சரித்திர நாவல் அறிமுகம்: பழைய வேதக் கோயில்!

எமது வாழ்வின் அழிந்த தடங்களை பற்றி அறிந்து கொள்வதில் எவருக்குமே மகிழ்ச்சி ஏற்படவே செய்யும். கல்கி சாண்டில்யன் போன்றவர்களைப் படிப்பது இளம் பிராயத்தில் பிடித்திருந்தது. அதுவும் தமிழர் வாழ்வுதான். ஆனால் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) எழுதிய பழைய வேதக் கோயில் நாவலானது எங்கள் கதை. எங்கள் சரித்திரம்.- 'டொக்டர்' எம்.கே.முருகானந்தன் MBBS(Cey), DFM (Col), FCGP (col) , குடும்ப மருத்துவர் -எமது வாழ்வின் அழிந்த தடங்களை பற்றி அறிந்து கொள்வதில் எவருக்குமே மகிழ்ச்சி ஏற்படவே செய்யும். கல்கி சாண்டில்யன் போன்றவர்களைப் படிப்பது இளம் பிராயத்தில் பிடித்திருந்தது. அதுவும் தமிழர் வாழ்வுதான். ஆனால் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) எழுதிய பழைய வேதக் கோயில் நாவலானது எங்கள் கதை. எங்கள் சரித்திரம். எமது மூதாதையர்கள் பதித்த தடங்கள். எமது பிரதேச முன்னோடிக் குடிகளின் வாழ்கையை அவர்களது பிரச்சனைகளை பேசுகிறது. இதனால் மிகவும் ஆர்வம் ஊட்டுவதாக இருந்தது. மிகக் குறைந்தளவு சரித்திரத் தரவுகளை வைத்துக் கொண்டு நம்பத்தன்மை வாய்ந்த புனைவைப் படைத்துத் தந்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர். அவர் அச்சுவேலி தோப்பு அருள்நந்தி பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றுகிறார் என்பது குறிப்படத்தக்கது. நாவல் நம்பகத்தன்மையாக இருப்பதற்குக் காரணம் அந்த பகுதி பற்றிய புவியியல், பண்பாட்டு அம்சங்கள் பற்றிய கதாசிரியரின் நேரடி அனுபவங்களாகும் அத்துடன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர் ஊடாகப் பெற்ற வாய்மொழித் தகவல்களும் கைகொடுத்துள்தைக் காண முடிகிறது. அரசமரத்துக் கோயில், மரத்தின் கீழ் கற்சிலை, உரைகல், குடுவையில் திருநீறு, அரசமிலையால் தீர்த்தம் வழங்கல் போன்ற தகவல்கள் அந்த வாழ்வைப் படம் பிடிக்கிறன. அதே போல பனம் மரத்திலிருந்து கள் இறக்கல், பாளைக் கத்தி, சுரக் குடவையில் கள்ளு, அதை அருந்துவதற்கு வடலி ஓலையில் பிளா போன்ற சித்திரிப்புகள் சிறப்பாக மண்ணின் மறைந்த வாழ்வை நாவலில் அழகாக காட்டுகின்றன.

இருந்தபோதும் 1600 ஆண்டுகளின் போது அல்வாய் வடக்கு வியாபாரிமூலை வீரபத்திரர் ஆலயத்தில் பிராமண ஐயர்கள் இருந்தார்கள் என்ற தகவலில் ஐயம் இருக்கிறது. நாவலை படித்துச் செல்லும்போது, அது நிகழ் சரித்திரத்தின் வாழ்வியல் பிரதி பிம்பம் என்றதான உணர்வை ஏற்படுத்துகிறது. அந்நியர் ஆட்சி, வேற்றுப் படைகளின் அட்டகாசம், இடப் பெயர்வு போன்றவை நாம் அனுபவித்து உணர்ந்தவை. எமது மூதாதையருக்கும் அதே விதமான அனுபவங்கள் கிட்டின என்பது கவலையைத் தந்தாலும் அவர்களது அடிபணியாத தன்மை பெருமிதம் ஊட்டுகிறது.

பல சமூகங்களின் பிரதிநிதிகள் அந்நிய நாட்டு மனிதர் போன்ற பல்வேறுபட்ட பாத்திரங்கள் இருந்தபோதும் இன மத சாதி ரீதியான காழ்ப்புணர்வை ஆசிரியர் எந்த இடத்திலும் காட்டவில்லை. இது அவரது பக்கம் சாராத நடுநிலைப் போக்கிற்கு உதாரணமாக இருக்கிறது. மிகவும் நடுநிலையோடும் சமூகங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தாதவாறும் நல்லியக்கம் மற்றும் சௌயன்யத்தை மேம்படுத்தும் வகையான சித்திரிப்பு நாவலின் பலமாக இருக்கிறது.

பள்ளர் சுடுகாடு, கூத்தாடும் பற்றை, கற்கோட்டை(சக்கோட்டை) போன்ற இடப் பெயர்கள் வந்ததற்கான காரணங்களை கதையோடு கதையாக நகர்த்திச் செல்கிறார்.

நானும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் சம்பவங்கள் நடக்கும் இடங்களான சக்கோட்டை, நாவலடி. போன்றவை நடமாடித் திரிந்த இடங்கள். அவற்றினை மையமாக வைத்து கதை நடக்கும் ஏனைய இடங்களையும் தெளிவாக இனங்காண முடிந்தது. பிரதேச வரைபடத்தைத் தந்தமை பாராட்டத்தக்கது.

பல்லி சொல்லுதல் ஆந்தை அலறுதல் போன்றவற்றை துர்க்குறியாகக் கொள்ளும் நம்பிக்கை அன்று இருந்ததை கதையில் அறிகிறோம். இன்றும் அந் நம்பிக்கைகள் இருப்பதால் அது பற்றி சொல்வதில் தவறில்லை. இருந்தபோதும் பல்லி சொல்லுதல் என்பதை மூடநம்பிக்கையாகக் கொள்ளாது அதற்கு வலு சேர்ப்பது போல கதையை நகர்த்துவது எனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.

மாவீரர் என்ற சொல் நாவலின் சொல்லோட்டத்துடன் இசைந்து வரவில்லை.  400 வருடங்களுக்கு முன்னான சரித்திரத்தை பேசும் நாவலில் இச்சொல்லைப் பயன்படுத்தியமை நிகழ் கால வரலாற்றை ஞாபகப்படுத்துவதற்காக வலிந்து புகுத்தியது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

மிக தெளிவானதும் வெளிப்படையும் ஆனது ஆசிரியரின் முன்னுரை. கதையைப் படித்து முடித்த பின்னரே வாசியுங்கள். பல சந்தேகங்களுக்கும் முடிச்சுகளும் திறவுகோல் போல அமைந்திருக்கிறது.

அட்டைப்படம் சிதைந்து கிடக்கும் பழைய வேதக்கோயிலின் புகைப்படமாகும்.

புதிய எழுத்தளார் என்ற உணர்வு ஏற்படாதவாறு தங்குதடையின்றி ஓடும் நீரோட்டம் போன்ற நடை. குழப்பத்தை ஏற்படுத்தாத சம்பவக் கோர்வைகள். ஆயினும் நடை சற்று மெருகேற இடம் உண்டு. இரண்டாம் மூன்றாம் பாகங்கள் வர இருப்பதாகத் தெரிகிறது. அவற்றில் மேலும் செப்பனிடப்படும் என நம்பலாம்.

இடம் பெயர்ந்து பின் சமாதானம் என்ற நம்பிக்கையில் பலதடவைகள் மீண்டும் ஊர் வந்தவன் என்ற ரீதியில் நாவலின் இறுதியில் முருகவாணர் சொல்லும் சுதந்திரம் பற்றிய வார்த்தைகள் மரத்தில் ஆணியாகப் பதிந்து நிற்கின்றன.

மொத்தத்தில் நமது சரித்திரத்திலும் பழைய பண்பாட்டுக் கோலங்களிலும் அக்கறையுள்ளவர்கள் தப்ப விடக் கூடாத நாவல் இது. ஆசிரியர் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) அவர்களது சிறப்பான முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்


நூல் :- பழைய வேதக்கோயில்
நூலாசிரியர் :- கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்)
முகவரி :- ஆனந்தகானம், ஆவரங்கால், புத்தூர்
விலை :- ரூபா 300

kathirmuruga@gmail.com