சிறுகதை: திரிபு

கமலாதேவி அரவிந்தன்வியர்வையில் ஊறிய டீ ஷர்ட்டும், மெது ஓட்டத்துக்கான ஜோகிங் ட்ரேக் கால்சராயுமாய், கல்சீட்டில் வந்தமர்ந்த சசிரேகாவுக்கு மூச்சு வாங்கியது. நியாயப்படி ஜோகிங் செய்பவர்கள் பாதியிலேயே இப்படி வந்தமர்வதில்லை.  மூன்று ரவுண்டு ஓடிவிட்டுதான் சசிரேகாவும் வந்து அமர்ந்தாள். அதற்குமேல் மெது ஓட்டமல்ல, நடைகூட கஷ்டமாக இருந்தது,. பேசாமல் அமர்ந்து பார்க்கில் ஓடிக்கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். ஆண் ,பெண் ,பேதமில்லாமல் மனிதர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். அந்த காட்சியும் கூட கொஞ்ச நேரத்துக்குமேல் உவப்பாயில்லை. எதிர்சாரியிலிருந்த உடல் பயிற்சி தளத்தில் கண்களை ஓட்டினாள். அந்த திறந்த வெளிச்சாலையில், இளைஞர்களும், வயதானவர்களும், கைகால்களை அசைத்தும் வளைத்தும், உடல்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

நான்கு மாதங்களாய் கடுமையாக, தானும் உடல்பயிற்சியில் ஈடுபட்டு வருவதை நினைத்தபோது  சசிரேகாவுக்கு துக்கமாக இருந்தது. உடல்பயிற்சி செய்யும் எல்லோருக்குமே உடம்பு குறைகிறது.ஆனால் சசி ரேகாவுக்கு மட்டும் ,ஒன்றோ இரண்டோ கிலோதான் குறையும். எப்படி கஷ்டப்பட்டாலும் அந்த உப்பல்தேகம் மட்டும் குறையவே இல்லை. ரொம்ப சிரமப்பட்டு பயிற்சி செய்வதெல்லாம் சரி, ஆனால்” வாயைக்கட்டுகிறாயா?” என்று அம்மா மரகதம் கத்தும்போதுதான் கோபம் வருகிறது. அதற்கு இவள் என்ன செய்ய முடியும்? உடல் பயிற்சி முடிந்து வீடு திரும்பும் வழியில் தான் ,K.F.C பில்டிங் கைக்கடக்கமாய் நின்று கொண்டு இவளைப்பார்த்து  குசலம் விசாரிக்கிறது.  என்ன ? என்று மென்னகையாய் இவளைப்பார்க்க, நின்று ஒரு வார்த்தை பேசலாமா என்று யோசிப்பதற்குள், மொறு மொறு கெண்டக்கி சிக்கனும், ஃப்ரென்ச் ஃப்ரைஸும், ஸ்மேஷ் பொடடோஸும், மனசையும் நாவையும் அலைக்கழிக்க, ஹ்ம்ம்ம்..பிறகென்ன ?  சம்பிரம்மமாய் அமர்ந்து ஒரு வெட்டு வெட்டிவிட்டுத்தான்  சசிரேகா நடையைத்தொடர்வாள். வேறு என்ன தான் செய்வது? முதலில் நாவை அடக்கணும், பிறகு ருசியை மறக்கணும்.அப்பதான் அந்த உப்பிய முகமும், கனத்த உடம்பும் கொஞ்சமாவது கட்டுக்குள் வரும், என்று அம்மாவும், டயட்டீஷியனும், ஏன் தோழிகள் கூட, புத்திமதி சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டார்கள். அது மட்டும் சசிரேகாவால் முடியாது. பசிநேரம் வந்தால்தான் சாப்பிடணும் என்றில்லை. பசி வரும் முன்னரே நொறுக்குத்தீனியாக சிப்ஸ், வறுத்த கச்சான், போக்கனா,என எது கிட்டுதோ, சாப்பிடுவாள். சாப்பாட்டு நேரத்திலும் எது உண்டோ, இல்லையோ,ஒரு துண்டாவது மீனோ, கோழித்துண்டோ, அவசியம் வேண்டும். அது மட்டும் இல்லாமல் சசிரேகாவால் சாப்பிடவே முடியாது. இத்தனைக்கும் சசிரேகா ஒன்றும் சாப்பாட்டு ராமியல்ல. ஆனால் ருசிநாடும் சாப்பாட்டுப்பிரியை தான் என்பதை மறுப்பதற்கில்லை.  என்ன செய்ய?

ஆரம்பத்தில் இவளை குண்டு என்று சொல்லத் தயங்கியவர்கள் கூட, இப்போதெல்லாம் கூசாமல், அடைமொழியிட்டே, அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். தோழிகள் எல்லோரையும் விடவே இவள் கொஞ்சம் குண்டுதான். இதனாலேயே   இவள் பல கடைகள் ஏறி இறங்க வேண்டியிருந்தது. உடைகளும் அப்படி ஒன்றும்  லேசில் கிட்டாது. அலையாய் அலைந்து ,தப்பித்தவறி ஆசைப்பட்டுப்போய், வாங்க முயற்சித்தால் , சத்தியமாய் அந்த உடை இவள் சைசுக்கு இருக்காது. பிறகுதான் உடல்பயிற்சிக்குப் போகவேண்டிய அவசியம் பொட்டிலறைந்து கொண்டு உறைத்தது. சசிரேகா மூச்சு வாங்க வாங்க ஓடினாள். உடல் களைக்க களைக்க  பயிற்சி செய்தாள். திணறத்திணற , குனிந்தும் நிமிர்ந்தும். கைகால்களை  போட்டு அப்படி  கஷ்டப்படுத்தியதில் வஞ்சனையின்றி உடம்பிலிருந்து வியர்வை ஆறாய் ஓடியது. அடைத்து விடைத்துக் கிடந்த ஊளைச்சதையெல்லாம் குறைந்துவிடும் என்றுதான் சசிரேகாவும் நம்பினாள்.
ஆனால் வரும் வழியில்” கெண்டக்கி சிக்கன், அல்லது, சிக்கன் ரைஸ், ஏன்,  ஹோக்கியன் மீ, “ கூட அவள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டது.

டயட்டீஷியன் சசிரேகாவை கோபித்துக்கொண்டார்.. உடல்பயிற்சியாளரும் கூட முறைத்தார். ஆனால் அம்மா மட்டும் கடுமையாகத் திட்டினாள். இதொன்றும் அவளுக்குப் பெரிதாகப் படவில்லை.ஆனால் உடன் வேலை செய்யும் மோஹன் சொல்கிறான்.

” சேச்சே, என்ன பேச்சு பேசறே? ரஹிமா கொஞ்சம் தடிதான், அதுக்காக , போயும் போயும் சசிரேகா கூடயா ஒப்பீடு செய்யறே?
சசி என்னா சைசு?  ரஹிமா, பாவம் , ! சசி கூட ஒப்பிடும்போது ரஹிமா தடியே  இல்லையே ? ”

மதியம் லன்ச் டைமில் முகம்மதுவிடம் மோஹன் அடித்த கமென்ட் இது. கேட்டுக்கொண்டிருந்த சசிரேகாவுக்கு மூச்சே நின்றுவிடுவது போலாகிவிட்டது.கேட்காதவள் போல் நடிக்க, முகத்தை ஒன்றுமே இல்லாமல் வைத்திருக்க ,அந்த பாடு பட்டாள். மனசெல்லாம் அப்படி வலித்தது. அன்றுதான் அவள் சாப்பாட்டை பாதியிலேயே விட்டு விட்டு எழுந்து போனாள்.

மாலை வரை ஒரு டீ கூட குடிக்கவில்லை. குளிர்பானம் கூட தொடவில்லை.ஆனால் இரவு வருவதற்குள் சசிரேகா தளர்ந்துபோனாள்.
சிறுங்குடலை பெருங்குடல் விழுங்க தவித்துப் போனாள்.நள்ளிரவு நெருங்கும்போது பசி தாங்காமல், சோறும் மீன் குழம்பும் , அள்ளி வாரி சாப்பிட்டாள். அப்படியும் பசி ஆறவில்லை. இரண்டு துண்டு பிரெட் டில் பட்டரும் ஜாமும் தடவி சாப்பிட்டாள். உபரியாக ஒரு கிளாஸ் நிறைய ஆரஞ்சு ஜூசும் உள்ளே போனபிறகு, தான் உடம்பு உடம்பாகியது .இவளும்  மனுஷியானாள்..

சசிரேகா தொடர்ந்து உடல்பயிற்சி செய்தாள், இந்த முறை டயட்டிஷியன் கூறியபடி சாப்பிட முயற்சி செய்தாள். இரண்டு துண்டு ரொட்டித்துண்டும், அவித்த காய்கறியும் பார்த்தாலே குமட்டிக்கொண்டு வந்தது. மனுஷி சாப்பிடுவாளா இதை? —
இந்த அல்லாடலில் இவள் தவித்துக் கொண்டிருக்கும்போது தான் ,ஒரு நாள் அந்த மனிதரைப் பார்த்தாள். ஒரு சின்ன நாய்க்குட்டியைத் தூக்கிக் கொஞ்சிக் கொண்டும், பிறகு கொஞ்ச நேரம் அதை நடக்கவிட்டும், நாயின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த, அந்த மனிதரைப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு நாள் இவள் ஓடிக்களைத்து , அமர்ந்த போது எதேச்சையாக , அதே இருக்கையிலேயே  அவரும் வந்தமர்ந்தார்.

 “ என்னுடைய ஜோனி, “ என்று பெருமையாக அந்த மனிதர் நாயை அறிமுகப்படுத்த, சசிக்கு எப்படி ரியாக்ட், பண்ணுவதென்றே தெரியவில்லை. சிரித்து வைத்தாள். இப்படித்தான் தொடங்கியது சசிக்கும் கிறிஸ்டபருக்குமான நட்பு. ஒருநாள் பேச்சு வாக்கில், ’” உனக்கென்ன ஒரு 35 வயதிருக்குமா? ”என்று கேட்க, சப்த நாளங்களும் ஸ்தம்பிக்க விக்கித்துப் போனாள். அதற்குப் பிறகு
அந்த ஆளிடம் பேசவே பிடிக்கவில்லை. நேருக்கு நேர் சந்தித்தால் கூட” சரிதான் போய்யா,” என்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.  24 வயசு கூட நிரம்பாத தன்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்க எப்படி மனசு வந்தது? முதன்முதலாக அவளுக்கு அழுகை வந்தது.சுய பச்சாதாபத்தில் மளமளவென்று வழிந்தது கண்ணீர்.

“இப்படி அழுவதற்கு உனக்கு வெட்கமாயில்லை? கிண்ணென்று ’திண்ணக்கமாய் அதட்டியது ஒரு குரல். யாரிந்த அசரீரி, என்று சுற்று முற்றும் பார்க்க, யாருமே இல்லை. குமுறிக்கொண்டிருந்த சசிரேகாவுக்கு ஒரு வினாடி ஒன்றுமே புரியவில்லை. யார் தன்னிடம் பேசினார்கள்?

 “இங்கே பார் “ ! பார்த்தாள். அட, மரம்,! மரம் எங்காவது பேசுமா ? மீண்டும் சுற்றும் முற்றும் பார்க்க,  இவளைவிட இன்னும் கொஞ்சம் மட்டுமே உயரமுள்ள  ஒரு சின்ன மரம், ஆனால் தெனாவெட்டான மரம் ஒன்று தான், அருகில் நின்று கொண்டிருந்தது.
அந்த பார்க்கில் இந்த சைசில் தான் எல்லா மரங்களுமே இருந்தன. ஆனால் பார்க்க அழகாயிருந்தன அந்த மரங்கள்.  சசிரேகாவுக்கு கோபம் தாங்கவில்லை. போயும் போயும் ஒரு மரமா எனக்கு புத்திமதி சொல்லணும் ? இந்த அக்றிணைக்குக் கூடவா நான் கேடு கெட்டுப்போயிட்டேன்?

” ஏன் மரங்கள் என்றால் என்ன மட்டம்?  உனக்கு ஏன் இப்படி கோபம் வருகிறது?? முதலில் என்னைப்பார்,  நான் மரம் தான்,
என்றாலும் எப்படி திண்ணக்கமாய் நிற்கிறேன் பார்! வெடவெடவென்று , எப்படிஒடிய ஒடிய நிற்கிறேன் பார், பச்சைப்பசேலென்று என்னுடைய இலைகள் கூட என்ன அழகு பார், வேர் கூட எப்படி  அடி தழுவி,மண்ணுக்குள் பொசிந்துபோய் நிற்கிறது பார், ! என்னால் தான்  இந்த பூமிக்கு என்னென்ன பலன் தெரியுமா?”

”அப்படியென்றால் என்னால் யாருக்குமே எந்த பலனுமே இல்லை என்கிறாயா?“

“அதை நீ தான் யோசித்து முடிவெடுக்கணும்?  என்னை ஏன் கேட்கிறாய்?“

“நானா உன்னிடம் பேச வந்தேன்? நீ தானே வலிய வந்து என்னை வம்புக்கிழுக்கிறாய்?“

’யெஸ், நானே தான்’ என்பதுபோல் ஒரு குலுக்கு குலுக்க,பன்னீர்த்தூவலாய் ரேகாவின் மேல் சிதறி விழுந்தது நீர்த்துளிகள்.

”முதலில் நீ ஏன் இப்படி அழுகிறாய்? !எனக்கு அழுகிறவர்களைக் கண்டாலே பிடிக்காது. அமைதியாக உட்கார்ந்து யோசித்துப்பார்,
இந்த பார்க்கில் ஓடுகிறவர்களில் பாதிப்பேராவது  இந்த மரத்தின் கீழ் வந்து உட்காராமல் போவதில்லை. இத்தனைக்கும் நானொன்றும் கொப்பும் கிளையுமாய், இலை தழைகளோடு நிழல் குடை கூட விரிப்பதில்லை, என்றாலும் என்னை எல்லோரும் நேசிக்கிறார்கள், ஏன் தெரியுமா? நான் அழகாயிருக்கிறேன், அதுதான் காரணம், “

அவ்வளவுதான் , சசிரேகா விசித்து விசித்து அழுதாள்.” நான் அழகாயில்லாதது என் குற்றமா? ”

”நீ அழகாயில்லை என்று யார் சொன்னார்கள், நீ கொஞ்சம் பூசல் உடம்பு ,அவ்வளவுதான்.முதலில் இந்த உப்பல் மட்டும் குறைந்து விட்டால் உன்னை விட அழகி இங்கு யாரிருக்க முடியும்? “

சசிரேகா அப்படியே மலர்ந்து போனாள். கண்ணீர் சட்டென்று நின்றுவிட்டது.

“அதற்கு முதலில் நீ மனக்கட்டுப்பாட்டுடன் உணவைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்”

சசிரேகா பதில் சொல்வதற்குமுன் சடசடவென்று மழை தூரல் போடத்தொடங்கிவிட்டது. சசிரேகா ஓடினாள். அன்றிரவு அவள் சாப்பிடவில்லை. பசி எடுக்காதது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் மனம் முழுக்க மரத்தின் , உன்னை விட அழகி யாரிருக்க முடியும்?,
என்ற வாசகமே  பொம்மலாட்டம் போட்டது. ஒரே வாரத்தில் சசிரேகா 4 கிலோ குறைந்தாள், 2 வது வாரம் இன்னும் 3 கிலோ குறைந்தாள், . இரண்டே மாசத்தில் சசிரேகாவின் உடல் ஒரு கட்டுக்குள் வர முயலலாம் என உறுதியைக்காட்டியது.ஆனால் அப்பொழுதும் சசிரேகா குண்டுதான். விடாப்பிடியாக சசிரேகா உடல் பயிற்சி செய்தாள்.  வெட்டிய சாலட்,பிடிக்கவில்லயானாலும் கஷ்டப்பட்டு சாப்பிட்டதில், ஒரு சமயத்தில் அவளுக்கு சாலட் பிடித்தும் கூட போனது. யோகா வகுப்பில்  சேர்ந்ததில் ஒரு நண்பன் கிட்டினான். அவனுடைய அறிவுரைப்படி இருவரும் சேர்ந்து செய்யலாம் , என்ற வழமையில் சசிரேகா தொடர்ந்து யோகா செய்தாள். மூச்சுப்பயிற்சி முதலில் தான் கஷ்டமாகத்தான்  இருந்தது,. நண்பன் மேத்யூவின் அருகாமையால் பிறகு அதுவும் கைப்பிடிக்குள் வந்துவிட்டது,. சசிரேகா ஒன்றை மட்டும் புரிந்து கொண்டாள். விடாது முயற்சி செய்தால் எதுவுமே சிரமமில்லை.

இப்போதெல்லாம் சசிக்கு நிறைய நண்பர்கள் தொலைபேசினார்கள். சதா போனை கட் செய்வது கூட அவளுக்கு பெரிய இன்பமாக இருந்தது. இந்த நேரத்தில் தான், ஒரு நாள் ஜோகிங் பார்க்கில், முன்பு  சந்தித்த அதே மனிதர், கிரிஸ்டபர் அவள் அருகே வந்தமர்ந்தார்.

” நீ ரொம்ப அழகாயிருக்கிறாய்? “ என்று அவர் கனிந்த குரலில் சொல்ல சசிக்கு கோபம் கோபமாய் வந்தது.

” எனக்கென்ன வயதிருக்கும் ?” என்று நினைக்கிறீர்கள் என்று கேட்க நினைக்கு முன்னரே, ”இப்பொழுது உன்னைப்பார்த்தால் 20 வயது கூட சொல்லமாட்டார்கள்” என்று கிரிஸ்டபர் சொல்ல, சசிக்கு நாணிக்கண் புதைக்கும் வெட்கம் வந்தது.

மீண்டும் அவர்கள் நட்பு தொடர்ந்த வேளையில் , வீட்டில் அம்மா அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். அவளுக்கு முற்றிலும் அறிமுகமே இல்லாத ஆண்களை மணக்க விருப்பமில்லை. யோகா வகுப்பிலும் மேத்யூ அவளை விரும்புவதாகச் சொல்லியிருந்தான். சசிக்கு யாரை தேர்வு செய்வது என்றே தெரியவில்லை. அப்பொழுதுதான் மேத்யூ அவளை ஒருநாள்  ”,ஹோட்டலில் சிலமணிநேரங்கள் இன்பமாயிருக்க வரமுடியுமா” என்று கேட்க , இடி விழுந்தாற்போல் திகைத்துப்போனாள். மேத்யூ இவளை மட்டுமல்ல, ஹோ ஸ்வீ, ரோஸ்மி, போன்றோரையும் கூட அழைத்திருக்கிறான் என்பது தெரிய வர, சீ, என்றாகிவிட்டது. மற்ற ஆண்களும் கூட டேட்டிங் என்ற பெயரில் உடல் இச்சைக்கே அழைக்கிறார்கள், என்று தெரிந்தவுடன் சசிக்கு வெறுப்பும் வேதனையும்
சொல்லி மாளாது.

-”அன்று பார்க்கில் ஓடிக்கொண்டிருக்கும்போது, எதிரே வந்தார் கிறிஸ்டபர்,. முதலில் குசலம் விசாரித்தபின், ” நாம் இப்படியே கொஞ்சம் நடந்துகொண்டே பேசலாமா? ” என்று அன்போடு அவர் அழைக்க , தொடர்ந்தாள். ”மனைவி இறந்துபோய் 3 வருடம் ஆகிறது, இதுவரை நான் ஒரு திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை, ஆனால் உன்னைப்பார்த்தபிறகுதான் எனக்கு அந்த ஆசையே வந்திருக்கிறது.
நீ விரும்பினால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் ? என்ன சொல்கிறாய்? ”

சசியால் பேசவே முடியவில்லை. 24 வயது கூட நிரம்பாத தனக்கு 51 வயதுக்காரர் ஒருவருடனா திருமணம்?

உடல் இளைத்தது மகிழ்ச்சியே. ஆனால் இப்படிப்பட்ட  கோணத்திலிருந்தும் வில் அம்புகள் அவளைச் சூழும் என்பது அவள் எதிர்பாராதது.
கிறிஸ்டபரிடமிருந்து எதையோ சொல்லி , விடுபட்டு ,விச்ராந்தியாய் மரத்தினடியில் வந்தமர்ந்தாள். வழக்கம் போல் மரம் அதட்டியது.

“ ஏன் எதற்கெடுத்தாலும் இப்படி இடி விழுந்தாற்போல் கவலைப்படுகிறாய்? ஆண்கள் இத்தனை பேர் விரும்புகிறார்கள், என்றாலே, நீ அழகாக இருக்கிறாய்,  என்றுதானே அர்த்தம்? ”

” அதற்காக , ? –“

” இதோ பார்,  சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டு இப்படி கம்பளிப்பூச்சியாய் இருக்கிறாயே? வாழ்க்கையை அதனதன் போக்கில் அப்படியே
எடுத்துக் கொள்ளக் கூடத் தெரியவில்லையென்றால்,பிறகு நீ என்ன பெண்? “

” என்னை என்ன செய்யச்சொல்கிறாய் ? “

” பேசாமல் என்னையே கட்டிக்கோயேன்.எனக்கென்ன குறைச்சல் ? “
 ,
அதிர்ச்சியின் எல்லையில் சசிரேகா, மரம் கேலி செய்கிறதா, என்று பார்க்க,மரமோ அசையாது, கம்மென்று திடுதண்டியாய் நின்று கொண்டிருந்தது. அடுத்த கணம் என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லாதவளாய், சசிரேகா  இரண்டு கைகளாலும் மரத்தை  ஓங்கி  ஓங்கி அடித்தாள். கால்களாலும் மரத்தை  எத்தி எத்தி உதைத்தாள் .” நீ,  நீ, நீயா  என்னை ”–” என்று மரத்தைபோட்டு வெறி பிடித்தாற்ப்பொல் குலுக்குவதைப் பார்த்து, ஏய், ஏய், என்று பாதசாரிகள் அவளைப் பார்த்து கத்த, பிறகுதான்  அவள் ஆவேசமே மட்டுப்பட்டது.

மரத்திலிருந்து சில பட்டைகள் கீழே விழுந்தது. இலை தழைகள் லேசாய் நிலைகுலைந்து கோரமாய் கீழே விழுந்தது . ஆனால் மரம் ஏனோ கல்லாய் ஓய்ந்து நின்றது, . அக்றிணையாய் அதற்கே உரிய லக்‌ஷணத்தோடு, பிறகு மரம்  பேசவே இல்லை. அப்பொழுதுதான்  சசிரேகாவுக்கு, அம்மா ஏற்பாடு செய்த மாப்பிள்ளை, முல்லைவாணனிடம் இதுவரை  தான்  பேசவே இல்லையே என்ற  அஞ்ஞானம் உறைக்க, எழுந்து விடுவிடுவென்று நடக்கத்தொடங்கினாள். கோபத்தில் வியர்த்த உடம்பில் பார்க்கில் வீசிய காற்று லேசாய் தழுவ, இன்னும் வேகமாய் நடக்கத்தொடங்கினாள் சசிரேகா.
 

kamaladeviaravind@hotmail.com