ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் விடிகிறது.
எப்போது வெளிக்கும் என்று வாசற்பக்கமே பார்த்துக்கொண்டு கிடப்பாள் அம்மா. சில இரவுகள் நேரத்தைக் கடத்திக்கொண்டு போவதுண்டு. நித்திரையின்றிப் புரள்வதைவிட எழுந்து உட்காரவேண்டும்போலிருக்கும். அல்லது ஹோலுக்குள்ளேயே இங்குமங்கும் நடக்கலாம். ஆனால், சாமத்தில் எழுந்து நடந்து திரிந்தால் மகன் ஏசுவான்.
“என்னம்மா இது?… ராவிருட்டியில?…. பிள்ளையள் பயப்பிடப்போகுது…. படுங்கோ!”
அம்மாவுக்கு வயது போய்விட்டது. கிழவி. யார் என்ன சொன்னாலும் கேட்கத்தான் வேண்டும்.
குளிரடித்தது. போர்வைக்குள் உறக்கத்தை இழுத்து மூடிக்கொண்டு படுப்பதற்கு அம்மா மிகவும் பிரயத்தனப்பட்டாள். விழிப்பு போர்வையை விலக்கி விலக்கி வெளியே வர எத்தனித்தது. யன்னல்களைப் பூட்டிவைத்தாலும் குளிர்காற்று ஹோலுக்குள் இலகுவாகப் புகுந்துவிடுகிறது. சிறிய வீடு. இரண்டு சிறிய அறைகள். ஒரு அறையில் பேரப்பிள்ளைகள் படுக்கிறார்கள். மற்றதில் மகனும் மருமகளும். அதனால் அம்மாவின் படுக்கை ஹோலுக்கே வந்துவிட்டது.
உறக்கத்துக்கும் விழிப்புக்குமிடையிலான இழுபறியில் ஓரளவு கண்தூங்கும் வேளையிற்தான் அந்தக் குருவியின் குரல் கேட்கும். நிலம் விடியாத அதிகாலையிலேயே வந்திருந்து பாடும் குருவி! வெளியே கிளை பரப்பி நிற்கும் மரத்துக்கு நாள் தவறாது வந்துவிடும். ஒவ்வொரு கிளையாக தத்தித் தத்தி அமர்ந்து பாடும் தொனி, அது தன் துணையைத் தேடி ஏங்குவதுபோலிருக்கும்.
யன்னலூடு சற்று வெளிப்புத் தெரிந்தது
அம்மா ஒரு கையை நிலத்திலூன்றி மறு கையால் பக்கத்திலிருந்த கதிரையைப் பிடித்தவாறு மெல்ல எழுந்தாள். படுக்கையை ஒரு பக்கமாக எடுத்து வைத்தாள். பின்னர் சுவரோரமாக இருக்கும் தனது கதிரையிற் போய் அமர்ந்து கொண்டாள். அது தனிக்கதிரை. பழசு. கணவர் இருந்தபோது வாங்கியது. எழுபதாம் ஆண்டு கொழும்பில் இந்த வீட்டை வாங்கியபோதே ஒரு செற் பின்னல் கதிரைகளையும் வாங்கிப் போட்டார் கணவர். சோடிக்கதிரைகள் உடைந்து தொட்டம் தொட்டமாகப் போய்ச் சேர்ந்துவிட்டன. இதையும் அப்புறப்படுத்தித் தூக்கிப்போடும் முயற்சி வீட்டில் பல தடவை மேற்கொள்ளப்பட்டது. அம்மா விடவில்லை. கெஞ்சாத குறையாக மகனிடம் சொன்னாள்: “இந்தக் கதிரையாவது அவற்றை நினைவாய் இருக்கட்டும் தம்பி!”
கதிரைச்சட்டம் உடைந்தாலோ, பின்னல் பிரிந்தாலோ மகனிடம் கூறித் திருத்தம் செய்து எடுத்துக்கொள்வாள் அம்மா. மகனும்,‘அது அம்மாவின்ர விருப்பப்படி ஒரு பக்கமாக இருக்கட்டும்!’ என மனைவியிடம் சமாதானம் சொல்லிக்கொள்வான்.
ஆனால் அது இந்த வீட்டில் இருப்பதற்குத் தகுதியற்றதுபோல ஒரு மூலையில் வைக்கப்பட்டிருக்கிறது. யாராவது நண்பர்கள் வீட்டிற்கு வருகிறார்கள் என்றால், அம்மாவுக்கும் சொல்லாமல் கொள்ளாமல் கதிரை மறைக்கப்பட்டுவிடும். பிறகு, வந்தவர்கள் போனதும்தான் அந்த ஆசனம் கிடைக்கும்.
அம்மா கதிரையிலிருந்தவாறே கைகளை உயர்த்தி அலுப்பு முறித்தாள். காலையில் எழுந்ததும் பாத்றூம் அலுவல்களை முடித்துக் குளித்துவிடவேண்டும்போலிருக்கும். ஆனால் இப்போது போய் பாத்றூமை அடைத்துக்கொள்ள முடியாது. மகனோ மருமகளோ எந்த நேரத்திலும் எழுந்து வரலாம். பிறகு சத்தம் போடுவார்கள்.
‘வீட்டில சும்மா கிடைக்கிற உங்களுக்கு இப்ப என்ன அவசரம்?’
பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எழுந்து அலுவல்களை முடித்துப் புறப்படும்வரை அந்தச் சுவரோரக் கதிரைதான் அம்மாவுக்குத் தஞ்சம்.
குருவி, குரலின் தொனியை மாற்றி மாற்றிப் பாடும் இனிமையை அம்மா கேட்டுக்கொண்டே இருப்பாள். நன்றாக இருள் விலகி விடியும்வரை அது அந்த இடத்தை விட்டுப் போகாது. அதன் குரல் அம்மாவின் மன உணர்வுகளை சோகமாக மீட்டுவதுபோலிருக்கும்.. கணவனை வேலைக்கு அனுப்பவேண்டும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பவேண்டும் என அதிகாலையில் எழுந்து இயங்கும் அந்த நாட்கள் நினைவுக்கு வரும். குருவியின் பாடலும் கணவரது நினைவும் வாசற்கதவுப் பக்கம் அம்மாவின் கண்களைத் திருப்பியது. வாசற்கதவு அழைப்புமணியும் ஒரு குருவியின் கீச்சுக் குரலைப் போலவே ஒலிக்கும்.
அதைக் கணவர்தான் வாங்கிவந்து பொருத்தினார்.
ஏதாவது அலுவலாக வெளியே போய்விட்டு வரும் வேளைகளிலும், வேலை முடிந்து மாலையில் வரும் வேளைகளிலும் அதை மூன்று முறை அழுத்தி ஒலிக்கச் செய்வார். அம்மா என்ன அலுவல்களில் ஈடுபட்டிருந்தாலும் அதை அந்தப்படியே விட்டு ஓடிவந்து கதவைத் திறப்பாள். சில நேரங்களில் பிள்ளைகள் கதவை திறப்பதற்கு ஓடுவதுபோல விளையாட்டுக் காட்டி… பின்னர் அம்மாவுக்கு விட்டுக்கொடுத்துவிடுவார்கள்.
மூன்று முறை அழைக்கும் குருவியின் குரல்.. அதுதான் அவரது சமிக்ஞை – வாசற்கதவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அம்மா…
…எண்பத்திமூன்றாம் ஆண்டு ஜுலையில், ஒருநாள் காலையில் வேலைக்குப் போன கணவர் திரும்ப வீடு வந்து சேரவில்லை. அன்றுதான் மோசமான இனக்கலவரம் கொழும்பில் வெடித்திருந்தது.
அவருக்கு என்ன நேர்ந்திருக்கும் என முடிவு தெரியாத குழப்பத்திலேயே அம்மாவின் காலங்கள் போயிருக்கின்றன. இருபத்தைந்து வருடங்களாகியும் அந்த நினைவுகள் அம்மாவைச் சும்மா விட்டதில்லை. எங்கு போனாலும் வந்தாலும்.. இருந்தாலும் நடந்தாலும்.. அவை சுற்றிச் சுற்றி வருகின்றன.
…அன்றைய தினம் மாலைநேரம் அம்மா எவ்வளவு பயத்துடனும் பதற்றத்துடனும் வாசலைப் பார்த்துப் பார்த்து நின்றாள். வருவாரா… வருவாரா… எப்போது வருவார்? அவர் அப்போது வரவே இல்லை. நடக்கிற கோரங்கள் பற்றிய செய்திகள்.. அவை தரும் நடுக்கம்… பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிய பயம்.. அவருக்கு என்ன நேர்ந்தது? ஏன் இன்னும் வரவில்லை? பொழுதும் பட்டுக்கொண்டிருந்தது. அயல் வீட்டு நண்பர் பியதாச வந்து வற்புறுத்தினார்: ‘நிலைமை மோசம்… இனியும் இங்க இருக்கிறது நல்லதில்ல… வாங்க! எங்கட வீட்டுக்குப் போயிடலாம்..!’
‘கொஞ்சம் பொறுங்க பியதாச அய்யா!… அவர் எப்பிடியும் வந்திடுவார்!’
‘உங்கட பாதுகாப்பு முக்கியமில்லையா? பிள்ளையள நினைச்சுப் பாத்தீங்களா?… வாங்க!’
நடுங்கியபடி வீட்டுக்குள் பதுங்கியிருக்கும் பிள்ளைகளுடன் பியதாசவின் வீட்டுக்குப் போனாள் அம்மா. வீட்டைப் பூட்டிவிட்டுப் போவதா, திறந்துவிட்டுப் போவதா என்பதே குழப்பமாயிருந்தது. பியதாச சொன்னார்; ‘பூட்டியிட்டு வாங்க! தமிழ் ஆக்களின்ட வீடுகளெல்லாம் மண்கொள்ளை அடிக்கிறாங்கள்!’
வீட்டைப் பூட்டிப் போனது தவறோ…? அவர் வந்து தேடியிருப்பாரோ? எங்கெல்லாம் தேடி அலைந்திருப்பாரோ?
‘அவர் எங்கயும் போகமாட்டார். வீடு பூட்டியிருந்தால் இங்குதான் வருவார்!’– பியதாச ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் அங்கு வரவில்லை.
கலவரம் உக்கிரம் அடைந்ததும் பியதாச, அம்மாவையும் பிள்ளைகளையும் ஒருவாறு பாதுகாப்பாகக் கொண்டுபோய் பாதிக்கப்பட்டோர் முகாமில் சேர்த்துவிட்டார்.
அங்கிருந்து கப்பலில் ஏற்றப்பட்டு யாழ்பாணம் அனுப்பப்பட்டது.. நாட்டில் கலவரம் அடங்கியதும் திரும்பக் கொழும்புக்கு வந்து சேர்ந்தது, கணவரைத் தேடி அவரது அலுவலகம்.. நண்பர்கள்.. இன்ன பிற இடங்கள் என விசாரித்து அலைந்து திரிந்தது, எல்லாம் அம்மாவின் மனதில் மாறாத வடுக்களாக நோவெடுத்துக்கொண்டிருக்கின்றன. அந்தக் கொடுமையைப்பற்றி யாருடனாவது பேசவேண்டும் போலிருக்கும். யாராவது அவரைப்பற்றி ஏதாவது தகவலையேனும் தரமாட்டார்களா என மனது அங்கலாய்க்கிறது. சிலர் ஒவ்வொருவிதமான கதைகளைச் சொல்லி அம்மாவின் மனதைக் கிண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். ‘அவரை அடிச்சுக் கொண்டிருப்பாங்கள்.. சுட்டுக் கொளுத்தியிருப்பாங்கள்!’ என்றெல்லாம் வாய்கூசாமல் கூறுகிறார்கள். ‘ஐயோ அப்படிச் சொல்லாதையுங்கோ!’ என அம்மா காதுகளைப் பொத்திக்கொள்வாள்.
கணவன் காணாமற்போன அந்த நாட்களில் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கவேண்டுமென்ற உறுதியும் பயமும்தான் அம்மாவின் மனதிலிருந்தது. அப்போதெல்லாம் அம்மா யாருடனும் அதிகம் பேசுவதில்லை. கணவரின் பிரிவாற்றாமையை ஒரு விரதம்போல் நெஞ்சில் சுமந்துகொண்டு பிள்ளைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினாள். அம்மாவின் மூத்த சகோதரர் மிக உதவியாக இருந்தார். அவரது பண உதவியுடனும், தையல் வேலைகள் போன்ற அம்மாவாலான சிறுசிறு சம்பாத்தியங்களுடனும் கஷ்டங்களுக்கும் கவலைகளுக்குமூடாக காலங்கள் போயின.
இப்போது வயதின் தளர்ச்சியும் தனிமை உணர்வும்தான் அம்மாவின் போக்கையும் கோலத்தையும் மாற்றிவிட்டன.
அம்மாவின் மூத்த மகள், கனடாவுக்கு குடிபெயர்ந்துவிட்டாள். அண்ணர் தனது மகனுக்கே அவளை மணமுடித்து வைத்தார். அம்மாவை வந்து தங்களுடன் இருக்கும்படி பிள்ளைகள் கேட்பதுன்டு. ஆனால் அம்மாவுக்குக் கொழும்பை விட்டுப் போகும் உத்தேசம் இல்லை. அது என்னவோ, அவரோடு இருந்து வாழ்ந்த இந்த வீட்டை விட்டுப் போக மனமுமில்லை. இரண்டாவது மகனுடன் கொழும்பிலேயே தங்கிவிட்டாள்.
குருவியின் கீதம் யாரையோ அழைப்பதுபோன்ற உணர்வைத் தரும்..
எழுந்துபோய் கதவைத் திறந்தாள். மரக்கிளைகளில் மாறி மாறி இருந்து அங்குமிங்கும் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு கத்திக்கொண்டிருந்தது. இந்த அதிகாலையில் வந்து.. வந்து யாரைத் தேடுகிறதோ?
“என்னம்மா இது? விடிய வெள்ளன..? வெளியில குளிர்காத்துக்கை நிண்டு வருத்தத்தைத் துவக்கிறதுக்கா..? உள்ளுக்குள்ள வந்து இருங்கோ!”– மகனது சத்தத்தில் திரும்பக் கதிரைக்கு வந்தாள் அம்மா. மகன் தனக்காக இரக்கப்படுகிறவன் என்பதும் தெரியும். சில வேலைகளில் தேற்றுவதுபோலவும் கூறுவான்..
“எந்த நேரமும் அப்பாவையே நினைச்சுக்கொண்டிராமல் ஆறுதலாய் சந்தோசமாய் இருங்கோ அம்மா! அப்பா உயிரோட இருந்தால், இவ்வளவு நாளும் வராமல் இருப்பாரோ?”
இந்தக் கேள்வி அம்மாவைப் போட்டுக் குடைந்து எடுக்கிறது. ஒரு முறையல்ல, பலமுறை.. பல நாட்கள்… பல வருடங்கள்! ‘ஒருவேளை அப்படியும் நேர்ந்திருக்குமோ..? அந்தக் கடைசி நேரத்தில் யாரை நினைத்திருப்பார்.? எப்படி அவலப்பட்டிருப்பார்.?’ எனினும் சட்டென மனதை மாற்றிக்கொள்வாள் – அவர் இறந்திருப்பார் என்பதை அம்மாவால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை.
காணாமல்போனவர்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பதற்கு ஒரு குழு அமைத்திருப்பதாக சில செய்திகளை அம்மா பத்திரிகைகளிற் பார்த்திருக்கிறாள். மகனிடம் இந்த விசயத்தைக் கேட்டாள் ‘மெய்யேடா தம்பி! காணாமல்; போனவையைக் கண்டுபிடிச்சுக் குடுக்கிறதுக்கு ஒரு குழு இருக்காம்! அவையிட்டைப் போய்ச் சொல்லுவமே? அப்பாவைத் தேடி தருவினமே?’
மகன் சினந்து விழுந்தான்; ‘உங்களுக்கு என்னம்மா விசரே? எண்பத்திமூண்டாம் ஆண்டு காணாமற்போனவரைப் பற்றி இப்ப இருபத்தைஞ்சு வருசத்துக்குப் பிறகு போய்க் கேட்கலாமா..? நேற்று முந்தநாள் காணாமல்போன ஆக்களின்ட கதையே என்னவென்று தெரியாமல் கிடக்கு..!’
‘இவன் ஒரு சுடுதண்ணி! ஓன்றும் கேட்கேலாது!’ என அம்மா மனதுக்குள் நொந்துகொண்டாள்.
“கிறான்ட்மா!” சடுதியான சத்தத்தில் திடுக்கிற்று அம்மா கனவுகள் கலைந்தாள். பேரப்பிள்ளைகள் உறக்கம் கலைந்து எழுந்துவிட்டார்கள். வீடு உறக்கத்திலிருந்து விழித்துவிட்டது. ஏற்கனவே எழுந்த மகன் உடுப்புகள் கழுவும் அலுவலில் ஈடுபட்டிருந்தான். காலையில் எழுந்ததும் முதல் அலுவலாக வீட்டில் எல்லாருடைய உடைகளையும் கழுவுவது அவன் வேலை. மருமகள் சமையல் வேலையைத் கவனித்துக்கொண்டும் பிள்ளைகளை அதட்டிக்கொண்டும் இருப்பாள்… ‘பிரஷ் பண்ணுங்கோ!… குளியுங்கோ!… நேரம் போகுது!’
‘வேலைக்குப் போகிறவள்…. பாவம், விடிய வெள்ளன எழும்பிக் குசினியில கஷ்டப்பட வேண்டியிருக்கு..’ என அம்மா தனக்குள்ளே நினைத்துக்கொள்வாள். ஏதாவது கூடமாட உதவி செய்யலாமென்றால் அது மருமகளுக்கு ஒத்துவராது. ‘நான் செய்யிறன்… நீங்கள் போய் உங்கட பாட்டில இருங்கோ!’ என்று முகத்துக்கே சொல்லிவிடுவாள்.
அம்மா தனது பாட்டிற்தான் இருக்கிறாள். ஒரு பக்கத்திற் தூக்கிப் போடப்பட்ட பழைய கதிரையைப் போல, நெஞ்சிற் கவலைச் சுமையுடன். இப்படியே இருந்து வீட்டில் நடக்கும் கூத்துக்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பாள். ஏதாவது ஞாயம் நீதி பேசப்போனால் பொல்லாப்பு வந்துவிடும்.
மகன் குளியலறயிலிருந்து மனைவியை அழைக்கும் குரல் கேட்டது. மருமகள் ஏனென்றும் கேட்காமல் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாள். அவனுக்குச் சன்னதம் வந்துவிட்டது. வெளியே வந்து கத்தத் தொடங்கிவிட்டான்.
“இவ்வளவு நேரமும் கூப்பிடுறன்.., உமக்குக் கேட்கயில்லையா?”
“நான் என்ன இஞ்ச சும்மாவா நிக்கிறன்?” பாத்திரங்கள் தடாங்புடாங் என அடிப்பட்டன.
மகனது சத்தம் வீடு கொள்ளாத உச்சத்தை எட்டியது. பிள்ளைகள் மிரண்டு ஒதுங்கினார்கள். மருமகள் விடுவிடென வெளியே வந்து உடைகொழுவிகளை எடுத்து வந்து கணவனுக்கு முன்னே போட்டாள்.
“இந்தாங்கோ! இதுக்குத்தானே கத்துறீங்க..? நீங்களே போய் எடுக்கேலாதா? இதுக்கும் நான்தானா வேணும்?” அந்தக் கையுடன் பிள்ளைகளின் முதுகில் ‘படார் படார்’ என இரண்டு போடு போட்டாள்: ‘விடுப்புப் பார்த்துக்கொண்டு நிக்காமல் போய் குளியுங்கோ!’
அந்த அடி யாருக்கென்று அம்மாவுக்குத் தெரியும். அம்மா விடுப்புப் பார்ப்பதில்லை. எதையும் கண்டும் காணாதவள்போலதான் இருப்பாள். கவலையாயிருந்தது. ‘இவன் சரியான கொதியன்!’ என மகன்மேலும் கோபம் ஏற்பட்டது. ‘அந்தாள் ஒரு நாள் கூட சத்தம் போட்டு அறியமாட்டன்!’ எது நடந்தாலும் அதில் கணவனின் நினைவும் சேர்ந்துவிடுவது அம்மாவுக்குத் தவிர்க்கமுடியாததாயிருந்தது.
சமையல் வேலைகளை முடித்துக்கொண்டு, மருமகள் நடந்து நடந்தே பிள்ளைகளுக்குச் சாப்பாடு ஊட்டிவிட்டாள். அவர்களுக்கு வாய் கழுவிவிட்டு, உடை அணிவித்து, தானும் ஆயத்தமாகிக்கொண்டு அவரவர் சாப்பாட்டுப் பார்சல்களுடன் வெளிக்கிட்டார்கள்.
அம்மா பார்த்துக்கொண்டே இருந்தாள்.
காலையில் ஏற்பட்ட கொதிப்பினால் முகங்கள் வெதும்பிப்போய் வேறு வேறு பக்கங்களிற் திரும்பிக்கொண்டு போனார்கள். ‘போய்ட்டு வாறம்மா… கவனமாய் இருங்கோ!’ என மகனோ மருமகளோ கூறிவிட்டுப் போவதுண்டு. இன்று ஒரு மூச்சுப் பேச்சும் இல்லை. ஒருதரம் திரும்பிப் பார்த்துவிட்டுப் போனாலாவது ஆறுதலாயிருக்கும்;;: ‘நான் என்ன செய்தன்? ஏன் என்மேல கோபத்தைக் காட்டிக்கொண்டு போகினம்?’
வேறு வேறு ஆட்களைப்போலப் போனாலும் எல்லாரும் ஒரு காரில்தானே போகப்போகிறார்கள் என அம்மா கொஞ்சம் ஆறுதல் அடைந்தாள். பிள்ளைகளை ஸ்கூலில் இறக்கிவிட்டு, பின்னர் மனைவியையும் அலுவலகத்தில் விட்டு மகன் தனது ஒபீசுக்குப் போவான். பிள்ளைகள் ஸ்கூல் முடிந்ததும் ஆட்டோவில் வந்து சேரும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மாலையில் கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து வருவார்கள். முகங்களை உம்மென்று வைத்துக்கொண்டு போனாலும் மாலையில் சிரித்துப் பேசி, கலகலப்பாக வருவார்கள். இது அவ்வப்போது நடக்கிற சங்கதிதானென்றாலும் அவர்கள் வாய்க்கு வாய் ஏச்சுப்படுவதைப் பார்க்கும்போதெல்லாம் அம்மாவுக்கு நடுக்கம்தான் ஏற்படுகிறது.
அம்மா கதிரையைவிட்டு எழுந்து பாத்றூம் பக்கம் போனாள். குளித்து வந்து சாமி கும்பிட்டாள். கணவரை நினைத்து வணங்கினாள். வெளியே வந்து சமையற் கட்டுப்பக்கம் போனாள். பிறகு வந்த விஷயத்தை மறந்து வாசலிலே நின்று யோசித்தாள். மீண்டும் கதிரைக்கு வந்தாள். இனி, பிள்ளைகள் திரும்ப வரும்வரை அம்மாவுக்கு வீடும் தனிமையும்தான்.
யாருமின்றி வீட்டிலிருக்க அம்மாவுக்குப் பயம். அடிக்கடி யன்னலூடு வெளியே எட்டிப் பார்ப்பாள். யாரைப் பார்க்கிறாள், எதற்காகப் பார்க்கிறாள் என்பது அம்மாவுக்கே தெரியாது. யோசித்து யோசித்து நிற்பாள். பிறகு, ஒன்றும் புத்திக்கு எட்டாமல் வந்து கதிரையில் அமர்வாள்.
அம்மா வெளியே எங்கும் போவதில்லை. யாருமில்லாமல் வீட்டை விட்டுப் போகக்கூடாது என எச்சரிக்கையாயிருப்பாள். மகனும் கட்டுப்பாடு போட்டிருக்கிறான்.. ‘வெளியில எங்கயும் போகவேண்டாம்! வெளியில போய் தேவையில்லாத கதைகளை அலட்டாமல் வீட்டோட இருங்கோ!’ அம்மாவுக்குத் தெரியும். கணவரைப் பற்றிய கதைகளைப் பேசுவதைதான் மகன் அலட்டுவது எனக் குறிப்பிடுகிறான்.
சில வேளைகளில் மகன் ஓபீசிலிருந்து ரெலிபோன் எடுத்துக் கேட்பான்; ‘அம்மா எப்பிடி இருக்கிறீங்கள்..?’
“எப்படியோ? அப்படித்தான் தம்பி இருக்கிறன்!” அம்மா ‘டக்’ கென ரெலிபோனை வைத்துவிடுவாள். அம்மா ரெலிபோனில் கதைப்பதையெல்லாம் விட்டுவிட்டாள். ரெலிபோன் பில் கூடுகிறதாம்! போகும்போது அதை ‘லொக்’ பண்ணிவிட்டுப் போவார்கள். அம்மாவுக்கு வேதனையாயிருக்கும். எல்லாத்துக்கும் என்னில பழி போடுகினம்.
அம்மாவுக்கு வயிறு புகைந்தது. “எட! சாப்பிடவெல்லோ குசினிக்குப் போனனான்… பிறகு அயத்துப்போய் வந்துட்டன்! நான் சரியான விசரிதான்..!”
அம்மா இப்படித் தனக்குத் தானே பேசிக்கொள்வதுண்டுதான். பல தடவைகளில் பேரபிள்ளைகளே கேட்டிருக்கிறார்கள “என்ன கிறான்ட்மா… ஆரோட கதைக்கிறீர்கள்.?”
“உங்களோடதான்..!” அம்மா சமாளித்துவிடுவாள். பிள்ளைகள் ஸ்கூல் விட்டு வர இரண்டு மணியாகும். அவர்கள் வந்தால் கொஞ்சம் பிராக்காக இருக்கலாம்.
எழுந்து குசினிப்பக்கம் போனாள். அம்மாவின் கோப்பையில் சாப்பாடு மூடி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்துக்கொண்டு திரும்பவும் கதிரைக்கே வந்தாள். மெல்ல மெல்ல மென்று சாப்பிடத் தொடங்கினாள். சாப்பிடுவதும் யோசிப்பதுமாக குறிப்பிட்டளவு நேரம் கடந்தது.
இனி என்ன செய்வது? பழைய பத்திரிகைகளை எடுத்து அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாகப் புரட்டினாள். எதையாவது வாசிப்பதா அல்லது வாசிக்கவேண்டாமா என்றும் தோன்றவில்லை. காணாமல் போனவர்களைப் பற்றிய செய்திகள் தென்பட்டால் அதைப் பிடித்துக்கொள்வாள். மீண்டும் மீண்டும் வாசிப்பாள். அவர்கள் திரும்பக் கிடைத்துவிட்டார்களா என அறிய அடுத்தநாட் பத்திரிகைச் செய்திகளைத் தேடிப் பார்ப்பாள்.
பத்துப் பதினொரு மணிக்கு ஸ்விச் போட்டதுபோல அம்மாவுக்கு நினைவு வந்துவிடும்.. கணவரின் உடைகளைக் கழுவவேண்டும்! முன்னர் கணவர் அலுவலகத்துக்குப் போகும் நாட்களில், அவருக்கு அடுத்தநாட் தேவையான உடைகளைக் கழுவி வைப்பது வழக்கம். அது இப்போதும் தொடர்கிறது! அம்மாவின் பெட்டியில் கணவரது சில உடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சிலதை எடுத்துக் கழுவி உலர்த்தி அயன் செய்து வைப்பாள். அதில் ஒருவித திருப்தி. உடைகளைக் கழுவும்போது சில சமயங்களில் கண்கள் கசிந்து கண்ணீர் அவற்றின் மேல் விழுந்து கரையும். கழுவி உலர்த்திய ஆடைகளைத் தனது கைகளாலேயே தடவித் தடவி அயன் செய்வாள் அம்மா. எலக்றிக் அயன் பாவிப்பதால் நிறைய கரண்ட் செலவாகிறதாம் – அதனால் அம்மாவின் இந்தத் தேவையில்லாத வேலைகளுக்கெல்லாம் அயனைப் பாவிக்ககூடாது என தடை போட்டுவிட்டான் மகன்.
கணவரின் சேர்ட் ஒன்றைக் கழுவி எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் அம்மா. வெளியே போட்டால் வெயிலில் காய்ந்துவிடும், பிள்கைள் வருவதற்கு முதல் எடுத்துவிடலாம்… ‘எல்லாத்துக்கும் பயப்பட வேண்டியிருக்கு!’ என மனது அலுத்துக்கொண்டது.
கதவைத் திறந்து வெளியே வந்தபோது யாரோ ‘சீக்கா’ அடித்து அழைப்பது போல கீச்சிடும் குரல். அம்மா நிமிர்ந்து பார்த்தாள்.
குருவி! மரக்கிளையிலிருந்தது. தொனியை மாற்றி வேறு ஒரு குரலில் விசிலடித்தது!
“சிட்டுக்குருவி.. சிட்டுக்குருவி.. சேதி தெரியுமா.. என்னை விட்டுப் பிரிந்து போன கணவர் வீடு திரும்பல்லே..”
சட்டென அம்மாவுக்கு அந்தப் பாட்டு வந்தது. குரலெடுத்துப் பாடினாள். மனம் கசிந்தது. தொண்டை நோவெடுத்து அடைத்தது. விக்கித்தது. விசும்பி விசும்பி அழுதாள். அது கணவரை நினைத்தா அல்லது தனது நிலைமையை நினைத்தா என்றும் புரியவில்லை.
மனசு லயித்துப் பாடக்கூடிய நிலைமையிலா நான் இருக்கிறேன்? – ‘பாடக்கூடாது..’ என மௌனித்தாள். ஆனால் அந்தப் பாட்டு திரும்பத் திரும்ப மனதை உலைத்தது. வீட்டுக்குள்ளே எங்கு உலாத்தினாலும்.. கதிரையிற் போய் அமர்ந்தாலும்.. அந்தப் பாட்டு அம்மாவை விட்டபாடில்லை. திரும்பவும் வாய் அசைந்து பாடியது… “சிட்டுக்குருவி…சிட்டுக்குருவி.. சேதி தெரியுமா.. என்னை விட்டுப்பிரிந்து போன கணவர் வீடு திரும்பல்லே….”
‘உங்களை திருத்தேலாது!’ என மகன் அடிக்கடி கூறுவான். அதுதான் அம்மாவுக்கு இப்போது நினைவு வந்தது. ‘இது திருத்த முடியாத கேஸ்தான்!’ அம்மா தன் பாட்டிற் சொல்லித் தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
அம்மாவை ஒருமுறை மனநல வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்கள் மகனும் மருமகளும். வைத்தியரம்மா பல கதைகளையும் விடுத்து விடுத்துக் கேட்டார். அம்மாவும் சந்தர்ப்பம் வாய்த்ததுபோல, தனது கவலைகளையெல்லாம் சொன்னாள். கணவரைப் பற்றிய ஒவ்வொரு நினைகளையும் கூறினாள். அவர் திரும்ப வராமற்போன நாள்… தான் அடைந்த பயம்.. பதற்றம்.. துடிப்பு… அம்மாவுக்கு அழுகை உடைந்து வந்தது. அப்படி ஒருபோதும் அம்மா உரத்து அழுததில்லை.
‘விசரி….. விசரி…. என்று சொல்லுகினம், அவரும் போனபிறகு இந்த விசர் அம்மாதான் இவையளை வளர்த்து ஆளாக்கினது..’
‘உங்களுக்கு ஒன்றுமில்லையம்மா!… நல்லாய்த்தான் இருக்கிறீங்கள்..’ என டொக்டரம்மா கூறினார்: “நான் உங்களை அடிக்கடி வந்து பார்ப்பன்…. கவலைப்படாதையுங்கோ!” அம்மாவுடன் எப்படி அனுசரித்துப் பழகவேண்டுமென பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதெல்லாம் பழைய கதை. அதை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்திருப்பார்களோ தெரியாது. அது பற்றி அம்மாவுக்குக் கரிசனையும் இல்லை. டொக்டரம்மாவும் பிறகு இன்னொருதரம் வந்து கதைத்து ஆறுதல் கூறிவிட்டுப்போனார். அவ்வளவுதான்.. பிறகு வருவதுமில்லை.
‘கிறான்ட்மா..!’ – பேரப்பிள்ளைகள் ஸ்கூல் விட்டு வந்துவிட்டார்கள். அம்மாவுக்கு அடைப்பட்டுக்கொண்டிருந்த மூச்சு விடுப்பட்டு வந்ததுபோலிருந்தது.
“வாங்கோடி! வாங்கோ!…. என்ர செல்லங்கள்!” ஒவ்வொருவராக உடை மாற்றி அவர்களைச் சாப்பிடச் செய்தாள். அவர்களது விளையாட்டுக்களையும் குழப்படிகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதே அம்மாவுக்கு நல்ல பிராக்காக இருக்கும். பேரப்பிள்ளைகளின் துள்ளல்களும், ‘கிறான்ட்மா!’ என அழைக்கும் கொஞ்சும் குரல்களும் அம்மாவின் நோகும் மன உணர்வுகளுக்கு ஒத்தடம் கொடுத்து ஆற்றுவது போலிருக்கும். அப்போதும் கணவரின் நினைவுதான் முன்னுக்கு வரும்.. “அவருக்கு இதுகளையெல்லாம் பார்க்கக் குடுத்துவைக்கவில்லையே!” என மனம் உளைச்சல் எடுக்கும்.
அப்போது அந்தக் குருவியின் குரல்!
மூன்று முறை ஒலிக்கும் அழைப்பு மணி!
அம்மா திடுதிப்பென்று எழுந்தாள். விழுந்தடித்துக்கொண்டு ஓடினாள். பிள்ளைகள் போய் திறப்பதற்கு முன்னர் தானே முந்திக்கொண்டு வாசற் கதவடிக்கு ஒடினாள். நெஞ்சு படபடத்தது. கைகள் தடுமாறிக்கொண்டே கதவைத் திறந்தாள்.
“என்னம்மா…? மனுசன் வந்திட்டாரென்று நினைச்சீங்களோ?”– மருமகள் ஒரு நமட்டுச் சிரிப்புடன் உள்ளே நுழைந்தாள். பின்னே மகன் வாயை மூடிக்கொண்டு வந்தான்.
மருமகள் எப்போதாவது இப்படி விளையாட்டுக் காட்டுவதுண்டு. அப்படி எத்தனைமுறை ஏமாந்துபோனாலும் அந்த அழைப்பு மணியின் சமிக்ஞை ஒலி கேட்டதும், அது கணவராக இருக்குமோ என்ற அங்கலாய்பபுடன்தான் ஓடிச்சென்று கதவைத் திறக்கிறாள் அம்மா.
rajsiva50@gmail.com
(ஞானம் – 2008)