சிறுகதை -”எங்கேயும் மனிதர்கள் “

கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்)விடிந்தால் பயணம். வீடெல்லாம் மாய்ந்து மாய்ந்து தேடியாகி விட்டது. கிடைப்பேனா என்று ஆலவட்டம் போட்டது அந்த புத்தகம். வீட்டிலுள்ள நூல்நிலைய அடுக்குகளின் மூலை முடுக்கெல்லாம் கூட தேடியாயிற்று. காணவே இல்லை. அண்மையில் எக்ஸ்போவில் நூலக வாரியம் நடத்திய புத்தக விற்பனையில் சுமக்க முடியாமல் சுமந்து வாங்கிக்கொண்டு வந்த புத்தகக்குவியலில்,பொன் போல் பார்த்துப்பார்த்து தெரிவுசெய்த புத்தகங்கள் எல்லாமே இருந்தன. ஆனால் இந்த பூம்பட்டு புத்தகம்  மட்டும் எங்கே போனது என்று தெரியவில்லை. .சுமிக்கு எரிச்சல், கோபம், எல்லாமே தன் மீதுதான். எதிலுமே பொறுப்பில்லை, எதிலுமே கவனமில்லை, என்ன குணமிது ?  கணவர் மாதவனின் திட்டுதல் கூட தப்பில்லையோ ? கவலையும் பரபரப்புமாய் லக்கேஜுடன் சாங்கி விமான நிலையத்தில் நின்ற போதும்  சுமிக்கு,  தோள் பையில் அந்தர்தியானமாகிப்போன புத்தகம் கொண்டுவரமுடியாமல் போன ஏக்கம் தான். அந்த கவலையோடே கணவரைப் பார்த்தபோது மாதவனுக்கு  சிரிப்பு வந்தது. இவளைத் தெரியாதாக்கும்.! என்னமோ சந்திர மண்டலத்துக்குப்போவதுபோல் படபடப்பும் , கண்ணீர் விடுதலும். இந்தா இருக்கும் கேரளா .  கண்மூடி கண் திறப்பதற்குள் விமான நிலையத்தில் போய் இறங்குவாள். மாநாட்டாளர்களை வரவேற்பதற்காகவே வந்து நிற்கும் காரில் ஏறிப்போக வேண்டியதுதான். அரங்க வளாகத்துக்குள் போய் விட்டால் பிறகு, இவள்தான் சுமி என்று  யாராவது சொல்லமுடியுமா? உலகமே சாஹித்யம், சர்வமும் இலக்கியம் என மெய்ம்மறந்து நிற்பவளாயிற்றே ? அரைக்கண் உறக்கத்தில், ஏதோ  ஊர்ந்திடும் தொடுகை உணர்ச்சியில் பதறிக்கொண்டு கண் விழித்தால், இருக்கை வாரை  ஞாபகப்படுத்துகிறாள்  விமானப் பணிப்பெண் . அப்போதுதான் ஆகாயத்தில் பறந்து கொண்டிருப்பதே நினைவில் உறைத்தது. அட,  அதற்குள் கேரளா வந்து விட்டதா? தூக்கக் கலக்கத்தினின்று முற்று முழுதாய் விடுபட்டு விட்டாள். குளித்து, ஜெபித்து,நாமம் சொல்லி, வெளியே வந்தால் மழைச்சாரல் இன்னும் விடவில்லை.

கேரளத்தில் கால் வைத்த நிமிடத்திலிருந்தே மழைதான். இரவெல்லாம் அப்படி  பொழிந்து தள்ளியது.விடியலிலாவது சற்றுமட்டுப்படும் என்று எண்ணிய கனவு பலிக்கவில்லை. கோழிக்கோடு விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியே வந்தபோது , கூந்தலிலிருந்து ஈரம் இன்னும் சொட்டிக்கொண்டிருந்தது. பல்கலைக்கழக வளாகம் அருகில்தான். ஆனால் அதற்குமுன்னர் காலை உணவுக்கு செல்லவேண்டும். எங்கே, எப்படி, எந்தபக்கம் போக, என்று ஒருவினாடி திகைத்து நிற்க, ” நமஸ்காரம் சேச்சி,   சுமி ஃப்ரொம் சிங்கப்பூர் , தானே ? என்று கணீர்க்குரலில்  எதிரில் வந்து நின்ற இளைஞன், லண்டலிருந்து வந்த நாடகாசிரியன் பிரகாஷ் கோரன்.

முதல் நாள் இரவு விருந்தில் பரஸ்பரம் அறிமுகம் செய்விக்கப்பட்டபோது பார்த்த ஞாபகம் இருந்தது. தலித்திய சமூகத்தில் பிறந்து , கஷ்டப்பட்டு படித்து, முன்னேறி ,இன்று லண்டனில் நாடகவியல் ஆசிரியராகவும்,சுய கலைக்குழு பிரமாணியாகவும் வாழும் கோரன் கேரளத்தை மிகவும் நேசிப்பவன்.தாய்நாட்டின் ஏக்கம் காரணமாகவே எல்லா இலக்கிய நிகழ்விலும் தவறாது கலந்துகொள்பவன். ’மண்பாசத்துக்கு நான் அடிமை சேச்சி,   என்றவன்,  ” காலை உணவுக்குப்போக வேண்டிய வழி இந்த பக்கம் !” என்று சுமியோடு சரளமாக பேசிக்கொண்டே காலை உணவை சுவைத்தான்.மணிப்பிட்டும் கடலைக்கறியும், பப்படமும் கூட்டி அவன் ரசித்து உண்டான்.

சுமிக்கு பிட்டுக்கு வாழைப்பழமும் சர்க்கரையும் தான் பாந்தம்.அங்கு கதலிப்பழம் இருந்தது. சர்க்கரை தீர்ந்து போயிருந்தது. உடனே உப்பி அழகாய் அடுக்கப்பட்ட பால் அப்பம், கண்ணில் பட  நாளிரம் சட்டினியும், பொடிமணலாய் உருக்கிய  நெய்யும்,அருகிலிருந்த தேன் சிறிதும் ஊற்றி, மனம் கனிந்து சாப்பிடத்தொடங்கிய போது சிங்கப்பூர் ஞாபகம் வந்தது. கணவர் இந்நேரம் காலையாகாரம் சாப்பிடிருப்பாரோ,என்ற கவலை ஆக்கிரமிக்க, இந்த கவலையே கணவருக்குப் பிடிக்காது என்ற நினைப்பு வர, சுவையான  பால் அப்பத்தை கையிலெடுத்தாள். அப்பம் சாப்பிட்டு கடுப்பம் சாய சுடச்சுட குடித்தபோது , பலரும் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். உற்சாகமாக அரங்க வளாகத்தினுள் நுழைந்த போது தாலப்பொலியும், செண்டை கொட்டும் ,குரவையுமாய்,படைப்பாளிகளை  வரவேற்ற பாங்கு நெஞ்சில் பாகாய் இனித்தது. அதைவிட மகிழ்ச்சி பார்க்குமிடமெல்லாம், நுனியில் முடிச்சிட்ட ஈரக்கூந்தலும், நெற்றியில் கோபிச்சந்தனக்குறியுமாய், கஷவு முண்டும் நேரியலுமணிந்த பெண்களும், வெள்ளை வேஷ்டியும், முழுநீள ஷர்ட்டும் அணிந்த ஆண்களுமாய் , எங்கும் வியாபித்திருந்த மலையாள  மணம் காணக்காண கண்களுக்கு தெவிட்டவேயில்லை..

சிங்கப்பூரிலேயே   சுமி முண்டு அணியும் பழக்கம் உள்ளவள் தான்.பாரம்பரியமும் கலாச்சாரத்திலும் அவளுக்கு அப்படி ஒரு பித்து. அதனாலேயே  ” சிங்கப்பூரிலிருந்து வரும் சேச்சியை இப்படி  முண்டு செட்டில் எதிர்பார்க்கவில்லை, !”என்று பிரகாஷ் கோரன் வியந்ததை அவள் பொருட்படுத்தவில்லை. அதற்குள் முல்லைப்புள்ளி  நம்பீசன் வந்துவிட்டார் என்றறிந்து அவையே எழுந்து நிற்க,கோபத்துடன் ,இந்த மரியாதையே  எனக்குத் தேவையில்லை,”என அனைவரையும்  அமரச் சொல்லிவிட்டு, மேடையில் அவருக்காக இருந்த இருக்கையில் அமராமல் ,சக படைப்பாளிகளோடு வந்தமர்ந்தவரை வியந்துபோய் பார்த்தாள் சுமி.  பொல்லென்று வெளுத்த தலைமுடியும்,கம்பீரம் மாறாத தோற்றமுமாய் சிவந்த நிறத்தில் கையெடுத்து வணங்கத் தக்கவராய் நம்பீசன் அமர்ந்திருந்தார். சுமி  பக்தியில் சிலிர்த்துப்போய் அவரையே பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.எத்தனை ஆண்டுகளாக இந்த மாமனிதரை சந்திக்க இவள் ஏங்கியிருக்கிறாள். தமிழின் மிக முக்கிய ஆளுமைகளை சந்தித்தபோதெல்லாம் அவர்கள் ஆவலுடன் விசாரிக்கும் மலையாளப் பெயர் முல்லைப்புள்ளி நம்பீசன் பற்றி மட்டுமே. சிறுகதை,நாடகம், நாவல்,கவிதை,ஆய்வு, என அவர் தடம் பதிக்காத துறையே இல்லை, சினிமாவிலிருந்து வந்த அழைப்புக்கு  மட்டும் அவரை அசைக்க முடியவில்லை. என் களம் சினிமா அல்ல, என்று ஒற்றை வீச்சில் மறுதலித்தவர்.இவர் பெயர் தவிர்த்த ஒரு ஆய்விலக்கியம் , மொழியியலில் எழுத முடியுமா எனுமளவுக்கு அழுத்தம் திருத்தமாய் பெயர் பதித்தவர்..

இந்த நிகழ்வில் மிகப்பெரிய பெருமிதமே நம்பீசன் சார் தான்.அவர் தான் சிறப்புரையாளரும் கூட. அவரது சிறுகதை “யக்ஞம்”  வாசித்த அனுபவத்தை சுமியால் இன்றும் மறக்க இயலாது. பரிதவித்து அழுதிருக்கிறாள்.பெண்மையின் மாதுர்யம், மோனம், முணுமுணுப்பு, தாபம் என ,இதையெல்லாம் கூட , இவ்வளவு சூட்சுமமாய் ஒரு ஆண்மகனால் எழுத முடியுமா என்று விக்கித்துப்போயிருக்கிறாள்.அதுவே அறிவியலில் அவரது கதைஞானம் இதுவரை எந்த வித்தகனுமே முயன்றிராத அசாத்யம். சமூகப்பிரக்ஞை, சமுதாய சிந்தனை எங்கே என்று அலட்டும் பிரமுகர்களின் கேள்விக்கும் அவரது  முத்தான ஒரு நாடகத்தில் வேள்வியாய் பதிலடி கொடுத்திருந்தார்.கவிதையோ சொல்லவேண்டாம். நம்பீசன் அப்பட்டமான புதுக்கவிதை கவிஞர் . அதனால் அவருக்கு மரபுக்கவிதை எழுதத் தெரியாது என்றல்ல.சொற்கள் ஒவ்வொன்றும் கண்ணிலொற்ற வேண்டிய சொற்சிலம்பம்.  அனைத்தும் மறந்த ஸ்தம்பிதத்தில் உதிப்பதல்லவா கவிதை? பேரிலக்கியங்களே பக்குவம், முதிர்ச்சி என கனமாக முரணில் பரிமாணம், என முரசு கொட்டும் வேளையில்,சர்வதேச இலக்கிய அபிமானியாக., அக்கறையும், ரசனையும், கவலையுமாக , அருமையாக எழுதும் இவரது கவிதைக்கு சுமி ரசிகை மட்டுமல்ல. பரம பக்தையானதே  இதற்குப்பிறகுதான். அப்படியிருக்க அவரது ஆய்வுகள் பற்றி பேசவும் வேண்டுமா? நாவல் வெளியில் மையத்தை சுழற்றிப்போடும் அகண்ட பிரவாகத்தில் அவரது மொழி சஞ்சரிக்கும் உள்தள  விரிவின் கட்டுமானம், சொற்கள் நிரம்பி வழியும் நாவல்களில் கூட சாத்தியமில்லை,என சுமியே தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் கொண்டாடியிருக்கிறாள். அதனாலேயே இவருக்கு முன்னால் கட்டுரை வாசிப்பதை நினைக்க ஒரு கணம் பெருமிதமாகக் கூட இருந்தது.

வழக்கம்போல் பொன்னாடை இல்லை, பூமாலை இல்லை.அவரவர் இருக்கையில் அமர்ந்ததும் , சொல்லி வைத்தாற்போல் நிகழ்ச்சி ஆரவாரமே இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கியது . அறிமுக உரைக்குப்பின்னர், எந்த பந்தாவுமே இல்லாமல் நம்பீசன் மேடையேறினார். செம்பொருள் அங்கதம் செப்பிடச் சொல்வதென்றால் அற்புதமான உரை.  பேறு பெறல் வேண்டும் இத்தகு உரைகளைக் கேட்க. அவ்வளவு அருமையாக புனைவிலக்கியம் பற்றி தெள்ளத் தெளிவாக ,அமைதியாக, கனிவாக விளக்கினார். சபையே பக்தி சிரத்தையோடு அவர் மொழிவெளியை உள் வாங்கியது. அடுத்து ரத்னச்சுருக்கமாய்  பேசி கட்டுரையாளர்களை மேடையேற்றினார் நிகழ்வாளர். முதல் அமர்வு முழுக்க முழுக்க நாடக அமர்வு. பிரகாஷ் கோரன், சிற்றம்பல வாசு, நாகம்பொற கோபாலகிருஷ்ணன், என கட்டுரை வாசித்தார்கள். நிகழ்ச்சியின் கட்டுரைகளே முத்திரைப்பொன்னாக  வெண் சாமரம் வீசியது உற்சாகமாக இருந்தது. இடைவேளை தேநீருக்குப்பிறகு இரண்டாவது அமர்வில் மூன்றாமவளாக  சுமியின் கட்டுரை . ”சிறுகதைத்துறையில் கதை கூறு திறன் “ என்பது தலைப்பு . பெயர் விளிக்கப்பட்டதும் ஜம்மென்று போய்  மைக்கைப் பிடித்தாள் என்றெழுதினால் அதைவிட அபத்தம் வேறில்லை. மேடை சிணுக்கம் இல்லை என்றாலும் கூட சிகரமாய் நம்பீசன் சாருக்கு முன்னால் சிறப்பாக  பேசி முடிக்க வேணுமே எனும் கவலை இருந்தது. எல்லாம் மைக்கை பிடிக்கும் வரைதான். சுமி  தன்னளவில் தெளிவாக இருந்தாள்.

அழகியல் கோட்பாட்டிலிருந்து, ஆழ்மனப்படிமத்தில் மீ யதார்த்தம் , மாஜிக்கல் ரியலிசம்,என அ -புனைவில் வரும் இன்றைய அனைத்துப்பார்வையும்  அலசல் பார்வையில் கொண்டு வந்தாள். தோற்றநிலை மெய்ம்மையில்[virtual reality]யில் வாசகனைத் தீவிரமாக வாசிக்கச்செய்யும் முயற்சிக்கு படைப்பாளியின் பங்கு என்ன என்பதை கட்டம் போட்டு விளக்கத் தொடங்கினாள். ஒருமைப்பார்வையில் ஊடுருவல், படர்க்கைப்பன்மையில் மேலோட்டம்,ஒரு வாக்கியத்திலிருந்து இன்னொரு வாக்கியத்துக்குமிடையே வரும் ஒற்றைச்சொல்லாடலில் நுட்பம்,என கதை  எடுத்துரைக்கும் திறனையும் விளக்கினாள்.படைப்பூக்கத்துக்கு பாத்திர வார்ப்பு என்பது முக்கியமெனில் கதையுள் மொழியுலகம் உள்ளீடற்ற ஊடுருவமல்லவே. எள்ளல், அன்பு,முதிர்ச்சி, நுண்பார்வை, எனப்பல தளங்களில் உருவகத்தைத் தேடுவதுதானே வாசகனின் வேலை, புதுப்பரிமாண புலப்படலுக்கு வாசகன் முனைந்து  தேடவேண்டிய கதைக்களன் எது ? –, என , இப்படித் தொடர்ந்த கட்டுரை வாசித்து முடித்து, சுமி  அமர்ந்தபோது மிகவும் திருப்தியாக இருந்தது.அடுத்த பத்தே நிமிடத்தில் மதிய உணவுவேளை வந்துவிட்டது.

நம்பீசன் சாரைச்சுற்றி கூட்டம் அலை மோதியது. ஆனாலும் சிலர் நாசுக்காய் மட்டுமே அவரை நெருங்கினார்கள் . ஆச்சரியமாக அவரே சிலரையெல்லாம் அழைத்துப் பேசினார்.அவர்களது கட்டுரை பற்றியும் கூட சிலாகித்தார். சுமியிடமும் அன்பு கனியக்கனிய அவர் பேசினார். பிள்ளைத்தமிழ்  கேட்ட பக்தன் போல்,அகவல் கேட்ட அன்பன்போல், கலிங்கத்துப்பரணி கேட்ட கண்ணப்பன்போல், அவர் பேசப்பேச , நாத்தழுதழுக்க, சிலிர்த்துப்போய் நின்றாள் சுமி. அப்பொழுதுதான் வேகமாக அங்கு வந்த பிரகாஷ் கோரன் நம்பீசன் சாரிடம் நெருங்கி ஏதோ கேட்க முற்படுவதைக் காண முடிந்தது. அவர் கவனிக்கவில்லையா? இல்லை, அப்பொழுதுதான் உணவு ஞாபகத்துக்கு வந்ததோ ? , சடாரென்று திரும்பி  அழைத்தவர்களின் பின்னால் வேகமாக நடக்கத்தொடங்கிவிட்டார். கிட்டத்தட்ட ஓடி அவரை நெருங்க கோரன் முயற்சித்தது நடக்கவில்லை. ஆச்சரியம். உணவு முடிந்து வரும்போதும் பிரகாஷ் கோரன் அதே இடத்தில் நின்றுகொண்டு அவரை எதிர்கொள்ளப் போனது தான். அப்பொழுதும் நம்பீசன் கண் கொண்டாரில்லை. உபசாரத்துக்கு வந்து கொண்டிருந்த ஏற்பாட்டாளர் வர்மாவுடனேயே  ஏதோ தீவிரமாகப்பேசிக்கொண்டே போய்விட்டார். செவ்விலக்கியம்  வழுவாது சொல்வதென்றால் பிரகாஷ் கோரனின் முகம் பூத்து வெளிறியது என்றே சொல்லவேண்டும் .ஆனால் பத்தரை மாற்றுக்குறையாத கார்மேகக் கண்ணனின் அழகு நிறம் கொண்டவர் பிரகாஷ் கோரன் என்பதால் அந்த முகத்திலிருந்து எந்த உணர்வையும் கண்டு கொள்ள முடியவில்லை. ஒருவேளை நம்பீசன் வேண்டுமென்றே கோரனை தவிர்க்கிறாரோ ? ஏன் ? சுமிக்கு நம்ப முடியவில்லை. ஏன் நம்பீசன் கோரனை அலட்சியப்படுத்துகிறார், என்பது எவ்வளவு யோசித்தும் புரியவில்லை. மதியத்துக்கு மேல் கவிதை  அரங்கம். அங்கும் இரண்டாமவராக பிரகாஷ் கோரன் கட்டுரை வாசித்தார்.வசனக்கவிதை குறித்து இப்படி விளக்கினார். வசன கவிதைக்கும் தளையுண்டு, மோனமுண்டு, உருவகமுண்டு,அலங்காரம், ரிதம், என எல்லாமுமாக கருத்தின் வேகம் சொல்லில் தட்டினால்தான் வசன கவிதைகூட முழுமை பெறும் , என நீண்டது அவரது கட்டுரை.ஏனோ இவ்விடத்து சுமிக்கு மு.மேத்தாவின் தமிழ்க் கவிதைதான் ஞாபகத்துக்கு வந்தது.

இலக்கணச்செங்கோல், யாப்புச் சிம்மாசனம். எதுகைப் பல்லக்கு, மோனைத்தேர்கள், தனிமொழிச்சேனை, பண்டித பவனி

இவையெதுவும் இல்லாத கருத்துக்கள் தம்மைத்தாமே ஆளக் கற்றுக் கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை, ”என்றிட்ட வரிகளை ஆங்கு கோடிட முடியவில்லை. ஆனால் தன்னுடைய கட்டுரையில் சுமி முழுக்க முழுக்க ஆற்றூர் ரவிவர்மா, அய்யப்ப பணிக்கர், போன்றோரின் கவிதைகளையே மேற்கோள் காட்டினாள். கவியரங்கம் முடிந்திட , இலக்கியக்கலந்துரையாடல் அதிரூபகரமாய் மிகவும் எதிர்பார்ப்போடே நிகழ்ந்தேறியது. வாசகர்கள் மட்டுமின்றி படைப்பாளிகளும் கூட கலந்துகொண்டது அவ்வளவு நிறைவாக இருந்தது.நம்பீசன் சாரே பல கேள்விகட்கும் ரசித்து பதில் கூறினார்,. சுமியை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளில் முக்கியமான கேள்வி,” ஆசை பற்றி அறையலுற்ற” கவிதையில் படிமம் எங்கே என்பதுதான் ?  சுமி நிறுத்தி நிதானித்து விளக்கினாள். வசனமாகட்டும்? வரிகளாகட்டும்? எதுகை, மோனை, சந்தத்தால் கிட்டிய ஸ்தூல நிலையிலிருந்து சூட்சும நிலைக்கு உயர்த்தக்கூடிய கவிதையில் சொற்களைத் தொடுக்கும் ஜாலமே வாசகனை சிந்திக்கத் தூண்டுமாயின் அந்த படிமம்தானே கவிதையின் ஊற்றுமுகம்.அதைவிட படிமத்துக்கு வேலை என்ன ? அதற்குள் ஆங்கிலத்திலும் விளக்கம் கேட்கப்பட முத்துக்கொட்டிய வரிகளாய் வந்து விழுந்தது சுமியிடமிருந்து  இப்படி–
 
” The reader who is illuminated is, in a real sense the poem !”
 
கை தட்டி  ஆர்ப்பரிக்காவிடினும் அடுத்த கேள்வி அதிவிட கூர்மையாய் வந்தது. உடனே  பிரகாஷ் கோரன் கவிதையில் மடித்துப்போடும் லயம் பற்றிப்பேசிய விளக்கமாய் பேசியது மிகவும் நிறைவாக இருந்தது. கேள்விகள் தொடரத் தொடர கோரன் மகிழ்ந்து உரையாடிக் கொண்டிருக்க நம்பீசன் சார் ஏனோ எழுந்து விட்டார். அதற்குள் மாலையாகிவிட்டது. அவரவரும் அறைக்குத்திரும்ப, உடன் வந்த கவிதாயினி ராஜலெட்சுமி அந்தர்ஜனம் கோரனின் கவிப்புலம் பற்றிப்பேசினார். இந்த நூற்றாண்டின் அருமைமிகு கவிஞன் கோரன் என்ற அந்தர்ஜனத்தின் மதிப்பீடை அப்படியே ஏற்றுக்கொள்வதில் சுமிக்கு ஆட்சேபனை இருக்கவில்லை. இப்படிப்பட்ட  கோரனிடம்  நம்பீசன் சாரின் அலட்சியம் என்னவாயிருக்கும் என்று  அந்தர்ஜனத்திடம் கேட்கலாமோ என்று கூடத்தோன்றிவிட்டது. அதற்குள் வேறொரு அன்பர் சுமியிடம் பேச வர , நேரமிருக்கவில்லை. இலக்கியம், இசை என வாழுமிடத்து இறைமை பூரணமாய்  சூழ்ந்திருக்கும் என்பது ஐதீகம். ஆனால் மனிதர்கள்… ? ஹ்ம்ம். அமர்க்களமாக இரவு விருந்துக்கு  தயாராகி விருந்து மண்டபத்தில் சுமி வந்து சேர்ந்தபோது எதிரே வந்த கோரன் எங்கோ வேகமாய் ஓடிக்கொண்டிருந்தார். சில நிமிஷங்களுக்குப் பிறகு மீண்டும் ஏதோ பொதிபோல் எடுத்துக்கொண்டு ஓடினார் .சுமிக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.  அதற்குள் இரவுவிருந்து தொடங்கிவிட்டது. உணவு வகைகளில் எல்லாமே சப்பாத்தி, பூரி, குழலப்பம், வாட்டிய தோசை, கல்தோசை, வெந்தய தோசை, மணிப்பிட்டு , இடியப்பம்,என்றே நிரம்பி இருந்தது, கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. இரவில் ஒருபிடி சாதமாவது இல்லையென்றால் இரவில் கண் அடையாது சுமிக்கு. வேறுவழி, ?  உலகிலேயே சுமிக்குப்பிடிக்காத  ஒரு உணவுவகை உண்டென்றால் அது சப்பாத்திதான்.சப்பாத்தி சாப்பிடுவதைவிட பட்டினி கிடக்கவும் அவள் தயார். சூடு சாயையும்,  சுடச்சுட தட்டில் வந்து விழுந்த நெய்மினுங்கும் வாட்டிய தோசையில், உள்ளிச் சட்டினியைத் தொட்டு, மெல்ல பிட்டு சாப்பிடத்தொடங்கியபோது , ஆண்கள் கையில் மதுவோடு பொறித்த கோழியும்  ,வறுத்த துண்டம் மீனுமாய்,  உல்லாசமாகப் பேசத்தொடங்கிவிட்டாரகள். மினுமினுவென  அவர்கள் பரவசம்  பார்த்துக்கொண்டே  சுமி, வாசல் பக்கம் வந்தபோது கோரன் சிரித்த முகத்தோடு வந்து கொண்டிருந்தார்.

”தவிடு ஒத்தடம் கொடுத்தால் எந்த ஆஸ்துமாவும் ஒரு நிமிடமாவது நின்று நிதானித்து , அப்படியே வந்த வழியே ஓடிப்போய்விடும், என்பது எந்த கிராமத்தானுக்கும் தெரியுமே ?இன்று லண்டனில் வாழ்ந்தாலும் , ஒரு காலத்தில் கிருஷியிலும் காட்டிலும் வளர்ந்தவன் தானே நான், !எனக்கெப்படி தெரியாமல் போகும்? இதற்காக போய் மருத்துவரிடமெல்லாம் போகவேண்டிய அவசியமென்ன ? என்று சர்வ சாதாரணமாக கோரன் கேட்க,  மனமுருக, கோரன் அப்படியே அந்த பேச்சை தவிர்த்தார். ”இதை இத்தோடு விட்டு விடுங்கள் சார்,பாவம் நம்பீசன் சாருக்கு இந்த தகவல் வெளியே கசிந்தாலே கஷ்டமாயிருக்கும், நீங்கள் போய் அவருக்கு துணையிருங்கள், அரை மணிநேரத்துக்குப்பிறகு அவரை விருந்துக்கு அழைத்து வரலாம். ஒன்றும் ஆகாது.கவலைப்படவேண்டாம்.” சுமி விருந்து மண்டபத்துக்குள் வேகம் வேகமாக நடந்து வரும் கோரனைக் கவனித்தாள். கோரன் இவளைக் கவனிக்கவில்லை. கோரன் கிட்டே வந்தாலே  “ தீண்டல் “என பகலெல்லாம் கோரனை அப்படிப் புறக்கணித்த நம்பீசன் சார் எப்படி இதை அனுமதித்தார் ? நெஞ்சில் ,தவிட்டு ஒத்தடத்தை கோரன் அன்பொழுக ஒத்திக்கொண்டிருந்தபோது, நம்பீசன் சாரின் திருமுகம் எப்படி இருந்திருக்கும்?  பழி கரந்து சுரந்த கருணையை காணும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டதே ? சலனமற்ற முகத்தோடு  பிரகாஷ் கோரன் இவளைக் கடந்து போய்க் கொண்டிருந்தான் .

kamaladeviaravind@hotmail.com