டொரோன்டோவில் சேர்போன் வீதியும் குயீன் வீதியும் சந்திக்கும் அண்மைய பகுதிகளில் வீடற்றவர்களுக்கான விடுதிகள், ‘சல்வேசன் ஆமி’ போன்ற இலாப-நோக்கற்று இயங்கும் நிறுவனங்களென்று பல அமைப்புகளைக் காண முடியும். அண்மையிலொரு நாள் என் பணி நிமித்தமாக சேர்போன் வீதியால் நடந்து வந்து கொண்டிருந்தேன். வெப்பநிலை 34 பாகை சென்டிகிரேட்டைத் தாண்டி விட்டிருந்தது. தாங்க முடியாத அனல். வியர்வையால் உடல் குளித்துக்கொண்டிருந்தது. காற்றும் கூட அனலுக்கு அஞ்சி அமைதியாகவிருந்தது சூழலை மேலும் கொதிக்க வைத்துக்கொண்டிருந்தது. அப்பொழுதுதான் அந்தக் குரல் என்னைத் தடுத்து நிறுத்தியது.
“அண்ணை தமிழோ?”
அழைத்தது யாராகவிருக்குமென்று எண்ணியபடியே குரல் வந்த திக்கை நோக்கித் திரும்பினேன். அழுக்கு நிறைந்த கந்தல் ஆடைகளுடன் ஓரிளைஞன்; தமிழ் இளைஞன். உரோமம் மண்டிக் கிடந்த முகம். பிய்ந்து தொங்கிய சப்பாத்துகள்.
“ஓமோம் தமிழ்தான்”
“அண்ணைக்கு என்னோடை கொஞ்சம் கதைக்க நேரம் இருக்கா?”
எனக்கு உண்மையில் நேரமிருக்கவில்லை. இருந்தாலும் அவன் தமிழ் இளைஞனென்ற காரணத்தால் சிறிது நேரம் அவனுடன் கழிக்கலாமென்று எண்ணினேன். அத்துடன் கூறினேன்:
“பரவாயில்லை. நேரமிருக்கு. என்ன விசயம்?”
நான் அவ்விதம் கூறியதைத் தொடர்ந்து அவன் சிறிது நேரம் மெளனமாகவிருந்தான். அதனைத் தொடர்ந்து சிறிது கண் கலங்கினான். தொடர்ந்து கூறினான்:
“அண்ணை. இவங்கள் இமிகிரேசன்காரன்கள் எங்கை போனாலும் சாட்டிலைட்டாலை கண்காணிக்கிறான்கள். என்னாலை ஒன்றுமே செய்ய முடியாமலிருக்கு”
இதே சமயம் நான் இவனுடன் பேசிக்கொண்டிருந்ததை ஒருவித வியப்புடன் பார்த்தபடி பல்வேறு இனத்துப் பாதசாரிகளும் என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
“சாட்டிலைட் வைத்துப் பார்க்கிறான்களா? உனக்கெப்படித் தெரியும்?”
“அது எனக்குத் தெரியும். சல்வேசன் ஆமியிலைதான் சாப்பிடுறனான். அங்கை வைத்துத்தான் ஒரு கறுவல் சொன்னவன். எனக்கு சல்வேசன் ஆமி தந்த புதுச் சப்பாத்தையும் அவன் வாங்கிப் போட்டான். நான் அதைப் போடக்கூடாதென்று மாமா சொன்னவனாம்..”
“மாமாவா? யார் உன்னுடைய மாமாவா? மாமா இங்கையா இருக்கிறார்?”
“என்ரை மாமாவில்லை. பொலிஸ் மாமாதான் சொன்னவனாம். அதான் அதைக் குடுத்திட்டு இந்தப் பிய்ந்த சப்பாத்தைப் போட்டுக்கொண்டிருக்கிறன்.”
“ஓ! அந்த மாமாவைச் சொல்லுறயா?”
“ஓமண்ணை.”
“அது சரி. உனக்குக் குடும்பம் யாராவது இருக்கினமா?”
“ஓமண்ணை. என்ரை அக்கா, தங்கச்சி, அம்மா எல்லாம் இருக்கினம். ஆனால் அவங்களெல்லாம் எங்கை இருக்கின்றான்களென்று எனக்குத் தெரியாது. மற்றது…”
“மற்றது…”
“அவங்களை நான் பார்க்கக் கூடாது. கோர்ட் ஓர்டர். “
“கோர்ட் ஓர்டரா?”
“ஓமண்ணை. அது பெரிய கதை..அண்ணை இப்ப என்ன மணி”
“பத்தரையாகுது…”
“நான் மாமாவின்ற ஸ்டேசனுக்குப் போக வேண்டும். போய்க் கையெழுத்துப் போட வேண்டும்.”
அவனுக்குப் பின்னால் நிறைய கதைகள் இருக்கும்போல்பட்டது.
அப்பொழுது அவன் கேட்டான்: “அண்ணை, ஒரு இரண்டு டொலர் இருக்கா? பஸ்ஸுக்குக் காசு காணாது..”
எனக்கு முதலிலேயே அவன் இவ்விதம் கேட்கக் கூடுமென்று எண்ணமொன்று ஓடி மறைந்தது அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது. பொக்கற்றிலிருந்த ஐந்து டொலர்களை எடுத்துக் கொடுத்தேன்.
“ஏதாவது வாங்கிச் சாப்பிடு”
அவனுடன் மேலும் சிறிது நேரம் கதைத்ததிலிருந்து அவன் முன்பு பல பிரபல நிறுவனங்களிலெல்லாம் தொழிலாளியாக, உணவகங்களிலெல்லாம் சமையல்காரனாகவெல்லாம் வேலை செய்திருக்கின்ற விசயம் தெரிய வந்தது. அவ்விதமெல்லாமிருந்து இவ்விதமானதொரு நிலைக்கு வந்திருக்கின்றான். இவனைப் போல் பல பேரை டொராண்டோவின் வீதிகளில் அவ்வப்போது சந்திக்க முடியும். என் பாலயகாலத்தில் படித்த நண்பனொருவனும் இவ்விதம்தான் டொராண்டோ வீதிகளில் அலைந்து திரிவதாகப் பலபேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன், ஆனல் இதுவரையில் சந்தித்ததில்லை.
அவனிடம் விடைபெறும் போது கேட்டேன்:
“தம்பி. உன்னுடைய பேரென்ன?”
அவன் கூறினான்:
“மகிந்த ராஜபக்ச”
முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தம் ஒரு கணம் நினைவுக்கு வந்து மறைந்தது. முடிவுகள் சில சமயங்களில் விடிவுகளாக அமைவதுமுண்டு. அமையாமற் போவதுமுண்டு. அமையாத முடிவொன்றின் பிரதிநிதிகளிலொருவனாக இவன் இருக்கக்கூடும். புலம் பெயர்ந்து புலன் பெயர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். புலன் பெயர்ந்து புலம் பெயர்ந்தவர்களிலொருவனாக இவன் இருக்கக்கூடும்.
“என்ன சொன்னாய்?”
அவன் அழுத்தந்திருத்தமாக மீண்டும் கூறுகின்றான்:
“மகிந்த ராஜபக்ச”
(யாவும் கற்பனை)