீமதி சரஸ்வதி பாக்கியராஜா திகழ்கின்றார்.
19.07.2016
navajothybaylon@hotmail.co.uk