இந்த வாடகை அறைக்கு வந்து இன்றுடன் ஒரு வருடமாகிவிட்டது.
‘அப்பாடா’
பல நாட்கள் பலரிடமும் சொல்லிவைத்து கிடைத்த அறைக்கு வந்து சிலநாட்களிலேயே பிடித்துப்போய்விட்டது என்பதை விட பழகிக்கொள்ள மனிதர்கள் கிடைத்ததும் மகிழ்வைத் தந்ததென்றுதான் சொல்லவேண்டும். சாப்பாட்டுடன் அறைக்குமாக கிழமை வாடகையாகத் தரவேண்டும் என்பதே பேச்சு. எனினும் அவ்வப்போது கிழமை தவறியும் விடுகிறது.ஊருக்குப் பணம் அனுப்பவேண்டும்…அம்மாவின் அறுவைச் சிகிச்சைக்கு, அப்பாவின் ஆஸ்துமாவிற்கு மருந்தெடுக்க… கல்லூரிக்குப் போகமிதிவண்டி வாங்க பிரியப்பட்ட தங்கைக்கு…இன்னும் இன்னும் தேவைகள் அதிகமாகவே மனதை அரிக்கும்..இரவு வேலை..பகலில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பகுதிநேரவேலை என தும்படிக்கவேண்டியிருந்தது…சம்மலமும் வரத் தாமதமாகும்.சண்டைபோடவும் முடியாத இக்கட்டு..இவற்றையெல்லம் அறிந்து எனக்கென விட்டுக்கொடுத்து சமாளித்தபடி …வாடகை கேட்டு நெருக்கடி தராமல் இருக்கும்படியான வீட்டுக்காரர்…மணியண்ணை..கம்பீரம் என்று சொல்லமுடியாவிட்டாலும் மனிதன் என்கிற உயிர்க்கூட்டைச் சுமந்தவாறு தானுண்டு தன்வேலையுண்டு என்றிருப்பவர்.அவரின் மனைவியோ எப்போதும் அலைபேசியை நோண்டியபடியே இருப்பவள்.சமைத்தபடியே காதுக்குள் அலைபேசியை செலுத்தி…தலையை ஒருக்கழித்தபடி பேசிக்கொண்டுப்பார்..கை அலுவலில் இருக்கும்…உடுப்புத் தோய்க்கும்போதும் யாருடனாவது பேசிக்கொண்டிருப்பார்…கலகலப்பானவர்.
‘தம்பி சாப்பிட்டியே..கறி பிடிச்சுதோ?..’
‘ஓமோம்’ தலையசைப்பேன்..
மணியண்ணை கொடுப்புக்குள் சிரித்தபடி நகர்வார்.
மனைவியின் சாப்பாட்டின் ருசி அவருக்குத்தான் தெரியும்.
குறை சொல்லும்படியாக இல்லை..
நன்றாகத் தான் அவர் சமைப்பார்.
‘அக்கா’
‘கடைப்பக்கம் போறன்..என்ன வேணும்?..’
சிலவற்றைச் சொல்லுவார்..சில சமயங்களில் வேண்டாம் என்பார்..
அக்கா அழகு என்றில்லாவிட்டாலும் யாவருக்கும் பிடிக்கும்படியான முகவெட்டுத் தான்.
அவர்களுடைய திருமண அல்பத்தைப் பார்த்தபோது என்னை அறியாமல் சிரித்துவிட்டேன்.
செல்லமாக அக்கா முறைத்தாள்.
‘முந்தி நீங்கள் மெல்லிசு..’
மணியண்ணை சைட்பான்ஸ்..அந்தக்காலத்து மீசை…பெல்போட்டம்…புல்ஸிலிப் சேர்ட்…
அவர்களுக்குத் திருமணமாகி பலவருடங்களாகிவிட்டன…குழந்தை இல்லாத குறை மட்டுமே..பலமுறை அக்கா சொன்னாள்…அண்ணை உள்ளுக்குள் அழுவதுபோல இருந்தது..
‘யோசிக்காதையுங்கோ…என்கட அக்கா ஒருத்திக்கும் கனகாலத்திற்குப்பிறகுதான் குழந்தை கிடைத்தது…உங்களுக்கும்..
அக்கா அழுவது கேட்டது.
பேச்சை மாற்ற அவளுக்கு விருப்பமான சின்னத்திரை பற்றி பேச்சைக் கொடுத்தேன்..
இதைக்கேட்டுக்கொண்டு அண்ணை குளியலறைக்குள் நுழைவது தெரிந்தது.
அக்கா மௌனமானாள்.
நான் பேசவில்லை.அறைக்குள் வந்துவிட்டேன்..
அக்கா பாவம்..
நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை.
அக்காவும் அண்ணையும் அழுது கொண்டிருப்பார்களோ?
அண்ணையோ அக்காவோ குரலை உயர்த்திக் கதைப்பதில்லை…கோபப்பட்டும் பார்த்ததில்லை..
ஊரில் குழந்தை இல்லை என்பதற்காக பலராலும் அக்கா துன்பப்பட்டாள்.அத்தானும் விடுவதாயில்லை..துன்புறுத்தினார்.அம்மா அழுதாள்.மாமி வசை பாடினாள்.அப்பா உடைந்தே போனார்.விவாகரத்து வரை போனது.அவ்வேளையில் தான் அக்காவிற்குக் குழந்தை கிடைக்கிறது.எல்லோரும் அமைதியானார்கள்.இங்கு மணியண்ணை அமைதியானவர்.அக்காவை துன்புறுத்துவதாக காணமுடியவில்லை.
இன்று லீவு நாள்.ஆதலால் நன்றாகத் தூங்கிப்போனேன். ஊரின் ஞாபகங்கள் வந்து போயின..அம்மா,அப்பா,தம்பி,தங்கை…அக்கா…இங்கு விசா கிடைக்குமட்டும்…வழக்கறிஞருக்கோ,மொழிபெயர்ப்பாளருக்கோ கொடுக்கவென…உழைக்கவேண்டுமே..இங்கு வர வாங்கிய கடன் ஒருபுறம்…புரண்டு படுத்தேன்.உடல் அசைந்து திரும்புகையில் யாரோ அறைக்குள் வந்து போவதை உணர்ந்தேன்.மணியண்ணை கதைக்க வந்து தூங்குகிறேன் என்று நினைத்துப் போயிருப்பார்.அக்கா சில சமயங்களில் தோய்த்த உடைகளை ஹீட்டரில் போட வந்து போயிருக்கலாம்.அக்கா ஓய்வாக இருக்கையில் ஏதாவது வாசிக்கவென நான் வாங்கிவைத்திருக்கும் சஞ்சிகைகளை,புத்தகங்களை எடுத்துச் செல்வாள்.நானும் ஒன்றும் சொல்வதில்லை.அக்காவாக பழகிவிட்டாள்.அவளின் பார்வையிலும் வித்தியாசம் இருந்ததை என்னால் உணரமுடியவில்லை.
அவர்களுக்கு நான் மகனாக தெரிந்திருக்கலாம்..
‘வாசிங்க் மெசினில் உடுப்புப்போடப்போறன்..இருந்தாத் தா’
முதலில் கூச்சத்தால் மறுத்து பின் எதுவும் சொல்லாமலே கொடுத்தேன்..ஊரில் அக்காவும்,அம்மாவும் மாறி,மாறி தோய்த்துத்தருவார்கள்.
‘அவனுக்கு நல்லாச் செல்லம் கொடுத்து வளர்க்கிறாய்’ அப்பா கடிந்துகொள்வார்.அப்பாவுக்குச் சப்போட்டாய் தங்கையும், தம்பியும் இணைந்துகொள்வார்கள்.
அவர்களுக்கும் அன்பு,பாசம் இல்லாமலில்லை.கால் உடைந்து இரத்தம் சொட்டச் சொட்ட வந்த ஒருநாள் துடித்துப்போய் உதவியவள் முதலில் தங்கைதானே..அக்கா முதலில் திட்டுவாள்..பின் உதவுவாள்.
இங்கு…மணியண்ணையும் ,அக்காவும் அன்பாக இருந்தார்கள்.
இன்று அக்கா ராசவள்ளிக்கிழங்கு அவிச்சுத் தந்தார்.மிகவும் சுவையாக இருந்தது.ஊரில் அம்மா சுடச் சுட தரும்போது இனிப்பாக இருக்கும்.இன்னும் இன்னும் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடலாம்.இப்போது தனிமை..உழைப்பு,ஊரின் நினைவு இன்னும் பலவற்றால் சாப்பிட மனம் இருப்பதில்லை..ஏதோ சாப்பிடவேண்டும் என்பதற்காக சாப்பிடவேண்டியிருக்கும்.அவசரமாக குளிப்பு,சாப்பாடு…ஓட்டம்..வேலை…குட்டித்தூக்கம்…
‘இன்னும் தரவா? அக்கா கேட்க சுயநினைவு வந்தது..
‘என்ன அதுக்குள்ள ஊருக்குப்போட்டு வந்திட்டீரோ?’
‘ம்’
‘நானும் உப்படித்தான் முந்தி…ஊர் நினைவு வாட்டும்..இப்ப பழகிப்போச்சு..’
பெருமூச்சுடன் சொன்னாள்.
‘இண்டைக்கு மழை வரப்போகுது..கன நாளைக்குப் பிறகு கொக்கா அவிச்சிருக்கிறா?’
‘உவருக்கு எப்பவும் நக்கல் தான்’
அக்கா செல்லமாக் கடிந்தபடி நகர்ந்தாள்.
வெளியே இருள் மெல்லமாக கவியத் தொடங்கியிருந்தது..
அக்கா மீண்டும் இரண்டுகிண்ணங்களில் கொண்டுவது தந்தாள்.
‘சும்மா பஸ் பண்ணாதையும்..பிடியும்’
அண்ணாவின் வற்புரூத்தலால் வாங்கினேன்..
அக்காவின் கண்கள் அழகாய்த் தெரிந்தன…அக்கா நீங்கள் தெய்வம்…என் விருப்பம் அறிந்து எல்லாம் செய்கிறீர்கள்..எப்படி கைமாறு செய்யப்போகிறேனோ தெரியவில்லை..
மனதுள் நினைத்தபடி வெற்றுக்கோப்பையை நீட்டினேன்
அறைக்குள் வெளிச்சம் வந்திருந்தது..சூரியனுக்கும் என்னைப்போன்றவர்களுக்கு மகிழ்வழிக்கவென அடிக்கடி கண்விழிக்கிறான் போலும்…
வேலைக்குப் போகும் அவசரத்தில் குளித்துவிட்டு குசினிக்குள் நுழைந்து ஆறிய தேநீரை கொஞ்சம் சூடாக்க முயன்றேன்.அவசரத்திற்கு மைக்ரோவேவ் கூட சில்மிசம் செய்வதுபோல இருந்தது.சமைக்கும்போது சன்னல்களைத் திறந்துவிட்டிருந்ததால் குளிர்வந்து உடலை மேலும் குளிரவைத்தது..
‘பாவம் அக்கா…தாய்க்குச் சீரியஸ் எண்டு ஊருக்கு போயிருந்த அண்ணர் வர ஒருவாரமாகலாம்…..பழையதைச் சுடவைத்துச் சாப்பிடலாம்…நூடில்ஸைப் போடலாம்…பாணை சாப்பிடலாம்…சமைச்சுக்கொண்டு ‘ம்..’மனதுள் நினைத்துக்கொண்டேன்.
திடிரென பிடரியில் உஷ்ணமாய் உணர சட்டென்று திரும்பினேன்..
‘அக்கா!’
திகைப்புடன் விழி உயர்த்தி நின்றபோது தன்னைச் சுதாகரித்தபடி,
ம்..விடும்…மைக்ரோவை சரி செய்கிறேன் என்று சொல்ல நான் விலக்கிகொண்டேன்..
மனது அடித்துக்கொண்டது. பயம் ஒரு புறம்..நம்பிகைகள் சடாரென சரிந்துவிழும் அபாயம்….
தனக்கென,தன் வாழ்வுக்கென,எதிர்காலத்திற்கென வாழ்வியற் கட்டமைப்புக்களை அக்கா மீறப்போகிறாளா?ஒருவனுக்காகவே வாழ்தல் என்பது ஒருவகைத் தவம்…அம்மாவும் வாழ்ந்தாள்…ஊரில் அக்காவும் வாழ்கிறாள். தான் காதலித்தவனுடனேயே சமூகத்தை எதிர்த்து இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிற பள்ளித்தோழி மகிழ்வாகவே வாழ்கிறாள்…
‘அக்கா!’
உடைபடும் வரைதான் ஓவியத்தின் அழகு தெரியும்.வாழ்வும் அப்படித்தான்.
பரஸ்பரம் நம்பிக்கைகளின் அத்திவாரத்தில் கட்டிஎழுப்பப்பட்ட கணவன் மனைவி உறவில் சிறு கீறல் விழுந்தாலே பெரிதாய் விரிசல் வர வாய்ப்புக்களே அதிகமான சூழலில் வாழ்கிறோம்.அந்த நம்பிக்கை உடைய நான் காரணமாகிவிடக்கூடாது என்பதில் அதைக் கவனம் கொண்டுள்ளேன்.
நமக்கான சுதந்திரத்தை ஒருவர் வழங்கியிருக்கிறார் என்றால் அதனை எல்லை மீறாமல் பாதுகாத்துக்கொள்வது நமது கடமையே..
வீட்டு வாடகைக்காசை மேசையில் வைத்துவிட்டு எதுவும் பேசாமல் நகர்ந்தபோது அக்காவும் மௌனமாக இருந்தாள். ஆனாலும் அண்ணா வரும்வரை பொறுமையாக இருக்கவேண்டும்.
சாப்பிடவும் மனது இடம்தரவில்லை.
மனதுள் ஏற்பட்ட காயமாகவே உணரமுடிந்தது..
‘அண்ணை பாவம்’
அன்று வியாழக்கிழமை..
மங்கிய ஒளி அறைக்குள் பரவியது.
இரண்டு மூன்று நாட்களாக வேலையும் அதிகம்..அக்காவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றம்..
எல்லாவற்றையும் புரட்டிப்போட்டுவிட்டது.
சில சமயங்களில் இருள் படிந்திருக்கும் வானம் மழையின் அறிகுறியை வெளிப்படுத்தும்.அதே வானத்தில் அதன் சுவடே தெரியாமல் வெளிச்சம் காட்டி நிற்கும்.மழை வராது என்றே வீதிக்கு வந்து தெப்பமாக நனைந்துவிடுகிறோம்.மழை வரும் என நினைத்து குடையுடன் வர மழை வரும் நிலையின்றி வெயில் கொளுத்தும்..வாழ்க்கையும்..வாழ்க்கையிலும் இப்படித்தான்…
தோற்றுப்போகிறோமே என்று நினைத்த கணங்கள் மாறி வீரியமாய்,நம்பிக்கைகள் வந்து குடிகொள்ளும்..
பலவாறாக ஏன் இன்று நினைக்கத்தோன்றுகிறது..
கோயில் வாசலில் காலணியைக் கழற்றி வைத்துவிட்டு உள்ளே போக…உள்வீதி சில்லிட்டது..முருகா என்று மனது சொல்லிக்கொண்டது..
அரச்சகரிடம் அர்ச்சனைச் சீட்டைக்கொடுத்தபடி…மகநட்சத்திரம்….சிங்கராசி…ஐயர் தன் மந்திர உச்சாடனத்தை விடவேயில்லை.சொல்லியபடியே மூலஸ்தனத்திற்குள் போனார்.
அக்காவின் வீட்டைவிட்டு வந்து இரண்டு வருடங்கள் இருக்குமா?..அக்கா பாவம்..அண்ணை..?
விசா கிடைக்கவேண்டும்..வதிவிட உரிமை கிடைத்தவுடன்..நல்ல பிள்ளையாய் ஊரிலிருந்து பெண்னை கூட்டிவந்து கட்டிவைக்கவேண்டும்..எல்லாவற்றுக்குமாக மானசீகமாக இருந்தார் என்றே சொல்லவேண்டும்..அண்ணாவை மறக்கமுடியாது.. . அக்கா??
ஐயர் பிரசாதத்தை கையில் தந்தபோது சுய நினைவுவந்தது..
ஏன் இன்றுமட்டும்..?
நினைவுகள் மேகக்கூட்டம் மாதிரி அவ்வப்போது வந்து தலைக்காட்டவே செய்யுமாமே?
* *
கடந்த இரண்டு நாட்களாக அக்கா எதுவும் பேசவில்லை..வழமைபோல பேசாதது சங்கடத்தைத் தந்தது.
அக்கா என்ற கனதி மிகுந்த சொல் ஆன்மாக்களால் கட்டி வடிவமைக்கப்பட்ட சொல்..தாய்க்கு அடுத்த ஸ்தானத்தில் கொண்டாடவேண்டியவள்.
உடையும் வரையே கண்டாடிக்கான மதிப்புண்டு.
தண்ணீர் நிறைந்த பலூனை அழகுடன் கொண்டாடும் குழந்தையின் கையிலிருந்து தொப்பென்று விழுகின்ற பாலூலினிருந்து நீர் முற்றாக வடிந்தோடு சுருங்கிவிடுகின்ற பலூனைப்பார்த்து சோர்ந்துபோகும் குழந்தையிடம் வேறெதை எதிர்ப்பார்க்கமுடியும்..எல்லாம் சுருங்கிவிடும்….எல்லாமே….
வழமை போலவே உடைக்களை ஹீட்டரிலிருந்து எடுத்துப்போகிறாள்..தோய்த்த உடைகள் உலர்ந்த பின் அதே ஹீட்டரில் கொண்டுவந்து போடுகிறள்.
தூங்கியாவாறு இருக்கின்ற என்னை கவனித்தாளா தெரியவில்லை..கவனிக்கவில்லை என்பது போல போகிறாளா?
அண்ணை இருக்கும்போது வந்து பேசுவாள்.கணினி வேலைசெய்யவில்லை என்றபடி காலநிலையைப் பார்த்துச் சொல்லச் சொல்லுவாள்.அன்றைய சின்னத்திரை பற்றி பேசுவாள்.. இன்னும்..இன்னும்..
சிறு பொழுதில் எல்லாம் இழந்துவிட்ட வெறுமை..
மௌனம் கூட பொல்லாதது. அதீத மௌனம் எல்லாவற்றையும் அழித்துச் சென்றுவிடும்.
& &
கோயில் பிரகாரத்தைச்சுற்றியபின் மீண்டும் உள்ளே வந்தபோது கால்கள் குளிர்ந்தன.. அதுவே ஒரு சுகமாகவும் இருந்தது.
நினைவுகளுக்கு காலநேரம் கிடையாது.ஏதோ நடந்தது ஆயினும்,ஏதோ நடக்கப்போவது ஆயினும் அதனையே பிம்பமாக்கி நீட்டி முழக்கி வைக்கும்..சுடும்…
இன்று ஏன் இப்படி…மனதைக் கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியாகிவிடுகிறது.
‘அக்கா…விடுங்கோ….’
சில சமயங்களில் ஒங்கிக் குரலெழுப்பினாலும் முடிவதில்லை..சத்தம் அடங்கியே வெளிவரும்..உதடுகள் விரியமறுக்கும்..பயமா அல்லது எதுவென்றுணரமுடியாத உணர்வா??
‘அக்கா…என்னை விட்டு விடுங்கோ.’
&&
ஊரில் காய்ச்சல் வந்து படுத்துவிட்டால் அக்கா குடிநீர் தருவாள்..கஞ்சி காய்ச்சித்தருவாள்.அம்மா கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்து வந்து வீபூதியை நெற்றியில் பூசிவிடுவாள்.அவ்வப்போது நெற்றியில் தைலத்தை தடவிவிடுவாள்..அல்லது ஈரச்சீலைத்துண்டை நெற்றியில் மாறி மாறி வைத்து சூடு குறைகிறதா என்றுபார்ப்பாள்.அம்மாள் வருத்தம் வந்தபோதும் இப்படித்தான் கவனித்தனர்.இப்போது எல்லாம் இழந்த தனிமையில்….போர்வைக்குள் குடங்கிப்போயிருந்ததால் ஏதோ ஊர்வதுபோல..உடம்பெல்லாம் வலிப்பதுபோல உணர்வு…காய்ச்சல் அதிகமயிற்று..அண்னை இருந்தால் விடமாட்டார்…அக்காவிட்டைச் சொல்லி குடிநீர் காய்ச்சித்தரச்சொல்லி குடி என்பார்.அக்காவிடம் கஞ்சி காய்ச்சித்தரச் சொல்லுவார்..வேலைக்குபோகாதை..காய்ச்சல் விட்டுவிடும்…வெள்ளிக்கிழமை கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்து பிரசாதம் கொண்டுவந்துதருவார்…அண்ணையும்,அக்காவும் அன்பை அப்படிப் பொழிவார்கள்…
நினைக்கும்போது நெஞ்சுக்குளிக்குள் ஏதோ ஒன்று இறங்கும்..பிறகு வலிக்கும்…
அக்கா…..
அண்ணை திடிரென ஊர் போவார் என எதிர்ப்பார்க்கவில்லை. கன காலத்திற்குப்பிறகு அவசரமாக போகவேண்டி வந்ததால் புறப்பட்டுவிட்டார்.
ஆனால் அக்கா….தான் தனிமையில் விடப்பட்டதாய் உணர்ந்தாளோ?.
ஒருமித்த கருத்துள்ள மனதுடன் ஒன்றிப்போய் வாழ்க்கையை நகர்த்தியவர்கள்….அண்ணை ஊருக்குப் போவதை எதிர்பார்க்கவில்லை போலும்..தனித்த மனுஷியாகி நிற்பதாய் உணர்ந்திருப்பாள்.
அக்காவை முகத்திற்கு நேரே பார்க்கமுடியவில்லை…தலையை கவிழ்ந்தபடி….குளிப்பது, சாப்பாட்டை சுடவைப்பது ,அறைக்குள்ளேயே பெரும்பாலும் முடங்கிவிடுவது….அல்லது வேலைத்தளத்திலேயே அதிக நேரத்தைச் செலவிடுவது..ஒருவாரத்திற்கு மேலாகிவிட்டது..
காய்ச்சல் வந்த ஒரு நாளில் அசந்து தூங்கிவிட்டிருந்த கணப்பொழுதில் உடம்பில் ஏதோ ஊர்வது போல இருக்க விழிப்பு வந்துவிட்டது.
பதட்டத்துடன் ,அதிர்ச்சி ஒருபுறம்…எழ முயற்சித்தபோது…
அக்கா…என்னை விடுங்கோ…
அனைத்தபடி இறுக்கிகொண்டாள்….
& &
அக்கா தான் அணியும் உடைகளில் கூட கவனமாக இருப்பாள்.மற்றவர்களின் கண்களை உறுத்துபடி அணியமாட்டாள்.வார்த்தைகளை அதிகமாகக் இலகுவில் கொட்டிவிடமாட்டாள். அண்ணைக்குப் பொருத்தமானவாளாகவே அக்கா இருந்தாள். காலையில் வருகின்ற சாம்பிராணி வாசாம் ஒருகணம் ஊருக்கு அழைத்துச் சென்றுவிடும்.அம்மாவும்,அக் காவும் மாற்றி மாறி அடுப்புச் சாம்பல் அள்ளி,வீடு கூட்டி,முற்றம் கூட்டி, வளவுக்கோயிலுக்கும்,சாமிப்படத்துக்குமாக பூக்களை ஆய்ந்து, இடையிடையே வானொலியில் மெல்லியதாய் ஒலிக்கும் பாடலை ரசித்தபடி, எல்லாருக்கும் தேநீர் போட்டு எடுத்து எழுப்பும்போது கூட அம்மாவும்,அக்காவும் தெய்வீக ஒளி பொருந்தியவர்களாகத் தெரியும்.. அதே நினைவுகளுடன் தான் இங்கும் பயணிக்கமுடிகிறது..ஆனாலும் அக்கா மாறிப்போனது அழுத்தமாய் மனதுள் கூரான ஆய்யுதம் கொண்டு கிழிப்பது போல ஒரு உணர்வு..அக்கா பாவம்…
&&
வீதியில் போன யாரோ உரத்துப் பேசிக்கொண்டே சென்றுகொண்டிருப்பது குரல் அசைவிலிருந்து உணரமுடிந்தது.அதில் ஒருவர் கொஞ்சம் அதிகமாக குடித்திருக்கவேண்டும்.க்ரல் தெளிவின்றியும்,தடித்தும் இருந்தது.
அகதி அந்தஸ்து கிடைத்த தகவலை சொல்லவேண்டும் என்கிற நினைப்பை தள்ளிப்போட்டதற்கும் அக்காவே காரணம்..ஊரில் அம்மாவிற்கும் சொல்லிவிட்டபின் அறைக்குள்ளேயே முடங்கும்படியாயிற்று..
காற்று அமைதியானதுதான்…அதற்குள்ளும் புயலும் இருப்பதாகச் சொல்லலாம்.ஆனால் காற்றுக்கும் களங்கம் வந்துவிடத்தானே செய்கிறது..புயலை யாருக்குத்தான் பிடிக்கிறது? காற்று சுகமானது…காற்று யாரை உரசிச்செல்கிறதோ அவர்களை ஆற்றுப்படுத்தும்..ஆனால்,ஆனால்…?
சன்னலை சாத்திவிட்டுப் படுத்தும் தூக்கம் வரவில்லை…
அக்கா ஏன் மாறிப்போனாள்?
அண்ணை ஊருக்குப்போகாமல் இருந்திருக்கலாம். அந்நியோன்யமானவர்கள் தனித்துவிடப்படும் போது இப்படியெல்லாம் ஆகுமா??
அக்கா இப்போது புரியாத புதிராகத் தோன்றினாள்.
& &
அண்ணை சீக்கிரம் வந்துவிடண்ணை..யாருக்கும் நான் துரோகம் செய்யவில்லை…அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது.வீடு மாறவேண்டும்.அண்ணை வரும்போது நான் இல்லை என்றால் சங்கடப்படுவார்.என்னவென்று அக்காவைக் கேட்க,அவரும் சங்கடப்படலாம்.அண்ணை வரும்வரை பொறுமையாய் இருந்தால்…தவறுகள் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பினும் காலம் சாதகமாக இல்லை.வீட்டை விட்டு வெளியேறிவிடவேண்டும்.ஒரு வாரத்திற்குள் வேறொரு அறையை வந்தடைந்தபோதுதான் அந்தத் துயரச் செய்தியும் வந்துசேர்ந்தது…
‘அக்கா’
&&
பிம்பங்களைக் கட்டமைக்கும் போது கவனமாக இருத்தல்வேண்டும்..நாம் கட்டிவைத்தவைகள் ஒவ்வொன்றாய் அல்லது முற்றிலுமாக ஒரே கணத்தில் சிதைவுறும்போது தாங்கிக்கொள்ளமுடியாது.அதிலிருந்து மீளவே முடியாது போய்விடும்..
அக்கா இதனை புரிந்திருப்பாளா?
அன்றைய பொழுதில் தன்னை இறுக்கியபோது திமிறியபடி விட்டுவிடும்படி கத்தியும் அவளின் இறுக்கம் அதிகமாக ..தன் பலத்தையெல்லாம் திரட்டி அவளின் கைகளின் இறுக்கத்தைத் தளர்த்தி செய்வதறியாது அக்கா..என்று கூறியவாறுகன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு வெளியேறிய அக் கணப்பொழுது வாழ்வில் மறக்கமுடியாதது.
அறைக்குள் நுழைந்து நீண்ட நேரமாக கையைப் பிசைந்தபடி உட்கார்ந்திருக்கையில் அழுகை அழுகையாக வந்தது.ஏன் நிலைகுலைந்து போகும் நிலைவந்தது?ஊரில் ஆசிரியர் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கன்னத்தில் அறைந்திருப்பார்.குழப்படி செய்துவிட்டால் அப்பா முதலில் கன்னத்திலை அறைந்தே தன் கோபத்தைத் தீர்ப்பார்.இப்படி எத்தனையோ….ஒரு முறை நண்பன் கோபத்தை மூட்ட ஆத்திரத்தில் அறைந்ததும்,பின் அவனிடம் போய் மன்னிப்புக்கேட்டதும்…ஏன் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது..
அக்காவின் கன்னத்தில் அறையாமலேயே வந்திருக்கலாம்.கோபம்,அருவருப்பு எல்லாம் ஆத்திரத்தை வரவழைத்தாலும் மௌனமாக வந்திருக்கலாம்.எனி எப்படி அக்காவின் முகத்தில் முழிப்பது?
அக்கா மட்டும் என்னவாம்?
கைகளும் ஏனோ மனது போல வலித்தது…
‘அறைந்து என் கோபத்தைக் காட்டியிருக்கக்கூடாது..அவமானத்தால் அக்கா தவறான முடிவெடுத்துவிட்டால்…எல்லாப்பழியும் என் மீதே வந்துவிழும்’.
& &
கணங்கள் யுகங்களாகவோ,யுகங்கள் கணங்களாகவோ மாறலாம்.பொழுதுகளோ,சூழலோ,மன உபாதைகளோ தீர்மானிக்கின்றன.
மறுநாள்,
வெளியே கொடியில் உடைகளைக் காயப்போட்டுக்கொண்டிருந்தாள் அக்கா..சன்னல் திரையை விலக்கி பார்க்கையில் அவளின் முகம் இறுக்கமாகவெ இருந்தது.வழமையான வசீகரம் இல்லை.இரவெல்லாம் அழுதிருப்பாளோ?
வெயில் வரும் என்று நினைத்திருப்பாள்.ஆனாலும் கொஞ்சம் உலரட்டுமே என்று உடுப்புக்களை போட்டுக்கொண்டிருந்தாள்.
மௌனமாக திரும்பி கட்டிலில் சாய்ந்தேன்.
‘என்ன செய்வது?
நண்பர்களுக்கும் சொல்லமுடியாது..அக்காவைத் தவறாகப் பார்ப்பார்கள்.அவளின் எதிர்காலம் பாதிக்கும்படியும் சூழ்நிலை மாறலாம். கூடாது.
மனநிலையை மாற்ற அலைபேசியை முடுக்கினேன்.
& &
காலம் தன்பாட்டிற்கு பயணித்துக்கொண்டே இருக்கிறது.அதன் வழி நாமும் இழுபட்டுக்கொண்டே இருப்பதே விந்தை.
அர்ச்சகரின் குரல் பூமிக்கு அழைத்துவந்தது.
தூரத்தே வரிசையில் கவனம் தன்னையறியாமலேயே போய் தரித்துநின்றது.
குத்திட்டு நின்றது என்றும் சொல்லலாம்.
அங்கே..அங்கே…அக்கா நின்றிருந்தது.
முகம் பளிச்சென்றிருந்தது.
இதயத்திலிருந்து எழுந்து வந்து உதட்டிற்குவெளியே வரமறுத்து தங்கிவிட்ட..அக்கா…..ஒற்றைச்சொல்…பரந்த நெற்றியில் ஒற்றையாய் வீபூதிக்குறி தானும் இருக்கிறேன் என்பதுபோல நெற்றியின் இடதுபுறமாய் அலைபாயும் ஒற்றை மயிர்..அக்கா….அக்கா..உதடு பிரிய மறுத்தது.
&&
வருடம் இருக்குமா?
அவர்களிடமிருந்து விலகி நண்பர்களுடன் தங்கி ,திருமணமாகி தனியே வந்து…வருடமாயிருக்குமா?
ஊருக்குப்போன அண்ணா விபத்தில் இறந்ததும் தனிமரமாகிப்போன அக்கா..பலமுறை அலைபேசி எடுத்தும் அதனை எடுக்கும் மனநிலையில் அவளும்,நேரே போய் ஆறுதல் சொல்லமுடியாத தவிப்பில் நானும்…
அக்கா..
காலம் எம்மைப் பிரித்திருக்கக்கூடாது..அக்காவாய்..நான் தம்பியாய்..உதவியாய் இருந்திருக்கலாம்…
அந்த நிகழ்வு நடக்காமல் இருந்திருந்தால்..
கற்பூர தீபம் ஏனோ கையைச்சுட்டது..
பூசை முடிந்து அக்காவிடம் போக மௌனமாக நின்றிருந்தாள்.
ஆறுதல் சொல்லும் மனநிலையில் அன்றும் சூழ்நிலை இருக்கவில்லை.
நிறைய..நிறைய கதைக்கவேண்டும் என்கிற தவிப்பு மனதுள் எழுந்தது..
எவ்வித சலனமும் இன்றி அவள் இருப்பதாக புரிந்தது.
சூழலை மாற்ற மனைவியை அறிமுகம் செய்ய,அவளும் மனைவியை பார்த்தபடி …புன்னகைத்தாள்.
அதன் அர்த்தம் ஆயிரமாக புரிந்தது.
என்ன சொல்ல நினைக்கிறாள்.
வாழ்த்தும் நிலையில் தான் இல்லை என்பதாக அர்த்தம் கொள்ளலாமா??
அக்கா எனக்கு அக்கா தான் எப்போதும்..காலம் பிரித்திருந்தாலும்..
தன் கையிலிருந்த பிரசாதத்தை மனைவியின் கைகளில் தந்துவிட்டு போய்க்கொண்டிருந்தாள்.
இருவரும் கோயில் பிரகாரத்திலேயே நெடுநேரமாக நின்றிருந்தாள்.
அக்கா போய்விட்டாள்.
போயேவிட்டாள்.
ஆயிரம் கனவுகளை,நினைவுகளைச் சுமந்தபடி நேரம் கடந்துகொண்டிருந்தது.
(21/06/2019)
யாவும் கற்பனையே
mullaiamuthan16@gmail.com