ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தகம், சிறுகதைத் தொகுப்பு ஒன்று படிக்கக்கிடைத்ததில் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சந்தோஷம் என்று சொன்னது பின்னர் இதைப்பற்றி எழுதிச்செல்லும் போது எனக்கு கொஞ்சம் சிக்கலான காரியமாக ஆகப்போகிறது. ஆனாலும் எழுதியதை அழிக்க விரும்பவில்லை. சந்தோஷம் என்று சொன்னது உண்மை.
சந்தோஷம் திறமையாக எழுதும் ஒரு சிறு கதைக்காரரைக் கண்டு கொண்டதில்.. ஆமாம், கண்டு கொண்டதுதான். இதுதான் அவரது முதல் தொகுப்;பு. நன்றாக எழுதியிருக்கிறாரே தவிர அவர் அதிகம் அலட்டிக்கொண்டவராகவோ, தமிழ்ச் சிறுகதை வானில் ஒரு புதிய நக்ஷத்திரம் உதயமாகி விட்டதாகவோ ஏதும் பேச்சில்லை. சில காலமாக தெரிந்த ;பெயர்தான். இணையத்திலும் புத்தக ;பிரசுரத்திலும் சம்பந்தப்பட்ட பெயராக, எழுத்தாளராக அல்ல. தன்னைப் பற்றி அப்படி அவர் அறிவித்துக் கொண்டதில்லை. எனக்குத் தெரிந்து யாரும் அவரை ஒரு சிறுகதைக்காரராக பிரஸ்தாபிக்க வில்லை. ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. அதுவும் தமிழ் நாட்டில். இங்கு தெருவுக்குத் தெரு கவிஞர்கள் ஜனத்தொகை கொஞ்சம் அதிகம். சிறுகதைக்காரர்கள் கணிசமாக இருந்தாலும் கொஞ்சம் குறைவு தான்.
இக்கதைத் தொகுப்பில் 34 கதைகள் இருக்கின்றன. இதில் தரப்பட்டுள்ள இக்கதைகள் 2003 லிருந்து 2013 வரை எழுதி அவர் தன் ப்ளாகில் வெளியிட்டுக்கொண்டவை. இந்த விவரத்தை இத்தொகுப்பிலிருந்து தான் நான் தெரிந்து கொள்கிறேன். அவ்வப்போது தன் கவிதைகள், சினிமா விமர்சனங்கள் என அவர் தன் ப்ளாகில் எழுதிக்கொண்டிருந்தாலும், அவரையும் அவரது ப்ளாக் பற்றியும் நான் மிக தாமதமாகத் தான் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஒரு சிலவற்றைப் படித்துமிருக்கிறேன். எதுவும் ஒரளவு கணிசமான எண்ணிக்கையில் ஒட்டு மொத்தமாகக் கையில் கிட்டுமானால் தான், எழுத்தின் பின் இருக்கும் ஆளுமையைப் பற்றியும். அந்த எழுத்து நமக்கு பரிச்சயப்படுத்தும் உலகு பற்றி ஏதும் சித்திரமும் பதிவும் நமக்குக் கிடைக்கும்.
எப்போது அவர் சென்னை வந்தார் என்பது தெரியாது. ஆனால் எனக்கு அவரது நேர்ப் பரிச்சயம் தான் முதல் பரிச்சயமாக இருந்தது. 2005 லோ என்னவோ. எனி இந்தியன் பதிப்பகத்தின் பொறுப்பாளராக. முதல் பரிச்சயத்திலேயே என்னை பற்றிய ஒரு அனுமானம், சரியாகத் தான் செய்திருக்கிறார். கணிணி பற்றி அதன் சாத்தியங்கள் பற்றி ஒண்ணும் தெரியாத பெரிசு இது என்று. என் புத்தகங்கள் அச்சிட்டு வெளியிட எனக்கு மிகவும் உதவியாக என்ன செய்யவேண்டுமோ கணிணியிலேயே அதெல்லாம் செய்து தந்தார். வேறு எந்த பதிப்பாளரும் செய்ததில்லை. செய்யவேண்டிய அவசியமோ நிர்ப்பந்தமொ இல்லை தான்.
பின்னர் இணைய இதழ்களில் தான் பரிச்சயம் தொடர்ந்தது. பத்து வருடங்களுக்கு மேல் ஆயிற்று. அவர் கவிதைகள், கதைகள் எழுதியிருக்கிறார். கவிதைகள் எழுதுவது தான் ஏதோ தெரியவந்ததே தவிர, கதைகள் அல்ல. எங்களிடையேயான பரிமாற்றம் இணையத்தில், உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்கள் பற்றியும் ஏறத் தாழ இருந்தது. ஆனால் அவர் தன் கவிதை, கதைகள் பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டதில்லை. யாரும் பேசினால், நட்புணர்வின் பேரில் அவர் கவிதைகளைப் பற்றி சிலர் கேலி பேசியதுண்டு. அந்தக் கேலி நட்புணர்வின் வெளிப்பாடே அன்றி, இலக்கிய விமர்சனமாக அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். யாரும் அதிகம் அக்கேலியைக் கண்டு கொண்டதில்லை, ஒரு சிறு புன்னகையைத் தவிர.
இவ்வளவும் சொன்னது நம்மிடையே நிலவும் இலக்கியச் சூழலைப் பற்றி நினைவூட்டத்தான் பத்து வருஷத்துக்கும் மேலே ஆச்சு, நான் எழுதிட்டிருக்கேன். எந்தப் பயலாவது கண்டுகிட்டானா பார் திமிரு பிடிச்ச பயலுவ” என்று ஹரன் பிரசன்னா எரிச்சல் பட்டிருந்தால் அந்தச் சூடு காற்றில் பரவியிருக்கும்.
சாதேவி சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது நாம் சந்தோஷித்து கொண்டாட வேண்டிய ஒரு எழுத்து கிடைத்துள்ளது பற்றி. .அனேகமாக எல்லா Cross breed- ம் புதிய வளத்தைக் கொணர்பவை. இங்கு நாம் பார்ப்பது தமிழ் மண்ணில் என்றோ பதியனிட்டு இன்று வளர்ந்து தழைத்து வாழும் கன்னட உலகம். இது இப்போத்திய சமாசாரம் இல்லை. ராகவேந்திர சுவாமிகளே தமிழ் நாட்டில் பிறந்து, கும்பகோணம் மடத்துக்கு பீடாதிபதியாகி பின்னர் தான் ஆந்திராவின் மந்திராலயம் எழுந்தது என்பது ரொம்ப பழைய கதை.
சாதேவி தொகுப்பில் இருக்கும் மொத்தம் 34 கதைகளில் மாதிரிக்கென ஒரு சிலவற்றை;ப் பார்க்கலாம். கதை என்று சொன்னேன். அப்படித்தான் நமக்குச் சொல்லிப் பழக்கம். படித்து நாம் பெறும் அனுபவம் வேறு. ஹரன் பிரசன்னாவின் கதை சொல்லும் முறையே அப்படி. வெகு சின்ன சின்ன வாக்கியங்களால், அவர் சொல்லும் காட்சியின், நிகழ்ச்சியின் சூழல் எழுப்பும் பாணியே தனி. தனது ;பாணி என்று சொல்லும் அடையாளங்கள் ஏதும் இல்லை. ஆனால் ஒரு பாத்திரத்தை, சம்பவத்தை அவர் உருவாக்கி எழுதுகிறார் என்ற நினைப்பே எழாதவாறு, ஏதோ சாவகாசமாக திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, என்னமோ என்ன நடந்ததுன்னு நச்சரிக்கிறயே, சொல்றேன் கேளு, என்று ஊருக்குப்போயிருந்த போது நடந்த கதையைச் சொல்லும் ;பாணியில் தான் அவர் கதைகள் இருக்கின்றன. தன் பேச்சு சாதாரணத்வத்தில் தன்னை மறைத்துக்கொள்ளும் தனித்வம். எல்லாம் அவர் அனுபவம் சார்ந்தது தான். அவர் ;பழகிய மனிதர்கள், பார்த்த சம்பவங்கள் தான் அவை எழுதும்போது, கொஞ்சம் மாறியிருக்கலாம் தான். ஆனால் எதுவும் கற்பனை இல்லை. தமிழ் நாட்டில் வெகு காலமாக வாழ்ந்து தமிழரே அனேகமாக ஆகிவிட்ட, இருப்பினும் தன் கன்னட ஆசாரங்களையும் உணவுகளையும் பேச்சையும் முற்றிலும் அழிந்து போகாது வாழ்ந்து உயிர்த்திருக்கும் குடும்பங்களின் சூழல். படிக்க சுவாரஸ்யமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
தொலைதல் என்று ஒரு கதை. எப்போதோ சொல்லிக்கொள்ளாமல் 26 வயசில் வீட்டை விட்டு ஓடிப்போனவன் திடீரென்று பதிமூணு வருஷம் கழித்து, வாசலில் வந்து நின்றால் அவ்வா (அம்மா) வுக்கு எப்படி இருக்கும்! எதற்கு ஓடிபோனான், என்ன ஆச்சு, இப்போ இங்கு எதற்கு வந்தான் என்று யாருக்கும் தெரியாது. வீட்டில் இருக்கும் எல்லாரும் கூடியாயிற்று. ;பக்கத்து வீட்டில் இருக்கும் லக்ஷ்மி அக்காவும் வந்தாயிற்று. தொலைந்தவன் தன் ஊர் பயணங்களைப் பற்றி சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொண் டிருக்கிறான். ஆச்சாரோடு(சாஸ்த்ரோக்தமாக வீட்டு சடங்குகள் செய்து வைப்பவரின் கன்னட பெயர்) ஒரு சமையல்காரரையும் கூட்டிச் செல்கிறார்கள். தீர்த்த யாத்திரை தான்.சாப்பாட்டு மகிமைகளைப் பற்றியும் ஹரித்வார், ஹரிவாயு ஸ்துதி, உலிக்கூட்டு என்றெல்லாம் கதை நீள்கிறது. அவ்வா எல்லோருக்கும் சாதம் பிசைந்து கையில் ஊட்டுகிறாள். ”அதெல்லாம் சரிடா, எ;ப்பவாவது வாஹினியை நினைச்சுப்பியா? என்று லக்ஷ்மி அக்கா கேட்டுவிடுகிறாள். அவன் ;அதைக் கவனிக்கிறதில்லை. எல்லோரும் சாப்பிட்டு முடிந்த; பிறகு, அவ்வா அடுத்த அறைக்குள் சென்று இங்கு தலை தெரியுமாறு படுத்துக் கொண்டு விடுகிறாள். சிவ பாஸ்கரன் பேசிக்கொண்டே அவ்வப்போது காலை கையை உடம்பைச் சொரிந்து கொள்கிறான் ஒரு சாய்வு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு ஊர் சுற்றிய கதையைத் தொடர்கிறான். வாஹினி பற்றி ஒரு கேள்வி. சுற்றி எல்லோரிடமும் ஒரு இறுக்கம் ஆச்சாரோட வந்த சீனிவாசனைப் பற்றி பேச்சு எழுகிறது. அது என்ன சாவா, தெய்வத்தோடே ஐக்கியம் என்று புல்லரித்து;ப் போகிறான் , சமையல் காரனை கோதுமை ரவா உப்புமா பண்ணுடான்னு ஆச்சார் சொன்னார் கங்கைக்கு நீராட சென்று திரும்பியவன் உடம்பு புல்லரிக்கத் திரும்புகிறான் கங்கையில் நீராடியவன் சப்த கன்னிகையரைப் பார்த்தானாம். உப்புமா ஒரு கவளம் சாப்பிட்டவன் தான். மறுநாள் ;பிணமாகத் தான் கிடந்தான்” என்று கதை சொல்கிறான். லக்ஷ்மி தன் வீட்டுக்குப் போகிறாள். எல்லோரும் தூங்கப் போகிறார்கள் அவரவர் இடத்துக்கு. மறுநாள் காலை சிவ பாஸ்கரனைக் காணோம். அவ்வா வெளியே உட்கார்ந்து தனக்குள் அழுது கொண்டிருக்கிறாள். தூங்குமுன் கழட்டி வைத்த இரண்டு தோடுகளைக் காணோம்.
ஒரு சூழலை அலட்டிக்கொள்ளாமல் சப்தம் எழுப்பாமல், வெகு சாதாரணமாகச் சொல்லிக்கொண்டே அச்சூழலின் உள்ளே உறைந்திருக்கும் ஒரு நிரந்த நீண்ட சோகத்தைச் சொல்லிவிடுகிறார். அது மிக அமைதியாக, புலம்பாமல் மனதுக்குள் குமைந்து குமைந்து அழுத்தும் சோகம். 13 வருஷம் முன்னால், இருபத்தாறு வயசில் சொல்லாமல் கொள்ளாமல், ஓடிப்போன மகன், இப்போது திடீரென்று முன் நின்றவன்,அதே போல் சொல்லாமல் மறுபடியும் ஓடிப்போய் விட்டான்.. அவ்வாவின் துக்கம் அடுத்த அறைக்குப் போய் (அவளால் ஏதோ ஒன்றுமே நடக்காதது ;போல் அவர்களோடு கலந்து கொள்ள முடியவில்லை) மிக அமைதியாக தலை நீட்டிப் படுத்துக்கொள்வதும் மறுநாள் காலை மறுபடியும் மனதுக்குள் அழுவதும்தான்.
இது போல் தான் தொகுப்பின் முப்பது நான்கு கதைகளில் அனேகமாக, முப்பது கதைகள். மௌனித்த சோகம். எதுவும் பெரிய ஷேக்ஸ்பியரியன் ட்ராஜெடி இல்லை. அனேகமாக ஒவ்வொரு வீட்டிலும் அழுத்தி வேதனைப் படுத்தும் சோகம். குரல் எழுப்பாது வலிக்கும் சோகம். அதே போல் ஹரன் பிரசன்னாவும் மிக அமைதியாக வெகு சாதாரண எளிய சொற்கள் கொண்ட விவரிப்பில் ஒரு சூழலில் புதைந்திருக்கும் ஒரு சோகத்தை சொல்லாமல் சொல்லி நகர்ந்து விடுகிறார்.
சுற்றம் என்ற கதை ஒரு வீடு மாற்றலோடு தொடங்குகிறது. பழைய வீட்டின் சாமானெல்லாம் வண்டியில் ஏற்றியாகிறது. எதிர் வீட்டு,பக்கத்து வீட்டார்கள் எல்லாம் வாசலுக்கு வந்து பார்த்தாகிறது. அம்மா, (இந்த வீட்டில் தான் அப்பா இறந்தார். அதிலிருந்து அம்மாவின் மடி ஆசாரம் இன்னம் தீவிரமடைகிறது. மடியோடு யார் மீதும் படாமல் (அன்றைக்கு ஆடி அமாவாசை வேறே) வாசலில் எதிர்ப்பட்டவர்களுடன் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறாள். சம்படமாட்டும் வீடு என்று அடிக்கடி குறைப்பட்டுக்கொண்டாலும் அந்த வீட்டை விட்டுப் போக மனமில்லை. எத்தனையோ குறைகள். நாள் கிழமைக்கு வெத்திலை பாக்கு கொடுக்க யாருமில்லை. ஆனாலும் அப்பாவோடு வாழ்ந்த வீடாச்சே. இந்த வீட்டுக்கு வந்த போது யாருடன் பேசாது பழகாது இருந்தவர்கள் எல்லாம் பழகத் தொடங்கியாயிற்று. காலையில் அந்த ஒடிசலான தேகம் பேப்பர் படிக்க உட்கார்ந்து விடும் ஒரு வரி விடாது. “பாவம் மாமி” என்ற அனுதாபத்தையும் சம்பாதித்தாயிற்று. அங்கு சுற்றியிருப்பவர் எல்லோர் கதையும் தெரியும். மெய்ண்டெனன்ஸ் மாமியையும் சேர்த்து. எல்லோர் சுக துக்கங்களும் தெரியும். ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல வார்த்தை அவர்கள் முகம் மலர. அல்லது துக்கம் கொஞ்சம் குறைய. புதிதாக வீட்டை விலைக்கு வாங்கி குடிவருகிறவர்கள் ஒரு மாதிரி ரகம். கஷ்டம் தான். ;பைக் வைக்க. சண்டைக் காரர்கள். வீடு சொந்தம் என்ற தோரணை வேறே. அம்மாவுக்கு நாள் கிழமைக்கு அழைக்க வெத்திலை பாக்கு கொடுக்க இன்னொரு குடும்பம் என்ற சந்தோஷம். ஒரு வாரத்தில் அந்த முசுடுகளோடு கூட சினேகம் ஆயாச்சு. அவர்கள் வீட்டுக் கதைகள் இங்கும் அத்துபடி ஆயாச்சு. மூணு பிள்ளகளாம். மூணுக்கும் இன்னம் கல்யாணம் ஆகலையாம் என்று அம்மா சொல்கிறாள். ”அந்த மாமிக்கு ரண்டு கிட்னியும் ஃபெய்லியர்” என்பது அடுத்து வந்த செய்தி. திடுக்கிட்ட மனதில் அந்த மாமியின் ஒல்லியான தலை நரைத்த, நடக்க முடியாது ;பலவீனப்பட்ட தேகம் படுகிறது. கழுத்தில் பளிச்சிடும் மஞ்சள் கயிறு. மறுநாள் காலை அந்த வீட்டு மாமா நெற்றி நிறைய பட்டை, இடுப்பில் ஒரு ஈரத் துண்டு, ஒடுங்கிய தேகம், வாசலில் இருக்கும் துளசி மாடத்தின் முன் பூஜை செய்து கொண்டிருக்க,, பைக்கை எடுக்க இடைஞ்சல். “பரவாயில்லை, நீங்க பூஜையை பண்ணுங்கோ என்று காத்திருக்க தோணுகிறது. வயதானவர்.… அந்த துளசி மாடம் அம்மாவும் மனைவியும் வற்புறுத்த வாங்கி வந்தது,. அம்மா தினம் அதற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு தலையிலும் கொஞ்சம் தெளித்துக் கொள்வாள். பையன் கொஞ்சம் பெரியவனாகி நடக்கத் தொடங்கியதும் அவனும் நடை பழகி துளசி மாடத்துக்கு தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தாயிற்று. அது வேறு எல்லாருக்கும் பார்த்துக் களிக்கும் காட்சியாயிற்று. மாமா பூஜை முடிந்ததும் தரும் பழம் அவனுக்குத் தான். அவனும் பூஜை முடிய காத்திருப்பான். மாமிக்கு அப்பப்ப அடிக்கடி உடம்பு சீரியஸாகிவிடும். ஆஸ்பத்திரிக்கு ஓடுவார்கள். ரத்தம் கொடுத்து வீட்டுக்கு மாமாவும் மாமியும் திரும்புவது பெரும்பாடு. அன்றைக்கு அவர்களுக்கு சாப்பிட இங்கிருந்து தான் ஏதாவது போகும். “நல்ல வேளை நீங்க இருக்கேள். ஒரு காப்பி கொடுக்க ஆள் இல்லாம இருந்தது” என்று மாமி சந்தோசத்துடன் ஆசிர்வதித்தாள். இப்போது பேசி நேரம் போக்க மூன்று கிழவிகள் நல்ல சினேகம். அம்மா, மெய்ண்டெனன்ஸ் கிழவி மூணாவது இந்த மாமி. அவ்வப்போது பலகாரம் உணவு எல்லாம் பரிமாறிக்கொள்ளப்பட்டன. மூணு வளர்ந்த கல்யாணம் ஆகாத பசங்களும் தினம் குடித்துவிட்டு இரவு நேரம் கழித்துத் தான் வருவார்கள். வந்து நேரே போவது படுக்கைக்குத் தான். இந்த இரண்டு அப்பா அம்மா கிழங்கள் பற்றிக் கவலை இல்லை.
வீட்டு சாமான்கள் வண்டியில் ஏற்றியாயிற்று. எல்லோருக்கும் பிரிவின் துக்கம். ”உள்ளூரில் தானே வீடு மாறியாகிறது அடிக்கடி வந்து பாத்துக்கொள்ள மாட்டோமா” என்ற சமாதானமும் ஆறுதலும். மாமா மாமிக்கு நமஸ்காரம் செய்து வண்டியில் ஏறி அது கிளம்பியதும், அம்மா, துளசி மாடத்தை மறந்துட்டோமே என்று சத்தம் போட அதுவும் ஓடிப்போய் எடுத்து வந்து, கடைசியாக டாக்ஸியில் ஏறுகிறது.
இப்போது, அடிக்கடி போனில் பேச்சு தொடரும். ”இவ்வளவு அன்னியோன்யமா பழகிட்டு இப்போ ;பிரிஞ்சு ;போய்ட்டமே,” என்று பெருமூச்சு போனில் கேட்கும். ஒரு நாள் போனில் பேசிக்கொண்டிருந்த அம்மாவின் அலறல் திடீரென்று . “அந்த மாமி போயிட்டாளாம்டா. ரொம்ப ஜாஸ்தியாகி, ஆஸ்பத்திரிலே ஐ.சி.யு லே வச்சிருந்தாளாம். நேத்திக்கு போயிட்டாளாம்” என்று அம்மா சேதி சொல்ல எல்லோரும் திக்கித்து நிற்கிறார்கள். ”நல்ல வேளை நாம் அப்போ அங்கே இல்லை. அதை நம்மால பாக்க தாங்கியிருக்காது”
ஒரு ஞாயிற்றுக் கிழமை துக்கம் கேட்க போகிறார்கள். “என்னைத் தனியா விட்டுட்டு போயிட்டாளே” என்று மாமா கதறி அழுகிறார். பின் கடைசியில், சின்ன பையனிடம், “ நீ மாமி கிட்டே வாழைப்பழத்துக்காக காத்திருப்பியேடா, மாமி இல்லேடா இப்போ” என்றவர், குரல் தளுதளுக்க, ”உங்க பாட்டி அந்த துளசி மாடத்தை இங்கேயே விட்டுப் போயிருக்கலாம், மாமிக்கு மனசு ஆறவே இல்லைடா” என்கிறார் மாமா. எல்லோரும், அம்மா, மனைவி, எல்லோரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியில் பார்த்துக்கொள்ள அம்மாவின் கண்களில் நீர் தளும்பி சொட்டுகிறது.
கொஞ்சம் விரிவாகவே சொல்லிவிட்டேன். இரண்டு மூன்றுவரிகளில் சொல்லியிருக்கலாம் தான். ஆனால் ஹரன் பிரசன்னாவின் எழுத்துத் திறனை, அவர் தீட்டும் உலகைப் பற்றி அது எதுவும் சொல்லாது. நான் விரிவாகச் சொன்னாலும் ஹரன் எழுத்தில் தான் இதைப் படிக்க வேண்டும்.
கடைசியாக தலைப்புக் கதை சாதேவி. சாதேவி என்றால் கணவன் இறந்த பிறகு தலையை மழித்துக் கொண்டு முக்காடு போட்டுக்கொள்ளும் விதவை. அப்படிச் செய்துகொள்ளாது விதவை வாழ்க்கை வாழும் ஸ்த்ரீ சாகேசி என்று அழைக்கப்படுகிறாள். இது கன்னட வாழ்க்கையின் ஒரு கூறு. சாதேவியாக வேண்டும் என்று ஏதும் நிர்ப்பந்தம் ஏதும் இல்லை இக்காலத்தில். ஆயினும் சாதேவிக்கு தனி மரியாதையும் கௌரவமும் உண்டு. அது சாகேசிகளுக்கு மறுக்கப்படுகிறது.
அப்பா இறந்து விட்டார். வயது 70 சொச்சம் அவ்வளவு வருஷங்களும் அவர் தன் இயல்பில் வெகுளியாகவே வாழ்ந்துவிட்டார். அம்மாவுக்கு அவரது வெகுளித்தனத்தைக் கண்டு வசவு கேலிகள்.”நீங்க பிறந்த போது உங்க அம்மாவுக்கு 15 வயசு. அந்த 15 வயசு புத்தி தான் உங்களுக்கு கொடுத்துட்டு போயிருக்கா” என்று திட்டுவாள். எது எப்போ செய்யணும், எது எப்போ செய்யக்கூடாதுன்னு ஏதாவது தெரியறதா? என்று இளக்காரம். பிள்ளைக்கும் அதே அபிப்ராயம் தான். கொஞ்சம் கூடவே ஏமாளி என்ற நினைப்பு.
ஒம்பது நாள் காரியங்களையும் ஸ்ரீரங்கம் மடத்திலேயே செய்வதாக தீர்மானம். மடத்திலேயோ ஆசார கட்டுப்பாடுகள் அதிகம். மாற்றுக் குறையாத கன்னடம் வேறே. எப்போதும் டெலெபோன் அடித்துக் கொண்டே இருக்கும். எல்லாம் கடைசிக் காரியங்களுக்குத் தான். கூடம் எப்போதும் நிறைந்து வழியும். ஆச்சார்கள் நடமாட்டம். ஒதுங்கிக்கங்கோ ஒதுங்கிக்கங்கோ என்று யாராவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மடத்திலிருந்து ஆச்சார்கள் ஊர் ஊருக்கு போவதும் வருவதுமாக இருப்பார்கள். அப்பாவுக்கு கர்மா செய்கிற பிள்ளை முழங்கால் ஆழத்துக்கு ஓடும் ஆற்றில் மூணு மூணு தடவையாக ஒன்பது தரம் 27 தடவை முழுகி எழவேண்டும். இப்படி ஒரு கடுமையான ஆசாரமான சூழல். வெகுளி, உலகம் அறியாத எல்லோரிடமும் ஏமாறும் ஏமாளி என்று நினைத்திருந்த அப்பாவுக்கு அப்போது கூடிய உறவினர், அப்பாவுடன் பழகியவர் சினேகிதர் கூட்டம், அப்பாவைத் தப்பாக நினைத்து விட்டோமே என்று யோசிக்க வைத்தது. எல்லோரும் ஓடி ஓடி எல்லாக் காரியங்களையும் கவனித்தார்கள்.
பத்தாம் நாள் தான் கடுமையான ஆசார அனுஷ்டானங்களுக்கான நாள். ஆச்சார் சொல்லிவிட்டார். ”வெகு காலையில் குளித்து சுமங்கலியாக உடை உடுத்தி, பூவைத்துக்கொண்டு,ஆகாரம் உண்டுவரவேண்டும். யாரும் பாக்கறவா சுமங்கிலியாக பார்த்து விட வேண்டும். அதுக்கு அப்புறம் பார்க்கக் கூடாது….”. இப்படி ஒரு கூடை கூடாதுகள். ”வந்து இங்கே ஒரு அறையில் தங்கி விடவேண்டும். கூட ஒரு சாதேவியோ சாகேசியோ வரணும்…. ஒரு அம்பட்டனுக்கு நாங்களே ஏற்பாடு செய்து விடுகிறோம். ரொம்ப சிம்பிளாகத் தான் இருக்கும். காலம் மாறிடுத்து. ரொம்ப கலவரப்படுத்த வேண்டாம் வயசான ஜீவன்….”. இப்படி போகிறது ஆசார் சொல்லிக்கொண்டே போகிறது. கொஞ்சம் பதட்டமாகவும் உதறலாகவும் தான் இருந்தது.
அம்மாவின் இந்த பத்து நாளும் கழிவது எதையோ விரக்தியாக எங்கேயே பார்த்துக்கொண்டு பறிகொடுத்த முகத்துடன் தான். பேரப்பிள்ளை அவ்வா என்று வந்து கட்டிக்கொள்கிறான். திடீரென்று அம்மா சொல்கிறாள். “நான் சொல்றதை பதட்டப் படாமே கேட்டுக்கோ. நான் நாளைக்கு மொட்டை போட்டுக்கறேனே:” திடுக்கிட்ட பிள்ளையின் திடீரென்று எழுந்த கூச்சல். எல்லோரும் ஓடி வந்து என்ன வென்று பார்த்தால், ”அம்மா மொட்டை போட்டுக்கறாளாம்” எல்லோருக்குமே திகைப்பும், நம்ப முடியாத ஒரு அதிர்ச்சியும். எல்லோரும் சொல்லிப் பார்க்கிறார்கள். “இப்போல்லாம் யார் மொட்டை போட்டுக்கறா. அது ஏதோ பழங்காலப் பழக்கம். மொட்டை போட்டுக்காட்டா யாரும் ஏதும் சொல்ல;ப் போறதில்லை. யாராவது சாதேவி கண்ணிலே படறாளா சொல்லுங்கோ…”.இப்படி ஆளுக்கு ஆள் சமாதானமும், கண்டிப்புமாகப் பேசுகிறார்கள். எதற்கும் அம்மா மசிவதாக இல்லை. தன் தீர்மானத்தில் கண்டிப்பாக இருக்கிறாள். அண்ணா கோபித்துக்கொண்டு தன்னிடம் திரும்பிப் போகிறார். எல்லோரும் என்னென்னமோ சொல்லிப் பார்க்கிறார்கள்.” இப்போ எங்கேயாவது சாதேவி கண்ணிலே ;படறாளா? சொல்லுங்கோ, என்னத்துக்கு இது வேண்டாத ,…..? என்றால், “ அதனாலே தான் சொல்றேன். நான் சாதேவியா இருந்துடறேன்” என்று பதில். ஒரே அழுகை சுத்தி இருப்பவர்கள். அம்மா காதில் எதுவும் விழுந்ததாகத் தெரியவில்லை. இதற்கெல்லாம் இடையே, “ இப்படி ஒண்ணுத்துக்கும் ஆகாமே போயிட்டயேடி, என்று ஒரு வயசான மொட்டைப்பாட்டி கிட்ட உட்கார்ந்து கொண்டு ரொம்ப நேரம் புலம்பல்
மறுநாள் எல்லாம் ஒவ்வொன்றாக நடந்தேறியது. தாலியை அறுக்கவே முடியவில்லை. ”ரொம்ப கஷ்டப் படுத்ததேங்கோ. கழட்டி வச்சுடுங்கோ “ என்று ஆச்சாரே சொல்கிறார். “எனக்கு சாதேவி ஆகணும்”னு தான் அம்மா திரும்பத்திரும்ப முனகுகிறாள். அவருக்கும் அதிர்ச்சி, இதைக் கேட்க. “ இதோ பாருங்கம்மா, எனக்கு நீங்க அம்மா மாதிரி. எனக்குத் தெரிஞ்சு யாருமே இதைச் செஞ்சுக்கிறதில்லே. இதெல்லாம் வேண்டாம்: என்று சொல்லிப் பார்க்கிறார். அவருக்கே இது தாங்கவில்லை. மறுபடியும் அம்மா, “அதனாலே தான் நான் சாதேவியாகணும்கறேன்” என்று கண்டிப்பான தோரணையில் சொல்கிறாள்.
கடைசியில் அம்மா பிடிவாதம் தான் வென்றது. குளித்துக் கரையேறுகிறார்கள், அம்மா உடன் இருக்கும் சாதேவி கைத்தாங்கலாக அம்மாவை அழைத்து வருகிறாள்.
ஒரே அழுகை. எப்படி அம்மாவைப் பார்க்கறது?
ஒரு முதியவர் “இது சாதாரண காரியம் இல்லேம்மா நீ ;பண்ணியிருக்க வேண்டாம். ஆனா பண்ணீட்டே. உன் புருஷன் மேலே வச்சிருக்க பாசத்தை நீ காமிச்சுட்டே எனக்கு என்ன பேசறதுன்னே தெரியலே. ஆனா இது அசாதரண காரியம்னு மட்டும் தெரியறது. உன் குடும்பம் வாழையடி வாழையா நல்லா வாழணும்” என்று தழ தழத்துச் சொல்கிறார். அதற்கு அம்மா, சொன்னாள் “என்னமோ அவரே வந்து எனக்கு சொல்றதா இத எடுத்துக்கறேன். என்னமோ எனக்கு இப்படிச் செய்யணும்னு தோணித்து. அவர் இருக்கறப்போ அவரே இப்படிச் செஞ்சுக்கச் சொன்னாலும் செஞ்சிருப்பேனா தெரியாது. ஆனா, அவர் போனப்பறம் தான் அவர் இழப்பு தெரியறது.”
ஆளாளுக்கு அவாளவாளுக்குத் தெரிந்த கதையைச் சொல்கிறார்கள். கடைசியில், ”ஏம்மா இப்படி செஞ்சுட்டே” ன்னு கண்ணீரோடு கேட்கும் ;பிள்ளையின் கண்ணீரைத் துடைத்து, “என்னமோ தோணித்துடா செஞ்சேன்.” என்கிறாள். “ஏன் இப்படி தோணித்து?” “புருஷன் போனா மொட்டை அடிச்சிக்கிறவா தான் புருஷனோட வாழ்ந்தவ.” ன்னு ஒரு நா அப்பா சொன்னா. அதான்னு வச்சுக்கோயேன்” என்கிறாள் அம்மா.
“அப்படீன்னா அப்பா வெகுளி இல்லையா? என்று பிள்ளைக்குக் கேட்கத் தோன்றுகிறது.
”நீ, உன் பெண்டாட்டி கிட்ட இப்படிச் சொல்வியா, மாட்டே. அப்போ அப்பா வெகுளிதாண்டா”. என்று அம்மா பதில் சொல்கிறாள்.
என்னவானால் என்ன? புருஷன் 15 வயசு புத்தியோடத் தான் இருக்கட்டும். ஏமாளியே ஆகட்டும். 75 வயசு வரைக்கும் கூட வாழ்ந்த வாழ்க்கை ஒன்று இருக்கிறது. அதை இழந்து நிற்கிறாள் அம்மா. இப்போது மிஞ்சியது அந்த நினைவுகள் தான்
இப்போது அடிக்குறிப்பு ஒன்று. ஆசிரியர் ஹரன் ;பிரசன்னா ஒரு தமாஷான பேர்வழி, என்று சொன்னேன். எப்போதும் யாரையாவது, காலை வாரிக்கொண்டும் எதையாவது கிண்டல் செய்துகொண்டும் இருப்பவர். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பின் 34 கதைகளில் 30 கதைகள் சக மனிதர்களின் சாதாரண வாழ்க்கையில் காணும் ஒரு ஆழ்ந்த சோகக் கீற்றுதான் மிகச் சிறப்பாக நம்மையும் பாதிக்கும் வகையில் எழுத்துருவம் பெற்றுள்ளது. ஆனாலும் ஆங்காங்கே நம்மைப் புன்னகைக்க வைக்கும் இயல்பான வரிகளும் உண்டு தான். எப்படி இது நிகழ்கிறது? மனித மனத்தின் ஆழங்கள், இயற்கையின் புதிர்கள் எல்லாமே நமக்குப் புரிந்து விடுகிறதா என்ன?
வெங்கட் சாமிநாதன்/20.9.2015
சாதேவி: (சிறுகதைத் தொகுப்பு) ஹரன் பிரசன்னா” பிரசுரம்: மைலை முத்துக்கள், 24, கற்பகம் அபார்ட்மெண்ட்ஸ், கனால் ரோட், மைலாப்பூர், சென்னை- 4, ;பக்கங்கள் 360, விலை ரூ 200