சிறுகதை: வடு!

பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர்  –


பதிவுகள் யூன் 2004 இதழ் 54

குப்பையை அளைந்தபடியே மறுபடியும் தலைதிருப்பி பார்த்தபோது, அவன் இன்னும் அதே மரத்தடி திண்டில், காவி-வெள்ளையடித்த சிமெண்டுச் சிறு தெய்வத்தினருகில் அவளை பார்த்தபடி குந்தியிருப்பது தெரிந்தது. அவள் பார்பதை உணர்ந்ததும், பார்வையை விலக்கி வானத்தை பார்த்தபடி தன் மந்தமான தாடியை சொரிந்து விட்டு கொண்டான். எதிர்பக்கம் கூடியிருந்த செருப்பு தைக்கும் குடும்பத்திலிருந்து, தமிழ் சினிமா வசனம், சற்று தள்ளி இருவர் புகைத்து கொண்டிருந்த கஞ்சா புகைமணத்துடன் கலந்து, கேட்டுகொண்டிருந்தது. சாலையில் காய்கறி வண்டியுடன் சென்றுகொண்டிருந்த தமிழ் சிறுமியை பார்த்ததும் எழுந்து கைதட்டி அழைத்தான். அவள் இவனை பார்த்ததும் ஒரு கேரட்டை கொண்டு வந்து நீட்டினாள். கேரட்டை கடித்தபடியே, இயல்பானது போல் பவனை செய்தபடி மீண்டும் அவள் பக்கம் பார்வையை செலுத்தி, அவள் இன்னும் பார்த்து கொண்டிருப்பதை அறிந்து பழையபடி வானம்பார்கலானான்.

“பரதேசி நாய்க்கு ரோஷத்த பாரு!” முகத்தை அலட்சியமாய் வைத்தபடி கிளறுவதை தொடர்ந்தாள். சோம்பல் தரும் குளிர்காற்று சோம்பேரித்தனமாய் வீசிகொண்டிருந்தது. வெகுநேரமாய் தள்ளி நின்று யோசித்துகொண்டிருந்த தெருநாய், முகரும் நோக்கத்தோடு சோம்பலான உறுமலுடன் அவள் அருகில் வர, மடித்த காலி அட்டைபெட்டியால் அலட்சியமாய் அதன் முகத்திலடித்தாள். நாய் நொடிபொழுதில் தலையை பின்னுக்கிழுத்து, இரண்டடி பின்னகர்ந்து மீண்டும் புடவையருகே முகத்தை கொண்டுவந்தது.

“சீ.. போ..!” விழுந்த பலமான அடியில் `வவ்’வென்ற சத்தம் செய்துவிட்டு சாலை நடுவே சென்று, சிறிது யோசனைக்கு பின் தலையை உயர்த்தி குரைக்க தொடங்கியது.

“ஸனியனுங்க..! எழவு புடிச்சதுங்க..!” பின் அவள் முணுமுணுத்ததில் சில வசவு வார்த்தைகள் கலந்திருந்தன.

இவளை ரொம்ப நாட்களாக பார்த்து வருகிறேன். இந்த பக்கம் வரும்போதெல்லாம் இவள் கண்ணில் படுகிறாளா என்று பார்கவே, டீயும் சிகரெட்டும் குடித்தபடி காத்திருந்துவிட்டு போவதுண்டு. பார்க்க நேரிடும் போதெல்லாம் கந்தலான தோற்றத்துடனேயே இருந்தாலும், சிறு சிறு சகதிகட்டிகள் போல் முகத்திலும் கழுத்திலும் தெரிந்த வடுக்கள் இல்லையென்றால் அவள் ஒரு பேரழகியாகவே இருப்பாள் என்று தோன்றியது.

எழுந்து புடவையை சரி செய்து, சேகரித்த ப்ளாஸ்டிக் கழிவுகளை சாக்குபையில் அடைத்து, கிளம்புவதற்காக நிமிரும்போது அவன் அருகே அசட்டு புன்னகையை வரவழைக்க முயன்றபடி நின்றிருந்தான். “என்னா வேணும்?” முகத்தை திருப்பிகொண்டு உருவாக்கிய கோபத்துடன் கேட்டாள்.

“இன்னும் கோவமாவே இருக்கர போல!”

“உனுக்கின்னா வேணும் ஸொல்லு! காசு எதும் என்கிட்ட இல்லை.”

“அய்ய… இதபாரு! யாருக்கு வேணும் காசு! காசுக்கா நான் பின்னாடி வரேன்!”

“அப்ப வேலையை பாத்துனு போ, எனக்கு போணம்.”

தாடியை சொரிந்து, “இப்ப இன்னா பண்டேன்னு கோச்சுக்கற? ·பேட்ரி போறியான்னு கேக்கவந்தேன், அதுக்குள்ளே..”

“போறேன், போல! ஒனுகின்னா வந்த்சு? நாதான் எங்கிட்டக்க பேசவேணாம், உனுக்கும் எனக்கும் ஸம்பந்தமில்லேனு ஸொல்டேன்ல! இன்னும் இன்னா பண்ணனுன்னு பின்னாடி அலைஞ்சுனுக்கறே?”

“ஸ¤ம்மா பேசினேக்கிறியே, ஒனக்குதான் பேசதெரியுன்னு பேசறியே! நாதான் எல்லாந்தப்பு மன்னிச்சுருன்னு ஸொல்டேன்ல!”

“ஒண்ணும் ஸொல்லவேணாம் நீ, எதியும் கேக்க தயாராயில்ல நா!” குப்பை மூட்டையை முதுகில் ஏற்ற முயற்சித்தாள். அவன் அவளுக்கு உதவி, ” ரெண்டு நாளா ஜொரம் வந்து குளிர்ல நோவுபட்னுக்கிறேன் தெரிமா! ஒரு வார்த்த கேட்டியா!”

” இன்னாத்துக்கு கேக்கணுன்றேன்? எனக்கு நீ பண்ணதுக்கு அன்னிக்கே உன்னைவிட்டு போயாச்சு நா! மேலெல்லா பத்த வச்சுட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி பேசறான் பாரு! என்னை ஒண்ணும் இல்லாத ஆக்கிட்டியே, பரதேசி!” மூட்டையை கீழே வைத்துவிட்டு கத்தினாள்.

“இன்னும் அதெயே பேசினிக்கிர பத்தியா! ஏதோ ஆயிபோச்சு. அன்னிக்கு மாத்ரம் தண்ணி அடிக்கலன்னா இப்டி ஆயிருக்குமா? இல்ல, நீதான் கண்ரோல்ல இருந்தினா ஆயிருக்குமா? எல்லாம் மறந்துட்டு நல்லா இருக்லான்னுதானே ஸொல்றேன். ஸரி, எங்க போற? ·பேட்ரிக்குதானே, வா, இப்டியே ஜல்தியா போய்ட்லாம்.”

” நீ ஒண்ணும் வர தேவயில்ல, போறதுக்கு தெரியும் எனக்கு. இப்ப நீ இன்னாத்துக்கு ஒட்றேன்னு தெரிது எனக்கு. உன் கிட்டக்க படுக்க தயாராயில்ல நா, ஒனக்கு காசு குடுத்தும் என்னால ஆவாது… எங்கூட வராத நீ!”

“என்னா பேசற நீ! ம்.. எனுக்கு வேலை செய்ய தெரியாதா? கய்யும் காலும் இல்லியா?” அவள் இரக்கத்தை பெறும் முயற்சியாய் முகத்தை வைத்துகொண்டு, “ரெண்டு நாளா ஒடம்பு முடியல. மேலெல்லா நோகுது. கால்ல வேற காயமா போச்சு பாரு!” என்று முடி வளர்ந்த கல் போல் தோற்றமளித்த கால்புண்ணை காட்டினான்.

அவள் கவனியாமல் மீண்டும் மூட்டையை தூக்கி, ” ஏன்யா மேலே பேசினே இருக்கற! மான ரோஷம் எதும் இல்லியா? உனுக்கு ஜொரன்னா எனிக்கின்னா வந்த்சு! போய் எவனுக்காவது ஊம்பி விடு! ஸரியா போகும்.” என்று நகர தொடங்கினாள்.  அவன் புண்படும்படி தாக்கபட்டது ஒரு நொடி முகத்தில் தெளிவாக தெரிந்தது. முகமாற்றத்தை உடனே சாதாரணமாக்கிகொண்டு, ” இதோ பார்! போகாத! நான் சொல்றேன் போகாத! உனுக்கு எதுனா வந்த்சுனா தெரியும்”, என்று கையை பிடித்து தடுக்க, ” விடு கய்ய, தொடாத என்னெ.” கையை உதறி அவன் மேலே சொன்னது காதில் விழாதது போல் சென்றாள்.

திகைத்து போனவன்போல் சிறிது நேரம் அவள் போவதையே பார்த்து கொண்டிருந்தவன், திடீரென கோபம் கொண்டு தரையிலிருந்து காரைகட்டிகளை எடுத்து, “ஒரு நாளில்ல ஒரு நா எரிக்கதாண்டி போறேன் ஒன்ன, பேச்சா பேசர தேவ்டியா!” , என்று அவள்பால் எறிந்தான். சாலையை கடந்து கொண்டிருந்த அவளை தவிர்த்து, ஓடிக்கொண்டிருந்த காரினடியில் நோக்கமற்று சென்றன.

“தேவ்டியா! இவ தொழில் பண்ணினு இருந்தா நான் பாத்துட்டே இருக்கணுமா! மொகம் வெந்து போச்சாம், தொழில் பண்ண முடியலன்னு பாக்கறா! அன்னிக்கே எரிச்சிருக்கணும் இவளெ!” மரத்தடி செருப்பு தைப்பவர்களும், கஞ்சா புகைப்பவர்களும், இப்பொழுதுதான் கவனத்திற்கு வந்தது போல் பார்த்துவிட்டு, வசனம் கேட்பதை தொடர்ந்தனர். அவள் தொலைவில் எதுவும் நடவாதது போல் குப்பை மூட்டையுடன் போய் கொண்டிருந்தாள். அவனுக்கு குளிர்சியையும் மீறி வியர்த்தது.


அனிச்சை செயலாய் இன்னொரு டீ சொன்னேன். பசி வயிற்றில் அமிலமாய் சுரந்து கொண்டிருந்தது. டீயும், சிகரெட்டும் அதை இன்னும் எரிய வைக்க போகிறது. சாலை முனையில் உள்ள தர்ஷினியில் பசியை தீர்த்துகொள்ள முடியும் என்றாலும், டீயை தவிர வேறு எதுவும் உள்ளே போகும் சாத்தியமில்லை. பசியை விட தலைக்குள்ளும், காலிலும் பூரான் ஓடுவது போன்ற இருப்புகொள்ளாமை பெஞ்சில் உட்கார்ந்தபடி காத்துகொண்டிருப்பதை பெரும் சித்ரவதையாய் ஆக்கிகொண்டிருந்தது.  தூரத்தில் நின்றிருந்த கான்ஸ்டபிளுக்கு, சூழலுக்கு பொருந்தாமல் நான் இங்கே உட்கார்ந்திருப்பதன் காரணம் புரியும் என்றாலும் ஏனோ என்னை அணுகவில்லை. அவர் கடமையின் காரணமாக நிற்கிறாரா, மாமுலுக்காக நிற்கிறாரா என்று தெரியவில்லை. முருகன் என்ற காரணபெயரால் அழைக்கப்படும் சிறுவன் வரும் வழியாய் தெரியவில்லை. என்னை போலவே சாலையின் எதிர்பக்கம் காத்திருந்த இருவர் பீடிபற்ற வைப்பதை பார்த்து, தன்னிச்சையாய் சிகரெட் பாக்கெட்டை எடுத்தேன். டீ வந்தது.

அவன் என்னை பார்த்து “நமஸ்காரா ஸார்!” என்றான். நான் கண்டுகொள்ளவில்லை.

“ஒந்து பன்னு அரதா டீ கொடிரீ ஸ்வாமி.”

கடைக்காரன் காதில் விழாதது போல் சில்லரை எண்ணிகொண்டிருந்தான். புது ஹிந்தி பாடல் ஒன்று இரைச்சலாய் அலறிகொண்டிருந்தது. இவன் சொன்னதையே மீண்டும் சொல்ல, தலைநிமிராமல் “காசு வச்சிருக்யா?” என்றான்.

“எல்லோஹ¤த்தேனே! கொட்தினி ஸ்வாமி, பன்னு மாத்ர கொடி.”

“ஸ¤ம்மா கொடுக்கரதில்லே இங்கே, காசு கொடுத்து வாங்கு.”

“ஆமெல கொட்தினி, நம்பிக்கெ இல்லுவா?”

” ஏ…ஹோகப்பா, ஸ¤ம்னே தொந்த்ரோ கொட்தாயிதானே…போ..போ.. இங்கே ஒண்ணும் இல்லே.”

கடைக்காரனின் எரிச்சலில் மௌனமாகி, ஆயினும் நகாராமல் சுற்றிலும் பரிதாப பார்வையை படரவிட்டான். நான் திரும்பி முருகன் வருகிறானா என்று பார்தேன். கடைக்காரன் அவன் இருப்பை கவனிக்காமல் முடிந்திருந்த கேஸட்டை மாற்றி போட்டான். எதிர் பெஞ்சில் உட்கார்ந்திருந்த மூன்று பேர் அவனை பார்த்து கொண்டிருந்தனர். கருப்பாக இருந்தவன் தமிழனாகத்தான் இருக்க வேண்டும். நடுவில் பிரதானாமாய் தெரியும் மீசையுடன் அமர்ந்திருந்தவன் நல்ல போதையில் இருப்பதை, தொடங்கியிருந்த பாடலுக்கு அவன் உடல் முழுவதையும் ஆட்டி தாளம் போடும் விதம் சொன்னது.

“ஏனு பேக்கு?” புருவத்தை உயர்த்தி தாளத்தை நிறுத்தாமல் கேட்டான்.

“பன்னு, டீ ஹேளி ஸார்” என்றான் பணிவான சிரிப்புடன்.

“நனகொந்து கெலஸ மாடுத்தியா? ஹேளுத்தினி.” (எனக்கொரு வேலை செய்கிறாயா? சொல்கிறேன்.)

“ஹேளி ஸார்.”

குரல் உயர்த்தி, ஏற்ற இறக்கமாய் நடிப்புடன், அவன் தன் வட்டார கன்னடத்தில் சொன்னது இவனுக்கு புரியவில்லை. சொல்லிவிட்டு குதிரைக்கு புரை ஏறியது போல் தலையை ஆட்டி ஆட்டி சிரித்தான். மற்ற இருவரும் தங்கள் கடமை போல் அவனுடன் சிரித்தனர். சிரித்ததில் அவர்களும் போதையிலிருப்பது தெரிந்தது. கடைக்காரன் கவனிக்கவில்லை.

“கொத்தாகில்லா ஸார்.” (புரியவில்லை.)

மீண்டும் அதே போல ஏதோ சொல்லி திரும்பவும் சிரித்தான். என்ன செய்வதென்று விளங்காமல் அவர்களை பார்த்தபடி நின்றிருந்தான். தமிழன் போல் இருந்தவன் `இவனிடம் போய் கேட்கிறாயே’ என்பதுபோல் தலையிலடித்து, ‘போ!போ!’ என்று சைகை செய்தான். போகவில்லை.

இரு மாநிற இளைஞர்கள் க்ரீஸ் எண்ணெய் படிந்த உடைகளுடன் உருதுவில் பேசியபடி வந்து, இவனை ஐயத்துடன் பார்த்தபடி, “தோ.. சாய்!” என்றான். விசாரித்த மீசை ஆசாமி பாட்டுக்கு உடலாட்டுவதில் மூழ்கியிருந்தான். இன்னும் சிறிது போதையேற்றினால் நடனமாடுவான் என்று தோன்றியது. எனது இருப்புகொள்ளாமை ஜுரம் தாக்குபிடிக்க முடியாத நிலைமைக்கு சென்றிருந்தது.

“அய்யா… பசிக்குது ஸ்வாமி! ஊட்டா மாடில்லா ஸார்….பசி தாங்க முடியலயே!” வயிற்றை பிடித்தபடி அடித்தொண்டையில் கத்தினான். கண்களில் அழுகைக்கு தயாராய் நீர் திரையிட்டிருந்தது.

“இன்னா பண்ரதுபா! என்கிட்டே கொடுக்கறதுக்கு ஒண்ணும் இல்லே.” வந்தவர்களுக்கு தண்ணிர் வைத்தபடி சொன்னான். அவன் குத்துகாலிட்டு அமர்ந்து அழத்தயாரானான்.  “க்யா ஹ¤வா?” என்று உருது இளைஞன் விசாரித்தான்.

“அய்யோ.. பசிக்குது…நான் என்ன பண்ணுவேன், வயிறு நோகுதே..அம்மா…!” வார்த்தைகள் தெளிவற்று வெளிவராமல் உள்ளே போய், சத்தமற்ற அழுகையாய் பரிணமித்து, ஒரு எல்லையை தொட்டவுடன் பெரும் சத்தத்துடன் வெளிவந்தது. ஒரு பன்னிற்காக அழுவதை எப்படி விவரிப்பது? வந்த வேலைக்கு போக, தாராளமாய் என்னிடம் பணம் இருந்தது. என்னால் இவனுடைய பசியை தீர்த்துவைக்க முடியும்.

கடைக்காரன் வெளியே வந்து, “ஏய்… போடா! டெய்லி இதே பண்றே நீ, இன்னிக்கு கொடுக்கறதில்லே… போ!” கூஜாவிலிருந்து தண்ணீரை அவன் மேல் ஊற்றினான். விரட்டபட்ட ஆடு போல் சிறிது நகர்ந்தான்.

“அங்கே போ! அந்த பக்கம் போய் அளு! இங்கே கலீஜ் பண்ணாதே!” முழுசாய் நகற்றி அவனை பெஞ்சிற்கு பின்னால் இழுத்துவிட்ட பின்புதான் உள்ளே போனான். அழுக்கு வேட்டி விலகி அவன் உறுப்பு தெரிந்தது. முழங்கையில் தலை வைத்து, மண்ணில் படுத்த நிலையில், உடைந்த குரலில் குழப்பமான வார்த்தைகளால் அழுதுகொண்டிருந்தான்.

கடைக்காரன் இவன் தினமும் தரும் தொல்லை குறித்து, சிதைந்த ஹிந்தியில் உருது இளைஞர்களிடம் சொல்லிகொண்டிருந்தான். மூக்கை சிந்தி மடங்கியிருந்த கதவில் தடவி, ஒலியெழுப்பி கபம் துப்பிவிட்டு மீண்டும் அழுதான். கடையில் கூட்டம் சேர்ந்து, பல மொழிகள் கலந்த பேச்சு சத்தம், இன்னும் உற்சாகத்துடன் ஒலித்துகொண்டிருந்த பாடலுடன் கேட்டது. கொஞ்சம் கரிசனத்துடன் விசாரித்த உருது இளைஞர்களும் போய்விட்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் பயனற்ற அழுகை என்பது புரிந்தோ அல்லது அழ தெம்பு இல்லாமலோ, அழுவதை நிறுத்தி தரையில் கோடு போட்டுகொண்டிருந்தான்.  என்னை பார்த்தான். அவன் சிரிக்க முயற்சிப்பானோ என்று பார்வையை தாழ்தினேன். நிமிர்ந்த போது கோடு போட்ட குச்சியை வைத்தே பல் குத்தியபடி, பார்வையை சுழற்றியவன், மீசை ஆசாமியின் கால்சட்டை பையிலிருந்து எப்போழுதும் விழுந்துவிடும் நிலையிலிருந்த பர்ஸை பார்பதை நானும் பார்தேன்.  எதிர்பக்கம் காத்துகொண்டிருந்த இருவரும் அவசரமாய் பீடியை அணைத்துவிட்டு எழுந்திருப்பதை பார்த்து, நானும் உஷாராகி முருகன் வந்துவிட்டிருப்பதை அறிந்தேன்.


தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் பனி தெரிந்தது. நடப்பதற்கும் ஆளற்று வெறிச்சோடிய சாலையில், தன் வர்கத்தை சேர்ந்த அவனைவிட இளையவன் ஒருவனுடன், சாவகாசமாய் வந்து கொண்டிருந்தான்.

“காபா கட மாத்றி யார்ரா ஷீக் குடுக்கறான்! குளிர்லே எப்டி உள்ளெ போச்சு! நாளிக்கு இப்டியே சிவாஜி நகர் போலாம், அங்க காட்றன் பார்.”

உடலை சுற்றியிருந்த  பழந்துணிகள் போதாதென்றாலும், மிதப்பில் குளிர் தெரியவில்லை. வேண்டுமென்றே முதுகில் எடை இருப்பது போல் கொஞ்சம் குனிந்து, கூட்டத்தை விலக்கி வருவது போன்ற குழம்பிய நடையில் வந்தனர்.

“ஆமா, ஏதுரா காசு உனுக்கு?”

“அப்டி கேளு, அதாண்டா.. காசு வரும் .. போகும்னு வள்ளுவர் சொல்லிகிறார் தெரிமா! தெவ்டியாபசங்க! சில தொறக்கவிடமாட்டேன்றான். பதினஞ்சாம் தேதி ஊர்வலன்னு எழுதி போட்டுக்கரான் பார்!”

“லாட்ரி எதுனா வுளுந்த்சா?”

“லாட்ரி! ஆமா லாட்ரிதான் வுளுந்த்சு!” என்று அட்டகாசமாய் வலிந்து கொண்டுவந்த போதை சிரிப்பு சிரித்து, விழப்போவது போல் போக்குகாட்டி, தெருமுக்கு திரும்பியவனின் சிரிப்பு நொடியில் உறைந்தது. மீசை ஆசாமி அதே சகாக்களுடன் நின்றிருந்தான். அவசரமாய் திரும்பும் முன் பார்த்துவிட்டிருந்தார்கள். சிரிப்பு சத்தம் முன்னமே கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும்.

“என்னாச்சு?”

“ஜல்தி வா. இப்டி போய்டலாம்.”

“ஏன்? என்னாச்சு?”

ஓடத்துவங்கினான். ஆனால் அவர்களின் வலுவான ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் அகப்பட்டு, கால் தடுக்கபட்டு தாறுமாறாக சாலையில் விழுந்தான்.

“எல்லி ஹோகுத்தியா… நன் மகனே! நன் கை நல்லி ஆட்டா ஆடுத்தியா!” வயிற்றில் மிதித்தான். தடுத்த கைகளை பற்றி, மிக சாதாரணமாக அவனை தூக்கி, மீண்டும் கீழே போட்டு மிதித்தான். நிதானமான ஆர்வத்துடன், அவன் கைகளை அழுத்தி கொண்டு, தேர்ந்தெடுத்த இடத்தில் மிதித்தான். கூட வந்த இளையவயதினனை காணவில்லை.

“இல்லா ஸார், நானில்லா…!” அரைகுறையான கதறல்கள் விழுந்த அடிகளில் கரைந்தன. அவனை மீண்டும் தூக்கி நிறுத்தி, முரட்டுதனமாய் முகத்திலடித்து, வாசனையை உணர்ந்து, “குடிதுபிட்டு பந்திதானே, காஸ¤ நின் அம்மனா கொட்டது!”. போதையையும் மீறி பல இடங்களில் வலி தெரிந்தது.

“தமிள்காரன் மானத்த வாங்க வந்திரிக்கியே, அவ்ளோதான் நீ! கவ்டா போலீஸ்ல விடாத போமாட்டான்!” கூடவந்த தமிழன் சொன்னான். மூன்றாமவன் வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டிருந்தான்.

அவன் தப்பிப்பதை மறந்து அடிகளை ஏற்றுகொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தான். தொடர்ந்து விழுந்துகொண்டிருந்த அடிகளை தடுக்க கூட முயலாமல் சூழ்நிலைக்கு தன்னை முழுமையாய் ஒப்படைத்திருந்தான். கண்கள் செருகி அப்படியே தூங்கவிடத் தோன்றியது. கௌடா விட்டால்தானே. அம்மாவின் நினைவு வந்தது. அப்பா ராயப்பன் செயலற்றுபோய் பார்த்து கொண்டிருக்க, தங்கராசு அம்மாவை நடு ரோட்டில் போட்டு மிதித்து கொண்டிருந்தான். பாலிஸ்டர் வேஷ்டி வ்¢லகும்படி தங்கராசு புல்லட்டிலிருந்து இறங்கும் காட்சி மனதில் தோன்றும் போதெல்லாம், எத்தனை முறை அவனை போட்டுதள்ளுவதை ஒத்திகை பார்த்திருக்கிறான். இந்த கௌடாவையாவது போட்டுதள்ளினால் என்ன? மனம் விரிவாகி, பெரும் சக்தி நிரம்பியது போல உணர்ந்தான். தன்னை இயல்புக்கு கொண்டு வந்து நிதானமாய் புலன்களை கூராக்கியபோது அடிகள் விழுவது நின்றிருப்பது தெரிந்தது. பேச்சு சத்தம் கேட்டது. அவள்தான்! முன் அனுபவித்தறியாத உணர்வு உடல் முழுவதும் அலையென பரவகண்டான். எப்போது, எப்படி இங்கு வந்தாள் என்று ஊகிக்க முடியவில்லை. மேகங்கள் விலகி திடீரென பெய்யும் வெயில் போல, அவள் அங்கே தோன்றியிருக்க கூடுமோவென எண்ண தோன்றியது.

கௌடா ஏதோ சத்தமாய் சொல்லிகொண்டிருந்தான். அவள் தமிழில் பதில் சொல்லிகொண்டிருப்பதால் கௌடாவிற்கு எரிச்சல் கிளம்புவதை உணர்ந்து தமிழன் அவளுக்கு விளக்க தொடங்கினான்.

“இப்ப இன்னா பண்ணணுன்றான்?” அவன் மெதுவாய் நிமிர்ந்து அவளை பார்த்தான். அவள் இதுவரை அவன் பார்த்திராத ஒரு பொலிவில் தெரிந்தாள். ஆழ்ந்த உறக்கத்திற்கு பின்  விழித்து, குளித்து வந்தது போன்ற தெளிவுடன் அவள் கண்கள். அவள் முகத்தில் சிறு சிறு சகதிகட்டிகள் போன்ற அந்த வடுக்கள் இல்லை.

“காசக்கொடுத்தா விட்ருவான். இவன் கிட்டக்க எங்க காசு, அதான் எல்லா குடிச்சு தின்னுட்டு வந்திருக்கிறானே.”

அவள் மார்பிலிருந்து பணமெடுத்து, “எவ்ளோ?” என்றாள்.

(* 1994-95இல் எழுதபட்டு, சுபமங்களாவிற்கு அனுப்பபட்டு வெளிவரவில்லை. சில திருத்தங்களுடன் தட்டச்சு செய்யபட்டு, பதிவுகளுக்கு அனுப்பப்படுகிறது.)

rksvasanth@yahoo.com