சிறுகதை: பவானி அக்கா

சிறுகதைவந்தான் வரத்தானாக மல்லிகைப்பூக் கிராமத்திற்கு போது எனக்கு 13 வயசு.8ம் வகுப்பில் படிக்கிற மாணவன். திருமதி சுப்பிரமணியம்-என்னுடைய அம்மா- சுகாதாரம் படிப்பித்தார். எல்லா வகுப்புகளுக்கும் அவரே சுகாதார ஆசிரியை.அதே போலவே கணிதம்,விஞ்ஞானம்,ஆங்கிலம் எடுத்த ஆசிரியர்களும் எல்லா வகுப்புகளுக்கும் அவர்களே படிப்பித்தார்கள்.10ம் வரையில் இருந்த எங்க பாடசாலையில்,எல்லா தரத்திலும் ஓரு வகுப்பு மட்டுமே இருந்தது.எ,பி,சி…என பல பிரிவுகள் அவற்றில் இருக்கவில்லை.கிராமம் வேற எப்படி இருக்கும்.ஒரு வகுப்பில் 35- 40 பேர்கள்…என்று இருப்போம்.அதில் அரைவாசிப் பேர்கள் பெண்கள். சொல்ல மறந்து விட்டேன்.வள்ளுவர்,காந்தி, பாரதி..என எல்லாருக்கும் ஒவ்வொருப் பட்டப் பேர்களும் இருந்தன. ஆங்கில  ஆசிரியருக்கு , ‘குஞ்சியப்பு’என பேர் வைக்கப் பட்டிருந்தது.கனகலிங்கம் என அழகான பேர் அவருக்கு இருக்கிறது.அயன் பண்ணின நீள்காற்சட்டையும்,சேர்ட்டும் அணிந்து வாரவர்.ஆனால்,ஒய்வு நேரங்களில் ..சதா வெத்திலை சப்பிக் கொண்டிருப்பார்.வெத்திலைக் குஞ்சியப்பு என்பது தான் முழுமையான பட்டப்பேர்.ஸ்டைலாக இருக்கிற அவர், அப்படி இருப்பதற்கு ஏதும் விவசாயப் பின்ணணி இருக்க வேண்டும்.வெத்திலைப் பழக்கம் பொதுவாக அவர்களுடையது.நுனிப்புல் மேய்கிறவர் தானே மாணவர்கள்.எனவே தான் வாய்யிலே வந்தபேரை அவருக்கு வைத்து விட்டார்கள்.

கிராமத்தில்,வெட்டுவேன்;கொத்துவேன் என்றளவுக்கு பகை நிலவவில்லை.மேல்,கீழ்,நடு,அண்டிய..என சாதாரண சாதி விலகல்கள்;அவற்றில், சிலவற்றில் ஆச்சரியப்படும் அளவுக்கு  நேச உறவுகளும் இருந்தன.நேசமானவர்கள்,மணமுடித்தல்,செத்த வீடுகளில் பங்கு பற்றினார்கள் என்றில்லை.கோயில் திருவிழாக்களில் பங்களித்தனர்.திருப்பணிகளில் உபயங்களும் செய்தார்கள்.உபயத்தைப் பெற்றவையும்,நன்றி மறவாமல் நடந்து கொண்டன.திருப்பி மரியாதையும் செலுத்தியது.யாராலும் உபத்திரவம் என்று தெரிவித்தால்,உடனடியாக தம் பெடியள்களை அவ்விடத்திற்கு அனுப்பியது.

கிராமத்தில்,யாழ்ப்பாணச் சண்டியர்களின் வாரிசுகள சிலரும் இருந்தார்கள்.இந்த பாதுகாப்பு ஒப்பந்த்தால் அவர்களின் ‘பாட்சா’ அங்கே பலிப்பதில்லை.எல்லாச் சாதியிலும் ஒரு சுதந்திர அலை அடிக்கவே செய்தது.நாம் பழையவர்கள் இல்லை,சமமானவர்கள்!சொந்த வீடு ,காணி வேண்டும்..என்ற சிந்தனைகள் அவர்கள் மத்தியில் பரவலாக நிலவின.அதனால் நகரத்திற்கு மேசன் வேலைகளுக்கு கலந்து போனார்கள்.கார் திருத்துதல்,பெயின்ற் பண்ணுதல்,வீட்டுக்கு வெள்ளை அடித்தல்,வயரிங் செய்தல்,குழாய் இணைப்புக்கள் அமைத்தல் என பல்வேறான வேலைகளில்லும் ஈடுபட்டார்கள்.இவர்களில் கணிசமானவர்கள் மாணவர்களே.6ம்,7ம்,8ம்,9ம்,10ம்..வகுப்புகளோடு நின்று விட்ட பல் தரப்பினர்.என்னுடைய வகுப்பில் தில்லையே 8ம் வகுப்போட பனை ஏறப் போய் விட்டான்.சரிவர கணக்குகள் போடுறவன்.கணக்கு ஆசிரியர் சுந்தரம் “பெடியனை படிக்க விடுங்களன்”என பெற்றோரிடம் சென்று,மன்றாடிப் பார்த்தார்.பத்திரிகைகளில் கதை எழுதுகிற நல்லதம்பி ஆசிரியரும் “உங்க  ஆட்களிலே இவன் படித்தால் நல்லம் தானே”என்று பலவாறு விளக்கிப் பார்த்தார். தோல்வி தான்.தாய்க்காரி,”இவனுடைய அப்பருக்கு ஏலாமல் கிடக்கிறது.இவனும் ஏறினாலே உலை கொதிக்கும்”வறுமையைச் சுட்டிக் காட்டி பிடிவாதமாக மறுத்து விட்டார்.அவனுக்கு 2 பெண் சகோதரங்களுமிருந்தனர்.இந்த வேலையில்.. நல்லபடி வாழ வைக்க முடியாது. இருந்தாலும்,’அன்றாடம்’அதை விட முக்கியமானதாக இருக்கிறது.கிராமத்தில், உயர் சாதியினருக்குமிடையில் கூட மண தொடர்பு இருக்கவில்லை.ஒருவேளை படித்த பெடியள்களாக இருந்து,காதல் என விரும்பி இருந்தால் எதிர்ப்பில்லாமல் நிறை வேறி இருக்கலாம்.ஆனால் படித்தவர்களுக்கு தான் காதல் லேசிலே வராதே.அந்த எண்ணிக்கையும் சொற்பம்.சீதனம் வாங்கிக் கட்டுற வாய்ப்பை இழக்க அவர்கள் என்ன முட்டாள்களா!புதியவர்களாக கிராமத்திற்கு வந்த எங்கள் குடும்பத்திற்கு செட்டிக் குறிச்சியிலே வாடகை வீடு கிடைத்தது.அப்பகுதிப் பெண்களூக்கும் படிப்பு சராசரிக்கு மேலே ஏறவில்லை.குடும்பமாக செட்டிலாகி இருந்தார்கள்.மிகச் சிலர் அவர்களுக்குள் இளைப்பாரிய ஆசிரியர்களாகவும்  இருந்தார்கள். அங்குள்ள பெடியள்களுக்கு நேரான படிப்பு சரி வரா விட்டாலும்,ஏதோ படிக்க முயன்று தான் இருந்தார்கள். படம் பயில் வரைஞர்(வீட்டுப் படங்கள் கீறுகிற)படித்த ரவி்,சிறிமா ஆட்சிக்காலத்தில் விசுவமடுப் பகுதிற்குச் சென்று,காணி வெட்டி,மிளகாய்,வெங்காயம் வைத்து லாபம் பெற்றிருந்தான்.பிறகு காணியை,நியாய விலைக்கு விற்று விட்டு,பெற்றோரிடமிருந்து சிறு தொகை பணமும் பெற்று வெளிநாடு போய் விட்டிருந்தான்.சிவத்தானும்,கதிரும் சேர்ந்து கூடு அடித்து கோழி வளர்த்தார்கள்.கடனை சம்பாதித்து,நட்டப்பட்டு பல கசப்பான அனுபவங்களால் துவளவேச் செய்தார்கள்.கலங்காது கொண்டிழுத்து கடைசியில்,வெற்றி கரமாக நடத்தும் வல்லமையைப் பெற்றுக் கொண்டார்கள்.

அயலுக்குள்ளே இருந்த கதிரமலை சாவைத் தழுவ மூத்தவனான செந்தில் கோழிப் பண்ணை வைக்க இவ்விருவருமே முழுமையாக உதவினார்கள்.பிறகு அவன் ஜேர்மனி போக தம்பிக்காரனான சீலன்,தற்போது அதை திறம்படக் கவனிக்கிறான்.அங்கிருந்து நகரக் கடைகளுக்கு முட்டைகள் போய்க் கொண்டிருக்கின்றன.

அங்குள்ளவர்களின் படிப்பின் தரம் குறைவாக இருந்திற்குக் ஆசிரியர்களை பிழை சொல்ல முடியாது.10ம் வகுப்பு வரையில் ஓரளவு படிக்கத் தான் செய்தார்கள்.எ.எல் படிக்க நகரப் பள்ளிக்கூடங்களுக்குப் போன போது,கிராமம் சமதரத்தில் இல்லாதது அவர்களைப் பாதித்தது.தவிர அங்கே டியூசனுக்குப் போற மாணவர்களே அதிகமாக இருந்தார்கள்.கிராமத்துப் பொருளாதாரம் தாழ்வானது.டியூசனுக்கும் போய் படிக்க வேண்டும் என்கிற போது அவனுக்கு படிக்கிறதிலே ஆர்வம் குறைந்து விட்டது.

சிங்கள தேசியம்,கல்வியில் தரப்படுத்தலை அமுல் படுத்தியதால் நகரத்தில் பரவலாக மாணவ ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன.படித்தால் கூட பெரிசாய் ஒன்றும் சாதிக்க முடியாது;என்ன ஆசிரியராவதும் டியூசன் மாஸ்டராவதுமே முடிகிறது என்ற ஏலாமையுமே நிலவின.படிப்பிற்கான தரம் ஒரு படி இறங்கி விட்டிருந்தது.

ஆனால், எல்லாருக்கும் காணிசெய்யிறதும்,கோழி வளர்்க்கிறதும் இலகுவாக இருக்கவில்லை. விருப்பமாகவும் இருக்கவில்லை.ஆட்சியாளர்களால் வேலை வாய்ப்பு வழங்கப் படவில்லையோ..விவசாயம் செய்யலாம்.பிரித்தானிய் கல்விமுறையில் படித்ததால்,சிங்கள தேசியத்திற்கு கீழே இருக்கிறவர்கள் கெளரவமாக வேலை பார்க்கிற போது நாமும் பார்க்க முடியவில்லையே என்ற தாக்கம் வேறு கசப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.எதையும் செய்யவும் மனதையும் விடவில்லை.

அத்தேசியம் எம் விவசாயத்திலும் பல்வேறு பிரச்சனைகளை வைத்திருந்தது.சுதேச ஆட்சி அவசியமாகிக் கிடந்தது.இல்லாது இருந்தாலும் வடக்கு,கிழக்கு விவசாயிகள் கடுமையான உழைப்பாளிகள் என்ற பேரையே எடுதிருந்தார்கள்.காணிகள் சம்பந்தமான உரிமைகள் எம்மிடம் இல்லை.எம்மக்களுக்கான பாதுகாப்புச் செயலர்களை அன்னியர்களான அவர்களே நியமிக்கிறார்கள்.பாதுகாப்பு சந்தேகத்திற்குகிடமானது.

இரவும் பகலும் பயமின்றி எம்மவர்கள் நடமாட முடியாது.இதன் மத்தியில் வேலைக்குப் போகவும் வேண்டும்;விவசாயம் செய்யவும் வேண்டும்;மீன் பிடிக்கவும் வேண்டும்.

சகலதரப்பினருமே சதா அடக்குமுறைச் சங்கிலி இடப்பட்டிருப்பதை உணர்ந்து கொண்டிருந்தார்கள்.ஒரு விடியல் வராதா? என்ற ஏக்கம் அங்குள்ள காற்றிலே மிதந்து கிடந்தது.சிங்கள தேசியத்திற்கு அதைப் பற்றிக் கவலை இல்லை.அது தமிழ்த் தேசியம் ஒன்றே அங்கில்லை என்று கதைக்கிற புரட்சியை செய்து கொண்டிருந்தது.

ஜெயமண்ணை,சிறு பலசரக்கு கடை வைத்திருந்தார்.அதிலே எங்களுக்கு கடன்கொப்பி இருந்தது. அவருக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும்.

“ரீச்சர்..ரீச்சர்..”எனக் கூப்பிட்டு,தம் குடும்பப் பிரச்சனைகளை சதா கதைப்பார்.அங்குள்ள பெண்களுக்கும் அம்மாவை நிரம்பப் பிடிக்கும்.அவர்களின் சரித்திரமே அம்மாவிற்கு அத்துப்படி!அம்மாவும் அவர்கள் வீட்ட அடிக்கடி போய் வருவார்.அவர்களும் எங்க வீட்ட வருவார்கள்.நானும் இப்ப அங்கே ஒருத்தன். ஜெயமண்ணை,மனைவியை “கிளி..”என்றே கூப்பிடுவார்.அவ்விடத்து பெட்டையும்,பெடியளும் அவரை‘கிளியக்கா’என்றே கூப்பிடுவார்கள்.அந்தி சாயும் நேரத்தில்,தம் இரு சிறுபெண்களுடன் எங்க வீட்ட வந்து, மணிக்கணக்கில் இருந்து கதைப்பார்கள். பொதுவாக கடையிலே இருவருமே சேர்ந்து நிற்பார்கள்.சாமான்களை வாங்கிற போது கிளியக்கா,வாஞ்சையோடு என்னோடு கதைப்பார்.வெளியிலே யாருமே இப்படி என்னோடு கதைத்தில்லை.அதனாலே எனக்கு அவரை நிரம்ப பிடித்திருந்தது. அதேசமயம் எனக்கு ‘கிளியக்கா’என்று கூப்பிட விருப்பமில்லை. “ஜெயம் அக்கா..”என்றே கூப்பிடுவேன்.அதைக் கேட்டு ஜெயமண்ணை சிரிப்பார். அவரும் அன்பானவர். “நீ அப்படி கூப்பிடுறது பிழை இல்லை.உன் விருப்பம்”என்பார்.

ஜெயமக்காவிற்கு சிறு வயதிலிருந்தே நீரழிவு வியாதி.இன்சுலின் ஊசி எடுக்கிறவர்.அதனால் ஏற்படுற வாடல் தன்மை அவரிம் இருக்கவில்லை.ஜெயமண்ணையின் அன்பும் ஆதரவும் அவரை வாடவிடவில்லை போலும்!

நம்நாடு எப்பவும் ஓரே மாதிரியா இருக்கிறது.சங்கமித்தையும்,மகிந்தாவும் வந்த போது இருந்த சிறிலங்காவா இப்ப இருக்கிறது.சிங்கள தேசியம,( இஸ்ரேல்,பாலஸ்தீனப் பிரதேசங்களை கபளீகரம் செய்தது போல)தமிழ் பிரதேசங்களை அபகரித்த சிறிலங்கா அல்லவா இருக்கிறது. கிராமத்தில்,எங்களுடைய குடியிருப்பும் நெடுக அப்பகுதியில் இல்லாமல் தம்பைய்யா மடப்பகுதியிற்கு மாறியது.நானும்,எ.எல் வகுப்பில் சறுக்கி விட்டிருந்தேன்.என் தங்கச்சிமார் ஓருவாறு கடந்து விட்டிருந்தார்கள்.அவர்கள் பாடு ஓரளவிற்குப் பரவாய்யில்லை.ஆனால்,சிங்கள தேசியம் போலவே நம்தரப்பிலும் படித்த மாப்பிள்ளைமார்களும் இருக்கிறவர்களாச்சே!என்னென்ன துன்பங்கள் தலைவிதியாய் இருக்கிறதோ ..யார் அறிவார்கள்.ஆனால்,அவர்கள் தரப்படுத்தலையும் விலத்தி வேலை பார்க்கிற பெண்களாக .. காலூன்ற வேண்டும்.அதிலே சிமார்ட்டாக இருக்கிறவர்கள்,சிமார்ட்டாக இருப்பார்கள்.இல்லாதவர்கள்,படித்த படிப்பையும் வீணாக்கி விட்டு பெண்னடிமைத் தனங்களில் அகப்பட்டவர்களாக, சிறிலங்கன் தமிழனைப் போல அழுது கொண்டிருப்பார்கள்.நேரான பள்ளிக்கூடப் படிப்பிலே தரப்படுத்தல் வெளிபடையாக தெரிகிறது.நான் வாழ்ரதுக்கும் ஒரு வேலை அவசியமாகிறதே.அப்புதிய முயற்சியில்,மறைவாக படர்ந்திருக்கிற தரப்படுத்தலை சந்திக்க வேண்டும்.ஆனால்,’இத்தரப்படுத்தல்’ 2ம்தரமாகவே நம்மவர்களாலும் பார்க்கப் படுகிறது.தரப்படுத்தல் எப்படியும் கிடந்து விட்டு போகட்டும்.ஒரு வேலை எடுப்பதற்கான தகுதி-படிப்பு-பூச்சியமாக இருக்கிறதே!என்ற கலக்கம் என்னை பிடித்தாட்டியது.சீலனைப் போல கோழி வளர்க்கிறதுக்கு ஒரு ரீச்சரின் மகன் போகவும் முடியாது.கழிந்த படிப்புக்காலம் வீண்.அதற்கான செலவுகளும் வீண்.8ம் வகுப்போட மரம் ஏறின தில்லை யதார்தவாதியாய் தெரிந்தான்.ஜெயமண்ணையையும் இந்த கலக்கம் ஆட்டி வைத்திருக்கும் என்பது புரிந்தது.கொழும்பில் வேலை பார்க்கிற எந்தரவலிகளை பொறாமையுடன்பார்த்தேன்.லஞ்சம் கொடுத்தாவது பிச்சை எடுப்பது போல வேலை எடுப்பது புத்திசாலித்தனமா?ஆனால்,வறுமையில் வாடும் அம்மாவின் களைத்த தோற்றம் அந்த எண்ணத்தை விரட்டி அடித்தது.இனி் தொழிநுட்பக்கல்லூரியில் சேர்ந்து பல்லைக் கடித்துக் கொண்டு படிக்க முயல வேண்டும்.

தற்காலிக சொர்க்கமாக தெரிந்த கொழும்பிலும்் தமிழர்களை கண்மண் தெரியாமல் அடிக்கிற கலவரங்களும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.படிப்பு ஏறினால் என்ன ஏறாட்டி என்ன வாழ்க்கையில் கால் வைக்க வேண்டிய வயதில்,சிறையில் இருந்த பல தமிழ் கதாநாயகர்களை படுகொலை செய்த செய்தி என் மூளையையே விறைக்க வைத்து விட்டது.இந்த நாட்டில் தமிழன் சுதந்திரதிற்காக போராடிச் சாக வேண்டியது தான் தலைவிதியா!இந்தக் கனல் பல இளைஞர்களை தெரியா பல்வேறு ஆயுதக் குழுக்களிலே ஓடி ஓடி சேர வைத்தது.எப்பவும் எனக்கு ஒருவித தயக்கம் ஏற்படுவது வழக்கம்.குறைந்த பட்சம் கெளரவவேலைக்கான படிப்பு என்னிடம் இல்லை.ஓடிப் போய்ச் சேர்ந்து என்ன செய்யப் போகிறேன்.சிங்களதேசியம் ஒரு ஆமை.அது லேசிலே அசையாது.படிக்கிற தொழிநுட்பப் படிப்பை முதலில் முடித்தாக வேண்டும்.என் வகுப்பில் இருந்தவர்களும் இந்த சிந்தனைப் பிரிவினரே.அங்கே, ‘நாம் ஈழவர்’என்ற குழுவைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் சிலர் வரத் தொடங்கினார்கள்.டீ,காப்பி குடிக்கிற உணவுப்பகுதியில் மாணவர்களோடு கலந்துரையாடுவார்கள்.என் வகுப்பில் இருந்த சிலர் அவர்களுக்கு நண்பர்களாக இருந்ததால் சிறு நூல்கள்,கட்டுரைகளைக் கொண்ட பத்திரிகைத் தொகுப்புக்களை இரவலாக எமக்கு படிக்கத் தந்தார்கள்.அரிய பொக்கிசங்களான அவை விலை கூடியவை. “பகுதிநேரமாக பங்களிப்பு செய்வது அவசியம்.அதற்காக நீங்கள் படிப்பை குழப்ப வேண்டியதில்லை.விடுதலைக்கு படிப்பு அவசியம்”என்ற அவர்களது பேச்சு எனக்கும் பிடித்திருந்தது.

நான் அவர்களுடன் சேரா விட்டாலும்,வேறொரு குழுவில் பகுதி நேரமாக சேர்ந்து கொண்டேன்.விடுதலைப்போராட்டத்தை ஒரு குழு மட்டும் நடத்தியதில்லை.

பல்வேறு குழுக்கள் உருப்பெற்று,தம்முள் அடிப்பட்டு,மிதிப்பட்டு,சுடுப்பட்டு கொண்டே நடத்தின.அவற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்புக்களையும் ஏற்படுத்திக் கொண்டு கடைசியில் வெற்றியும் பெற்றன.ஈழவரும் நான் …சேர்ந்ததை விமர்சிக்கவில்லை.நானும் சேர்ந்ததுடன் நம்பிக்கையுடம் இழுபடத் தொடங்கினேன்.

கிராம அமைப்பில் தலைவனாக இருந்தவன் 8ம் வகுப்போட படிப்பை விட்ட ராமு.நகரத்தில் வீட்டுக்கு வெள்ளை,கலர் அடிக்கும் வேலையைக் கற்று,தானே ஒப்பந்தங்களைப் பெற்று சிறு குழுவாக வேலை செய்பவன்.புடவைக் கடைக்கு வேலைக்குப் போன நம் கிராமத்துப் பெட்டை வாசுகியைப் பார்த்து …காதலில் விழுந்தான்.முடித்து புதிய முகமாக கிராமத்திற்கு வந்தவன்.ஆச்சரியம்!,வாசுகி என்னோடு படித்தவள்்.அவளும்8ம் வகுப்போட நின்று விட்டவள்.அவனை இயக்கத்திற்கு இழுத்து விட்டவனும் தொழிநுட்பக்கல்லூரியில் எனக்கு தெரிந்த கதிர்.கம்பஸில் படித்துக் கொண்டிருந்த அவன்,கெளரவம் பாராது நம் தொழிநுட்பக்கல்லூரிக்கு வந்து,ஈழவர் போல கதைத்து,இரண்டுக்குமிடையில் ஒரு பொதுவான மாணவ மன்றத்தை அமைதது விட்டவன்.அதற்கு முதல் கம்பஸ் தனியாகவே ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள்,உண்ணாவிரதங்களை நடத்தின.நம்கல்லூரியும் தனியாகவே நடத்தியது.இரண்டும் கைகோர்த்து நடத்திய போராட்டங்களை ஈழநாடு பத்திரிகை மாணவ எழுச்சி என பாராட்டி கட்டுரைகளை பிரசுரித்தது.கதிர் வெளியிலும் பாசறை வகுப்புக்கள்..என அரசியல் வகுப்புக்களை,ஊர்கள்,கிராமம்,குச்சுவெளிகள் எல்லாம் திரிந்து இரவிரவாக நடத்தி இருக்கிறான்.அந்த வகுப்புகளில் சிலவற்றில் பங்கு பற்றிய ராமு,அவ்வியக்கப் பெடியனாகி விட்டான்.பிறகு,அவன் கிராமத்துக்கு வர, கிராமத்து பொறுப்பாளராக்கி விட்டார்கள்.

மனைவியோடு படித்தவன்,கதிரை தெரிந்தவன் என அறிந்த போது..ராமு என்னோடு நண்பனாகி விட்டான். “நானும் நீயும் கூட்டாக வேலை செய்வோம்”என்றான். “எனக்கு விடுதலையைப் பற்றி ஒரு அட்சரமும் தெரியாதே”என்றேன். “எனக்கு மட்டும் என்னவாம்.பாசறை வகுப்பில் சொன்னதைக் கேட்டு நடக்கிறேன்.நீயும் பாசறைவகுப்புகளுக்குப் போய் வா.எல்லாம் புரியும் எங்கட அமைப்பு எப்பவும் தலைமைப் பகுதியுடன் தொடர்பு கொண்டதாக இருக்க வேண்டும்.கல்யாணம் கட்டக் கூடாது.கட்டியிருக்கிறேன்.வேலைக்கும் போய் வர வேண்டும்.தலைமைப் பகுதிக்குப் போய் வர நேரம் இல்லை.அங்கிருந்தே நரசிம்மன் இங்கே வந்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறான்.நீ வகுப்பு முடிந்த பிறகு கிழமையில் 2நாளாவது அங்கே போய் வாவன்.உன்மூலமாக  தொடர்பு நிலவுமானால் நரசிம்மன் வரவேண்டியிருக்காது.உனக்கும், மற்ற தோழர்களும்,நம்வேலைகளும் ஓரளவு புரியும்”என்றான்.

நானும் ஒப்புக் கொண்டேன்.தலைமைப்பகுதியில் இருந்த 2-3 தோழர்கள் எனக்கு நகரசந்தைப் பகுதியில் ஏற்கனவே தெரிந்தவர்கள். எங்கள் தரவலியினர் தாம். தொழிநுட்பக்கல்லூரியில் சேராமல் ..என்னென்வோ வேலைகள்செய்து கொண்டிருந்தார்கள்.வீட்டிலே இருக்க முடியாது என்பதால் நகரசந்தைப் பகுதிக்கு தினமும் வந்தவர்கள்.புடவைக்கடைக்காரனும்,வீடியோக்கடைக்காரனும் இந்தியாவிலிருந்து சாமான்களை வாங்கி வர இவர்களையும் கூட்டிச் சென்றிருக்கலாம்.

தொழிநுட்பக்கல்லூரியில் வகுப்பு முடிந்த பிறகு  உடனேயே எனக்கும் வீடு திரும்புற பழக்கம் இல்லை.வகுப்புத் தோழர்களுடன் நகரசந்தைப் பகுதிற்கு வந்து தேனீர் குடிப்போம்.இவர்களும் தேனீர் குடிக்க வருவார்கள்.சிலவேளை நாம் வாங்கிக் கொடுப்போம்.பொக்கற் மணி இல்லாத வருத்தம் அவர்கள் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும்.ஆனால்,எலெக்ரிக்கல் வேலை,அந்த,இந்த வேலை என அவர்களுக்கு நிறைய அறிவிருந்தது.டீக்கடையில் நெடுக எலெக்ரிக்கல் பொயிலரை திருத்தி இயங்க வைக்கிறவன் அதிலே ஒருத்தன்.

தொழிநுட்பக்கல்லூரித் தோழர்களும, நானும்..வழக்கமான பாடசாலைப் படிப்பில் கூடப் படித்தமாணவர்களைப் பற்றி சரிவர அறியாதிருந்ததைக் குறித்து தற்போது வருத்தப்பட்டோம்.எங்களுடைய கம்பஸ் இது!ஒரு வருசப் படிப்பு இருந்தது. “கூடப் படிக்கிறவர்களை அறிய வேண்டுமானால் கட்டாயமாக அவனுடைய வீட்டுக்கு மாணவக்குழுவாக போய் வர வேண்டும்”என்று சந்துரு நெடுக வலியுறுத்தினான்.சரியாகப் பட்டதால்..நாம் வகுப்பு முடிய போய்வரத் தொடங்கி இருந்தோம்.முதல் தடவையாக அவர்களின் பெற்றோரையும்,சகோதரர்களையும் கண்டோம்.அந்த வீடுகளில் கொறிப்பதற்கு பலகாரமும்,தேனீரும் தந்து உபசரித்தார்கள்.அங்கே நிலவுகிற பிரச்சனைகள் சில தெரிய வந்தன.விசேசமாக கோயில் திருவிழா என்றால்..அந்த இடத்திலிருக்கிற நண்பனின் வீட்டிலே ,திருவிழா முடிய தங்கினோம் .அவனோட அக்கிராமத்தையும் சுற்றி பார்த்து விட்டு வீட்டுக்கு வருவோம்.

பெண் தோழிகளும் சரிசமவளவில் எங்க வகுப்பில் படித்தார்கள். அவர்கள்,எல்லார் வீட்டிற்கும் போனதில்லை.முதலிலே கேட்டு ‘வாருங்கள் என வீட்டிலேயும் கேட்டு அழைப்பு வந்தவர்கள் வீடுகளுக்குத் தான் விசிட் பண்ணினோம்.தனி மாணவனாக போகாது 5-6 தோழர்களாகச் சென்ற போது அவர்களும் முறையாக உபசரித்தார்கள்.அவ்வாறு சனி ஞாயிறு தினங்களில் பெண்கள் வீடுகளுக்குச் சென்று மதிய உணவு உண்டோம்.சிலர் வீடுகளுக்கு பஸ்சிலே போக வேண்டியிருந்தது. சிலருக்கு..சைக்கிளில் போய் வரக் கூடியதாயும் இருந்தது.அதிலேயும் பலவித செய்திகளை அறிந்தோம்.உதாரணத்திற்கு,விமலாவின் அப்பா ஒரு பொலிஸ்காரர்.முரட்டு மீசை உடையவர்.ஆனால் அன்பாக பேசினார்.ஒருத்தன்  “வாங்கடா பொஞ்சாதி வீட்ட போய் வருவோம்”எனறு கூட்டிச் சென்றான்.அவன் கல்யாணம் கட்டவில்லை.எனவே நாங்கள் வியப்புடன் விழிக்க, “கட்ட அவளை நிச்சயித்திருக்கிறார்கள்”என்றான்.உண்மையிலே அங்குள்ளவர்களும் அப்படித் தான் அந்த வீட்டை குறிப்பிடுகிறார்கள்.

இப்படி விசிட் பண்ணுறது ஏற்கனவே கம்பஸ் மாணவர்களிடையே இருந்தது தான். தொழிநுட்பக் கல்லூரியில் முதல் தடவையாக விசிட் பண்ணியவர்கள் நாமாகத் தான் இருப்போம்.எம் தோழர்கள் தோற்றத்தில் பலவிதமாக இருந்தார்கள்.என்னுடைய உடுப்பும் தோற்றமும் கொஞ்சம் மோசம்.சந்துரு,கிட்டு ஈசன்..தோற்றம் நல்லாவே இருக்கும்.ஆனால் அது பெரிதாகப் பார்க்கப் படவில்லை.அப்படி போனதால் எம்மிடையே ஆழமான நேசபாவம் வளர்ந்து விட்டிருந்தது,

தேனீர் கடையில் அறிமுகமான நந்தும்,சுரேசும் தலைமைக் காம்பில் இருந்தார்கள். “டேய் கடைசியில் நீயும் வந்து சேர்ந்து விட்டாயா!”என்று சுரேஸ் வரவேற்றான்.நந்து, “உனக்கு தியாகுவை தெரியும் தானே.எங்களோட வருவான்.அவன் இந்தியாவிலே பயிற்சியில் இருக்கிறான்”என்றான்.அவர்களுக்குத் தலைவன் கமலக்கண்ணன்.என்னை விட 1 வயசு கூடியவன்.புதிய தோழர்களாக பரமு,சந்திரன்,பொன்..என பலரும் ..பிறகு எனக்கு நண்பரானார்கள்.

என்னுடைய மல்லிகைப்பூக் கிராமம் சிறிது பரப்பளவில் பெரியது.உப அரசாங்கப் பிரிவு வசதிக்காக அதை 2 கிராமமாக பதிந்திருக்கிறது.கிராமசபைகள் 2,ஆனால் கிராம சேவகர் ஒருத்தர் தான்.மற்றைய கிராமத்திற்கு ராமு சென்று அடிக்கடி கூட்டங்களை வைத்தான்.நானும் அந்த பட்டாளத்தோடு செல்வேன்.ஆனால்,அவனுக்கு அதிரடி நடவடிக்கைகளிலே ஆர்வம் அதிகம்.சிலசமயம்,மக்கள் அவன் பேச்சைக் கேட்காது முரண்டு பிடித்தால்,கோபத்தில் இவன் டுயூப் லைட் பல்ப்..இப்படி எதையாவது உடைத்து விடுவான்.கண்டிப்பாகவும் பேசி எச்சரிப்பான்.மக்களுக்கு அவனை நெருங்கவோ,தடுக்கவோ பயம்.அவனுக்குப் பின்னால் பல பேர் இருக்கிறார்கள்.ஒரு குழுப் பெடியனில் கை வைத்தால்,தலைமைப் பகுதியிலிருந்து வந்து அள்ளிக் கொண்டு போய் விடுவார்கள்.காம்பிலே வைத்து விசாரிக்கப் படுவார்கள்.சமயத்தில்,அடி உதையும் பொலிஸ் ஸ்டேசனில் நடக்கிறது போல விழும்.2-3 நாள் என நிறுத்தி விட்டு ஆறுதலாகவே விடுவார்கள்.பிறகு நோவிற்கு புக்கை கட்ட வேண்டியிருக்கும்.வேலைக்கு அந்த கிழமை போக முடியாது.பேச்சுச் சுதந்திரம் கட்டுப்பாட்டிலே இருந்தது.நான் சேர்ந்த பிறகு,எங்க தரப்பில் பிழையாக இருந்தால் சமாளிக்கப் போவேன்.ரீச்சர்ர மகன் என்பதால்,நட்ட ஈட்டை தவிர்த்து,தாழ்ந்த குரலிலே வந்து மன்னிப்பு மட்டும் கேட்கச் சொல்வார்கள்.அப்படி வருவானோ என்று அவர்களுக்கு சந்தேகம்.நான் சில தடவை ராமுவைக் கூட்டிச் சென்று மன்னிப்பு கேட்க வைத்தேன். ராமு என் பேச்சைக் கேட்பவன்.அவனுடைய அவசர செயல்கள் மட்டுப்படத் தொடங்கி இருந்தது.ஆனால்,அடி போட வேண்டிய இடங்களில் அவன் மிக துணிவாகவே இயங்கினான்.எந்த கத்தி,குறுவாளுக்கும் பயப்பட மாட்டான்.எந்த நேரம் என்றாலும் 4-5 பேரோட கொஞ்ச நேரத்திலே அவ்விடத்திலே நிற்பான்.அவனுக்கிருந்த துணிச்சல் எனக்கு இருக்கவில்லை. “எதுக்கும் பயப்படாதே”என்று எனக்கு கூறுவான்.அப்ப,இயக்கமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

எம்மவர்கள் மட்டுமில்லை,மற்றவையும் அட்டென்சன் நிலையிலே இருந்தன.ஒன்றிலே சேட்டை விட்டு விட்டு திரும்பினால் மற்ற இயக்கம் எதிரே நிற்கும்.குறுநில மன்னர் போல தமிழர் பகுதியில் எல்லாம் அட்டகாசம் செய்து கொண்டு திரிந்த சண்டியர்களே அடங்கிப் போய்யிருந்தார்கள்.

இயக்கத்தில் இந்தியாவிற்குப் பயிற்சிக்காக போனவர்கள் எழுதிய கடிதங்கள் சில வர ஆரம்பித்தன.அந்தந்த கிராமத்துப் பொறுப்பாளரிடம்

சேர்ப்பார்கள்.அவன் அவர்களுடைய பெற்றோரிடம் கொடுப்பான்.நான் போய் வருவதால் மல்லிகைப்பூக்கு வந்த கடிதங்களை என்னிடம்

தந்தார்கள்.ராமு வேலைக்குப் போய் வந்து களைப்பில் இருப்பான் என்பதால்,தோழர்களில் 2 பேர்களை அழைத்துக் கொண்டு முதலில்

அந்த தோழரின் வீட்டிலே கொடுக்கச் சென்றேன்.வாசிகசாலையில் இருந்தவர்களிடம் குச்சி வீட்டை விசாரித்துக் கொண்டு கொடுத்த போது

இரவு 9.00 மணி இருக்கலாம்.அவர்களுக்கு ஏற்பட்ட சந்தோசம் எங்களையும் கண் கலங்க வைத்தது. “முதல் தடவை வார கடிதம்”என்றார்கள்.சிறு கடிதத்தை எழுதி வைத்து விட்டுப் போனவன் தான்.பிறகு என்ன ஆனான்?எங்கே இருக்கிறான்?என்பதே தெரியவில்லை. ‘வழியில் நேவியால் சுடப்பட்டு ,அல்லது வள்ளம் கவிழ்ந்து ..இறந்தவர்களில் ஒருத்தனாகி இருப்பானோ..?என்ற கலக்கத்தில் என்னென்னோ நேர்த்தி எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்’என்று சொன்னார்கள்.

போற பெடியள்கள்100க் கணக்கில் என்பதால் எங்களுடைய சிறு தலைமைக் குழுவிற்கும் போறவர்களின் விபரம் சரிவர தெரிவதில்லை.தளம் வேற உலகம்.பிந்தளம் வேற உலகம்.பயிற்சியால் திரும்பி வந்தாலே சில பெடியள்கள் உயிரோடு இருப்பது தெரியும்.7-8 மாசங்களுக்குப் பிறகு வந்த கடிதம்.அதைப் போல அடிக்கடி கடிதங்கள் வள்ளத்தில் வருவதில்லை.இப்படி சேர்ந்த கடிதங்களை,பிரசுரங்கள்,பத்திரிகைகள் கொண்டு வார வள்ளத்தில் பாதுகாப்பாக போய்ச் சேரும் என்ற நம்பிக்கை இருந்தாலே சேர்த்து அனுப்புவார்கள்.சிறிலங்கா படைகளிடம் அகப்பட்டு விட்டால்,கடித்தால் பெற்றோர்,சகோதரங்களுக்கு ..கூட பிரச்சனைகள் ஏற்பட்டு விடும்.பலநாள் நரமாமிசம் சாப்பிட காத்திருந்த மிருகம் போல படையினர் நடந்து கொள்வார்கள்.எனவே பெடியள்களுக்கு கடிதம் எழுதச் சொல்லி ஊக்குவிக்கப் படுவதில்லை.பயிற்சி முடிந்த பிறகு காம்களை நிர்வக்கிற வேலைகளில் ஈடுபட்டு காலதாமதமாகினால் மட்டுமே ..கடிதம் எழுத அனுமதித்தார்கள்.அப்படி குச்சியிடமிருந்து வந்து சேர்ந்தது.10 ½ மணியிற்கு வீட்ட வந்து சேர்ந்தேன்.

காலையிலே, பூவரசம் குச்சியால் பல்லை தீட்டிக் கொண்டிருந்தேன்.இயக்கத்தோடு,வீட்டிலே இருந்து அறுபட்ட நிலையிலே திரிகிற போது பற்பசை,பற்பொடி கிடைக்காது.அப்ப பூவரசம் குச்சியால் பல்லை துலக்கிறதுக்குப் பயிற்சி.பக்கத்து வீட்டு விநாயகம் அண்ணை,அதிகாலையிலே எழும்பி வீதியில் நடக்கிறவர்.எங்கவீடு,வீதிப்பக்கம் மார்பளவு உயர மதில்ச்சுவரைக் கொண்டிருந்தது.என்னைப் பார்த்து விட்டு, “கேட்டுக்குப் பக்கத்திலே 2 பெண்கள் குந்தி இருக்கிறார்கள்.போய் பார்”என்று சொன்னார். ‘கேட்’சங்கிலியால் பூட்டுவதில்லை.திறந்து கொண்டு வரலாமே.புரியவில்லை.விறுவிறுவென போய்ப் பார்த்தேன்.நெஞ்சு அதிர்ந்தது போல இருந்தது.சிறு வயதில் பார்த்த ஜெயமக்கா போல ஒருத்தியும்,கூட இன்னொருத்தியும் இருந்தார்கள். “யார் நீங்கள்?நான் பொறுப்பாளன் இல்லையே.ராமு தான்”என்று சொன்னேன்.பிரச்சனைகள் சொல்ல இயக்கத்திடம் வாரது இருந்தது. ‘அப்படி ஒருவேளை வந்திருப்பார்களோ..?’என்று தோன்றியதால் அப்படிச் சொன்னேன். “தெரியும் தம்பி”என்றார் பக்கத்தில் இருந்தவர். “என்ன விசயம்?”தயங்கிக் கேட்டேன்.என்னைத் தேடி யாருமே வந்ததில்லை.ஒருவேளை அம்மாட்ட வந்திருப்பார்களோ?..என்றும் தோன்றியது.உள்ளே வரலாமே,ஏன் வரவில்லை என்பதால் குழப்பம்.

“இவர் குகனின் அம்மா.அவன் உங்க இயக்கத்திற்கு பயிற்சிக்காக வள்ளம் ஏறினவன்.அவனைப் பற்றி ஒரு செய்தியும் இல்லை.”அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.விநாயகம் சொன்னது அம்மாவிற்கும் கேட்டதில்..கேட்டடிக்கு வந்தார். “அவர்களை உள்ளே கூட்டி வா.வாங்கோ”என்று அழைத்தார். “நான் இவவின் சினேகிதி.நீ குச்சி வீட்டுக்கு கடிதம் கொடுத்தாய்.அதிலே அவன் குகன் என்னோடு இருக்கிறான்’என்று ஒரு வரி எழுதியிருக்கிறான்.குச்சியிட அண்ணர் உடனேயே வந்து அதை இவவிடம் காண்பித்தார்.உடனேயே இங்க வரணும் என்று அழத் தொடங்கி விட்டாள்.நான் தான் இரு,காலையிலே போய் பார்க்கலாம் என்று நிறுத்தி வைத்தேன்.”உள்ளே வார போது கூறினார்.

அம்மா,விராந்தையில் இருந்த கதிரையில் முதலில் இருக்கச் சொன்னார்.தங்கச்சி இருவருக்கும் தேனீர் கொண்டு வந்தாள். “குடிச்சுப் போட்டு கதையுங்கள”என்றாள். “இவள் நித்திரையே கொள்ளவில்லை.காலையிலே என்னை வந்து எழுப்பி விட்டாள்” “எடியே விடியக் கூடவில்லையே”என்று தடுத்துப் பார்த்தேன்.பெரிதாய் அழுது விடுவாள் போல இருந்தது.அது தான் கூட்டி வந்தேன்.நீங்கள் எழும்பி இருக்க மாட்டீர்கள்.எப்படி எழுப்புறது? ..என்று வாசலிலே இருந்து விட்டோம்.1 மணிநேரம் இருந்திருப்போம்.கால் எல்லாம் வலிக்கிறது”என்றார்.அவர் என்னைப் பார்த்து “குகனை எப்படியாவது கடிதம் எழுதச் சொல்லு தம்பி”என்றார்.அவரது கரையல் எங்களையும் என்னவோ செய்தது.எனக்கு ஜெயமக்காவே நேரில் கதைப்பது போல வேறு இருந்தது.

“தங்கச்சியிட பேர் என்ன?”என்று அம்மா கேட்டார். “பவானி”என்று சினேகிதி கூறினார். “பவானி கவலைப்படாதியும்.குகன் நல்ல மாதிரி திரும்பி வருவான்”என்று அம்மா ஆதரவுடன் சொன்னார்.நான் “தலைமைப் பொறுப்பாளரிடம் சொல்றேனக்கா”என்றேன்.

கமலக்கண்ணன், “அங்கே இருந்த பள்ளியிலே இருந்து 10 வகுப்பிலே பலர் அள்ளுப்பட்டு போனவர்கள்.இவன் அதிலே ஒருத்தனாக இருக்க வேண்டும்!நாங்கள் போறவர்கள் பெயர்கள் எல்லாம் ஒழுங்காக பதிந்து வைப்பதில்லை.விடுதலை என்ன இயல்பாய் நடக்கிறதொன்றா? ..இல்லையே!எங்களை விட உங்க கிராமத்தில் இருப்பவர்களுக்குத் தான் கூடுதலாகத் தெரியும்.இங்கே இழுப்பட்டு போய் இருந்தால் ..எங்களுக்கும் கொஞ்சம் தெரிந்திருக்கும்.இவன் போன்றவர்கள் போன பிறகே ,என்ன இயக்கம்?அதன் கொள்கைகள் என்ன?..பற்றி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் அறிந்து கொண்டிருப்பவர்கள்.”என்று விளக்கினான்.

நான்,எ.எல் கண்டு,டெக்கும் கண்ட பிறகே சேர்ந்தவன்.கொஞ்சம் அரசியல் தெரியும்.இடதுசாரிக் கருத்துக்களையும் சிறிது பேசத் தெரியும்.ஆனால்,குகன் தரவலியினரோ ..சின்னப் பெடியள்!பயிற்சிக்கு 17வயதிற்கு மேற்பட்டவர்களையேஅனுப்பினார்கள். ‘வளர்ந்த பெடியனாக இருப்பான் ‘என்றால்,பவானியக்கா,17-18 வயதிலே கல்யாணம் கட்டியிருப்பார் போலப் பட்டது.

அந்த மாசம் கழிய தெற்கு மல்லிகைப்பகுதியில் குச்சி,மாணிக்கம் இருவரும் வந்து சேர்ந்தார்கள்.குகனிடமிருந்து கடிதம் வரவில்லை.15 நாள் கழிய,அவனே வந்து சேர்ந்தான்.பவானியக்காவிற்கு புளுகம் என்ற புளுகம்.அவனில் அவரின் முகம் அப்படியே இருந்தது.

ராமுட அதிகரித்த அதிரடிச் செயற்பாடுகள் பலமாக விமர்சிக்கப்பட்டு,முறைப்பாடுகளை குவித்தன.எங்க பகுதியில் மட்டும் இந்த நிலை என்றில்லை.பரவலாக எல்லா இடங்களிலுமே இந்த நிலை தான்.

இது தான் சாட்டு என  “எனது வலது குறைந்த சகோதரனை அடித்து விட்டான்;பொம்பிள்ளைப் பிள்ளையின் கையைப் பிடித்து இழுத்தான்;குடும்பபனகையை மனதில் வைத்து அடித்தான்..”, ‘பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு எதிராக.. முறைப்பாடு் செய்யுங்கள்’என்று மாணவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் எப்படி இருக்கும்!,அப்படியிருந்தது.மனதிலுள்ள ஆற்றாமை,எரிச்சல்களால்..பல பொய்களையும் சேர்த்து பொறிந்து தள்ளிக்கொண்டிருந்தார்கள்.அவற்றை விசாரிக்கிறது முடியாத காரியம்.தோழர்கள் சென்றால், “நான் சொல்லேலை தம்பி!வேற ஒருவர் சொல்லி இருக்கிறார்”என்று நழுவலாக பதிலளித்தார்கள். ‘யார் அந்த ஒருவர்?’தேடிப் பாருங்களன்.பொதுவாக விமர்சனத்திற்குள்ளானவர்களை தலைமை விசாரிக்கிறது மட்டுமே முடிந்தது.சில இடங்களில் அமைச்சர்களை மாற்றுவது போல ,இங்கேயும் புதியவர்களை நியமித்தார்கள்.ஆடத் தெரியாதவர்கள் ‘மேடையைப்’ பற்றி கரிச்சுக் கொட்டுறதை நிறுத்தவா போகிறார்கள். பிரச்சனையை நாம் விசாரிக்கப் போய் தானே இந்த நிலமை.பிரச்சனைகள் மலிந்த பகுதியில், கொஞ்சம் சுறுசுறுப்பானவர்களையும், பிரச்சனை வளர்க்கிறவர்களின் உறவினர்களையும் கலந்து  ‘விழிப்புக்குழு’என்ற அமைப்பை ஏற்படுத்துவதில் எங்கள் குழுவினர் எல்லாப் பகுதியிலும் இறங்கினார்கள். “இனிமேல் நீங்களே எதையும் விசாரியுங்கள்;தீர்பளியுங்கள்!,”எங்கள் தரப்பிலிருந்து குறைந்த பட்சம் 2 பிரதிநிதிகளாவது பிரசன்னம் ஆவார்கள்..என்று தெரிவிக்கப்பட்டது.

இரவு நேரம் பிந்தி நடை பெறுகிற கூட்டமாக இருப்பதால்,நம் பகுதியில் 4-5 பேர்களாகச் சென்றோம்.

கொஞ்சம் படித்தவர் பகுதியில்,வாசிகசாலைகள் திறம்பட இயங்கின.அவையே,விழிப்புக் குழுவாக கருதப்பட்டன.அங்கிருந்து வரும் பிரச்சனைகளை அவர்களிடமே கொண்டு செல்ல வைத்தோம். சில வாசிகசாலைகள் அவற்றை எடுக்க தயக்கம் காட்டின. “சரி!,நாங்கள் விசாரிக்கிறோம்.சில பேர்க்கு அடிக்க வேண்டியும் வரு.சரியா?”என்று கேட்டோம்.வீணாக  அடி விழுவதை அவர்கள் விரும்பவில்லை.

“எங்களைச் சேர்ந்தவர்கள் 2 பேர்களை அனுப்புகிறோம்.ஏதாவது பிரச்சனை எழுந்தால்…உங்களுக்கு பக்க பலமாக நிற்பார்கள்”.
 
சிலர்,ஒரு விடுதலைக்குழுவில்லாது பல இருப்பதால், “பிரச்சனை ஏற்பட்டால் உங்களை அழைக்கிறோம்”என்றார்கள். “உங்கள் விருப்பம்!உங்களுக்கு விரும்பின எந்த குழுவிடமும் செல்லலாம்.எங்களுக்கு வருத்தம் கிடையாது”என்றோம்.
 
‘பொலிஸ் வேலை பார்த்து கெட்டப்பேர் சம்பாதிப்பதை விட,நீங்களே பொலிஸ் வேலையைப் பாருங்கள்’என பந்தை அவர்களிடம் தள்ளி விடுவது புத்திசாலித்தனமாக இருந்தது.எந்த விமர்சனம் எழுந்தாலும்,அக்குழுக்கள் மேலே வைக்க முடியும்.
   
இந்த முறையால் எங்க மேல வைப்பது குறைந்தது.ஆனால், “நாங்கள் என்றால் இந்த மாதிரி தான் தீர்ப்போம்.அதற்காக  எடுத்தவாக்கிலே கறாக இருக்க வேண்டும் என்பதில்லை.ஆனால்,இதைப் போல இனிமேல் எழுகிற பிரச்சனைகளில்் தீருங்கள்.அது தான் புத்திசாலித்தனமானது”என எம் கருத்துக்களையும் வலியுறுத்தி விடுவோம்.அப்படி நம் பாணி மெதுவாக அமுலானது.நமக்கு நல்ல பேரும் கிடைத்தது.
 
பிரதிநிதிகள் என என் தலைமையில் குகன்,குச்சி,மாணிக்கம் சேர்ந்து வருவார்கள்.தவிர அவ்விடத்திளுள்ள எம் தோழர்களும் இருப்பார்கள்.ஒவ்வொரு கிராமத்திலும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு தீவிர ஆதரவாளர்களாக சில குடுபத்தினர் இருந்தது போல,எமக்கும் ஒவ்வொரு பகுதியிலும் 1-2 உறுதியான தோழர்கள் இருக்கவே செய்தார்கள்.அதனாலே,சண்டித்தனம் செய்தவர்கள் பலரும் தலைமறைவாகி விட்டிருந்தனர்.சில சண்டியர்,சாதாரண மனிதராக மாறிய அதிசயம் நிகழ்ந்திருந்தது.சண்டியர்களும் ஒரு அமைப்பு வடிவத்தினர் தான்.தலை எங்கேயோ இருக்கும்.ஜால்ராக்கள் எல்லாம் சிங்கள தேசியவாதிகளின் ஊக்குவிப்பால் சண்டித்தனம் செய்பவர்களாக இருந்தார்கள்.ஜால்ராக்கள் உண்மையிலே சண்டியர்கள் கிடையாது.சலுகைகள் கிடைக்கும் என்றால்,படலை கதவிலே இருக்கிற ஓணான் கூட எங்க வீட்டுக்கு கல்லை எறியும் தானே!எங்க கிராமத்தில்,அப்படிப்பட்டவர்கள் எனக்குத் தெரிந்து 2 பேர்கள இருந்தார்கள்.இப்ப, அவர்கள் சண்டியர்கள் இல்லை.தம் வேலை உண்டு,தம் குடும்பம் உண்டு என்றிருக்கிறார்கள்.
  
பெரும்பாலும் காதல்ப் பிரச்சனைகளைத் தான் கொண்டு வந்தார்கள்.பெற்றோர் எதிர்ப்பாக நின்றார்கள்!,உறவினர் விட மாட்டேன் என்கிறார்கள்!,கிராமம் ஒரு பக்கம் எதிர்ப்புக் கொடி தூக்குது…என்றார்கள்!கிராமம் நின்றால் 2 பக்கத்திலும் இருக்கிற விழிப்புக் குழுவையும் சந்திக்க வைத்தோம்.2 பக்கத்தில் எழுகிற எதிர்ப்புக்களை அவரவர் அடக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் உடன் படச் செய்தோம்.முந்தி மக்களுக்கு எம் மேலே பயம்.இப்ப விழிப்புக் குழுவிற்குப் பயம்.காதலர்களை கட்டி வைக்கிறது நடந்தது.
   
ஆனால்,அப்படிச் செய்தது எங்களுக்கு உபத்திரவமாகியது.மூச்சுத் திணறுறளவிற்கு  ‘15-16 வயசு பெடியன்,பெட்டைகள் கூட காதலிக்கிறோம்’என்று எங்க தோழர்களிடம் வரத் தொடங்கி விட்டார்கள்.தோழர் அவர்களை விழிப்புக் குழுவிடம் கூட்டிச் செல்வார்.ஆண் தரப்பையும்,பெண் தரப்பையும் விசாரிக்க இரவில் கூடுற போது,பேசுவார்கள்..,பேசுவார்கள் முடிவே இல்லாமல் பேசிக்

கொண்டிருப்பார்கள்.கேட்கிற எங்களுக்கு தலையைச் சுத்தும். ‘கட்டாது போனால் தற்கொலை செய்து கொண்டு விடுவோம்’என்று ஓணானைப் போல இருவரும் தலையை ஆட்டுவார்கள்.நேரம் போய்க் கொண்டேயிருக்கும்.ஆனால்,நாம் ஒன்றைக் கண்டிருந்தோம்.தாத்தா,பாட்டி போல இருக்கிற கிழம் கட்டைகள் நீதிபதிகளாக இருப்பதை.நல்ல அனுபவஸ்தர்களாகவும் இருந்தார்கள்.பொதுவாக யாருமே அவர்களது புத்திமதிகளைக் கேட்பதில்லை.கதைக்கிற எல்லாப் பாத்திரங்களையும் நாங்கள் குழுமூலமாக கதைக்க வைத்தோம்.நம் கருத்துக்களையும் அப்பப்ப சொல்லிக் கொண்டிருப்போம். கடைசியில் தாத்தா,பாட்டி இன் பேச்சுப்படி நடக்க வைப்போம்.அவர்கள் பேச்சை கேட்பதில்லை தவிர,அவர்களுக்கு மரியாதை எல்லாரிடமும் இருந்தன.விழிப்புக் குழு பலமாக நிற்கவே,அதன்படி அமுலாக,பிரச்சனைகள் தீரும்.
  
வெளிய வார போது சாமக்கோழி கூவி விடும்.உண்மையிலே சாமத்திலே கோழி கூவுறது இருக்கிறது.கூட்டம் முடிந்த பிறகு,எங்களுக்கு மட்டும் குழு அங்கத்தவர் ஒருத்தர் வீட்டிலிருந்து தேனீர் வரும்.1மணி-2மணி போல இருட்டுச் சத்தங்களையும் கேட்டுக் கொண்டு,சைக்கிளிலில் உழக்கியபடி திரும்புறது புதிய அனுபவமாக இருந்தது.ஒவ்வொருவராக கழற தனிய வீட்டை வந்து சேருவேன்.இரவிலே முழிப்பதால் ரத்தம் உடம்பிலே செத்துப் போகும் என்பார்கள்.அது உண்மையோ?..இல்லையோ கண் சதா எரியும்.உடம்பு சோர்வாக இருக்கும்.விழுந்தால் மரக்கட்டை நித்திரை.விடிந்தாலும்,அந்த கண் எரிவு,சோர்வுகள் விட்டுப் போகாது.
 
விடுதலைக்கு என்று கிளம்பி விட்டு,இதை எல்லாம் பெரிதாக பார்த்து கொண்டிருந்தால் எப்படி!ஆயுதங்களை தூக்கிப் பிடிக்க பயிற்சிக்கு வேற போக வேண்டும்.முடியாது என்ற வார்த்தை போராளியின் அகராதியில் கிடையாது.சிங்கள தேசியத்தை துரத்தி,எம் தமிழ் தேசியத்தை நிலை நாட்டுவோம்!வரலாறு அதைச் சொல்லும்.கனவு மிதப்பில் இருக்கிற போது,கூட வார மாணிக்கம், “கடைசியிலே எங்களை கல்யாண புரோகிதர்களாக்கி விட்டார்கள்.தீர்க்கிற எங்களுக்கு இந்த வாழ்க்கை இல்லை.பார்த்தாயா?முரணை”என்று என்னிடம் அடிக்கடி கேட்டான்.உண்மை தான்.இதற்கு என்னிடம் பதில் இல்லை.அதையும் வரலாறே சொல்ல வேண்டும்.
   
பல தோழர்கள் என்னிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன்.பள்ளிகூடத்தில் படித்த ஒருத்தியை வாழ்க்கையில் வந்தால் நல்லாய்யிருக்கும் என்று நினைக்கிறனான்.இதிலே சேர்ந்த பிறகு,அவளைக் குறித்து கனவே வர மாட்டேன் என்கிறது.அதிசயமாய் இருக்கிறதடா”.சிங்கள தேசியம் நீட்டிய துவக்குடன் நேரிலே நிற்கிற போது எப்படி கனவு வரும். ‘காதல்’ என்பது கவர்ச்சியால் மட்டும் வருவதில்லை.சிமார்ட்டாக வாழ வேண்டும்,வாரவளின் முகத்தில் சந்தோசம் பூக்க வேண்டும்’என்றநினப்போட வருவது.சிங்கள தேசியம்,தமிழ் தேசியத்தை அடக்குவதற்கு,எங்களோட சேர்ந்த பெண்னினத்தையே முதல் இலக்காக கொண்டிருக்கிறது.இருக்கிற பெண்களைக் காப்பாற்றுவதற்காக வீட்டை விட்டே ‘நான் அனாதை’என்கிற மாதிரி ஓடி விடுற நாம்,புதிதாக ஒரு பெண்ணைச் சேர்த்து பலிகொடுக்க மனம் வருமா!ஒரு ஆணைப் பொறுத்த வரையில் அதிக பந்தமான பெண் மனைவியே.எதிரிப்படை அவளை இலக்காக வைத்தார்கள் என்றால்,அந்த நிமிசமே அவன் இறந்து விடுவான். ஓடிக் கொண்டிருக்கிற அந்தரம் எம்மை கனவு காண வைக்காது தான்.    
விடுதலைக் குழுவில் சேர்கிற போது, ‘எம்மை முழுமையாக ஒப்புவிக்கிறோம்’என வாக்குறுதி கொடுக்கிறோம்.பெண்ணை மனதில் இருத்தினால்..ஒப்புவிக்க முடியாது.சதா நிச்சியமற்ற நிலை.எதிராக நிற்கிற காரணிகளை எவ்வாறு எதிர் கொள்வது என்பது பற்றிய நினப்பே கிடந்தது.அந்த உணர்விலிருந்து விடுபடக் கூடாது என்பதற்காக ‘விடுதலைப் பாடல்கள் பல இயற்றப் பட்டு ஒலிப்பரப்பாக்கப் பட்டன.விடுதலையை மையமாக கலைப் படைப்புக்கள்;எழுத்தாக்கங்கள் வெளியாகிறதுக்கு ஊக்குவிக்கப் படுகின்றன.எங்களையும்  “நெடுக விடுதலப் பாட்டுக்களைக் கேளுங்கடா!”என்று சொல்கிறார்கள்.

மூளை சலவை செய்யப்பட்டாலே எம்மாலும்,வெறியுடனும்,துணிவுடனும்..இரக்கத்தை தூர வைத்து விட்டு மோத முடியும்.சிங்கள தேசியப் பகுதியிலும் ..இவ்வாறே உருவேற்றப் படுகிறார்கள்.தமிழர்கள் படுகொலையுறுவது இந்த வெறி ஏற்றலால் நடை பெறுகிறது.
   
புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்ட இந்த நாடு,கொஞ்சம் அவரின் கொள்கைகளை கவனத்தில் எடுத்திருந்தால் அமைதி பூத்த தீவாக அல்லவா

இருந்திருக்கும்.விதி,வெறியர்களைத் தான் படைக்கிறது.போதாக்குறைக்கு …தேரர்களும் சேர்ந்து நிற்கிற நிலைக்கு மோசமாகிக் கிடக்கிறது.எம்முடைய எதிரி யார்?சிங்களப்படையா, புத்தகுருமார்களா, மக்களா?புரிந்து கொள்வது,எமக்கும் தான் சிரமாக இருக்கிறது.எம் பலவீனத்தை எதிரி இலகுவாக பயன்படுத்தி வெற்றி பெறுகிறவனாக இருந்தான்.அதனால் கவிந்த நிலமை எங்களையும,கொடூர சிந்தையுள்ளவன் தலைவனாக இருந்தாலே வெல்ல முடியும் என்றதுக்குள் தள்ளி விட்டது.சிங்களப்படையைக் கொல்ல நாம் தயார்.ஆனால்,மற்ற எல்லா கொடூரங்களுக்கும் ஒத்துப் போகிற மனநிலை எமக்கிருக்கவில்லை.பெரும்பாலானக் குழுக்களுக்கும் இருக்கவில்லை.புனிதமான போராட்டம்!நேர்மையான போராளி..என்றே பேசியதால்,போராட்டமும் கொலை செய்யாமல் நடக்கிற ஒன்று என்ற கற்பனை வெளிக்குள் காலை வைத்து விட்டிருந்தோம்.எம் தலைமைப் பகுதி, ‘ஒரு போராளியின் கையில் மனித ரத்தக் கறை படிந்திருக்கவே வேண்டும்’எச்சரித்துக் கொண்டு தான் இருந்தது.
 
உள்ளே மற்ற குழு உளவாளியோ’எனறெழுந்த சந்தேகம் காரணமாக.. துவக்கு திருப்பப் பட்டு,உட்கொலைகளும் நடைபெறத் தொடங்கின.மனித ரத்தக் கறை பூசும் செயற்பாடு.சரியோ..பிழையோ..?இதால் ஏற்பட்ட பதட்டம் விடுதலையில் நம்பிக்கையை இழக்க வைப்பதாக இருந்தது.
   
போராட்டத்தில் தீவிரமாக நின்ற குழு,மற்றயவை வீணாக சக்தியை சிதறடிப்பதாக கருதிக் கொண்டது.காலுக்க,கையுக்க வாரார்கள் என்று தடை செய்யவே கிளம்பி விட்டது.

 பலகொலைகள்.அத்தனையும் சகோதரக் கொலைகள்.எங்களுடையதும் தடைக்குள்ளாகி விட்டது.

பிறகென்ன, களை எடுப்பு தானே!பெரும் தலைவர்கள் முதல் தர எதிரிகள்.பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் 2ம் தர எதிரிகள்.பயிற்சி பெற்றவர்களும்,பெறாதவர்களும் 3ம் தர எதிரிகள்.இப்படியே வரையறுக்கப் பட்டு வேட்டையாடல் ஆரம்பமாகின.

எங்களுக்கு கொழும்புக்கு போய் விடுங்கள் என அறிவித்தல்கள் வந்தன.தற்காலிகமாக எமது குரள்வளைகள் நசுக்கப் படுகின்றன.நானும்,பலரும் கொழும்புக்கு வந்து விட்டோம்.

குகன் போன்றவர்கள் 3ம் தர எதிரிகள்.பெரிதும் ஆபாயமற்றவர்கள்.அவர்களைக் கொல்வது குறைவாக இருந்தன.பதிலுக்கு, “எங்கடயளிலே வந்து சேருங்கள்”என்ற அழைப்பே ..விடுவிக்கப் பட்டன.பலர் சேர்ந்தும் இருந்தார்கள்.குச்சியும்,மாணிக்கமும் கொழும்பு வந்து சேர்ந்திருக்கவில்லை.புலம் பெயர்ந்த நாட்டிலே தான் அவர்களை சந்திதேன்.குகனைப் பற்றிய செய்திகளை மாணிக்கம் மூலமாகவே அறிந்து கொண்டிருந்தேன்.குகனும்,பிழைப்புக்காக மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்குப் போய் இருந்தான்.சிறிலங்கா,எங்கள் சொந்த நாடு.

‘தமிழீழம்’என்ற சொல் பிடிக்கா விட்டால்,தமிழ் சிறிலங்கா,சிங்கள சிறிலங்கா..என 2 பெரிய மாகாணங்களாகவாவது பிரித்திருக்கலாம்.வெளிநாடுகளில் ஒரு சிறிலங்கா என்ற பெயரே பாவித்திருக்கலாம்.சிங்கள அரசியல்வாதிகளுக்கு எதற்கும் மனம் இல்லை.
   
2 ஆண்டுகளுக்குப் பிறகு,இடிபோல..குகனுக்கு நேர்ந்த விபத்தை கேள்விப்பட்டேன்.சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்த அவனை கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதியதில்,வலதுபுறம் முழங்காலுக்கு கீழே உள்ள கால்ப் பகுதியை இழக்க வேண்டி ஏற்பட்டு விட்டது.பவானியக்கா,அவனை வெளியில் அனுப்பக் கூடியவரில்லை.தடை செய்யப்பட்ட இயக்கம்.முக்கியமான எதிரியாகவே கிடந்து,மாற்றமே இல்லாது அடக்குமுறைகள் செய்யும் சிறிலங்கா .அவருக்கு நாடு பெரிதில்லை.மகன் தான் பெரிசு.வேறு வழியின்றியே அனுப்பி இருப்பார்.விதி கொடியது!மாணிக்கம் கூறிய போது,இங்கேயும் கூட பல தமிழர்கள் வீதி விபத்தில் இறந்தது நினைவு வரவே செய்தது.உண்மையிலே இந்த நாடுகள் ஒன்றும் பாதுகாப்பான நாடுகள் என்றில்லை.கார்கள் மலிந்து போய்க் கிடக்கின்றன.எரிபொருளின் விலை குறைவு.விலையை மலிவாக வைத்திருப்பதற்காக எண்ணை வள நாடுகளில் உள்ள மக்களையும்,அழகிய கட்டிடங்களையும் இரக்கமின்றி அழிக்கின்றார்கள்.சிங்கள அரசாங்கம் போல குண்டுகள் போட்டுத் தான்.
  
நம்முடைய உலகம் சிறியவை என்பதால்,நாம் இவர்களின் அரசியலைப் பற்றி அக்கறை கொள்வதில்லை.நம்மூர் அரசியலாலே களைத்துப் போய்க் கிடக்கிறோம்.இன்னொரு சாக்கடையில் கால் வைக்க விருப்பம் இல்லை.
  
கால் போன செய்தி கேட்ட மாத்திரத்திலே பவானியக்கா எத்தனையளவு துடித்திருப்பார்.சுனாமி அனர்த்தத்தால் எத்தனை அழிவுகளை சிறிலங்கா கண்டிருக்கிறது.அதற்குப் பிறகும் மனித பேரவலத்தை சிறிலங்கா நிகழ்த்தியிருக்கிறது.சிங்கள சிறிலங்கா என்றால் நிகழ்த்தி இருப்பார்களா?இல்லை.தமிழர்கள் என்பதாலே நிகழ்த்தி இருக்கிறது.பவானியக்கா போல எத்தனை 1000 தாய்மார்கள் துடித்து அழுது

கொண்டிருப்பார்கள்.இதை,அரசியலற்ற சாதாரண சிங்கள மக்கள் கூட மன்னிக மாட்டார்கள்.இதற்கு அனுபவிக்கத் தான் போறார்கள்.கொடூரங்கள் ஒவ்வொன்றுக்கும் ..விலைகள் இருக்கத்தான் செய்கின்றன.வரலாறு அதனை நிச்சியம் எழுதும்.

balamuraly@sympatico.ca