சிறுகதை உயிர்க்கொல்லிப் பாம்பு

நோயல் நடேசன்கடல் சூழ்ந்த மல்லிகைத்தீவில் வடமேல் பருவக்காற்றால் மழை மேகங்கள் கருக்கட்டி இடியுடன் பயங்கரமான மழையும் பெய்தது.மக்களுக்கு மழைக்காலம் எப்பொழுதும் ஆனந்தமானது. பத்துமாதம் எரிக்கும் கோடை, இரண்டு மாதங்கள் விராடதேசத்தில் ஒளிந்த பாண்டவர்களாக தலைமறைவாகும்.
வற்றிய குளங்கள், நிலம் தெரியும் கிணறுகள், புழுதி சிந்தும் நிலங்கள் எல்லாம் நெடுநாளாக தாகத்துடன் பாலைவனத்தை கடந்துவந்த வழிப்போக்கனைப்போல் நீர் வேண்டிக் காத்திருந்தன.

வங்காள விரிகுடாவில் காற்றமுக்கம் என்று வானொலியில் கேட்டபோது அசட்டையாக இருந்துவிட்டார்கள். மழை, வேறு இடங்களுக்கு காற்றால் எடுத்து செல்லப்படுவதை பலவருடங்களாக அறிந்தவர்கள் அவர்கள். ஏற்கனவே கடந்த இருவருடங்கள் திருமணவீட்டு பன்னீராக மாரிகாலம் ஊரைக் கடந்து சென்று விட்டது.

அதிகாலையில் மேற்கு வானில் தொலைதூரத்தில் கருமேகம் தோன்றி கடல் நீரை குழாய்போட்டு இழுத்தபோது, இது மழைக்கான அறிகுறி என நினைத்தாலும் எதுவும் செய்ய நேரமில்லை. மழை பொய்த்தால் கூரைகளை மேய்வதற்கு தவறியவர்கள். பிடித்த மீன்களை உப்புபோட்டு மதியம் காயவைக்கலாம் என்றிருந்த மீனவர்கள் சுதாரித்தாலும் எதுவும் செய்யமுடியவில்லை.

மதியத்தில் வந்த மழை விடாமல் பெய்தது.

ஊரில் எல்லோருக்கும் ஆனந்தம் பெருகியது. கடந்த இரண்டு வருடங்கள் நல்ல மழையில்லாமல் பயிர்கள் வைக்காதவர்களில் சில அவசரக்காரர்கள், இந்த வருடம் பயிரிடமுடியும் என்ற சந்தோசத்தில் தரிசான தோட்டங்களிலும் மற்றும் வீட்டுக்கு பின்புறத்திலும் நனைந்தபடி மாலையில் மண்வெட்டியால் நிலத்தை கொத்தத் தொடங்கினர். பெய்த மழையை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

இரண்டாவது நாள் ஆக்ரோசமாக வானம் திறந்து இடித்தபடி மின்னலுடன் மழை பொழிந்தது. இரண்டு நாள் மழையில் பலரது கிணறுகள் நிரப்பி இருந்த இடம் தெரியவில்லை. ஊர்க் குளங்கள் நிரம்பியதும் வீட்டில் இருந்தபடி வெளியே பார்த்தபடி இருந்தனர். அத்துடன் வெளியூரில் இருந்து போக்குவரத்தில் ஈடுபடும் மோட்டார் படகுகள் நிறுத்தப்பட்டன.

வங்காளவிரிகுடாவில் காற்றழுத்தம் மையம் கொண்டிருப்பதால் மேலும் மூன்று நாட்களுக்கு மழை என திருச்சி வானொலி அறிவித்தது. மீனவர்கள் வாழும் ஊரானதால் அதிகமானவர்களின் முகங்களில் கவலை தேங்கியதால் முகங்கள் ஊர் குளங்களுடன் போட்டியிட்டன.

மூன்றாவது நாள் தரையெல்லாம் வெள்ளம் வந்து வீட்டுப்படிகளை முத்தமிட்டது. ஏதோ பிரளய காலம் என ஆண்கள் பெண்கள் பேசினார்கள். ஏதாவது முக்கிய விடயம் என்றால் மட்டும் முழங்காலுக்கு மேல் நின்ற வெள்ளத்தில் குடையுடன் உடைகளை தூக்கிப்பிடித்தபடி இறங்கினர்.

நான்காவது நாள் கடலும் நிலமும் ஒன்றாகியது போல இருண்ட நீலநிறமான தோற்றம். இரண்டு அடியில் இருந்து நாலு அடிக்கு ஊரெங்கும் கரைபுரண்டது மழை வெள்ளம். கடலின் நீரும் தாழ்வான பல இடங்களில் மழைவெள்ளத்துடன் கலந்தது. உயரமான இடங்களில் இருந்த சுண்ணாம்பு அல்லது சீமெந்தால் அமைந்த வீடுகள் ஒரு சில தப்பின. மண்ணால் அமைந்த கூரைவீடுகளின் அடிப்பகுதியில் மண் கரைந்தபோது கூரைகள் குட்டிபோட குந்திய வெள்ளாடுகள்போல் நிலத்தில் அமர்ந்தன.

கடற்கரையோரத்துக் கிணறுகளில் கடல்மீன்கள் உப்பில்லாத தண்ணீரைக் ருசி பார்க்க வந்துவிட்டன. கடல்நீர் சலித்துப்போன நண்டுகள் அவற்றைப்பின் தொடர்ந்தன.

அதிஷ்டமான வீடுகளில் ஒன்று எங்கள் வீடு. வீடிழந்த பலர் அகதிகளாக எங்கள் வீட்டிற்கு வந்து வாசலில் உள்ள கொட்டகையில் தங்கிவிட்டனர். வீட்டின் இரண்டு அறைகள் மட்டுமே எங்களுக்கு இருந்தன. இதைவிட நாலுகால் பிராணிகளான மாடுகள், ஆடுகள், நாய்கள் எல்லாம் எங்கள் வீட்டு தாழ்வாரத்தில் வரிசையாக ஒதுங்கின. தவளை, ஓணான் ,பாம்பு என்பனவும் தண்ணீர் அற்ற தரையைத் தேடின.

சில வீடுகள் தள்ளியிருந்த மாமியின் குடும்பம் தங்கள் வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததாக சொல்லிக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்தபோது என்னுடன் படித்த மாமியின் மகள் லலிதா வந்து சில மணி நேரத்தில் எங்களது வீட்டின் ஒரு அறையில் தள்ளி மூடப்பட்டாள்.

ஏற்கனவே அவளில் காதல் கொண்டிருந்தேன். அவள் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டாள் என்பதால் தொடர்ந்து மழை பெய்யப் பிரார்த்தித்தேன். என் பிரார்த்தனைக்கு அதிகமாக பலன் கிடைத்தது.
எங்கெல்லாமோ பெய்யவேண்டிய மழை எங்களுரில் பெய்தது.லலிதா ஒரே வகுப்பில் படித்து சிறுவயதிலே இருந்து பழகி வந்தாலும் அவளிடம் எனக்கு சிநேகம் இல்லை. ஆம்பிளை நான், அவள் பொம்பிளை என்ற இளக்காரம் அதிகமான காலம். எப்பொழுதும் அவளுக்கு போட்டியாக இருந்தேன். வகுப்பில் எப்பொழுதும் எனக்கு அடுத்த ராங்கில் வருபவள். கடந்த வருடம் பரிட்சையின்போது புத்தகத்தை விரித்து பார்த்த காரணத்திற்காக எனக்கு அந்தப் பாடத்தில் முப்பது புள்ளிகள்; குறைக்கப்பாவதாக சொல்லியிருந்த எனது பூகோள ஆசிரியரால் நாப்பது புள்ளிகள் குறைக்கப்பட்டு நான் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டேன்.

விளையாட்டாக அதுவரை காலமும் இருந்த போட்டி அதன் பின்புதான் அவளில் எரிச்சலாகியது.
அந்த எரிச்சல் அதிகம் நீடிக்கவில்லை. அவளை மன்னித்துவிட்டேன்.

கடந்த மாதம் நடந்த பாடசாலை நிகழ்ச்சியில் இருந்து வீடுவர இரவாகி விட்டது. வேகமாக நடந்த என்னைக் கூப்பிட்டுக்கொண்டு தொடர்ந்து ஓடிவந்தாள். அவளுக்காக நிற்காமல் வந்த என்னை சில நிமிட நேரத்தில் ஓடிவந்து பிடித்தாள்.

‘ஏன்டா என்னை விட்டு விட்டு வந்தாய்…? அதுவும் கூப்பிட கூப்பிட திரும்பிப் பாரக்காமல்?”

பதில் பேசாது அவளைப் பார்த்தேன். அவளது நெஞ்சு பூமிக்கும் வானத்திற்கும் ஏறியிறங்கியது.

‘உன்னைத் துரத்தியபடி வந்ததால் எனது இதயம் எனது நெஞ்சுக்கூட்டுக்கு வெளியால் வந்துவிட்டது.’

சிரித்தேன்.

‘நீ நம்பவில்லை பார்” என கூறியபடி கையை எடுத்து அவளது இடது நெஞ்சில் வைத்தாள்.

ஏதோ கட்டியாக இருந்து. கையை இழுத்துவிட்டேன்.

இவ்வளவு நாட்கள் அவளில் இருந்த எரிச்சல் மறைந்துவிட்டது. அவளை – அவளது வீட்டில் விட்டுவிட்டு நான் வீட்டிற்கு வந்தேன்.

அதன்பின் நினைவிலும் கனவிலும் லலிதா.

லலிதாவுக்கு எனது திடீர் மாற்றம் புரிந்தது. ஆனாலும் எதற்காக என்று அவளுக்குத் தெரியாது. வழக்கமாக மாங்காய் கடிப்பது பென்சிலைத் தருவது என காலம் கடந்தது. அவளில் அடிக்கடி இடிப்பதும் உராய்வதும் அதிகமாகியது.

ஏற்கனவே பதினெட்டு வயதில் எனது உறவான அண்ணர் ஊரில் இளம் பெண்ணொருத்திமீது காதல் கொண்டிருப்பது பலருக்கும் எரிச்சல்.இந்நிலையில் நான் எப்படி 12 வயதில் என்காதலை வெளிப்படுத்தலாம் என எண்ணிக்கொண்டிருந்த காலத்தில்தான் மார்கழி விடுமுறை வந்தது. விடுமுறைநாளில் ஒவ்வொரு நாளும் லலிதாவின் வீட்டுக்கு சென்றாலும் பாடசாலை நாட்கள்போல் தொட்டுப் பேசமுடியாது. இரண்டு கிழமைகளில் நகரத்தில் போய் படிப்பதற்கு பெரிய பாடசாலையில் எனக்கு இடம் கிடைத்திருந்தது.

லலிதாவை பிரிந்து செல்வது கவலையைக் கொடுத்தது. அந்த விடுமுறைகாலத்தில்தான் இந்த பெருமழை வந்தது. பலரது வீடுகள் அழிந்தன. ஆனால் எனது லலிதா எங்கள் வீடு வந்தாள்.

அவள் மட்டும் அந்த அறையில் இருந்தாள். பகலில் அவளுக்கு விசேட உணவு கொடுப்பதும் கவனிப்பதுமாக இருந்தது. மூன்று நாட்களாக அவளை வெளியே வர அனுமதிக்கவில்லை ஓரு கிழமையாக பெய்த மழை குறைந்து சிறு தூறலுடன் நீடித்தது. ஆனால் வெள்ளம் முற்றாக வடியவில்லை.

மீண்டும் வானொலியில் காற்றோடு கனத்தமழை பெய்ய விருப்பதாக அறிவித்தல் வந்தது. ஒதுங்க வந்தவர்களில் பலர் ஏற்கனவே தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டார்கள்.

அன்று வானொலியில் அறிவித்தவாறு மழை பெய்யாமல் காற்று பயங்கர சத்தத்துடன் வீசியது. தூரத்தில் கடல் அலைகள் ஆர்ப்பரித்தது. சுவரோடு ஒட்டி படுத்திருந்தபோது மெதுவாக ஒலித்த கடிகாரஓசை கேட்டு விழித்தேன். அறைக்குள் இருள். எதுவும்தெரியவில்லை. கூர்ந்து கவனித்தபோது சுவரில் தட்டும் சந்தம் கேட்டது. லலிதாவின் வேலை என நினைத்து அந்த சத்தத்திற்கு எதிராக எனது பக்க சுவரில் தட்டினேன்.

மீண்டும் சத்தம் சிறிது அதிகமாக வந்தபோது வீட்டின் பின்பகுதியில் உள்ள மாட்டுத் தொழுவத்திற்கு சென்றபோது, கால்கள் வெள்ளத்தில் புதைய வீட்டு மாடுகள் நின்றன. அவற்றைக் கடந்து சென்று என்னவென்று யன்னலருகே பார்த்தபோது வைக்கோல் போரில் படுத்திருந்த அடைக்கோழி மிரண்டது.

அதன் சத்தத்தை கேட்டு லலிதா எழுந்து வந்தவள் ‘ அறைக்குள் உழுந்து மணம் மணக்கிறது. பாம்பு வந்துவிட்டதோ என பயமாக இருக்கிறது’ என்றாள்.

‘உள்ளே வரவா? ’

‘உன்னை உள்ளே விட்டால் அம்மா பேசுவா’

‘பாம்பை பார்த்து கலைத்துவிட்டு போறன்”

அவள் கதவை திறந்ததும் உள்ளே அரிக்கன் விளக்கின் மங்கிய ஒளி. அதன் திரியை சற்று உயர்த்தி வெளிச்சத்தைக் கூட்டினாள்.

எனக்கு பாம்பைப் பற்றிய நினைவு மனதில் மறைந்தது. அந்த வெளிச்சத்தில் லலிதாவின் முகம் இருபது வயதுப் பெண்முகம்போல் ஜொலித்தது.

அவள் விளக்கை தரையில் வைத்துவிட்டு எழுந்தபோது அவளது கழுத்து உயரத்தில் நான் நின்றேன் அவளது மார்பகங்கள் செவ்விளனியாக இருந்தன. இந்த மூன்று நாளில் எப்படி இவ்வளவு மாற்றங்கள் நடந்தது?.

தலை நிறைய பட்டாம் பூச்சிகள் பறந்தன. மயக்கம் வருவதுபோல் இருந்தது

வார்தைகள் சிக்கியதால் வாய் பேசாமல் நின்றபோது

‘டேய் உனக்கு உழுந்து மணக்குதா?” என்றாள்.

‘ நல்—லெண்—-ணை வாசம்—தான் வருகிறது-து -து’

‘இந்த இந்த லைட்டை வைத்து தேடிப்பார்,என தந்தபோது, சுதாரித்தபடி அந்த அறையெங்கும் சல்லடையாக்கினேன். கூரை, யன்னல், மற்றும் மூலையில் இருந்த பெட்டிகள் எனத் தேடியபின் கடைசியாக அவள் படுத்திருந்த பாயை எடுத்து உதறியபோது ஓலைப்பாயின் தலைப்பகுதி சுருளில் இருந்து நெளிந்தபடி வெளிவந்த வெள்ளைநிறமான நாகப்பாம்பு திறந்திருந்த யன்னல் வழியே சென்றது.

லலிதா அப்படியே என்னைக் கட்டிப்பிடித்தாள்.

லலிதாவும் நானும் அந்தப் பாம்பைப் பின்பற்றி இரு பாம்புகளாக அந்த யன்னல்வழியாக தொழுவத்தையடைந்தோம். மாடுகள் தலையை நிமிர்த்திப் பார்த்தன. தொழுவத்தின் தென்னோலைக்கூரையில் ஏறிச் சென்றபோது காற்று சத்தமாக வீசியதால் வீட்டின் பின்புறத்தில் நின்ற வேப்பமரத்தின் கிளைகள் சலசலத்தன. தென்னைமரங்கள் போயாட்டமாடின. நாங்கள் இருவரும்; கூரையில இருந்து இறங்கியதும் வீட்டுக்கு வெளியே இருந்த வெள்ளம் இருவருக்கும் வழிவிட்டு விலகி தரையாகியது. எமக்கு முன்னால் சென்ற நாகப்பாம்பு மறைந்துவிட்டது.

வேப்பமரத்தில் ஏறுவோமா?” என்றாள் வலிதா.

சரசர என வேப்பமரத்திலேறி உச்சாணிக்கிளைக்கு சென்று அங்கு இருவரும் பிணைந்து, தீடிரென வந்த காற்றால், இருவரும் நிலத்தில் விழுந்தபோது தண்ணீரில் வெள்ளம் பரவிய இடத்தில் மெத்தென்று இருந்தது. எங்களை கைத்தாங்கலாக ஏந்திய மழை வெள்ளம் மறைந்துவிட்டது. பின்பு அந்த இடத்தில் தண்ணீரில்லை. எங்கள் வயிறின்கீழ் வேப்பமிலைகள் சரசரத்தன. வேப்பமரத்தில் மீண்டும் ஏறிவிளையாடும்போது அங்கிருந்த பறவைகள் படபடத்தன. அவைகளின் வசிப்பிடத்தில் நாங்கள் அத்துமீறியதாக நினைத்திருக்கவேண்டும்.

‘பாடசாலை செல்வோமா??” என்றாள்.

அவளது ஆசையை தட்டாது அங்கு சென்றபோது, ஏற்கனவே மழைக்காக பல குடும்பங்கள் அங்கு ஒதுகியிருந்தனர். பலர் குரட்டை விட்டுத்தூங்கியதைப் பார்த்து சத்தமாக சிரிக்க முயன்றவளை எனது நாக்கை அவளது வாயில்வைத்து தடுத்தேன்.

‘டேய் ரெட்டைநாக்கடா உனக்கு’

‘நாக்கு மட்டுமா?’

முனகியபடி பாடசாலை தாழ்வாரத்தில் என்னைப் பிணைந்தாள் . இருவரும் பிணைந்தபடி நாலு அடி உயரமான சுவரை எட்டிப்பார்த்தபோது தலைமையாசிரியரது அறை தவிர்ந்த சகல இடத்திலும் மனிதர்கள் சுருண்டபடி எங்களைப்போல் பிணைந்தபடியும் படுத்திருந்தனர்.

‘லலிதா படுக்கும்போது மனிதர்களுக்கும் பாம்புகளுக்கும் வித்தியாசமில்லை .

இருவரும் தலைமைஆசிரியரது அறைக்குச் சென்று அவரது கதிரையில் சுருண்டபடி ‘இப்ப என்னில் என்ன மணம்? என்றாள்.

அவளது கூந்தலை முகர்ந்தேன். ‘இப்பொழுது உன்னில் நல்லெண்ணெய் மணம் – என்னில்…?

‘உழுந்து மணம் உன்னில்தான்டா’

——-

அம்மா தட்டி எழுப்பியபோது ‘என்னம்மா அழகான கனவைக் கலைத்துவிட்டாய்?”

‘எங்கடா இரவில் காணவில்லை? ”

‘லலிதாவின் அறைக்குள் பாம்பு சென்றதாக அழைத்தாள். பெரிய நாகப்பாம்பு’

அம்மாவின் முகத்தில் நம்பிக்கையில்லை.

‘நீயும் உங்கண்ணன் மாதிரி வந்திருவாய் போலிருக்கு. அடுத்த கிழமை யாழ்ப்பாணம் படிப்பதற்கு போகிறாய் என்பது நினைவிருக்கிறதா?’

‘இன்னும் இரண்டு கிழமையிருக்கு பாடசாலை தொடங்க.”

‘இல்லை யாழ்ப்பாணத்தில் பெரியப்பா வீட்டில் போய் இருந்து இடத்தைப்பார்’

‘சரி ” எனத்தலையாட்டிவிட்டு மீண்டும் படுத்தபோது ஏதோ சத்தம் கேட்டது. வாரிச்சுருட்டிக்கொண்டு ஓடியபோது எங்கள் வீட்டின் முன்பாக உள்ள வளவில் பாழடைந்து தூர்ந்த கிணற்றருகே சிலர் கூடிநின்றார்கள். அங்கே நான் ஓட என் பின்னால் அம்மாவும் ஓடிவந்தார்.

மழை வருவதற்கு சிலநாட்கள் முன்பாக அங்கு நாயொன்று ஏற்கனவே கிணற்றுக்கருகில் உள்ள சலவைத் தொட்டியில் இரண்டு நாய்குட்டிகள் போட்டிருந்தது. அதில் நாய்குட்டி ஒன்று நாகப்பாம்பின் வாயில் இருந்தது. பின்னங்கால்கள் மட்டும் வெளித்தெரிந்தன. இரண்டாவது நாய்குட்டியை காணவில்லை.

பக்கத்துவீட்டு பெரியப்பா அந்தப் பாம்பை அடித்தார். பெரிய பாம்பின் உடலில் பட்டபோது சவரில் பட்ட பந்துபோல் திரும்பி வந்தது. எந்தக்காயமும் ஏற்படவில்லை.

‘தலையில் அடியுங்கள்” என கூட்டத்தில் யாரோ சொன்னார்கள்.

‘ இந்தப்பாம்புதான் இரவு லலிதாவின் அறைக்கு வந்திருக்கவேண்டும். அங்கும் இரத்தக்கறை உள்ளது. மற்றக் குட்டியை ஏற்கனவே தின்றிருக்கும் என்றார் லலிதாவின் அம்மா.

எனக்கு பயத்தில் நடுக்கமாக இருந்தது.

இன்று மதியம் மோட்டார் வள்ளம் ஓடுமெனக் கூறினார்கள். உனது உடுப்புகளை எடுத்து தயாராக வை பெரியப்பாவும் நீயும் இன்று யாழ்ப்பாணம் போகிறீர்கள் என்றார் அம்மா.

‘இப்பதான் அடுத்தகிழமை என்றாயே?”

‘அப்பதான் நீ சரிவருவாய்’ என்று கையில் பிடித்து இழுத்தாள் அம்மா.

‘அவனால்தான் என்மகள் அந்த உயிர்கொல்லிப் பாம்பிடமிருந்து உயிர் பிழைத்தாள்’ எனச் சொல்லியபடி கட்டியணைத்தார். லலிதாவின் அம்மா.

மாமியிலும் நல்லெண்ணை மணத்தது.

*** *** *****

இரவு தொடர்ச்சியாகப் பெய்த மழையின் சாரல் யன்னலில் அடித்துக் கொண்டிருந்தது. அந்தச் சத்தம் தொடர் வாத்தியம்போல் காதில் இரைந்தபடி இருந்தது. எங்கள் மல்லிகைத்தீவில் மட்டுமா இல்லை இந்த மழை எங்கும் பெய்கிறதா என்ற கேள்வியுடன் எழுந்து அருகில் இருந்த வானொலியை முடுக்கியபோது ‘ விசேட செய்திகள்; காற்றழுத்தம் நீங்கிவிட்டது மீனவர்கள் கடலுக்கு செல்லமுடியும்’ என்று சொல்லப்பட்டது.

uthayam12@gmail