சிறுகதை: நாசிலெமாக்

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்கோப்பையைத் தூக்கிப்பிடித்து, மேலே அண்ணாந்து காப்பி குடிக்க முயன்றதில் இந்த முறையும் தோல்விதான். பழக்கமின்மையால் காப்பி சிதறி, டீ ஷர்ட்டெல்லாம் நனைந்து வேறு உடை மாற்ற அறைக்குள் ஓடும்  பூங்கொடியைப் பார்க்கப் பார்க்க, தனலெட்சுமிக்குப் பற்றிக் கொண்டு வந்தது கோபம். என்னாச்சு இந்தப் பெண்ணுக்கு? கொஞ்ச நாட்களாகவே மகள்  அடிக்கும் லூட்டி, சில சமயங்களில் எரிச்சலைக் கூடக் கொடுத்தது. காப்பியை உறிஞ்சி, மிடறு மிடறாய்க் குடிப்பது தான் பூங்கொடிக்குப் பிடிக்கும். அப்படி ரசித்துக் குடிப்பது பார்க்க என்னமோ தியானம் போல் இருக்கும். அப்படி மெய்ம் மறந்து  காப்பி குடிக்கும் பெண் இப்ப கொஞ்ச நாட்களாய்  தான் இப்படி அண்ணாந்து  குடிக்கிறாள். வெறும் தண்ணீரை[ பச்சைத்தண்ணீரை ]அப்படி குடிப்பதில்  சிரமமில்லை. ஆனால் சூடு காப்பியையும், அப்படி சர்க்கஸ் வேலையாய் குடிக்க முற்பட்டு, பிறகு உடையெல்லாம் சிதறி, அசடு வழிய அறைக்குள் ஓடுவதைப் பார்க்கும் போது தான்,கோபம் வருகிறது.

 அதற்குள் இன்னொரு ஆச்சரியத்தைத் தந்தாள் பூங்கொடி.

பச்சை ஸ்கர்ட்,  பச்சை பிளவுஸ், பச்சைக் காதணி, என பச்சைப் பாவையாய், அறைக்குள்ளிருந்து வெளியே வந்த பூங்கொடியைப் பார்த்து, பேச்சிழந்துபோனாள். உண்மையில் பச்சை அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காத கலர். என்ன கண்றாவி கலர்மா அது?!என்று  பச்சையைக்கண்டாலே காததூரம் ஓடும்  பெண், இப்பொழுதெல்லாம் அடிக்கடி இப்படி பச்சைக்கலரில் உடை அணியத் தொடங்கியிருந்தாள். தனலெட்சுமியின் வருத்தமெல்லாம் இது எங்கே போய் நிற்குமோ, என்பதில் தான். பூங்கொடி சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவள். தமிழ் நாட்டிலேயெ பிறந்து வளர்ந்து, வேலைக்காக மட்டுமே சிங்கப்பூருக்கு வந்திருக்கும் முருகேசனிடம்,  இந்தபெண்ணுக்கு,எப்படி இவ்வளவு ஈர்ப்பு ஏற்பட்டது என்பது தான் தனலெட்சுமிக்கு புரியாத புதிராக இருந்தது. முருகேசனுக்கு பச்சை பிடிக்கும் .முருகேசனுக்கு, டம்ளரை அண்ணாந்துகுடித்தால் பிடிக்கும்,முருகேசனுக்கு இது பிடிக்கும் ,அது பிடிக்கும், என்று, இப்படி இன்னும் என்னென்ன அந்த முருகேசனுக்காக, கூத்துக்கட்டி அடிக்கப் போகிறாளோ, என்று நினைக்கும்போதே, ”ஆயுசு நூறு”.

”வணக்கம் அம்மா! “ , என்ற முகமனோடு வாசலில் வந்து நின்றான் முருகேசன்.

பூங்கொடி சற்று பார்க்கக் கூடிய நல்ல நிறம்.ஆனால் முருகேசனோ தொட்டு பொட்டு வைத்துக்கொள்ளும் அட்டிக் கறுப்பு. கண்கள் கூட சற்று மாறுகண்தான். பார்க்கவும் சுமாரான தோற்றமே.. மொச்சைப்பல் தெரிய சிரிக்கும்போது கூட அப்படியொன்றும் லட்சணமில்லைதான். ஆனால் , படிய வாரிவிடப்பட்ட தலைமுடியும், வெளேர் என்ற பற்களைக் காட்டி,அழுத்தமும் திருத்தமுமான கணீர்ப்பேச்சுமாய்,முருகேசன் வந்து நின்றால் ,என்னமோ வானத்து தேவனே எதிரில் வந்து ,வரம் கொடுப்பது போல் பூங்கொடி அப்படி மெய்ம் மறந்துபோய் நிற்பாள். அந்த நகாசு பூச்சு ஒன்றுதான் முருகேசனின் கம்பீரம்.  நாட்டு நடப்பை அப்படிப்பேசுவான். ஆனால் பேச்சினூடே,இடைச்செருகலாய், “ஊரிலிருந்தவரை  சிங்கப்பூருன்னா என்னமோ உலக அதிசயம்னுதான் தோணுச்சி..ஆனா என்ன ஊரு இது? இங்கே பாக்கறதுக்கு அப்படி என்ன இருக்கு? என்னா, கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம்.ஆனா, அதுக்கும், ரெண்டெரட்டி  ஆடம்பர செலவும் இருக்கே? முதல்ல இந்த  ஊரு  பொண்ணுங்களுக்கு அடக்க ஒடுக்கம்னு ஒண்ணு இருக்கா? இதுங்க டிரஸ்ஸும், வேஷமும்,!
பூங்கொடி,  நீ மட்டும் அப்படியெல்லாம் வேஷம் போட்டுராதே? என்ன?” என்று சொல்லும்போது, ”உன் அறிவுரைகள் அனைத்தும் சிரசாய் வகிப்பேன், ”என்பது போல் சிலிர்த்துப்போய் நிற்பாள் பூங்கொடி.ஆனால் தாங்கமாட்டாமல், தன லெட்சுமி தான் வெடிப்பாள்.” ஏன் இந்த ஊர் பொண்ணுங்க கிட்டே அப்படி என்ன குறை கண்டுட்டிங்க?”

”என்னம்மா? அப்படி கேட்டுட்டீங்க ? ஒரு பொட்டு வைக்கிறாங்களா? கண்ணைக்குத்தறாப்பில லிப்ஸ்டிக்கைப்  பூசிக்கிட்டு …  அரையும் குறையுமா உடுத்தறதா அழகு? நாளும் கிழமையுமா  தலை  நிறைய பூ வச்சு, மஞ்சள் பூசின முகமும், நெற்றியில் பளிச்சுனு பொட்டுவச்சுக்கிட்டு, பாங்கா ஒரு புடவையும் கட்டி, எங்கூரு பொண்ணுங்க எதிரில வந்தா அப்படியே  கையெடுத்துக் கும்பிடத்தோன்றும்.”

அதற்கு மேலும் முருகேசன் தொடர்ந்தால்  எங்கே அம்மா வாயிலிருந்து, சாட்டையடியாய் வார்த்தைகள் விழுமோ, என்ற  பயத்தில்  பூங்கொடிதான் முருகேசனைக் கூட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு நகர்ந்து விடுவாள். ஆனால் மனசுக்குள் அவளுக்கே முருகேசனின்  இந்த பேச்சு சற்று அதீதமாகத்தான் பட்டது.சிங்கப்பூரில் பொட்டும் பூவும் வைத்து, மஞ்சள் பூசின முகத்தோடு, அலுவலகம் போனால் அடுத்த நாளே அவள் சீட்டு கிழிந்துவிடும். ஏனெனில் பூங்கொடி வரவேற்புப் பிரிவின் உயர் அதிகாரி.சீன,மலாய், என பல இன மக்களிடையே புழங்கும் அவளுக்கு அதற்கேற்ற நாகரீகத்தோடு உடை அணிந்து போகாவிட்டால், அலுவலகத்தில் எடுபடாது. ”இப்படியெல்லாம்  முருகேசனிடம் சொல்லவேண்டுமென்றுதான் நினைப்பாள்.ஆனால் முருகேசன் பேசத் தொடங்கிவிட்டால் ஒரு வார்த்தை மறுத்துப் பேசத் தோன்றாது. என்னமோ அப்படி ஒரு கவர்ச்சி அவன் பேச்சில் ….

இருவருமே பக்கத்து பக்கத்து அலுவலகத்தில், தான் வேலை செய்தனர்.அலுவல் சம்பந்தமாக முருகேசன் பூங்கொடியின் அலுவலகம் வந்தபோதுதான், இருவருக்கும் பழக்கமானது.அழகிய கோட்டும், மெலிதான  ஒப்பனையில், பூவாய் மலர்ந்து நின்ற பூங்கொடியை பார்த்தவுடனேயே , கிட்டே வந்து பேசத் தொடங்கினான் முருகேசன். அவன் பேச்சில் அப்படியே கரைந்து போனாள்  பூங்கொடி. அந்த பேச்சின் வசியத்துக்கு முன்னே,அவன் கறுத்த நிறமோ, தோற்றமோ ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.ஆனால் அவளுக்குப் புரியவே புரியாத புதிர், ”ஆம்பிளைக்கு அழகுங்கிறது, வெள்ளைத்தோலோ, கவர்ச்சியோ அல்ல..அவனுடைய  சாமர்த்தியம் ,சம்பாத்தியம்,நல்ல மனசு தான்!” என்று அடிக்கடி சொல்லும் அம்மா தன லெட்சுமிக்கு ஏன் முருகேசனைப்பிடிக்கவில்லை என்பதுதான்.! எது எப்படியிருந்தாலும் பூங்கொடிக்கு முருகேசனை ரொம்பவும் பிடித்திருந்தது.பொண்ணுண்னா, என்று முருகேசன் கோடிட்டுக் காட்டிய லட்சணங்களை தேவ மந்திரமாய், பின் பற்ற முயற்சித்ததில்,ஒன்றுதான் அண்ணாந்து குடிப்பது. டம்ளரை வாயில் வச்சு , எச்சில் பண்ணிக்குடிக்கிற பொம்பளையோடு ஒருத்தன் குடும்பம்  நடத்துவானா? என்று அவன் கேட்டால், அதானே, என்று தலையாட்டவே அவளால் முடிந்தது.

அன்று அப்படித்தான் பாரதி கண்ட புதுமைப் பெண்களைப் பற்றி, அவளுக்கு மந்திரோபதேசம் செய்துகொண்டே,நடந்து வந்தபோது,ஒரு விசித்திர சம்பவம் நடந்தது. மதிய உணவுக்காக இருவரும் அலுவலகத்தை அடுத்திருந்த  உணவகத்தை நோக்கி நடந்துபோது,ஏதோ தொண்டைக்கமறல் ஏற்பட்டு, புளிச்சென்று நடுரோட்டில் காறி உமிழ்ந்தான்` முருகேசன். உடனே,பூங்கொடி எடுத்து நீட்டிய டிஷ்யூவையும், வாயைச்சுற்றி,துடைத்துவிட்டு,சடாரென்று, அதையும் கீழே போட்டுவிட்டு, நடக்க பூங்கொடிக்குத்தான் துணுக்கென்றாகிவிட்டது. சிங்கப்பூரில் இப்படி நடுத்தெருவில் காறி உமிழ்வதும், கண்ட இடத்தில் குப்பை போடுவதும் குற்றம் என்பது கூட முருகேசனுக்குத் தெரியாதா என்ன ? ஆனால் ஆகி முதிர்ந்த திமிரோடு ,ஞான் இப்படித்தான், என்று காட்டிக்கொள்கிறாரா? முதலில் பூங்கொடிக்குக் குழப்பமாகவே இருந்தது, என்றாலும், இந்த செய்கையும் கூட ஏதோ விதத்தில் பிடித்துதான் இருந்தது, ஹ்ம்ம், இதுக்கும் கூட துணிச்சல் வேணுமில்லே?

உணவகத்தினுள் நுழைந்தவுடன், வழக்கம்போலவே முருகேசன், சாதம், கறி, கூட்டு, காய்கறி, என விமரிசையாக வாங்கிக் கொண்டான். அன்று ஏனோ பூங்கொடிக்கு , இலையில் பொதிந்து,  பூங்கூம்பாய் கண்ணாடிக்குமிழில் வீற்றிருந்த ,நாசி லெமாக், கைக்கண்டவுடன் வாயூறிப்போனாள். எவ்வளவு நாளாச்சு? இந்த சுவையான தேங்காய் சாதமும், பொரித்தமீனும், சம்பாலும் சாப்பிட்டு!  நாக்குச்சொட்ட நாசி லெம்மாக்,கை சம்பாலில் தொட்டு, தீமூனை [வெள்ளரித்துண்டுகளை], கடித்துக்கொண்டு, பொரிச்ச மீனையும் ,ஒரு வாய் கடித்துக்கொண்டு,  ஒரு கணம் உலகமே இன்பமயமாகிப் போனது. அப்படி சுவைத்து சாப்பிட்டாள் பூங்கொடி. முருகேசன் ஏனோ பேசவே இல்லை. அதுபோலவே வீடு திரும்பும் வழியில்,நெகிழித்தாளில் அழகாக பேக் செய்யப்பட்ட, டுரியான் பழங்களைக்கண்டவுடன், உடனே ஒரு பேக்கட் வாங்குவதற்காக விலை கேட்க, சரேலென்று முருகேசன் விடுவிடுவென்று நடந்து போனான்.

”என்னாச்சு முருகேசன்? ஏன்? என்று ஓட்டமும் நடையுமாய், முருகேசனை அடைந்தபோது, முருகேசன் நெருப்பாய் உமிழ்ந்தான் வார்த்தைகளை. ”இதோ பாரு, பூங்கொடி,அந்த எழவெடுத்த பழத்தோட  வீச்சம், இவ்வளவு தூரத்துக்கு அப்பாலும் கூட நாறுது. அதே போலதான், ஏதோ இலையில் பொதிஞ்ச கருமத்தை, என்ன ருசியோ,அப்படி வாங்கித் திங்கறே? நமக்குன்னு பாரம்பரியம் உடையில் மட்டுமில்ல, சாப்பாட்டுலயும் கூட இருக்குங்கிறதை நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறே? பூங்கொடி அப்படியே ஸ்தம்பித்துப்போனாள். நாசி லெமாக் அவளுக்கு மிகவும் பிடித்தமான உணவு, டுரியான் பழமும் கூட சிங்கப்பூரர்களுக்கு, பிடித்த பழம்தானே. இதெல்லாம் கூடவா முருகேசனுக்குப் பிடிக்காது ? பூங்கொடி உள்ளூரக் காயம், பட்டுப்போனாலும் ‘ஞான் தான்  வாங்கலயே முருகேசன்’ என்று  எவ்வளவோ சமாதானம் செய்ய வேண்டியிருந்தது, முருகேசனை சகஜ நிலைக்குக் கொண்டுவர. எல்லாம் கொஞ்ச நேரத்துக்குதான். பிறகு முருகேசன்  பேசத் தொடங்கி விட்டான்.

முருகேசன் தமிழ்ப் பற்று கொண்டவர், தமிழ் பாரம்பரியத்தில் அதீத பற்றுக்கொண்டவர், இந்தகாலத்தில் இப்படியெல்லாம் யார் இருக்கிறார்கள்? எல்லாம் நல்லதுக்குத் தானே சொல்றார் ?  இவரைப்போல் சுத்ததமிழ் மகன் சல்லடை போட்டுத்தேடினாலும் சிங்கப்பூரில் கிடைக்குமா? முருகேசன் விருப்பப்படி மாறவேண்டியது தானே நமது  கடமை என்று மனதைத் தேற்றிக்கொண்டாள் பூங்கொடி,. சரியாக இரண்டு நாட்களுக்குப்பிறகு,இன்னொரு சகுனம் பிடித்த சம்பவம் நடந்தது.  அலுவலகத்தில் மிகவும் மும்முரமான வேலை நெருக்கடி நேரத்தில் அவளது கைத்தொலைபேசி ஓயாமல் சிணுங்கியது. பூங்கொடியால் தொலைபேசியை எடுக்கவே முடியவில்லை. இடைவிடாது தொலைபேசி அழைத்துவிட்டு, எடுக்காத பட்சத்தில் , பிறகு குறுந்தகவல் வந்தது. வேறு யார்? முருகேசன் தான். முருகேசனுக்கு அவளை உடனே பார்க்கணுமாம். வெட்கத்தில்அப்படியே  மனசு மலர்ந்து போனது. ஹ்ம்ம். இந்தக் காதல் படுத்தும்  பாடு. பூங்கொடிக்கும் கூட முருகேசனைப்பார்க்கணும்போல் மனசு பறவாய்ப் பறந்தாலும்,உடனே போகமுடியவில்லை.
ஒருமணிநேரம் கழித்தே வெளியே வரமுடிந்தது.

“வா! பூங்கொடி”என்று பரக்கப்பரக்க , அழைத்துக்கொண்டுபோய்,வழக்கமான உணவகத்தில், உட்கார்த்திவிட்டு,சற்று வெட்கத்தோடு நெளிந்தான் முருகேசன். ஊரிலிருந்து கடிதம் வந்திருக்கு , பூங்கொடி, அம்மாதான் அனுப்பியிருக்காங்க” என்றபோதே, பூங்கொடிக்கு ஆவலில் மனசு படபடத்தது. சட்டென்று கையில் வைத்திருந்த கவரைப் பிரித்து,, நாலைந்து புகைப்படங்களை பூங்கொடி கையில்  கொடுத்தான். இளம்பெண்கள்.  தலையில் பூ வைத்து, பொட்டு வைத்து, மஞ்சள் பூசின முகத்தோடு,புடவைகட்டி, கறுப்பாய், இள நிறத்தில் ,மாநிறத்தில்,  எனப்பலவித தோற்றங்களில் , ”முருகேசனின் எங்கூரு பொண்ணுங்க”  சாயலில்  புகைப்படங்கள்.

”இதில எந்தப்பொண்ணு எனக்குப்பொருத்தமான பொண்ணுண்னு, நீ தான் எனக்கு பார்த்துச்சொல்லணும், பூங்கொடி.! எனக்கானா ஒரே வெட்கம் போ ! எனக்கும் உன்னை விட்டா யாரிருக்கா சொல்லு,” அமிலக்கட்டி உடைந்து , அப்படியே தேகம் முழுவதும் , பொசுங்கிப் போனாற்போல், ஒரு கணம்  உறைந்து போனாள். பேசவே முடியவில்லை.

“அட, என்னாச்சு? பூங்கொடி? என்று அவன் மேலும் தூண்ட, மெல்ல கேட்டாள்.

”அப்படீன்னா இத்தனை நாளும்,நீங்க, எங்கூட, பழகினது, சுற்றினது, எல்லாம் …”

முருகேசனின் முகம் இருண்டது.  “நீ என்ன சொல்றே?”

”இங்கே ஆபீசிலே, வீட்டிலே, ஏன், நம்மைத்தெரிஞ்சவுங்க எல்லோருமே நம்மை …” தொடரக்கூட முடியாமல், துக்கம் தொண்டையை அடைத்தது பூங்கொடிக்கு.

”சீ, சீச்சீ, அப்படிக்கூடவா நினைப்பாங்க?, என்ன உளறரே பூங்கொடி?அட, சிங்கப்பூரிலெ இதெல்லாம் சகஜம் தானே?  ஒரு பொண்ணு எத்தனை பேர் கூட வேணும்னாலும் பழகலாம். நினைச்ச நேரத்துக்கு, யார் கூட வேணும்னாலும் வெளியே போகலாம், வரலாம் தானே? இந்த ஊரிலே இதெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணம்தானே? அப்படியிருக்க, நீயும் நானும் வெளியிலே சுத்தனதை வச்சா கதை கட்டப்போறாங்க? இதெல்லாம்  சும்மா உம் பிரம்மை, பூங்கொடி” என்று அவன் நீட்டி முழக்கியபோது, அப்படியே செருப்பால் அடிபட்டதுபோல் , துடித்துப்போனாள்.

நட்டநடுரோட்டில் காறி உமிழ்வதும், கண்ட கண்ட இடத்தில் குப்பை போடுவதும்போல்தான், இவனுக்கு சிங்கப்பூர் பெண்களும். சம்பாதிக்கவும் பணம் பண்ணவும் மட்டுமே சிங்கப்பூர். மற்றபடி வாழ்க்கைக்கு,  அவனுடைய ஊர்க்காரப்பெண்கள்  தான் கற்புக்கரசிகள். மணக்கப்போகிறான் என்று நம்பி, இவனுடைய கபர்தாரும், அலட்டலையும் கூட சகித்து, ஆசைப்பட்ட உணவைக் கூடத் துறந்து,
பிடித்த உடையைக் கூட மறுத்து, சதா இவனுடைய துப்பு கெட்ட அதிகாரத்துக்கு, செவிசாய்த்து நின்ற தன்னுடைய முட்டாள்தனத்தை நினைக்க நினைக்க,நெஞ்சு ரணமாகியது.

”அட, என்ன எழுந்துட்டே பூங்கொடி? இன்னும் சாப்பிட்டு கூட முடிக்கலையே “

“முருகேசன், எப்பவுமே நாந்தானே சாப்பாட்டுக்கு காசு கொடுப்பேன். இன்னைக்கு ஒரு நாளாவது, இப்படி ஓசியிலே சாப்பிடாமெ, சுத்தத் தமிழ் மகனா,  மானமுள்ள  தமிழ் மகனா, உங்க சாப்பாட்டுக்கு  நீங்களே காசு குடுங்க” என்றவாறே விடுவிடுவென்று நடந்த பூங்கொடியால், கண்ணீரை மட்டும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

அழகான கண்ணாடிக்குமிழில் அன்றைய சுவையான நாசி லெமாக்கை, வாங்க வாடிக்கையாளர்கள் வரிசை பிடித்து நிற்கத் தொடங்கியிருந்தார்கள்.

kamaladeviaravind@hotmail.com