“கோடோவுக்காகக் காத்திருத்தல்(Waiting for Godot)என்ற பிரசித்தமான அபத்த நாடகத்துடனே இணைத்துப் பார்க்கப்படுகிறது சாமுவெல் பெக்கெட்டின் பெயர். இந்த நாடகத்தில் கோடோ என்ற நபருக்காக இருவர் காத்திருக்கின்றனர். நாடகம் முடியும் போதும் கோடோ வருவதில்லை. 1953ஆம் ஆண்டு இந்த நாடகம் பாரிஸில் மேடை ஏற்றப்படுவதற்கு முன்பு சாமுவேல் பெக்கெட்டைத் தெரியாதவர்கள் அவரை தெரிந்து கொள்ள வைத்தது. இருப்பினும் நவீனத்துவ இலக்கியத்தில், பெக்கெட் பிரதானமாய் நாவலாசிரியராக மதிப்பிடப்படுகிறார். ஜேம்ஸ் ஜாய்சுக்குப் பிறகு நவீனத்துவ இலக்கியத்தில் உச்ச ஸ்தானத்தைப் பெறுபவர் பெக்கெட். நாவல், நாடகம், கவிதை, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பெக்கெட்டின் பங்களிப்பு சாதாரணப்படுத்த முடியாதது. ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் சரிசமமான சரளத்துடன் படைப்புகளை எழுதியவர். நடிகர்களே இல்லாத நாடகங்கள், வார்த்தைகளே இல்லாத நாடக அங்கங்கள், கதைத் திட்டமே (Plot)இல்லாத நாவல்கள் ஆகியவற்றின் முன்னோடி பெக்கெட்.
1906ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார். Trintly Collegeஇல் பட்டம் பெற்றார். பல்கலைக் கழகங்களில் சிறிது காலம் பணியாற்றிய பின் விலகினார். 1930களில் ஐரோப்பிய நாடுகளில் சுற்றிப் பயணம் செய்தார். பாரிசில் ஜேம்ஸ் ஜாய்சை சந்தித்து சிறிது காலம் அவருக்கு காரியதரிசியாகப் பணிபுரிந்தார். பிறகு பாரிசில் தங்க முடிவு செய்தார். 1969ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் பரிசை வாங்குவதற்கு அவர் ஸ்டாக்ஹோமுக்குப் போகவில்லை. சிறுகதைகளையும் முதல் இரண்டு நாவல்களையும் ஆங்கிலத்தில் எழுதினார். முப்பெரும் நாவல்களையும் (Trilogy), நாடகங்களையும் முதலில் பிரெஞ்சு மொழியில் எழுதி, பிறகு அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
பெக்கெட்டை பாதித்தவர்கள் இருவர்: (1) ஜேம்ஸ் ஜாய்ஸ் (2) பிரெஞ்சு நாவலாசிரியரான மார்செல் ப்ரூஸ் (Marcel Proust), “பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலுக்கு சவக்குழி தோண்டியவர்கள்” பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெறுபவர்கள் ஜாய்ஸ் மற்றும் ப்ரூஸ். ஜாய்ஸின் Ulysses நாவல் சகல யதார்த்த நாவல்களையும் ஒரு முடிவுக்குக் கொணர்ந்தது. புறவயமான தகவல்களை ஆவணப்படுத்தும் யதார்த்த நாவல் உள்மயமான, சாட்ஷாத் யதார்த்தத்தை பதிவு செய்யத் தவறி விடுகிறது என்றார் மார்செல் ப்ரூஸ். ரியலிஸ்டுகளும் நேச்சுரலிச நாவலாசரியர்களும் அனுபவத்தின் குடல்கழிவுகளை மாத்திரம் வழிபட்டு, வாழ்வின் மேம்போக்கான அம்சங்களையே எழுதுகின்றனர் என்றார் பெக்கெட்.
வாட் (Watt)நாவல் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் தொடங்கப்பட்டு போர் முடிந்த பின் முடிக்கப்பட்டது. ஹிட்லரின் ஆக்கிரமிப்பை எதிர்த்த பிரெஞ்சு எதிர்ப்பு இயக்கக் (Resistance Movement) குழுவில் பெக்கெட் ரகசிய செய்திகளைத் தொகுப்பவராக இருந்தார். பெக்கெட்டையும் அவரது மனைவி யையும் நாஜி ரகசிய போலீசான Gestapo கைது செய்யுமுன் தப்பித்தனர். Rousillion என்ற ஆக்கிரமிக்கப்படாத பகுதியை அடைந்து பிரெஞ்சு விவசாயியைப் போல் பெக்கெட் இரண்டு வருடம் வாழ்ந்தார். இந்தக் கால கட்டத்தில் Aude என்ற மனிதனுக்கு விறகு வெட்டிக் கொடுத்து தனக்கும் தன் மனைவிக்குமான உணவைச் சம்பாதித்துக் கொண்டார். மாலையில் ஓய்வு நேரத்தில் பயிற்சி ஏடுகளில் வாட் நாவலை எழுதினார்.
பெக்கெட்டின் நாடகங்கள் “எதிர் நாடகம்”(Anti-Theatre)என்ற வகைமையில் அடங்கும். அவ்வாறே அவரது நாவல்களும் “எதிர் நாவல்” (Anti-Novel) வகைப்படும். நம்மால் அடையாளப் படுத்தக்கூடிய மனிதர்களை, அடையாளப்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளை வைத்துக் கதை சொல்ல மறுப்பது எதிர்நாவல். இவ்வகை நாவல் இரண்டாம்பட்ச முக்கியத்துவமுள்ள பாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும். பொருள்கள் பற்றிய பட்டியல்களைக் கொண்டிருக்கும். ஆனால் கதை என்ற அம்சம் மறுக்கப்படும். இறுதி முடிவினை நோக்கிய இயக்கமே இருக்காது. மொழிநடையின் சிக்கல்களிலும், சாத்தியப்பாடுகளின் அசாத்திய பொருத்தங்களிலும் கவனம் செலுத்தும். வாட் நாவலில் கதைசொல்லியின்(narrator)விவரிப்பினை விட வாட்டின் மண்டைக்குள் பேசும் குரல்களைப் பதிவு செய்வதையே பெக்கெட் முதன்மைப்படுத்துகிறார். வாட் நாவல் பெக்கெட்டின் ஆங்கில எழுத்துக் கட்டத்தைச் சேர்ந்தது. முப்பெரும் நாவல்களான Molloy, Malone Dies, Unnameable, ஆகியவை முதலில் ஃபிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டு பிறகு அவற்றை பெக்கெட் ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்தார்.
நாவலின் களம் டப்ளின் (அயர்லாந்து) நகருக்கு அருகில் அமைந்திருக்கிறது. ரயிலில் சென்று அடையலாம். ஆனால் இடத்தின் பெயர் குறிக்கப்படவில்லை. வாட் நாவலைச் சொல்பவர் வாட்டுடன் மனநோய் விடுதியில் இருந்த சாம் என்பவர். சாம் சொன்னதை வைத்து சாம் எழுதியதாக இந்த நாவல் கருதப்பட வேண்டும். Magdaleen Mental Mercy Seat என்ற மன நோய் விடுதியில் பெக்கெட் சிறிது காலம் பணியாற்றினார் என்ற விபரம் வாட் நாவலைப் புரிந்து கொள்ள உதவும்.
கதையைச் சொல்லும் சாம், செய்திப் பரிவர்த்தனை ரீதியில் பெருத்த சிரமங்களை எதிர்கொள்கிறார். வாட் பேசும் போது சொற்களின் முதல் எழுத்துக்களை மாற்றிப் போட்டுப் பேசுகிறான். வாக்கியத்திற்குள்ளும் சொற்களின் வரிசைப் பாட்டினை தலைகீழாக்கிப் பேசுகிறான். விடுதியில் கால்களைப் பின் வைத்து நடப்பது வாட்டின் வாக்கியங்களை நியாயப்படுத் துகிறது. விஷயங்களை மேலும் சிக்கலாக்க, வாட் காட்சிப்பு லன் உணர்வுகளையும், நுகர் உணர்வுகளையும் தெளிவின்றிக் கலந்து விடுகிறான். தீர்மானிக்க முடியாத தன்மை வைரஸ் நோய் போல் நாவல் முழுவதிலும் பரவிக்கிடக்கிறது. ஒரு கோடை காலத்தின் போது Knott என்பவரின் வீட்டுக்கு வேலைக்கு வரும் வாட், தனக்கான மாற்று ஆள் வந்தவுடன் மற்றொரு கோடையில் புறப்பட்டுச் செல்கிறான். இதற்கு இடையில் கழிந்த வருடங்கள் எத்தனை என்பதைச் சொல்ல முடியாதிருக்கிறது.
சிந்தனை செய்தலும், மொழிப்படுத்தலும் வாட்டைப் பொருத்தவரை ஒரே மாதிரியான செயல்கள். புலன்களையும், தர்க்கத்தையும், மொழியையும் பைத்தியக்காரத்தனமான கச்சிதத்துடன் அவன் பயன்படுத்துகிறான். தர்க்கத்தின் விதிமுறைகளே அவனது கருவிகள். பொருள்களுக்குப் பெயரி டவும் நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் தரவும் வாட் சொற்களைப் பயன்படுத்துகிறான். வஸ்துக்களும் நிகழ்ச்சிகளும் அறிவார்த்த ரீதியான புரிந்துகொள்ளலின் முன் அடிபணிய வேண்டு மென்று நினைக்கிறான். வாட்டின் அனுபவமூலவாதமும் (Empricism), பகுத்தறிவுவாதமும் (Rationalism) பைத்தியக்காரத்தனமான ஆன்மநித்தியவாதியாக (Solipsist) அவனை ஆக்குகிறது. காலம் வெளியுடன் விளையாடும் எளிமையான விளையாட்டுகளே வாழ்வின் நிகழ்வுகள் என்கிறான். அர்த்தத்தை நோக்கிய தொடர்ச்சியான தேடலும், அர்த்தத்தைப் புறக்கணித்தலும் மிகக் கூர்மையான பிரச்சனைகள் ஆகின்றன வாட்டுக்கு. இப்பிரச்சனைகள் பெக்கெட்டின் நாவல்களுக்கு அடித்தளம் ஆகின்றன. விவரிப்பதன் மூலம் நாம் ஏற்படுத்தும் அர்த்த வழங்கலை உலகமும் வாழ்வும் எதிர்க்கின்றன. ஆனால் அர்த்தப்படுத்தும் முயற்சியை பெக்கெட்டின் நாயகர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
மேலோட்டமாய் எளிய நிகழ்ச்சியாகத் தெரிகின்ற பியானோ சுருதி சேர்ப்பவர்களின் வருகை, வாட்டுக்குப் பெரிய பிரச்சனையாகி விடுகிறது. கண் தெரியாத முதிய Gall, இளைய Gall என்பவரால் Knott-ன் வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறார். Gall கள் அப்பாவும் மகனும் ஆவர். அப்படித்தான் அறிமுகமும் செய்து கொள்கின்றனர். பொதுவாக பியானோ சுருதி சேர்ப்பவர்கள் கண் பார்வை அற்றவர்களாக இருப்பார்கள். வாட் பியானோ அறைக்குள் வரும் போது அவன் நினைத்ததற்கு மாறாக இளைய Gall சுருதி சேர்க்கிறார். முதியவர் அறையின் நடுவில் நின்றபடி சுருதியைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர்களின் தோற்றம், உறவு குறித்த பிரச்சனைகள் வாட்டை நச்சரிக்கத் தொடங்குகின்றன. மொழியின் கருதுகோள்களை மிஞ்சுகிற, நழுவிவிடுகிற அனுபவங்கள் அவனை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. மொழியாலும், தர்க்கத்தாலும் அனுபவங்களை எதிர்கொண்டு வாழ்ந்த வாட், Knott இன் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை மொழிப்படுத்தி புரிந்து கொள்ள முடியாமல் இறுதியில் மனநோய் விடுதியைச் சேர்கிறான். 4 அத்தியாயங்களையும் ஒரு பின் இணைப்பையும் (Addenda) கொண்டது இந்நாவல். கச்சிதமான வாக்கியங்கள், சில பாடல்கள், கவிதைகள் போன்ற நாவலுக்கு தேவையற்ற விஷயங்கள் Addenda வில் உள்ளன.
வாட்டின் எஜமானரான Knott மர்மமான மனிதர். அவர் வீட்டில் நடக்கும் நியமங்கள் காரணகாரியத்திற்கு அப்பாற்பட்டவை. Knott இன் வட்டவடிவ படுக்கை ஒவ்வொரு இரவும் சிறிது இடம் பெயர்க்கப்பட்டு வருட முடிவில் ஒரு முழுசுற்று வந்து விடும். தன் எஜமானரைப் பார்த்து வாட் இறுதி வரை பேசுவதே இல்லை. Knott தனக்குத்தானே பேசிக்கொள்கிறார்: பாடிக்கொள்கிறார். தன்னை சுமாரான மொழியியல் வல்லுநன் எனக் கூறும் வாட், Knott பேசுவது இன்னது என்று அறியமுடிவதில்லை. Knott வசதியானவர். ஆனால் அவரின் சமூக-பொருளாதாரப் பின்னணி யூகிக்கப்பட முடியாதிருக்கிறது. அவர் சாப்பிடும் ஒரு வாரத்திற்கான உணவு ஒரே நாளில் ஏன் தயாரிக்கப்பட வேண்டும் என்பது யாருக்கும் தெரியாது. நாவலின் முடிவில் Knott அறியப்பட முடியாதவராக வாட்டுக்கு மட்டுமல்ல, நமக்கும்தான் இருக்கிறார். “கோடோவுக்காகக் காத்திருத்தலில்”வரும் Godot க்கும் Knott க்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. மேலும் Watt இன் பெயரில் what? என்ற கேள்வி ஒருபொருட்பன்மொழியாக இருக்கிறது. அவ்வாறே Knott இன் பெயரில் Not உம் (Not), இல்லை (Nought), ஒன்றுமே இல்லை சிக்கல், முடிச்சு போன்ற அர்த்தங்களும் அதிர்கின்றன.
காஃப்காவின் கோட்டை (The Caste ) நாவலுக்கும் வாட் நாவலுக்கும் நிறைய பொதுத்தன்மைகள் காணப்படுகின்றன. கோட்டை நாவலில் k. என்பவனுக்கு கோட்டையிலிருந்து சர்வேயர் வேலைக்கு ஆணை வருகிறது. கோட்டையை அடைந்து அவனுக்கான வேலை என்னென்ன என்று தெரிந்து கொள்வது எளிய காரியம். இதில் k. வுக்கு ஏற்படும் தொடர்ந்த தடைகள், சிக்கல்கள் ஒருவரைப் பைத்தியமாக்கக் கூடியவை. k வும் வாட்டைப் போல தர்க்கத்தில் நம்பிக்கை வைப்பவன். கோட்டை நாவலின் அதிபர் West West நாவலில் தோன்றுவதே இல்லை. வாட் நாவலில் Knott தோன்றினாலும் வாட்டுக்கு மனதில் பதியும்படியான காட்சி கிடைப்பதில்லை.
வாட் நாவல் யதர்த்த வகை நாவலைப் போலல்லாது ஒரு நிகழ்வினை அதன் சகல சாத்தியப்பாடுகளுடன் அலசுகிறது. கணிதக் கூறுகளையும், Permutation-Combination ஐயும் சூழ்நிலைகளை அலசுவதற்கு பெக்கெட் பயன்படுத்துகிறார். முதல் பதிப்பு பாரிசில் Olimpia Press மூலம் 1953ஆம் ஆண்டு வெளியடப்பட்டது.