சிறுகதை: முகவரி தொலைத்த முகம் ..!

- இணுவை சக்திதாசன்,  டென்மார்க் -தூக்கத்திலிருந்து விழித்த … மீனா அதிர்ந்துபோனாள். ! கலைந்து  போய்கிடந்த … அவளது சேலைத்தலைப்பினூடாக … தன்   மார்பகங்களை ரசித்தபடி மேயும். காமக்கண்களை கண்டவுடனேயே அவளது நித்திரை பாதியிலேயே பறந்து போனது. பக்கத்தில் கிடந்த தன் மகன் செவ்வேளைப் பார்த்தாள். அவனையும் காணவில்லை என்றவுடன், ‘திக்’ கென்றது அவளது நெஞ்சு. காயங்களுடன் … முனகிக்கொண்டிருக்கும் ஒரு சிலரைத் தவிர, மிகுதிப்பேர் நல்ல நித்திரை என்பதற்கு அந்த மண்டபத்தில் போட்டிபோட்டு கேட்கும். குறட்டைச்சத்தங்கள் … சாட்சியாக இருந்தது. மீனா படுக்கையை விட்டெழுந்து . . தன் மகனைத் தேடி வெளியே ஓடினாள். வழமையாகவே … அடிக்கடி அவன் போயிருக்கும் இடம்தான் இப்பவும் அவன் போயிருந்தது.  அந்த அகதிமுகாமின் பின்பக்கத்தின் முட்கம்பி வேலியருகில் ஏதோ .. பறிகொடுத்தவன் போல குந்தியிருந்ததை கண்ட மீனா துடித்தே போனாள். முட்கம்பி வேலியையே .. வெறித்து பார்த்துக்கொண்டிருந்த, செவ்வேளின் கன்னம் இரண்டிலும் அடிக்கடி வழிந்தோடி துடைப்பாரின்றி .. காய்ந்துவிட்ட கண்ணீர் சுவடுகள்.அவனின் சோகத்தை புடம்போட்டு காட்டியது.!

யார் மீது இவன் கோபம்? தாய் மீதா .. தன் மீதா ? இல்லை தந்தை மீதா ….?  இல்லை இந்த சமூகத்தின் மீதா ? எதனையோ பறிகொடுத்தவன் போல .. எப்ப பார்த்தாலும் யாருடனும் பேசாமல் எங்கயேனும் ஒரு மூலையில் தனிமையில் போய் இருப்பது செவ்வேளின் வழக்கமாகிவிட்டது.

அடிக்கடி இவன் தாய் மீனா இவனைத் தேடியரவணைத்து பாசத்தைப் பிசைந்து ஊத்துவாள். 

செவ்வேள்தானே மீனாவுக்கு எல்லாமே …

அந்த முகாமில் அன்றன்றாடு கிடைக்கின்ற சாப்பாடுகளில் தனக்கு போதுமோ .. இல்லையோ… என்பதற்கு மேலாய் செவ்வேளுக்கு வயிறாற ஊட்டிவிட அவள் தவறுவதில்லை. ஆனாலும், இந்த முகாமென்ற பெயரில் முட்கம்பிகளுக்குள் …. வந்த பிறகு செவ்வேள் தாயின் சொல்லை பெரிதாக மதிப்பதில்லை, இது தாய் மீனாவுக்கு பெரும் வருத்தமாகத்தானிருந்தது. ஆனால் செவ்வேள் செவிடன் காதில் ஊதிய சங்காக .. எதையுமே செவிமடுக்காதவானாக .. தன்பாட்டிலே விலகியேயிருந்தான். தன்னோட்டப் பிள்ளைகளுடனாவது ஓடியாடி … விழையாடாமல் செவ்வேள் தனிமையாக இருப்பது கண்டு தாய் மீனா .. சரியாக கவலைப்பட்டாலும்  அந்த, கவலையையே .. சொல்லியாறக் கூட யாருமற்றவளாக …. ‘யாரை நம்புவது, யாரை நம்பாமல் விடுவதென்று தெரியாமல்’ அன்னிய கண்களுக்கு மத்தியில் வாழ … நிற்பந்திக்க பட்டிருக்கும் தன்  நரக… வாழ்வை எண்ணியெண்ணி ….  தினம்,தினம் தன் மனதுக்குள் அழுது தீர்ப்பாள்.’

‘ என் தந்தை வருவார்!, வருவாரென்று அம்மா ! சொன்னாலும் எட்டு வருடங்களாகியும் ஏன் இன்னமும் என்னை வந்து பார்க்கவில்லை அப்படியானால் அம்மா ! எதையோ என்னிடம்; ஒழிக்கிறாவா ? நான் யார்? தமிழனா ?  அல்லது சிங்களவனா ? என செவ்வேள் தனக்குள்ளே பல கேள்விகளுக்கு விடை தெரியாதவனாக… மனதுக்குள் குழம்பியவனாக தனிமையே கெதியென கிடந்தான். ‘
‘செவ்வேளுக்கு வயது எட்டுத்தானிருக்கும். தந்தை யாரென்று இன்னமும் அவனுக்கு தெரியாது. அவர் வருவாரென்ற நம்பிக்கையில் தானிருப்பதைவிட, தன் மகனையும் நம்பவைத்து கொண்டிருக்கின்றாள் செவ்வேளின் தாய் மீனா!

‘ஆனாலும் இந்த நிலையில் கூட வந்துபார்க்காத தந்தை எனி வந்தும் பிரியோசனமில்லை என்பதுதான் செவ்வேளின் வாதம்.!’

‘ வன்னிக்காட்டில் போர் உக்கிரமடைந்த நிலையில்,  அதற்குள் ….. மனைவி, பிள்ளை சிக்குண்டு தவிப்பார்களே அவர்கள் உயிருடனிருக்கிறார்களா?  இல்லையா?  என அறிய அக்கறைப்படாத ‘புருசன்’ … இல்லை ஒரு மனுசன் …                          எனி வந்துதானென்ன வராமல் விட்டால்தானென்ன ?    
                                      
எத்தனை வகைத்துன்பங்கள் அனுபவிக்க வெண்டுமோ …! அத்தனையும் அனுபவித்து, ‘மறுபிறவி எடுத்து வந்தது போல வந்துள்ள எம்மைப் பற்றி அக்கறைப்படாதவரைப்பற்றி … தாய் மீனா பேச்செடுத்த போதெல்லாம் செவ்வேளுக்கு கோபம் வருவதில் ஞாயமில்லாமலுமில்லை.’ ஆனாலும், தாய் மீனா குறுக்கிட்டு தன் ஞாயத்தை ஞாயப்படுத்தினாள்.

‘சும்மா வாயில் வந்தபடி கதைக்கக்கூடாது கண்டியோ! எங்களைப்போல …  ‘அவரும்’ கண் காணாத தேசத்தில் என்னென்ன பிரச்சனைகளோடு இருக்கிறாரோ… ! ‘நாங்கள் அவரைத் தேடிப் பார்த்தோமா ?     என்று, தாய் மீனாவும் கோபமாக முடிக்க முன்னம்  தேடிப் பார்ப்பதற்கு அவருடைய ‘அட்றஸ்’ ‘ரெலிபொன் நம்பர்’ ஏதாவது இருந்தால்தானே தேடிப்பார்க்கலாம். என செவ்வேள் கோபமாக நிற்பதைக் கண்டு, வயதுக்கு மிஞ்சிய கெட்டித்தனம் தன் பிள்ளையிடம் இருப்பதையுணர்நத மீனா மனதுக்குள் பெருமிதங்கொண்டவளாய் தான் உடுத்திருந்த கிளிந்த ….. சேலைத்தலைப்பில் முடிந்து வைத்திருந்த … கசங்கிய ஒரு கடதாசியை எடுத்து செவ்வேளிடம் நீட்டி  இதிலேதான் அவர் தந்திட்டுபோன விலாசமும், தொலைபேசி இலக்கமும் இருக்குது’  என்றாள் மீனா.!

‘கடந்த எட்டு வருடங்களுக்கு முன் இலங்கையில் இடம்பெற்ற சமாதான …. ஓப்பந்தங்களை காரணம் காட்டி ‘ வெளிநாடுகளிலிருந்து பெருவாரியான புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வந்து போய்க்கொண்டிருந்த நேரம்தான் டென்மார்க்கிலிருந்து வந்த ஐனகன் என்ற வாலிபனை …. மீனா தற்செயலாக சந்திக்க நேர்ந்தது.

ஐனகனுக்கு சொந்தமென்று அங்கு ‘கிளிநொச்சியில்’ யாரும் இருக்கவில்லை அவனுடைய சொந்தமெல்லாம் … யாழ்ப்பாணத்தில் தான்.  சும்மா ஊர்பார்க்க வென்று வந்த ஐனகன்  மீனா இருந்த வீட்டுக்கு அருகிலுள்ள தெய்வேந்திரமண்ணை வீட்டில் தான் வந்து தங்கினான். ‘தெய்வேந்திரம் அண்ணையின் வீடும் பெரிய வீடு. ‘ அந்த ஊருக்கு யார் புதுசாக வந்தாலும் வரவேற்பதில் தெய்வேந்திரமண்ணைக்கு நிகர் யாருமேயில்லை. ‘பிரதியுபகாரம் எதிர்பாராமல் பழகும் மனுசன் அவர் ஆனாலும், அவருக்கு பிள்ளைகளில்லை’

‘நல்லவர்களுக்குத்தான் ஆண்டவன் குறைகளையும் அதிகம் கொடுத்து  சோதித்தும் விடுகிறான்.’

‘ ஐனகன் பார்ப்பதற்கு எடுப்பான தோற்றம் கூர்மையான கண்கள் … வசீகரப்பார்வை … என்பதற்கும் மேலாக ….. மனிதாபிமானம் கொண்டவன் என்பதற்கு,  அவன் அந்த ஊர் மக்களோடு பழகியவிதம்         வெளிநாட்டிலிருந்து வந்தவர்களோடு …. ஒப்பிடும் போது அவர்களிலிருந்து ஐனகன் பலபடி உயர்ந்தே … மீனாவின் பார்வைக்கு தென்பட்டான்.

ஏழையெழிய மக்களோடு அவன் பழகிய விதம், அவர்களுக்கு  செய்த உதவிகள்.  தொழில்கள் தெரிந்தும் சிலர் – அதைச் செய்ய பொருளாதார வசதிகளற்று இருந்தவர்களுக்கு தன் சொந்த பணத்தில் பொருளாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, சிறுசிறு கைத்தொழில்களை உருவாக்கி கொடுத்து, அதனை எப்படி நடாத்துவது போன்ற இலவச ஆலோசனைகள் வழங்கி…..  அதனூடாக …. வேலையில்லாத சிலருக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கி கொடுத்து ஒரு சமூதாயம் செய்ய வேண்டிய வேலையை தனியொருமனிதனாக ஐனகன் செய்துகொண்டிருந்தான் .

‘அந்த ஊரே அவனை பெருமிதமாக பார்த்தது.’

அதைச் செய்கிறன், இதைச் செய்கிறனென்று வெளிநாடுகளில பணத்தை சேர்த்துகொண்டு … இங்கு வந்து எதையுமே செய்யாமல் திரியும் சுயநல வாதிகள் மத்தியில் ….  ‘ஐனகன் தனது சொந்தப்பணத்தில் செய்த தர்ம காரியங்கள் … அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த மீனா மனதிலும் … ஐனகன் சிம்மாசனம் போட்டு உட்கார காரணமாகிவிட்டது. 

அடிக்கடி … ஐனகனின் கண்ணிடுக்கினுள் தடக்கி .. விழுந்தாள் மீனா!

இது மீனாவுக்கே .. ஆச்சரியமாக இருந்தது !  எத்தனையோ … இளைஞர்கள் மீனாவுக்கு காதல் கடிதம் கொடுத்தும் அதை அலட்சியமாகவே … தூக்கியெறிந்த மீனாவுக்கு  தனக்கு ஐனகன்மீது ஏற்பட்டது காதலா…!  நம்பமுடியாமலிருந்தது அவளுக்கு,   ஆனாலும் ஐனகனை அடிக்கடி பார்கவேணும் பொலிருந்தது மீனாவுக்கு.

காதலென்பது சொல்லிப்போட்டு வருவதில்லை வரவேண்டிய நேரத்தில் வந்தேதீரும் பதினெட்டு வயதை தொட்டுவிட்ட மீனா … மிகவும் இயற்கையிலேயே அழகானவள்.  தன்னை ஒரு நாளும் செயற்கையழகுபடுத்த விருப்புவதே இல்லை. வட்டவிழி, தெத்திப்பல்லு,.. சுருள் கேசம், பொதுநிறமென … அழகானவளாக ; இருந்தாலும் …. நேரத்துக்கொரு ஆடை, ஆடைக்கேற்ற செருப்பு, என்று தன்னை அலங்கரித்துக்கொள்பவளுமல்ல . அன்றன்றாடு சாப்பாட்டுக்கே .. கஸ்ரப்பட்டுக் கொன்டிருப்பவள்தான் மீனா! இருந்தாலும் ஆடம்பரத்தை அவள் அதிகம் விரும்புவதுமில்லை. சிறு வயதிலேயே தன் தந்தையையும் தாயையும் இழந்துவிட்ட  மீனா தன் பாட்டியாருடனேயே … வளர்ந்து வருகிறாள். சிறு வயதிலிருந்தே …வறுமை,…..சோகம்,……விரக்தி…… இதன் காரணமாகவோ என்னமோ ..        இவளுக்கு யாருடனும் அதிகம் பேசப்பிடிக்காது.  ஏனோ …தானோவென’ பாட்டியுடன் … ஒரு ‘கொட்டில்’ வீட்டினில் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தவளுக்கு ஐனகனின் சந்திப்பு ஏதோ தன் வாழ்க்கைக்கு புது அர்த்தத்தை சொல்லுவது போல இருந்தது.

ஆண்களின் மனதில் காதல் மலர்ந்துவிட்டால் அதை, உரிய பெண்ணிடம் சொல்வதற்கு முன்னம் தம் நண்பர்கள் எல்லாருக்கும் சொல்லிவிடுவார்கள் அனால் பெண்களின் மனதினில் காதல் அரும்பிவிட்டால் அதை யாருக்கும் சொல்லாமல் மனதினுள் இரகசியமாகவே பூட்டி வைத்துவிடுவார்கள்  – ஆனாலும் உரியவரிடம் சொல்லுவதற்கு துடியாய் துடிப்பார்கள்.!

தன் காதலை ஐனகனிடம் சொல்லவேண்டுமென்று அவளிதயம் துடியாய் துடித்கொண்டிருந்தது.

‘பழம் நழுவி பாலினுள் விழுந்தது போல…’ யாரைச்சந்திக்க வேண்டுமென மீனா! நினைத்து, நினைத்து கற்பனைக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தாளோ… அவனே தன் வீடு நோக்கி நடந்து வந்து கொண்டிருப்பதை   படலையடியில் நின்ற மீனா கண்டவுடன் கையுமோடாமல், காலுமோடாமல்… பதைபதைத்துக் கொண்டு தன் கொட்டில் வீட்டுக்குள் ஓடி மறைந்து பத்தி மறைவில் நின்றுகொண்டு ஐனகன் வீதியால் செல்லுமழகை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றாள்.! தன் வீட்டு படலையை கடக்கும் போது அவனை முழுமையாக பார்த்துவிடவேண்டுமென இருந்த மீனாவுக்கு ஓர் இன்ப அதிச்சியாக போய்விட்டது. மீனா வீட்டு படலையடிக்கு வந்த ஐனகனின் கால்கள் திடீரென்று மீனா வீட்டுப்பக்கம் திரும்பி அவன் மீனா விட்டுக்குள் வந்துகொண்டிருந்தான்.

மீனாவுக்கு என்ன கதைப்பதென்று தெரியாமல் கையிரண்டும் நடுங்கியது.

பாட் …டி , பா.. ட் டி….. என்று அழைத்த …. வார்த்தைகளும் நடுங்கியது.

பாட்டி நிற்கிறாவா ? என ஐனகன் பதட்டமேதுமில்லாமல் கேட்க …

ஓமோம் வாங்க உள்ளே … யென அழைத்தபடி …

அவனை இருக்க சொல்லுவதற்கு ஒரு கதிரை கூட இல்லையே … என்று மனதுக்குள் வெட்க்கப்படபடி … தான் படுக்கும் பாயை அவசரமாக விரித்து அதற்குள் இருந்த தலையணையை தூக்கி ஒரு மூலையில் வைத்து விட்டு அதில் இருக்கம்படி சொல்வதற்குள் ‘ கொட்டில் வீட்டுக்குள் நுழைந்த ஐனகன் எதிர்பாரத விதமாக அவனது தலை வாசல்படியுடன் அடியுண்டதில் ஐனகனின் நெற்றியில் மெல்லிதாக வெடித்துவிட்டது.

துடிதுடித்தே போனாள் மீனா !

உடனே தன்பாவாடையின் தலைப்பை கிளித்து ஐனகனின் தலையில் கட்டுப்போடடுக்கொண்டே ….’ சொறி,….சொறி …. என பலதடவை சொல்லியிருப்பாள் !’

சீ … பரவாயில்லை என்று ஐனகன் சொல்லியும் … மீனாவின் கண்களில் பனித்திட்ட கண்ணீர்த் துளிகளை பார்த்தவுடன் ஐனகனுக்கு என்னவோ போலிருந்தது.

எடே…  என் மேலே … இப்படியொரு அன்பு வைத்த பெண்ணை இப்பதான் பார்க்கிறேன்.! தன் நெற்றியில் விழுந்த அடி … அடிக்கடி விழுந்தாலென்ன என்பது போலிருந்தது ஐனகனுக்கு!

‘என்ன தம்பி வாசற்படி அடித்தட்டுதா ? உங்களுக்கு பழக்கமில்லைத்தானே … இஞ்ச உள்ளுக்க வரேக்க குனிந்துகொண்டுதான் வரவேணும் தம்பி என்று சொல்லிக்கொண்டு பாட்டி தாவரத்தில இருந்து உள்ளுக்குள்ள வந்து நிலத்தில அமர்ந்தார்.

‘அது பரவாயில்லைப் பாட்டி ! நான் வெளிநாட்டில இருந்து வந்தனான.  உந்த முன் வீட்டிலதான் வந்து நிற்கிறன்;  உங்களைப்பற்றியும் தெய்வேந்திரமண்ணை சொன்னவர். அப்ப என்னால முடிந்த உதவிகளை கஸ்ரப்ட்ட சிலபேருக்கு செய்கிறன் அதுதான் உங்களுக்கும் கொஞ்ச காசு கொடுப்பமென்று வந்தனான்’ என்று சொல்லியவாறு  தன் பொக்கேற்றிலிருந்து எடுத்து ஒரு கட்டு தாள்களை பாட்டி கையுக்குள் திணித்தான் ஐனகன்!

‘யார் பெத்த பிள்ளையோ !  நீ மகராசனாக இருக்க வேணும்’ என்று  பாட்டி சொல்லி முடிக்கமுன்னம் …. தேத்தண்ணியுடன் வந்து நின்றாள் மீனா. என்ன பிள்ளை சீனி இல்லையென்றனி வெறுந்தண்ணிய கொண்டு வந்தனி தம்பிக்கு.? என்று பாட்டி கேழ்வியை துலாவ … இல்லைப்பாட்டி சும்மாயிருங்கோ   பூமணியக்காவிட்ட வாங்கினனான். என்று மீனா முடிக்கமுன்னம்  ‘ஏன் மீனா ?    அப்படி கட்டாயம் தேத்தண்ணி தரவேணுமோ’ என ஐனகன் மீனாவைப் பார்க்க இருவர் கண்களும் வார்த்தைகளின்றி பேசிக்கொண்டன அந்தப் பார்வையில் ….பாட்டிக்கும் தெரியாமல் ஆயிரம் அர்த்தங்கள் பரிமாறப்பட்டன. பாட்டியிடமும் … மீனா விடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான் ஐனகன்.

‘எனி எப்ப வருவிங்கள் இந்தப்பக்கம் ?’ என … வார்த்தையாலும்…. விழியினாலும் கேழ்வி தொடுத்தாள் மீனா. புன்சிரிப்போடு விடைபெற்ற ஐனகனுக்கு ‘நாளைக்கு … பின்னேரம் வாங்கவன் பனங்காய் பணியாரம் சுட்டுவைக்கிறே’ னென்று மீனா சொல்ல  ‘என்ன விசேசம் நாளைக்கு?’ என்று ஐனகன் கேட்டுவிட்டான்.

‘ஓன்றுமில்லை சும்மாதான் வாங்கோ … ‘என்று மீனா சொல்ல

‘பார்ப்போம் … நேரமிருந்தாலென …. ‘ கொஞ்சம் மவுசு காட்டி வெளிக்கிட்டான் ஐனகன் .

‘உள்ளிருந்து ஒரு குரல் கட்டாயம் வாங்க தம்பி நாளைக்கு என்ர பேத்தியின்ர ‘பேத்டே’ அதுதான் ஆசையாய் உங்களை கூப்பட்டிருக்கிறாள் . கட்டாயம் வாங்க!’ என்றாள் பாட்டி.

எங்கயடா சந்தர்பம் வருமென்று பார்த்துக்கொண்டீருந்த ஐனகனுக்கு சொல்லவும் வேணுமா ?  ‘சாறி.. பஞ்சாபி… சட்டைகளென          விதம் விதமான …உடுப்புக்களென பெண்களுக்கு தேவையான சாமான்களோடு … மறுநாள் மாலை ஒரு ஆட்டோவில் மீனா வீட்டு வாசலில் வந்திறங்கினான் ஐனகன்.

இறக்கை கட்டி பறந்தாள் மீனா!

ஐனகனின் பேச்சு, பார்வை எல்லாமே புதுசாகத்தானிருந்தது மீனாவுக்கு … புதிராகவுந்தான்….

நாட்கள் நகர்ந்தன …. 

கொட்டில் வீடு ஒரே அமர்களமாகத்தானிருந்தது.

ஐனகனின் வார்த்தைகள் யாவற்றையும் மீனா தன் நம்பிக்கைப் பொட்டகத்தினுள் வாங்கி,வாங்கி …. பொத்தி வைத்துக்கொண்டாள். காலங்கள் உறுண்டு ஐனகனின் பயணமும் … நாட்களாகி … மணித்துளிக்குள் வந்து நின்ற போதுதான் மீனா மீண்டும் தரைக்கு வந்து நின்றவளாக …..பிதுங்க , பிதுங்க முழித்தாள்.! ஐனகனின் பிரிவைத் தாங்க முடியாதவளாக அவள் விம்மத் தொடங்கினாள்.
இந்த ஓரிரு மாத … சந்தோசகக் களிப்பினில் ….  மீனாவின் வயிற்றிலும் …. ஒரு சந்தோசக்களை ஐனகனின் எச்சமாய் உருவாகிவிட்டது. மீனா பேசுவதற்கு வார்த்தைகள் வராதளவிற்கு …..  நம்பிக்கை மாலைகளை மீனாவின் காது நிறையப் போட்டுக்கொண்டிருந்தான் ஐனகன்  அவனது பேச்சில் மயங்கி …. பேசும் வார்த்தையற்று நின்ற மீனாவின் … இரு கரங்களுக்கும் ஒரு கட்டு பணத்தை திணித்து வைத்தான். இப்போ, வாய் விட்டு கதறினாள் மீனா…  எனக்கு பணம் வேண்டாம் நீங்கள் தான் வேணும்.! ‘பதிலுக்கு அவளின் உதட்டையிழுத்து ஒரு முத்தத்தை கொடுத்தபடி … ‘ எடியே…. அசடு நான் வரும்வரையில் உம்முடைய செலவுக்குத்தான் இந்த காசு. நான் போனவுடனே முதல் வேலையாக உம்மை கூப்பிடுகிற அலுவல்தான் பார்க்க போறன்…. அப்படி பிந்துமென்றால் வெளிநாடே வேண்டாமென்றிட்டு இஞ்ச வந்து உம்மோடுதான்; இருப்பனென்று ……  அள்ளி வீசிய உறுதி மொழிகளுடன்  ஐனகன் விடைபெற்ற காட்சிதான் இன்னும் மினாவின் கண்களில் காட்சிகளாய் விரிந்துகொண்டிருந்தது.

தாயிடமிருந்த விலாசத்தையும் ரெலிபோன் நம்பரையும் வாங்கிய செவ்வேள். கோபத்துடனும், ஆத்திரத்துடனும். மீண்டும் விறுக்,விறுக்கென்று நடந்தான்.

‘பாவம் அவனால் அந்த முட்கம்பி வேலி வரைதான் போக முடிந்தது. ‘ விரக்தியுடன் அந்த முட்கம்பி வேலியருகில் குந்திய செவ்வேள் முட்கம்பி வேலியையே பார்த்தபடி பல மணி நேரங்கள் அதில் இருந்திருப்பான். தூரத்தில் ஒரு வெளிக்காணிக்குள் ‘புட்போல்’ விழையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் பந்து உயர்த்தி அடித்ததில் அது முட்கம்பி வேலிக்குள் வந்து விழுந்தது. அதை கலைத்துக்கொண்டு ஓடி வந்த சிறுவர்கள் உள்ளே … வரமுடியாததால் .. தங்களுக்குள் சிங்களப் பாசையில் ஏதோ … குசுகுசுத்துக்கொண்டார்கள்.  செவ்வேளுக்கு எதுவுமே … புரியவில்லைத்தான் ஆனாலும்…  இந்தப்பந்தை எடுப்பதைப்பற்றித்தான் கதைக்கிறார்கள் என ஊகித்தவனாய் அந்த பந்தை எடுத்து…அவர்கள் பக்கமாக சுழட்டி எறிந்தான் செவ்வேள்.   பந்து திரும்பி வந்த சந்தோசத்தில் பந்தையெடுத்துக்கொண்டு ஓடிய ஒருவனுக்கு பின்னால் மற்ற சிறுவர்கள் எல்லாம் ஓட …   ஒருவன் மட்டும் தன்னை நோக்கி வந்து உனக்கு சிங்களம் தெரியுமா ? என கேட்க ‘ இல்லையென்று தலையாட்டிய செவ்வேளைப்பார்த்து ‘ நன்றி யென தமிழில் சொல்லியவாறு —-  ‘ என் பெயர் ‘காமினி’  நான் தமிழும் பேசுவன். உனக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் சொல்லு என்னால் முடிந்தளவு உதவி செய்கிறனெ’ன்று காமினி சொல்லிவிட்டு நகர்ந்தான்.

எதுவுமே … பேசாமல் காமினியையே பார்த்துக்கொண்டிருந்த செவ்வேள். துரத்துக்கு சென்றும் திரும்பி,திரும்பி செவ்வேளை பார்த்துக்கொண்டு சென்ற காமினியை … திடீரென்று கைகாட்டியழைத்தான் செவ்வேள். செவ்வேளின் கைகாட்டலைக் கண்டதும் போன வேகத்திலிலும் பார்க்க வேகமாக .. மீண்டும் முட்கம்பி வேலியை நோக்கி ஓடி வந்தான் காமினி. எனக்கொரு… உதவி செய்வாயா? எனக் கேட்ட செவ்வெளைப்பார்த்து ….  என்ன என்பது போல காமினி பார்த்துக்கொண்டிருக்க ….  ‘என்னுடைய அப்பாவிற்கு … நாங்கள் இஞ்சை இருக்கிறது தெரியாது!      அவர் இந்த நாட்டிலேயும் இல்லை. அவர் வெளிநாட்டில …’ டென்மார்க்கில’ தான் இருக்கிறார்! என்னட்டை காசும் ஒரு சதமுமில்லை,     நான் அவருடன் ஒருக்கா ரெலிபொனில கதைக்க வேணும். உம்மால எனக்கு…  இந்த உதவியை செய்ய முடியுமா ? எனக் கேட்ட செவ்வேளைப்பார்த்து, கவலைப்படாதே …. நாளைக்கு இதே நேரத்துக்கு ரெலிபோனோடு வர முயற்சிக்கிறன் என்று சொல்லிய … காமினியை பார்த்து கையெடுத்து கும்பிட்டான் செவ்வேள்.!

மறுநாள் மாலை செவ்வேள் முட்கம்பி வேலியருகில் வருவதற்கு முன்பே …. ‘காமினி’ ஒரு கைத்தொலைபேசியுடன்… நின்பதைக் கண்ட செவ்வேளுக்கு அளவிடமுடியாத சந்தோசம் மனதில் பொங்க…… முட்கம்பி வேலிக்கருகில் ஓடி வந்தான்.  முட்கம்பி வேலிக்கு மறுபுறம் நின்ற … காமினி முட்கம்பியூடாக கையை எட்டி தான் கொண்டு வந்த ரெலிபோனை செவ்வேளிடம் கையழித்தான்.
இரு கரம் நீட்டி வாங்கிய செவ்வேளிடம் …. ‘இது என் அம்மாவினது ரெலிபோன்’ டென்மார்க்கு அடிக்கிறதென்றால் 0045 அடித்துப்போட்டு நீ வைச்சிருக்கிற நம்பரை அடியென சொல்லியபடி …. முட்கம்பிக்கு அந்தப்பக்கமாக யாரும் பார்காதபடி குந்தியிருந்தான் காமினி. செவ்வேளும் அவசர.. அவசரமாக காமினி சொன்னதின்படி நம்பரை சுழட்டி.. லைன் கிடைத்து விட்டது என்ற சந்தோசத்தில்…
கலோ .. கலோ … ! என்றால் அங்கே மறுமுனையில் ‘டென்மார்க்கில்’ இருந்து கதைப்பதை செவ்வேளால் விளங்கிக்கொள்ள முடியாமலிருந்தது. அதாவது தொலைபேசி தெளிவில்லாமலல்ல ….  அதில் கதைத்த பெண் வேறு ஒரு மொழியில் பேசினாள். இவன் கதைத்தது அவளுக்கோ … அன்றி அவள் கதைத்தது இவனுக்கோ … புரிந்துகொள்ள முடியாமலிருந்தது. செவ்வேளின் கண்களில் பளிச்சிட்ட கண்ணீர்த்துளிகளை பார்த்தவுடன் காமினி கேட்டான் ‘நீ தப்பாக நினைக்கவில்லையென்றால் நான் ஆங்கிலத்தில் கதைத்து விபரத்தை அறியவா? ‘

தன்கையில் இருந்த ரெலிபோனை காமினியிம் கொடுத்துவிட்டு வைத்தகண் வாங்காமல் காமினியையே பார்த்துக்கொண்டிருந்தான் செவ்வேள்.

காமினி மீண்டும் அவ் இலக்கத்துடன் தொடர்புகொண்டு… ஆங்கிலம் விளங்கிக்கொள்ளாவிட்டாலும் தந்தையின் பெயரைச் சொல்லி, சொல்லி காமினி  உறவாடியதிலிருந்து, அது சரியான நம்பராகத்தானிருக்கும் என்பதையுணர்ந்து செவ்வேள் சந்தோசப்பட்டான். ஆனாலும் அந்த சந்தோசம் அதிகநேரம் நீடிக்கமுயாமல் இருக்கப்போகிறதே … என்பதை நினைத்து காமினி கவலையடைந்தான்.’
காமினி ரெலிபோன் கதைத்துவிட்டு வைத்தவுடன் பரபரப்பாகிவிட்டான் செவ்வேள்.

தான் யாருடன் கதைத்தேன் . என்னத்தை கதைத்தேன் என்பதை மொழிபெயர்த்து தமிழில் சொல்வதற்கு காமினி தயங்கிக்கொண்டு நின்றான்.

யாருடன் நீ கதைத்தாய் ? அது என் அப்பாவின் ரெலிபோன் நம்பர் தானா?  நீ ரெலிபோனில் கதைத்த அந்த வெள்ளைக்காறப் பெண் என்ன கதைத்தாள் தயவு செய்து  என் பொறுமையை சோதிக்காமல் சொல் காமினி பிளீஸ்… பிளீஸ் … என்று செவ்வேள் கேட்டுக்கொண்டேயிருக்க …      
          
மௌனமாவே நின்ற காமினி! தன் மௌனத்தையும் கலைத்துக்கொண்டு சொன்னான் ‘நீ சொன்ன அப்பா அந்த வெள்ளைக்காறப் பெண்ணின் கணவனாம். அவனுக்கும் அவளுக்கும் … 12,10 வயதுகளில் இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்களாம், இப்ப தாங்கள் விவாகரத்து பெற்றுவிட்டார்களாம் . அவர் ( உன்ர அப்பா ) வேற ஒரு கலியாணம் செய்து இன்னுமொரு பிள்ளையும் அவர்களுக்கு உண்டாம். தான் அவனுடன் கதைப்பதில்லையாம் தன் பிள்ளைகள் மட்டும் வார விடுமுறைக்கு போய் வருகிறவர்களாம் .  அவன் சிறிலங்காவில் இப்படீயும் ஒரு கலியாணம் செய்து, உன்னைப்போல ஒரு பிள்ளை இருப்பதைப்பற்றி தனக்கு எதுவுமே தெரியாதாம். என்று அவள் சரியாக உன் அப்பாமீது கோவப்பட்டதாகவும் உனக்காக சரியாக அனுதாபப்படுவதாகவும். தெரிவித்ததாகவும்  நீ விரும்பினால் அவனுடன் வாதாடி …உனக்கும் உன் அம்மாவிற்கும் நஸ்ட ஈடு பெற்றுத்தருவதாகவும் கூறியதாகவும் மூச்சு விடாமல் காமினி சொல்லிமுடித்தான்.

‘எதுவுமே … பேசும் திரணியற்றவனாக … காமினியை கையெடுத்து கும்பிட்டபடி அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான் செவ்வேள்’  தான் முகவரி தொலைத்த முகத்துடன் வாழ்ந்துவிட்டுப் போனாலும் பறவாயில்லை   இதை அம்மாவிடம் நான் சொல்லப்பொவதில்லை!  அந்தாளின்ர முகவரி தொலைந்து விட்டதாகவே…. சொல்லி விடுவோம். அவவாவது சந்தோச நினைவுடனே… வாழ்ந்துவிட்டு போகட்டும்.
தான் ஒரு துடுப்பில்லாத ஓடம்; என்று தனக்குள்ளே நினைத்துக்கொண்டு இன்னுமொரு தனிமையான முட்கம்பி வேலியருகில் உட்கார்ந்தான் செவ்வேள்.

sakthy-@hotmail.com