சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்!

[ பதிவுகள் இணைய இதழின் நவம்பர் 2005 இதழ் 71 இல் வெளியான கட்டுரை. ஒரு பதிவுக்காக ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. -பதிவுகள் ]  

- வெங்கட் சாமிநாதன் -முதலில் என்னுடைய அறியாமையை ஒப்புக்கொள்ள வேண்டும். சிங்கப்பூர் பார்க்கப்போனால் ஒரு நகரமே.. அந்த நகரம் தான் ஒரு நாடாக, மலேயாவிலிருந்து பிரிந்த நாடாக, கொஞ்ச காலம் முன் தன் இருப்பை மேம்படுத்திக் கொண்டுள்ளது. லீ க்வான் யூ வின் தலைமை வழிகாட்டுதலில் வியக்கத் தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்து Asian Tiger-ல் ஒன்றாக ஆகியுள்ளது.. அந்த அரசில் ஒரு தமிழர் அயல்நாட்டு உறவு அமைச்சராகும் அளவிற்கு தமிழர்களின் இடம் அந்நாட்டில் சிறப்புப் பெற்றுள்ளது. தமிழ் அந்நாட்டின் அரசு மொழிகளில் ஒன்று. சரி. இதெல்லாம் சரி. ஆனால் இலக்கியம்?  தென் ஆப்பிரிக்கா, ·பிஜி, மாரிஷஸ், மலேசியா, கயானா இலங்கை, இப்படி பல நாடுகளுக்கு 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்கள் லக்ஷக்கணக்கில் கரும்பு, ரப்பர் தோட்டங்களில் கூலிகளாக தங்கள் வயிற்றுப் பாட்டிற்கு சென்றனர். அவர்கள் ஏழைகள். படிப்பற்றவர்கள். பல இடங்களில் அவர்கள் தம் தாய் மொழியையும் மறந்தவர்கள் தான். அப்படி இருக்க இலக்கியம் என்று அவர்களிடமிருந்து என்ன எதிர் பார்க்க முடியும்.? அதிகம் அவர்கள் ஒரு முருகன் கோயில் அல்லது மாரியம்மன் கோயில் எழுப்பி காவடி, தீமிதி என்று தம் தமிழ் அடையாளத்தை நினைவுறுத்திக் கொண்டிருக்கலாம். மலேசியாவில் இது வெகு சிறப்பாக நடை பெறுகிறது. தமிழ் சினிமாவில் நேற்றைய தீபாவளி ரிலீஸ் வரை அப்டுடேட்டாக இருக்கலாம். சரி. அதற்கு மேல்? ஒர் விதி விலக்கு. இலங்கை. ஆனால் அங்கு இலக்கியப் படைப்புகளில் ஆழ்பவர்கள், தேயிலை ரப்பர் தோட்ட தொழிலாளிகள் அல்ல. சரித்திர காலத்திலிருந்தே அங்கு வாழ்ந்து வரும் ஈழத் தமிழர் தான். 50 களிலோ என்னவோ கு. அழகிரிசாமி மலேயா சென்று சிறுகதை வகுப்புகள் நடத்தியதாக படித்த ஞாபகம். வகுப்பு  நடத்தி, யாரும் சிறுகதைக்காரராகும் வாய்ப்பு இருக்கிறதா? யாரும் அந்த வகுப்பிலிருந்து சிறுகதைக்காரராக வெளியேறியிருக்கிறார்களா? தெரியாது. 

ஆனால்  முனைவர் எம்.எஸ் ஸ்ரீலக்ஷ்மி அவர்களின் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் – ஆழமும் அகலமும்  என்ற புத்தகம் அவ்வப்போது வாசித்த கருத்தரங்க கட்டுரைகளின் தொகுப்பு. அது பல புதிய சுவாரஸ்யமான செய்திகளைத் தருகிறது. அந்த செய்திகள் பலவும் நமக்குத் தெரிய வேண்டியவை. மகிழ்ச்சி அளிப்பவை. அவர் தரும் செய்திகள் சில  நம்மில் பல கேள்விகளையும் எழுப்பி இன்னும் சற்று அதிகம் அறியத் தூண்டுகின்றன. அங்கு, மலேயாவிலோ, சிங்கப்பூரிலோ 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குடியேறத்தொடங்கியவர்களில் பாதிப்பேரான  ஆதி திராவிடர்களும் மற்றவர்களும் , வயிற்றுப் பிழைப்பிற்காக போனவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்றிருக்க, தமிழ் சிறுகதை வரலாற்றில் எழுதப்பட்ட முதல் சிறுகதை, விநோத சம்பாஷணை, மக்தூம் சாயபு என்பவரால்  எழுதப்பட்டது.  சிங்கப்பூர் மண்ணில் தோன்றியது. வருடம் 1888. வடிவச் சோதனைக்கும் வட்டாரத் தமிழுக்கும் வாய்ப்பளித்த கதை என்று சொல்லப்படுகிறது. அதன் சிறுகதை வடிவம் பற்றி கேள்விகள் எழுந்தாலும், வ.வே.சு. ஐயரை அது முந்திக்கொண்டுள்ளது என்பது விசேஷம். மக்தூம் சாயபு யார், அவர் இதை எழுத வந்த பின்னணி என்ன, போன்ற விவரங்களைக் கேட்க தோன்றுகிறது நமக்கு. அதன் தொடர் நிகழ்வுகள் என்ன என்றும் கூட. இதன் இழையில் இன்னொரு சுவாரஸ்யமான விவரம் இத்தீவு மக்கள் 1825 லிருந்தே இலக்கியம் படைக்கத் தொடங்கி விட்டனர் என்பது.  சி.ந.சதாசிவப் பண்டிதர் வண்ணை அந்தாதி என்று தொடங்கி நான்கு அந்தாதிகள் 1887 -ல் எழுதி அச்சிட்டிருக்கிறார் இலங்கையிலிருந்து வந்தவர் தன் யாழ்ப்பாண வண்ணை நகரைப் பற்றி இரண்டும் பின் சிங்கப்பூரில் வந்த இடத்தில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் பற்றியுமானவை அவை. இது தொடர்கிறது. 1893-ல் ந’.வ்.இரங்கசாமிதாசன் அதிவினோதக் குதிரைப் பந்தய லாவணி என்னும் லாவணி பாடியிருக்கிறார். ஒரு பயண நூல், மலாக்காவுக்கு கப்பலில் வந்த கதையை காவடிச் சிந்து வடிவில் ஆதியோடந்தமாகச் சொல்கிறது. அக்கால சிங்கப்பூர், கப்பல் பயணம், இத்யாதி பற்றிய வரலாற்றுப் பதிவு என்று இப்பயணக் கதையைச் சொல்லவேண்டும். இதை எழுதியவர் இதைத் தொடர்ந்து பல பயண நூல்கள் சிந்துக்களாகத் தொடர்கின்றன. 1907 -ல் சிங்கை நகர் பற்றியும், 1936- புத்தர் ஆலய வழி நடைச் சிந்து (பிரமன் ஆலயம் என்றும் வேறு ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது) என்றும் கடைசியாக 1937-ல் இந்தியக் கப்பல் பிரயாணம் பற்றி ஒரு வழி நடைச் சிந்து. இவை அவ்வளவும் மரப்பார்ந்த அந்தாதி, காவடிச் சிந்து என பா வடிவங்களிலேயேயானாலும் அவரவர் தம் அனுபவங்களையும் வாழ்க்கையையுமே சார்ந்து எழுதியுள்ளனர். இத் தமிழ் ஆசிரியர்கள் இலங்கையை விட்டு எதற்கு பயணமானார்கள், அங்கு சென்றது தமிழ் படிப்பிக்கவா, அக்கால குடியேறிகள் தமிழ் படிக்கும் தேவை இருந்ததா,? அதற்கும் மேல் இலக்கிய முயற்சிகளிலும் தம் அனுபவங்களையும் பதிவு செய்யும் ஆர்வமும் இவ்விலங்கை பண்டிதர்கள் அன்று கொண்டிருந்ததும் அந்த வசதிகள் அவ்வேழை குடியேறிகளின் சமூகத்தில் இருந்ததென்றால் ஆச்சரியப்படவேண்டிய ஒன்று. இன்று 70 வருட காலமாக தமிழ் பற்று பிரசாரம் செய்தவர்கள் அரசேறிய தமிழ் நாட்டில் தமிழ் படிக்காமலேயே இருந்து விடுவது சாத்தியமாகிறது. அப்படி ஒரு தலை முறை வளர்ந்துவிட்டது. 

இன்னும் ஒரு சுவாரஸ்யமான விவரம். அக்கால சிங்கை மலேசிய குடியேறிகள் தம்முடன் தம் தமிழ் அடையாளங்களையும் சுமந்து தான் இருந்தனர். தமிழக தொடர்புகள் விடவில்லை. அது ஒரு சில விஷயங்களோடு நின்றது. தம் சாதி உணர்வு, பூசை வழிபாட்டு வழக்கங்கள், பழய சாதி உணர்வுகளுக்கும் மேல் ஆங்கிலம் அறிந்தவர்- அறியாதவர்  என்று கூடுதலாக இன்னும்  ஒரு புது சாதிப் பிரிவு, இத்யாதி. இத்தோடு, 1925– ல் வருகை தந்த ஈ.வே.ரா பெரியாரின் தாக்கம். பிராமணர்களே இல்லாத, 50 விழுக்காடு ஆதி திராவிடர்களே ஆன பூசையையும் கோவிலையும் விடாத அந்த சமூகத்தில் வெறும் நாத்திகமும் பிராமண எதிர்ப்புமே எப்படி தாக்கம் பெற்றது என்பது புரியவில்லை. இருப்பினும் 1932 தமிழர் சீர்திருத்த சங்கம்  தொடங்கப்பட்டு தமிழ் முரசு, திராவிட முரசு என  பத்திரிகைகள்  வெளிவருகின்றன. . இவை பெரும் த’க்கத்தை ஏற்படுத்தின. இதன் விளைவாக ஈ.வே.ரா. வின் பகுத்தறிவுச் சிந்தனைகளே நாவல், சிறுகதைகளாக உருப்பெறத்தொடங்கின. ந.பழநிவேலு, பாத்தென்றல், வில்லிசை வேந்தர் என்றெல்லாம் அறியப்படும்  முருகதாஸ் போன்றவர்கள் இதில் அடக்கம். ஆனால் பொதுவாக ஈ.வே.ரா.வின் தாக்கம் அச்சமூகத்தில் பரவலாக காணப்பட்டது. முருக தாஸ் ஈ.வே.ராவையும் சைவ சமயத்தையும் ஒருங்கே அரவணைத்துக் கொண்டவர். அனேகமாக அங்குள்ள பகுத்தறிவாளர் பெரும்பாலோர் முருகனுக்கு  காவடி எடுப்பவராகவும் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். ‘எம்மதமும் சம்மதம்’.

அவ்வாரம்ப கால எழுத்தாளர்களும் தாம் அப்போது வாழும் இடம் வாழ்க்கை பிரச்சினை பற்றி எழுதியவரில்லை. அவர்கள் எழுத்தில் விட்டு வந்த தமிழ் நாடுதான் தொடர்ந்தது. இது முனைவர் லக்ஷ்மிக்கும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. அந்தாதி என்றும்  காவடிச்சிந்து என்றும்  எழுதிய முன்னவர்கள் தம் முன்னிருந்த அனுபவித்த வாழ்க்கைப் பிரச்சினையை எழுதினார்கள். ஆனால், பின் வந்தவர்கள் தாம் இருக்கும் நாட்டையும் எதிர்கொள்ளும் பிரச்சினையையும் விட்டு விட்டு ஏதே பழம் கற்பனைகளில் கதை அளந்தார்கள். என்கிறார் முனைவர் லக்ஷ்மி.

இதே போல் தான் கவிதையிலும். கவிதை எழுத வந்தவர்கள் பழம் யாப்பிலேயே வாய்ப்பாடாகிவிட்ட விஷயங்களையே அரைத்த மாவையே அரைப்பவர்கள், ஆனாலும் தம்மை கம்பனென்றும் காளிதாசன் என்றும் எண்ணி மயங்குகிறவர்கள் என்கிறார்., விதி விலக்காக புதுக்கவிதை எழுதுவோரில், இளங்கோவன், கனக லதா ,இக்பால் என மூவரை மாத்திரம்  லக்ஷ்மி சிறப்பாகக் குறிப்பிடுகிறார். நாம் படித்திராவிட்டாலும் அவர் கருத்துக்களில் நம்பிக்கை விழுகிறது. லக்ஷ்மியிடம் நான் காணும் மிகவாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய குணம் தயக்கம் இல்லாமல், பயமின்றி, மனதில் பட்டதை பட்டவாறே சொல்கிறார். அதிலும் விசேஷமாக எதையும் பொதுப்படையாகச் சொல்லி எந்த ஒருவரையும் புண்படுத்தாது, தப்பித்துக் கொள்ளும் நோக்கம் அவரிடம் இல்லை. எழுத்தாளர்கள் பெயர் சொல்லி, விவரம் சொல்லி, இது திருட்டு, இது பேடித்தனம்,என்று சொல்கிறார். பொதுவாக சிங்கப்பூர் எழுத்தாளர்கள் பரிசுக்காகவும், பேட்டிக்காகவும்  எழுதுபவர்கள், தம்மைப் பற்றி எதுவும் வெளிப்படுத்திக்கொள்வதில்லை, மூடி மறைக்கிறார்கள் என்கிறார். உதாரணமாக ஏ.பி.ஷண்முகம் பற்றி எழுதும்போது, எழுத்துச் செம்மல் என்று  பட்டம் பெற்றவர், இவரெல்லாம் ஏன் எழுதுகிறார், குழப்பம் கொண்ட கிறுக்கல்கள் இவை என்கிறார். சீதாலட்சுமி என்பவரின் கதை அபத்தமாகவும் தத்து பித்தென்று உளறுவதாகவும் இருப்பதாக கருத்து தெரிவிக்கிறார். இவ்வளவு கடுமையாக தமிழ் நாட்டில் யாரும் எது பற்றியும் எழுதி தப்பி விடமுடியாது. தனி நாடாகிவிட்ட ஒரு நகரத்தில் இருந்து கொண்டு அதில் வாழும் ஒரு பத்து சதவிகிதம் தமிழரிடையே வாழ்ந்து கொண்டு இப்படி ஒருவர் எழுத முடிகிறது. எழுதும்  தைரியம் அவருக்கு இருக்கிறது. தமிழ் நாட்டில் இதை யாரும் கற்பனை கூட செய்யமுடியாது. காய்தல் உவத்தல் இன்றி எழுதுபவர் லக்ஷ்மி என்று பின் அட்டையில் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் லக்ஷ்மி காயவேண்டியவற்றை தயக்கமின்றி காய்ந்தும், உவக்கவேண்டியதையும் அதே உணர்வுடன் உவந்தும் எழுதியுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். காய்தலைக் காரணங்களோடு படித்ததும், அவர் காரணங்களோடு உவந்தவற்றை நாம் படித்திராவிட்டாலும், நம்பத்தோன்றுகிறது. 

இம்மாதிரி, ஒரு நகரப் பரப்பு  அளவிலேயே அவரது களம் சிறுத்து விட்டதாலும், எழுதுபவர் எல்லோரும் நன்கு தெரியப்படுவதாலும், இன்னும் ஒருவகையான ஆரம்பக் கட்டத்திலேயே நடை பயிலும் இலக்கிய படைப்புலகம் இனி வரவிருக்கும் செழுமையை எதிர்நோக்கி இருப்பதாலும், சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் என்று எந்த வடிவிலும் வெளித் தெரிந்தவர் எல்லோரையும் பற்றி குறிப்பிடவும் வேண்டியிருக்கிறது. பொய்யாக புகழ்ந்துரைக்கவும் மனமில்லை. எதிர் கால வளமையில் இங்கு பேசப்படுபவர் பெரும்பாலோர் ஒதுக்கப்பட்டிருப்பர். கனமாகப் பேசப்பட்டிருப்பவர்களும் பின்னர் அவ்வளவு விசேஷமாகத் தெரியாமலும் போகலாம். நமது பேட்டையில் இருக்கும் ரெளடி தன்னை கட்டபொம்மனாகத் தான் நினைப்பான். அவன் நமக்கு வீரன் தான். நம்ம பள்ளிக்கூட தமிழ் வாத்தியார், புலவர் தான். நம்முர் சிவாஜி கணேசன் போல உலகத்திலேயே ஒரு நடிகன் இல்லை என்று நாம் கூரை உச்சி ஏறி கத்தவில்லையா? ஆனால் நம் உலகமும் களமும் விரிய விரிய நாம் பெருமைப்படுவனவற்றின் பரிமாணங்கள் சிறுக்கும் அல்லது பெருகும். முனைவர் லக்ஷ்மியின் நிர்ப்பந்தங்கள் நமக்கு இல்லை. ஒரு விவரமும் தெரியாத நமக்குச் செய்துள்ள உதவி இப்புத்தகம். இருப்பினும் அவர் நமக்காகச் சலித்தெடுத்துத் தந்துள்ளவற்றில், நாம் இன்னமும் நெருக்கமாகப் பரிச்சயம் கொள்ள வேண்டியவர்களை மாத்திரம் குறிப்பிடலாம். இவர்கள் படைப்புகள் நமக்குக் கிடைக்கவேண்டும். ஒரு கூட்டத்தில், பீர் முகம்மது என்னும் மலேசிய எழுத்தாளர், ‘நாங்கள் உங்களைத் தெரிந்து கொள்ள பெரு முயற்சி எடுத்துக் கொள்கிறோம். ஆனால் தமிழ் நாட்டில் நாங்கள் அலட்சியப் படுத்தப் படுகிறோம்’ என்று குமுறினார். உண்மை. அவர் குமுறல் நியாயமானது. 

கவிதையில் இளங்கோவன், கனக லதா, இக்பால் என்ற பெயர்கள் தெரிகின்றன. லக்ஷ்மி போலவே, தயக்கமின்றி தன் அபிப்ராயங்களைச் சொல்லும் இளங்கோவன் தான் வாழும் தமிழ்ச் சூழலை கடுமையாகச் சாடுபவர். அதன் காரணமாகவே அவர் வக்கிர உணர்வு கொண்டவர் என்று புகழ் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆங்கிலத்திலும், தமிழிலும் அவர் நாடகங்கள் எழுதுபவர். கவிதைகளும் சிறுகதைகளும் கூட எழுதுகிறார் என்று தெரிகிறது. அவர் இங்கு வந்திருந்த போது, இப்படி ஒரு மனிதர் எப்படி உருவாக முடிந்தது என்று எனக்கு திகைப்பு. லக்ஷ்மி யும் நா.கோவிந்த சாமி என்று நமக்கு ஏற்கனவே அறிமுகமாகியுள்ளவர் (கணினியின் கீபோர்டை தமிழுக்கு இயைய வடிவமைத்தவர் என்று சொல்கிறார்கள். நான் computer illiterate. எனக்குத் தெரியாது).  இப்போது சிறு கதை நாவல் எழுதுபவராகவும், தமிழ் பிரக்ஞையை, இளங்கோவன் போல தாம் வாழும் காலத்துக்கு இழுத்து வர முயற்சித்தவராகவும் தனி மனித வழிபாட்டைச் சாடுபவராகவும் இப்போது அறிகிறோம். இளங்கண்ணனின் நினைவுக் கோலங்கள்’ வைகறைப் பூக்கள் போன்ற நாவல்கள் பேசப்படுகின்றன. இவை சிங்கப்பூர் வாழ்க்கையை, வரலாற்றினூடே சமூக மாற்றத்தைச் சொல்வதாகச் சொல்லப்படுகிறது. பால கிருஷ்ணன் இளங்கண்ணன் ஆவதில் சிரமமில்லை. ஆனால் அவர் எழுத்து தீவிர தனித் தமிழில் எழுதுவதாகச் சொல்லப்படுகிறது. பின்னர் எப்படி அவரது எழுத்தைப் படிப்பதும் ரசிப்பதும்  சாத்தியம் என்பது தெரியவில்லை. ஈ.வே.ரா அண்ணாதுரையோ, கருணாநிதியே’  தனித் தமிழில் பேசியதுமில்லை. எழுதியதுமில்லை. 

கடைசியாக, எஸ். எஸ் சர்மா என்னும் ஒரு பன்முக இலக்கிய வாதியைப் பற்றிச் சொல்கிறார் லக்ஷ்மி. மிகவும் சுவாரஸ்யமான மனிதராக படைப்பாளியாகத் தோன்றுகிறார். கலை அரசு என்ற பட்டம், பெற்றவர். சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவர்.  1952 லிருந்து பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்தவர். வானொலியில், தொலைக்காட்சியில், நாடக மேடையில் அவர் தொடர்ந்து எழுதி நடித்து வந்துள்ளார். தன் கலைக்குழுவோடும், தன் குடும்பத்தோடும், அனேக அயல் நாடுகளுக்கு கலைப் பயணமாக, ஆன்மீகப் பயணமாக, அறிவார்த்த தேடலாக பயணம் மேற்கொண்ட அவர் தன் பயண அனுபவங்களை ஒன்பது நூல்களில் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.   இவரும் ஒளிவு மறைவற்றவராகத் தெரிகிறது. ஒரு சில உதாரணங்கள்:. அருமை தெரியாது கல்வெட்டுக்களை படிக்கட்டுக்களாக தமிழ் நாட்டில்  கண்ட அவரது சோகம், புதிதாகக் கோயில் கள் கட்டுவதற்குப் பதிலாக பாழடைந்துள்ளவற்றை நல்ல முறையில் பாதுகாக்கலாமே என்ற ஆதங்கம், திருவோட்டின் பிறப்பிடம் ஷெய்ச்சிலஸ் என்ற புதிய ஆச்சரியம் தரும் செய்திகள். அடுத்து பேசப்படவேண்டியவர் பி.கிருஷ்ணன். 350-க்கும் மேலாக வானொலிக்கும், தொலைக்காட்சிக்கும் எழுதியுள்ளவர். முக்கியமாக ஒரு ஆவணமாக 52 வாரங்கள் தொடர்ந்து ஒலி பரப்பப் பட்ட அடுக்கு வீட்டு அண்ணா சாமி என்ற நாடகத் தொகுப்பு. இது சிங்கப்பூரின் 35 ஆண்டு கால வரலாற்றை மாற்றங்களை படம் பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது இதன் முக்கியமான் பரிமாணம். இன்று சிங்கப்பூர் அதன் பொருளாதார வளத்தில், Asian Tigers-ல் ஒன்றாக பெருமை பெற்றுள்ளது. அந்த சிங்கப்பூரில் மாடு வளர்த்து வாழ்க்கை நடத்திய முத்தம்மாள் பற்றி ஒரு நாவல் பேசுகிறது. ஆச்சரியமாக இருந்தது. 

சிஙகப்பூரில், மலேயாவில், வாழும் தமிழர் தமிழ் நாட்டின் தமிழரை விட வாழ்க்கை வசதிகள் பெற்றவர்கள், தமிழ் அரசு மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலமாக இவர்கள் சீன, மலாய் மொழி பேசும் பெரும்பான்மை மக்களிடையே வாழ்ந்துள்ளனர். இப்பன்மொழி மக்களிடையே இலக்கிய, கலைத் துறைகளில் பரிமாறல் ஏதும் நிகழ்கிறதா, தமிழர் அவர்களுக்கு ஏதும் கொடுத்துள்ளனரா, அவர்கள் தமிழுக்கு ஏதும் கொடுத்துள்ளனரா என்பது தெரியவில்லை. ஒருவர் சீனச் சிறுகதைத் தொகுப்பு ஒன்று தந்துள்ளார் என்று தெரிகிறது. இளங்கோவன் மலாய் மொழி அறிந்தவர் என்று தெரிகிறது. அதற்கு மேல்? அங்கும் தனித் தீவாகத்தான், பொருள் வசதிகளோடு வாழ்கிறார்களா? சீனப்பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு கலாச்சாரச் சிக்கலுக்கு ஆட்பட்டு அவள் மேல் சந்தேகம் கொள்வதும், தமிழ் நாடுவந்து பெண்தேடி அவளைக் கைவிடுவதும் சில கதைகளில் பேசப்படுகிறது. பரிமாற்றம் என்பது இத்தோடு தானா? தெரியவில்லை. 

முனைவர் லக்ஷ்மி, இந்நூலில் இலக்கியம் மாத்திரமல்ல, வாழ்க்கையின், மனிதர்களின் மற்ற பரிமாணங்களைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறார். நகரத்தார் பற்றி பேசாமல் இருக்கமுடியுமா? அது பற்றி ஒரு அத்தியாயமே இருக்கிறது. இப்புத்தகத்தில் நான் அறிந்து கொண்டது நிறைய. அத்தோடு நான் வியந்தது, முனைவர் லக்ஷ்மி, இளங்கோவன், நா.கோவிந்தசாமி போன்றார் எப்படி அந்த சமூகத்தில் உருவானார்கள். இங்கு தமிழ் நாட்டில் அவர்கள் என்னவாயிருப்பார்கள் என்பதும் என் திகைப்பு. ஆனால் ஒன்று எப்படி உருவானார்களோ என்னவோ, இவர்கள் தம்மை ஆக்கிரமித்துள்ள சூழலுக்கு இரையாவதில்லை. தாம் காணும் சூழலை மாற்றி அமைப்பவர்கள். 

வெங்கட் சாமிநாதன்/2.11.05 
swaminathan_venkat@rediffmail.com
மூலம்: பதிவுகள் நவம்பர் 2005 இதழ் 71