அப்பா வழக்கம் போல 5 மணிக்கு எழுந்து கடன் முடித்து, குளித்து, ஸ்லோகம் சொல்லிக் கொண்டே வேஷ்டி உடுத்தி, நெற்றியில் பட்டையிட்டு, பொட்டு வைத்து, காவித்துண்டை பெல்ட்டுப் பட்டையாகக் கட்டிக்கொண்டு 6 மணிக்கு கோயிலுக்குச் சென்றவர் சரியாக ஒருமணி நேரம் கழித்துத் தான் வீடு திரும்புவார்.
போகும் போது “மலர், கனகா எழுந்திரிங்க. பொம்பளப் பிள்ளைங்களுக்கு ஆறு மணிக்கு மேல என்ன தூக்கம்?” என்று குரல் கொடுத்துவிட்டுத்தான் சென்றார். என்றாலும் கூட இருவரும் அப்பாவின் காலடி சத்தம் கேட்டுப் பாய், தலையணைகளை சுருட்டிக் கொண்டு படுத்திருந்த சுவடு தெரியாமல் எழுந்து ஆளுக்கொரு திக்காக ஓடினார்கள்.
“கனகா . . . . . கனகா .
. . . .”
“என்னப்பா”. குளியலறைக்குள்ளிருந்து குரல் கொடுத்தாள் கனகா,
“மலர் . . . . . மலர் . . . . .”
“இந்தா வந்துட்டேம்பா…” படித்துக்கொண்டிருந்தவளைப் போல பாவணை செய்து கொண்டிருந்த மலர் புத்தகமும் கையுமாக அப்பாவின் முன் வந்து நின்றாள்.
“படிச்சிட்டுருக்கியா. சரிசரி அம்மா எங்கன்னு சொல்லிட்டுப் போ”
“அம்மா அடுப்படில உங்களுக்கு இட்லி ஊத்திட்டிருக்காங்கப்பா”.
“உங்கப்பன் தலையைக் கண்டதும் தானே உங்கம்மா அடுப்படியில கால வைப்பா” என்று மலரிடம் திட்டிவிட்டு தன்னுடைய எழுத்து வேலையைத் தொடர்ந்தார் அப்பா. பத்து நிமிடம் கூட கழிந்திருக்காது அடுப்படியைப்பார்த்துக் குரல் கொடுத்தார். “ராஜம் சாப்பாடு ரெடியாயிட்டா இல்ல கடையில போயி சாப்பிடட்டா”
அப்பாவின் குரல் கேட்ட அம்மா “அங்க மட்டுமென்ன போனதும் சாப்பாடு போட்டுற்றாங்களாக்கும்” என்று மனதுக்குள் முனுமுனுத்துக்கொண்டே “இந்தா வந்திட்டேங்க” என்று குரல் கொடுத்துவிட்டு அவசர அவசரமாகத் தட்டில் இட்டிலியைத்தட்டி அதன் தலையில் கிச்சடியையும் எண்ணெய்யையும் ஊற்றி அப்பாவின் முன் வைத்தாள்.
“இந்த உப்புச்சப்பில்லாத சாப்பாட்டுக்குத்தான் இத்தனை நேரம் காத்துக்கிடந்தேனா” என்று கூறிக்கொண்டே பத்து இட்டிலியை உள்ளே தள்ளியவர் கைகழுவிவிட்டு அலுவலகம் செல்லத் தயாரானார்.
“ராஜம் காபி ரெடியா?” என்றவர் எதிர் வந்த காப்பியைவாங்கிக் குடித்துவிட்டு வருகிறேன் என்று சரியாக 8 1/2 மணிக்கு கிளம்பினார்.
போகிற போக்கில் தன்னை பின் தொடர்ந்த 4 வயது கடைக்குட்டியை “உறிச்ச உருளக்கிழங்கு மாதிரி எழுந்திருச்சதுமே வாசலுக்கு வந்திட்டியா போடி உள்ள” என்று விரட்டிச்சென்றார். மேல்ச்சட்டை இல்லாத அக்குழந்தை அப்பாவின் கோபத்திற்கு அர்த்தம் புரியாது விழித்தது. இனி அவர் வீடு திரும்ப மணி பத்தோ, பதினொன்றோ ஆகலாம்.
அப்பாவின் அரட்டல் உருட்டல்களையெல்லாம் பார்த்துப் பார்த்து அழுத்துப்போன மலர், “இந்த அம்மா எப்படித்தான் இந்த அப்பாவிடம் காலம் கடத்துகிறாளோ” என பெருமூச்செறிந்து தன்னுடைய விடுதலை நாளை எண்ணி ஏங்கலானாள்.
மலர் சுப்ரமணியின் மூத்த மகள். ஒப்பனை இல்லாத ஓவியம் அவள். பிறருக்காக ஒருபோதும் அவள் தன்னை ஒப்பணை செய்தது கிடையாது. அவளை பொருத்தவரை காதலித்துத் திருமணம் செய்வதைக் காட்டிலும் திருமணம் செய்து கொண்டு பின் கணவனைக் காதலிக்க வேண்டும் என்ற கொள்கையுடையவள். அவள் எண்ணம் போல அந்த நாளும் வந்தது.
மாப்பிள்ளை சென்னைவாசி, கை நிறைய சம்பளம், வீட்டு வேலைக்கு ஆள் என்ற சேதியெல்லாம் கேட்ட மலருக்கு சந்தோசம் தாங்கவில்லை. சென்னை வாழ்கை என்றதும் தனக்கு சகலவித சுதந்திரமும் கிடைக்கும் என்றுதான் அவள் நினைத்தாள்.
திருமணச் சடங்குகள் எல்லாம் முடிந்து புதுவீடு புகுவதற்காக சென்னை வருபவளைச் சோகம் வந்து வரவேற்பது தெரியவில்லை. ஆனந்தத்தில் திளைத்திருந்தாள்.
மறுநாள் மாலை. முதல் முறையாக கணவனுக்காகத் தன்னை ஒப்பனை செய்து கொண்டாள். கணவனின் வருகைக்காக வாசலில் காத்திருந்தாள். அந்தியில் வருவதாகச் சொன்னவன் அரை இரவில் வந்தான்.
“என்னங்க இவ்ளோ நேரம் ஆயிடுச்சா”.
“ஆமாடா இன்னிக்கு கொஞ்சம் வேலை அதிகம். சரி நீ போய் தூங்கு. நான் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வர்றேன்”.
“என்னங்க சாப்பிட வரலையா?”
“இல்லம்மா பசி தாங்க முடியல வெளியிலயே சாப்பிட்டுட்டேன்”.
அவனைத் திட்டவும் முடியாமல் சரியெனத் தலையாட்டவும் முடியாமல் மனதிற்குள் அழுதுகொண்டே அவனுக்காகப் பார்த்துப்பார்த்துச் செய்த உணவைத் தானும் உண்ணாமல் ஃப்ரிஜ்ஜில் வைத்துவிட்டு இவள் படுக்கை அறைக்குச் செல்லும் முன்பே உடை மாற்றிய கணவன் உறங்கியும் போனான்.
மனவேதனையும் வயிற்றுப்பசியும் அவளை தூங்கவிடாமல் செய்தது.
ஒருவாரம் சென்றது. காலையில் எழுந்தவள் தலைகுளித்து ஒற்றைரோஜாவை சூடிக்கொண்டாள். தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு கணவன் எழும்வரையில் பொழுதுபோகாமல் ஜன்னல் வழியே விழியைவிடுத்து கணவனைச் சுற்றி மனதை செலுத்திக் கொண்டிருந்தாள்.
“மலர் . . . . . . .” குரல்கேட்ட திசையில் திரும்பினாள் மலர்.
“காலை வேளையில் ஜன்னல் வழியா என்ன வேடிக்க பாத்திட்டிருக்க. வெளியில இருந்து பாக்கறவங்க அசிங்கமா நினைக்கமாட்டாங்க?”
“இதுல அசிங்கமா நினைக்கறதுக்கு என்னங்க இருக்கு”
“எழுந்ததுமே எங்கிட்ட தர்க்கம் பண்ணாத. எனக்குப் பிடிக்கலேன்னா விட்டுறேன். சரி நீ காஃபி சாப்பிட்டாச்சா?”பதிலை எதிர்பாராமல் கேள்வியைத் தொடர்ந்தான் தினேஷ்..
“ம் . . . . . . .
“எனக்கில்லையா”
கெஞ்சலும் கொஞ்சலுமாகக் கேட்ட கணவனுக்காக அவசர அவசரமாக கிச்சனுக்குள் நுழைபவளைத் தடுத்தணைத்துக் கொண்டே “என்னம்மா இது இன்னும் காலேஜ் கேல் மாதிரி ஒற்றை ரோஜா வச்சிருக்க? பொம்பளைக்கழகா தலநெறைய மல்லிப்பூ வச்சா எவ்ளோ அழகா இருக்கும்”.
அவனுடைய அணைப்பில் லயித்திருந்தவளின் முகம் சட்டென மாறியது. சிறிது நேரத்திற்கெல்லாம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு டிபன் ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள். அன்று அவனின் ஆசைக்கிணங்க புடவை உடுத்தியிருந்தாள்.
“என்னதிது புடவை உடுத்திருக்க வாரியல் இல்லாமலே தரைய பெறுக்கிரும்போல. கரண்டைக்கு மேல உடுத்த வேண்டாமா. முந்தியப்பாரு ஒட்டட அடிக்குது. எடுத்துச்சொருகிக்க.
“உங்களுக்கு முன்னப்பின்ன புடவ கட்டின அனுபவமோ?” என்று அவன் பேச்சிற்கு மறுவார்த்தைப் பேசினாலும் உள்ளுக்குள் வருத்தப்பட்டாள்.
டிபன் முடித்து வேலைக்குச்செல்ல தயாரானவனைப் பின் தொடர்ந்தாள் மலர்.
“வர்ரேண்டா. பத்திரமா இரு. யாருவந்தாலும் கதவத்திறக்காம பதில் சொல்லி அனுப்பு” என்று அறிவுரை கூறிக்கொண்டே சென்றவன் தன்னை தொடர்ந்த மலரின் பாதங்கள் வாயிலைத்தாண்டும் முன்பே “சரிடா கதவைப்பூட்டிக்க. வெளியில வரவேண்டாம். என்னுடைய ஃப்ரன்ஸிங்க இந்தப்பக்கமா வருவாங்க. நான் கிளம்பறேன்” என்றான்.
அன்பினால் தன்னுடைய சுதந்திரம் பறிக்கப்படுவதை அப்போதுதான் அவள் உணர்ந்தாள்.
அம்மாவின் வாழ்கைக்காக வருத்தப்பட்டவள் தன்னுடைய வாழ்கைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். அன்று எதிர்பார்ப்போடு காத்திருந்தவள் இன்று ஏமாற்றத்தோடு காத்திருக்கிறாள்…………..
rssmdr@gmail.com