சிறுகதை பேபி

பதிவுகளில் சிறுகதை வாசிப்போம் வாருங்கள்!வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது.உப்பளத்தில் விளைந்த உப்பைப் போல எங்கும்  வெண்பஞ்சுப் பனிப்படுக்கை நிலத்தை மூடியிருந்தது.வீதியில் சளக்குப் புளக்கென ஒரே  சகதித் தோற்றம்.”ஒ!, “இந்த பனிப் புயலில்  வாகனங்கள் நகர முடியாது.எங்கே உப்பு போட்டிருக்கப் போறார்கள்? பிறகென்ன, …சலிப்படைந்தான், வாகனத்தை சறுக்கிக் கொண்டு தான் ஓட்ட வேண்டும். தன் ஒரு வயசு மகளை தூக்கிய போது  மனதில் மாற்றம் நிகழ்ந்தது.  ‘ பனியை மனம் அழகாக கூட ரசிக்கிறது .

“பேபி,பார் எவ்வளவு பனி! “என்று காட்டினான்.

பேபி,நீ பார்க்கிற முதல் பனிப் புயல்”என்று காட்ட அது சிரிக்கிறது. என்ர செல்லம்,இத்தாலியில் பிறந்திருந்தாலும் சிரிக்கும் தான்..ஆனால், வேலைத்தளத்தில் வேலை பார்க்கிற அந்த ஈழத் தமிழன்ர பேர்?, அது என்ன?..அவனுக்கு எப்பவுமே ஞாபகம் வருவதில்லை. டிங்கரோ.., கங்கரோ..? என்னவோ, அவன், அளப்பானே ‘அட , சிறிலங்காவில் பாதி நிலமேஅவர்களிட நாடாம்! வடக்கு, கிழக்கு எனக் கிடக்கிற பெரிய மாகாணங்களை தமிழ் மன்னர்கள் ஆண்டவர்களாம்.தமிழ் நாடாகத் தான் இருந்ததாம். பேபி, அங்கே பிறந்திருந்தால்… சிரிக்காது தான். அது  வெப்பநாடு, கலாச்சாரம்  ஜீன் எல்லாமே வேற, வேற! ஒரினம், இன்னொரு இனத்தை அடிமை கொள்ள முயல்கிற நாடு அது!எப்படி இருந்தாலும் … ஆசியரின் உருவ வளர்ச்சியும்  சிறிது குறைவு  தான். இங்கே ஒரு வயசிலே செய்யிறதெல்லாம் அங்கே இரண்டு வயசிலே தான்  செய்கிறது.

முதலில் பாதுகாப்பான வாழ்க்கை, பிறகு உருப்படியான வேலை என்பதற்காக ஈழப் பெடியள்களைப் போலவே  பல இத்தாலியப் பெடியள்களும் அள்ளுப் பட்டு வந்து இங்கே காலூன்றினார்கள். ஆனால், இவர்களிட புலம் பெயர்தலுக்கு வேறு பல காரணங்களும் இருந்தன. இவர்களுடைய நாடு இவர்களுடையது தான். அதை யாரும் கவரவும் முடியாது;தாரை வார்த்து கொடுக்கவும்
மாட்டார்கள். யாருமே இவர்களுடைய பிரஜா உரிமையை அங்கே ‘இல்லை’என சொல்ல முடியாது.சொல்லுறவனை சிறையிலே போடுவார்கள்.இவர்களும் சரி, இவர்களிட வாரிசுகளும் எந்த நேரமும் .. போவார்கள்; வருவார்கள். வாரிசுகளுக்கும், அவர்களுடைய தொடர்ச்சிகளுக்கும் கூட ..அங்கத்தைய பிரஜா உரிமை நீளமாக‌வே  இருக்கிறது. குறும்தேசியம் பேசுகிற சிங்களவர்களால் தமிழர்கள் படாதபாடு படுகிறது வருத்தத்தையே தருகிறது.

“பார்த்தப்பா, குழந்தை”என்று மனைவி பிள்ளையை வாங்கிக் கொண்டாள்.

மூத்த இரண்டு பெடியளுக்குப் பிறகு,மேரியின் அருளால் பிறந்த செல்லக்குட்டி இது! ஆஞ்சலோ ஏக சந்தோசத்தில் இருந்தான்.”பேபி,அப்பா வேலைக்கு போய்யிட்டு வாரன்”என அதன் பிஞ்சுக் கையைப் பிடித்து விளையாடினான்.”உங்கட வேலைத்தளத்திற்குப் போற கடைசி ஆள் நீங்களாத் தான் இருப்பீர்கள்.போங்கள்’போய்யிட்டு வேளைக்கு வாருங்கள்”என்று மனைவி அவனை பிடித்து தள்ளினாள்.”பனிப்புயலாகக் கிடக்கிறதே.”என்று பஞ்சிப் பட்டான்.”வேலையாட்களை இன்றைக்கு வர வேண்டாம்’என்று சொல்லி இருக்க வேண்டும்.வேலை செய்து கொண்டிருப்பார்கள். அதுவுமில்லாமல் பள்ளிக்கூடம் இல்லை என்று நின்ற பிள்ளைகளை வேறு, பிடித்து பீற்றரோடு அனுப்பி விட்டு, கதைக்கிற கதையைப் பாரு!பனிப்புயல் இந்த நாட்டுக்குப் புதிதா..என்ன?இரண்டோ,மூன்று வருசம் கழித்து அடிக்கிறது.வேடிக்கையை விட்டு விட்டு ,பெடியள்களையும் பார்க்க வேண்டும்,போங்கப்பா”என விரட்டினாள்.டிவி சனலில் பார்க்கிற போது போற இடமெல்லாம் ஓரேயடியாய் வழுக்கப் போகிறது, இன்றைக்கு தேரோட்டம் தான்! என திரும்பவும் சலிப்பாக இருந்தது.நேற்று ஏன் காலநிலையை டிவி சனலில் சரியாய் பார்க்கவில்லை?என நினைத்தான்.சிவ்வியா பிறந்த பிறகு, எதைத் தான் அவன் சரியாய் பார்க்கிறான் என்று தன்னையே நொந்து கொண்டான். 

போய்ச் சேர பத்து மணியாகி விட்டது.அதிக லேட்! ஆஞ்சலோ,ஒபிசில் வின்ரர் கோர்டையும், தொப்பியையும்,மப்ளரையும் கழற்றி கொளுவியில் மாட்டினான்.”குழந்தை எப்படி இருக்கிறாள்?”என்று ஒபிசிற்கு பொறுப்பாக இருக்கிற மரியா கேட்டாள்.ஜன்னலினூடாக  பெய்யிற பனியைக் காட்டி”இதைப் பார்த்து துள்ளுறாள்,சிரிக்கிறாள்”என்றான்.அவன் விருப்பமில்லாமல் வந்ததைப் புரிந்து அவள் சிரித்தாள்.அவள் வார பில்லுகள்,அனுப்ப வேண்டிய பில்லுகள், வேலையாட்களுக்கான‌ ‘பே’செக்குகள் தயாரிக்கிறது, கொடுப்பனவுகள். .போன்றவற்றைப் பார்க்கிறவள்.பீற்றர் சேல்ஸ் மனேஜர். அவனுக்குரிய மேசையில் கணனி திரையில் ‘மைக்கிரோ சொவ்ட் ‘எழுத்துகள்  ஓடக் கிடந்தது.கோப்பி ஒன்றையும் எடுத்துக் கொண்டு வேலைத்தளத்திற்குள்..அவனுடைய உலகத்திற்குள் நுழைந்தான். 

அவனுடைய இத்தாலியைக் கூட யார்,யாரோவெல்லாம் கவர்ந்து ஆண்டார்கள் தான் .நெப்போலியன் படையெடுத்து சிறு பகுதியைக் கைப்பற்றி ஆண்ட போதே”இத்தாலி உங்கட நாடு”என்ற தீப்பொறியை பத்த வைத்தான்.பிறகே இத்தாலிய விடுதலை வீரர்கள் எழுந்து இன்றைய அழகுமிக்க இத்தாலியை உருவாக்கியிருக்கிறார்கள்.விடுதலை வீரர்கள் தோல்வியை தழுவியிருந்தால்..இத்தாலியும் ஈழத்தைப் போல சீரழிந்து போய்யிருக்கும்.பகுதிகள் பறிபோய்,மீள வந்ததால்..ஆயுதக் கலாச்சாரம்,போதைப் பொருள் வர்த்தகம்..என வளர்ந்து விட்ட‌ மஃபியாக் குழுக்களின் ராட்சியத்தையும் கிள்ளி எறிய முடியாமல் ஒருபுறம் கிடக்கிறது.ஒருவித பதற்ற நிலை என்பதாலே.. அவனும் வெளிய துப்பப்படுகிறான் .  ஆனாலும், அந்த மண்ணிலே போய் நின்று சுதந்திரமாக மூச்சு விடலாம்; மூச்சை வாங்கலாம். இரண்டு,மூன்று வருசத்திற்கு ஒருமுறை போய், மண்ணின் மணத்தையும் நுகர்ந்து விட்டே வருகிறார்கள் . தொப்புள்கொடி  உறவு!
   
ஈழப்பெடியன்,எங்கட பகுதியில் ராணுவம் பாதுகாப்புப் பிரதேசம் என வேலியைப் போட்டு, சிங்களவர்களை குடியேற்றி விட்டிருக்கிறது”என்கிறதைக் உடைந்து சொல்கிற‌ போது ஆஞ்சலோட  மனம் கரைகிறது.அவன்ர பேர் இப்பக் கூட.. வருகுதில்லை,ஆனால் ‘ஈழம்’என்ற வார்த்தையை அடிக்கடி சொல்வதால் அது  மாத்திரம் ஞாபகம் வருகிறது. அவன் பெரிய மோட்டர் ஒன்றின் உட்பகுதி செப்பு வயரைக் கணக்கிட்டு,அதற்குரிய அச்சில் சுத்திக் கொண்டிருந்தான்.அவனுடைய 15 வயசு பெடியன் ஜோன்,செப்பு வயர் உருளை ஒன்றை 2 வீலரில் உருட்டி வந்து அவனுக்குப் பக்கத்தில் வைத்தான்.எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருக்க,அவன்”ஜோன், நீ இப்படி சுற்ற வேண்டும்”என காட்டி சொல்லிக் கொண்டிருந்தான்.அது ஜோன்ர மூளையில் எங்கே  ஏறப் போகிறது?

இங்கே பிறந்துகளை வாரிசுகளாக …பார்க்க முடிவதில்லை.அதுகளுக்கு எது இலகுவாக இருக்கிறதோ அதை எடுத்து படித்துக் கொண்டு போய் விடும்கள்.பெட்டைகள் தான் கொஞ்சம்  அப்பரின் ஆசைகளை உணர்ந்து படிக்கிறதை தெரிகிறார்கள்.ஆனால்,மின்சார மோட்டர் திருத்துற வேலைகளில் எல்லாம் பெண்களை …ஈடுபடுத்த முடியுமா?யானைப்பாரம் உடைய மோட்டார்கள்,மெத்தக் கவனம் பல விசயங்களில் தேவைப்படுகிறது.அவர்களால் முடியக் கூடியதாக இருந்தாலும்.. பெற்றோருக்கு இதில் அவர்களை இறக்க மனம் வருவதில்லை.

பிள்ளைகளில், பெண்பிள்ளைகள் தான் பெற்றோருக்கு தேவதைகளாகத் தெரிகிறார்கள்.குடும்பத்தில் நிலவுற மகிழ்ச்சிக்கு அத்திவாரங்களே பெண்கள் தான்.ஆனால், அந்தப் பெண்களுக்கு தாம் தம் ஆற்றல்,நிலைகள்.. புரிவதில்லை.மனத் தைரியத்தில் ஆண்களை விட தாழ்வாக இருக்கிறார்கள்.தம் உடலமைப்பாலும்,நகரத்தில் நிலவுற அசம்பாவிதங்களாலும் நிறைய பயப்படுகிறார்கள்.என்ர செல்லத்திற்கு கராட்டியை சிறுவயதிலிருந்தே பழக்கி விட வேண்டும்.

இப்படி சிந்தனையோட மற்றவனை தேடினான்.பத்து வயசுப் பெடியன், மாரோ பீற்றரின் கையை பிடித்து வந்து கொண்டிருந்தான்.

“அப்பா”என்று அவனை நோக்கி ஓடி வர.. கோப்பிக் கப்பை அருகிலிருந்த பெட்டியில் வைத்து விட்டு “டேய் உன்னை எல்லாம் தூக்க முடியாதடா”என்று அவனை தூக்கி ஒரு தட்டாமாலை(வட்டம்) சுற்றி விட்டு கீழே விட்டான்.

பீற்றர் சிரித்தான்.” ஆஞ்சலோ நீ செல்லம் கூட குடுக்கிறாய்.ஒருத்தனையாவது இந்த தொழிலில்  பிடித்து  தள்ளி விட வேண்டும்.ஞாபகத்தில் வைத்திரு”என்றான்.

அவனிடம் விட்டு விட்டு ஒபிசிற்குப் போனான்.அவனைக் கூட்டிக் கொண்டு ஜோனோட மாரடித்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்த ஈழப்பெடியனிடம் போனான்.இப்பவும் அவன்ர பெயர் ஞாபகம் வரவில்லை.கையை நீட்டி ‘இந்தா’என கூப்பிடுறதுக்குப் பதிலாக வீட்டிலே சில்வியாவிற்கு வைத்த செல்லப் பேரே வாய்யில் வந்து விட்டது.”பேபி,பேபி”எனக் கூப்பிட்டு விட்டான்.சங்கர் ஆஞ்சலோட குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தான்.அவனுக்கருகில் சான்ட் பிளாஸ்ட் செய்வதற்காக பிளாஸ்டிக் கூடையில் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்த ராம்,பொஸ் சங்கரை’பேபி,பேபி’எனக் கூப்பிடுறதைக் கவனித்தான்.

“பேபி,இவ்வளவு தானா,இன்னம் இருக்கிறதா?”என்று சங்கரைக் கேட்டான்.அவனுக்குக் கூட சங்கரின் பெயர் தடுமாறிக் கொண்டே இருந்தது.ராம்,இந்திய ஜீன்!கயனீஸ்,அவனுக்கு சுத்தமான ‘ராமச்சந்திரன்’என்ற தமிழ்ப் பெயர் . அவனுடைய ‘அம்மம்மா,தமிழ்,மளையாளம் மட்டுமே பேசுபவள்,அவனுக்கு ஒரு சொல் கூட விளங்காது’என்று பேபியிடம் கூறியிருக்கிறான்.

   வைக்கிறார்களா?என்று வியப்படைந்தான். ஆஞ்சலோக்கும் தான் தவறுதலாக ‘பேபி’ என்று  கூப்பிட்டது புரிந்தது.அட அவனுடைய டிங்கரோ..என்னவோ,அந்தப் பெயரை விட’பேபி’என்று இனி கூப்பிடலாமே என்ற யோசனை ராம் கூப்பிட்ட போது ஏற்பட்டு விட்டது.சிரித்துக் கொண்டு “உன்னை ‘பேபி’என்று கூப்பிடுறது இலகுவாக இருக்கிறது.கூப்பிடுறேன்,கோவிக்க மாட்டேயே”என்று சங்கரைக் கேட்டான்.சங்கருக்கு அவன் டிங்கர்,கங்கர்,இந்தாப்பா..என ஒவ்வொரு தடவையும் ஓவ்வொரு பெயரில் கூப்பிடுற போது,என்னை தானா கூப்பிடுறான்’என அனுமானித்துக் கொள்றதிலே திண்டாடிப் போறதை விட ..எப்படியும் ஒரு பெயரிலே கூப்பிட்டு தொலைக்கட்டும் என்றிருந்தது.”நீ எப்படி கூப்பிட்டாலும் எனக்கு ஒ.கே! பொஸ்”என்றான்.

அன்றிருந்து சங்கரின் பெயர்,வேலைத்தளத்தில் எல்லாருக்கும் ‘பேபி’என்றாகி விட்டது. ஆஞ்சலோக்கு ‘பேபி’மூத்தப் பையன் போல் சமயத்தில் தோன்றுவான்.பரவாய்யில்லை,என்ர பிள்ளைகள் வாரிசாக்காட்டிலும் இவன் வந்தாலும் ஒன்று தான்!என்று நினைத்தான்.அவன் நல்லவன்.அந்த எண்ணத்தில் அவன் பெடியள்களின் மாறுபட்ட குணங்களை குறித்து பீற்றர் எச்சரித்தாலும் அலட்டிக் கொள்ளாமல் போய் விடுவான்.

நாடு விட்டு நாடாகவிருந்தாலும் கூட முற்பிறப்புத் தொடர்புகள் இருக்கலாம் தானே!எனவே தான் போலும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவன் ஈழப்பிரச்சனையை கவனத்தில் எடுத்து கூட்டிப் பார்த்துக் கணக்குப் போட்டு,ஒரு தீர்வு யோசனையை பேபியிடம் கூறினான்.பேபி, அதைக் கேட்டு அசந்தே விட்டான்.

“வி. எ .ஆர்”என்ற சிறிய,பெரிய‌ மோட்டர்களின் பகுதிகளை மீள்கட்டமைக்கும்,திருத்தும் கம்பனி(வி. எ .ஆர் ஓட்டமட்டிக் லிமிட்டட்)இரண்டு பெரிய கட்டிட அறைகளைக் கொண்டிருந்தது.ஒரு பகுதியில் காரின் ஸ்டாடர் மோட்டர்,ஒல்டினெட்டரின் பகுதிகளை தயாரிப்பதிலிருந்து அனைத்து சிறிய மோட்டர்களின் பகுதிகளும் தயாரிக்கப் படுகின்றன.இதற்கு ‘ஜோ ‘பொறுப்பாகவிருந்தான்.

அங்கே செப்பு வயர்களை மாத்திரம் சுத்துறதுக்கு நாலு பெண்கள்,ஒவ்வொரு மெசினிலும் தனித்தனிய சுத்துற நாலு பெடியள்,சான்ட் பிளாஸ்ட் செய்கிற ராம்,ஜேக்கப்,இவர்களோடு  ஆஞ்சலோ இங்கேயும் சில சமயம்  வேலை செய்வான். மற்றையது.. பெரிய ரக மோட்டர்களை திருத்துகிறது.பேபி, ரொனால்டோ , ஆஞ்சலோ  அதிலே வேலை செய்கிறார்கள்.

பேபி,வேலை கேட்டு வந்த போது, ஆஞ்சலோக்கு  தான் அந்த காலத்தில் இவனைப் போல திரிந்து ,மொழியும் சரிவரத்

தெரியாது..ஏமாற்றங்களுக்கானது தான் ஞாபகம் வந்தது. பேபி, முன்னேற்றமில்லாத சிறிலங்காவில் மோட்டர் திருத்துறதைப் படித்திருந்தான்.இங்கிலாந்து,எல்லா நாடுகளிலுமே தனது தரத்திற்குகமைய தனியார் கல்வி நிறுவனங்களைத் திறந்து பரீட்சை வைப்பது இருந்தன. அங்கே ‘லண்டன் பரீட்சை’யும் எடுத்து தேறியிருந்தான். அவனுடைய கல்விப் பத்திரங்களை இங்கத்தைய தரத்தோடு அர‌சில் மதிப்பீடு செய்யப்பட‌  வேண்டும்.  இங்கே இருந்த தனியார் கம்பனிகள் வேலை அனுபவத்தையே அதிகமாகக் கேட்டார்கள்.! சிறிலங்காவில் எங்கே தொழில் முன்னேற்றம்?, அது புலிகளவு கூட சுயமாக போர்ட்,விமானம் தயாரிக்க திறனற்றதாச்சே !எனவே அவனுக்கு வேலை அனுபவம் (பிரக்டிக்கல்)போதியளவு இருக்கவில்லை. தவிர, அது,இனக்காய்ச்சலை வைத்திருக்கிற நயவஞ்சக அரசியலைக் கொண்ட முட்டாள்தனமான அரசாங்கங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்று..என ஆஞ்சலோக்கு சிறிதளவு தெரியும்.அழகான தீவாக இருந்தாலும் அங்கே பாதிப்புக்குள்ளாகிறவர்கள் ‘தமிழர்கள்’என பொதுவாக வெளிநாட்டவர் எல்லாருக்கும் தெரிந்திருந்தது. இவர்கள், அகதியாக தாமாக வருகிறவர்கள் இல்லை,பாலாஸ்தினர்களைப் போல துரத்தப்பட்டு,அவர்களது நிலங்கள் அபகரிக்கப்பட்டு..பாவப்பட்ட ஜென்மங்களாக வந்து நிற்கிறவர்கள் என சிறிது புரியவே செய்தது. 

சினிமாவிலே நடிக்க சந்தர்ப்பம் கேட்டு சோர்ந்து போய் இருக்கிற தமிழக நடிகனைப் போல பேபி நம்பிக்கை அற்றிருந்தான். ஆஞ்சலோக்கு அவனை பார்த்த மாத்திரத்திலேயே அவன்ர நிலமை தெள்ளெனத் தெரிந்தது.கஸ்டப்பட்டு தொழிலில் கால் பதித்தவர்களுக்கு இம்மாதிரியானவர்களை கைகொடுத்து தூக்கி விடும் நல்ல குணங்கள்   இருந்தன.அவனை துணிந்து வேலைக்கு எடுத்து வேலைகளையும் சரிவர கற்றுக் கொடுத்தும் வந்தான்.தகுதியானவனாக்கி விட முழுமூச்சுடன் இறங்கி இருந்தான்.அவன் கீதையையும் எங்கேயோ படித்திருக்க வேண்டும். 

அப்ப இரண்டு கட்டிட அறை இல்லை.ஒரு அறை தான். பாதியில், ஜோ பார்வையில் மற்ற வேலைகள் நடக்கும்.மிச்ச பாதியில், ஆஞ்சலோம் பேபியும் ரொனால்டோவும் பெரிய

மோட்டர்களை கழற்றிக் கொட்டினார்கள். ஆஞ்சலோ பலதையும் அவனோடு கதைத்தான். குறிப்பாக ரொனால்டோ வராத நாட்களிலே இந்த அலம்பல்கள் இருந்தன .அந்தக் கம்பனியின் தப்பி பிழைத்த கோர்ட் வரலாற்றையும் அப்பவே கூறினான். 

இந்த கம்பனியின் ‘வி’எழுத்துக்குரியவனான‌ விக்கியும், ஆஞ்சலோவும் இத்தாலிய உணவகத்தில் ஆரம்ப நாட்களில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.ஜரீஸ்காரனான விக்கிக்கு ஆங்கிலம் நல்லாய் பேசத் தெரியும்.மேற்பார்வையாளனாக சுழன்று வேலை செய்கிற அவன் உப  மனேஜர்களில் ஒருத்தன். உணவகத்தில்,மூன்று நாள் அவன் முடிப்பு வேலைகளை செய்வான்.மிச்ச நாலு நாளும் ஈழத்தைச் சேர்ந்த கதிர் முடிப்பவன்.கதிர் தொழிலாளர்களுடன் இழைந்து பழகிறது குறைவு.கூடாதவன் என்றில்லை,விக்கி அளவிற்கு பழகிறதில்லை. ஆஞ்சலோவுக்கு ஆங்கிலம் பேச அவ்வளவாக வராது. இப்பவும் கூடத் தான்.ஆனால் சமாளித்துப் பேசத் தெரியும்.முடிக்கிற போது கோப்பை அடிக்கிற ஆஞ்சலோவுக்கு  கோப்பைகளை பாஸ்கற்றில் அடுக்கி தண்ணி  அடித்து  விக்கி உதவிக் கொண்டிருப்பான். ஓரளவுக்கு அந்த கனத்தைக் குறைத்தால் தான் வேலையை ஓரளவிற்கு நேரத்திற்கு முடிக்க முடியும்.கதிர் அந்த வேலை எல்லாம் செய்ய மாட்டான்.விக்கி ஆஞ்சலோற்கு ரொம்ப‌ப் பிடித்தவன்.விக்கிக்கு அவன் மேல் அனுதாபம் ,பிரியம் இருந்தது.பாவமாக தெரிந்தான்.எனவே அன்புடன் பேசிக்  கொண்டிருப்பான்.

“நீ என்ன இத்தாலியில் செய்தனீ?”என்று ஒரு நாள் கேட்டான்.

“சிறிய,பெரிய மோட்டர்களை திருத்துற வேலைத்தளத்தில் வேலை பார்த்தனான்”என்றான்.

“நீ எந்த மோட்டரையும் திருத்துவாயா?”என்று ஆச்சரியமாகக் கேட்டான்.

“ஓம் திருத்துவேன்.ஆனால் என்னிடம் கல்லூரியில் படித்த பத்திரங்கள் இல்லை “என்றான் வருத்தத்துடன்.

“அப்ப எப்படி பழகினாய்?”கேட்டான்.

”7,8 வருசமாக அங்கே வேலைப் பார்த்தேன்.அங்கே இருந்த பியர் எனக்கு கற்றுத் தந்தான்.எப்பவும் குறிப்புக்களை எழுதி வைத்திருக்கும்படி வற்புறுத்தினான்.அப்படியே.. பழகி விட்டது.”என்றான்.

“அந்த மாதிரியான தொழிற்சாலைக்குப் போய் உன்ர வேலையில் ஏன் சேரவில்லை.”கேட்டான்.

“ஆங்கிலம் பிரச்சனை,இங்கே,வேலை அனுபவம் இருக்கிறதா?என்று கேட்கிறார்கள்.என்னால் சரிவர  பேச முடியவில்லை.”குரல் உடைந்து போய்யிருந்தது.

“உன்னைப்போல வேலை தெரிந்தவர்கள் யாரும் இங்கே உனக்கு தெரிய இருக்கிறார்களா?”என்று கேட்டான். ரொனால்டோ இருக்கிறான்.அவன் இங்கத்தைய பரீட்சை எடுத்து தேறி ‘லைசென்ஸ்’ கூட எடுத்து வைத்திருக்கிறான். இப்ப ஏதோ ஒரு தொழிற்சாலையில் மின்சார பராமரிப்பாளர்களில் ஒருத்தனாக வேலை பார்த்துக்    கொண்டிருக்கிறான்”என்றான்.
 
விக்கி சிமார்ட்டானவன்.உடனேயே திட்டம் போட்டு விட்டான்.

“இங்கே பார் அஞ்சலோ, ரொனால்டோவை, நானும் நீயும் போய் சந்திப்போம்.மூன்று பேருமாக சேர்ந்து ஒரு சிறிய கட்டிட அறையை வாடகைக்கு எடுத்து,விளம்பரம் கொடுத்து சனி,ஞாயிறுகளில் மட்டும் இங்கே வேலைக்கு வராமல் இருந்து திருத்திப் பார்ப்போம்.நகரசபையில் அனுமதியை நான் பெற்று வருகிறேன்.என்ன,முயன்று பார்ப்போமா?”என்று கேட்டான்.

ஆஞ்சலோவுக்கு கண்ணில் கண்ணீர் வந்தது.”பயப்படாதே,நான் விளம்பரம் செய்தல், ஓடர்களை பெற்று வாரது தொட்டு வெளி வேலைகள் எல்லாவற்றையும்,ஒபீஸ் வேலைகளையும் பார்க்கிறேன்.நீங்கள் இருவரும் மோட்டர்களை கழற்றிக் கொட்டி திருத்துறதைச் செய்யலாம்”என்றான்.”நீ பொய் சொல்லவில்லை

என்று எனக்கு புரிகிறது.வேலை தெரிந்தவர்கள்,மற்ற விசயங்கள் தெரிந்தவர்களோடு சேர்ந்து தொடங்கிறது தான் வியாபாரம்.இப்படித் தான் இங்கே சிறிய கம்பனிகள் தோன்றியிருகின்ற‌ன” என்றான். “நம்மில் ஒருத்தனுக்கு  லைசென்ஸ் இருக்கிறது நல்லம். ரொனால்டோக்கு இருக்கிறது என்கிறாய். போய்க் கதைத்துப் பார்ப்போம்”என்றான்.” ரொனால்டோடு தான் நான் சமரியாய் இருக்கிறேன். ஞாயிற்றுக் கிழமை வீட்டிலே நிற்கிறவன்.வா!ஞாயிறு வேலையை நீ தான் வேற நாளுக்கு மாற்ற வேண்டும்.”என்று ஆஞ்சலோ கேட்டான்.”அதைப் பற்றிக் கவலைப் படாதே, எல்லாம் வெல்லலாம் “என்று அவன் தோளை தட்டினான்.சமரியாக இருந்ததால் ஆஞ்சலோவும் கொஞ்சப் பணத்தைச் சேர்த்து வைத்திருந்தான்.ஈழத்தமிழர்களைப் போல முழுப்பணத்தையும் ஊருக்கு அனுப்பிற பிரச்சனை அவனுக்கு என்றுமே இருக்கவில்லை.

ரொனால்டோடை விக்கி..சந்தித்தான்.”இப்ப பார்க்கிற வேலையை விட முடியாது.சனி,ஞாயிறுகளில் என்றால் ஒ.கே!”என்று சம்மதித்தான்.லைசென்ஸ் இருப்பதால் தனக்கு கூட பங்கு வேண்டும் என அவன் கதைக்கவில்லை.மூவருக்கும் சம பங்கு என முடிவாகியது. அப்படி சிறு கட்டிடத்தில் தொடங்கியது, விக்கி கணணியில் பிடித்து வார ஓடர்களால் வளர்ந்தது.மெல்ல மெல்ல மற்ற வேலைக்குப் போறதையும் குறைத்துக் கொண்டு வந்தார்கள்.ஒரு நாள் மூன்று பேருமே மற்றய வேலையை முழுதாய் விட்டு விட்டார்கள்.   எல்லாம் ஒரே சீராகவே இருந்தது.வி.எ.ஆர் கம்பனி நாட்டில் வியாபார மந்தம் ஏற்பட்ட நேரத்தில் தனக்னென‌ ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டது. 

ஆஞ்சலோவின் சிறு மோட்டர்கள் திருத்துற திறமையைப் பார்த்து “காரின் ஒல்டிநேற்றர்,ஸ்டாட்டர் மோட்டார்,மற்றும் மோட்டார் பகுதிகளின் மீள்கட்டமைக்கிற வேலைகளையும் பெற்று வரவா?”என்று விக்கி கேட்டான்.ஆஞ்சலோவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்படித் தொடங்கியது தான் சிறு மோட்டார்ப் பகுதி. ஸ்பானிஸ் மொழியும் தெரிந்த இத்தாலியனான ‘ஜோ’ வலது கரமாக‌ வந்து சேர்ந்தான் . ஜோவும்,ஆஞ்சலோவும் வங்குரோத்தாகும் மோட்டார் தொழிற்சாலைகளிற்குச் சென்று

ஏலத்தில் விடப்படும் பாவிக்கக் கூடிய மெசின்களை பார்த்து பார்த்து வாங்கி வந்து சேர்த்தார்கள்.ஜோ அவற்றை ஓட வைப்பதில் திறமைசாலியாக இருந்தான். அவற்றில் சில பிழைத்தாலும்..கூட அதற்குரிய பகுதிகளை.. எங்கையாவது வாங்கி,பொறுத்தி எப்படியாவது ஓட வைத்து விடுவான்.

ஆஞ்சலோவின் நல்ல மனதிற்கு எல்லாமே நல்லபடியாய் இயங்கின.ஜோ,ஸ்பானிஸ் பேசுற சில பெடியள்களை கொண்டு வந்து சேர்த்தான். மேலும் சிலரையும் வேலைக்கு எடுத்தில் சேர்ந்தவர்களே இப்பவிருக்கிறவர்கள்.விக்கி, அமெரிக்காவிலிருந்து பெரும் ஓடர்களை எடுத்து வர‌அந்த  சிறுபகுதியும் விரிவடைந்தது.நகரத்திலும், நகரத்திற்கு அண்மையிலும் இருந்த பத்து,பதினைந்து தொழிற்சாலைகளில் பிழைக்கிற பெரும் மோட்டர்கள் அவர்களுக்கு வாடிக்கையாக வந்து கொண்டிருந்தன. இடம் பத்தாததால் கட்டிடத்தோடு சேர்ந்திருந்த மற்ற பெரிய கட்டிட‌ அறையையும் வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். பிறகு அவ்விரு கட்டிட தொகுதியையும் விலைக்கே எடுத்து விட்டார்கள்.

“என்ன பொஸ்’கோர்ட் கேஸ்’என்று சொன்னீங்கள்..?”என்று பேபி நிறுத்தினான்.

அவன் சிரித்தான்.”உனக்கு அவசரம்!விக்கி யார்? என உனக்குத் தெரியாது.ரொனால்டோவைத் தெரியும்.வேலை செய்கிறான்.ஆனால் இவன் தான் இந்தக் கூட்டை உடைத்தவன்”என்றான் துயரத்துடன்.இவனும் விலகியவன் தானப்பா,இப்ப புதிய ஒப்பந்த்தில் சேர்ந்திருக்கிறான்.பெருமூச்சு விட்டான்.விக்கி,வெளியில் சதா திரிகிறவனில்லையா?…பெண் நண்பி ஒருத்தி ஏற்பட்டு விட்டாள்.இங்கத்தைய பெண்கள் ராஜ குடும்பத்தினரைப் போல வாழ விரும்புகிறவர்கள்.விக்கிக்கு,அவள் கூட்டிச் செல்கிற உணவகத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.’பில்’அந்த மாதிரி வந்தன.அவனுடைய வெளிச் செலவுகள் எல்லாவற்றையும் கம்பனியே ஏற்றுக் கொண்டிருந்தது.”அது அதிகம்?”என ரொனால்டோ பேசினான்.”அவனாலே தானே கம்பனியே ஏற்பட்டது,அவனிடம் சொல்லிப் பார்ப்போம்”என்று ஆஞ்சலோ.. பரிய,ரொனால்டோ 

சிரியஸாக்கி விட்டான்.விக்கியோட நேரடியாகக் கதைத்து விட்டான்.விக்கி, டேக்கிற் யீசி டைப்!அவனால் நண்பியை விட்டு விலக முடியாது.”ஆஞ்சலோ,சொத்தை மூன்றாகப் பிரித்து என் பங்கை எடுத்துக் கொள்கிறேன்.நீங்கரிருவரும் சேர்ந்து நடத்துங்கள்”என்று தெரிவித்தான்.

அந்த நேரம் ரொனால்டோவுக்கும் ஒரு பிரச்சனை இருந்தது.இத்தாலியிலிருந்த வீட்டை ஈட்டுக்கு வைத்தே …அவன் இங்கே வந்திருந்தான்.அது ‘கை’விட்டு விடும் போல நெருக்கடி ஏற்பட்டிருந்தது.அவனுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது”நானும் பிரிகிறேன.என்ரப் பங்கைத் தா”என்று கேட்டான்.

 “அப்ப விக்கி நீ ஏன் பிரிய வேண்டும்? என்னோடு நில்.உன்ர செலவை கம்பனி ஏற்கும்”என்று ஆஞ்சலோ தடுத்துப் பார்த்தான்.விக்கி சிரித்தான்.” அது பிசாசுச் செலவு!.கொஞ்ச நாளுக்கு இந்தப் பணத்தில் ஜாலியாக இருந்து பார்க்கிறேன்.பிறகு அவள் நோர்மலுக்கு வந்து விடுவாள் என்று நினைக்கிறேன்.ஆஞ்சலோ,நீ கவலைப் படாதே,என்ர நண்பன் ‘பீற்றரை’க் கூட்டி வாரன்.அவன் பங்குதாரனாக எல்லாம் வர மாட்டான்.நீ சம்பளமும்,கமிசனும் கொடுத்து சேல்ஸ் மனேஜராக வைத்திரு.அவன் உன்னை எந்த காலத்திலும் கை விட மாட்டான்”என்று சொன்னான்.

பீற்றர் அவனைப் போல‌ ஜாலி டைப் இல்லை.குடும்ப சந்தோசம் என இருந்தான்.கம்பனிக்கு நல்லதென விக்கியே  கோர்ட்டுக்கு கொண்டுச் சென்று பங்கை பிரித்தான்.கொஞ்ச நாளைக்குப் பிறகு அவனே எதிர்பாரது நண்பியும் …பிரிந்து சென்று விட்டாள். அவனுக்கு  எல்லாமே அலுத்து விட்டன. தன்ர ஊரான பிர்ஸ்பேர்க்கிற்கே போய் விட்டான்.இங்கால பக்கம் வந்தால் வீட்டுக்கு கட்டாயம் வருவான்.” என்றான்.ஆஞ்சலோவின் பேச்சில் அவன் மேல் இருக்கிற ஆழ்ந்த நன்றியைக்  கண்டான். 

“பீற்றர், எப்படியும் ஜோனை தன்ர இடத்திற்கு வேலைக்கு  பார்க்க பழக்கி விடுவான். நாங்கள் உதிர்ர ஆட்கள்! பாரேன், நானே

கிழவனாய் போய்க் கொண்டிருக்கிறேன்.விக்கிக்கு என்னை விட ஆறு,ஏழு வயசு கூட.என்னை விட கிழவன்!”சிரித்தான்.
   
‘ ஜோ’ வந்து .. ஏதோ சிக்கலான பிரச்சனையைத் தீர்ப்பதற்காக‌ ஆஞ்சலோவைக் கூட்டிக் கொண்டு போனான்.ஆஞ்சலோ பெரும் பாலும் இவர்களுடன் இருந்தாலும் அப்பப்ப மற்றப் பகுதியிலும் போய் வேலை செய்பவன் தானே. சில வேளை திரும்பி வருவான்.பேபிக்கு கொடுத்த வேலையை முடித்து விட்டால்..சொல்லி விட்டு போய் விடுவான்.ஆஞ்சலோ,அவனுடைய கார்ட்டை எடுத்து முழு நேரத்தையும் குறித்து இனிசலைப் (கையெழுத்து)போட்டு விடுவான்.ஒரு ஸ்கிள் தொழிலாளி என்பதால்.. அந்த சலுகையை செய்தான்.தன்னையே ஒரு ஸ்கிள் தொழிலாளியாகத் தானே கருதுகிறான்.எனவே தன்னோட ஒத்தவர்கள்.பேபிக்கு அவன் கற்றுக் கொடுத்தது இருக்கலாம்.ஆனால்,அவன் இப்ப ஆஞ்சலோவிற்கே கற்றுக் கொடுக்கக் கூடியவன்.எனவே,மரியாதைக் கொடுத்தான்.

ஒருத்தருக்கு செய்யிற உதவியை நன்றியை எதிர்ப்பார்த்து செய்யக் கூடாது என கீதையிலேயே சொல்லி இருக்கிறது.இத்தாலியிலே ‘கர்ணன் கதை’ இருக்கிறது.சிறிலங்காவில் இருக்கிற சிங்கக் கதைத் தோரணையில் தோரணம் எல்லாம் கட்டப்பட்டு,நகரத்தில் சிலைகள் கூட வைத்திருக்கிறார்கள்.ஏன் கீதை இருக்கக் கூடாது?அவன் செயற்பாடுகள் கீதைக் கொள்கைக் கொண்டதாக இருக்கிறதே!எனவே இருக்கத்தான் வேண்டும்.

பேபியை தனியே விட்டால்..அவனும் தனக்குள்ளே என்னென்னவோ எல்லாம் சிந்தித்துக் கொண்டே இருப்பான்.ஆனால்,வேலையில் உள்ள கவனத்தை சிதற விட மாட்டான்.ஆஞ்சலோவிடமிருந்து கற்றது தான்.இருந்தாலும் ஆஞ்சலோவை விட ரொனால்டோவே அவனோடு கூலாக பழகிறவன்.ஆஞ்சலோவும்,அவனும் தந்தை மகன் உறவு என்றால்,ரொனால்டோ நண்பன் போல கதைக்கிறவன்.சிலவேளை, அவன் தனது ஆசைகளைக் கூட அளந்து கொண்டிருப்பான்.”பேபி,நீ என்ன சொல்றே?”என்று

இடைக்கிடை அவனுடைய ஆலோசனையையும் கேட்பான்.பல தடவை பேபிட ஞாயத்தை அவன் ஏற்றுக் கொண்டுமிருக்கிறான்’தன்ர நினப்பு பிழை என்றால் அதை சரி எனச் சாதிக்கிற கர்வம் அவனிடம் இல்லை.”நான் அதை கவனிக்காமல் விட்டு விட்டேன்.கனவு காணு என்று தானே மைக்கல் ஏஞ்சலோ கூறுகிறான்,நான் காண்கிறேன்”என்று சிரிப்பான்.ஆஞ்சலோ இருக்கிற போது அந்த அலட்டல்கள் கட்டுப்பாட்டிலே இருக்கும்.

‘ஆரம்ப கூட்டை உடைத்தவன்’என்ற வருத்தம் ஆஞ்சலோவுக்கு உறுத்தினாலும் அவனும் இத்தாலியன் என்ற நினைப்பு இருக்கவே செய்தது.தவிர சிறு வயதிலிருந்தே அவனைத் தெரியும்.இந்த நாட்டுக்கு வந்த போது,ஏற்கனவே வந்திருந்த ரொனால்டோவே”நீ எங்களோட சமரியாக தங்கு,அப்பத் தான் கொஞ்சம் பணத்தை சேர்க்க முடியும்”என்று வழி காட்டி உதவியவன்.இத்தாலியிலே ரொனால்டோ கல்லூரியில் முறையாக படித்து ..தேறினவன்.ஆஞ்சலோவுக்கு ..அந்த படிப்பெல்லாம் கிடையாது.வெறும் அனுபவப் படிப்பு தான்.பியர் தான் அவனுடைய ஓரே ஆசிரியர்.லைசென்ஸ் இல்லாத படிப்பு.அந்த வேறுபாடு ஊரிலே அவனுக்கும் ரொனால்டோவுக்கும் இருந்தது.நம்மூரில் கம்பஸில் படித்தவனுக்கும்,தொழிற்னுட்பக் கல்லூரியில் படித்தவனுக்கும் உள்ள‌து போன்றது.ரொனால்டோவுக்கு உள்ள மதிப்பு அவனுக்கு இல்லை.இருந்தாலும் குறைந்த சம்பளத்தில் வேலையை ஒழுங்காகக் கற்று கொண்டவன்.அவனுக்கு மட்டுமே தெரிந்த திறமை. அந்த மனக்குறுக்கம் இலேசில் மாறி விடக் கூடிய ஒன்றா?இல்லையே!ரொனால்டோ மேல் மரியாதை இருக்கவே செய்தது.

மீள திரும்பி வந்த போது ரொனால்டோவிற்கு வேலை கிடைக்கவில்லை.அலைந்து திரிந்து சோர்ந்து போய் இருந்தான்.ஒரு தடவை டிம்கொற்றனில் (தேனீர் கடையில்)சந்தித்த போது ஆஞ்சலோ,”உனக்கு விருப்பம் என்றால் என்ற கம்பனியிலே வந்து சம்பளத்துக்கு வேலை செய்!வேலையில் ஒரு கமிசனும் தாரேன்”என்று அழைத்தான்.ரொனால்டோ தானாக் கேட்க மாட்டான் என்று அவனுக்குத் தெரியும்.பிறகு, அவனை கால்வாசி பங்கு தாரனாக்கிக் கொண்டான்.

வராதவர்கள்,’வெளிநாடு என்றால் சொகுசு’என நினைக்கிறார்கள்.ஆனால்,வெளிநாடு எமக்கிருக்கும் பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைக்க வல்லது இல்லை.அடிமட்டத்தில் எல்லாம் வேலை செய்ய வைத்து உடம்பையும் கெடுத்து,அடிமை போல உழல வைத்து விடுவார்கள்.அதிலே இருந்து வெளிய வரா விட்டால்…அப்படியே இருந்து உதிர வேண்டியது தான்.அப்படி உதிர்ந்தவர்கள் நிறைய பேர்கள் இருந்திருக்கிறார்கள். ஸ்கிள் போன்ற தகுதியுடையவனும் சரி ,இல்லாதவனும் சரி..எவனுக்குமே உடனடியாக பழம் பழுத்து விடுவதாக இருப்ப‌தில்லை.நாடும்,நகரமும் செலவுடன் கூடிய பரீட்சைகளை..  வைக்கும்.சூதாடுவது போல..பணத்தை வைத்து முயல வேண்டியிருக்கும்.பெரும்பாலோர் அதற்குப் பணத்தை சேர்க்க முடியாமல் போராடிச்,சோர்ந்து முயற்சியை கைவிட்டு விடுவார்கள்.தேறினாலும் பிறகும் ஒரு குழுவின் கேள்விகளுக்கு சரிவர,திருப்தியான பதில் அளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் அரோகரா தான்.இவையெல்லாம் ரொனல்டோவைப் போல‌ படித்தவர்களுக்கு தான்.

ஆஞ்சலோ போன்றவர்களை அவர்கள் கவனத்தில் எடுப்பதே இல்லை.இவர்கள் சுயமாக வெளிக்கிட்டு வியாபாரத்தைக் கட்டிக் கொண்டாலன்றி சிமார்ட்டாக வாழவே முடியாது.விக்கியே,அவன் கால்களில் ஊன்ற உதவினான்.அப்படி யாராவது ஒருத்தர் எப்பவுமே தெரிந்தவர்களை ,தங்களுக்குத் தெரிந்த ஸ்கிள்ளை கற்பித்து கைதூக்கி வேலையில் நல்ல நிலையில் சேர்த்து விடவே முயல‌ வேண்டும்.ஏனெனில் நீண்ட காலம் அந்த நிலையிலே கிடக்கப் போறார்கள்.ஓரளவு நல்ல நிலை என்றாலே..  சேர்ந்தவர்,நீச்சல்லடித்து மேலும் முன்னேற முடியும்.யூத மக்களே இதில் சிமார்ட்டாக இருக்கிறார்கள்.மற்ற இனத்தவர்களிற்கு,இந்த நிலமை புரியவே இல்லை.தம்தம் நாட்டில் இருப்பது போலவே போட்டியும் ,பொறாமையும்,குழிபறிப்பும்,தனிமையும் எனச் சீரழிந்து கொண்டு… அடிமையும், கொத்தடிமையுமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இவர்கள், படிக்க வேண்டியது நிறையவே இருக்கின்றன.
 
‘வெற்றி அடைந்து விட்டோம்’என மகிழ்றதுக்கு முன்னாலே கண்நூறு பட்டது போல இருவரும் கழன்று விட்டார்கள்.அப்பவும் விக்கியே,பீற்றரைச் சேர்த்து அவனை காப்பாற்றி விட்டவன்.ரொனால்டோ திரும்ப வந்து ஒட்டினாலும் தன் நிலை குறித்து வெப்சாரம் தான்.இப்பவும் அவன் மனதில் ஆஞ்சலோ பல படிகள் கீழே இருப்பவனாகவே தெரிந்தான்.அவன் ..லாபம் அடைந்து செழிப்படையிறதைப் பார்க்கிற போது பொறாமைப் படுகிறான்.மனித மனமே இது தானே!எல்லாருக்கும் படிப்பு,வேலை பயிற்சி என்ற சோசலிச முறையையை முதலாளித்துவம் பின்பற்றுவதில்லையே.படிக்கிறதுக்குச் செலவு,சிலவேளை சட்டம்,பாரபட்சம்,மொழித் தேர்ச்சிக் குறைவு,பெண் என்ற நிலமை..என பல வேறுபட்ட தடைகளை  தாண்டினால் தான் வேலையே எடுக்க முடியும் என்ற மாதிரியான நிலைமைகளை வைத்திருக்கிறது.நடுத்தரமும்,அதற்கு மேலே உள்ள பணக்காரருமே படிக்க முடியும்;ஸ்கிள் வேலையாளாக முடியும்.

ஏழைகள் போதைப் பொருட்களை கடத்தியும்,கொமிசனைப் பெற்றுக் கொண்டும்,சினிமாவில் வருகிற மாதிரி துவக்குடன் திரியிறது சுடுபட்டுக் கொள்றது;சாகிறது என்ற தலைவிதியை வைத்திருக்க வேண்டியது தான். பேப்பர் செய்திகள் இப்படியாக தான் இருக்கின்றன‌. 

பெரிய மோட்டர்களில் ஒரே வேலையை செய்வதாக இருந்தாலும்,சிக்கலான நிலமைகளில் ரொனால்டோவினால் மட்டுமே வெளிய வர முடியும் என்ற யதார்த்தமும் இருந்தது.அதனால் தனக்கு ‘மேலதிகமான ஒரு பங்கு வேண்டும்’என்ற உட்குரலை இப்ப  ரொனால்டோ கொண்டிருந்தான். 

ஒரு கம்பனியாகவே பதிவு இருந்தது,இன்வென்ர‌ரி (கணக்கு வழக்கு எடுக்கிறது)எடுக்கிற போது ஆஞ்சலோக்கு தலையிடிப்பதாகவே இருந்து கொண்டிருந்தது.பீற்றரிடம்… ஆலோசனை கேட்டான்.”இரண்டு பகுதியாக பிரித்து விடன்.ஒன்றுக்கு நீ பொஸ்,மற்றதுக்கு உன்ர மனிசி ‘என பதி.தனித்தனியான‌ கணக்கு வழக்கு கொஞ்சம் எளிதாகவும்

இருக்கும்”என்றான்.பீற்றரே, அந்த வேலைகளை எல்லாம் நகரசபைக்கு  அலைந்து.. செய்தான்.

அதற்குரிய சம்பளம் என ஒரு தொகையை பீற்றரிடம் கொடுக்க, “நீ தானே எனக்கு சம்பளம் தாரயே,இது வேணாம்”என வாங்க மறுத்தான்.விக்கியைப் போல பெண் நண்பியோட இவன் திரியிறவனில்லை.குடும்பம் என ஒழுங்காக இருப்பவன்.மனைவி,பிள்ளைகளோடு சந்தோசமாக செலவு செய்வான்.”போனஸாக நினைத்து வாங்கிக் கொள்”என்று வற்புறுத்த,’சரி ‘என வாங்கிக் கொண்டான்.

ஆண்டுகள் இறக்கைக்கட்டிப் பறந்தன.ஆஞ்சலோ உண்மையிலே கிழவனாகத் தான் போய் விட்டான். காது கேட்கிறது கொஞ்சம் மந்தமாகி விட்டது. அங்கே, கொம்பிரசர் விட்டு விட்டு வேலை செய்கிற போது எழுகிற பெரும் சத்தத்தாலே..காது போனது’ என்று சொன்னான். அது அனைவர் காதுகளையும் செவிடாக்கிக் கொண்டு தானிருந்தது.ஆஞ்சலோவின் குடும்ப வைத்தியர்,அப்படி சொல்லி இருக்க வேண்டும்.அவன் வேற தொழிற்சாலைகளில் கேட்டறிந்து,கொம்பிரசரைச் சுத்தி வர சீமேந்துக் கற்களை வைத்துக் கட்டி,அறைக்குள் அதை வைத்துப் பூட்டி…சத்தத்தை பெருமளவு குறைத்து விட்டான்.என்ன இப்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்குச் செலவுகள் அதிகம் என்பதால்…எவருமே தவிர்த்து விடுகிறார்கள்.இந்த நாடே சூழல் மாசடைதல் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட கள்ளம் அடித்துக் கொண்டிருக்கிறது.முதலாளித்துவம் தண்ணீரில் பலகாரம் சுடுகிறவர்கள் தான்.ஆஞ்சலோ பிழைக்க வந்தவன்.பத்து பதினைந்து வருசத்திற்குப் பிறகு செய்கிறான்.’தொழிற்சாலை என்றால் சத்தங்களுடன் கூடியது தான்’என்ற அவனது சிறு வயசு  எண்ணமும்  இழுவலுக்கு ஒரு காரணம்.

சத்தம் குறைந்த பிறகு பேபிக்கு ஒரு புதிய உலகத்தில் இருப்பது போல ஆகா..! என்றிருக்கிறது.ஜோன்னும் இப்ப   சிறிது  வளர்ந்து விட்டிருந்தான். பீற்றர்,அவனுக்கு தன்னுடைய வேலைகளை ஒரளவு பழக்கி விட்டிருந்தான்.ஆனால், அவனுக்கு மோட்டர் …திருத்துறதில் விருப்பம் ஏற்படவில்லை. சம்பந்தமேமில்லாத

‘ட்ராவ்ஸ்மன்’கோர்ஸையே படித்தான்.ஆஞ்சலோ, ஒபிஸ் வேலைகளை பார்க்கிறானே,அதுவே போதும் என விட்டு விட்டான். ஜோன்னுக்கும் பீற்றரின் வேலைகள் சிரமமாக இருக்கவில்லை.அவனுக்கு ஆங்கிலம் தண்ணிப் பட்டபாடு.கொஞ்சம் நிதானமாக இருந்தால்…நின்று பிடித்து விடுவான். 

கையிக்க ,காலுக்க வந்தவன் ‘அதைச் செய் ,இதைச் செய்’என  இப்பச் சொல்கிறது பேபிக்கு உள்ளுக்க உறுத்துகிறது .எந்த மனிதனுக்கும் ஈகோ இருக்கத் தானே செய்யும்!ஆஞ்சலோ சொல்றது வேற,இவன் சொல்றது வேற இல்லையா?. ஆனால், ரொனால்டோவோடு ஜோன் அப்படி எல்லாம் ஓடர் பண்ண மாட்டான்.இத்தாலியன்,தவிர அப்பர் தரவலி என்ற பயம்,மரியாதை நெடுக இருந்தது.

ஆனால் ,ரொனால்டோ,வேற விதத்தில் குழம்பிக் கொண்டிருந்தான்.ஆஞ்சலோவிற்கு காதிலே பிரச்சனை ஏற்பட்ட பிறகு,அவர்களோட நின்று வேலை செய்வது குறைந்து விட்டிருந்தது.ஒன்று,இரண்டு தடவை வந்து பார்த்து,நின்று அலட்டி விட்டுப் போய் விடுவான்.அவன் அங்கே வேலை செய்வதற்கு தனக்கும் ஒரு சம்பளம் போட்டே இருந்தான்.அவர்களோடு வேலை செய்கிற போது அது ஒரு விசயமாகவே தெரியவில்லை.இரண்டாக பிரித்த பிறகு,அந்த சம்பளத்தை மனைவியின் பேருக்கு மாற்றி விட்டான்.அவள் தொழிற்சாலைக்கே வராதவள்.இப்ப அவள் பேரிலே இருப்பதால் கிழமையில் இரண்டு நாள் வந்து பெரிய மோட்டரின் ஒபிஸில் இருந்து பில்லுகளைப் பார்த்து விட்டு போய் விடுகிறது ஏற்பட்டிருந்தது.எல்லாமே பீற்றரின் வேலை தான்.வருகிற போது சில வேலைகளைச் செய்து மரியாவிடம் கொடுத்து விட்டு போகும் படி பழக்கி இருந்தான்.இப்ப,ஆஞ்சலோ வேலை செய்வதில்லையே.வேலையே செய்யாமல் அவன் மனைவியிற்கு என்று  அந்த‌ சம்பளம் போடப்படுவது என்ன நியாயம் ?,ரொனால்டோக்குப்  பிடிக்கவில்லை.நகரசபையோ  ,வரியை (பணத்தை) அறவிடுவது  போலில்லாமல் ,பறிப்பது போல மோசமாக மாறிக்   கிடந்தது.எனவே, எல்லா தொழிற்சாலைகளுமே இப்படி கீயா மாயா  (கள்ள‌)  வேலைகளை 

செய்து கொண்டிருந்தன. அரசே, களவு செய்ய தயங்குவதில்லை,ஒரு வியாபாரி செய்ய தயங்குவானா? என்ன! பிடிபட்டாலும் வக்கீலைக் கொண்டு சமாளித்து விடுவார்கள். ரொனால்டோ,ஆஞ்சலோவிடம் “அவக்கு வேலையாள் சம்பளம் என்று பிரிம்பாய் போடாதே” என்று இரண்டு மூன்று முறை கேட்டுப் பார்த்தான். 

சம்பளத்தை நிறுத்தினால்..லாபத்தை கொஞ்சம் கூடுதலாகக் காட்டும்.அதிலே கால்வாசிப்பங்கு என கொஞ்சம் பணம் கூடுதலாக வரும்.அதுக்கு ஆசைப்பட்டுக்  கேட்கிறான் என  ஆஞ்சலோ …கவனத்தில் எடுக்கவே இல்லை. எனவே, ரொனால்டோ வேறு சில திட்டங்களை தன்னுள் இரகசியமாய் தீட்ட, ‌ ஆரம்பித்தான். பெரும் மோட்டர்களை கொண்டு வார கம்பனிகள் சுமார் பதினைந்து மட்டிலே இருந்தன.ஒவ்வொன்றுமே பல தொழிலாளர்களைக் கொண்டு இயங்குவன.சில இரண்டு சுற்று வேலையாட்களைக் கொண்டும் இயங்கின.

தொழிற்சாலைகளிலும் தூசி விளைவதும்,செய்யிற வேலையிலிருந்து பறக்கிற தூள்களும் சேர்ந்து உள்ளே இருக்கிற காற்றை மாசடைய வைக்கிறது.அதை தூய்மைப்படுத்தும் வழிமுறைகள் திருப்திகரமாக இருப்பதில்லை.வியாபாரநாடு.அரசியல்வாதிகளின்,அரச வேலையாளர்களின்,சம்பளம் மட்டுமில்லை,அதற்கான சூழலைப் பேண்கிற செலவுகளும் அதிகமானவை.அதற்காக வரிகளை அறவிடுவதும் அதிகமாகவே இருக்கின்றன.அதனால் வியாபார நிலையங்களுக்கு அறிவுறுத்துவதுடன் சரி,அதிகமாக கண்டுக்கிறதில்லை.சுகாதார கேடுகள் வெளிப்பட நீளகாலம் எடுப்பதால்.அதன் தாக்கமும் உடனடியாக தெரிவ‌தில்லை.அதற்குள்ளே பல அரசாங்கங்கள் மாறி விடும்.இறுக்கிப் பிடித்தால்..பொருளாதாரம் வளராது.அதனால் ஏற்படும் விளைவுகள் காலப் போக்கில் குறைந்தளவிலாவது இயல்பாக‌ பாதுகாப்பேற்பாடுகளை கட்டிக் கொள்ளும்.மூன்றாம் மண்டல நாடுகளை விட அவை எப்போதும்  மேலானவையாகவே இருந்தன‌.

அந்த மாசுகள்..யந்திரங்களுக்கும் கேடுகளை   விளைவிப்பன‌.அதில் ஈரலிப்பும் படிகிற போது குறுக்கு மின்  சுற்றோட்டங்கள் ஏற்பட்டு மோட்டரினுள்ளே உள்ள வயர்கள் எரிகின்றன.குறைந்தது ஆறு மாசத்திற்கு ஒரு மோட்டராவது ஒரு தொழிற்சாலையில் பழுதாகும்.அதை விட மின்னல்,பனிக்குளிரின் ஏற்ற இறக்கம்..வேறு சில காரணங்களும்..மோட்டர்களுக்கு  கோவிந்தா தான்.திருத்திய மோட்டர்களை கொண்டு போய் பொறுத்துற போது… ரொனால்டோ ,பல வித ஆலோசனைகளையும் கூறி..என்ன வேலைகளை செய்திருக்கிறோம்..என பலதைக் கதைத்து  ‘நல்ல மனிதர்’ என்ற பிம்பம் அவர்கள் மனதில் மெல்ல மெல்ல‌ வளர்த்துக் வந்தான். 

பதினைந்து வாடிக்கையாளர்கள் என்றால் லேசு பட்டதில்லை.அதில் இரண்டொன்று தான் மூடுவிழா நடத்தும்.அரசாங்கமும் சிற்சில சட்டங்களில் சலுகைகளும் செய்து.. மூடுபடாதும் பார்த்து கொண்டிருந்தன.கிருஸ்மஸ் வார நேரங்களில் வாடிக்கையாளர் மனதை குளிர்விக்க, பூப்பாசலும்,ரோஜல் விஸ்கி,வைன் போத்தல்களுடன் புதிய வருசகலண்டரையும்..ஆஞ்சலோ,விக்கியின் ஆலோசனைப்படி நெடுக கொடுத்து வந்தான்.

கொஞ்ச வருசமாக ரொனால்டோவே அதை கொண்டு போய் கொடுத்து வருகிறான்.அந்தப் பகுதி ரொனால்டோவின் கவனிப்பில் தானே நடக்கிறது என்பதால்,அவன் கேட்ட போது விகல்ப்பமில்லாமல் ஆஞ்சலோவும் சரி என்று விட்டிருந்தான்.அவன் எது கேட்டாலும் ‘இல்லை’என சொல்ல அவனுக்கு மனம் வருவதில்லை.அவனும் ஆஞ்சலோவிற்கு நிறைய செய்திருக்கிறான் தானே.விக்கி முக்கியமானவனாக இருந்தாலும் ரொனால்டோ இல்லாட்டி..அந்த தொழிற்சாலை இல்லை தானே.

உள்ளே இருக்கிற வேலையாட்களுக்கும் கிருஸ்மஸ்க்கு முதல் நாள் ‘பிட்சாவுடன் வேறு சில உணவுப் பொருட்ககளையும் வரவழைத்து ‘பார்ட்டி’நடக்கும்.ஒவ்வொருவருக்கும் சிறிய ரோஜல் விஸ்கி போத்தலும்,கொடுத்து அவர்கள் உழைக்கிற பணத்தில் நாலு வீதமான கொடுக்கிற விடுமுறைக் கொடுபனவுச் செக்கையும் கொடுப்பான்.அப்ப மூடுற தொழிற்சாலை இரண்டு கிழமைக்குப் பிறகு வருசம் கழிய திறக்கும்.

அந்த விடுமுறைகளில் மோட்டர்களை திருத்திக் கொடுக்கணும் என்றால் ஆஞ்சலோ,பேபியையும்,ரொனால்டோவையும் வேலை செய்யக் கேட்பான்.அவனும் கூட வந்து வேலை செய்வான்.’டீ,சாப்பாடு எல்லாம் வாங்கியும் கொடுப்பான்.ஓவர் டைம்மான பணத்தையும் கையிலே கொடுப்பான்.செக்காகக் கொடுத்தால் அரசாங்கத்திற்கு கணிசமாக வரி கட்ட வேண்டும்.அவர்களுக்கும் வழக்கமான சம்பளத்தை விட அரை மடங்கே அதிகமாக வரும்.பணமாக கொடுக்கிற போது ஒன்றறை மடங்குச் சம்பளம் அதிகமாக இருக்கும்.எல்லா நேரங்களிலும் வருவதில்லையே.தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களிலே தானே ஏற்படுகிறது.அரசாங்கமும் ..இதை பெரிதாக கண்டுக் கொள்கிறதில்லை.அந்த நேரங்களில் குடித்துப் போட்டு கார் ஓடுவதை தான் அரசாங்கம் அவ்வளவாக விரும்புவதில்லை.குடியை விற்கிறவரும் வியாபாரிகள் ஆச்சே.அதன் கதவையும் அடைக்கச் சொல்லி சொல்ல முடியாதே. 

தன்னுடைய திட்டத்தை ரொனால்டோ பேபியிடமும் சொல்லவில்லை.அன்று ஒரு நாள் ரொனால்டோ வேலைக்கு வரவில்லை.ஆஞ்சலோ,பேபியோட நின்று வேலை செய்து கொண்டிருந்தான்.அவனுக்கு வாய் ..சும்மா இருக்காதே.தவிர,முதல் நாள் இத்தாலிய தொலைகாட்சியில்,சனல் நாலு தொலைகாட்சியை பார்த்து விட்டிருந்தான். ஈராக்கில், ஆவ்கானிஸ்தானில், பாகிஸ்தானில், லிபியாவில், சிரியாவில்,ஏன் பாலஸ்தீனர்களுக்கெதிராக இஸ்ரேல் நடத்துற தொடர்கிற‌ கதையில் எல்லாம்  நடக்கிறது தான்.அவற்றை தணிக்கைப் படுத்தி அரசியலைக் கலந்து வெறும் செய்திகளாக மட்டும் ஒரு நிமிசம் காட்டுகிறார்கள்.பாதிக்கப்படுறவர்களைப் பற்றி சிந்திக்க முதலே தீ விபத்தை, சுனாமியை..இப்படி எதையாவது காட்டி திசை திருப்பி விடுவார்கள்.அதன் அழுத்தம் உறைப்பதில்லை.

ஈழ அனர்த்தத்தை ரத்தத்தை உறைய வைப்பது போல காட்டி இருந்தார்கள்.ஒன்றுக்கு மேல் தடவை அதை பார்க்க ஒவ்வொருவருமே பயப்படுவார்கள்.பார்த்தாரேயானால்..நிச்சியமாக  மனநிலை பாதிக்கப் பட்டுப் போய் விடுவார்கள்.ஆஞ்சலோவிற்கு அதே சதா கண்ணில் ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.

“எனக்கு புத்த சமயத்திலே விருப்பம் இருந்தது.வெறுக்க வைத்து விட்டார்களே”என்றான்.பேபிக்கு உடனே விளங்கவில்லை.

“உன்ர நாட்டிலே உன்னுடைய பகுதிக்கு போய் வரக் கூடியதாக இருக்கிறதா?”என்று கேட்ட போதே,’சனல் நாலை’எங்கயோ..பார்த்திருக்கிறான் என்பது புரிந்தது.

“பாதுகாப்புப் பகுதிக்குள் அகப்பட்டு விட்டது.அரசாங்கம் பிடுங்கிக் கொண்ட காணி அரோகரா தானே!திரும்பக் கிடைக்கப் போவதில்லை.அதிலே ராணுவம், சிங்களவரை வேறு குடியேற்றி விட்டது”என்றான் சோகமாக.

“ஜீசஸ் கிரைஸ்”என்றவன்,தொடர்ந்து ஆதரவாக  “ஜீசஸ் சொல்கிறார்,தோற்கடிக்கப் பட்ட இடத்திலேயே,உங்களையும் ஜெயிக்கவும் வைப்பார்’என்று,பைபிலே இருக்கிறது,கவலைப்படாதே”என்றான்.தொடர்ந்து”உங்கட நிலத்தை யாருமே பிடுங்க முடியாது,என்றோ ஒரு நாள் உங்களுக்கு திரும்ப கிடைத்தே தீரும்.இப்ப சிறிலங்கா, போர்க் குற்றவாளி என்ற வலையிலே மாட்டுப் பட்டு விட்டதல்லவா,இனி என்ன வார்த்தை ஜாலமாக கதைத்தாலும் இதிலிருந்து வெளியே வர முடியாது.வரலாற்றில்,முகத்தில் கரி பூசிய ஒரு  இனம் சிங்களம்.”என்றான்.

பேபி விரக்தியாய் சிரித்தான்.”அவர்களுக்கு சூடு சொரணையே கிடையாது என எங்களுக்கு நிரூபித்த நீண்ட வரலாறு இருக்கிறது.எம் அரசியல் தலைவர்களுடன் பல தடவைகள் சமாதான உடன்படிக்கைகள் எழுதி இருக்கிறார்கள்.மையின் ஈரம் காய முதலே கிழித்து எறிந்து விட்டிருக்கிறார்கள்.திருந்துற இனம் கிடையாது அது!”என்றான்.

ஆஞ்சலோ”நீ பைபிளையும் ஒரு தடவை வாசிக்க வேண்டும்.உன்ர வார்த்தையிலே ‘மாற்றமே’வராது என்ற நிலைப்பாடு தான் இருக்கிறது.எங்கட ஆட்கள் கூட தான் இத்தாலி உருவாகும் என நினைக்கவில்லையே.இப்ப இத்தாலியிலே தலை நிமிர்ந்து இருக்கிறோமே!நாளைக்கு நடக்கப் போவதை உங்கட மகிந்தாவாலே கூட சொல்ல முடியாது தெரியுமா உனக்கு”எனக் கேட்டான்.

பேபி அவன்  நியாயத்தை ஒப்புக் கொண்டான். ஒரு விடுதலை வீரனைப் போல! “உங்களுக்கு ஒரு நாள் விடியல் வரத் தான் போகிறது.தர்மம் உங்கட பக்கம் இருப்பதால்…ஒரு நாள் வென்றே தீரும்.நம்பிக்கையை இழக்காதே”என்றான்.தொடர்ந்தான்.

“உனக்குத் தெரியுமா?,இன்றைய அமெரிக்காவிலே இருக்கிற கலிபோர்னியா,நியூ இங்கிலாந்து,டக்டெஸ்..மாநிலங்கள் உண்மையிலேயே மெக்சிக்கோவினுடையவை என்று,ஆனால் இன்று அமெரிக்காவின் மாநிலங்கள்.போரில் வெற்றி பெற்றவர் அபகரிக்கலாம்,அல்லது சர்வ ஜன வாக்கெடுப்பு நடத்தி ஜனநாயக முறையிலும் கூட சேரலாம்.

உங்களுடைய தமிழிழ மாநிலம்,இந்தியாவின் ஒரு மாநிலமாக சேர நிறைய நேர்மையான காரணங்கள் இருக்கின்றன.இந்திய இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு,கிழக்கில் சர்வ ஜன வாக்கெடுப்பு நடத்தி இணையிறதா இல்லையா?என முடிவெடுக்கலாம்’என்ற சரத்து இருக்கிறது.உங்களோட செய்த ஒப்பந்த்தை கிழித்து எறிந்தது போல சிறிலங்காவால் இதை ஒன்றும் செய்ய முடியாது.இந்தியா மெளனம் காப்பதை பிழையாக அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.பூமாலை ஒபரேசன் போல இந்தியா நினைத்தால்..பல ஒபரேசன் செய்ய முடியும்.இந்தியா,அந்த சர்வஜன வாக்கெடுப்புக்குப் பதிலாக..வடக்கு,கிழக்கிலும்,வெளிநாடுகளில் பரந்து கிடக்கிற ஈழத்தமிழர்களிலும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி,தமிழிழ மாநிலம் ,சிறிலங்காவை விட்டு இந்தியாவோடு சேர விருப்பமா?என நடத்த முடியும்.ஜக்கியநாடுகள் சபையூடாக வல்லரசுகள் அரசியல் நடத்த முயல்வதையும்  தடுத்து …காப்பாற்ற இருக்கிற‌ ஒரு வழி.
தனி நாடாகிறது உங்களுக்குக் கூட நல்லதில்லை.ராணுவச்செலவு..?,இந்த வல்லரசுகள் கழித்த குப்பை ஆயுதங்களை எல்லாம் விலையாக்க உங்கள் தலையிலே கட்டுவார்கள். வெறும் விரயச் செலவுகள்.ஒவ்வொரு குட்டி நாடுகளும் குட்டிச் சுவராவதும்,முட்டாள் தனமான வறுமையில் சீரழிவதும் இவற்றால் தான்.சிறிலங்கா உண்மையிலே வளமான தீவு.ஏன்,இங்கத்தையக் காசு அங்கே நூறு ரூபா, நூற்றிஜம்பது ரூபா என்று எகிறிப் போய்க் கிடப்பது எதனால்?இந்த குபைகளை வாங்கிக் கட்டிக் கொண்டதால் தான்.தடை செய்யப் பட்ட ஆயுதங்கள்,வெளியில் விற்கவே முடியாது.ஆனால், சிறிலங்கா வாங்கி இருக்கிறது.அதனாலே, போர்க்குற்றவாளி என்ற அவமானம்.கேள்வி கேட்பவர்கள் அதை விற்றவர்கள் தான்.அவர்களுக்கு இரண்டு மடங்கு ஆதாயம்.இதையெல்லாம் விளங்கிய லத்தின் அமெரிக்காவே சிறிலங்காவிற்கு சார்ப்பாக நிற்கிறது,பாரன் முரணை?இந்தியா மற்ற மாநிலங்களைப் போல உங்களையும் இணைத்துக் கொண்டால் ..நீங்கள் காப்பாற்றப்படுவிர்கள்.இந்த வழி இந்தியாவிற்கும் உடன்பாடனதாகவே இருக்கும்.அமெரிக்கா,பிரித்தானியா போன்ற ஜரோப்பியா நாடுகளை விட இந்தியா நேர்மையாக நடக்கிற நாடு.இந்தியாவைக் குறித்து மனதின் ஒரு மூலையிலே பயத்தைக் கட்டிக் கொண்டு தான் இந்த நாடுகள் எல்லாம் இந்தியாவை பிரச்சனைகளில் சிக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன.”

இவன் என்ன புதுக் கதை சொல்கிறான்?புலிகள் வளர்த்து விட்ட இந்திய வெறுப்பு இருகிறதே.. !,இந்தியா வேறு காஸ்மீர் பிரசனையால் நேர்மையாக நடக்க முடியாமல் தள்ளாடுகிறதே? சாத்தியமாகுமா? ..பேபி குழம்பிப் போனான்.

பிரான்சுக்கு வெளிநாடுகளில் மாநிலங்கள் இருப்பதாக பேபியும் எதிலேயோ வாசித்த ஞாபகம் இருக்கிறது.பிரான்சு,நட்புநாடுகளில் பிரெஞ்சு பேசும் பெரும்பான்மையுடைய பகுதிகளை ‘அப்படியெல்லாம் கேட்டு சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்,அந்த நாட்டோடு இறைமையுடன் இருங்கள்’எனக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஆஞ்சலோ அழுத்தம் திருத்தமாக  “தமிழீழமும் இந்தியாவின் ஒரு மாநிலமானால் தமிழர்கள் கெளரவத்துடன் தலை நிமிர்ந்து வாழ முடியும்,உங்கட வீரத்தையும் இந்திய‌ராணுவத்தில் காட்ட முடியும்.”என்றான்!

“நடைமுறைச் சாத்தியமில்லையே”என்று பேபி சிந்தனையுடன் மறுத்தான். 

“இத்தாலி நடைமுறைச் சாத்தியமாகி இருக்கிறதே,எப்படி?”என ஆஞ்சலோ திருப்பிக் கேட்டான். அதோடு இன்னொன்றையும் சொன்னான்.

“இந்தியா, அணிசேராக் கொள்கைக்காக தயங்கிக் கொண்டிருக்கிறது.நீங்கள் மனசு வைத்தால்,தமிழ் நாடு,உங்களுக்கு தாய் போன்றது தானே,அது முழுமூச்சாக குரல் கொடுக்கும்.சிங்களநாட்டுக்கு பாலம் கட்டுற பாரதியின் கனவும் கூட ஒரு காலத்தில் சாத்தியமாகும்”என்றான்.ஆஞ்சலோவும் ஒரு பிரேமதாசா தான்.ஆங்கிலம் தெரியாது என்ற தாக்கத்தால்,தானாகப் படித்து ஈழத்து செய்திகளை எல்லாம் தீவிரமாக படித்து வருகிறான் போல இருக்கிறது.பாரதியை..படிக்கிறளவுக்கு என்றால்…வாசிப்பு அனுபவம் ஈழத்தமிழர்களை விட அதிகமாகத் தான் இருக்க வேண்டும். இவனுக்கு அமிர்தலிங்கமும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் எனவும்  தோன்றியது. அமிர்தலிங்கம் தான் இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கை எழுதக்  காரணமாக இருந்தவர்!,நம்மவர்கள் எழுதி இருந்தால்,கிழித்தெறிந்து விடுவார்கள் என்று தான் ..அப்படி எழுத வைத்திருப்பாரோ? என்று பேபி நினைக்கிறவன்.புலிகள் அவரை அவசரப்பட்டு கொன்று விட்டார்கள்.இப்ப உயிருடன் இருந்தால்…தமிழர்கள்,பாதுகாப்புடனும் ,கெளரவத்துடனும் ஆஞ்சலோ சொன்ன முறையில்  தான் முடியும் என்றால் முழுமூச்சுடன் முயற்சியில் இறங்கி இருப்பாரே!அவரைப் போல சுயநலமில்லாது செயல்படுறவர்கள் இல்லாமல் போய் விட்டார்களே’என்று வருத்தமாக இருந்தது.

பேபிக்கு,ஆஞ்சலோவின் கருத்துக்களை நினைக்க நினைக்க சுகமாக இருந்தன.காலுக்கு கீழே நசுக்கப் படுற எறும்புக் கூட்டம் பெரிய யானையை வீழ்த்த முடியும் என்ற நீதிக் கதை!காலுக்குக் கீழே சுற்றுற சக்கரம் ஒரு நாள் தலைக்கு மேலேயும் வரும்.(நீர்ப் பறவை சினிமாவில் வார வசனம்).சரியாய் தான் இருக்கிறது.’எமக்கும் சுதந்திர மூச்சு விடுற தமிழீழ மாநிலமோ,நிலமோ..ஒரு நாள் கிடைக்கவே போகிறது’என்ற நம்பிக்கை முதல் தடவையாக ஏற்பட்டது.

வீழ்வது என்றால் அதோட எல்லாம் முடிந்து போவதில்லையே,தோல்விகள் தானே…பிறகு வெற்றிகளை சாதிக்க வைத்தன!ஏன் இந்த சிறிய பின்னம் எங்களுக்குப் புரிவதில்லை?உணர்ச்சி வசத்தில் வீழ்ந்து விடுகிறோம்.அதனால் தான் எங்களால் சிந்திக்க முடிவதில்லை என்பது பேபிக்குப் புரிந்தது.ஆஞ்சலோ எங்கட பிரச்சனைக்கு வெளிய இருப்பதால்..தீர்க்க தரிசனமாக பார்க்க முடிகிறது.எங்களால் முடியவில்லை.கைமுனு,தீர்க்க தரிசனமாக அப்படி பார்த்ததால் தான் அநுராதபுரத்தையும்,பொலநறுவையும் எல்லாளனிடமிருந்து மீட்க முடிந்தது.எங்களாலும் முடியும் தான்.

தெளிந்த பார்வையே முதலில் அவசியம். நாமும் அப்படி தீர்க்கதரிசனமாக பார்க்கப் பழக வேண்டும்.இந்த உயிர் வாழ்க்கை மிச்சம் குறுகியது தானே!எப்படியிருந்தாலும் ஒரு பதருக்குச் சமமானது தானே,மொழி,மதமற்ற நிலையில் ஒரு நாள் உதிரத் தானே போகிறோம்.அதையும் வீரர்களாகி கெளரவத்துடன் உதிர்வோமே!அதற்கு ஒரே வழி தயார் படுத்தல்கள் தான் . அச்சமில்லை,அச்சமிலை,அச்சம் என்பதில்லையே!நிச்சியமாக தனக்கு ஒரு நாள் பையித்தியம் பிடிக்கத்  தான்  போகிறது’அவனுள் இருந்த‌ மனச்சாட்சி சிரித்தது.

இப்படி பல வழிகள் இருந்தாலும்,நம்மவர்களிடையேயும் எழுகிற சிறு சிறு சூறாவளிகளும் ..எமக்கு கிடைக்க விடாமல் தள்ளித் தள்ளி போட்டுக் கொண்டே இருக்கும்.இதெல்லாம் நடக்க இந்தியாவிற்கும் தமிழர்களுக்கும் ஏற்பட்ட பகைமை மாற வேண்டும்.தமிழர்களும் மனிதர்கள் தான் என்ற அனுதாபம் எல்லாம் பிறக்க வேண்டும்.காந்தி பிறந்த நாடு,காந்தியத்தை லேசிலே தொலைத்து விடாது என நம்பலாம்.ஆனால் லஞ்சம்,பிரச்சனைகளில் என இருக்கிற இந்தியாவிற்கு உண்மையான இந்தியா புரியுமா?தெரியுமா??இந்தியாவிலிருந்து ‘மரண தண்டனை முறை’யை எப்ப இருந்து நீக்கி விடுகிறார்களோ..அப்ப தன்னை புரிந்து கொள்ள தொடங்கி விட்டது என்பதை புரிந்து கொள்ளலாம்.காந்திய நாடு அதை வைத்திருப்பது நல்லாவே இல்லை.பிரித்தானியாவின் ஒரு பிள்ளையான கனடாவே அதை துணிச்சலாக நீக்கி வைத்திருக்கிற போது,இந்தியாவால் ஏன் முடியாது!அதை, வைத்திருப்பதாலே இந்தியாவில் பிளவுகள் அதிகரிக்கின்றன. பலவீனம் அடைகிறது.

இவர்களுடைய பகுதியில் கமராவோ,ஒட்டு கேட்கும் கருவியோ இல்லாததால் ரொனால்டோ,எல்லாத்தையும் தயார் படுத்தி விட்டு,பேச ஆரம்பித்தான்.”தனியாய் போய் தொழில் தொடங்க தீர்மானித்து விட்டேன்.எங்களிடம்  வார வாடிக்கையாளர்களையும் கேட்டு உறுதிப் படுத்தி விட்டேன்,என்னிடம்  கொண்டு வருவதற்கு சம்மதம் என்றிருக்கிறார்கள்.நீயும் என்னோடு வருவாயா?”ஆவலுடன் கேட்டான்.ஜோன்,வேலை வாங்குவது பேபிக்கு பிடிக்கவில்லை என்பதை  கவனித்திருந்தான்.நல்லவனான ஆஞ்சலோவை விட்டுப் போறது சரியா?என்ற குரல் உள்ளுக்குள் கேட்டது.’திறமையும்,தகுதியும் உடையவன் தனது உழைப்பை சீப்பாக்குவதை விரும்புவதில்லை என்பதால்..ரொனால்டோ போகிறான்’என்று புரிந்திருந்ததால்..வாய்,அவனை முந்திக் கொண்டு “வாரேன்”என்று விட்டது.மனச்சாட்சி குரல் எழுப்ப முதல்,’தர்மத்துக்கான பாரதப் போரில், கிருஸ்ணர்,அதர்ம வழிகளையும்  கையாண்டு போரை வழி நடத்தி இருக்கிறாரே!என்ற பதிலை நினைத்துக் கொண்டான்.மனச்சாட்சி சிரித்தது.

ரொனால்டோ,தான் எடுத்திருந்த கட்டிடத்திற்கும் கூட்டிக் கொண்டு போய் காட்டினான்.பல ஆண்டுகளாக ஆஞ்சலோவைப் போல திவாலாகிப் போன கம்பனிகளின் ஏல விற்பனைக்குச் சென்று ரகசியமாக இயங்கக் கூடிய கருவிகளை எல்லாம் வாங்கி,ஸ்டோரேஜ்ஜில் அறை எடுத்து சேர்த்து வந்திருக்கிறான். அவற்றை எல்லாம் ..கொண்டு வந்து பொறுத்தி விட்டிருந்தான்.நாளைக்கே என்றாலும் வேலையை ஆரம்பிக்க முடியும்.கிருஸ்மஸுக்கு ஒரு கிழமை இருக்கிற போது, ரொனால்டோ “வேலையிலிருந்து நிற்கப் போறேன்.பழைய மின்சார பராமரிப்பு வேலையை பார்க்கப் போறேன்”என்றான்.

ஆஞ்சலோ நம்பவில்லை.அளவெடுப்பது போல பார்த்தான்.அவனால் ஒன்றும் அறிய முடியவில்லை.”சரி “என்று அனுமதித்தான்.பேபியிடம் வந்து “உன்னோடு ..ஏதும் கதைத்தானா?”என்று  கேட்டான்.”ஓம் கதைத்தான்”என்றான். இவனோடு கதைத்து என்ன ஆகப் போகிறது என்று நினைத்தானோ, என்னவோ”இனி நீயும் நானும் தான் வேலை செய்ய வேண்டியிருக்கும்.உனக்கும் சம்பளம் கூட்டித் தாரேன்.வேலையைப் பார்”என்று திரும்பினான்.பேபிக்கு உள்ளுக்க குறுகுறுத்தது.

‘பெரிய மனிதன் பெரிய மனிதன் தான்!,எதுவும் கேட்காது விட்டானே,அவனுக்கு அவசரப்பட்டு வாக்கு கொடுத்து விட்டேனா?மறுபடியும் குழம்பினான்.ஒன்றை அடைய வேண்டும் என்றால்,அதற்கு விலை கொடுக்க வேண்டியே இருக்கும்.சுதந்திரமாக வேலை செய்ய வேண்டுமானால் ஆஞ்சலோவிற்கு காட்ட வேண்டிய நன்றியை மறக்கத்தான் வேண்டும்.

தமிழனாய் பிறந்து விட்டானே, தமிழர்களை ஆட்டி வைக்கிற குணம் அவனை மட்டும் விட்டு விடுமா..என்ன?.கிருஸ்மஸ் விடுமுறை எல்லாம் கழிந்து வேலைக்கு திரும்பிய போது “பேபி நானும் வேலையை விட்டு விலகிறேன்” என்று தெரிவித்தான். ஆஞ்சலோவிற்கு விளங்கவில்லை.”நின்று என்ன செய்யப் போகிறாய்?”என்று கேட்டான்.”ரொனால்டோ,புதிய கம்பனி ஒன்று தொடங்கி விட்டான். என்னையும் வந்து வேலை செய்ய சொல்லி கேட்டிருக்கிறான்.அவனோடு வேலை செய்து பழகி விட்டது.நானும் சம்மதித்து விட்டேன்”என்றான்.ஆஞ்சலோ அவனை அளந்து பார்த்தான்.மகனாய் பழகியவன்.திட்ட மனம் வரவில்லை.ரொனால்டோ ஊர்க்காரன்.அவன் செய்ததிற்கு முன் இவனுடையது ஒன்றுமேயில்லை.”சரி  நீ போகலாம்.உன்னுடைய மிச்ச செக்குகளை வந்து பெற்றுக் கொள்”என்றான்.அது தான் ஆஞ்சலோ!

அவனுக்கு விக்கி பிரியிற போது தோளில் தட்டி”உன்னால் எதையும் சமாளிக்க முடியும்,தைரியமாய் இரு”என சொன்னது  ஞாபகம் வந்தது.மேலும் “நீ ஒரு யானை போன்றவன் என்பதை என்றும் மறக்காதே”என்றிருந்தான்.உடம்பை சிலிர்த்துக் கொண்டான்.’சோர்ந்து போவனா அவன்?அவன் கிழ உடம்பில் இளரத்தம் ஊறியது. ரொனால்டோவின் புதிய வேலைத்தளம் துப்பரவாக இருந்தது.அங்கே காதை பிளந்த கொம்பிரசை விட இங்கே இருந்ததின் சத்தம் அரை மடங்கு தான்.இதையும் குறைக்க ஏதாவது செய்யவே வேண்டும்.இப்ப தானே திறக்கிறான். ஒரு காலத்தில் செய்வான் என நம்பலாம்.

வேலை வீடு என ஓடுவதால்…ஆண்டு  போவது கூட தெரிவதில்லை.ஆஞ்சலோவை விட நாலு,ஐந்து வயசு  குறைந்தவன் ரொனால்டோ.பேபி இவனை விட எட்டு ஒன்பது வயசு குறைந்தவன்.அறுபது வயசை தாண்டுற போது உடம்பு பழைய வாகனமாக போய் விடுகிறதே,கழிக்க வேண்டிய வரிசையில் இருப்பவர்கள்.

இப்ப பேபி தான் ரொனால்டோவிற்குப் பலம்.”நீயும் பங்குதாரனாய் சேரன்”என்று ரொனால்டோ கேட்டான்.’இவன் பங்கு காரனாய் இருந்ததால் தான் இப்படி எல்லாம் செய்கிறான்.நானும் போய் ஆட்டம் போட வேண்டாமே ‘ என்று நினைத்தான்.”வேண்டாமப்பா.உன்னிடத்தில் சம்பளத்திற்கே வேலை செய்கிறேன்,போதும்”என்றான்.”சரி உன் விருப்பம்.அங்கே உனக்கு இருபத்தி இரண்டு டொலர்(மணிக்கு),இருபத்தி நாலாக தருகிறேன்.சம்மதம் தானே”என்று கேட்டான்.அவன் முகத்தை பார்த்தான்.”நீ என்ன போட்டாலும் சம்மதம் தான்”என்று பேபி சிரித்தான்.

ஆஞ்சலோவிற்கு வந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் இங்கே வரத் தொடங்கியிருந்தார்கள்.ஆஞ்சலோவிடம் ஒன்று இரண்டு பேர் நின்றிருந்தார்கள்.பீற்றருக்கு ஆத்திரம்.”இரண்டு மூன்று ஸ்கிள் வேலையாட்களை வேலைக்கு எடு.நான் அவர்களை மீண்டும் இங்கே கொண்டு வாரேன்”என்று ஆலோசனை கூறினான். “அவனும் இத்தாலியன்.பிழைச்சுப் போகட்டும்.கீரைக்கடைக்கு எதிர்கடை வேண்டாம்.வாரதே போதும் .புதிய ஓடர் எதையும் எடுக்காதே”என்றான்.அதாவது ஏறத்தாழ அந்த பகுதியை மூடி விட தீர்மானித்து விட்டான்.

மாற்றங்கள் இயைப்பாக்கம் அடைந்து விடும் தானே!அவனுடைய சிறிய மோட்டர் பிரிவு வியாபாரம் நல்லாவே இருந்தது.ஒரு பகுதியிலே எல்லா வேலைகளையும் நடைபெறுவதாக இருந்தது.மனைவியின் பெயரில் இருந்த வியாபாரத்தை ரத்து செய்து விட்டான்.இனி ஒரு கம்பனி தான்.

பேபிக்கு தொலைபேசியில் ரொனால்டோவின் மிச்ச செக்குகளை மகனை அனுப்பி பெற்றுக் கொள்ளும்ப‌டி தெரிவித்தான்.அவனுக்கு சிறிது மனத்தாக்கம் தவிர  கோபம் இல்லை.எல்லாம் நல்லபடியாய் போய்க் கொண்டிருந்தது.

ஆஞ்சலோ போல ஈழப் பிரச்சனைகளில் ..அனுதாபம் கொண்டு ஊடகச் செய்திகளை கேட்டு வந்து ரொனால்டோ கதைப்பவனில்லை.அந்த வலத்தில் பேச்சே எழுவதில்லை.வேலையில் மரியாதையாகவே பிழங்கினான்.சில நேரம் வேலையை முடிக்க மேலதிகமாக நிற்க வேண்டியும் ஏற்பட்டது. ஆஞ்சலோவைப் போலவே பணத்தைக் கொடுத்தான்.தேனிலவு சுமார் எட்டு வருசங்களாக போய்க் கொண்டிருந்தது. பேபிக்கும் எட்டு வயசு கூடி விட்டது.அவனும் கண்ணாடி இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது.ரொனாடோவிற்கு மறதி சிற்சில சமயம் ஏற்படுகிறது.பேபி சொன்ன பிறகே ‘அட..’என்று வேலையை செய்வான்.

ஆஞ்சலோவின் மகனைப் போலவே இவன்ர மகனும் வேற எதையோ படித்தான்.அதை சொல்லி கவலைப் படுவான். மகன், கல்லூரிக்குப் போகாத நாட்களில் வேலைத் தளத்திற்கு வந்து சொல்லிக் கொடுக்கிற வேலையை செய்வான்.ரொனால்டோவின் மனைவி ஒபிஸ் வேலைகளை செய்தாள்.அவள் வராத போது  ரொனால்டோ ஒபிஸ் வேலையையும் பார்ப்பான்.

சிலவேளை போனவனைக் காணவில்லை என்று போய்ப் பார்த்தால் கதிரையில் இருந்தபடியே குறட்டை விட்டுக் கொண்டிடிருப்பான்.பாவமாக இருக்கும். தள்ளாண்மைக் உள்ளாகி விடுகிறான். ஆனாலும் மோட்டரில் கை வைத்தால் அவன் கவனம் அதில் குவிந்தே இருக்கும். முந்தியது போல அலட்டல்கள் குறைந்து விட்டிருந்தது.வார மோட்டர்களை குறித்த திகதிக்குள் திருத்தி முடிப்பதை பேபி கவனத்தில் வைத்திருந்தான்.பிந்துறதென்றால் ரொனால்டோவிற்கு தெரிவிப்பான்.அவன் கொடுப்பனவை இருபத்தைந்தாக்கி விட்டிருந்தான்.அதற்கு மேல ஏற்றவில்லை.அது தான் அங்கே இருக்கிற அதிக சம்பளம்.

மற்றபடி அரசியல்வாதிகளுக்கும்,அரசவேலை செய்பவர்களுக்கும்,தனியார் கம்பனியில் ஒபிஸ்வேலை செய்பவர்களுக்குமே இவர்களை விட அதிகமான சம்பளத்தை பெறுகிறவர்கள்.அது ஏறிக் கொண்டே இருக்கும்.அந்த ஏற்றமே போதவில்லை என்று ஸ்ரைக்கெல்லாம் செய்கிறவர்கள் அவர்கள் தான். மாநில அரசு, இம்முறை குறைந்தளவு உறுப்பினர்களைக் கொண்டதாக ஆட்சியை பெற்றிருந்தது. பொதுவாக அதிக வரிகளை விதித்து மக்களை கஸ்டப்படுத்தாத இந்த அரசு,போதிய பலமில்லை என்றபடியால்..அதிக வரிகளை விதித்து மக்களை கஸ்டப்படுத்த தொடங்கி இருந்தது.அரசியலிலே சரியானவர்கள் யாருமே இல்லை என்பது சரியாய் தான் இருக்கிறது.முந்தி,மாநில வரி,மத்திய அரசின் வரி..கட்டுவது இருந்தது தான்.ஆனால் மாநில வரி சொகுசு தன்மையான பொருட்களை வாங்குற போதே கட்ட வேண்டும்.மத்தியதரத்தினரும்,வறிய பிரிவினரும்  பெரும்பாலும் வாங்கிறதுக்கு கட்டாயமாக இருக்கவில்லை.மத்திய வரி எல்லாப் பொருட்களுக்கும் கட்டாயம் அறவிடப்படும்.மாநில வரியின் அளவு கொஞ்சம் கூடத் தான்.எல்லாவற்றுக்கும் அறவிடப் படவில்லையே’ என்பதால்…பரவாய்யில்லையாக இருந்தது.சிறு தொழிற்சாலைகளுக்கும் சலுகைகள்  இருந்தன.தற்போது விற்பனை வரி என பேரை மாற்றி இரண்டு வரிகளையும் கட்டாயம் அறவிடப்பட்டன.

அரசினர்,தனியார்,சமூக சேவையினர் எல்லாருக்குமே மாநில‌வரி  ..சுமையாகி விட்டது. ரொனால்டோவிற்கும் அதிகளவு கட்டுவதாக ஏற்பட்டு விட்டது.அவன் சில சிக்கனங்களை செய்ய …யோசித்தான்.ஆஞ்சலோவைப் போல அவனும்  கிருஸ்மஸ்க்கு முதல் மண்டரின் உணவகத்திற்கு அல்லது பிரபலமான உணவகத்திற்கு குடும்பத்தோடு பேபியையும் கூட்டிச் சென்று பார்ட்டி வைப்பவன்.அவன் மனக்குழப்பத்தில்  இம்முறை அப்படி பார்ட்டியை வைக்காமல் டபிள் போனஸாக பேபியிற்கு ஒரு தொகையை குடுத்து விடுவோம்’என நினைத்தான்.அவனுக்கும் உடல்நலரீதியாகவும் பிரச்சனைகள் இருந்தன.உணவகத்தில்  சாப்பிடுவதில் ரசனையும் குறைந்திருந்தது.சோர்வு,பஞ்சி,தள்ளாண்மையால்..தன்ர நிலையில் இருந்தே கணக்கை போட்டு விட்டான். கதை குறைந்து விட்டதால்,அதை சொல்லி விளங்கப்படுத்த தவறி விட்டான்.

தமிழர்களில் இரண்டு விதமாக வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள்.முறை கிறையுடன் வாழ்கிறவர்கள் ஒரு வகையினர்.லிபரலாக வாழ்கிறவர்கள் இரண்டாமதினர்.பேபி ,தீவிரமாக முறை கிறைகளை பின்பற்றி வாழ்கிற ஊரிலிருந்து வந்தவன்.அவனை அறியாமலே  அது அழுத்தமாக அவனுள் பதிந்திருந்தது.யாராக இருந்தாலும் நடைமுறையில் இருக்கிற முறைகளை உடனடியாக மாற்றிக் கொள்ளக் கூடாது.அம்முறையை வத்துக் கொண்டே எதிர்த் தரப்பை.. “இதை மாற்றினால் என்ன,எப்படி மாற்றலாம்?”என யோசனைகளைக் கேட்டு,அதன் அடிப்படையில் தான்..அதையும் மெல்ல மாற்ற வேண்டும்.ரொனால்டோ மனத்தத்துவம் எங்கே படித்திருக்கிறான்?.எங்கட கல்வியும் பிரித்தனியரால், ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு அமைவாக கொண்டு வரப்பட்டது தானே!வாழ்க்கைக்கு உதவாதக் கல்வியாகத் தானே இருக்கிறது.வாழ்நாள் முழுதும் பள்ளிப்பாடங்களைத் தவிர  வெளியில் வார புத்தகங்களை எழுபத்தைஞ்சு சதவீதத்தினருக்கு மேற்பட்ட தமிழர்கள் படிப்பதே இல்லையே.சாதிய முறைகள் மாறாததிற்கும்,சீதனம் வாங்கிற மாதிரியான சமூக குறைபாடுகள் தொடர்ந்தும் நிலவுறதிற்கும் காரணம் அது  தானே!

எங்கட அரசியல் அதிகாரங்களை சிங்கள அரசு நயவஞ்சகமாக பிடுங்கிக் கொண்டதால், எம்மாலும் எம் குறைகளை அலசவும்,முற்போக்கான நடைமுறைகளை கட்டமைத்துக் கொள்ளவும் முடியாமல் இருக்கிறது.இவற்றையை விதி என்பதா?பேபி,கதைப் புத்தகங்களையும்  வாசிக்கிறவனாக இருந்திருந்தால்…”இந்த முறை பார்ட்டி வைக்கவில்லை”என்று ரொனால்டோ சொன்ன போது மூளையில் சுள்ளென கோபம் ஏறி இருக்காது.பெருந்தன்மையாக..ஏன் சொல்கிறான்?என்று சந்தேகங்களைக் கூட அவனிடம் கேட்டிருப்பான்.சில்லறை விசயம்.சின்னக் கல் காலை இடர வைத்து விட்டது.’அது ஒரு செலவா?’பேபி அதிருப்தியுற்றான்.எப்படிச் சொல்லலாம்?நினைக்க நினைக்க உள்ளுக்க குமுறல்களே அதிகமாகின.தெளிந்த நீர்ப்பரப்பில் கல்லை எறிந்தது  போல  வட்ட அலைகள் வந்து கொண்டே இருந்தன.’இவன் என்னை சீப்பாக நினைத்து விட்டான்’என்ற அம்பு உள்ளத்தில் ஆழமாக தைத்து விட்டது.

ஆஞ்சலோ எத்தகையவன்! அவனை விட்டு வந்திருக்கக் கூடாது என்றெல்லாம் கூட நினைப்புகள் வரத் தொடங்கி விட்டன. பேபியும் ஒன்றை மறந்து விட்டான்.நாம், இந்த நாட்டுக்கு அகதியாக வந்திருப்பவர்கள்.எம்மவர்கள் பலர் முறையான வேலை இல்லாமல்,ஸ்கிள் வேலையாளான தகுதியும் இல்லாமல் பொதுவேலையாளாக குறைந்த சம்பளத்தில் இரண்டு மூன்று வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.சிலவேளை கள்ளப் பேப்பரில் கூட வேலை செய்து மாட்டுப்பட்டு பிரச்சனைகளில் மாட்டுப் பட்டு சீரழிந்து கொண்டுமிருக்கிறார்கள்.அரசாங்கம்  அதிகமான வரிகளை பிடுங்கிக் கொண்டு விடுகிறது.அதுமட்டுமில்லை அவர்களை வக்கீல்களிடமும்  தள்ளி விட்டு பழி வாங்கி விடுகிறது.

ஊரிலே மாறி வந்த கடனை அடைக்க முடியாமல் சாதாரணமாக கிடைக்கிற வாழ்க்கையை கூட‌ தொலைத்து விட்டவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.பெண்களைப் பற்றிக் கதைக்கிறவர்கள் ஆண்களைப் பற்றி கதைப்பதில்லை என்ற யாதர்த்தம் ஒவ்வொரு ஆண்களுக்குமே தெரியும்.எனவே உயரவேலைகளில் காலை வைத்தவர்கள்..வேலைத் தளதில் அவமானத்திற்குள்ளானாலும்,  எம்மவர்களை வேலையில் சேர வைத்து,ஸ்கிள்வேலையாளரராக மாற்றி விட முயல வேண்டும்.ஊரில் உள்ள சகோதரங்கள் மற்றும் உறவினர்கள் உயிர்வாழ அனுப்புற பளுவை  அது  குறைக்குமல்லவா.வாழ்க்கைத்தரம் உயராவிட்டால் வீட்டிலே பிரச்சனை,  வெளியிலே பிரச்சனை எனக் கிடக்கிறவன், எமது நாட்டுப்பிரசனைத் தீர்வுக்கு எதுவும் செய்ய முடியாதவனாகி விடுவான்.நாம் தயார்படுத்தல்களைச் செய்யா விட்டால் ‘விடுதலை’என்பது எமக்கு கிடைக்காமலே போய் விடும்.எனவே இப்படி செய்யிற கடமை ஒவ்வொருவருக்குமே இருக்கிறது.சாதி,மத வேறுபாடுகளை மறந்து கை தூக்கி விட வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.நம்முடைய வேலைத்தளத்தில் பிரச்சனையை வளர்க்காது ராஜதந்திரத்துடன் செயல்படவும் வேண்டும் என்ற விசயத்தை பேபி மறந்தே விட்டான்.

கணநேர உணர்ச்சி வசப்பட்டதால் புத்திசாலித்தனமாக சிந்தியாது,தான் வராவிட்டால் ரொனால்டோவால் இந்த கம்பனியை நடத்த முடிந்திருக்காதே,அதற்கு பங்கம் ஏற்படுத்தி விட்டானே ,என்ற கோபத்தால் நல்ல விசயங்களை நழுவ விட்டு விட்டான்.பேபி மட்டுமில்லை,நம் விடுதலைக்கு ஆயுதம் ஏந்தியவர்கள் கூட புத்திசாலித்தனமாக சிந்திக்காததால் தான் தம்மையும் இழந்து போய் இருக்கிறார்கள். 

ஏன் பேபி அப்படி சிந்தித்தான்?அவன் ரொனால்டோவை மதிக்கவில்லையா?பெரு மதிப்பு வைத்திருக்கிறான்.நண்பனாக எதைப்பற்றியும் கதைக்கிறவன்.ஆஞ்சலோவை விட்டு விலகி வாரதுக்கும்,ஒரு நண்பன் கூப்பிடுறான்’என்றே தட்ட முடியாமல் வந்தவன்.அவன் மனதில் உள்ள ரொனால்டோவின் இயல்புகளிலிருந்து அவன் தவறி விட்டான்.உலகிலே பெரிய பகையாளி யார் தெரியுமா?நண்பனே தான்!நீண்ட காலமாக நண்பனாக பழகி வருகிற போது,நம் மனதில் நண்பன் நேர்மையானவன் என்ற எண்ணமும் படிந்து விடுகிறது.அந்த பிம்பம் மனதில் அசைக்க முடியாது படிந்து விடுகிறது.ஒரு சந்தர்ப்பத்தில் அவன் பிழையாக செயற்பட்டால்,அந்த பிம்பத்திலிருந்து தெறித்து விடுகிறான்.உள்ளத்தில் அந்த பழைய நண்பன் சாகும் வரையில் வீற்றிருப்பான்.ஆனால்,வெளியில் தெறித்தவன் தெறித்தவன்  தான்.ஒட்டவே முடியாது சாகும் வரையில் இழுபட்டு விடும்.அந்த நண்பன் செத்து விட்டாலோ தனிமையில் இருந்து அழுவான்.’இருவர் ‘படத்தில் மணிரத்தினம்,எம்ஜிஆர்,கருணாநிதியின் அந்த நட்பை அழகாக காட்டி இருந்தார்.

பேபி,கோபத்தில் கிருஸ்மஸ் பார்ட்டி வைக்கிற தினத்தில் வேலைக்குப் போகாது ‘பெரிய கிளாசிக் பிட்சா’ இரண்டை வேலைத்தளத்திற்கு கொண்டு வரச் சொல்லி ஓடர் பண்ணினான்.டெலிவரி பண்ணிய போது ரொனால்டோ”நான் ஓடர் பண்ணவில்லையே”என்று  வாங்க மறுத்தான்.”எங்களுக்குத் தெரியாது.இந்த கம்பனி பேர் சொல்லித் தான் ஓடர் கொடுத்தார்கள்.உங்க பிரச்சனையை உங்களோடு வைத்திருங்கள்.ஐம்பது டொலரை ‘பே’ பண்ணுங்கள்”என்று அவன் ஒற்றைக் காலில் நின்றான். அவனுக்கு ஐம்பது டொலர் ஒரு காசா?சுண்டக்காய்!குடுத்து அனுப்பினான்.பேபி செய்திருக்கிறான் என்று புரிந்து விட்டது.போனை எடுத்தி பேபிக்கு அடித்தான்.வீட்டிலே இருந்து பேபி அமுத்தலாக “பிட்சா பார்ட்டி எல்லாம் எப்படி?”என விஸ்கி மயக்கத்தில் நக்கலாகக் கேட்டான்.ரொனால்டோவிற்கு ஏறி விட்டது.திட்டி விட்டான்.பேபி சிரித்துக் கொண்டு திட்டுக்களை வாங்கி விட்டு “என் ஜோய்”என்று போனை வைத்தான்.

அதற்குப் பிறகு ரொனால்டோ போனை அடிக்கவில்லை.ரத்த அழுத்தம் தான் தேவையில்லாமல் ஏறும்.அவனுக்கு மனசு சரியில்லை.பிட்சாவை பக்கத்து கராஜ்காரனிடம் “கிருஸ்மஸ் கிவ்ட்”என கொடுத்து விட்டான்.வீட்டுக்கு அடித்து மனைவியையும்,மகனையும் வேலைத்தளத்திற்கு வர வேண்டாம் “என்று சொல்லி விட்டு பூட்டிக் கொண்டு வெளிக்கிட்டான்.

அடுத்த நாள் தவறை உணர்ந்து வீட்டிலேயிருந்து பேபிக்கு அடித்தான்.”குழப்பத்தில் என்னவோ பேசி விட்டேன்.மறந்து விடு!ஒரு கிழமை வக்கேசன் முடிய வேலைக்கு வா”என்று கூறினான். ஒரு கிழமை முடிய பேபி வேலைக்கு வந்தான்.ஆனால்,ரொனால்டோ சாதாரணமாக இல்லை.அவர்களுக்கிடையில் சுமுக நிலை நிலவவில்லை.வேலையில் சிரத்தில்லாமல் இருந்தான்.ஒபிசில் எறியிறதுக்கென இரண்டு ,மூன்று கதிரைகள் இருந்தன.அவற்றை “எடுத்து  வெளியில் போடு”என்று பேபியிடம் கூறினான்.பேபிக்கு கோபம் வந்து விட்டது.”நான் இங்கே மோட்டர் திருத்தத் தான் வந்தனனான்.உன்ர மகனைக் கூப்பிட்டு அதை எறியச் சொல்”என்று விட்டு வேலை இடத்திற்குப் போய் விட்டான்.புருசன் பொஞ்சாதிச் சண்டை போல திரும்ப பத்திக் கொண்டு விட்டது.

ஒவ்வொரு பேச்சும் பூதமாக பிறப்பெடுக்கிறது.ரொனால்டோ வெளிய வந்து “பேபி நான் மனக் குழப்பத்தில் இருக்கிறேன்.என் பேச்சை பெரிசாய் எடுக்காதே.நீ வேலையைச் செய்”என்று விட்டு திரும்பவும் ஒபிசிற்குள் புகுந்து விட்டான்.இருந்த வேலையை முடித்து விட்டு “இனி என்னத்தைச் செய்யிறது?”என்று வந்து கேட்டான்.அதில் கொளுவல் தன்மை இருந்தது.”இவ்வளவு தான் வேலை.போய்யிட்டு நாளைக்கு வா”என்றான்.குரலில் கோபம் சிறிது தொனித்தது.

பேபியும் மறுபேச்சு பேசாது சேர்ட்டை மாட்டிக் கொண்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்குப் போனான்.பொதுவாக வேலை செய்வதால் தோள்மாட்டிலே ஒரு வலி இருக்கிறது வழக்கம்.இன்று ஏற்பட்டதில்லை.அவன்”தோளிலே வலி”என்று அவசரப் பிரிவில் சேர்ந்தான்.அவனுக்கு ‘எக்ரே’என எல்லா வைத்திய பரிசோதனைகளும் நடந்தன.ரொனால்டோவிற்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில்   வைத்திய அறிக்கையை வாங்கிக் கொண்டான்.”ஒரு கிழமை ஓய்வில் இருக்க வேண்டும்”என வைத்தியர் எழுதிக் கொடுத்திருந்தார்.

வேலையில் விபத்தோ,நோவோ ஏற்பட்டால் வேலை வழங்குபவர்  வேலையாள் வர முடியாது நிற்கும் நாளுக்கும் சம்பளம் வழங்க வேண்டுமெனச் சட்ட விதிகள் இருந்தன.வீட்டுக்குப் போக முதல் ரொனால்டோவிற்கு போன் அடித்தான்.பேபி தோளில் ஏற்பட்ட வலியைக் கூறி ,ஆஸ்பத்திரியில் நடந்த பரிசோதனை விபரங்களையும் கூறி’ஒரு கிழமைக்கு வேலைக்குப் போக வேண்டாம் ‘என தெரிவித்தையும் கூறினான்.”வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பது உனக்குத் தெரியும் தானே?”என்று இயல்பாக சொல்வது போல சொன்னான்.ரொனால்டோவிற்கு மறுபடியும் கோபம் பொத்திக் கொண்டு வந்தது.

‘போனிலே எதையும் கதைக்க வேண்டாம்.நான் கொம்பன்சேசன் கந்தோருக்கு வைத்தியரின்  அறிக்கையை அனுப்பி விடுகிறேன்”என்று கூறி விட்டு   ‘ஃபக்ஸ்’  இலே உடனடியாக அனுப்பியும் விட்டான்.

பிரச்சனை விபரீதமாகி விட்டது.

ரொனால்டோவிற்கு தலையிடி வந்து விட்டது. இவனுக்கு என்ன பிடித்து விட்டது?சிறிய விசயத்தை பெரிசுப் படுத்திக் கொண்டு போறானே!,அலுப்பாகவும் இருந்தது.இனிமேல் அதிகமாக யாருடனும் நேருக்கமாய் பழகக்  கூடாது.இவ்வளவு காலமாகியும் கூட மனிசியோடு அளந்து பேசுற நாம் நண்பர்களுடன் தானே அதிகமாக பேசுகிறோம்.நட்பு என்பது ஓரே பட்ஜில் தானே இருக்க முடியுமா?.வெளிநாட்டில் எங்கே பட்ஜ் ஆட்கள் இருக்கினம்?,வேலைத்தளத்தில் இருகிறவயள் தானே இருக்கினம்.பேபி அடுத்த  பட்ஜில் இருப்பவன்.அது தான் இவனுக்கு சிறிய விசயமாக இருந்தது,அவனுக்கு பெரிய விசயமாகி ரோசத்தை கிளற வைத்து விட்டது.ரோசத்தை எல்லாம் அவர்களுடைய தமிழிழத்தை பெறுவதற்கல்லவா காட்ட  வேண்டும்.இங்கே வந்து காட்டுறானே!என்று கோபமும் வந்தது.

சிகரட்டை பத்தி சுகமாக இழுத்துப் புகையை விட்டுக் கொண்டு வக்கிலுக்கு போனை அடித்தான்.தலையிடி குறையவில்லை.இடித்துக் கொண்டே இருந்தது.ஆனால் வெளியில் சிறிய மரமொன்றில் ஏறுறது,இறங்கிறது,அங்கும்  இங்கும்  பார்த்து விட்டு நிலத்திலிருந்து எதையோ கையில் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடுற அணில் கண்ணில் பட்டது.எல்லா உயிர்களும் இந்த வயிற்றுக்குத் தானே அடித்துக் கொள்கின்றன.மனிதனுக்கு பேசுறதும் ,சிந்திக்கிறதும் ஏற்பட்டு விட்டதால் என்னென்ன‌ ஆட்டம் எல்லாம் போடுகிறான்.நானும் கூட அதில் ஒருத்தன் தான்.சிறிய சிரிப்பும் வந்தது.எத்தனை சுயநலம்,பணாத்தாசை,மனிசி,பிள்ளைகளின் பணத்தாசையும் சேர்த்துக் கொண்டு  வாழ்க்கையை வாழாமல்..சிகரட்டை ஊதி எறிகிறேன்.

பேசாமல் இந்த பேபியை கூட்டிக் கொண்டு போய் தண்ணிப் பார்டியை வைத்திருக்கலாம்.தன்னையே கடிந்து கொண்டான். முற்பிறப்பிலே செய்த ஏதோ ஒரு கர்மப்பலன் தான்  வஞ்சித்திருக்க வேண்டும்.எதுவரை போகிறது..?பார்ப்போமே!மனது சிறிது ஆறுதல்  பட்டது.வக்கிலிடம் விசயத்தைச் சொன்னான்.

“உன்ர ஆள் சிமார்ட்டாக நடந்திருக்கிறான்.நீ அவனைக் கூப்பிட்டு தயவாக கதைத்து ஒரு டீலுக்கு வரப்பார்.ஒரு கிழமைக்குப் பிறகு வேலைக்கு வா.சம்பளப் பணம் தாரேன் என்றெல்லாம் ஒப்புக் கொள்.பணம் எல்லாரையுமே மாயம் செய்யும்”என்று ஆலோசனை கூறினான்.

ஆனால்,ரொனால்டோவாவினால் சிவாஜியைப் போல மாறுப்பட்ட நடிப்பை உடனடியாக நடிக்க முடியவில்லை.இப்ப குதித்து ஓடி நின்று அணில் யோசிக்கிறது.அங்கும் இங்கும் மலங்கப் பார்ப்பது என நிற்கிறது.என்ன பிரச்சனை என ஆராய்ந்தான்.மனித அரவம்,பனிக்குளிர்…என்று எதாவது சிக்கல்களை எதிர் நோக்கிறதா?இதுவும் கூட சிக்கல்கள் மத்தியில் தானே வாழ்கிறது.இந்த அணில் இந்த நாட்டைச் சேர்ந்ததில்லை போலவே படுகிறது.ஒருமுறை பேபி கூட முதுகில் கோடு விழுந்த அணிலைக் காட்டி “இது எங்க நாட்டு அணில்,அதாவது ஆசிய அணில்,இந்த கோடு விழுந்திற்கு ஒரு கதை இருக்கிறது”என்று அளந்திருக்கிறான்.பேபியிட நினைப்பை துரத்த முடியாது.அவன் வேலைக்கு வரா விட்டாலும் கூட அவனுடைய அருவம் ஒன்று பக்கத்திலே நின்று தர்க்கித்து டெம்பரை ஏற்றத் தான் போகிறது..என்பது புரிந்து போயிற்று.

ஒபிசில் சிறிய அலுமாரியில் மறைத்து வைத்திருந்த விஸ்கியை எடுத்து தண்ணீர் கலக்காமல் சூடாகக் குடித்தான்.பேபியோடு இன்னொரு இந்தியனும் பகுதி நேரமாக வந்து போய்க் கொண்டிருக்கிறான்.அவனை  முழுநேரமாக வேலை செய்ய கேட்க வேண்டியது தான்.ஆனால் எவனும்  பேபியைப் போல வருவானா?இரண்டு மோட்டர்கள் திருத்த வேண்டி இருந்தன.அவற்றில் சிற்சில வேலைகளை செய்யச் சொல்லி விட்டு ஒபிசிற்குள் வந்தவன் ,நாளைக்கு மோட்டரில் கையை வைப்போம் என தீர்மானித்துக் கொண்டான்.இப்ப அந்த அணிலைக் காணவில்லை. கதிரையில் இருந்து சுற்றி விளையாடிக் கொண்டிருந்தவன்  ..தூங்கிப் போனான்.

ஸ்கிள் வேலையாட்கள் ஒவ்வொருவரும் வேலை செய்வதற்காக கருவிகளை வேலைத்தளத்திலிருந்து இரவலாகப் பெற மாட்டார்கள்.அவரவர் சிறிய பெட்டியில் அல்லது இங்கத்தைய கடைகளில் விற்கிற உருட்டுற, லாச்சிகளைக் கொண்ட அலுமாரி வண்டியிலே சொந்தமாக வாங்கி வைத்திருப்பார்கள்.வேலை மாறுகிற போது அவற்றை எடுத்துக் கொண்டே போவார்கள் .பேபியினுடைய கருவிப் பெட்டி  ரொனால்டோவின் வேலைத்தளத்தில் அகப்பட்டு விட்டது.அவன் போனை அடித்து சனிக்கிழமை என்ர மகன் நிற்பான் .நீ வந்து காலையிலே எடுத்துக் கொண்டு போ”என்று சொல்லவில்லை.

எதையும் முறையாய்ச் செய்தால் முகம் கொடுக்கலாம்.அதையே சொல்லாமல் செய்து விட்டாலோ அங்காங்கே நிலவிய  உறவுப் பாலங்கள் அறுந்தே போய்  விடுகின்றன.மற்றைய பெடியனிடம் “பேபியிட ஞாபகமாக இந்த பெட்டி இங்கே இருக்கிறது”என்றிருக்கிறான்.சுமார் ஐந்நூறு டொலர் பெறுமதியானது.திரும்ப இன்னொரு செட்டை வாங்க வேண்டியது தான்.என்ன, நான் ஓரேயடியாய் விலக முடிவெடுத்து விட்டேனா?பேபிக்கே தன் நினைப்பு ..’பிழையாக காலெடுத்து வைத்து விட்டேனா?’என்ற‌ தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.அடுத்தது என்ன?உணர்ச்சிவசப் பட்டதால் எதையுமே யோசிக்காமல் பலவீனப்பட்டு போனேனா?..எனவும் சிந்தித்தான்.

கொம்பன்சேசன்காரன் ரொனல்டோவிற்கு போன் அடித்து கதைத்தான்.ரொனால்டோவிற்கு கதைத்துப் பழக்கமில்லை.தப்பும் தவறுமாக கதைக்க தீர்ப்பு பேபியின் பக்கமாகி விட்டது.அவர்கள் வேலைத்தளத்திற்கும் வந்து பார்த்தார்கள்.விட்டு விட்டு வேலை செய்யும் கொம்பிரசரின் சத்தம் காதை கொண்டு போனது.”சத்தத்தை குறைக்க ஏதாச்சும் செய் “என்று வலியுறுத்தினார்கள்.பேபி காது பாதிக்கப்பட்டு விட்டது என்றால் மேலதிகமாக அதை குணப்படுத்துற செலவும் கொடுக்க வேண்டும்.எனவே அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தால் அவனால் கிளைம் பண்ண முடியாது.ஆனால் ரொனாடோவிற்கு  அப்படி நாலைந்து தேவையில்லா பெரிய செலவுகள்.

பிரச்சனை வராதவரையில் …ஒ.கே!தான்.வந்து விட்டால் தொல்லை லேசிலே விடாது. பேபியின் தோள்பாட்டு வலி மாறும் வரையில் அவன் தெரப்பிற்குப் போய் வரும் செலவை ஏற்பதாக கொம்பன்சேசன் பிரிவு அறிவித்தது.போய் வருவதற்கான டாக்சி செலவுகளையும் ஏற்பதாக…கூறியது.டாக்சிற்கான வவுச்சரையும் அனுப்பியது.அவன் வேலைக்கு போக முடியாத நாட்களுக்கான‌ ,மாசத்திற்கான வேலை நிவாரணப் பணத்தை கொடுப்பதற்கு அதற்குரிய காப்புறுதி நிறுவனமும் ஒப்புக் கொண்டது.தெரப்பி சிகிச்சைகள் சுமார் ஆறு மாசத்திற்கு இழுபடும்.பிறகு வேலைக்கு போகத் தொடங்கி விட்டால்..நிவாரணப் பணம் கொடுப்பதை நிறுத்தி விடுவார்கள்.வேலைக்குப் போகா விட்டால்..பத்து மாசம் வரையில் தொடர்ந்து கொடுப்பார்கள்.நல்ல நடைமுறை தான்.

ஆனால், அதிலேயும் மாநில அரசு பிரச்சனையை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.முந்தி என்றால்..வேலையில் இருப்பவருக்கு செய்யிற‌ வேலை பிடிக்கவில்லை ,வேறு  வேலை எடுக்கப் போகிறேன் என்றால் அல்லது வேலைப்பகுதி மூடு விழா கொண்டாடினால்..இந்தப் பணத்தைப் பெறலாம். அதற்காக வேலை செய்யிற போது இந்த காப்புறுதிப் பகுதி, சிறு தொகையை உங்க பணத்திலிருந்தும்  கழித்துக் கொண்டே வருவார்கள். நிவாரணப் பணத்தோடு கணிசமான பணம் முதலாளியும்  கொடுக்க வேண்டியிருக்கும் .இப்ப முதலாளிப் பகுதியினரின்  கடிதம் இருக்க‌  வேண்டும். தொழிலாளியின் உரிமையை எடுத்து விட்டார்கள். முதலாளி, வேலையில் தவறு விடுகிறான் என நிறுத்தி விட்டால், பிடிக்கா விட்டால் பொய்களை கூறி …கடிதத்தைக் கொடுக்க மாட்டார்கள்.உங்களிடமிருந்து கழிக்கப்பட்ட பணமும் கிடைக்கப்படாது போய் விடும். முந்தி இந்த விசாரணைகள் இல்லாமல் கடிதம்  கொடுத்தார்கள்.இப்ப முதலாளி விரும்பினால்..கடிதம் கொடுப்பார்கள்.அதாவது அவர்களுக்கு விருப்பம்,இரக்கம் ஏற்பட வேண்டும் .

தகுதி படைத்தவன்,தன் வேலை கிடைக்கவில்லை என்று சிறிய‌ வேலையில் புகுந்தால் வெளிய வர முடியாது.கொத்தடிமையாய் இழுபட வேண்டியிருக்கும்.மற்ற வேலை கிடைக்க முதல் சிற்சில வெளிகள் ஏற்படவே செய்யும்.அந்த நேரம் பணம் இல்லாமல் தவிக்க வேண்டி இருக்கும்.(கறுப்பர்களையும்,தேசியமக்களையும் பழி வாங்கத் தான் இப்படி மாற்றினார்களோ?என நினைக்க வேண்டியும் இருக்கிறது.அதனால் எல்லாருமே பாதிக்கப் படுகிறார்கள்.) நேர்மையான முதலாளி நேர்மையாக நடப்பான்.ஆனால் எல்லாரும் நேர்மையாகவா இருக்கிறார்கள்?.அரசாங்கம், தொழிலாளர்களின் பணத்தை தனது கஜானாவிற்கு எடுத்து விடும்.இது ,ஜனநாயக மீறல் தான்!.ஆனால்,அரசாங்கம் சட்டத்தை இயற்றி எந்த ஜனநாயக உரிமையும் உங்களிடமிருந்து எந்த நேரமும் பறித்துக் கொள்ள முடியும்.

வீட்டிலே, தம்பியுடன் விஸ்கியை குடித்துக் கொண்டிருந்த   பேபி”நான் இவனுக்கு நல்ல பாடம் படிப்பித்து விட்டேன்”என்று மயக்கத்தில் கூறினான்.தம்பிக்காரனும் ஸ்கிள் வேலையாள், சொந்தமாக தொழில் செய்கிறவனும் கூட!அவன் தன் வேலையாள் இப்படி செய்தால் எப்படி இருக்கும்?என்று எண்ணிப் பார்த்தான்.தலையை உதறிக் கொண்டான்.”நீ இழந்தது கொஞ்ச நஞ்சமில்லை என்பது உனக்கு தெரியுமா?”கேட்டான்.

“நான் ஸ்கிள்காரன்.வேற இடத்தில் வேலையை எடுக்க முடியும்”என்றான்.கர்வமும் மனிதனை அடிக்கடி ஆட்டிப்  படைக்கிறது.ஆறு ,ஏழு வருசம் போனால்..அவனும் ரொனால்டோவைப் போன்றவனாகி விடுவான் என்பதை மறந்தே விட்டானே.வயசில் செய்கிற போது உள்ள தகுதி,  வயசு போன பிறகு  புறக்கணிப்புக்குள்ளாகி விடுகிறது.முதலாளித்துவம் எல்லா அங்கங்களிலும் பரவியே கிடக்கிறது.

“நீயும் மனிசியைப் போல நீ செய்தது தான்  நியாயம்   என்று  கதைப்பாய்.இந்தப் பேச்சை விடுவோம்.ஏழாம் மனிதன் படம் பார்த்தாயா , எப்படி  இருக்கிறது?”என்று கேட்டான்.கதைத்துக் கொண்டிருந்தவனிடம் என்ன பதிலைக் காணோம்  என்று  பார்த்தான்.

பேபிக்கு ஆறாம் அறிவு கூட இல்லை.செட்டியில் இருந்தவன் ..அப்படியே தூங்கிக் கொண்டிருந்தான்.

balamuraly@sympatico.ca