பஸ்சுக்குள் நான் ஏறி உட்காரவும், பஸ் புறப்படவும் சரியாக இருந்தது. நேரத்தைக் கவனித்தேன். அதிகாலை ஐந்து மணி. முல்லைக்குடிக்குச் சென்றடையும்போது, பகல் பத்துமணி ஆகிவிடும்.
உள்ளத்திலே ஒரு படபடப்பு.
சென்ற வாரம் ஊரிலிருந்து திரும்பும்போது, அப்பாவிடம் வழிக்குவழி சொல்லிவிட்டு வந்தேன்.
“பெரியப்பா வீட்டு ஆளுங்ககூட எந்தப் பிரச்சினையும் வேணாம்பா…..”
வந்து ஒரு வாரந்தான் ஆகின்றது. அதற்குள் நேற்று மீண்டும் தகராறு. அதிகாலை மூன்று மணிக்கு பாலுமாமா போன்பண்ணுகின்றார்.
நேற்றிரவு பதினொரு மணிபோல அப்பாவும், கூட நாலைந்து பேரும், கையில் ஆளுக்கொரு வீச்சரிவாள் எடுத்துக்கொண்டு பெரியப்பா இடத்துக்குப் போக, அங்கே அவர்களின் கையிலும் வீச்சரிவாள்….!
பெரியநங்கை ஏரிக்கரையில் விளையாடியிருக்கின்றார்கள்.
நல்லவேளை, உயிர்ச் சேதம் எதுவுமில்லை. படுகாயங்களுடன் முல்லைக்குடி ஆஸ்பத்திரியில் அனைவருமே அட்மிட்.
முல்லைக்குடியிலுள்ள “பெரிய நங்கை ஏரி” எங்களது குடும்பச் சொத்து.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை, எனது அப்பாவின் சந்ததியர்கள் நிலக்கிழார்களாக இருந்திருக்கின்றார்களாம்.
முல்லைக்குடி கிராமத்தின் முக்கால்பங்கினுக்கு மேல்பட்ட நிலங்கள் எங்களுக்கே சொந்தமாக இருந்தன.
வருடந்தோறும் மாரிகாலத்தில் ஏற்படுகின்ற அடைமழை காரணமாக முல்லைக்குடி குளத்திலே ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கால் முதலில் பாதிக்கப்படுவது எங்கள் வயல்களே.
இதனைத் தடுக்கவும், கோடைகாலத்துப் பாசனத் தேவைகள் கருதியும், சுமார் முப்பது ஏக்கர் பரப்பளவில், என் அப்பாவின் பாட்டியார் “பெரிய நங்கை” அவர்களின் காலத்தில், உருவாக்கப்பட்டதுதான் இந்த “பெரியநங்கை ஏரி”.
அவரின் ஒரே மகன்தான் எனது தாத்தா.
என் தாத்தாவுக்குத் திருமணமாகி, என் அப்பா பிறந்த பின்புதான் – தாத்தா பற்றிய ஒரு உண்மை தெரியவந்தது.
பாட்டியைத் திருமணம் செய்யும் முன்னரே அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்து, அந்தப் பெண்ணுக்கு இரண்டு வயதில் மகன் ஒருவன் இருக்கின்றான் என்பதுதான் அது.
தன் கணவனை மீட்டுக்கொள்வதற்காக எந்த விலையையும் கொடுக்க முன்வந்தாள் பாட்டி. கொடுக்கப்பட்ட விலை, முல்லைக்குடி சொத்திலே சரிபாதி.
அவர்களின் விருப்பப்படி மேற்குப்புறத்து நிலத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு, கிழக்குப்புறத்தை நமக்கு எடுத்துக்கொண்டாள் பாட்டி.
ஆனாலும், மேற்குப்புற நிலத்திலேதான் பெரியநங்கை ஏரி இருக்கின்றது.
அதிலிருந்து, கிழக்குப்புற வயல்களுக்குத் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று, அவர்களுடன் சட்டபூர்வ ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.
அதேவேளை இரண்டு குடும்பங்களுக்கிடையே புகைச்சலும், அவ்வப்போ கொழுந்துவிட்டெழும் கலகங்களும் சகஜமாகிவிட்டன.
குடும்பத்துக்குள் ஏற்பட்ட பகையை காலங்காலமாக வைத்துச் சாதிக்க எனக்கு இஷ்டமில்லை. அதனால் நான், பெரியப்பாவுக்குரிய மதிப்பைக்கொடுக்க என்றுமே தவறியதில்லை.
இதன்பொருட்டு, எனக்கும்,என் அப்பாவுக்குமிடையே, கருத்து வேறுபாடுகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. பெரியப்பா குடும்பத்தாருக்கும், எங்களுக்குமிடையே அவ்வப்போ ஏதாவது பிரச்சினைகள்வரும்..தீரும். அவர்களின் பகுதி மக்களாலோ, அல்லது
எங்களின் பகுதி மக்களாலோ ஏற்படுகின்ற பிரச்சினைகள் எதுவானாலும், கடைசியில் அது எங்கள் இருகுடும்பத்தார் தலையில்தான் விழும்.
இந்த முல்லைக்குடியை விட்டு எப்போது வெளியேறலாம் என்றிருந்த எனக்கு, திருப்தியான சம்பளத்துடன் வெளியூர்க் கம்பெனியொன்றில் வேலைகிடைத்தது. இதில், அப்பாவுக்கு சிறிதும் இஷ்டமில்லை.
பெரிய பண்ணை வீடு .., வேலைக்கு ஆட்கள்.., வயல் வெளிகள்.., தோட்டங்கள்.., பெருத்த வருமானம்.., எல்லாவற்றையும் ஆண்டு-அனுபவிக்க ஒரே வாரிசான நான்…..! இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, வெளியூரில் போய் – வாடகைக்கு சிறிய ரூம்..,
கம்பெனிக் கேன்டினில் சாப்பாடு.., குறிப்பிட்டளவு சம்பளத்தோடு அடக்கமான வாழ்க்கை., கம்பெனி சகாக்களின் ஜாலியான நட்பு., என்பன எனக்கு எவ்வளவோ ஆறுதலைத் தந்தன.
சென்றவாரம் நான் எங்கள் ஊருக்குச் சென்றிருந்தபோது –
எங்கள் வீட்டுப் பசுக்களில் ஒன்று, மேலூர்பகுதி எல்லை வேலியை முறித்துக்கொண்டு, உள்ளே சென்று, பயிரை மேய்ந்துவிட்டது. பிடிக்க முயற்சித்தார்கள். ஆனால், அது பிடிபடாமல் வந்துவிட்டது. இதுதான் பிரச்சினைக்குக் காரணம்.
பசுவால் ஏற்பட்ட நஷ்டத்தைத் தருவதாக அப்பா ஒப்புக்கொண்டார்.
ஆனால், பெரியப்பா பகுதியிலிருந்து – நாம் வேண்டுமென்றே பசுவை மேயவிட்டதாகவும், அதற்காக குலதெய்வம் கோவிலில்வைத்து பெரியப்பா காலில்விழுந்து அப்பா மன்னிப்புக் கேட்கவேண்டுமென்றும் கோரியிருந்தார்கள்.
“இயல்பாக நடந்த தவறுக்கு ஏன் மன்னிப்புக் கேட்கவேண்டும்…?”
எங்களைச் சார்ந்தவர்கள் அனைவரின் மனதிலும் ஒரே கேள்விதான்.
பெரியப்பா பகுதியிலிருந்து வந்த கோரிக்கை தற்போது எச்சரிக்கையாக மாறியது.
அதனைத் தொடர்ந்து, பெரியநங்கை ஏரியிலிருந்து எமக்கு வருகின்ற
தண்ணீரையும் அடைத்துவிட்டார்கள்.
எங்கள் கீழூரே கொதித்தது. அப்பா சாமி ஆடத் தொடங்கிவிட்டார்.
சிறுவயதில் எனக்கு, அன்பு – பாசம் – சமாதானம் – என்றெல்லாம் சொல்லித்தந்த அப்பாவை நினைத்துப்பார்க்கின்றேன்.
அப்பப்பா…..! சூழ் நிலைகள் மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகின்றன.
வெகு சிரமப்பட்டு, அனைவரையும், சமாதானப்படுத்திக்கொண்டிருந்தேன்.
“வன்முறையால் எதற்கும் தீர்வுகாண முடியாது….” என்பது எனது முடிவு.
அப்பா பயங்கரமாக்க் கொதித்தார். கூட நின்றவர்களில் ஒருவர் தூபம் போட்டார்.
“ஒரு தடவையா…. ரெண்டு தடவையா…..! அந்தப் பயலுவ காலங்காலமா நமக்கெல்லாம் எம்புட்டு டாச்சர் பண்றாங்க….! நாமளுந்தான் எம்புட்டுக்கு பொறுத்திட்டுப் போறது…. இது சரிப்பட்டு வராது….. அவங்களா நாங்களாண்ணு நேரிலபோய் போட்டுப்
பாத்திடவேண்டியதுதான்…..”
உடனே நான் என் குரலை உயர்த்திப்பேசினேன்.
“இருங்க…. இருங்க…… நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க….சட்டம்-அதை நடத்த அரசாங்கம்ணு ஒண்ணு இருக்கு….அத நாம மறந்திடகூடாது….ஆரம்பகால பத்திரத்தின்படி, பெரியநங்கை ஏரில இருந்து, கீழூருக்கு தண்ணி பாச்சிறதுக்கு உரிமை
இருக்கிண்ணுதானே சொல்லியிருக்கு…. அதை அவுங்க தடுத்துகிட்டிருக்காங்க…. நடவடிக்கை எடுத்தா சட்டப்படியும், நியாயப்படியும் நமக்கு சாதகமாய்த்தான் தீர்ப்பு கிடைக்கும்….! அப்பிடியிருக்கிறப்போ நாமளும் பதிலுக்கு,பதில்
பண்ணிக்கிட்டிருந்தா…. அப்புறம்…. எல்லாமே தப்பாயிடும்…..”
“அப்பிடீன்னா…. என்னதான் பண்ணலாம்ணு சொல்றிய… .” ஒருவர் கேட்டார்.
எனக்கு ஆறுதலாக இருந்தது. நிம்மதியாக மூச்சு விட்டுக்கொண்டேன்.
“இந்தா பாருங்க….. முதல்ல இந்தப் பிரச்சினையெ போலீசுக்கு கொண்டுபோவோம்….! இப்ப வந்திருக்கிற எஸ்.ஐ ரொம்ப நல்ல மனிசன்னு சொல்ராங்க…. வர்ர பிரச்சினைங்களை பெரிசுபண்ணாமே பேச்சுவார்த்தை பண்ணியே தீத்துவெச்சு
ரெண்டுபார்ட்டியயும் சமாதானம் பண்ணிவெச்சு அனுப்பிடுராங்களாம்….”
பேசிமுடிப்பதற்குள் யாரோ குறுக்கிட்டார்கள். நக்கலாக வந்தது அவர் பேச்சு.
“அதெப்பிடி…. கோட்டில ஜஜ்ஜு பண்ணவேண்டிய வேலைய எப்பிடி ஒரு எஸ்.ஐ”
இப்போது நான் குறுக்கிட்டேன்.
“போதும் நிறுத்துங்கையா…. சாதாரணமா தனிப்பட்ட மனுசங்க ரெண்டுபேரு – சண்டை போட்டாலே ஊடையில பூந்து சமரசம் பண்ணிவெக்க மனசாச்சி இருக்கிற எந்த மனிசனுமே முன்வருவாங்க…. அப்பிடியிருக்கிறப்போ வெட்டிக்கிட்டு சாகாம….
ஆஸ்பிட்டலுக்கும், கோர்ட்டுக்கும்,வீட்டுக்குமா அலைஞ்சு துட்டையம், சொத்தையும்,டைமையும் காலிபண்ணாம நிம்மதியா ஜன்ங்க வாழணும்ணு ஒரு அதிகாரி நெனைச்சா அது உங்களுக்கு நக்கலாயிருக்கும்….! அதே டயிம்ல துட்டையெல்லாம்
புடுங்கிப்புட்டு…. இண்ணிக்கு வா…. நாளைக்கு வா……ண்ணு இழுத்தடிச்சுக்கிட்டிருக்கிற அதிகாரின்னா ரொம்ப குழுகுழுண்ணு இருக்குமில்ல….”
யாரும் பேசவில்லை. என் வார்த்தை வென்றது.
நினைத்த்துபோல, நியாயத்தை எடுத்துப்பேசி சமாதானம் செய்து அனுப்பினார் எஸ்.ஐ
மறுநாள் கம்பெனிக்கு புறப்பட்டுவிட்டேன். முகம் சுழிக்காமல் அமைதியாக இருந்தார் அப்பா. நான்தான் பேசினேன்.
“அப்பா….. நான் சொல்றதைக் கேளுப்பா….! சண்டை போடுறது தப்பு…. சமாதானமாய் இருக்கணும்னு எனக்கு சொல்லிச் சொல்லி வளத்ததே நீதாம்பா…..! இப்போ, சண்டைக்கு நீயே நிக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கப்பா….! எந்தவொரு
பிரச்சினைன்னாலும், அதை தீத்துவெக்க சட்டம் இருக்கில்லியாப்பா…..”
அப்பாவின் அமைதியைக்கண்ட நான் திருப்தியோடு புறப்பட்டேன்.
இது நடந்து ஒருவாரந்தான் ஆகிறது. அதற்குள் எங்கள் குடும்பத்து, “குழப்பக் கோவிலில்” மீண்டும் கொடியேறிவிட்டது.
நேற்று மதியம், பெரியப்பா நன்கு மது அருந்திவிட்டு, தெருவிலே வைத்து, சுடு சொற்களால் அப்பாவைத் திட்டியிருக்கின்றார். அதுமட்டுமன்றி, மீண்டும் தண்ணீரை அடைத்துவிட்டார்கள்.
இதன் பின்புதான், அங்கு வீச்சரிவாள் கலாச்சாரம் அரங்கேறியுள்ளது.
பஸ் முல்லைக்குடியை நெருங்கும்போது, பாலு மாமாவுக்கு போன் செய்தேன்.
“மாமா…. பெரியகோயில் கடந்து, ஊருக்குள்ளை பஸ்சு எண்டர் ஆகிரிச்சு…..”
மறுமுனையில் அவரின் குரலில் படபடப்பு தெரிந்தது.
“இந்தப் பிரச்சினைக்காக ஆஸ்பிட்டலுக்கு போலீஸ் எஸ்.பி, தாசில்தாரு, பத்திரிகைகாரனுக, டி.வி.காரனுக,போட்டோகாரனுகன்னு ஒரு பட்டாளமே வந்து இங்கோரி பண்ணுறாங்க…. இப்போ நீ வந்தேன்னா தேவையில்லாம உன்னயையும் இதுக்குள்ள
இழுத்துப்போட்டு, கோர்ட்டுக்கும், வீட்டுக்கும் அலைய வுட்ருவாங்க…. அதுக்காக நீ அடிக்கடி லீவு போட்டுட்டு வர்ரதும்,போறதுமாயிருந்தா அப்புறமா நீ பாக்கிற கம்பெனி வேலை உருப்பட்டமாதிரிதான்….”
பாலுமாமா சொல்வது சரியெனப்பட்டது. அவரிடமே ஆலோசனை கேட்டேன்.
“அப்பிடீன்னா, இப்போ நான் என்ன பண்ணணும்….?”
சிறிது யோசனையின் பின் பாலுமாமா பேசினார்.
“பரவாயில்லை…. அவங்க அதிகாலையிலேயே வந்திட்டாங்க…. இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவாங்க…. நீ ஒண்ணு பண்ணு….”
“சொல்லுங்க மாமா….”
“ஆஸ்பிட்டல் வாசல்ல இருக்கிற கேண்டீன்ல சாப்பிட்டிட்டு, அங்கையே வெயிட் பண்ணு….. உள்ளை உக்காந்துகிட்டே போலீசு ஜீப்பு, தாசில்தாரு காரு, பத்திரிகைக்காரனுவ,போட்டோகாரனுவ மோட்டார் சைக்கிள் எல்லாத்தையும் கவனி …. அவங்க
எல்லாம் கிளம்பினதுக்கு அப்புறமா நீ உள்ளை வா….”
“ஓகே மாமா…. இப்ப அவங்க விசாரணை எந்த அளவில இருக்கிண்ணு தெரியுமா..?”
கேட்டேன் நான். பாலுமாமா மெதுவாகப் பேசினார்.
“எங்க வக்கீலும் வந்திருக்காரு…. நைசா கதையைப் போட்டுப் பாத்தேன்…. தாசில்தார்கிட்ட டீ.வி காரனுவ பேட்டி எடுத்தாங்களாம்…. இதுக்கெல்லாம் என்னதான் தீர்வுன்னு கேட்டாங்களாம்….”
“அப்புறம்….. தாசில்தாரு என்ன சொன்னாங்களாம்….?’’ நான் கேட்டேன். பாலுமாமா தொடர்ந்து பேசினார்.
“அதுக்கு தாசில்தாரு சொல்லியிருக்காரு, “இதுமாதிரி வெட்டு,குத்து இனி வராம இருக்கணும்னா, ரெண்டு பகுதியையும் கூப்பிட்டு, இந்த ஏரிக்காக இனிமேல் எந்தவொரு பிரச்சினையும் பண்ணமாட்டோம்….” ணு ஒரு கண்டிசனைப் போட்டு,
ஒருவேளை அதை யாராச்சும் மீறினா…. அப்புறம் அது யாருக்குமே இல்லாமல் அரசுடமையாகும்னு எழுதி வாங்கணும்னு பேட்டி குடுத்திருக்காராம்…. சொல்லப்போனா, முடிவு இப்பிடித்தான் அமையும்போல தோணுது…..”
“அப்பிடீன்னா….. பெரியநங்கை ஏரி நெலமைதான் என்ன மாமா….?”
“அம்போதான்…. இந்த ஏரி காரணமாத்தானே நீங்க வெட்டிக், குத்திக்கிறீங்க….. புடுங்கிட்டா பொத்திக்கிட்டு இருப்பிய இல்லியா…..!”
“இப்பிடி ஒரு ஏற்பாட்டோட நோக்கந்தான் என்ன மாமா…..?”
“இன்னுமா உனக்குப் புரியல்லை…. வம்பு பண்ணினா யாருக்குமே இல்லாமல் போயிடும்ங்கிற பயம், எல்லார்கிட்டயும் இருக்குமில்லியா…. அப்பிடியிருக்கிறப்போ ஏதும் பிரச்சினை வந்தாலும், பெரிய அளவில போகாம இவங்களுக்குள்ளையே ஒரு
சமரசத்துக்கு வந்தே ஆகணுகிற கட்டாயம் உண்டாகுமில்லியா…..”
புரிந்துகொண்ட திருப்தியுடன், பஸ்சை விட்டு இறங்கி கேண்டினை நோக்கி நடந்தேன். நினைத்துப் பார்க்கும்போது, பொதுவான உண்மைகள் எனக்குள் பளிச்சிட்டன.
எந்தவொரு இனத்திலோ, அல்லது சமுதாயத்திலோ பிரிவினை, உயர்வு-தாழ்வு கடைப்பிடிக்கப்படும் சூழ்நிலை நிலவுகின்ற வேளையில், அந்த இனமோ, அல்லது சமுதாயமோ பிறிதொரு ஆதிக்க சக்தியால் நசுக்கப்படும் நிலை வருமேயானால்,
நசுக்கப்படுகின்ற இனத்தில் அல்லது சமுதாயத்தில், பேதங்கள் மறந்து ஒற்றுமை தலைதூக்கும். இது தவிர்க்கமுடியாத உண்மை.
கேண்டினில் சாப்பிட்டுவிட்டு கை அலம்பும்போது, அதிகாரிகளின் வண்டிகள் அனைத்தும் புறப்பட்டுச் செல்லத்தொடங்கியதைக் கவனித்தேன்.
ஆஸ்பத்திரிக்குள் சென்று அப்பாவைப் பார்த்தபோது, அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவருக்கு வலப்புறமாக கட்டிலில் அமர்ந்துகொண்டேன்.
என் கரங்கள் இரண்டையும் சேர்த்துப் பற்றினார் அப்பா. என் கண்களிலும் கண்ணீர்.
இத்தனை அன்போடு, அப்பா எனது கரங்களைத் தொட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. கணப்பொழுதுக்குள் நான் குழந்தையாகி, அப்பாவின் நெஞ்சிலே குப்புறப் படுத்துத் தூங்கிய பசுமையான காட்சி, மனத்திலே தோன்றி என்னை உறைய
வைத்தது.
அப்பாவே பேசினார்.
“என்னப்பா…. அப்பாமேல கோவமா….”
கனிவு தெரிந்தது. கட்டுப்பாடு இல்லாமல் கண்ணீர் பெருகியது.
“அமைதியையும், சமாதானத்தையும் சொல்லிக்குடுத்த அப்பாவா இண்ணிக்கு சண்டைக்கு போனாண்ணு யோசனை பண்ணுறியாப்பா….. நீயாவது ஓங்காலத்தில அமைதியா இருக்கணும்னு நெனைச்சித்தான் நான் சண்டைக்குப் போனேன்….”
அப்பாவின் பேச்சு எனக்குப் புரியவில்லை. நெற்றியைச் சுருக்கியபடி, கேள்விக் குறியோடு பார்த்தேன். மீண்டும் அப்பாவே பேசினார்.
“குழப்பமா இருக்காப்பா….. நம்ப நாட்டில புனிதமா நெனைக்கிற ராமாயணம், மகாபாரதத்திலகூட அன்புக்கும், அமைதிக்கும், பொறுமைக்கும் மதிப்பு இல்லாம போனப்ப போர்தான் தீர்வு குடுத்திச்சு…. அதுக்காக என்னய ராமன்னோ இல்ல தர்மன்னோ
சொல்ல வரல்ல…. கலகம் பொறந்ததுக்கு அப்புறமாத்தான் எத்தினையோ பெரச்சினைங்களுக்கு தீர்வும்,தெளிவும் கெடைச்சிருக்கு…..!
கோடு, கச்சேரின்னு அலைஞ்சு…. காலத்தையும், காசையும் வீணடிச்சு…. வழக்குவாய்தால தீர்வு கெடைக்கிறப்போ…. ஏரி மட்டும்தான் மிச்சமிருக்கும்….. பயிர்பண்ண வயல்வரப்புண்ணு எதுவும் இருக்காது…. வழக்குச்செலவுக்கிண்ணு எல்லாம் வித்துச்
சுட்டுக் காலிபண்ணி முடிஞ்சிருக்கும்…. ஆனா, நேத்துக் கலவரம் – இண்ணிக்கு தீர்வு…. வந்தா வாழ்வு…. போனா சாவு…. உன் மாமன் பாலு சொல்லியிருப்பானே…..”
சொல்லியபடி பாலுமாமாவைப் பார்த்தார். “ஆம்” என அவரும் தலையசைத்தார்.
இப்போது நான் வாய் திறந்தேன்.
“ஏம்பா…. சட்டுப்புட்டிண்ணு தீர்வு கெடைக்கணும்னு இப்பிடி வேண்டாத வேலைய எல்லாருமே கையில எடுத்துக்கிட்டா முடிவு என்னப்பா…. இதுதான் வழிமுறையா….?”
அமைதியாகப் புன்னகைத்தார் அப்பா.
“நீ மொதல்ல ஒண்ணைத் தெரிஞ்சுக்க…. எங்கப்பன் சுயநலத்தோட சிரிச்சுக்கிடே பண்ணின பாவத்த…. அவன்புள்ள நானு, அழுதுகிட்டுத்தான் கழுவணும்….. இது எனக்கு மட்டுமில்ல…. தன்னோட புள்ளை குட்டிங்க வருங்காலத்தில நல்லாயிருக்கணும்னு
நெனைக்கிற எந்தப்பயலுமே சுயநலத்தை தூக்கி எறிஞ்சிடணும்…. அப்பிடி ஒரு நல்ல நெனைப்பு எல்லாரு மனசிலயும் வர்ரப்பதான் அவங்களோட புள்ளகுட்டிக்கும் தப்புதண்டா பண்ணாம இருக்கணும்கிற நெனைப்பே வரும்…. இல்லையாண்ணே…..”
கேட்டபடி பக்கத்துக் கட்டிலைப் பார்த்தார்.
அப்போதுதான் கவனித்தேன் ….! அங்கே காயக் கட்டுக்களுடன் பெரியப்பா….!
கண்கள் நிறைந்த கண்ணீருடன் என்னைப் பார்த்தார்.
“நாங்கதான் படிக்காம இருந்து, முட்டாப்பயலுவளா வாழ்ந்திட்டோம்…. படிச்ச நீங்களாச்சும் மனிசனா இருங்கப்பா…. உங்கப்பன் சொல்றது மட்டுமில்லை…. அண்ணன், தம்பின்னு பொறந்திடுறதாலயோ, இல்லே, சிரிச்சுப் பேசி உறவுகளைச்
சொல்லிக்கிறதாலயோ , உருப்படியா நடக்கப்போறது ஒண்ணுமே இல்லே….. அதை மனசாரப் பண்ணணும்…. அதுக்கு அப்புறமும், இப்பிடி நெலமைய இருக்கும்னா உனக்கு முன்னாடியே என் காதை அறுத்து வெச்சுப்புடுறேன்….பாரு….”
அதுவரை அங்கு அமைதியாக நின்ற பாலுமாமா பெரியப்பாவின் அருகே வந்தார்.
“ஏன் மாப்புள…. இம்புட்டு நேரமும் எம்புட்டுப் பெரிய உண்மைய எடுத்துச் சொல்லிக்கிட்டிருந்தே…. நானும், நீ சொல்றதைக் கேட்டுப் பூரிச்சுப்போய் நிக்கிறப்ப, கடேசியில வேதாளம் முருங்க மரத்தில ஏறின கதையா, அருவா கலாச்சாரத்த
விட்டுக்குடுக்காம, காதை அறுப்பேன்….மூக்கை அறுப்பேன்னு எகிறிப்புட்டியே…..”
வலிகளை மறந்து, பெரியப்பாவும் அப்பாவும் சேர்ந்து சிரித்தார்கள். அதில் நானும் கலந்துகொண்டேன்.
bairaabaarath@gmail.com