பௌர்ணமி நாளின் முன்னிரவுப் பொழுதொன்றில் காற்று வரத் திறந்திருந்த யன்னல் பிடித்தமான மெல்லிசைப் பாடலொன்றினை ஏந்தி வந்து தனித்திருந்த அறையினை நிறைக்கத் தொடங்கிய இக்கணத்தில் உன்னை நினைத்துக் கொள்வது கூட மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. உன்னைக் காற்று ஏந்தி வருகிறதா? மெல்லிசையின் ராகங்களுக்குள் நீ மறைந்து வந்து குதிக்கிறாயா ? பௌர்ணமியின் ஒளிக் கீற்றுக்கள் உன் உருவம் தாங்கி வருகிறதா போன்ற மாயக் கேள்விகளுக்கு என்னிடத்தில் விடைகளில்லை. என்னைப் போல இவையெல்லாவற்றையும் ரசிக்கும் மனம் கொண்ட நீ, என்னுள்ளிருக்கும் நீ, உன்னை நினைக்க வைக்கிறாய். பசுமை மிகுந்த சோலையொன்றின் மத்தியில் நீர் மிதந்து வழியுமொரு கிணற்றினைச் சூழ உள்ள தரையும் கூட ஈரலிப்பைக் காட்டுவதைப் போல உன் அன்பின் ஈரத்தில் கசியுமென் விழிகளை இந்த மாடியின் சாளரத்துக்கப்பாலுள்ள வெளிகளில் அலையவிடுகிறேன். தாயொருத்தி சிறுகுழந்தையை மிகுந்த அன்பைத் தாங்கித் தன் மார்போடு அணைத்தபடி வீதியினோரமாக நடந்து போகிறாள். ஒரு ஆண், தந்தையாக இருக்கக் கூடும், பூலோகம் முழுதையும் சுற்றிப் பார்க்கவைக்கும் பாசத்தை ஏந்தியபடி நடை பயிலக் கற்றுக் கொண்டிருக்குமொரு குழந்தைக்கு, நடக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். சூரியனை இரவில் கொண்டு வரும் நகரத்தின் ஒளிவிளக்குகள், புதிதாகப் பிறந்த தன் குட்டியைக் கழுத்தில் கவ்வி வேற்றிடம் மாற்றுமொரு பூனை, இப்பொழுதுதான் மொட்டவிழ்த்து வாசனை அனுப்பும் இரவுராணிப் பூ, நிஷ்டை கலைந்த கலவரத்தில் எங்கோ கீச்சிடுமொரு ஒற்றைப் பட்சி… இன்னுமின்னும்… அனைத்தும் உன் நினைவுகளையே சுமந்துவருகின்றன.
தொலைதூரத்திலிருந்து நீ காதல் சொல்லியனுப்பிய மின்செய்தி கையோடு உன் புகைப்படத்தை எடுத்துவந்தது. அதில் நீ எத்தனை அழகாக இருக்கிறாய் ? கறுப்பு மேலங்கியின் நுண்ணிய வேலைப்பாடுகள், கழுத்தோடு ஒட்டிய ஆரம், சிறு கருவிழிகள் பிரகாசிக்கச் சிந்தும் மென்புன்னகையில் தெரியும் அன்பு மனம் என அனைத்தும் சுமந்த நீ எத்தனை அழகாக இருக்கிறாய் ? உனக்குள் அருகிலிருந்து ஊடுருவும் சுவாசக் காற்றின் மேல் பொறாமை கொள்ளச் செய்கிறாய் நீ. எனது நாசி நுகரும் வாசனைகள் எல்லாம் கூட உன் நினைவுகளையே நுரையீரல்களில் நிரப்புகின்றன. என்ன ஒன்று…உள்ளே வரும் நீ வெளிச்சுவாசத்தில் சிக்கிவிடாமல் என்னுள்ளேயே தங்கிவிடுகிறாய்.
இப்பொழுதெல்லாம் காலத்தின் கரங்களை மிகக் கொடியவையாக உணர்கிறேன். நேசத்தில் பிணைந்து ஒன்றியிருக்கும் நம்மிருவரையும் கடல் எல்லைகள் தாண்டிய பாலைநிலங்களுக்கு மத்தியில் காலம் அறைக்கு ஒன்றாகப் பிரித்துப் போட்டிருப்பதைப் பார். இரவுகளின் நட்சத்திரங்களை எண்ண வைத்தும், பகல்பொழுதுகளின் மேகங்களில் வடிவங்கள் தேடி வான் பார்க்கவுமாகத் தனித்துப் போட்டிருப்பதையும் பார். மிகக் கொடியவையான காலத்தின் கரங்கள் நம்மைச் சேர்த்து வைக்கும் நாளில்தான் அது தூய்மைப்படுமென எண்ணுகிறேன். நீ என்ன சொல்கிறாய் ?
ஒரு குறுகிய சிறைக்குள் சிக்குண்டு கிடப்பதாகக் கனவுகள் பூக்கும் மனம் சொல்லியபடி இருக்கிறது. போதையின் உச்சியிலுள்ள ஒருவன் ஆகாயத்தில் மிதப்பதாகத் தானுணரும் போலி விம்பத்தைச் சுற்றம் எப்படிப் புரிந்துகொள்ள இயலாதோ அது போல அன்பில் இடறி விழுந்தவனின் பிதற்றல்களையும் அன்பைச் சுமந்து நிற்கும் உயிரொன்றுதானே புரிந்துகொள்ள முடியும் ? இப்பொழுதுன் நேசத்தைச் சுமந்து தவிக்கும் பொழுதுகளில்தான் உன்னை முழுவதுமாகப் புரிந்துகொள்ள இயலுமாக இருக்கிறது.
இப்போதைய காலங்களில் வாழ்விற்குத் தேவையானதாக உன்னிடம் மிதந்திருக்கும் வசதிகளின் எதிர்ப்புறத்தில் நான் நிற்கிறேன். நீ கைதுடைத்துப் போடும் அல்லது உன் மாளிகைத் தூசகற்றப் பயன்படும் பணக்கற்றைகளின் பிரகாசத்தில் ஒரு நாள் இவ் ஏழையின் நிகழ்காலம் மறக்கடிக்கப்படலாம். என் நினைவுகளை வலிந்து அகற்றியும் வழித்து அகற்றியும் உனக்குச் சமமான இன்னொரு ஜீவனை உன் நெஞ்சினில், வாழ்வினில் நிரப்பக் கூடும். அன்று உன்னில் அன்பைத் தொடர்ந்தும் சிந்தியபடி இத் தனித்த ஜீவன் வெயிலுருக்கும் தார் வீதிகளில், பனி தூவும் அடர்வனங்களில், மழைச் சேற்றில், புராதன மண்டபங்களிலெனப் பைத்தியமாய் அலையக் கூடும். அன்றியும் இறந்திருக்கவும் கூடும்.