சிறுகதை: உறவுகள் தொடர்கதை

குரு அரவிந்தன் அம்மா தனித்துப் போயிருந்தாள். இடம் பெயர்ந்தபோது பக்கத்து வீட்டு பரிமளம் அன்ரியுடன்தான் அம்மாவும் சென்றதாகச் சொன்னார்கள். பரிமளம் அன்ரிக்கு அம்மா மீது ஒரு வகை பாசம் இருந்தது. அவர்கள் கடைசியாகச் சாவகச்சேரியில் தங்கியிருந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. அப்படி என்றால் சாவகச்சேரி வரைக்கும் அம்மா நடந்துதான் போயிருப்பாளா? விமானக் குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல் என்று தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்த போது தான் அம்மா காணாமல் போயிருந்தாள். உறவுகளைப் பிரிந்து திக்குத் திக்காய் எல்லோரும் ஓடிப்போயிருந்தனர். தெரிந்த இடமெல்லாம் அம்மாவைத் தேடிப் பார்க்கச் சொல்லியிருந்தேன். யாராவது வயது போன பெண்கள் அனாதையாக இறந்து போயிருந்தால் கூட அவர்களைப் பற்றி எல்லாம் விசாரித்திருந்தேன். கனடாவில் இருந்து கொண்டு பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கப்பால் இருக்கும் எனது நாட்டில் அம்மாவைத் தேடுவதென்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை.

அப்போதிருந்த நாட்டுச் சூழ்நிலை காரணமாக என்னால் அங்கு செல்ல முடியாமல் இருந்தது. தேவையில்லாத பிரச்சனைக்குள் ஒருமுறை மாட்டித் தப்பிவந்த எனக்கு அம்மாவைத் தேடி அங்கு செல்லவே பயமாயிருந்தது. எந்தவித நல்ல தகவலும் அம்மாவைப் பற்றி இதுவரை கிடைக்கவில்லை. அம்மா உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்பது தான் இப்போதய எனது எதிர்பார்ப்பாகவும், துடிப்பாகவும் இருந்தது. அம்மா கடைசியாகப் போட்ட கடிதத்தில் கூட தன்னைப் பற்றிச் சொல்லாமல், ‘ராசா, பிரச்சனைகளுக்குள் அகப்படாமல், கவனமாய் இருராசா’ என்று என்னைப் பற்றித்தான் விசாரித்திருந்தாள். கடந்த காலத்தை நினைத்தபோது, எதுவும் நடக்கலாம் என்ற அம்மாவின் பயம் நியாயமானதாகவே இருந்தது.

அன்றொருநாள் வழமைபோல நாங்கள், ஊரிலே இருந்த அந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென ஜீப் வண்டி ஒன்று வந்து நின்றது.  திடுப்பென்று வெளியே குதித்த இராணுவத்தினர் எங்களைத் தாக்கத் தொடங்கினர். தாக்கியது மட்டுமல்ல ஜீப் வண்டியில் ஏற்றித் தங்கள் முகாமிற்குக்; கொண்டு சென்றனர். கேள்விமேல் கேள்வி கேட்டுச் சித்திரவதை செய்த போது அதைத் தாங்க முடியாமல் நாங்கள் துடித்தோம். முகாமுக்குக் கொண்டு வந்த ஒவ்வொருவரையும் அடித்தடித்தே கொன்று குவித்தனர். ஒரு சிப்பாய் எனது தலையில் துப்பாகியால் அடித்த போது நான் மயங்கி வீழ்ந்து விட்டேன். அதன் பின் நடந்தது என்னவென்று எனக்குத் தெரியாது. கண் விழித்தபோது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். எனது மாமா ஒருவர் கலங்கிய கண்களுடன் அருகே நின்றார். என்னை இறந்து விட்டதாக இராணுவத்தினர் நினைத்து, இறுதிச் சடங்குகள் செய்வதற்காகப் பனையோலைப் பாயிலே சுற்றி வைத்திருந்தார்களாம். ஒவ்வொரு முகாமாக அலைந்து திரிந்து விட்டு மாமா அங்கு சென்று விசாரித்தபோது, பாயிலே சுற்றி வைத்திருந்த என்னைக் காட்டி, ‘இவனைத் தெரியுமா?’ என்று கேட்டார்களாம். மாமா அடையாளம் கண்டு கொண்டாலும், என்னைப் பிரேதம் போலவே வெளியே கொண்டு வந்தாராம். வீட்டிற்குக் கொண்டு வந்து பார்த்தபோது உடம்பிலே சூடு இருந்ததாகவும், மெலிதாக மூச்சு வந்ததாகவும் அதனால் வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றதாகவும் சொன்னார்கள். தெரிந்த ஒரு வைத்தியரிடம் மன்றாடி என்னை உயிரோடு தப்ப வைத்ததாகவும் சொன்னார்கள்.

‘அப்பா ஏனப்பா சோகமாய் இருக்கிறீங்கள்?’ பல தடைவ அங்குமிங்குமாய் என்னைக் கடந்து சென்ற மகள் சுருதி பொறுக்க முடியாமல் தயக்கத்தோடு அருகே வந்து கேட்டாள். கடந்த கால நினைவுகளில் இருந்து நான் சுதாரித்துக் கொண்டேன்.

‘இல்லையம்மா, ஒன்றுமில்லை!’ என்றேன்.

சுருதியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு என் அம்மாவின் நினைவு வரும். அம்மாவும் இளமையில் இப்படித்தான் இருந்திருப்பாளோ?
‘காணி பூமியை வித்தெண்டாலும் நீ வெளியாலை தப்பிப் போயிடுராசா, இங்கையிருந்தால் என்ன நடக்கும் எண்டு தெரியாது. எனக்கும் வயசு போயிட்டுது. என்னை நான் பாத்துக் கொள்ளுவன், நீ எங்கே எண்டாலும் போய் நல்லாயிரு ராசா.’ அம்மா இப்படிச் சொல்லித்தான் என்னைப் பிடிவாதமாகக் கனடாவிற்கு அனுப்பி வைத்தாள். யுத்த சூழ்நிலை காரணமாக, வேறு வழியில்லாமல் அவல வாழ்க்கையில் இருந்து தப்பிக் கனடாவிற்குப் புலம் பெயரவேண்டி வந்தது.

பனியிலும் குளிரிலும் காலம் வேகமாக ஓடிவிட்டது. யுத்தம் என்ற போர்வைக்குள் நாட்டிலே ஏதேதோ எல்லாம் நடந்து முடிந்து விட்டிருந்தது. சொந்த மண்ணை மட்டுமல்ல, சொந்த பந்தம் உறவுகள் என்று எல்லாவற்றையும் இழந்த நிலையில் இந்த மண்ணில் நாமிருந்தோம். சாப்பிட வழியில்லாமல் அங்கே அவர்கள் இருந்தார்கள்.

பிரச்சனை இங்கேதான் ஆரம்பமானது. பிறந்தநாள், வருடப்பிறப்பு, கைவிசேஷம் என்று சுருதிக்குக் கொடுத்த பணம் எல்லாவற்றையும் சுருதி சேர்த்துக் கவனமாக வைத்திருந்தாள். அந்தப் பணத்தில் அவளுக்கு விருப்பமானது ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று மனைவி சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘அப்பா. வன்னியிலே உள்ள பிள்ளைகள் எல்லாம் சாப்பிட வழியில்லாமல் இருக்கிறாங்களாம், படிக்க வசதியில்லையாம், இருக்க இடமில்லையாம் இதெல்லாம் உண்மையாப்பா?’ என்றாள் சுருதி.

‘யாராவது சொன்னாங்களா? அப்ப நான் சொன்னபோது நீ நம்பவில்லை, இப்பவாவது நம்பிறியா?’ என்றேன்.

‘ஆமாப்பா, நான் சேர்த்து வைச்ச பணத்தில அவங்களுக்குக் கொஞ்சம் கொடுக்கட்டா?’

‘நிச்சயமா, நல்ல காரியம்தானே! நல்ல முடிவெடுத்திருக்கிறாய்’  என்று அவளை ஊக்கப்படுத்தினேன்.

அன்று முதல் அவளுக்கு இப்படியான நல்ல செயல் திட்டங்களில் நம்பிக்கை இருந்தது. தனது பாடசாலைத் தோழிகளுடன் இணைந்து தன்னால் முடிந்த அளவு உதவிகளைச் செய்தாள். எப்படியாவது ஒரு நாள் வன்னிக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் அவளுக்குள் இருந்தது.
இப்போ ஊருக்குப் போய் வரலாம் என்று சிலர் சொன்னதால், தெரிந்த சிலர் ஊருக்குச் சென்று வந்தார்கள். சூழ்நிலை நன்றாக இருக்கும்போது, ஊருக்குப் போய் வந்தால் என்ன என்ற எண்ணம் முதலில் மனைவிக்குத்தான் ஏற்பட்டது. தனது எண்ணத்தை அவள் வெளிப்படுத்திய போது, நாங்களும் ஏற்றுக் கொண்டோம். அங்கே நேரடியாகச் சென்றால் அம்மாவைப் பற்றி ஏதாவது அறிந்து கொள்ளலாம் என்ற ஆர்வம் எனக்கும், பாட்டியம்மாவை எப்படியாவது கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கை என் மகளுக்கும் இருந்தது. ஆக மொத்தம் எங்கள் இருவரின் நோக்கமும் ஒன்றாகவே இருந்தது.

ஊருக்குப் பாதுகாப்பாய்ப்; போகலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டபோது, நாங்களும் வன்னிக்குச் செல்லத் தீர்மானித்தோம். அதன்படியே அதற்குரிய ஆயத்தங்களைச் செய்து, சுருதியின் பாடசாலை விடுமுறையின் போது குடும்பமாக அங்கே சென்றோம். சுருதியின் பிறந்த நாளன்று அன்பு நெறியினர் புதிதாக அமைத்த இல்லத்திற்குச் சென்று அங்கே தங்கியிருந்த முதியோர், குழந்தைகளுக்கு இனிப்பும் உணவும் கொடுத்தோம். பணம் ஏற்கனவே கொடுத்திருந்ததால், எல்லா ஏற்பாடுகளையும் அவர்களே செய்திருந்தனர்.

சுருதி அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். தானே பெட்டியுடன் கொண்டு சென்று எல்லோருக்கும் லட்டை நீட்டினாள். கனடாவில் பிறந்து வளர்ந்த அவளுக்கு அந்த சூழ்நிலை ஒத்துப் போகுமோ என்ற பயம் எனக்கிருந்தது. ஆனால் சுருதியோ மிகவும் கலகலப்பாகப் பாசத்தோடு அங்கே இருந்தவர்களுடன் பழகினாள். நானும் மனைவியும் எங்களால் ஏதாவது அந்த இல்லத்திற்கு உதவி செய்ய முடியுமா என்பது குறித்துப் பொறுப்பாளரின் அறையில் அவருடன் பேசிக் கொண்டிருந்தோம்.

‘இங்கே பாருங்கப்பா’ என்று எதையோ சொல்ல உள்ளே ஓடிவந்த சுருதி பொறுப்பாளரைப் பார்த்ததும் ஒரு கணம் தயங்கி நின்றாள்.

‘என்னம்மா அவசரம், நாங்க பேசிக் கொண்டிருக்கிறோம், கொஞ்சம் பொறுத்து வா’ என்று மனைவி அவளை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்து விட்டாள்.

அவள் முகம் வாடிப்போனது. ஒருகணம் தயங்கி நின்றவள், பேசாமல் தலையாட்டி விட்டுத் திரும்பிச் சென்றாள். பொறுப்பாளரின் விருப்பப்படியே அங்கே உள்ளவர்களின் ஒரு நேர உணவுக்காகவாவது அவ்வப்போது நிதி சேகரித்து அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துவிட்டு, அவரிடம் விடைபெற்றோம்.

வீடு திரும்பும் போது, சுருதி மீண்டும் எதையோ என்னிடம் சொல்ல வந்தாள்.

‘என்னம்மா?’ என்றேன்.

‘அப்பா அவங்களுக்கு உதவி செய்ய யாருமே இல்லையாப்பா?’ என்று கேட்டாள் சுருதி.

‘இல்லையம்மா, நடந்த யுத்தத்திலே இவங்க எல்லாம் தங்கள் உறவுகளைப் பிரிஞ்சிட்டாங்கம்மா. அதனாலே தான் இங்கே தங்கியிருக்கிறாங்கள்.’ என்றேன்.

‘எங்க பாட்டி போல, வயசு போன பாட்டிங்க நிறையப்பேர் அங்கே இருக்கிறாங்கப்பா!’

‘யாரைப் பார்த்தாலும் எங்க பாட்டி போலத்தான் இருப்பாங்க, தொண தொணக்காமல் நீ இப்ப பேசாமல் இருக்க மாட்டியா?’ என்றாள் மனைவி,
சுருதி சொல்ல வந்ததை மனைவி தடுத்து விட்டதில் சுருதி மனமுடைந்து போனாள்.

மறுநாள் கனடாவிற்குப் பயணமானோம். விமானம் முப்பத்தையாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. யன்னல் கரையில் உட்கார்ந்திருந்த சுருதி திரும்பித் தாயைப் பார்த்து விட்டு, என்னைப் பார்த்தாள். ஏதோ சொல்ல விரும்புகிறாள் என்பது புரிந்தது.

‘என்னம்மா?’ என்றேன். அருகே கோழித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்த தாயை மீண்டும் பார்த்துவிட்டு,

‘அப்பா பாட்டி…’ என்றாள் மெதுவாக.

‘பாட்டியை எங்கை தேடியும் கிடைக்கவில்லையே, எங்களுக்கு அதிஸ்டம் இல்லை. அவ்வளவு தான்’ என்றேன் ஏக்கப் பெருமூச்சுடன்.

‘பட், ஐ ஆம் லக்கி’ என்றாள் சுருதி.

‘என்னம்மா சொல்லுறாய்?’

‘பாட்டியை நான் பார்த்தேனே!’

நம்பமுடியாமல் ஆச்சரியமாய் அவளைப் பார்த்தேன். அப்படி ஒரு சம்பவம் உண்மையிலே நடந்திருக்கக் கூடாதா என்று மனசு ஏங்கியது.

‘ஆமாப்பா எங்க வீட்டுச் சுவரிலே மாட்டி வைச்சிருந்த படத்தில இருக்கிற பாட்டியம்மாவை அங்கே பார்த்தேனப்பா’ என்றாள்.

‘பாட்டியைப் பார்த்தியா?’ சந்தேகத்தோடு வார்த்தையை இழுத்தேன்.

‘ஆமாப்பா, பாட்டி அங்கதானே இருக்கிறா, நான் பார்த்தேனே’ என்றாள்.

‘அப்பாவை அப்செற் ஆக்காதை, உனக்கு யாரைப் பார்த்தாலும் பாட்டி போலத்தான் இருக்கும். பேசாமல் இரு’ என்று தூக்கம் கலைந்தமனைவி எப்போதும் போலக் குறுக்கிட்டாள். விழி மூடியிருந்தாலும் செவி விழித்திருந்திருக்கிறது என்பது புரிந்தது. ‘பேசாமல் இரும்’ என்று மனைவியைத் தடுத்து விட்டு,

‘என்னம்மா சொல்லுறாய்?’ என்றேன் ஆர்வத்துடன்.

‘நான் என்ன சொன்னாலும் அம்மா நம்பமாட்டா என்று எனக்குத் தெரியுமப்பா, அதனால..!’

‘இங்கே பாருங்கப்பா’ என்று அவள் தனது செல்போனை எடுத்து ஐபோன் திரையைக் காட்டினாள்.

முதலில் யாரென்று எனக்குப் புரியவில்லை.

‘வடிவாய் பாருங்கப்பா’ கிட்டக் கொண்டு வந்து ஐபோன் திரையைக் காட்டினாள்.

ஒரு கணம் நான் உறைந்து போனேன். திரையில் அம்மாவின் படம்

‘எங்கே எடுத்தாய், எப்படி இங்கே?’ என்றேன்

‘அங்கதான் பாட்டி இருக்கிறா. அதைத்தான் சொல்ல ஓடி வந்தேன். அம்மாதான் தடுத்து விட்டாவே.’

‘இது பாட்டிதான், பாட்டியோட பேசினியா?’ நான் உணர்ச்சி வசப்பட்டு கேட்டேன்.

‘பேசிப் பார்த்தேன், ஆனால் நான் என்ன கேட்டாலும் எனக்குப் பதில் சொல்லாமல் பேசாமல் இருக்கிறா!’

 ‘ஏன் பதில் சொல்லேல்லை, பாட்டிக்குக் கோபமா?’ என்று கேட்டேன்

‘அவவுக்கு வருத்தமாம், அதாவது வயசுபோயிடிச்சாம், அதனாலே பாட்டியோட நினைவுகள் எல்லாம் மறந்து போச்சாம் எண்டு அங்க இருந்த அக்கா சொன்னவா.’ என்றாள் சுருதி.

‘இங்க பாருங்கப்பா, நான் செல்பியில எடுத்த படத்தை..!’

பாட்டியை அணைத்தபடி சுருதி சிரித்துக் கொண்டிருந்தாள்.

வீடு வந்ததும், முதல் வேலையாக அன்பு இல்லக் காப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்மாவைப் பற்றிய விபரங்களைக் கொடுத்து, அங்கே இருப்பது அம்மாதான் என்பதை உறுதி செய்து கொண்டேன். அடுத்த பயணத்திற்காக, மீண்டும் பெட்டியை அடுக்கினேன்.

‘வந்த களைப்பு ஆறவில்லை, எங்கே அவசரமாகப் பயணம்?’ என்றாள் மனைவி.

‘வன்னிக்கு..!’ என்றேன் நிதானமாக. அவளுக்குப் புரிந்திருக்கும்!

எங்கே இருந்தாலும், உறவுகள் என்றுமே தொடர் கதைதான்…!

kuruaravinthan@hotmail.com