குமரனோடு படித்து,எ.லெவல் படிக்க வேறு பள்ளிக்கூடம் சென்று விட்ட செல்வனின் அக்கா, பஸ்ஸிற்கு நிற்கின்ற போது, மீன் சந்தைக்கு அம்மாவோடு போகின்ற போது,தெய்வம் கொழுப்பு மெத்திப் போச்சுது போல மோட்டர் சைக்கிள்ளை அவளுக்கு கிட்டவாக விட்டு எதையாவது சொல்லி தனகுகிறான். இதை கொஞ்ச நாளாய்க் குமரன் கவனித்துக் கொண்டே வருகிறான்.
தெய்வம்,ஒரு பிரபலமான சண்டியனின் தொகை வாரிசுகளில் ஒருத்தன்.ஏற்கனவே திருமணமாகி ஆசைக்கு என்றும் ,ஆஸ்திக்கு என்றும் பிள்ளைகள் இருக்கிற போதிலும், பக்கத்துக் கிராமத்திலிருந்து இன்னொருத்தி மேலும் , காதல் வயப்பட்டு ,கிளப்பிக் கொண்டு வந்து மல்லிகை கிராமத்தின் ஒருவனாக வாழ்கிறவன். அவளும் காதல் வயப்பட்டு அவனோடு வந்வள் தான். இவன் ஒன்றும் பெரிய ரவுடி கிடையாது.சகோதரர் மத்தியிலே இவன் ஒருத்தன் தான் ஒ.லெவல் வரைக்கும் படித்தவன் கூட.அப்பன் வட்டிக்கு காசு கொடுக்கிறவன்,வாகனம் பழக்குகிறவன் ..என பல தொழில்களை வைத்திருக்கிறவன்.அதில் ஒன்றிலே இவனும் வேலை பார்க்க காலையிலே மோட்டர் சைக்கிளிலில் நகரத்திற்குப் போய் விடுவான்.
ஒருமுறை அவன் வேலையால் வருகின்றபோது ஏதோ சிந்தனையில் சினேகிதிகளோடு வந்து கொண்டிருந்த சந்திராவை அடிக்கிற மாதிரி சைக்கிள்லை விட்டு விட்டான்.உடனேயே சுதாரித்துக் கொண்டு அவன் “சொரி”சொல்லவே முயன்றான். எந்தப் பெண்ணும் இரண்டு தரம் கட்டியவனை மதிக்கிறதில்லை. வேம்படியில் படித்த, துணிச்சலாக இருந்த சந்திரா, சண்டியனின் வாரிசு என்றால் உன்னோடு, அப்பனோடு என்ற கோபத்தில். “உன்ர சண்டித்தனத்தை வேற எங்கையும் போய்க் காட்டு இங்கே எல்லாம் வந்து காட்டாதே..” எனச் சுடச் சுட!…. பொரிந்து கொட்டி விட்டாள். அந்த பெண்களில் அவள் கொஞ்சம் வாய்க்காரி தான்.
இதை, அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.பதிலுக்கு ரோசமாகி இந்தப் பகுதியிலே “எடியே, உன்னையும் கிளப்பிக் கொண்டு போய் விடுவேனடி”என்று சவால் விட்டு விட்டான்.. அப்படி அவன் வாய் சொல்லி விட்டது. அவன் அப்படி செய்யப் போவதில்லை. ஆனால் நினைத்தான் என்றால் முடியக் கூடியது தான். பல சண்டியர்களின் மனைவிமார்,பிரியப்பட்டு வந்தவர்கள் கிடையாது.வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு வரப்பட்டவர்களே. நடைபெறக் கூடியது தான். பிறகு, அந்தப் பேச்சை கேள்விப் பட்ட அவனுடைய இளம் மனைவியே எரிச்சல் அடைந்திருந்தாள். .” உந்த ஆண்களையே நம்ப முடியாது”என அங்கையும் புகைச்சலை கிளப்பி விட்டது .அவளுக்கு கண்ணின் மணிகளாக .. குஞ்சு குருமான்களாக இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்
இருந்தாலும் ,இப்ப, இவன் சந்திராவைக் கண்டால் இப்படி ஏதாவது சொல்லி விட்டுப் போறதும் தொடர்கிறது. ஆண் நிலை அவவனையும் பிடித்தாட்டுறது.தொங்குகிற ‘சண்டியன்’என்ற பெயருக்கும் இழுக்கு ஏற்பட்டு விட்டதாக நினைத்து வேற குழம்புகிறான்.
இதை பார்க்கின்ற குமரனுக்கே இவனுக்கு பாடம் படிப்பிக்கணும் என்ற நினைப்பு வருகிறது. செல்வன் தம்பிக்காரன்.அவனுக்கு வேறு எப்படி இருக்கும்? அவன் ‘பார்’ போடுறதுக்கு அடி போட்டு விட்டான்.கொழும்பில் கொச்சிக்கடைப் பக்கம் இருக்கிற தமிழர்கள் சில விளையாட்டு மைதானங்களில் இப்படி ‘பார்’த்தடியை நட்டு,இரவுகளில் நேரம் இருக்கிற போது வந்து உடற்பயிற்சி எடுப்பதை செல்வம் பார்த்திருக்கிறான். சில பூங்காக்களில் நகரசபையே நட்டுவித்தும் கொடுத்திருக்கிறது.தவிர, மின்சார ஒளியில் அங்கே ‘பாஸ்கற் போலு’ம் திறமையாக விளையாடுவார்கள்.மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான். இங்கேயுள்ள பெடியளின் உடம்பைத் தேற்றி துணிச்சல் உள்ளவர்களாக்க மாற்ற வேண்டும் ‘பார்’ பயிற்சி’எடுக்க வைக்கிறது தான் நல்லது’ என நினைத்தான். இந்த சண்டியனை எதிர் கொள்ள கட்டாயம் ஒரு கூட்டமே வேண்டும்.
முயற்சியில் உடனேயே இறங்கி விட்டான். பெரிசாய் தெரியாத அந்த விளையாட்டிலேயும் ஈடுபாடு விழுந்து கிடக்கிறது. பிறகு, அந்த விளையாட்டையும் பார்ப்போம் என நினைத்துக் கொண்டான்.கிராமத்தில் இருக்கிற தங்கக்கழகம், ‘வொலிபோல்’,கால்பந்து… எல்லாம் விளையாடுகிறவர்கள். ஆனால், ‘பாஸ்க்கற் போல்’ விளையாடுறதில்லை.அவங்களைக் கேட்டால் விதிமுறைகளை தேடி அறிந்தாவது சொல்வார்கள். இப்படி ஒருபக்கம் கனவுகளும் கிடந்து அடித்துக் கொள்கின்றன
அடுத்த நாளே அவன் நகரத்தில் கராட்டி வகுப்பு ஒன்றிலேயும்
போய் சேர்ந்து விட்டான். தனி ஆளாக பறந்து பறந்து அடிக்கிறதெல்லாம் சினிமாவிற்கு தான் சரி, அடுத்தடுத்த நாட்களில் வாசிகசாலை வளவிற்கு மேசன் நாகரத்தினம் அண்ணைக் கூட்டிச் சென்று,”அண்ணை,இதிலே (ஜிம்னாஸ்டிக்)’பார்” தடி வைக்க வேண்டும்.எவ்வளவு முடியும்”என செலவு மதிப்பீட்டைக் கேட்டான்.
“குழாய்யிலே தானே வைக்கப் போறாய்”என்றவர் “முதலில், எவ்வளவு உயரம்,நீளம் சொல்லு”எனக் கேட்டு அவனை டேப்பை பிடிக்கச் சொல்லி …”ப”னா அளவை எடுத்தார்.அத்திவாரத்திற்கு செலவையும் சேர்த்து “ஒரு சோடி ஒன்றரை இஞ்சியிலே குழாய்கள், 3 அடி நீளத்தில் 2 சீமேந்து அத்திவாரக் கட்டுகள்…ம்! மனதில் கூட்டி பொதுவாய் (இவ்வளவு)… ஆகும்.” “என்றார்.
“அண்ணை,நாளைக்கே ஆச்சிட்ட வந்து அட்வான்ஸயும் வாங்குங்கோ,குழாய்க்கு ஓடர் கொடுத்து எடுத்து, நேரம் கிடைக்கிற போது வந்து வேலையையும் தொடங்கி விடுங்கோ “என்றான்.
ஆச்சி,அவனுடைய அம்மம்மா, அங்குள்ள கோயில்கள் ஒன்றிரண்டில் மடம்,பிரகாரம் எல்லாம் உபயமாகக் கட்டிக் கொடுத்தவர்.நாகரத்தினம் அண்ணை தான் அவற்றைக் கட்டியவர்.இருவருடைய கையும் ராசியான கை. இவரால்,வேலை தொடங்கினால் ஒழுங்காய் முடியும்’என்ற நம்பிக்கை இருந்தது. செல்வன்,கற்பனையில் மிதந்தான். அவரும் ஒரு மாசத்திலே கட்டிக் கொடுத்து விட்டார்.அவனுக்கு அரைவாசி வென்று விட்ட மாதிரி மகிழ்ச்சியில் குமரனிடம்.”டேய், ஒரு நாள் இவனை புரட்டி புரட்டி எடுக்கப் போறேன்,பாரன்!”என்றான். குமரனுக்கு உள்ளூர பதற்றம் ஏற்பட “உனக்கென்ன விசரா?சும்மா,பக்கத்து வீட்டுக்காரனோடு சண்டை பிடிக்கிறது என்று நினைத்தாயா?இவங்களுக்குப் பின்னாலே ஒருகூட்டமே கிடக்கிறது.சிங்களவன்கள் போல எதுவும் செய்ய தயங்காதவர்கள்.,இப்ப மாறினாலும் எத்தனைப் பேர் அசிட் ஊத்தி வெந்த முகத்தோடு,அழகு போய் விட்ட முகத்தோடு டவூனுக்குள்ள அலையிறதை பார்த்தேயல்லவா, நீ வீரனாக இருக்கலாம்.ஆனால் நீ கோழைத் தனமாக அவங்கட வளையிலே போய் விழக்கூடாது.’புத்தி இல்லாமல் காலை எல்லாம் வைக்காதே” என்று எச்சரித்தான்.
“பகலில் இல்லை,இரவிலே முகத்தை மறைத்துக் கொண்டு தான் பயப்படாதே…” என கையை பொத்தி முஸ்டியை காட்டினான்.
“உன்னை அவனுக்கு வடிவாய் தெரியும்.உன்ர பேச்சு,குரல், உருவம்… வேற தெரியும். இலகுவாய் கண்டு பிடித்து விடுவான்.
“சரி,நானாய் போகவில்லை.அவனாய் ஒருநாள் கொளுவ வருவான் இல்லையா?அப்ப காட்டுறேன்”என்றான்.
இவன்ர ரோசம் தேவையில்லாமல் எப்படியும் மாட்டி விடவே போகிறது என்று பட்டது. என்ன செய்யலாம்…?யோசித்தான். “இப்போதைக்கு ஒன்றும் செய்து போடாதே” என்றவன். “டேய், முதலில் பெடியள்களுக்குப் பழக்குவோம்.பிறகு நம் பெடியள்களுக்கே போட்டிகள் வைத்து பலத்தைக் காட்டுவோம்..பயத்திலே அவன் கிட்டவே நெருங்க மாட்டான்.கிராமத்திலே,தங்க நட்சத்திரம் விளையாட்டுக் குழு இருக்கிறதில்லையா,அவங்களோட உங்களுக்கு நல்லப் பழக்கம் தானே.உங்க ஆச்சியை மூலமாக போட்டிகள் வைக்கிறதைப் பற்றி கதைக்கலாம். மரதன் ஓட்டம் வைக்கிறது போல ஒவ்வொரு தீபாவளிக்கும் அவங்கட ‘கால் பந்தாட்ட விளையாட்டு நடக்குதில்லைய்யா,அதே போல பொங்கலுக்கு உங்கட போட்டி நடக்கட்டும்” என்றான் குமரன். செல்வன் அவனை ஆச்சரியமாய் பார்த்தான்.”பரவாய்யில்லையே நீயும் பெரிசாய் விடுதலைப் பெடியள் போல யோசிக்கிறாயே, சரி!, இப்போதைக்கு பயிற்சி தான் முக்கியம்..” என்று சிரித்தான்.
இராசன்,திரு,யோகன்,சுஜிந்தர்,மனோகர்…கொஞ்சப் பெடியள் வருகிறார்கள்.
இதிலே, இராசன் தீவிர கூட்டணி ஆதரவாளரின் மகன்.மற்றப் பெடியள் வளர அவர்களையும் அனுப்புவார்’ என்றும் பட்டது
கிராமத்தில், இப்படி ஒவ்வொரு சாதியிலும் தீவிர தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஆதரவுக் குடும்பம் என ஒவ்வொரு குடும்பங்கள் இருந்தன..ஆச்சரியமான விசயம் தான். எப்படி இவர்களால் அப்படி இருக்க முடிகிறது? என மூளையை குழப்பியிருக்கிறான்.
‘தமிழின் மேல் அவர்களிற்கு இருக்கிற ஆர்வம்,சேர்ந்த விதம் அவர்களின் ,வெற்றி தோல்விகள்,அவநம்பிக்கைக் கூறுகளை தள்ளி வைத்து விட்டு செயலாற்றும் விதம்…என .தலைவர்களை மொத்தமாக பார்க்கிறார்கள்’ போல இருக்கிறது. தலைவர்களிற்கு பெடியள்களைப் போல தலைக்கனம் இருந்தாலும்…இவர்களுடன் நட்பாக பழகுகிறார்கள். அதை விடவும் வேற ஆழமான ..இழைகளும் இருக்கலாம்.இவர்களிடம் போய் இந்த மிதவாதிகள் தவறு விடுகிறார்கள் என்று மார்க்சிசம் பேசிப் பாருங்கள். அசையவே மாட்டார்கள்.
இவர்களில், ஒருத்தர் பரியாரியார்,ஒருத்தர் வியாபாரி,ஒருத்தர் இளைப்பாரிய ஆசிரியர்,ஒருத்தர் சிறு கடை வைத்திருந்தவர்,இப்ப செத்து விட்டார்.இருந்தாலும் அந்தக் குடும்பம் மதிக்கப் படுற குடும்பம்.இவர்கள் மட்டும் சாதி பேதங்கள் பாராட்டுவதில்லை.. அதோடு அந்தந்த சாதியிலேயும் முதல் மரியாதைக்குரியவர்கள் வேற.
இவர்களே கூட்டணிக் கூட்டங்களை ஒழுங்கு பண்ணுறவர்கள். இவர்களால் கிராமத்திற்கு ‘அழகு’ (கூட்டம்) சேர்ந்தது. இவர்களுடைய தார்மீக ஆதரவு செல்வனுக்கு தான்.
குமரன், சிக்கலான பிரச்சனை என்றால் சுளிபுரத்தில் இருக்கிற பெரியம்மாட 2வது மகன்,(ஒன்று விட்ட அண்ணன்) யோகண்ணையிடமே போய்க் கதைக்கிறவன். யோகனின் அப்பா பழைய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்.இப்ப அது தான் மதிப்பிழந்து விட்டதே,பெடியள்கள் ஒவ்வொரு பிரச்சனைகளாக கையில் எடுத்துக் கொண்டு வாரதால் அவர்களுக்கு போராட பிரச்சனைகள் இல்லாமல் போய் விட்டது. இருந்தால் என்ன,அவரால் செயல்பட முடியாதா? அவருடைய வார்ப்பு யோகண்ணை.
அங்கே மார்க்சிசம் பேசுற வேறு பலரும் இருந்தார்கள். அதிலே ஒருத்தன் மாலன், ஆயுதம் தாங்கிய குழு ஒன்றுடன் சேர்ந்து ஐந்து பத்து வருசம் இழுப்பட்டிருந்தவன்.பிறகு,கண்ணூறு பட்டது போல அவர்களுக்குள் இருந்த ஒற்றுமை குலைந்து விட்டது.பேசித் தீர்ப்பதை விட ஆயுதங்களால் பேச வெளிக்கிட்டதில் அவன் கொல்லப்பட்டு விட்டான். அந்த மாலனின் நெருங்கிய நண்பனான சுந்தா யோகனுக்கு தற்போது குருவாக இருக்கிறார். அங்கே, சுந்தா, ‘மாலன் குழு’வென கொஞ்ச பெடியள்ளைச் சேர்த்துக் கொண்டு செயல்படுகிறார்.அதிலே யோகனும் ஒருத்தன்.செல்வனின் பிரச்சனையைக் கூறி “சண்டியனை எப்படி…கையாளலாம்?” என்று கேட்டான்.
“இருட்டடி கொடுத்தால் அடங்குவான் என்று நினைக்கிறேன்.அவனுக்கு ஏன் அடி விழுறது என தெரியக் கூடாது அது முக்கியம்.எப்பையோ ஆடியது இப்ப (வினையாய் )விடிகிறது’ என அவன் குழம்ப வேண்டும்” என்றவன்.”சுந்தா அண்ணைற்ற சொல்லி ஆட்களை கூட்டி வாரன்.நீ ஆளைக் காட்டு “என்று முடித்தான். செல்வனின் யோசனையையே இவனும் சொல்கிறான்.ஆனால்,அவனை விட இவர்கள் செய்வதே நல்லது என்று பட்டது.
“நானும் உங்களோட வாரன்”என்று கேட்டான்.”உன்னை அவனுக்கு நல்லாய் தெரியும், நல்லதில்லையடா” என்றான்.முகத்தை மறைத்துக் கொண்டு தானே போகப் போறோம்” என்று குமரன் கேட்க ‘வர ஆசைப் படுவதைப் புரிந்து கொண்டு “சரி அப்ப நீ எங்கட காம்பிலே கிடக்கிற ஒரே ஒரு டெர்னிம் சேர்ட்டை,(அதை போட ஒருத்தருக்கு ஒருத்தர் அடித்துக் கொள்கிறவர்கள்) நீ அதை போட்டுக் கொள்,அதோடு துணித் தொப்பி ஒன்றும் போட்டுக் கொள்ள மறந்து விடாதே!. அப்படி மாறினால் உன்னை அவனால் ஓரளவு மட்டுக்கட்ட முடியாது” என்றான்.
திட்டம் தீட்டியாயிற்று.
ஒருமுறை செல்வம், யாழ்நகர பஸ்நிலயத்திற்கு அருகில் ஐயாத்துரையின் சைக்கிளில் இவன் டபிள் போய்க் கொண்டிருக்கிற போது,இரண்டு பெடியள் செட் சைக்கிளில் துரத்தப் பட்டு ஓடி வந்து கொண்டிருந்தார்கள். பஸ்நிலைய ‘ஏரியா’ ஒரு பெடியள் செட்டினுடையது. அதற்குள் ஒன்று நுழைய மற்றது நின்று விட்டது.உள்ளே வந்த மற்றவர்கள் அவசரத்தில் இவர்களுடைய சைக்கிள்ளை அடித்து விழுத்தி விட்டார்கள். இந்த செட்டுகளில் இருக்கிறவர்களில் ஓரிருவர் சண்டியர் படைகளில் இருந்தார்கள்.மற்றவர்களில் சிலர் பிறகு பிறகு மெல்ல மெல்ல சேர போகிறவர்கள்.
சினிமாவில் நடக்கிறது நிஜத்திலும் இருக்கிறது தான்.இவர்கள் இருவருமே ‘பிளெக் பெல்ட்’.ஐய்யாத்துரை அடித்த சைக்கிளை எடுத்து தூர எறிந்தான். பெடியள் சீறிக் கொண்டு சூழ்ந்து விட்டார்கள்.அடிக்க வந்தவனை ஐயாத்துரை இலகுவாக கையால் வளைத்து விழுத்தி விட, தூர நின்று பார்த்துக் கொண்டிருந்த மற்ற குழு கை தட்டி ஆர்ப்பரித்தது. இரண்டு மூன்று பேர்களாக வர அவன் சினிமா நாயகன் போல கையால் சிலம்பாடினான்.நம்ம ஆள் செல்வமும் சண்டையில் கலந்து கொண்டு விட்டான்.அத்தனை பெடியளும் விழுந்து, எழுந்து .…திகைத்துப் போய் நின்றார்கள்.இவர்கள் இருவரும் கராட்டி ஸ்டெப்பில் நின்றார்கள்.
மேற் கொண்டு தொடர விரும்பாத அவர்கள் சைக்கிளைத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள்.இவர்கள் துரத்த எல்லாம் போகவில்லை.தம்மை தட்டிக் கொண்டு சைக்கிளை எடுத்து நிறுத்த பார்த்துக் கொண்டிருந்த மற்ற கூட்டம் கையை அசைத்துக் காட்டி, பெரிசாய் கை தட்டி ஆர்ப்பிரித்து விட்டு கழன்று விட்டது.
செல்வனுள்ளும் முறுக்கு ஏறி விட்டிருந்தது.ஆனால், ஐய்யாத்துரை “டேய்,இந்த பக்கம் சைக்கிளில் இனி வராதே.பஸ்ஸிலேயே வந்து போய்க் கொண்டிரு.கெயர் ஸ்டையிலையும் கொஞ்சம் மாற்றி விட்டால்.. நல்லதடா.மீசையை எடுத்து விடு.நானும் எடுத்து விடப் போகிறேன்.அவங்கள் சைக்கிள் ஆட்களில் தான் தேடிக் கொண்டிருப்பாங்கள்.கவனமடா!”என்று குமரனைப் போலவே எச்சரித்தான்.
எல்லாரும் ஏன் தான் பயந்து சாகிறார்கள்;பயந்தாங்குழியாய் இருக்கிறாங்களோ என்று நினைத்தான். புரியவில்லை. ஆனால், ஐய்யாத்துரை…. நண்பன். அவனுடைய பேச்சை கிரகிக்கவே செய்தான்.
“என்னடா, உன்னுடைய மீசைக்கு நடந்து விட்டது?”என்று கேட்ட குமரனுக்கு “இப்ப,மாதவன் போல… (அழகாய்) இல்லையா”என்று எதையோ சொல்லி சமாளித்தான்.
சண்டியர்களை எப்பவும் குறைவாய் எடை போடக் கூடாது.எங்களை விட அவர்களிற்கு ஒற்றுமை அதிகம் ,உற்ற தோழனுக்காக உயிரை விடக் கூடிய தன்மை…எல்லாம் அவர்களிடம் கிடக்கின்றன.அரசியல்,நியாயம் எல்லாம் அதற்கு அப்புறம் தான்! இதை அவனுக்கு விளங்கப் படுத்த யாரும் இருக்கவில்லை.. அதற்கப்புறம் செல்வம் பஸ்சிலே போய் வந்து கொண்டிருந்தான்.அவசியம் இருந்தால் அன்றி பஸ்நிலயப் பக்கம் போறதில்லை.
இது மட்டுமில்லை இனிமேல் நடக்க இருக்கிறதும் அவனுற்கு புரியப் போவதில்லை. கிராமத்திற்கு இரவு 8 மணி போல, சைக்கிளில் யோகன் தலைமையில் ஒரு கூட்டம் வந்திறங்கியது.
தெய்வத்தின் வீட்டுக்குள் நுழைந்த சதிஸ்,”அக்கா,நீயும் பிள்ளைகளும் பக்கத்து வீட்டுக்குப் போ” என்றவன் தன்னோடு வந்த கதிரிடம் “இவர்களைக் கூட்டிப் போ” என்றான். “என்ன செய்யப் போறீர்கள்?” அவள் பயத்துடன் கேட்டாள்.சிறுமிகள் அழத் தொடங்க கையில் இருந்த டொபியைக் கொடுத்து “இன்னும் வேணுமா?”என்று கதிர் அன்பாகக் கேட்க, அழுகை நின்றது.கதிர் அன்பாக பேசியது அவளுள் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்..பெடியள் மோசமாக அடிக்கப் போறதில்லை’என்ற நம்பிக்கையைத் தந்தது.அவள் மறு பேச்சில்லாமல் போனாள்.
தெய்வத்திற்கு அவன் அப்பா எச்சரித்தது தான் ஞாபகம் வந்தது.”டேய்,வீணாக கொளுவ போய் விடாதே!இந்த பெடியள் ஆயுதங்களோட திரியிறவங்கள்.பார்த்து நடந்து கொள்ளப்பா.முந்தியது போல இல்லை இப்ப.நான் வட்டி கொடுக்கிறதோடு மட்டும் நிறுத்திக் கொண்டு விட்டேன்.அடங்கி இரு”என்றிருந்தார்.” வெளியில் இரண்டு பேர் சென்றி நிற்க வீட்டுக்குள்ளே புகுந்து விட்டார்கள்.அதிலே ,உடம்பு,ஒல்லி,தடியன் என பலர் இருந்தார்கள்.ஒருத்தன் சாக்குத் துணியால் சுத்திய ஒன்றை கையில் வைத்திருந்தான்.
யோகன்,”உன்ர சாரத்தைக் கழற்று”என்று கட்டளை இட்டான்.தெய்வம் மறு பேச்சில்லாமல் …பென்டருடன் நின்றான்.சதிஸ்,அந்த சாரத்தை எடுத்து அவனின் முகத்தை மூடி கட்டினான்.அவன் லாவகமாக போட்ட முடிச்சைப் பார்த்த தெய்வத்திற்கு,இப்படி பலருக்கு பூசை போட்டிருக்கிறார்கள் என்று புரிந்தது.அவனுக்கு அந்த நிலையிலும் சிரிக்க வேண்டும் போல இருந்தது. அடக்கிக் கொண்டான்.நக்கலா? என்று பிறகு,அதற்கும் வேறாய்…அடி விழும். அவனுக்கே சரித்திரம் மாறி நடக்கிறது.
அவனுடைய ஆட்கள் இந்த மூடிக் கட்டுறதெல்லாம் செய்ததில்லை. அவ்வளவு லெவல். அவர்களிட அடியிலே ஆள் அனேகமாக சேதுவாகியே விட்டிருக்கிறார்கள்.பிறகு அந்த ஆளுக்கு ஏதாவது கோளாறு தொடர வாழ்வில் நெடுக பிரச்சனை தான்.
இந்த சண்டியர்களும், தங்கட ஆட்சிக்குப் பிரச்சனை வராது என இங்கிலாந்தைப் போல நம்பிக் கிடந்தவர்கள்.இன்று,அவனுக்கே அப்படி அடி விழுகிற அதிசயம் நடக்கப் போகிறது.கதவைச் சாத்த கொஞ்சம் இருட்டானாலும் பெடியள்களிற்கு தெய்வத்தை மட்டுக் கட்டக் கூடியதாகவே இருந்தது.” உனக்கு கொழுப்பு மெத்தி ஊரிலே மேயக் கேட்குதோ?”விழுந்தது முகத்திலே ஒரு குத்து.சரமாரியாக உடம்பிலே,காலிலே,கையிலே என விழ நிலத்தில் விழுந்து போனான்.தடியோ,வேற எதையுமோ பாவிக்கவில்லை. எல்லாம் கையால்,காலால் தான் அடி,உதைகள் .உரமான அடிகள்.”கத்தாதே.பிறகு வாய்யைப் பொத்திக் கொண்டு அடிப்போம்.அதிலே எங்களுக்கும் பிரச்சனை வரலாம்.நீ செத்துப் போய் விடலாம்”.யோகனின் பேச்சு,குமரனுக்கே வயிற்றைக் கலக்கியது.
நல்லகாலம் அப்படி ஏதும் நடக்கவில்லை. வெளிய வந்த போது யோகன்”நீ.என்னோட வா!,நாளைக்கு வீட்ட போகலாம்”என குமரனிடம் சொன்னான்.
அதற்குப் பிறகு அவன் பொஞ்சாதியிடம்” “நீ உன்ர புருசனைப் போய் பார்”என்று சொல்லி விட்டு அந்த படை அகன்றது.
தளர்ந்து போய் விழுந்து கிடக்கிற அவனைப் பார்த்த போது அவளுக்கு அடி வயிற்றை என்னவோ செய்தது.விளக்கு வெளிச்சத்தில் ஒன்றைக் கவனித்தாள்.அவன் ஏலாமல் கிடந்தான்,தவிர அவனில் ரத்தக் காயத்தைக் காணவில்லை.பெடியளை ஒரு கணம் நன்றியுடன் நினைவு கூர்ந்தாள் .வந்தவர்களை அவளும் கவனிக்கவே செய்தாள்.அரைவாசி முகத்தை மறைப்புச் செய்தாலும் சின்னப் பெடியள் சிலரும் இருக்கவே செய்தார்கள்.
அப்படி என்றால்?அவள் வேற இடங்களில் நடந்ததாய் கேள்விப்படுற செய்திகள் எல்லாம் பொய்யா?.அவை பொய்யும் இல்லை,நடக்கவே செய்கின்றன.ஆனால், பேச்சுகளில் அரைவாசிக்கு மேலே வதந்திகளும் கலந்தே வருகின்றன என்பதே உண்மை.இவனை மிரட்டி வைக்க வேண்டும் என்பதே நோக்கம்.அது தான் இந்த விதக் கவனிப்பு.
எது எப்படியோ…அந்தச் சம்பவம் அவர்களிற்கிடையில் அன்பை வளர்க்கவே போகிறது.
அந்த கிராமம் பெரிய கிராமம் ஒன்றில்லை.அவனுக்கு அடி விழுந்தது எல்லோருக்கும் தெரிய செய்தது.அவன் ஒன்றும் பெரிய ரவுடியும் கிடையாது. எனவே அவனை அனுதாபமாக பார்க்கிறவர்களும் இருக்கவே செய்தார்கள்.
செல்வத்திற்கு ஆச்சரியம்.”யார் செய்திருப்பார்கள்?”என குமரனிடம் கேட்டான்.”இவன் வேற ஊரிலேயும் போய் வாலாட்டியிருப்பான் போல,அது தான் வந்து கவனித்திருக்கிறார்கள் போல இருக்கிறது”என்று பதிலளித்தான்.
“என்னட்ட அடி வாங்க …கொடுத்து வைக்கவில்லை,பரவாய்யில்லை அதுவும் நல்லதுக்குத் தான்!”என்று செல்வமும் சிரித்தான்.
அது நடந்து இரண்டு மாசம் இருக்கும். பிறகு விதியும், அவனுக்கு பாடம் படிப்பிச்சது தான் பயங்கரம்.பெடியள் அடிச்ச நோ ஏதும் கூட இருந்திருக்கலாம்.இருட்டான பொழுதில் மோட்டார் சைக்கிளில் செல்வம் ஆட்களின் குடியிருப்புக்கு முன்னால் போகிற பெருவீதியில் வந்திருக்கிறான்.வேகமாக வந்த அவனை சைக்கிள் தூக்கி எறிந்திருக்கிறது.அதோடு சைக்கிளும் அவனுடைய கால் தொடைப்பகுதியின் மேல் விழுந்து எலும்பை நொறுக்கி விட்டது.பயங்கர விபத்து.ஆள் தப்பி விட்டான்.இதே போல யாழ்தொழினுட்பக் கல்லூரிக்கு பக்கத்திலே சிறிய குளத்திற்கு பக்கத்தால் போகின்ற இதே பெருவீதியிலும் இருளான பொழுதில் ஓட்டிச் சென்றவன் தூக்கி எறியப்பட்டு அந்த இடத்திலே சரி.பின்னால் வந்தவனுக்கு பலத்த காயம்.ஆனால் மோசமில்லை.தப்பி விட்டிருந்தான்.இப்ப குணமாகி நல்லாய் இருக்கிறான்.இதை விதி என்பதா?
சமதளமாக நல்ல உரம் போட்டு போடப்பட்ட வீதி தான்.மழைவெள்ளத்திற்கு…சில இடங்களில் வீதி,சிறிது இறங்கிய சாய்தளமாகி விடுகிறது. அப்பகுதிகளில் சாதாரண வேகத்தில் போகக் கூடாது.வெளிநாடுகளில் அதிலே அதிகப் பட்சமாக போகக் கூடிய வேகத்தைக் கணித்து எச்சரிக்கை பலகை வைத்திருக்கிறார்கள்.அடிக்கடி மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் நிகழ்வதைப் பார்த்து மூன்று சில்லிலே கூட அங்கே மோட்டார் சைக்கிள்களை தயாரித்து ஓட விடுகிறார்கள் .
கிராமத்திருந்த பரியாரிகள்மார் தான் அவனுக்கு முதலுதவி செய்திருக்க வேண்டும்.உடைந்த எலும்புத் துண்டையும் கவனமாக பொறுக்கி எடுத்து வைத்திருந்ததாக கேள்வி.அவனுடைய அப்பனுக்கு உடனேயே செய்தி போய், அடுத்த ஒரு மணித்தியாலத்தில் அவனை அம்புலன்சில் தூக்கிக் கொண்டு போய் விட்டான்.அதில் அப்பனின் பாசம் தெரியிறது தான்.
ஆனால் செல்வம் ஆட்கள், “இது கடவுள் கொடுத்த தண்டனை”என்றார்கள்.
இங்கே சத்திர சிகிச்சை செய்தால்’காலின் நீளம்’ குறைந்து விடும்” என்றார்கள். அப்பன்,எவ்வளவு செலவானாலும் பரவாய்யில்லை என அவனை உடனேயே வேலூருக்கே (இந்தியாவில் எலும்பு முறிவுகளிற்குப் பிரபலமான மருத்துவமனை) எடுத்துச் சென்று வைத்தியம் பார்த்தார்.
காயம் எல்லாம் மாறின பிறகு கொஞ்சம் காலை இழுத்தே நடக்கிறான்.பெரியளவு வித்தியாசமில்லை.இப்பவும் மோட்டார் சைக்கிள் ஓடுறான் முந்தியும், மோட்டு ஓட்டம் …இல்லை தான்.ஆனால் அந்த சாய்தளம் சதி செய்து விட்டது.அது நடக்கும் வரையில் அந்த வீதி சரிவாக கிடப்பது யாருக்குமே தெரியாது.இப்ப கவனமாக ஓடுகிறான். மற்றவர்களும் தான்.புதிய தெய்வமாக திரிகிறான். இப்ப, குமரனுக்கே அவனை பார்க்கையில் ‘பாவமா’ய்க் கிடக்கிறது
“யாரை நம்பினாலும் இந்த சண்டியர்களை நம்ப முடியாது,இவனுக்கு இன்னமும் கணக்கு தீர்க்க வேண்டியிருக்கலாம்”என செல்வம் குமரனிடம் கூறுகிறான். இவர்கள் ஓரிரு சம்பவங்களில் திருந்தி விடுவார்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது தான்!
balamuraly@sympatico.ca