* சமர்ப்பணம் : மறைந்த உயிர் நண்பர் தாஜுக்கு
பறப்பதற்குத் தயாராக இருக்கும் ஒற்றை இறக்கையுள்ள விமானத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? எங்கள் ஊரில் சில வீடுகளில் இருக்கிறது – மொட்டை மாடி மேல். ‘கப்பக்கார வூடு’ என்றால் முறைப்படி கப்பல்தானே இருக்க வேண்டும். இல்லை, அந்தக் காலத்தில் சைக்கூன் சிங்கப்பூர் என்று போய் பெரும்பணம் சம்பாதித்த சில சபராளிகள் அப்படித்தான் சும்மா விமானங்களை பெருமைக்காக வீட்டின் மேல் நிறுத்தினார்கள். முழுக்க முழுக்க சிமெண்ட்டால் கட்டப்பட்ட சிறு விமானங்கள்! எந்த நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் முஸ்லீம்கள் நிகழ்த்தவில்லையென்று யார் சொன்னது? இப்போது உள்ள பரம்பரைக்கு அதற்கு பெயிண்ட் அடிக்கக்கூட முடியாததில் விமானங்களுக்கு ரோஷம் வந்து ஒரு பக்க இறக்கைகளை ஒடித்துக் கொண்டு விட்டன. புதிதாக அரபுநாடு போய் திரும்ப வரும் கப்பவூட்டுத் தம்பிகள், கஞ்சத்தனமாக தங்கள் வீட்டு நிலைப்படியிலோ புதிதாக வாங்கிய பைக்கிலோ அல்லது வேனிலோ ‘இது அல்லாஹ்வின் அருட்கொடை’ என்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதைப் பார்த்துத் திகைத்துப்போய் முடமாகிவிட்டன என்றும் சொல்லலாம்.
கப்பக்கார வீடு… கட்ட வெளக்கமாறானாலும் கப்ப வெளக்கமாறு…
எல்லாமே கப்பல் சம்பந்தப்பட்டது. இந்த மாலிமார், மரைக்காயர் எல்லாம் என்ன? கப்பல் சம்பந்தப்பட்ட பெயர்கள்தான். அதற்காக ரஜூலா கப்பலில் கக்கூஸ் கழுவிக் கொண்டிருந்த என் பெரிய மாமாவும், கப்பலே பார்க்காமல் விமானத்தில் கத்தாருக்குப் போன என் சின்ன மச்சானும் தன் பெயரை ‘நகுதா’ (கப்பல் கேப்டன்) என்று இன்னும் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது! போதாதற்கு ஊர் அவுலியா வேறு மூழ்கவிருந்த ஒரு கப்பலைக் காப்பாற்றித் தொலைத்தார்கள். அவர்களின் கந்தூரியில் , பல வகை டிசைன் கப்பல்கள் – சோகப்பட்டினத்திலிருந்து நாங்கூர் வரை – 7 கி.மீ தூரம் ரோட்டிலேயே வந்து , ஊரெல்லாம் சுற்றும். சில ரயில்கள் , விமானங்கள் கூட ரோட்டில் ஓடுவதுண்டு. எல்லாம் அவுலியாவின் மகிமை !
கப்பக்கார வூட்டு ஆண்பிள்ளைகளை ‘கப்பவூட்டுத் தம்பி’ என்று செல்லமாக அழைக்கும் ஊர் அது . கப்பவூட்டு பெரியதம்பி; நடுத்தம்பி ; சின்னதம்பி ; தம்பி… அவரின் ‘தம்பி’…
சிராஜுதீனும் என்னைப் போல ஒரு கப்ப வூட்டுத் தம்பிதான். ஆனால் பக்கத்து ஊர். உட்டச்சேரி என்ற உண்மையான பெயரை எழுதினால் அடிக்க வந்துவிடுவார்கள் என்பதால் வேண்டாம்.
சிராஜின் உற்சாகம் எனக்கும் ஒரு நாள் தொற்றியது. துபாய் வந்ததிலிருந்து ‘ஒரு நல்ல செய்தி’ என்று அன்றுதான் சொல்கிறார்.
‘எழுதுறதை வுட்டுப்புட்டீங்களோ ?’ – வெடைத்தேன். சந்தோஷமாக இருக்கும்போது நாம் உண்மையை சொன்னாலும் அது வேடிக்கையாகவே எடுத்துக் கொள்வார்கள். நான் சொன்னது பொய். சிராஜ் நன்றாகவே எழுதுவார்.
‘இல்லே.. அதைவிட சந்தோஷம். ரூமுக்கு ராத்திரி வர்றீங்க. கொண்டாடுறோம்!’. போனை வைத்து விட்டார். அர்த்தம் என்ன என்ன என்று படித்தவரைக் கேட்க வைக்கும் அவரது கவிதைகளின் சஸ்பென்ஸ் மாதிரி இருந்தது. அது எனக்கும் பிடித்திருந்தது. சொட்டுச் சொட்டாக வடித்தாலும் அல்லது ‘சர்’ரென்று ஊற்றினாலும் நீரா, உருகும் பனிக்கட்டியா என்று புரியாத வெண் மயக்கம்தான். இருந்தாலும் என்ன, அவரை எனக்குப் பிடிக்கும். அதிகாரம் செய்யும் அன்பு அவருடையது. எங்கே பார்த்தாலும் ‘எப்படி இருக்கிறீங்க?’ என்று மணிக்கட்டை அவர் அழுத்தும் அழுத்தில் என் நரம்புகள் முழுக்கப் பாயும் அன்பெனும் இரத்தம்…
‘இதுதான் அதுவாக இருக்கும்’ என்று வாழ்க்கை முழுதும் நாம் எடுக்கிற அதி புத்திசாலித்தனமான முடிவுகளைப் போல அவரது சஸ்பென்ஸ் எனும் இருட்டுத் துளையில் நமது எந்தக் கண்டுபிடிப்புகளையும் நுழைக்கலாம். பிரமாண்டம்.
அனேகமாக அது அவரது வேலை விஷயமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. ஐம்பத்திரண்டு வயதில் நாலாவது முறையாக ஏழாவது பாஸ்போர்ட்டுடன் – நல்ல வேளையாக employment visaவில் நுழைந்து, துபாயில் படாத பாடுபடுபவருக்கு இன்றாவது விடிவு கிடைத்தால் சரிதான். நான் முப்பத்திரண்டு வயதில் வேலை கேட்கும்போதே ‘we need young people’ என்று துரத்தியடித்த ஊர் இது.
‘இங்கே ரொம்பவும் தட்டி, சுண்டிப் பார்த்துலெ எடுக்குறான்! சௌதி மாதிரி ‘மாலிஷ்’ண்ட பேச்சுக்கே இடமில்லையே’ என்று முனகினாலும் ஒருவழியாக அவராகவே முயன்று , சாலைகள் தோறும் குன்றனைய கொங்கைளுடன் அலையும் குயீன் லத்தீ·பாக்களைப் புறந்தள்ளி வேலையை வாங்கி விட்டார். எம்.ஏ படித்து விட்டு வந்து ஆபீஸ் பாய் என்று சொல்வதற்கு கூச்சமாக இருப்பதால் ‘எங்கே வேலை பார்க்கிறீங்க ?’ என்று யாராவது கேட்கும்போது இருப்பிடத்தின் முதல் பகுதியை மட்டும் சொல்லி தப்பிக்கும் சாமர்த்தியம் வந்திருந்தது அவருக்கு. நல்லதுதான்.
‘எங்கே தங்கியிருக்கீங்க சிராஜ்?’ – துபாயில் அவரை முதலில் பார்த்ததும் நான் கேட்ட கேள்வி.
‘தேரா – Hyatt Regency’
நண்பனாயிற்றே… அதனால் எனக்கு எரிந்தது! ‘சுக்ர் அல்ஹம்துலில்லாஹ்! நம்மள்ளெ ஒரு ஆளாச்சும் நல்ல நிலைமைக்கு வந்தா சரிதான்’ என்றேன்.
‘Hyatt-த்துக்கு இந்தப் பக்கம்ங்க’
‘ஓ.. சோமாலி பள்ளி பக்கத்துலெ? நல்ல ஃப்ளாட்டுலாம் அங்கேயும் இக்கிதுதான்’
‘சே ! அதுக்குப் பின்னாலெ உள்ள பாழடைஞ்ச ‘villa’லே இருக்கேங்க – இருவத்தஞ்சி மலையாளிங்க அந்த ரூமுலே’
நானும் கூட கொஞ்ச நாள் Ministry of Labour Departmentல் வேலை பார்ப்பதாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன் முன்பெல்லாம். அங்கே நான் அப்போது சுலைமானி ஆபரேட்டர் ! ‘சுலைமானி’ என்றால் பாலில்லாத டீ. ஈரான் குங்குமப்பூ போட்டு மணக்க வைத்து அதை அவ்வப்போது அரபிகளுக்கு ஊற்றிக் கொடுக்க வேண்டிய உன்னத வேலை. சுலைமானி குடிக்கும் வேலையை சரியாகச் செய்வார்கள் அரபிகள். எனக்கு சிராஜ் எவ்வளவோ தேவலையோ?
சந்தோஷத்தைப் பார்த்தால் வேலை நிரந்தரமாக்கப் பட்டுவிட்டது போலிருக்கிறது. விசா மாற்றுவதற்கு ஈரானின் கிஷ் தீவு போவாரா அல்லது ஊர் போவாரா ? இங்கேயே காசைக் கொடுத்தும் மாற்ற முடியும்தான். குறுக்கு வழிகள் இல்லாத நாடு ஒரு நாடா ? அதற்கென்றே உருவாக்கப்பட்ட நாட்டில் என்னதான் செய்ய முடியாது ?
நான் தேரா போய் சேர்ந்தபோது ரூம் பரபரப்பாக இருந்தது. ‘ம்.. சீக்கிரம்.சீக்கிரம்..’ என்று சிராஜ் ரூம் மேட்களை விரட்டிக் கொண்டிருந்தார்.
‘என்ன சிராஜ்.. ஒரே அமர்க்களமா இருக்கு ? என்னதான் விஷயம்?’
‘சிராஜண்ணே தன் செலவில இன்னக்கி எல்லாரையும் படத்துக்கு கூட்டிட்டு போறாரு. அடிச்சிக்கிட்டு வுளுவுவானுங்கண்டு காலையிலேயே டிக்கெட் எடுத்துட்டு வந்துட்டாரு Second Showக்கு. ‘ என்றார் ஒருவர்
இல்லை. காரணம் வேறு இருக்க வேண்டும். பையன் தெரியாமல் சொல்கிறான். ‘என்ன படம் ?’ என்று கேட்டேன்.
‘குஞ்சுதந்திரம் !’ – சிராஜ் என்னை வெறுப்பேற்றினார். சே.. எப்போதோ ஒருமுறை நகரம் வந்து சினிமா பார்ப்பவன் நான். கனல்காந்தனின் படமாக இருந்தால் அல்லவா மூளைக்கு வேலை இருக்கும்?
சினிமா பற்றிய என் சிற்றறிவை இங்கே சொல்லிவிடுகிறேன். சென்னையில் உட்கார்ந்து கொண்டே திருவனந்தபுரம் திரைப்பட விழா போய் வந்ததாக புருடா விடுபவனல்ல நான். என்னமோ போன மாதம் திடீரென்று என்னை சினிமா விமர்சகன் போல காட்டிக் கொள்ள வேண்டுமென்று ‘துரோகம்’ என்ற குறும்படம் பற்றி எழுதித் தொலைத்தேன். பெரும்படமென்றால் என்ன குறும்படமென்றால் என்ன? யாருக்குத் தெரியும்? என்னைப் பொறுத்து சின்ன துன்பம்; பெரிய துன்பம். அவ்வளவுதான். இயக்குநருக்கு நான் துரோகம் செய்யக்கூடாதென்பதால் மட்டும் குறும்படத்தின் வசனங்களை ஒரு வரிகூட மாற்றாமல் எழுதினேன். ‘அடப்பாவி.. அது மூணுமணி நேரப் படமாக இருந்தால் நாங்கள் என்னாவது?’ என்று கடும் விமர்சன மெயில் வந்தது. ‘என்னைப் பார்த்து பயில்!’ என்று தோழி பத்மாவும் எழுதியிருந்தாள். அவள் சொல்வதை கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும். ‘Life is Beautiful’ என்ற மலையாளப் படம் பார்த்துவிட்டு நான் ‘ஆஹா ஓஹோ’வென்று ஒரு இணையக் குழுவில் எழுத, அது ‘Dead Poets Society’ என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்று அடுத்த நிமிடமே அங்கே எழுதியவள் அவள். கூடவே இந்திய சினிமாவில் இருக்கும் திருடர்களின் பெரும் பட்டியலையும் கொடுத்திருந்தாள். மானம் போயிற்று எனக்கு. மணிச்சித்ரதாளு கொடுத்த ஃபாஜிலா இப்படி! அதுவும் எங்கிருந்து திருடியதோ, யாருக்குத் தெரியும்? கட்டுரையைப் படித்த சிராஜ், ‘நீரும் துரோகிதான்’ என்று சொன்னார் என்னிடம்.
‘ஆ..! எப்படி?’
‘எத்தனை எழுத்தாளர்கள் எழுதின ஆனா ஆவன்னாலாம் நீம்பரு போட்டிக்கிறீரு அதுலெ!’
தர்க்கம் ! ஹஜ்ரத்தின் ‘தர்க்கத்துக்கு அப்பால்’ புத்தகம் ஞாபகம் வந்தது. அதில் ஒரு பாரா வரும் : ‘தன் ஆயுளை செலவழித்து ஒரு அறிஞன் ‘தனக்கு ஒன்றுமே தெரியவில்லை’ என்று புரிந்து கொள்வதை பாமரன் ஒரு நொடியில் உணர்ந்து கொள்கிறான்; வேறு மாதிரி சொல்லலாம் என்றால் பாமரன் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறான்!’
ஆசிர்வதிக்கப்படவும் யோக்கியதை வேண்டும்.
எங்கோ போகிறேனே…. எதிர்பார்த்தாற்போல ‘குஞ்சுதந்திரம்’ படத்தில் எல்லாப் பஞ்சமும் இருந்தது. வழக்கம்போல, நடனக் காட்சிகளின் போது அந்த ஆயிரத்தோராவது அழகி திரையின் நடுவில் தோன்றி , விருட்டென்று ஓடி வந்து, அப்படியே இரண்டு தொடைகளையும் திரையின் இரண்டு பக்கமும் விரித்து, நடுவில் உள்ள பகுதியைத் தூக்கி மேல் நோக்கி ஒரு அடி அடித்தாள். கலைப்படம் என்று நினைக்கிறேன். நயாகரா சீன் மட்டும் போதுமா கொடுத்த காசுக்கு? அல்நாசர் சினிமாவில் ஒன்பது பேருக்கு – என்னையும் சேர்த்து- டிக்கெட் மட்டுமே 180 திர்ஹம் வந்தது. இதில் தியேட்டருக்கு கூட்டிப் போகவிருந்த அவரது நண்பரின் வேன் ஒன்று கடைசி நேரத்தில் பழி வாங்கியதால் இரண்டு டாக்ஸி செலவு வேறு. ஏறியவுடனேயே நாலு திர்ஹம் கொள்ளையடிக்கும் துபாயின் வினோத டாக்ஸிகள் ஐம்பது திர்ஹத்தைப் பறித்தன. தியேட்டரிலும் ஒரு சவர்மா, பெப்ஸி கூட யாரையும் வாங்க விடவில்லை. எல்லா செலவும் சிராஜ்தான்.
படத்திலேயே ஒன்றி விட்டார் சந்தோஷத்தில். சாப்ளினை தவிர யாரையும் பிடிக்காதவருக்கு வசன வேந்தர் கிரேஸிவீரனின் ‘முன்னாடி பின்னாடி’ அப்படிப் பிடித்திருந்தது. சிரி சிரியென்று சிரித்தார். ‘ஹா..ஹா’ என்று வராமல் ‘எஹ்ஹே எஹ்ஹே’ என்று வரும் அவரது வினோதச் சிரிப்பு தியேட்டரையே குலுங்க வைத்தது. இடைவேளையின் போது அவர் அதிகம் சிரித்ததைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். காட்சி முடிந்து ரூம் வந்தும்கூட சிரிப்பு நிற்கவில்லை.
தந்தூரி ரொட்டியை வாங்க விட்டு தன் கையாலேயே ‘சிக்கன் சவ்மேன்’ என்கிற நஜஃப் ரெஸ்டாரண்ட் ஐட்டத்தை சூப்பராக தயார் செய்து அனைவருக்கும் பரிமாறினார்.
‘எங்கேயும் போய்டாதீங்க..அங்கேயே இருங்க!’ என்று சொல்லிப் போயே போய் விட்ட நடிகன் ஒருவன் போல மிமிக்ரி செய்து கொண்டே என்னை அடுத்த நாளும் பகலும் இருக்கச் சொன்னார். ச்செஃப் அல் கலீஜில் பிரியாணி ஆர்டர் கொடுத்திருக்கிறாராம். ஒரு மனு 150 திர்ஹம் வாங்கினாலும் பக்கா பிரியாணி. cheap and best. அரபி இந்திய fusion மசாலா. ஆம்பூர் பண்டாரிகளின் கை வண்ணம்.
இரவு அவர் ரூமிலேயே தங்கினேன். என் சகோதரன் அறைக்குப் போயிருக்கலாம்தான். ஆனால் இந்த கவிஞர் விட மாட்டேன்கிறாரே அன்பால் என்னை குளிப்பாட்டிய வண்ணம்.
அன்பாலா? தவறாக சொல்கிறேன். போதை மயக்கம் தெரியவில்லை போலும்!
Vodka. நான் நீண்ட நாட்களாக ருசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பானம். எப்படி இருக்கும் என்று பார்த்தது கூட கிடையாது. சினிமாக்களில் , பெரும்பாலும் வில்லன்களின் கையில் இருக்கும், சப்பையான, வளைந்த , சில்வர் நிற டப்பாக்களைப் பார்த்து அதன் வடிவத்தின் மேல் எனக்கு ஒரு காதலே வந்து விட்டிருந்தது. கடுமையான ரஷ்யக் குளிரையே விரட்டி விடும் என்று என் நண்பன் சொல்லக் கேட்டதுண்டு. இப்போது சிராஜ் காட்டியது அந்த டப்பா அல்ல. பாட்டில். பரவாயில்லை; கொண்டாடுவதுதான் முக்கியம்!
நான் ஒன்றும் குடிகாரன் அல்ல. அது தப்பே அல்ல என்று தெளிந்து நாளாகிறது. ஆனால் ஊருக்குப் போகும்போது மட்டும் flight-ல் என் தைரியத்தைக் காட்டுவேன். போகும்போது சந்தோஷத்தைக் கொண்டாட. வரும்போது துக்கத்தைக் கொண்டாட. brand பெயர்கள் எல்லாம் சரியாகத் தெரியாத வெட்கத்தில், இது வேண்டும் என்று கேட்காமல் பணிப்பெண் hot drinks-ஐ தட்டோடு நீட்டும்போது மட்டும் பார்க்க அழகான சிறிய பாட்டிலை நான் எடுத்துக் கொள்வதுண்டு. ஒரு முறை, ஒரு காலியான பாட்டிலைக் கூட எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். அடுத்துக் கேட்க யோசனையும்.
டூட்டிஃப்ரீ ஷாப்பில் அவரவர்கள் பாட்டில்களை வாரும்போது நான் மட்டும் சிகரெட் காட்டன்களோடு நின்று விடுவேன். மனைவி மேல் பயம். யாருக்குத்தான் இல்லை ? கணவர்கள் கொஞ்ச நேரமாவது தங்களை மறந்து மிதந்தபடி சந்தோஷமாக இருப்பது இல்லற வாழ்க்கைக்கு உதவாத விஷயம் என்று மனைவிகள் நினைப்பதை குற்றம் என்று சொல்ல முடியாது. ‘இப்படி தெருவுலெ எல்லாத்தையும் எல்லார்ட்டெயும் காமிச்சிக்கிட்டு கெடக்குறாஹலே’ என்று , வீட்டில் சரியாகக் காட்டாத மாப்பிள்ளைகள் மேல் வேதனைப் பட வேண்டும்தான். தவிர , பார்க்கிற பிள்ளைகள் கெட்டுப் போய்விட்டால் ? இப்போதே என் மகன் நான் சிகரெட் குடிக்கிற மாதிரி மாதிரி நடிக்கிறானாம். ‘வாழ்க்கையில் நடிக்கக் கூடாது’ என்று என் வாப்பா எனக்கு சொன்ன அறிவுரையை சகலவித அனுபவ பாத்தியதைகளோடு என் மகனுக்கு transfer செய்யும்போது சோடா பாட்டில்கள் பிராந்தி பாட்டில்களாக மாறுவதற்கு வாய்ப்பும் இருக்கிறது.
‘காசு கொடுத்து காண்டு வாதம்’ வேண்டாம். நம் தப்பு நம்மோடு போகட்டும். பிள்ளைகள் தனியாக அவர்களின் தப்பை பின்னர் செய்து கொள்வார்கள். எல்லாவற்றுக்கும் மேல்… குடிப்பது ஹராம். சொர்க்கத்தில் உள்ள மது ? அதில் ஆல்கஹால் இல்லை என்று ஆலிம்கள் இங்கிருந்து கொண்டே அடித்துச் சொல்கிறார்கள். இல்லை என்று எப்படித் தெரியும் என்று மடக்கினால் போதை இல்லாதது அப்படித்தானே இருக்க முடியும் என்று கேட்கிறார்கள். போதை இல்லாவிட்டால் அது என்ன மது ? சமயத்தில், விளக்கத்திற்காக அடைப்புக் குறிக்குள் வரும் வசனங்களுக்கு கிடைக்கிற முக்கியத்துவம் ஆண்டவனின் வார்த்தைகளுக்கு கிடைப்பதில்லை.
முஸ்லீம்கள் நன்றாக குடிக்கலாம் என்றே எனக்குப் படுகிறது. இங்கே குடித்தால்தானே மேலுலகத்து மது ஒரிஜினலா அல்லது கள்ளச் சரக்கா என்று தெரிந்து கொள்ள முடியும்?
‘எல்லாவற்றிலும் உள்ள ஆண்டவன் ஆல்கஹாலிலும் இருப்பான் அல்லவா ? ஏன் அவனை விழுங்கக் கூடாது ?’ என்று ஒரு நண்பரைக் கேட்டேன். அவர் ஆன்மிக மது நிறையப் பருகுபவர்.
‘ம்.. பீயிலும்தான் இருப்பான். வழிச்சி வாயிலே வச்சிக்கையேன்..’ – அவர் கோபத்தில் ஆண்டவன் இருந்தான்.
இது பற்றியும் , மது-ரம் அருந்துவதில் உள்ள என் சிக்கல்களையும் ஒருமுறை சிராஜிடம் விவரித்த போது Vodka பற்றிய ஆசையையும் சொல்லியிருக்கிறேன் போலும்! அதை ஞாபகம் வைத்துக் கொண்டு இப்போது நன்பர் சந்தோஷப் படுத்துகிறார் ! ஆனால் ஒரு புதிய அறையில் அதுவும் அத்தனை வயதுப் பையன்களுக்கும் நடுவில்..
தயங்கினேன்.
‘இதெ ஆரஞ்ஜ் சாறோட கலந்து சாப்புட்டாத்தான் நல்லா இருக்கும்’ என்று ஒரு பையன் சொன்னதும்தான் தெம்பு வந்தது. விலை மலிவு என்று அஜ்மா’னிலிருந்து அவன்தான் வாங்கி வந்தானாம். இந்த வியாபாரம் இல்லையென்றால் அங்குள்ள மன்னர் கஷ்டப்படுவார் இல்லையா என்று சிரித்தான். இப்போது துபாய் வருபவர்கள் விஷயம் தெரிந்த பையன்களாக இருக்கிறார்கள். ‘raw’வாகக் குடித்தால் தொண்டையெல்லாம் எரியுமாம்.
பையன்கள் மட்டுமல்ல, அந்த ரூமில் இருந்த ஒவ்வொருவரும் விசேஷமானவர்கள்தான். நாற்பது லட்ச ரூபாய்க்கு பங்களா கட்டியிருக்கிற ஒருவன் இங்கே அழுக்கடைந்த கட்டிலில், கிட்டத்தட்ட கோவணம் மாதிரி உடுத்திக் கொண்டு படுத்திருப்பான். கேட்டால் ‘நான் காஞ்சி காமகோடி மாதிரி.. ஹி..ஹி..’. இன்னொருத்தன் வேறுவகை. சிகரெட்டுகளை ஊதித் தள்ளிக்கொண்டே இருப்பான். சாம்பலைத் தட்ட படுக்கையின் அடியில் ஒரு பெரிய டிரம். அது நிறைந்து போனது ஒருநாள். டிரம்-ஐத் தூக்கி வெளியில் போடப் போகிறான் என்று நினைத்தால் அதை அப்படியே படுக்கைக்குக் கீழே மேலும் தள்ளிவிட்டு இன்னொரு டிரம்-ஐ அடியிலிருந்து உருவுகிறான்! இந்த லட்சணத்தில் ஃப்ளாட்டை எடுத்திருப்பவனின் நண்பர்களான இந்தியக் ‘குருவி’கள் என்னும் கோட்டான்களோ அவ்வப்போது கூட்டமாக வந்து குடித்து விட்டு , காசு கொடுத்துத் தங்கியிருப்பவன் இருப்பவன் மேலெல்லாம் கொழகொழவென்று எச்சில் துப்பும் – ஏதோ ஒரு ஹோட்டலில் எந்த நாட்டுக் குட்டிகளுடனோ போட்ட ஆட்டத்தை நினைத்து. இது போதாதென்று கனடா லண்டன் என்று பிழைக்கப் போன சில புத்திசாலிகள் திரும்ப வரும்போது துபாயைத் தேர்ந்தெடுத்து (ரெண்டு ரூவா சாமான்கள் நாலு வாங்க வேண்டுமே..!) ஒரு ‘தல்லிப்பொலி’ ஹோட்டலில் ரூம் கூட போடாமல் இங்கே நடு ராத்திரியில் வந்து கக்கூஸ் பக்கத்தில் இடம் போடும் – காசு கொடுக்காமல் . இவர்களையும் ஒரு லட்சம் மூட்டைப் பூச்சிகளையும் மறந்து தூங்கலாம் என்று பார்த்தாலோ… ஜட்டி போடாத அறைப் பையன்கள் ! எப்போது பார்த்தாலும் கைலியை தூக்கிக் கட்டிக் கொண்டு ‘டங் டங்’கென்று ஆட்டிக் கொண்டு… இவர்களைப் பற்றி குறை சொல்லலாம் என்று சிராஜை நோக்கினால் அவர் பாட்டுக்கு ஏதோ பழைய ரேடியோ குமிழைத் திருகுவது போல தன் குறியின் தலையை கைலியோடு உருட்டிக் கொண்டிருப்பார். சே…உலகக் குருடர்கள் அனைவருக்கும் ஒளிமயமான கண்கள் கிடைக்க ஒரே ஒரே வழி அவர்களை துபாய்க்கு வரவழைத்து இந்த ரூமில் படுக்க வைப்பதுதான்.
வோட்காவை குடித்தே ஆக வேண்டும்.
பார்க்க பெட்ரோல் மாதிரி இருந்தது.
ஒரு கிளாஸில் கொஞ்சம் ஊற்றிக் கலந்து கொடுத்தான் ஒரு பையன். பிரமாதம் ! பத்தே நிமிடத்தில் முகம் ஜிவு ஜிவுவென்று இழுக்க ஆரம்பித்து விட்டது. போதைக்கே உரிய அடையாளங்கள் என்னை தன் மடியில் போட்டுக் கொண்டன. எழுந்து நின்று நான் steady-யா என்று பார்த்துக் கொண்டேன். பையன்கள் சிரித்தார்கள் . steadyதான். ஆனால் நடை மட்டும் தள்ளாடியது.
சிராஜ் செய்திருந்த (ஆமாம், அவர் எழுத மாட்டார்) கவிதை ஒன்றின் கடைசி பாரா. ஞாபகம் வந்தது. ‘யோவ்.. நீ பேசாம இந்தாலும் உன் கவிதை பேசுதுய்யா போதையிலெ ‘ என்றேன். குடித்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது மனது… அதுவும் இன்னொருவர் வாங்கிக் கொடுத்தால் சிறகடித்து அல்லவோ பறக்கச் சொல்கிறது..! ஒரு மரண அறிவிப்பைக் கூட கவிதை மாதிரி காட்டும் அதன் மகத்துவத்தைத்தான் என்ன சொல்வது!
‘இதென்ன போதை ? permit , licenceண்டு அலையாம குறைச்ச காசுலெ நாமளே செஞ்சிட முடியும் சூப்பரா !’ என்றார் சிராஜ்.
ஆஹா, நிஜமான ‘டாஸ்மாக்’ கவிஞர்தான். சந்தோஷமாக இருக்கும்போது எல்லா தொழில் ரகசியங்களும் வெளி வந்து விடுகின்றன!
‘கிரேப் ஜூஸ் ஒரு can – 5 லிட்டர் போதும் – வாங்கிங்குங்க. கொஞ்சோண்டு ஈஸ்ட், கொஞ்சம் அரிசி, அரை கிலோ சீணியை அதுலெ போட்டு இதை தெனம் ஒரு தடவை வெயில்லெ ஒரு மணி நேரம் வச்சிட்டு எடுக்கனும். முக்கியம் – மூடிலெ ஒரு ஓட்டை இக்கெனும். இப்படி பதினைஞ்சி நாளு. இதை வேற ஏனத்துலெ வடிகட்டி ஃப்ரிட்ஜ்லெ வச்சிடுங்க. அவ்வளவுதான். daily கொஞ்சம் குடிச்சிப் பாருங்களேன். super kick ! உடம்புக்கு நல்லதும் கூட. அந்த காலத்துலெ இப்படித்தான் செஞ்சாங்க’ – செய்நேர்த்தியை விவரித்துக் கொண்டே சென்றவர்…. ‘உவ்..வே..’ என்று அப்படியே என் மேல் வாந்தி எடுத்தது படு விசேஷம்.
சிராஜுக்கு குடிக்க மட்டும் வராது. அதிக பட்சம் ஒரு கேன் பீர். முடிந்தது. மூத்திரம் வருகிறதோ இல்லையோ , போதையோ வாந்தியோ வந்து விடும்.
ஒருமுறை – ஏழெட்டு வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் – வேலூர் பக்கத்து ஊரில் வேலை பார்க்கும் நண்பன் ரஃபீக்-ஐ பார்க்கப் போயிருந்தோம். அவன் நடத்திக் கொண்டிருந்த கம்ப்யூட்டர் இன்ஸ்டிட்யூட்டில் எதையாவது கற்றுக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறி விட வேண்டுமென்றுதான். எழுத்தார்வம் கொண்டவர்கள் ஒன்று சேரவே கூடாது. பாடமாவது மண்ணாவது… சிராஜும் ரஃபீக்கும் ஓயாமல் ஒழியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். எப்போதோ ஒருமுறை எழுதும் ஜூனியரான நான் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு வாழ்ந்த நபியின் புரட்சியைப் பற்றிப் பேசும் நாம் இதோ ஒரு நூறு வருடங்களுக்கு முன்பு நம் ஊரிலேயே வாழ்ந்து மறைந்து போன வெண்தாடி வேந்தனை ஏன் கண்டு கொள்வதில்லை என்பது சிராஜின் முக்கியக் கேள்வியாக இருந்தது. இப்படி வந்து மறைந்து போன தலைவர்கள், புரட்சிக்காரர்கள் அனவரையும் அந்தந்த காலத்தில் சமுதாய தலைவனாக ஏற்றுக் கொண்டால் குழப்பமாக இருக்கும் என்பதால்தான் ‘முத்திரை’ முன்பே குத்தப் பட்டு விட்டது என்றான் ரஃபீக். நபியின் அடையாளங்களை விவரித்த பதில் இன்னும் பெரிது. அதில் கிளைத்த கேள்விகளோ இன்னும் பெரிது. முழுதும் கேட்டு முடித்து முடிவெடுத்தால் நான் திரும்ப ஊர்->துபாய் போக முடியாது. எனவே மாட்டிறைச்சி பகோடாவைத் தவிர வேறு ஏதாவது இருக்கிறதா இந்த ஊரில் என்று கேட்டேன்.
ரஃபீக் ஏலகிரி மலைக்கு போகலாம் என்றான். அத்தனை சிறிய மலையை நான் பார்த்ததே இல்லை. இயற்கையை தவிர எல்லாம் அழகாக இருந்தது. எனக்கு பிடிக்கவில்லை. ‘அழகை என் கண்ணால் பார்க்க வேண்டும்’ என்றான் ரஃபீக். எனக்கு நண்பன் ரஷீது ஞாபகம் வந்தது.
கிளிபோல ஒரு பெண்டாட்டி. புர்கா போட்ட கிளியானலும் அழகோ அழகு. ஆனால் ரஷீதுக்கு இன்னொன்று தேவைப் பட்டது. என்னிடம் இன்னொரு கல்யாணம் பற்றிப் பேசிய போது நான் திட்டினேன். என்னுடன் வந்து அவளைப் பார்த்து விட்டு சொல் என்று திருவாரூர் கூட்டிக் கொண்டு போனான். மு.ரா சன்ஸ் கடைக்குப் பக்கத்தில் அந்த டிராவல் ஏஜென்ஸி இருந்தது. அங்கே அவள் வேலை பார்க்கிறாள். ‘பாரு, இவதான்’ என்றான். கௌண்ட்டரில் இருந்த இரண்டு பெண்களில் ஒருத்தி படு கிழவி. உம்மம்மா மாதிரி இருந்தாள். இவளாக இருக்க முடியாது. கோரமான இன்னொருத்தியாகத்தான் இருக்க வேண்டும். அவளேதான் ! ஐம்பது வயசு இருக்கலாம் என்பதை சகித்துக் கொண்டாலும் இந்த கற்பு எனும் சவ்வு விவாகரம் சந்தேகப் படும்படி இருந்தது. பார்வையே சரி இல்லையே… என்னயல்லவா பார்க்கிறாள் – தன் காதலனை விட்டு விட்டு!
அவனிடம் சொன்னேன்.
‘சீ.. போங்கனி. அவளுக்கு ஒன்றரை கண்ணு. அவ்ளவுதான்’ என்றான்.
எனக்கு குழப்பம் வந்து விட்டது. அழகை ரஷீதின் கண்ணோடு பார்ப்பதா அல்லது அந்தப் பெண்ணின் கண்ணோடு பார்ப்பதா ? அல்லது எதையும் பார்க்காமல் இருந்தால் அழகு தெரியுமா?
அதே மாதிரி குழப்பத்துடன் இப்போது ஏலகிரியை ரஃபீக்கின் கண்ணோடு பார்த்தேன். அப்போதும் எனக்கு அப்படித்தான் தோன்றியது. சாதாரணக் கண், அன்புக் கண், வெறுப்புக் கண் எனும் பிரிவுகளுக்கு அப்புறம் ரஃபீக் கண் என்றும் ஒன்று இருக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ள நமக்கு ஞானக் கண் வேண்டும்.
என் கண்ணின் கோணத்தை மாற்ற வேறு ஏதாவது வழி இருக்கிறதா ?
ரஃபீக் வழி சொன்னான். அங்குள்ள குடிசைகளில் ஒன்றில் நிறைய பாட்டில்கள் கிடைக்குமாம். ஊரை விட்டு வந்த துணிச்சலில் அங்கு நுழைந்து 2 பாட்டில் பீர் குடித்தேன். சிராஜின் வேண்டுகோள் அது. சாதாரணமாக இருந்தாலே போதுமாம். இதற்கும் முன்பு ஒரு முறை அவர் நாங்கூர் வந்தபோது அவரை மகிழ்விக்க நான் காரைக்காலுக்கு கூட்டிக் கொண்டு போனேன். எல்லா பார்களும் மூடியிருந்தன. காரைக்காலிலா ! கடைசியில் பார்த்தால் அன்று காந்தி ஜெயந்தி !. அன்றிலிருந்து தாஜூக்கு காந்தி என்ற பெயரை எடுத்தாலே பிடிக்காது, மஹாத்மாவுக்கு எப்படியெல்லாம் எதிரிகள் முளைக்கிறார்கள், பாருங்கள் !
ஏலகிரியில் ‘காந்தி தாத்தாவுக்கு ஜே’ என்று சொல்லி கொண்டே சிராஜ் பாட்டிலை எடுத்தார் கையில். அவ்வளவுதான் ! போதை வந்து விட்டது ! ரஃபீக் நிதானத்தில் இருந்தான். குடிக்காததால் அல்ல , வியாபாரம் செய்பவன் ரஃபீக் நடத்தும் வகுப்பில்தான் படிக்கிறான். புத்திசாலியாக மாறிய ஒரே மாணவன்!
இல்லாத கண் கொள்ளாத காட்சியெல்லாம் கண்டு – கழிந்தும் விட்டுத் திரும்பினோம்.
சிராஜ்தான் டிக்கெட் எடுத்தார் பஸ்ஸில் : ‘ஏலகிரிக்கு 3 டிக்கெட் !’
கண்டக்டர் சிரித்துக் கொண்டே சரியான ஊருக்கு கொடுத்தான்.
அந்த மாதிரி போதை வந்து விட்டது போலும் இப்போது.
வாந்தியை இருவரும் சுத்தப்படுத்திக் கொண்டதும் , ‘பதினைஞ்சி வருஷத்துக்கு முன்னாலே உங்க ஊர் கடற்கரையிலெ நானும் நாகூர்பித்தனும் நா.கோ. ராமசாமிட எழுத்தைப் பத்தி சண்டை போட்டிக்கிட்டிக்கும் போது நீங்க சும்மா உட்கார்ந்திருந்தீங்க! ஏன் ? ‘ என்று பழசையெல்லாம் மறு வாந்தி எடுத்தார் சிராஜ்
‘கடல், நா.கோ.ராமசாமியை விட பெருசுண்டுதான் ‘
‘இப்ப ?’
‘இப்பவும் கடல்தான் பெருசு !’
‘இந்த மாதிரி நொட்டுறதையெல்லாம் உங்க ஊர்லெ வச்சிக்குங்க. தைரியமே இல்லாத ஆளு நீங்க !’
‘இருக்கிட்டுமே, அதனாலே என்னா ?’ – துணிச்சலாக சொன்னேன்.
‘ம்ஹும்.. பத்து வருஷத்துக்கு முன்னாலெ, உங்க ஹஜ்ரத்தை கிண்டல் பண்ணி ‘கொடுக்கு’ண்டு கதை செஞ்சிருந்தீங்க. ஞாபகம் இருக்கா?’
‘ஹஜ்ரத்துக்கு ஞாபகம் இக்கிது!’
‘யோவ்.. இந்த வெடையிலாம் வேணாம். படிச்ச நீம்பரு எப்படி ஒரு சாதாரண ஆளு – சும்மா மேஜிக் பண்ணி ஏமாத்துறவன் – கிட்டே போயி தண்னி ஓதி குடிக்கலாம். நம்புறியுமா நீர்?’
‘தண்ணிலெ ஓதி ஊத முடியும்டா ?’
‘இல்லே..அப்படி செஞ்சா வியாதி பொய்டும்டு’
‘ஆமா.. ஆனா செய்றவங்க செய்யனும் ‘ என்றேன்
‘நீங்க குழப்பத்திலெ இருக்கீங்க’ – சிராஜ் குழம்பாமல் சொன்னார்.
எனக்கு ஏக எரிச்சல். குழம்பக் கூட ஒரு மனிதனுக்கு உரிமை இல்லையா ? என்ன உலகமய்யா இது..!
நான் பதிலுக்கு அவரை பிடுங்கினேன். பீரை விட வோட்கா உசத்தி.
‘பெரீய்ய்ய பெரியார் புடுக்கு நீங்க. துபாய் புறப்பட்டு வர்றதுக்கு முன்னாலெ எங்க ஊர் தர்ஹாவுலெ வந்து ஒரு ராத்திரி படுத்துட்டு வரலையா ?’
‘try பண்ணுனேன். lifeலெ ஒரு பாதி இதுலையிலாம் நம்பிக்கையில்லாம இருந்தாச்சு. ஒண்ணும் கிடைக்கலே. சரி, மாத்தி இருந்து பாக்கலாம்டு தோணிச்சி. success ஆனவன் நெறைய பேரு அந்த மாதிரி இடத்துக்கு போறானே.. ஏதும் இருக்குமோண்டுதான்..’
‘எனக்கும் அப்படி தோணியிருக்கலாம் ; இல்லையா கவிஞரே !’
சிராஜுக்கு இப்போதுதான் போதை போனது. ‘நீங்கதான் என் கவிதைத் தொகுதிக்கு முன்னுரை கொடுக்கனும்’ என்றார்.
அப்பாடா… எங்கே அவருடைய சந்தோஷம் இந்த மாதிரி திடீரென்ற மூண்ட விவாதங்களால் காணாமல் போய் விடவில்லை. பெரிய சந்தோஷம்தான் போலும். அவர் முன்னுரை கேட்டதில் எனக்கும் பரம சந்தோசம். என் நமைச்சல் கொஞ்சம் தீர்ந்தது. தவிர, முன்னுரை எழுத நான் தகுதியானவனும் கூட. அதுவரை ஒரு கவிதையும் நான் எழுதியிருக்கவில்லையே !
அலுத்துக் கொண்ட மாதிரி சொன்னேன் : ‘நம்ம பாஸ்கரன் கூட ‘தொடர்கதை உலக’த்திலே வர்ற அவர் தொ.க பத்தி என் அபிப்ராயம் கேட்டிக்கிறாரு. அதுக்கே என்னடா சொல்றதுண்டு முழிச்சிக்கிட்டிக்கிறேன்..’
‘என்ன கஷ்டம் ? உங்க தொடர்கதை நல்லா இருந்தது. இன்னும் படிக்கவில்லைண்டு எழுத வேண்டியதுதானே !?’ – சிராஜுக்கு சமயத்தில் நகைச்சுவை பிய்த்துக் கொண்டு வரும்.
நல்ல விமர்சனம், இல்லே ? இதையே நான் சிராஜுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
‘எங்கேயாச்சும் ஹோட்டலுக்குப் போயி டான்ஸ் பார்க்கலாமா ? புதுசா ஒரு மெட்ராஸ் ட்ரூப் வந்திருக்காம் ரவூஃப் ரெஸ்டாரண்ட் பக்கத்துலெ உள்ள ஹோட்டலிலே’ – சிராஜ் கூப்பிட்டார். இன்னும் சந்தோஷத்தை கொண்டாட வேண்டும் போல இருந்திருக்க வேண்டும். நட்சத்திர ஹோட்டலில் பெல்லி டான்ஸுக்கு செலவு செய்யக் கூட சிராஜ் ரெடி.
‘இன்னும் ரெண்டு மணி நேரத்துலெ ஃபஜர் வந்துடும். தூங்குங்க அண்ணே.. ரொம்பக் கேட்டா கீழே இறங்கி உகாண்டாக்காரியை போட்டுட்டு வந்து படுங்க ‘ – ஒரு பையன் சொன்னான். வழிகாட்டி.
‘அந்த கன்றாவிக்கு இங்கேயே பேசிக்கிட்டிக்கலாம். ஆமா.. எப்படி இவளுங்களை மனசு வந்து படுக்க வைக்கிறானுங்க !’ – கேட்டார்.
‘நிக்க வச்சி செய்றது சிரமம்டுதான்’ என்றான் அவன்.
சிராஜுக்கு ஏக குஷி. எழுந்து அனைவருக்கும் இஞ்சி தட்டிய சுலைமானி போட்டுக் கொடுத்து தூக்கத்தை விரட்டினார். பையன்கள் சீட்டு விளையாட ஆரம்பித்தார்கள் டி.வி.டியில் புளூஃபிலிம் பாத்துக் கொண்டே. முட்டாள்கள் நாங்கள் இலக்கியம் பேச ஆரம்பித்தோம். ஜெயமோகினி வராமல் என்ன இலக்கியம்? இன்னும் அவளது பத்மவேகம் பொறாமை கொள்ளவே வைக்கிறது. அப்புறம்.. பட்டுக்கோட்டை பாக்கருக்கு கதா விருது கிடைத்திருப்பது ; ஜானகிராமன் மொழிபெயர்த்த ‘குள்ளன்’ இன்னும் கையில் கிடைக்காமல் இருப்பது; பிரமீள் ஒருமுறை தன்னை ஒரு புறம்போக்கு மாதிரி சாதாரணமாக பெயர் குறிப்பிட்ட நிருபரை ஓங்கி அறைந்து விட்டு அதே சாதாரணத்துடன் போய்க் கொண்டே இருந்தது; பால் சக்கரியா என்று பேச்சு நீண்டது.
ஒரு முக்கியக் கண்டுபிடிப்பையும் நிகழ்த்தினோம். சொற்சிக்கனத்துக்கு புகழ்பெற்ற பிரபல எழுத்தாளர் பி. கலிங்கராஜின் பெரும்பாலான கதைகளில் காணாமல் போகும் எருமை உண்மையில் கலிங்கராஜேதான் என்பதே அது. இருவருக்குமே போதை போய் விட்டது என்று நினைக்கிறேன்.
‘உங்க மாதிரி ஆளுங்களாலே எங்களுக்கு என்னா பிரயோசனம் ?’ என்று ஒரு பையன் செம கேள்வி கேட்டான் சீட்டை விட்டு கண்ணைத் திருப்பாமலே.
சிராஜ் விளக்கமாகப் பேச ஆரம்பித்ததில் பையன்கள் தூங்கிப் போனார்கள். நல்ல வேளை, நான் சொல்ல ஆரம்பித்தால் இறந்தே போயிருப்பார்கள். இறப்பு இப்போதெல்லாம் சொல்லிக் கொண்டே வருகிறது.
எனக்கும் தூக்கம் கண்ணை சுழற்றியது.
எரிகிற கேஸ் ஸ்டவ்வின் மேல் படுக்கையை வைக்காததுதான் குறை என்கிற மாதிரி கூட்டம் உள்ள அறையில் நன்றாகவே தூக்கம் வந்தது. வோட்காவும் சிராஜின் சந்தோஷமும் அமைதியை கொடுத்திருக்க வேண்டும். கனவில் ஹஜ்ரது ‘கொடுக்கு’ என்றார்கள். முழித்தால் காலை மணி 11. சிராஜைக் காணோம். பிரியாணி கொண்டு வரப் போயிருந்தார்.
வெள்ளிக்கிழமையில் பிரியாணி அல்லது நெய்சோறு தின்றுவிட்டுத் தூங்காவிட்டால் தொழுத மாதிரியே இருக்காது.
மறு தூக்கம். ‘கொடுக்கு’ என்றார்கள் ஹஜ்ரத் மறுபடியும். அலறி விழித்தேன். அல்லாஹ்வே, இங்கிருந்து நாலு மணிக்கு புறப்பட்டால்தான் வியர்வை நீரூற்றில் குளித்தபடி ஆப்ரா வழியாக பர்துபாய் பஸ் ஸ்டாண்ட் போய் 61ஆம் நம்பர் பஸ்ஸைப் பிடிக்க முடியும். இல்லயென்றால் வார விடுமுறையில் வந்து உயிருக்கு உரம் போட்டுத் திரும்பும் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணற வேண்டியிருக்கும்.
சிராஜிடம் சொல்லிக் கொண்டு புறப்பட வேண்டியதுதான். வழக்கமாக , தூங்கும் ஒருவரை எழுப்ப தூங்கும் இன்னொரு ஆளைத் தட்டி உதவிக்கு அழைப்பதுதான் அறிவாளியான என் வேலை. சிராஜ் நண்பர். இன்னும் தன் சந்தோசத்தை சொல்லாத நண்பர் வேறு. நானே எழுப்பத்தான் வேண்டும்.
சிராஜ் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். வயோதிகத்தில் சுருங்க ஆரம்பித்த கன்னங்களில் கண்ணீர் காய்ந்திருந்தது.
எனக்கு மனம் வலித்தது. எவ்வளவு ஹாஸ்யம் நிரம்பிய எழுத்தாளன்! இருபது வருடங்களுக்கு முன்பு கணையாழி இதழில் வந்திருந்த அவரது ‘போர்ட்டர்’ கதையை வாசித்திருந்தால்தான் தெரியும். விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அந்தக் காலத்தில், மதறாஸுக்கோ நாகப்பட்டினத்திற்கோ பெரும் பெரும் பிரம்புக் கூடைகளுடன் கப்பலில் வந்து இறங்குவார்கள் சபராளிகள். இப்போதல்லவா வெறும் பிரம்படியோடு வருகிறார்கள்! அதை விடுவோம், அந்தக் கதைப்படி சிராஜ் மதறாஸ் போவார் – வெயிட் பார்ட்டியான தன் சொந்தக்காரரை இறக்கிக் கொண்டுவர. ஹார்பாரிலிருந்து இதோ இருக்கிற மண்ணடிக்கு ஐநூறு ரூபாய் கேட்பான் டாக்ஸிக்காரன். டாக்ஸியில் சாமான் தூக்கி வைக்கும் போர்ட்டரோ மறு ஐநூறு கேட்பான். மறுக்காமல் தெனாவெட்டோடு கொடுக்கப்போகும் சொந்தத்தைத் சத்தம்போட்டு சிராஜ் தடுப்பார். சண்டை போடுவார். பின் எக்மோரிலும் சண்டை. சொந்தக்காரர் சத்தம் போட்டதும்தான் சிராஜ் அடங்குவார் ஒருவழியாக. கடைசியில் ஊர் வந்து இறங்கியதும் ரயிலடியில் ஒரு போர்ட்டரைப் பார்ப்பார்கள். ‘எவ்வளவுடா?’ – அலட்சியமாக அவனிடம் கேட்பார் சொந்தக்காரர்.
‘ஒரு ரூவா தாங்க சாமி’
‘அயோக்கியப் பயலே… அதெல்லாம் முடியாது, நாலணாதான்!’
சொந்தக்காரரின் மனைவி பெயர் ‘சுமையா’ என்பது வேறு சிராஜுக்கு அந்த சமயத்தில் ஞாபகம் வரும்.
சிரிக்காமல் எப்படி இருக்க முடியும்? மன்னியுங்கள், கல்லுளிமங்கனான உங்களை சிரிக்க வைப்பதுபோல் எனக்கு எழுத வராது. அந்த சிராஜா இப்படிக் கண்ணீருடன்? நம்பிக்கைவாதியாயிற்றே… ‘கெளம்புறேன்.. ஆமா, என்ன விஷயம் ?’ என்று கேட்டேன்.
‘நாளையிலேர்ந்து விசாவோட வேலை கிடைச்சிச்சி – துபாய் ஏர்போர்ட்லெ. ஒங்களைப் போலவே அங்கே நானும் போர்ட்டர்’ என்றார். அந்த நொடியில் , உட்டச்சேரியில் , அவர் வீட்டு மாடியிலிருந்த சிமெண்ட் விமானம் தன் இன்னொரு இறக்கையையும் ஒடித்துக் கொண்டு வானில் பறந்தது.
(முடிவு)
https://abedheen.com/
H. Abedeen abedheen@gmail.com