சிறுகதை: மணல் வீடுகள்!

வாசிப்பும், யோசிப்பும் 147: எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூல் பதிவு பற்றி....என் ஆரம்ப காலத்துச்சிறுகதைகளிலொன்று ‘மணல் வீடுகள்’.  19.06.1977 வெளியான ஈழநாடு வாரமலரில் பிரசுரமான சிறுகதையிது. அப்பொழுது நான் யாழ் இந்துக்கல்லூரியில் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் (G.C.E – Advanced Leval) படித்துக்கொண்டிருந்தேன். ஈழநாடு வாரமலரில் அக்காலகட்டத்தில் வெளியான எனது நான்கு சிறுகதைகளில் ‘மணல் வீடுகள்’ சிறுகதையுமொன்று. தமிழக வெகுசன ஊடகங்களின் ஆதிக்கத்தில் மூழ்கிக் கிடந்த பருவத்தின் பாதிப்பை இச்சிறுகதையில் நீங்கள் அவதானிக்கலாம். அந்த வயதுக்குரிய உணர்வுக்கொந்தளிப்புகளை வெளிப்படுத்தும் சிறுகதை. மல்லிகையில் வெளியான ஈழநாடுச்சிறுகதைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரையில் செங்கை ஆழியான் அவர்கள் (முனைவர் க.குணராசா) ஈழநாடு பத்திரிகையின் ஏழாவது தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவராக என்னைக்குறிப்பிட்டு, இச்சிறுகதையினையும் குறிப்பிட்டிருப்பார். ஒரு பதிவுக்காக இச்சிறுகதையினை இங்கு பதிவு செய்கின்றேன்.


சிறுகதை: மணல் வீடுகள்! – வ.ந.கிரிதரன் –

1.

ஆபிஸிலிருந்து திரும்பிய நான் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைகின்றேன். தலைமயிர் காற்றில் குழம்பிப்போய் நிற்கிறது. ஒரே அலுப்பும், களைப்புமாயிருக்கிறது.

கையில் தேநீருடன் வந்த சஞ்சலா, அவள்தான் என் மனைவி, :”அடடா, முகமெல்லாம் இப்படி வேர்த்துப்போயிருக்கிறதே” என்றவள் அருகிலிருந்த ஸ்ரூலில் தேநீர் ‘டம்ளரை’ வைத்தவளாக தன் சேலைத்தலைப்பால் என் முகத்தைத் துடைத்து விட்டாள்.

அந்த நிமிடமே என்னிடமிருந்த அலுப்பும், களைப்பும் போனவிதத்தை எண்ண எனக்கே வியப்பாகத்தானிருக்கிறது.  ஒருவனுக்கு நல்லதொரு துணைவி மட்டும் அமைந்துவிடுவாளென்று சொன்னால் அதை விட வேறென்ன வேண்டும். என்னைப்பொறுத்தவரையில் அந்தக் கவலையே எனக்கில்லையல்லவா!

அவளை அப்படியே இறுகத்தழுவியவனாக , “இந்தப்பெண்களின் சொல்லிலும், செயலிலும் அப்படி என்னதான் பெரிய சக்தியிருக்கிறதோ தெரியவில்லை, ஆண்கள் அப்படியே மயங்கிப்போவதற்கு” என்றேன்.

அதற்கவள் “ஐயே போதுமே உங்கள் பேச்சு” என்று கேலியாகக் கூறியபடியே தேநீர் ‘டம்ளரை’ எடுத்து நீட்டினாள்.

தேநீரை அருந்தியபடியே வைத்த கண் வாங்காமல் அவளையே நோக்கினேன். சஞ்சலா உண்மையிலேயே அழகிதான்.

என் பார்வையின் வீச்சினைத்தாங்க முடியாதவளாக முகம் சிவந்த சஞ்சலா, பொய்க்கோபத்துடன் “என்ன இது கொஞ்சம் கூட ‘மேனர்ஸ்’ இல்லாமல்..: என்றாள்.

“நீ என்ன அந்நியப் பெண்ணா, சொந்த மனைவிதானே” என்றேன்.இந்தச்சமயத்தில் அறைக்குள்ளிருந்த குழந்தையின் அழுகுரல் கேட்கவே சஞ்சலா “அடடா குழந்தை விழித்துக்கொண்டுவிட்டான்” என்றபடியே அறைக்குள் ஓடினாள்.

அவளையே பார்த்துக்கொண்டிருந்த என் உள்ளத்தில் இளமைக்காலத்து நினைவுகள் மெல்லக்கிளர்தெழுந்தன. அவற்றை எண்ணும்போதே  வேடிக்கையாகத்தானிருக்கிறது.  வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் பருவமல்லவா.

வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது. ஒரு சமயத்தில் மிகவும் முக்கியமாகத்தோன்றும் ஒரு சம்பவம் இன்னொரு சமயத்தில் வெறும் அர்த்தமற்றதாகத்தோன்றுகிறது.  உண்மையிலேயே மனித மனமானது புதிய புதிய சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ளத்தக்கதொரு பச்சோந்தியே.

என் இளமைப்பருவத்து நினைவுகளை எண்ணும்போது இப்பொழுது அந்த நினைவுகளெல்லாம் அர்த்தமற்றவையாகத்தான் தோன்றுகின்றன.  அதிலும் சஞ்சலா என் அருகிலிருக்கும்பொழுதோ… அவையெல்லாம் வெறும் வேடிக்கைக்குரிய நினைவுகளாகத்தான் தோன்றுகின்றன.

2.

அப்பொழுது எனக்கு வயசு பதினேழு நடந்துக்கொண்டிருந்தது. இளமைத்துடிப்புகள் படரத்தொடங்கியிருந்த பராயம். எத்தனை எத்தனையோ விதமான இனிமையான கனவுகளில் மனது மூழ்கிவிடும் பருவம்.

அப்பொழுது எனக்கு இலக்கியத்தில் நல்ல ஈடுபாடு. கவிதைகள் எழுதுவதென்றால் , எனக்குப் பிடித்தமானதொரு பொழுதுபோக்கு அதுதான்.  அதிலும் பெண்களைப்பற்றிய கவிதைகள் எழுதுவதென்றால் எனக்குத் தண்ணி பட்ட பாடு. பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொருவிதக் கலையம்சம் மறைந்திருப்பதாகத்தோன்றும். ஒருத்தியின் நடை அழகென்றால் மற்றவளின் குரல் அழகாயிருக்கும்.  ஒருத்தியின் கண்கள் அழகாயிருக்குமென்றால் அடுத்தவளின் கூந்தல் அழகாயிருக்கும்.

அந்தச்சமயத்தில்தான் என் வாழ்க்கைப்பாதையில், வரண்டிருந்த என் வாழ்வுப்பாதையில், வளம் பெருக்க வந்த நதியாக அகிலா குறுக்கிட்டதாக எண்ணினேன்.

அகிலாவா ! எங்களூர்ப் பாடசாலைக்கு மாற்றலாகி வந்த புதிய தலைமை வாத்தியார் கந்தசாமிப்பிள்ளையின் ஏக புத்திரி.

பாவாடை, சட்டையுடன் , இரட்டைப்பின்னல்கள் மார்பில் புரள நடந்துவரும் அவள் அழகில் மயங்கி நின்ற வாலிபர்கள் பலர். இளைஞர்களின் இதயங்களைச்சின்னாபின்னப்படுத்தி விட்டு நடந்து செல்வதில் அவளிற்கிணை அவளேதான். அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அழகாயிருந்தாளோ அவ்வளவுக்குப் பெரும் நெருப்பாயுமிருந்தாள்.  யாருமே அவளை நெருங்க முடியாது. நெருங்கி வாங்கிக்கட்டியவர்கள் பல பேர்.

ஆனால்.,. ஊர் இளைஞர்களில் அதிர்ஷ்டக்காற்று என்னை நோக்கியே வீசியது. அகிலாவின் பார்வை என் பக்கமே சாய்ந்தது. இதற்கு முக்கிய காரணம் என் தங்கை ஆனந்தியின் உயிர்த்தோழியாக அவள் இருந்ததுதான்.

ஆனந்தியைச் சந்திப்பதற்காக அவள் அடிக்கடி எங்கள் வீடு வருவதுண்டு. ஆனால் நானோ அப்போது சரியான சங்கோஜப்பிராணியும் கூட. பெண்களுடன் கதைப்பதென்றாலே பாதி உயிர்போய்விடும். அகிலா வீட்டுக்கு வந்து விட்டாளென்றதுமே நான் வெளியே புறப்பட்டு விடுவேன்.

உள்ளூர நான் அவளை அப்போது விரும்பிக்கொண்டிருந்தேன். என்றாலும் வெளியில் காட்டிக்கொள்வதற்கு என் சுபாவம் ஒத்துழைப்பதில்லை. மனதிற்குள்ளேயே அவளை விரும்பி, அதைத்தெரியப்படுத்த முடியாமல் மறுகிக்கொண்டிருந்தேன்.

இந்தச்சமயத்தில் ஒருநாள்தான் அகிலாவைத்தனிமையிலே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பமொன்று வந்து வாய்த்தது.  அந்தச் சந்தர்ப்பமொன்றே என்னையும் அகிலாவையும் பிணைத்து வைக்கப்போதியதாகவிருந்தது.

அன்று அப்பா, அம்மாவுடன் ஆனந்தி ‘டவுனுக்கு’ப் போயிருந்தாள். ஆனந்தியைச்சந்திப்பதற்காக அகிலா அவ்வேளையில் வந்தாள்.

வந்தவளிடம் ‘ஆனந்தி வீட்டில் இல்லை, அப்பா , அம்மாவுடன் டவுனிற்குப் போயிருக்கிறா’ என்று மட்டும் கூறினேன்.  ஆனால்… இந்தச் சிறிய வாக்கியத்தை நான் கூறுவதற்குப் பட்டபாடு ஒன்றிருக்கிறதே.. கடவுளிற்குத்தான் வெளிச்சம்.

கதை கேட்டதுமே அவள் இதழ்களிலிருந்து கலகலவென்றொரு சிரிப்பொலிதான் தோன்றியது. அச்சிரிப்பினூடு அவள் கூறினாள்:

“மாதவன், ஏன் இப்படி பயந்து சாகின்றீர்கள்.  பெண்கள் என்றால் என்ன , பேய்களா? பிசாசுகளா? அவர்களும் மனிதர்கள்தானே.”

அவளது இந்த ஒரு சொல்லில் என் தயக்கம்  என்னை விட்டோடியது.  அதன் பிறகு அவள் என்னைக்காணும்போதெல்லாம் சிரிப்பாள்.  நானும் பதிலிற்குச்சிரிப்பேன். நாளடைவில்  நாங்களிருவருமே நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்.

ஒரு நாள் அவளைக்காணா விட்டால்கூட மனம் சோர்ந்து படுத்து விடும்.  அவள் குரலின் இனிமையைக் கேட்காவிட்டாலோ, மயக்கும் புன்னகையைப் பார்க்கா விட்டாலோ பொழுது போகாததாகவேயிருக்கும்.  நான் இந்த உலகில் பிறந்தது அவளை அடைவதற்காகவே, அவளும் என்னை அடைவதற்காகவே தோன்றியவள். … இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனமான கற்பனைகள்.

காணுங் கனவுகளுக்கோ பஞ்சமில்லை. கனவுகள் எல்லாவற்றிலுமே அவள்தானே காட்சியளித்தாள்.  தெய்வீகக் காதல் என்பதன் வரைவிலக்கணமே நாங்கள்தான் என்றெல்லாம் கூட எண்ணினேன்.

உண்மையில் அந்தப்பருவத்தில் அப்படிப்பட்டதொரு அனுபவமும் வேண்டித்தானேயிருக்கிறது. அகிலாவைக்காணும் முன்னர் சாதாரணமாகத்தோன்றிய உலகம் அவளைப்பார்த்தபின்னோ எத்தனை அழகுள்ளதாகத் தோன்ற ஆரம்பித்தது.  இதற்காகவேனும் அத்தகையதோர் அனுபவம்  வேண்டித்தானிருக்கிறது.

காதல் வானில் சிறகடித்துப்  பறந்துகொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில்  திருப்பமொன்று ஏற்பட்டது. திடீரென அவளது அப்பாவுக்கு  வேற்றூருக்கு மாற்றலாகி வந்தது.

இதனைக்கேள்விப்பட்டதுமே நாங்களிருவருமே இடிந்து போனோம்.  எனக்கு வாழ்க்கையே போர்க்களம் போன்று தோன்றியது.  சாப்பிடக்கூடப் பிடிப்பதில்லை.  எந்நேரமும் பைத்தியம் பிடித்தவனைப் போன்ற நிலையிலேயேயிருந்தேன்.  நான் அவளைப்பிரியப்போகின்றெனே என்ற நினைவு என் னை நெருப்பாகச்சுட்டது.

கடைசியில் அவள் புறப்படும் நாளும் வந்தது.  போகும் போது அவள் கூறிய வார்த்தைகள்……………………

“மாதவன், என்னை மறந்து விட மாட்டீர்களே… உங்கள் ஒருவரைத்தவிர வேறு ஒருவரைக்கூட என் இதயம் ஏற்காது.  உங்களிற்காக எங்கிருந்தாலும் காத்து நிற்பேன். “

அவள் போனபிறகு  எனக்கு வாழ்க்கையே அர்த்தமற்றதாகத் தோன்றியது. தற்கொலை செய்வோமா என்று கூட எண்ணினேன்றால்…

கொஞ்ச நாள்கள் அவளது கடிதங்கள் வந்து கொண்டிருந்தன.  கொஞ்சநாட்கள்தாம் அதன்பிறகு  கடிதங்களின் வருகையும் நின்றது.

நானும் மெல்ல மெல்ல அவளை மறக்கலானேன்.  மனித மனம்தான் ஒரு பச்சோந்தியாயிற்றே.

என் வாழ்க்கைப்பாதையிலும் புதியதோர் மாற்றம் தோன்றியது.  படிப்பு முடிந்து வேலை செய்யத்தொடங்கிய சமயத்தில்.

என் வாழ்வில் சஞ்சலா மனைவியாகப்புகுந்தாள்.  இன்று சஞ்சலா இல்லையென்றால் நானில்லை என்ற அளவுக்கு அவளுடன் பிணைபட்டு விட்டேன்
அவளுக்கு நான் எனக்கு அவள் என்று ஆகிவிட்ட நிலையில்…

பழைய நினைவுகளை எண்ணும்போது அவையெல்லாம் வெறும் விளையாட்டுத்தனமான செயல்களாகத்தாம் படுகின்றன.

குழந்தைகள் மணல் வீடுகள் கட்டி விளையாடுகின்றார்களல்லவா? அவ்வீடுகள் உடைந்து விடும்போது  மனது வருந்தத்தான் செய்கிறார்கள்.  அந்த வருத்தம் நிரந்தர வருத்தமா என்ன? அந்த விநாடியே அந்த நினைவும் கலைந்து விடுகிறது. இதுபோல்தான் இளம் பருவத்தில் தோன்றும் காதலுணர்வுகளும்… அந்த மணல் வீடுகளை மனதும் உண்மையான கல் வீடுகளாக எண்ணி மயங்கி விடுகிறது.

“என்ன பலமான சிந்தனை?’

சஞ்சலாவின் குரல் கேட்கவே நினைவுகளிலிருந்து திரும்பியவனாக அவளை நோக்குகின்றேன். அவளை வாரியணைத்துக்கொள்கிறேன்.  அந்த அணைப்பில் வாழ்வின் பூரணத்துவமே அடங்கி விட்ட பெருமையில் நான் பூரித்துப்போகின்றேன்.

[ யாவும் கற்பனை ]

ஈழநாடு வாரமலர் 19.06.1977