சிறுகதை: எழுத்தாளர் காபெக்தனை பற்றி

சிறுகதை வாசிப்போம்~ வாருங்கள்!– இந்த கதை போர்ஹேவின் அல்முட்டாசின் ஒர் அணுகுமுறை எனும் சிறுகதையின் வடிவத்தை தழுவி எழுதப்பட்டது. –


நாயின் தலை குதிரையின் உடலை உடைய விலங்குகளை பற்றி யோசித்திருக்கிறீர்களா ?

நேற்று ஒன்றை பார்த்தேன் அமேஸ் காடுகளில்.அதை பற்றி எழுதியே ஆகவேண்டும் என தோன்றியது . நல்ல கறுமையான முகம்.எச்சில் வடியும் நாக்கு.அந்த நாக்கை எப்போதும் சூழ்ந்திருக்கும்  காற்று. அதன் உடலை பார்த்தால் ஏற்கனவே நான் பார்த்த மனிதத்தலை குதிரை உடல் உடையவர்கள் நினைவுக்கு வந்தனர். ஏற்கனவே போர்ஹே நீலப்புலியை பற்றி சொல்லியிருந்தார். என்னுடைய நெருங்கிய நண்பரான காஃப்கா மனிதன் பூச்சியானதை சொன்னதும் நினைவுக்கு வந்தது . கனவு பதிப்பகத்தில் சமீபத்தில் தான் “புனைவாக்கத்தின் நனவு – காபெக்தன் ” எழுதிய புத்தகம் நினைவுக்கு வந்தது.

அதில் காபெக்தன் இவ்வாறு எழுதுகிறார்.அந்த கட்டுரையின் முக்கியமான பத்தி,

“புனைவில் இருந்து புனைவை உருவாக்கியவன் கற்றுக்கொள்கிறான். யூத இனவதை முகாம்களின் ஒவ்வொரு கட்டமைப்பிலும் யூதர்களை அழிக்க நினைத்தவரின் வார்த்தைகள் செங்கற்களுக்கு பதிலாக உள்ளது. புனைவின் மிருகங்களை எதிர்த்து ஒரு நாள் நாம் போராட வேண்டியிருக்கும். இந்த கட்டுரையை காபெக்தன் ஆன நான் ஏற்கனவே அலஸ்காவின் அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளேன் .புனைவின் மிருகங்களால் பலியானோரின் எண்ணிக்கை ஏழாயிரம் என இனஸ்கோவின் அறிக்கை சொல்கிறது.”

கண்டிப்பாக இந்த கட்டுரையை நாம் மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.காபெக்தன் கண்டிப்பாக நம் சூழலால் பாராட்டத்தக்க ஆசிரியர். இந்த நாயின் தலையும் குதிரை உடலையும் உடைய விலங்கு மனித இனத்திற்கு ஏதாவது தீங்கு செய்யுமா என ஆராய வேண்டும் என்ற கோரிக்கையோடு அமெஸ் காடுகள் அமைந்திருந்த கிசிலிடியா என்ற மாபெரும் வளங்கள் பொருந்திய தேசத்தின் அதிபர் தாஸ்காம்காவை சந்திக்க போயிருந்தேன். சிவப்பு கொடிகளை பிடித்துக்கொண்டு கழுத்தில் தங்க செயின் அணிந்தவாறு ஒரு கூட்டம் வறுமைக்கு எதிராக போராடிக்கொண்டிருந்தது.

 

நான் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டே செம்பாறைகளால் செதுக்கப்பட்ட  மாளிகையின் வெளியே அமர்ந்திருந்தேன். ஒருவர் மிடுக்காக கையில் காபெக்தன் எழுதிய புத்தகத்தை வைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார். “நீங்கள் உள்ளே போகலாம்” என்றார்.

நானும் போனேன். உள்ளே கண்ணாடி அணிந்து கொண்டு நல்ல வெள்ளை மேனி, சதுரமான முகவமைப்புடன் அமர்ந்திருந்தார். சிகரெட் புன்னகை விடுத்தார் என்னை நோக்கி.
தாஸ்காம்கா முதலில் பேசினார்.

“நீங்கள் நான் தானே ?”

“ஆமாம், என் பெயர் தான் நான்.”

“இப்போது தான் தான் வந்தார். அந்த மிருகத்தை பற்றி விவாதித்தார். மேலும் உங்களை பற்றியும் சொன்னார்.”

“ஓ, மிக்க மகிழ்ச்சி. காபெக்தன் கட்டுரை..”

“நாங்கள் ஏற்கனவே அதை பற்றித்தான் விவாதித்து கொண்டிருக்கிறோம். வெளியே நிற்பவர்களை பார்த்தீர்களா ? “

“வறுமை எதிர்ப்பு போராட்டம் என பலகை வைத்திருந்தனர். உங்கள் நாடு தானே உலகிலே உணவு மாத்திரை கையிருப்பில் முதல் இடம் ? பிறகு எப்படி வறுமை ?”

“நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் அந்த நாயின் தலையும் குதிரை உடலும் உடைய மிருகத்தால் தான் பிரச்சினையே.”

“அது என்ன செய்தது ?”

“அது உணவு மாத்திரைகளை தின்றுவிடுகிறது. ஒருவேளைக்கு ஆயிரம் உணவு மாத்திரைகள் அதற்கு இரையாகிறது.இதனால் தான் வறுமை போராட்டம் .என்ன செய்வது என தெரியாத குழப்பத்தில் உள்ளோம்.”

“அட மாயனே , காபெக்தன் தான் உதவ வேண்டும்.அவர்தான் புனைவின் மிருகங்களை பற்றி ஆராய்ந்து வருகிறார்.”

“காபெக்தன் கல்லறை கட்டி அதனுள் அல்லவா தூங்கி கொண்டிருக்கிறார் தென்திசை கும்பகர்ணனுக்கு போட்டியாக.”

“இப்போது வழியாக யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம் என தென்திசை கவிஞர் ஒருவர் ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.”

“சரி நான், அப்படியே செய்வோம். தான் வந்தால் இன்னும் உபயோகமாக இருக்கும்.”

“சரி.”

“இப்போதுவில் கவனத்தை குவியுங்கள்  கண்ணை மூடிக்கொண்டு.”

………….(மெளனம், நிசப்தம், காற்றின் ஒலி பலமாக கேட்கிறது)…….

ஒரு ஒலிப்பெருக்கி காபெக்தனுக்கு மரண தண்டனை என ஒரு குரல் கேட்கிறது.மக்கள் ஆரவாரமாய் கத்துகின்றனர்.தாஸ்காம்கா 

“இது எந்த வருடம் ?” எனக்கேட்டார்.

தான் சொன்னார் “இது 2679 என்று”

காபெக்தன் மைக்கில் இவ்வாறு பேசினார்

“காபெக்தன் ஆகிய நான் அந்த வினோதமான விலங்கை எனது முந்தைய நாவலான எலி எலி லாமா சபக்தனியில் நான் தான் உருவாக்கினேன். நீங்கள் எல்லோரும் என்னுடைய அந்த நாவலில் உள்ள மேற்கோள்களை மட்டும் வாசித்துவிட்டு முழுவதும் வாசித்துவிட்டேன் என பொய் கூறினீர்கள் . என்னுடைய செல்லப்பிராணியை நீங்கள் கொஞ்ச மறுத்துவிட்டீர்கள்.ஆனால் அந்த மிருகத்தால் உங்களுக்கு பிரச்சினை என்பதை ஒரு டாடாயிஸ்ட் ஆக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அதனால் தான் ஒரு ரகசியத்தை வெளிப்படையாக சொன்னேன். ஆசிரியன் மறைந்தால் விலங்கும் மறையும் என்று. ஆனால் கண்டிப்பாக நீங்கள் எல்லோரும் ,

புனைவாக்கத்தின் நனவு – காபெக்தன்,
கனவு பதிப்பகம்,மாஸ்யோ, கிசிலிடியா
விலை: ரூபலர் 450
மொத்த பக்கங்கள் : 450

வாங்கி படியுங்கள். போய் வருகிறேன்.”

என்றார். நாங்கள் இப்போதுவின் கதவை தட்டிக்கொண்டிருந்தோம் மறுபடியும் எங்கள் காலத்திற்கு போக.

suryavn97@yahoo.com