பலத்த காற்று வீசும்போதே ஈரப்பதத்தையும் சேர்த்தே வீசியது கண் சிமிட்டும் நேரத்துக்குள் சடசடவென்று மழை பிடித்துக்கொண்டது.திசை மறித்த இக்கட்டின் சீற்றமாய் அலறிக்கொண்டு வந்த மழையைத் துளைத்துக்கொண்டே மழையோடு மழையாய் வேக வேகமாக நடக்கும்போதே குடை சரிந்து சாய்ந்தது. ஆவேசத்தோடு குடையைத் துக்கி எறிந்த ராமலிங்கம் இன்னும் துரிதமாக நடையைப் போட்டான். ஒரு டேக்சியை நிறுத்தத் தோன்றவில்லை. டேக்சியில் ஏறினால் பத்தே நிமிடங்களில் போய்விடலாம் தான். ஆனால் திமிறத்திமிற முகத்தில் வந்து விழும் மழை நீரோடு ,கண்ணிலிருந்து விழுந்த உப்புநீரும் சட்டையை நனைக்க, ராமலிங்கம் வெறி பிடித்தாற்போல் நடந்து கொண்டிருந்தான். அலமலந்து சொல்லிக்கொள்ள வாய்விட்டு ஆற்றிக் கொள்ள ஒருபற்றுக்கோடு கூட இல்லாமல், காற்றை இரண்டு கைகளாலும் அளைந்து வீசிக்கொண்டே, ஏய், என்று ஓங்கிக் கத்தினான். எரி நட்சத்திரமொன்று, இருள் கிழித்த ஒளியாய் பளீரென்று, மின்னலும் இடியுமாய் கிடுகிடுக்க வானம் ஓவென்று கிழிந்து ஊற்றியது.அவள் மட்டும் இப்போது எதிரில் இருந்தால் அப்படியே அந்த இடுப்பிலேயே ஓங்கி மிதிக்க வேண்டும் போல் சண்டாளமாய் வந்தது கோபம்
புவனி பயத்தில் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தாள். ராமலிங்கம் இன்னும் உள்ளே வந்து நுழையவில்லை. வாசலில் செருப்பை உதறிவிட்டு அவன் வீட்டுக்குள் கால் வைத்த நிமிடம் பதறிக்கொண்டு எழுந்தாள். படபடப்பும் , வெவெட, வுமாய் அவள் நின்று கொண்டிருந்த கோலம் கண்டபோதே அவனுக்கு மண்டைக்குள் ஏறியது. கீழே விழுந்து கிடந்த காற்றாடியும்,அதை ஒட்ட வைக்க ஒவ்வொரு பாகமாய் அவள் பிரித்து வைத்து, பின் சரி செய்ய முடியாமல், அதை படுத்தி வைத்திருந்த கோலமும் பார்க்கவே பற்றிக்கொண்டு வந்தது. நெருப்புமிழ அவளை முறைத்துப் பார்த்தவன்” என்ன ”என்று கூட கேட்கவில்லை.
” பேனை சுத்தம் செய்யலாமுன்னு கழற்றினேன்.திருப்பி எப்படி பூட்டறதுன்னு தெரியலை, அதான், இப்படி “
சர்ப்பத்தின் சீறலாய் பிளிறிக் கொண்டு வந்த கோபத்தோடு நாற்காலியை எட்டி உதைத்தான். அப்படியே அட்டணக்கால் போட்டு உட்கார்ந்து, காற்றாடியை ஒழுங்காக்க முயற்சித்தான்.ஆனால் அவன் ஆத்திரத்துக்கு நட்டும் ஸ்க்ரூ ட்ரைவரும், கோணா மாணா வென்று பிசிறிதட்ட , கிட்டெ வந்த புவனியை பளாரென்று அறைந்தான்.அழுகையை அடக்கிகொண்டு ,பசியோடு வேலை செய்கிறானே என்று காப்பி கொண்டு வந்தாள்.வந்த எரிச்சலுக்கு அப்படியே அவள் முகத்திலேயே விசிறி அடித்தான் காப்பியை.
கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்குப் பிறகுதான் ராமலிங்கம் அவள் கையால் சாப்பிட்டான்.அப்பொழுதும் புவனியிடம் முகம் கொடுத்துப் பேசக்கூட அவனுக்குப் பிடிக்கவில்லை.இத்தனைக்கும் இவன் சங்கரன் என்றால் அவள் சங்கரி எனும் நிலையில் தான் ஜோடிப்பொருத்தம்கூட. புவனியை விட இவனுக்கு வேறு நல்ல பெண் ஒருத்தி எங்குமே கிடைத்திருக்க முடியாது, என்பதை சாமுத்ரகா லட்சணமே அறைந்து சொல்லும் .ஆனாலும் ராமலிங்கத்துக்கு மூக்குக்கு மேல் நிற்கும் கோபம் எப்போதுமே கனன்று கொண்டுதான் இருந்தது. அவ்வப்போது ஆற்றிக்கொள்ள புவனியை பின்னி பெடலெடுத்ததில் எப்படியோ வாழ்க்கை சீராக ஓடிக் கொண்டிருந்தது.
புளோக்கின் கீழே இருக்கும்” செவென் லெவென்” கடையில் வேலைக்குச் சேர்ந்திருந்த தோமஸ், ஈப்போவிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தவன்.சதா கலகலப்பும், சிரிப்புமாய் சுழன்றுகொண்டிருக்கும் அவனுக்கு அந்த பெண்ணைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. நெருப்புப் பட்ட கையோடு ”ஊ” வென்று அழுது கொண்டே ,முதலுதவி மருந்தைக் கேட்ட பெண்ணை ஆச்சரியமாகப் பார்த்தான்.அவளது பதட்டமும் நடுக்கமும் கண்டு கொஞ்சமும் தயங்காமல் அவள் கையைப்பிடித்து அவனே கட்டுப்போட்டு அனுப்பினான். முதன் முதலாக ஒரு பிற புருஷன் தொடுகை அவள் மேனியில் பட்டது கூட அன்றுதான். இப்படித்தான் அறிமுகமானான் தோமஸ் புவனியின் வாழ்க்கையில். பிறகு எப்போது பார்த்தாலும் பரிவாய், கனிவாய் ஒரு பார்வை. இரண்டொரு சொற்கள். அவ்வளவுதான்.
பரோட்டாக்கடையில் அவன் வேலைக்கு மாறியபோது மீண்டும் ஒருநாள் புவனியை கண்டபோது திகைத்துப்போனான். உதடு கிழிந்து, செவி மடல் வீங்கி ஒரே ஒரு பரோட்டாவுக்கும் அஞ்சு காசு குறைவாக அவள் காசை நீட்டியபோது , தோமசுக்கு மனசுக்குள் பிய்ந்து கழன்று கொண்டு வந்தது.
மூன்று பரோட்டாவக் கட்டிக் கொடுத்து , தால்ச்சாவும் மீன் குழம்பும், தாராளமாகவே விட்டு, அவள் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டான்.
இரண்டே மணி நேரத்தில் அவர்கள் தொலைபேசியில் மனதைப் பகிர்ந்து கொண்டபோது பாவப்பட்ட இரண்டு ஆத்மாக்களுக்கும் துளி ஆசுவாசம். அவனுக்கும் சொல்லிக்கொள்ள அப்படியொன்றும் குடும்பம் பற்றிய பிரதாபமில்லை
ராமலிங்கம் கம்பெனி ஓட்டுநராய் இரண்டு நாட்களுக்கு மலேசியாவுக்கு போன நேரத்தில் தான் புவனி , துணிந்து தோமசை வீட்டுக்கு அழைத்து ஒரு நேரம் சோறு போட்டாள்.சாம்பாரும்,நெத்திலி சம்பாலும் , என அவள் விருந்து அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.இது ஒரு சாப்பாடு என்று அழைத்தாளே, என்று கோபம் தான் வந்தது. .ஒரு துண்டு மீனோ, அல்லது ஒரு கோழித்தொடையோ கூட இல்லை. அவன் முகம் போன போக்கிலேயே புவனிக்கு புரிந்தது, என்றாலும், என்ன செய்ய ? அவள் ஜவேஜு அதுதான். ராமலிங்கம் கொடுக்கும் ரெண்டு வெள்ளியில், என்ன வாங்குவது, ? அவன் கொடுக்கும் காசுக்கு மேல் அஞ்சு காசு அவள் செலவு செய்து விட்டாலும்,அன்று சிவசைலமே ஆடி விடுவான் . மறுநாள் செலவுக்குக் கூட காசு கொடுக்காமல் அவளைப்பட்டினி போடுவான்.வருஷத்துக்கு ஒருநாள் வரும் தீபாவளி , பொங்கலுக்குத்தான்,புவனி கையில் காசு விழும்.. வேண்டுமென்றே பட்டுப் புடவையாய் கேட்டு அவன் எரிச்சலில் புகைவதைக் காண்பதில் அப்படி ஒரு சுகம் புவனிக்கு. ஆனாலும் அவ்வப்போது பேப்பர் விற்கும் பணத்தில் கொஞ்சம் காசு சேர்த்து வந்ததில்தான் இப்படியாவது தாளிக்க முடிந்தது.
மறுநாளே புவனிக்கு கோழிகுருமாவும், பிரியாணி சோறுமாக தோமஸ் பொட்டலம் கட்டிக்கொண்டு வந்து கொடுத்தான். இருவரும் பகிர்ந்து சாப்பிட்டார்கள். புவனி பேக்டரியில் வேலைக்குச்சேர்ந்தது கூட தோமஸின் துணையால் தான் .ராமலிங்கத்துக்கு அப்படியாவது பீடை ரெண்டு காசு கொண்டு வந்தால் சரி என்று மட்டுமே சிந்தனை போயிற்று. தோமஸ் அதே பேக்டரியில் கழிவறை சுத்தம் செய்யும் கண்ட்ராக்ட் எடுத்திருந்ததால் இருவருக்கும் சந்திக்க ரொம்பவே நேரமிருந்தது. பாட்டாம் தீவுக்கு போனது கூட அப்படித்தான்.படகுப்பயணத்தில் அவள் கை பிடித்து தோமஸ் இறக்கிவிட, அந்த பதனத்தில் புவனி வெட்கிப்போனாள்.தென்னை ஓலை மாதிரி ஏதோ கூடுக்குள் வேகவைத்த கட்டு சோறும், ஈர்க்கல் குச்சியில் பாபர்க்யூ செய்த கோழி இறைச்சியும், நிலக்கடலையில் செய்த ஒரு சுவையான கறியும் அவளுக்கு வாங்கிக் கொடுத்தான்.
“இதுதான் குவே கெத்துபாட்,இதுக்குப் பேர் சாத்தே இறைச்சி, இப்படி இந்த கறியில் தொட்டு சாப்பிடு, ”என்று பரிவோடு அவன் உபசரிக்க, ருசித்து சாப்பிட்டாள்.
இந்தா செண்டோல், என்று சுவை பானம் ஒன்று அவளுக்கும், அவனுக்கு ஒரு பியரும் எடுத்துக்கொண்டான்.
அவன் கைக்காசில் அவளுக்கு ஒரு பாத்தேக் மாக்சியும் , ஒரு பச்சைக்கலர் சால்வையும் வாங்கிக் கொடுத்தான்.
வேண்டாம் ”என்று புவனி மறுக்க,தெற்றுப்பல் தெரிய தோமஸ் சிரித்தது அவ்வளவு அழகாக இருந்தது, இவனுக்கு அழகே இந்த தெற்றுப்பல்தான் என்று ஒரு கணம் மயங்கிப்போனாள். என்றாலும் வேண்டாம் .
” ஏன் நான் கொடுத்தா வங்கிக்க மாட்டியா ?
”நான் உனக்கு ஒண்ணுமே வாங்கித் தரலியே ?”
எனக்கு எதுக்கு ? நான் தானே உனக்கு வாங்கித்தரணும் ! இந்தா, வாங்கிக்க, ”என்று அன்போடு அவள் கைகளில் திணித்தான். அடுத்த 4 மணி நேரங்களில் உலகம் துளியெனக் கரைந்து போனது. கரிய நிற ஊசல் பறவைகள் ஓட்டலைச் சுற்றிய கடற்கரையில் தத்த்க்கா புத்தக்கா என்று கும்மாளியிட்டதுக்கு் கடலன்னையே சாட்சி.
இரவு ஒன்பது மணிக்கு புவனி வீடு வந்தபோது , ”ஒவர் டைம் செய்யறதாயிருந்தா ஒரு போன் செய்து சொல்ல என்னடி கேடு ? என்று மட்டுமே கேட்டுவிட்டு, மீண்டும் குப்புறப் படுத்து தூங்கத் தொடங்கினான் ராமலிங்கம்.
ஆச்சரியமான ஆச்சரியம், குழந்தை ஒன்று பிறந்த பிறகு ராமலிங்கம் இப்படி ஆளே மாறிப்போவான் என்பதை யாருமே சொன்னால் கூட நம்பமாட்டார்கள் .அவ்வப்போது லீவு போட்டுவிட்டு , வேலைக்கு மட்டம் போடும் ஆசாமி, இப்பொழுது கிடைத்த ஓவர்டைம் வேலையெல்லாம் செய்தான்.அவனுடைய சோம்பேறித்தனம் ஓடிப்போன இடம் தெரியவில்லை.ஒருநாள் கூட அக்கடா என்று ஓய்ந்துபோய் வீட்டில் இருக்கவில்லை.
அப்படி மாடாய் உழைத்தான். கல்யாணமாகி நாலு வருடங்களுக்குப்பிறகு பிறந்த குழந்தை தான், என்றாலும் இப்படியா? புவனியே ஆச்சரியப்பட்டுப் போனாள். குழந்தை சற்று அழுதாலும் இரவு எந்நேரமானாலும் , புவனியைக்கூடக் கூப்பிடாமல் அவனே குழந்தையை மடியிலிட்டு தூங்க வைத்தான். அத்தி பூத்தாற்போல் அவன் வீட்டிலிருக்கும் நேரமும் குழந்தையைக் கீழே விடுவதில்லை.
”சதா இப்படி தூக்கித் தூக்கி சுகம் காட்டினா, பிறகு குழந்தை , என்னை வேலை செய்யவே விடமாட்டான்.”
.”அப்படி நீ ஒண்ணும் வெட்டி முறிக்கவேண்டாம். என் குழந்தையை அழாம பாத்துக் கிட்டாலே போதும் .”
ராஜா ஒருவன் தான் பிள்ளை. பிறகு குழந்தை பிறக்கவில்லை.குழந்தை வளர வளர ராமலிங்கத்தின் மனசெல்லாம் பனிபடர்ந்த ரசவாதம் ஊற்றுக்கண்ணாய் நுரைத்துப் பொங்கியதில் புவனியே கூட மாறிப்போனாள்.
”அப்பா வராமல் சாப்பிடவே மாட்டேங்கறான், சீக்கிரமாவே வந்துடுங்க “என்று அவளே காலக்கெடு சொன்னாள். மனைவி சொல் மாறா கோமுகி பக்தனாய் ஆறரைக்குள் வீடு பார்க்க ஓடி வந்தான் ராமலிங்கம். அப்படியும் வரமுடியாவிட்டால் புவனியை சமாதானப் படுத்துவது தான் பெரும்பாடு. கெஞ்சிக் கெஞ்சி அவளிடம் மன்னிப்பு கேட்டாலும் சரி , விரகதாபத்தோடு அவளை ஆக்ரமித்தாலும் சரி., ராமலிங்கத்திடம் விடைக்க விடைக்க ஊடல் செய்வதுதான் அவளுக்கும் பேரின்பமாக இருந்தது. அப்பா , அம்மா, , –இந்த வேத மந்திரத்தின் தேன் முழுக்காடலை விட அவர்களுக்கும் வேறு உலகம் தெரியவில்லை.
காராங்குனி கிழவன் புளொக்கின் கீழே உள்ள முதியோருக்கான இருக்கையிலேயே செத்துக்கிடந்தான். வாயெல்லாம் நூலாம்படை ஒழுகிக் காய்ந்திருக்க, ஒருக்களித்துக்கிடந்த அவன் சவத்தை, மறுநாள் காலையில் பாதசாரிகள் தான் பார்த்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர். , பக்கத்து புலோக் நண்பர் இஸ்மாயில் மூலம் ராமலிங்கத்துக்கு செய்தி வந்தபோது அப்படியே உறைந்து போனான்.பலமுறை ராமலிங்கம் காரங்குனிக் கிழவனுக்கு காசு கொடுத்திருக்கிறான். நல்ல வயதில் இவன் தான் எப்பேர்ப்பட்ட உழைப்பாளி. இப்படி குடித்துக்குடித்து வீணாகிப்போய் நிற்கிறானே என்றுதான் ராமலிங்கத்துக்கு கவலை.நாற்பத்தைந்து வயதிலேயே கிழவனாகிப்போன காராங்குனி, பகலெல்லாம் அலைந்து திரிந்து செய்தித்தாள்கள், , அட்டைகள், கெட்டுப்போக்கிய தொலைக்காட்சிப்பெட்டி, தொலைபேசி, வானொலி, என கைக்குக் கிட்டிய எல்லாவற்றையும் சேகரித்து வருவான்.
அதை விற்று கிட்டும் காசில் தான் . சாப்பாடு,தூக்கம் ,என மதியம் , இரவு ,எந்நேரமும் அந்த முதியோர் பொதுமடத்திலேயேதான் நேரத்தைக் கழிப்பான். அவனுக்கு அருகாமையில் உள்ள வசிப்போர் குடியிருப்பில் ஒரு அறை வாடகைக்கு இருந்தது. ஆரம்பத்தில் அங்கு தங்கியிருந்தவன் பிறகு வாடகை கொடுக்க முடியாமல் இங்கேயே நிரந்தரமாக தங்கத் தொடங்கினான். பொதுக்கழிப்பறையில் மல மூத்திரம் பிரச்சினையைப் பார்த்துக் கொண்டு , இரவெல்லாம் ஹாக்கர் செண்டரில் பழக்கடைக்கு காவல் இருப்பான். ஹாக்கர் செண்டரின் சீனத்தவுக்கை அவ்வப்போது, பாவப்பட்டு,இனாமாகவே குடிக்க கொடுப்பார்.கையில் காசிருந்தால் விடிய விடிய குடிப்பான். காசிருந்தால் மட்டுமே விஸ்கி, இல்லையென்றால் பியர் போதும்.
குழந்தை பிறந்த பிறகு , வேலையையும் விட்ட பிறகு புவனியை பார்க்கக்கூட முடியாமல் தோமஸ் தவித்துப் போனான்.கார்த்திகை மாதத்து பிராணியாய் வெட்கம் மறந்து அவளுக்காக அப்படி ஏங்கினான். நிறை மாத கர்ப்பிணியாக ஒருமுறை ராமலிங்கத்தோடு போகும் போது அவளைப் பார்த்தது தான்,. ஆனால் அவள் திரும்பியும் பார்க்கவில்லை தோமஸை. ஒரே ஒரு முறை தாங்கமாட்டாது ராமலிங்கம் வேலைக்குப்போன நேரத்தில் புவனியைத் தேடிப் போனபோது, படாரென்று கதவை அறைந்து சாத்தினாள் புவனி. அவ்வளவுதான். . பிறகு மறந்தும் தோமஸ் புவனியிடம் பேச முயற்சிக்கவில்லை.ஆனாலும் அந்த வட்டாரத்தை விட்டு தோமஸ் போகவே இல்லை. தூர இருந்தாவது புவனியைப் பார்த்தாலே போதும் , என வைராக்கியமாகவே இருந்தான். பல வேலைகள் செய்தான். ஓயாமல் குடித்தான். இப்படித்தான் வங்குசா கடையில் அவன் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஒரு முறை ராஜா கடைக்கு வந்தான்.பத்து வயதுப் பையனாக கலர்பென்சில் வாங்க வந்த ராஜவைப் பார்த்த தோமஸ் அப்படியே புளகித்துப்போனான்.இவன் புவனியின் பையனல்லவா ? பிறகு ராஜாவிடம் பார்க்கும்போதெல்லாம் ஆசையாகப் பேச்சுக் கொடுப்பான்.
ராஜா வளர்ந்து கொஞ்சம் பெரியவனாகிய பிறகு, ஒரு நாள் குடித்துவிட்டு, மரத்தடியில் கிடந்த தோமசைப் பார்த்து விடடான். அன்றோடு முடிந்தது அந்த உறவும் . தோமசைக்கண்டாலே, அருவருப்பில்முகம் சுளிக்க கடந்து போனான். தோமஸ் பலமுறை பேச முயன்றும் ராஜா முறைத்துக் கொண்டே அப்பால் நடந்து விடுவான் காரங்குனிக் கிழவனைத் தானே பொறுப்பேற்று அனாதை என ,தகன எரியூட்டியில் சாம்பலாக்கிவிட்டு , வரும் போது ராமலிங்கத்துக்கு அவ்வளவு துக்கமாக இருந்தது. காராங்குனியின் ஜீஸஸ் லோக்கெட் சுமையாய் பாக்கெட்டில் கனக்க, ராமலிங்கம் வீட்டுக்குள் நுழைந்த போது புவனி தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தாள். திடும் , எனத்தோன்றிய பதட்டத்தில், ராஜா வை கைபிடித்து அழைத்துப்போய் , இப்பவே தலைக்குக் குளி, என்றிட” மகன் திகைத்துப்போனான். குளித்து ஈரட் டவலோடு வந்தவனை ஏறிட்டபோது, தெற்றுப்பல் தெரிய ராஜா கேட்டான்,
” சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னை இந்நேரத்துக்கு ஏம்பா தலை குளிக்கச் சொன்னீங்க ? ”
அப்பொழுதுதான் ராமலிங்கத்துக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. ராஜாவுக்கு பிடித்த உணவான குவே கெத்து பாட்டும் , சாத்தேயையும் ,குவாவில் புரட்டி புரட்டி, அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் தான் குளிக்க அவனை எழுப்பிக்கொண்டு போனோம் என்பதுதான். புவனி அப்பொழுதும் எழுந்து வரவில்லை.