தொனிப்பொருள்
2018 ஆம் ஆண்டின் மார்ச் எட்டாம் திகதியில் நடைபெறும் சர்வதேசப் பெண்கள் தினத்திற்கான தொனிப்பொருளாக ‘இதுதான் நேரம்’ (வுiஅந ளை ழெற) அமைகின்றது. கிராமிய நகர்ப்புறச் செயற்பாட்டாளர்கள் பெண்களின் வாழ்வில் மாறுதல்களைக் கொண்டுவருகிறார்கள். இந்த ஆண்டின் சர்வதேச பெண்கள் தினமானது முன்னர் என்றும் இல்லாத வகையில் உலகெங்கிலும் பெண்களின் உரிமைகள், சமத்துவம், பெண்களுக்கான சமூகநீதி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களின் பின்னணியில் இடம்பெறுகின்றது.
பாலியல் தொந்தரவுகள், பெண்களின் மீதான வன்முறைகள், பெண்களுக்கெதிரான பாகுபாடு என்பன பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகாக இடம்பெற்று வருகின்றன. உலகெங்கிலும் பொது அரங்குகளில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றிப் பேசப்பட்டு வருகின்றன. இந்த அநீதியான நிலை மாற வேண்டும் என்ற உணர்வு முன் என்றுமில்லாத வகையில் வெடித்துக் கிளம்பியவண்ணம் உள்ளது. ஆண்களும் பெண்களும் சமத்துவமாக நடாத்தப்படும் ஒரு ஒளி நிறைந்த எதிர்காலத்தை நோக்கி மக்கள் அணிதிரண்டு வருகின்றனர். உலகின் மிகப் பெரும் தலைநகரங்களில் எல்லாம் பெண்களின் ஆர்ப்பாட்டங்கள் உணர்வு பூர்வமாக நடைபெற்று வருகின்றன. பாலியல் வன்முறைகளுக்கெதிராக இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து சாதாரண கிராமங்கள் வரை பெண்கள் உரிமைக்குரல் எழுப்பி வருகின்றனர்.
இலங்கையில் பெண்களின் போராட்டம்
மன்னாரைத் தளமாகக்கொண்டு செயற்பட்டு சமூக நீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், பாலியல் சமத்துவத்துக்காவும், பெண்களுக்காகவும் அயராது போராடி வரும் திருமதி ஷெரீன் அப்துல் சறூர் அவர்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவருக்கு லண்டனில் இலங்கை மனித உரிமைச் செயற்பாட்டாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதையும் பெருமையோடு இத்தினத்தில் பாராட்டுகின்றேன்.
இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் தங்களின் வாழ்விடங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறக் கூறி இடம்பெற்று வரும் நீண்ட எதிர்ப்புப் போராட்டங்களின் முன்னணியில் பெண்களே அணிதிரண்டுள்ளனர். காணாமல் போன தங்களின் கணவர்களுக்காகவும், புதல்வர்களுக்காகவும் வீதிகளில் நின்று காணாமல் போனோரின் புகைப்படங்களை ஏந்திக் கொண்டும், சுலோகங்களைக் கோசித்துக் கொண்டும் பெண்களே நீதி கேட்டுப் போராடி வருகின்றனர். கணவன்மாரை இழந்த நிலையிலும் அவர்கள் அங்கவீனர்களாகிப்போன நிலையிலும் பெண்களே குடும்பச் சுமைகளைத் தங்கள் தோளில் சுமந்து வருகின்றனர்.
தமிழகத்தில் பெண்கள்
தமிழகத்தில் அடிப்படை வசதிகளுக்காகவும்ää வாழ்வாதாரங்களை நிராகரிக்கும் அரசின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் கிராமங்கள் தோறும் கிராமியப் பெண்கள் மாதக்கணக்கில் துணிச்சலோடு போராடி வருவதைப் பார்க்கின்றோம். இந்த ஆண்டின் மகளிர் தினமான மார்ச் எட்டாம் நாளில் பெண்கள் மத்தியில் கிளர்ந்திருக்கும் இந்த உணர்வெழுச்சியை ஆக்க பூர்வமாக செயல்முறைப்படுத்தி கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் அநீதிகளுக்குள்ளான பெண்களின் ஆற்றலை வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாக நாம் கருதிச் செயற்படவேண்டும். பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் அயராது போராடிவரும் செயற்பாட்டாளர்களை நாம் கௌரவிக்கவேண்டும்.
கிராமியப் பெண்கள்
உலகின் சனத்தொகையில் கால்வாசிக்கும் மேலான தொகையினர் கிராமியப் பெண்கள் ஆவார்கள். உலகெங்கிலும் உள்ள விவசாய ஊழியர்களில் 43வீதமானவர்கள் பெண்களே ஆவார்கள். இவர்களே வயல் வெளிகளில் நாற்று நட்டும், பயிர்களைப் பயிர்வித்தும் தேசங்களுக்கு உணவை ஆக்கித் தருகிறார்கள். உலகின் உணவிற்கான பாதுகாப்பை இந்தக் கிராமியப் பெண்களே உறுதி செய்து வருகிறார்கள். ஆனால் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஆண்கள் பெண்களுக்கான ஏற்றத்தாழ்வு நீங்கியதாகத் தெரியவில்லை. கிராமத்து ஆண்களைவிட அல்லது நகர்ப்;புறத்து பெண்களைவிட கிராமியப் பெண்கள் மோசமான சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
உலகெங்கிலும் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான சம்பள வேறுபாடு 23 வீதமாகக் காணப்படுகின்றது. கிராமியப்பகுதிகளில் இது 40 வீதம்வரை உயர்ந்து காணப்படுகின்றது. சமூகப்பாதுகாப்போ, கல்வி விடயங்களோ,தொழில் வாய்ப்போ, போதுமான அடிப்படை வசதிகளோ இல்லாத நிலைமைகள் இன்றும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது.
கிராமப் புறங்களில் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதும் கிராமியப் பெண்கள் வன்முறையிலிருந்தும் ஏனைய பலாத்கார செயற்பாடுகளிலிருந்தும் விடுதலை பெற்று சுதந்திரமான வாழ்வை நடாத்தவும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்றைய யுகத்தின் அவசர அவசிய தேவையாகும்.
பெண்களின் பாலுறவு சார்ந்த தாய்மைப் பேற்றுக்கான சுதந்திரம் என்பனவும் கருத்தில் கொள்ளப்படவேண்டிய அம்சங்களாகும். இன்று கிராமியப் பெண்கள் நிறுவனமயமாக்கப்பட்டு தங்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்களாகத் திகழ்கின்றனர். தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் இணையத்தளங்களும் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதனை பெண்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. இந்தியாவில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டபோது அதற்காக அகில இந்தியா அளவில் போராட்டங்கள் வெடிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. உலகில் வாழும் பெண்களின் வாழ்வியலில் மாறுதல்களைக் கொண்டுவருவதற்கான நேரம் இதுதான்!
மகளிர் தினச் செய்தி
சரித்திரத்தில் ஒரு நீண்ட காலப்பகுதியில் முன்னுதாரணமில்லாத அபிவிருத்தியை நோக்கிய ஒரு பாய்ச்சல் நிகழ்ந்ததென்றால், அதன் பெருமிதங்களின் முழுப்பங்கும் பெண்களையே சென்று சேரவேண்டுமென்று அமெரிக்க பெண்ணியவாதி மேரி பெத்யூன் கூறியிருந்தார். சமுதாயத்திற்கும் பெண்கள் அளித்த அபரிதமான பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக மார்ச் மாதம் 8ஆம் திகதி சர்வதேசப்பெண்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும்ää சமத்துவம் நிறைந்த சமுதாயங்களை உருவாக்குவதற்காகவும் உலகெங்கும் வாழும் பெண்களின் மத்தியில் உணர்வு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவும் இந்தத் தினம் கொண்டாடப்படுகின்றது.
கானகத்தில் எழுந்த குரலாகக் கவனிக்கப்படாமலேயே போய்விடுகின்ற பெண்களின் குரல்களை இந்தத் தினம் நினைவு மீட்டுகின்றது. சிருஷ்டிக்கும் ஆற்றலை, போஷிக்கும் ஆற்றலை ஒரு முழு மாற்றத்தை உருவாக்கும் ஆளுமை படைத்தவர்களாக பெண்கள் திகழ்கின்றார்கள். பெண் என்பது சுயநலமற்ற அன்பையும், கருணையையும், கனிவையும் குறித்து நிற்பதாகும். அதேசமயம் அதிகாரத்தையும், நம்பிக்கையையும் ஊட்டும் எழுச்சிச் சக்தியாகவும் பெண் திகழ்கின்றாள். காலம் முழுவதும், சரித்திரம் முழுவதும் பெண்கள் தமது உரிமைக்காகப் போராடி வந்திருக்கிறார்கள். தங்களின் உரிமைக்காக, வாக்குரிமைக்காக, சமத்துவத்துக்காக, கல்வி முன்னேற்றத்துக்காக, சுதந்திரத்துக்காகப் பெண்கள் தங்கள் போராட்ட வரலாற்றில் கொடுத்திருக்கும் விலை மிகப் பெரிது. பெண்களின் விடுதலையை நோக்கிய பெரும் பயணத்தில் முன்னணி நாயகிகளாகத் திகழ்ந்த பெண்மணிகளை இந்தச் சர்வதேச மகளிர் தினம் மகிமைப்படுத்துகின்றது.
சமூக வாழ்க்கையின் சகல தளங்களிலும் முன்னணியில் சாதனை படைக்கும் பெண்மணிகளை மகளிர் தினம் கௌரவம் செய்கிறது. உலகெங்கிலும் அரசியலில், கல்வியில், சமூகப்பணிகளில், பெருந்தொழில் நிறுவனங்களில், விளையாட்டுத் துறையில், தகவல் தொழில் நுட்பத்தில், ஆராய்ச்சியில், புதுமைக் கண்டுபிடிப்புக்களில், பெண்கள் அழுத்தமாகத் தங்கள் காலடிகளைப் பதித்து வருகின்றனர். ஒரு பெண் மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக, வீட்டுத்தலைவியாக ஆற்றிவரும் பங்கினை மகளிர்தினம் கொண்டாடி மகிழ்கின்றது. இன்றும் உலகெங்கிலும் லட்சோப லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் குரல்களை ஒலிக்கமுடியாதவர்களாக இருளில் அமிழ்ந்தி வருகின்றனர். பின்தங்கிய நாடுகளில், ஏழைநாடுகளில் பெண்கள் மோசமான பாரபட்சங்களுக்கு உள்ளாகி வருகின்றார்கள்.
பெண்களின் போராட்ட வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள், சவால்கள், எதிர்ப்பட்ட போதும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிப் பெண்கள் அணிவகுத்து நிற்கின்றனர். ‘மாதர் தம்மை இழிவு செய்யும்; – மடமையைக் கொழுத்துவோம்’ என்ற பாரதியின் வழிகளுக்கு போராட்ட சாட்சியங்களாக பெண்கள் திகழ்கின்றார்கள்.
பெண்களின் உரிமைகளையும், அதிகாரங்களையும் அடையாளம் காண்பதும் அவற்றிற்குரிய நியாயமான இடத்தைப் பெற்றுக்கொள்ளப் போராடுவதுமே சர்வதேச மகளிர் தினத்தின் முக்கிய குறிக்கோளாகும். இதுதான் நேரம், இப்போதே நமது பணி ஆரம்பமாகின்றது என்பதே இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்;தின் செய்தியாகும்.
NavajothyBaylon@hotmail.co.uk