சிறுகதை: மூச்சு விட மறுத்தவனைப்பற்றி

சிறுகதை வாசிப்போம்~ வாருங்கள்!அவனை பற்றி நிறைய சொல்லலாம் ஆனால் இப்போது சொல்லாகப் போகும் அவனை பற்றி பேசுவதில் என்னவாகி விடப்போகிறது என்கிறார்கள் அவனுடைய  உறவினர்கள் .சிலரோ அவனுடைய வாழ்க்கையின் கடந்தகால புத்தகத்தில் சில பக்கங்களுக்கு உரிமையாளர்கள் போல மனதின் ஆழத்தில் கிடப்பவையை ஒரு கோர்வையாக மாற்றி ஒலியாக கொட்ட முயல்கின்றனர் . இதற்கிடையில் அவனுடைய நினைவுகளில், வார்த்தைகளில் சிக்கிக்கொண்டவனாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிற்கு வெளியே நின்று கொண்டிருந்தேன்.தன்னாலே என் உடல் நினைவில் இருந்து குறிப்பெடுக்க ஆரம்பித்திருந்தது. அப்போது என் நினைவில் அவன் சொன்ன மர்மமான வார்த்தைகள் வேப்பமர இலைகளாக உதிர தொடங்கியிருந்தன. “எல்லோருக்கும் சுவாசிக்கும் வியாதி. எனக்கு இந்த வியாதியின் உச்சக்கட்டம்.எப்போது வேண்டுமானாலும் இந்த வியாதி குணமாகலாம் .இதற்காக பல நினைவுகளை மருந்தாக சாப்பிட்டுகொண்டு இருக்கிறேன்” என பெரம்பலூரின் மர்மமான மலைகளின் மேல் ஏறிக்கொண்டிருக்கும் போது காரணமே இல்லாமல் சொன்னது நினைவுக்கு வந்தது.

அடிக்கடி என்னிடம் அவன் ஏதோ வித்தியாசமான கனவுகள் வருவதாக சொல்வான்.தன்னுடைய ஒவ்வொரு கனவின் முடிவிலும் தான் இறந்து போவதாக சொல்வான்.எனக்கு அவன் பொய் சொல்கிறான் என்றே எண்ண தோன்றியது.ஏனெனில் அவனுடைய கனவில் நடக்கும் சம்பவங்கள் இங்கு நடக்கக்கூட துளியளவு கூட வாய்ப்பில்லை.

இது அவனை பற்றிய கதை தான்.என்னுடைய அறையில் சக நண்பர்களை போல இருந்தவன் அவன் . ஆனால் செயல்களிலும் பேச்சிலும் அவன் சாதாரண மனிதர்களை போல அல்ல. ஆனால் அவன் மனிதன் தான். லத்தின் அமெரிக்க மாய யதார்த்த கதைகளில் வருவதை போல பல கண்களும், பல கால்களும் அவனுக்கு இல்லை.இந்த லத்தின் அமெரிக்க இலக்கியங்களை பற்றி கூட அவன் வழியாகவே அறிந்துகொண்டேன் . அவன் தன்னை வித்தியாசமானவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைபட்டுக்கொள்வான்.

மார்க்வெஸ் எனக்கு பிடித்த படைப்பாளி ஆனது அவனால் தான்.அவனுடன் ஒரே அறையில் பல அனுபவங்களை பேசி வாழ்ந்த தருணங்களை நினைத்து பார்க்கையில் இன்னும் அந்த விசித்திரமான நிகழ்வுகள் கண் முன்னே நிகழ்ந்தவாறு தோன்றும்.அவனுக்கு தனக்கு வைக்கப்பட்ட பெயர் கூட பிடிக்காது என்று தான் தோன்றும். ஏனெனில் எப்போதும் ஒரு நாளுக்கு ஒரு முறை ஐ அம் சிசிபஸ், ஐ அம் போர்ஹே, ஐ அம் காம்யூ  என்று பெரிய பெரிய ஆளுமைகளின் பெயரை சொல்லிக்கொண்டு சுற்றுவான்.

நான் அவனை கண்டு எப்போதும் வியந்து கொண்டே இருப்பேன். ஏனெனில் அவனுடைய ஒவ்வொரு செயலும் அப்படித்தான் இருக்கும். திடீரென அவன் நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்வான். திடீரென டையரியில் எழுத ஆரம்பிப்பான்.அவன் பேச்சுக்களில் எப்போதும் சாவும், விநோதமான பயணங்களை பற்றிய தொடர்பேச்சுக்கள் எப்போதும் இருக்கும்.நான் ஏன் இருக்கிறேன் என்ற கேள்வியும் , எனக்கு என்ன அர்த்தம் ? உடலை வைத்து செய்யும் காரியங்களின் பலன் என்ன என்ற தேடல்களும் அவனுடைய ஆய்வுக்குரிய கேள்விகள். என்னிடம் கூட அவன் கேட்டிருக்கிறான் உனக்கு என்ன அர்த்தம் என்று.நான் பதிலுக்கு நீ என்ன பைத்தியமா என கேட்பேன் . அவன் இதற்கும் சிரிப்பான்.இப்படி எல்லாம் சொல்கிறேனே அவனுக்கு வயது ஒன்றும் நாற்பது அல்ல.அவனுக்கு வயது இருபது.என்னுடைய சமவயதுக்காரன்.
இப்போது அவனுக்கு வயது 25 ஆனால் உயிர் தொங்கி கொண்டிருக்கிறது.அவனுடைய கனவு திட்டமான சாவை நெருங்கி போய் கொண்டிருந்தான்.என்னவாயிற்று அவனுக்கு ?

அதுவும் மர்மம் தான். அன்று நள்ளிரவு மணி இரண்டு.என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பி

” பேசனும்” என்றான்.

“டேய் காலைல பேசுவோம் டா, மணி இரண்டு ” என்றேன்.

” டேய் அவசரமா சொல்லனும் ” என்றான்.

நானும் எழுந்தேன். அவன் கதவுக்கு அருகே நின்று கொண்டிருந்தான். விடுதியே தூங்கி கொண்டிருந்தது.திடீரென சிறுநீர் கழிக்க வருபவர்கள் பயணம் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது.

நானும்  “சொல்லுடா டேய்” என அவனை நெருங்கி போனேன்.

அவன் “இன்றைய நிலா எவ்வளவு அழகு” என்றான்.

“டேய் இன்னிக்கு அமாவாசைடா, என்னடா உளறுற”

“நான் கனவுல ஒரு நிலாவை பார்த்தேன், நிலா கறுப்பா இருந்துச்சு, இரவு வானம் வெள்ளையா இருந்துச்சு”

“இதச்சொல்லத்தான் எழுப்புனியோ , போடா டேய்”

“இல்லைடா, நான் இன்னிக்கு நம்ம ஊர்ல இருக்கே அந்த உயரமான மலைக்கு போனேன், அங்க ஒருத்தரை பார்த்தேன், அப்படியே என்ன மாதிரியே இருந்தார்.வயசு தான் அதிகம் ஆனால் பேச்சு எல்லாம் ஒன்னு தான்.சாகப்போறேன் வர்ரீறியானு கேட்டார்.இப்ப இஷ்டம் இல்லனு சொன்னேன்.அவர் ஒன்னுமே சொல்லிக்காம போயிட்டாரு”.

அப்புறம் என்றேன்.

“போயிட்டாரு டா” என்றான்.

இதில் என்ன இருக்கிறது என கேட்டேன்.

“டேய், ஒரு மனுசன் என்ன சாவ கூப்பிட்டு நான் வரலனு சொல்லிருக்கேன். இது எவ்வளவு பெரிய விஷயம் ” என்றான்.

இதை சொன்னவுடன் ஒரு மெல்லிய சோகம் அவனிடத்தில் காண முடிந்தது.இன்னும் நினைவின் நூலகத்தில் மறதிக்கான பகுதியில் ஒரு நிகழ்வு இருக்கிறது.அவன் என்னிடம் சொல்லி  காட்டிய ஒரு ஒவியத்தை பற்றி.அவன் ஓவியங்களை வரைவதில்லை ஆனால் அவன் ஓவியங்களை எழுதுவான். இதோ ஒன்றை சொல்கிறேன், அந்த படைப்பிற்கு அவன் வைத்த பெயர் ஆந்தைகளின் கண்ணெழுத்து.ஆந்தையின் கண்கள்  மேடையின் மேல். அதை பார்த்துக்கொண்டே இருக்கும் ஆந்தை தலையும் பூனை உடல் உடைய மிருகம் ஒன்று.அதன் மேல் கையில் தன் பிறப்புறுப்புடன் நின்று கொண்டிருக்கும் அட்டை உடலும் நத்தையின் தலையும் உடைய உயிர் ஒன்று.விந்தணுக்கள் பூசிய நிலவும் சூரியனும் மேகமும் உள்ள வானம். இரத்தம் ஓடும் தரை. செத்த எழுத்தாளர்களின் உடல் அழுகி சிதைந்து கலந்து கிடக்கும் மண்.அதிலும் இருந்து முளைக்கும் கறுப்பு நிறமும் ஓநாயின் நரம்புகளை தண்டாக கொண்ட செடி என அவன் என்னிடம் கண்கள் விரிய விவரித்த முறை இன்னும் நினைவிருக்கிறது.

கதை,கவிதை, ஒவியம், போதை, பயணம் என சுதந்திரமாக இருந்தவன் அவன். சில சமயங்களில் என் இருப்பை கேள்விக்குறி ஆக்கிவிடுவான். அவனுடைய செயல்களை தொடர்ந்து கவனித்தால் நாம் இதுவரை என்ன செய்தோம் என்று தான் தோன்றும் .சாக விருப்பம் இல்லை என சொல்லிவிட்டேன் என அவன் சொன்ன  அன்றைய தினத்தில் தான் அந்த சம்பவம் நடந்தது. எங்கள் விடுதியின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து இன்று இப்படி அறைகுறை உயிரோடு என் கண் முன்னே கிடக்கிறான் . இப்போது அவன் சுவாசிக்கிறான் ஆனால் அவன் மனதில் வலி இருக்கும்.அவன் கால் எலும்புகள் நொறுங்கி போனதை பார்க்க முடிந்தது. காலே தெரியாத அளவுக்கு வெள்ளைத்துணிகள்.ஆனாலும் எனக்கு மனதிற்குள் தோன்றியது சாக அவன் இந்த முறையை தேர்ந்தெடுத்திருக்க கூடாது ஏனெனில் வாழ்வதே கொடுஞ்செயல் என எண்ணுபவன் ஊனமாக அடுத்தவர்களை நம்பி வாழ்வது  எவ்வளவு வலி தருவது அவனுக்கு இல்லையா?.

எனக்கு எழுத்தாளர்களை சந்திப்பது என்பது அலாதியான பிரியம்.அதிக வாசிப்பு இல்லை என்றாலும் எழுதி எழுதி தன் உள்ளொளியை கண்டுபிடித்தவர்களை சந்தித்து பேசினால் மனதளவில் ஒரு தெளிவு உருவாகும் என்று நம்புகிறவன் நான். குறைவான பணம், நிறைய கனவு என அவர்களை நோக்கிய பயணத்தில் எக்கசக்கமான அனுபவங்களை அனுபவித்தவன். இதைவிட மகிழ்ச்சி என்னவெனில் எல்லா புத்தகங்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும்.இதை நினைக்கும் போது தோன்றும் எத்தனை எழுத்தாளர்கள்? எத்தனை கவிஞர்கள் ? இந்த புத்தகங்களில் வாழ்கிறார்கள் என.இப்படி ஒரு அபூர்வமாக ஒரு சந்திப்பில் எனக்கு ஒரு அதிர்ச்சியான உபதேசம் கிடைத்தது. இப்போதைய அவனுடைய சாவை நோக்கிய படையெடுப்பை பற்றியது அதையும் சொல்லுகிறேன் .அவர் என்னிடம் சொன்ன ஒரு கதை இது.அந்த கிராமத்திற்கு அருகே ஒரு பெரிய மலை உண்டு.அங்கு தான் அவன் வசித்து வந்தான்.அவனுக்கு திருமணம் முடிந்திருந்தது.ஒரு ஆண் குழந்தையும் இருந்தது.இப்போது அந்த குழந்தை சுயமாக முடிவெடுக்கும் வயதில்.யாரின் உபதேசமோ தெரியவில்லை.அவன் மனதில் கடும் உக்கிரம் குடிகொண்டது.தன் ரத்தமே நீர்த்து போகும் படி பிராந்தி.தன் முகமே மறைந்து போகும்படி கஞ்சா அடைத்த சுருட்டின் புகை.ஒவ்வொரு இரவுக்கும் ஒவ்வொரு பெண்கள் என மாறிப்போனான்.நாள்கள் செல்ல செல்ல நிலைமை மோசமாகி கிராமமே இவனால் அழியக்கூடிய நிலைக்கு வந்தது.ஆனாலும் அவனுடைய குடும்பத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை.ஒரு நாள் கடவுள் வந்து அவனுக்கு ஒரு தண்டனை கொடுத்தார். அது தன் ஆயுள் காலம் முழுவதும் அங்கு உள்ள மலையடிவாரத்திற்கு சென்று  கீழே உள்ள பெரிய வட்டக்கல்லை மேலேயும் கீழேயும் உருட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பது.அவனால் இந்த அர்த்தமில்லா தண்டனையை சில மாதங்கள் கூட செய்ய முடியவில்லை.கடவுள் அவனுக்கு பசி,தாகம்,வியாதிகள் என அனைத்திலும் இருந்து விலக்கு அளித்திருந்தார் இருப்பினும் அவன் இந்த தண்டனையை எதிர்க்க எண்ணி மலை உச்சியில் இருந்து குதித்து உயிர் விட்டான்.இத்தோடு அவனுடைய இரண்டு தண்டனையும் முடிந்தது என அவர் சொன்னது இப்போதும் நினைவிருக்கிறது.அதன்பிறகு தான் சிசிபஸ்ஸை பற்றி ஆல்பர் காம்யூ எழுதிய முழு கட்டுரையும் வாசிக்க முடிந்தது.இந்த சம்பவம் தான் என் நண்பன் விஷயத்தில் நடந்துள்ளது என உணர முடிந்தது.

இன்னும் அவன் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறான்.ஒரு மருத்துவ உதவியாளர் பெண்ணென உடல் கொண்டு அவன் உடலை தொட்டுத்தொட்டு சோதித்து கொண்டிருக்கிறாள் இது எனக்கு மீண்டும் கடந்த கால சம்பவக்கடலுக்குள் குளிப்பதை போல உள்ளது.அவனுக்கு எப்போதும் ஏதோவொரு போதையில் இருக்க வேண்டும் என்ற ஆசையும் சுய இன்பம் தரும் கனவுகளை நனவாக்குவதிலும் கனவுகள் உண்டு.

இப்படி அவன் என்னிடம் “ஆபாச படங்களில் வரும் மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் அந்த காட்சிகளில் வருவதை போல, அருமையா இருக்கும்.” என சொல்லி கழிப்பறைக்கு சென்றது நினைவுக்கு வருகிறது.

கல்லூரியில் சில பெண்களை பார்த்த உடன்

“டேய் இது வேற மாதிரியான பொண்ணுடா ” என உறுதியாக சொன்னதும் நினைவில் சுரக்கிறது தேனாக அந்த பெண்களின் நினைவுகளுடன்.

இப்படி எல்லாம் நினைவில் ஒன்றன்பின் ஒன்றாக சம்பவங்கள் நினைவில் வந்து கொண்டிருந்தபோது ஒரு மருத்துவர் வந்தார்.அவர் அவனின் உறவினர்களிடம் இதைத்தான் சொன்னார் ” பையன் வேண்டுமென்றே மூச்சை அடக்கி அடக்கி விடுறான்.நாங்க எவ்வளவோ சொல்லிப்பாத்தோம் கேட்க மாட்டிக்கிறான்.இப்ப ரொம்ப மோசமான கண்டிஷன்ல இருக்குறான்.இன்னும் ஒரு அரை மணி நேரம் அவன் இருப்பான்.எங்களை மன்னிச்சிருங்க ” என சோகத்துடன் சொன்னார்.அவனுடைய உறவினர்கள் எல்லோரும் அவனை கடைசியாக பார்க்க அவசர சிகிச்சை பிரிவிற்குள் ஒவ்வொருவராக செல்ல ஆரம்பித்திருந்தனர் கண்ணீருடன்.

கடைசியாக அவனை பார்க்கப்போனேன் எனக்கு அதிர்ச்சி மட்டும்.அங்கு என்னைத்தான் நான் பார்த்தேன்.அப்போது நான் என்ற கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தது.ஒருவித பதற்றத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டேன்.வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.கொஞ்சம் என் தலை தாழ்த்தினேன். நிழல் இருந்தது.கையில் இருந்த கடிகாரத்தை பார்த்தேன்.அந்த அரை மணி நேரம் முடிந்திருந்தது.இது நான் இன்னும் சாகவில்லை என்ற தைரியத்தை தந்தது ஆனாலும் இது நான் தான் என்ற தைரியத்தைத் தரவில்லை .எது தான் நான் என்ற தைரியம் தரும் என்ற தேடலே இப்போது முக்கியமான ஒன்றாக பட்டது. மேகம் மலையை தொட்டுக்கொண்டிருந்தது .மூச்சு உலகை தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தது நான் தான் நானா என்ற குழப்பத்துடன்.

suryavn97@yahoo.com