மணிபாரதி (அம்பாசமுத்திரம்) கவிதைக்ள்!
1. கூடு
மேய்ச்சலுக்கு போன
மாடுகள் கொட்டடி திரும்பின,
உணவு தேடியலைந்த
பறவைகள் கூடு திரும்பின,
பணி முடித்த
மனிதர்கள் வீடு திரும்பினர்,
அழுக்கடைந்த ஆடையுடனும்
கோணி நிறைய குப்பைகளுடனும்
தனக்கான இடம் தேடி
என்றும் போல்
இன்றும் அலைகிறான்,
வீதியில் அனாதையாய்
விடபட்ட பைத்தியக்காரன்,
2. மழை
மழைபற்றி கதையிருந்தது,
மழைபற்றி நினைவு இருந்தது,
மழை பற்றி கவிதையிருந்தது,
மழை பற்றி எதிர்பார்ப்பிருந்தது,
அனைத்தையும் சுமந்தபடி
பெய்துகொண்டிருக்கிறது மழை,
உள்ளேயும்,வெளியேயும்.
வேதா. இலங்காதிலகம். (டென்மார்க்) கவிதைகள்!
கோலங்கள்!
சந்தான சீவன்களின் உறவுப் பாலம்
சரித்திரம் அமைக்கும் வாழ்வுக் கோலம்.
சக்கர வாழ்வின் சஞ்சாரக் காலம்
சாயாத வினைத் தவம், ஓயாத வெற்றி மூலம்.
தாழ்விலா வாழ்வும் வீழ்விலா நீள்வுமில்லை.
வாழ்வை வசப்படுத்த வனையும் கோலங்கள்
தழும்பின்றி எழுந்திடும் பிரயத்தன கோலங்கள்.
ஊழ்வினை யென்றுமொரு வார்த்தைக் கோலங்கள்.
இதமான கோடையில் மகிழும் மனங்கள்
கதமான குளிரில் உறையும் மனங்கள்.
பதமிலாச் சுவாத்தியம், கலாச்சாரச் சூழல்கள்
சதமென வாழவோரிங்கு பலவகைக் கோலங்கள்.
வண்ணப் பொடிக்கோலமல்ல வாழ்வு.
வண்ணப்பூச்செண்டுக் கண்காட்சியல்ல வாழ்வு.
எண்ண மலர்களின் எத்தனிப்பு முகிழ்வு
பின்னிப் பிணைக்கும் விடைக்கோலம் வாழ்வு.
2. நாட்டியப் பேரொளி பத்மினி.
சேரநாடாம் கேரளப் பதியின் திருவானந்தபுரத்தின்
ஆரணங்கு அரச பரம்பரையில் உதித்தாள்.
பேரளந்த கோகினூர் வைரம் இவள்.
ஆரத்தினாள் நாட்டியக் கலையை வாழ்நாளில்.
காரணன் தங்கப்பன் பிள்ளை தந்தையார்.
தாரம் இலட்சுமி அம்மையார் தாயார்.
தாரகைச் செல்வம் மழலை பத்மினியை,
பரதப் புதையலை தாராட்டினார் 6-2-1932ல்.
நாட்டியம் நான்கு வயதில் பயிற்சியாம்.
ஊட்டம் கதகளி வரிசையில் ஆரம்பம்.
ஆட்டம் அரங்கேற்றம் பத்தாம் வயதிலாம்.
கூட்டாகச் சகோதரியரோடு அரங்குகள் ஏறினர்.
நாட்டியப் பேரொளி என்று விரிந்தார்.
பெருமையுடன் பிறப்புகள் லலிதா, ராகினியார்
‘ திருவாங்கூர் சகோதரிகள் ‘ பெயரை ஆண்டனர்.
பெரும் தகவு எல்லையறு நடனத்தில் பெற்றனர்.
பருவம் பதினாறில் இந்திப்பட இசைவு.
திருவுடை நடனத்தால் கல்பனாவில் நுழைவு.
ஒருமித்து இந்தியில் இருபத்தைந்து நிறைவு.
வேதாளஉலகம் பாம்பாட்டி நடன வளைவு
வேள்வியாய்த் தமிழ் முதற்பட நுழைவு (1948ல்.)
மணமகள் தமிழ் நடிப்பில் முதலானது (1951ல்.)
பணம் சிவாஜியுடன் கதாநாயகி யாக்கியது (1952ல்.)
மணம் வீசியது சிவாஜியிணைந்த 59 படங்கள்.
நூற்றைம்பது படங்களில் நடனத் தோகையை
நளினமாய் விரித்தார் நர்த்தக நூன்மடந்தை.
தமிழ், மலையாளம், இந்தி கன்னடம்
தெலுங்காம் ஐம்மொழிப் படங்கள் 250 பூரணம்.
அலுக்காது நடித்தார் பரதக்கலை பர்வதம்.
இந்தி-ரஷ்யமொழி பரதேசியிலும் நடித்தார்.
இவருருவின் முத்திரையை சோவியத் அரசார்
பெருமையாக வெளியாக்கி கௌரவம் கொடுத்தார்.
பத்மினியின் செல்லப் பெயர் பப்பிம்மா.
உத்தமபுத்திரன் இவருக்கொரு மகன் பிரேமானந்.
பாட்டிம்மா, வெள்ளையம்மா, பார்த்தால் ராணி
சம்யுக்தா தான். பரதப் பேரொளியின்
சம்பூரண நடனம், கற்சிலை உயிர்ச்சிலையாகும்
”மன்னவன் வந்தானடி ” திருவருட் செல்வரில்.
தில்லானா மோகனாங்கி 1961-5-25ல்
கல்யாணம் புரிந்தார் வைத்தியர் இராமசந்திரனை.
பேரழகி முத்திலகங்களுடனும் நடித்தார் இணைந்து.
சிறந்த நடிகை விருது 4முறையானது. (1954-59-61-66)
1958 தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது.
1985ல் பூவேபூச்சூடவா பிலிம் பெயர் விருது.
1970ல்அமெரிக்க நியூயெர்சி வாழ்வானது.
பரதத்தைத் தேங்கவிடாது கங்கையாய்ப் பெருக்கியது
1974ல் நியூயெர்சியில் நடனப் பள்ளியாரம்பமானது.
1981ல் மங்கையர் திலகம் இராமச்சந்திரன் மறைவு.
பரதக்கலை பர்வதம் பத்மினியின் ஆடல்
பன்னாட்டுத் தமிழ்நடுவ விழாவில் 72 வயதில்.
பாடல் திருமதி சுதா ரகுநாதனாகிப்
பதிவானது நியூயோர்க்கில் 2003ல் இறுதி.
வியக்கும் மொழி ஆளுமை நர்த்தகி.
மயக்கும் பரத ஆளுமை வித்தகி.
தயக்கமற்ற நிரூபணம் வஞ்சிக்கோட்டை வாலிபன்.
” கண்ணும் கண்ணும் கலந்து ” வைஜைந்தியுடனாடல்.
அரசிளங்குமரியின் நினைவின்று வியட்நாம் வீடு
மீண்ட சொர்க்கமான தேனும் பாலுமே.
இமயமளவான பரதக் கலாப மயில்
அரசகுமாரியுருவான அழகு மயில் தங்கப்பதுமை.
மாதவப் பெண் மயிலாள் 24-9-2006ல்
அமரதீபமானார். என்மனதிலிவர் ஆடற் காவேரி.
இன்னொரு பத்மினியாக இன்று சோபனா.
பரதத் தலைமுறை தொடரட்டும் தொடரட்டும்.
(ஆரத்தி – தீபஆராதனை. தாராட்டினார் – தாலாட்டுதல்.
தாரகைச் செல்வம் – கண்மணிச் செல்வம்.
நூன் மடந்தை – கலைமகள். இசைவு – இணக்கம்.)
அழியாத சொர்க்கம்
– மெய்யன் நடராஜ் –
கண்களினா லேற்றுகின்றக் காதலெனுந் தீபம்
கடைசிவரை ஒளிருமெனில் வாழ்க்கையொரு லாபம்
பெண்களினா லேமாற்றங் காணுகின்ற சோகம்
பேரிடியாய் வீழுமெனில் வாழ்க்கையது சாபம்
புண்படவே உள்ளதெனி லிதயமது பாவம்,.
புயல்காற்றில் போராடும் பூவிதலாய் சாகும்
எண்ணமெங்கும் நிரந்தரமாய் ஏக்கங்களே வாழும்
இலக்கியத்து நாயகரின் சோதனையில் வீழும்
முதல்காதல் படிக்கட்டில் தடுக்கிவிழும் பருவம்
முழுதாக கொடிகட்டி பறக்கவிடும் இன்பம்
இதழ்மேட்டில் புதுகவிதை எழுதிவிடும் நோக்கில்
எதிர்கொள்ளும் பரீட்சைக்கு கனவுகளில் மட்டும்
நிதந்தோரும் படிக்கின்ற நிஜமான பாடம்
நிலையான சித்திக்கு வழிகாட்ட வாழ்வில்
நுதல்மேட்டில் குங்குமத்தேர் நூதனமாய் இழுத்தோர்
நூறிலொரு சிலர்மட்டும் என்பதுவே உண்மை.
வானவில்லை கயிராக்கி நிலவுபட்டம் விட்ட
வாலிபத்தின் வானத்தில் வண்ணங்கள் தொலைத்து
காணவில்லை எனத்தேடும் காதலெனும் மாயை
காண்பிக்கும் வாழ்க்கையெனும் கடினமுள்ள பாதை
ஊனமுடன் அடியெடுத்து ஊர்ந்துசெல்லும் போது
உடைந்திருக்கும் உள்ளத்தின் ஓட்டைகளை அடைத்து
ஆனவரை புதுப்பிக்கும் அழகான வாழ்க்கை
ஆனந்தமாய் நிலைப்பதுவே அழியாத சொர்க்கம்.
முல்லைஅமுதன் கவிதை!
எப்போதும்
வேர்களின்
நம்பிக்கையில் இறுமாப்புடன்
நிற்கும்…புயல்
வந்து மோதினாலும்
வெற்றிவீரனாகவே சாயும்..
நாணல்
மரத்தைப் பார்த்தே கிண்டலடிக்கும்..
தன்னைப்போல்
இரு…
வாழலாம்…
பூக்கள்
வண்டுடன் காமுற்ற
போதையில்
கிடக்கும்..
இலைகள் யாராவது
உரசமாட்டார்களா
என்று சிலிர்த்து
நிற்கும்…
சருகாவதற்குள்
வாழ்வை
அனுபவித்துவிடும் துடிப்பு…
மரம்
தன்னில்
முளைத்தவற்றைப் பார்த்து
சிரித்துக் கொண்டாலும்
மௌனமாகவே
நிற்கும்..கம்பீரமாக..
இலைகளும்..பூக்களும்
விசுவாசமாகவே
இருக்கும்
என்கிற
நம்பிக்கையில்
குருவிச்சை
ஒட்டி
முளைத்ததை
அறியாமாலேயே வளர்ந்தது.
பூக்களின்
காமம்,
இலைகள்
குருவிச்சையுடனான
உரசல்..
மரத்தை
வெட்டிச் சாய்க்க
சரிந்து வீழ்ந்தது…
வேர்கள்
மட்டும் கவலைப்படாதே…
இதுதான் வாழ்க்கை…
நானிருக்கிறேன்..
என்னிலிருந்து
புதிதாய்
வீச்சுடன் மரம்
முளைக்கும் என்றது..
தடுமல் பிடித்த தும்மல்!
– கலைமகள் ஹிதாயா ரிஸ்வி –
சிந்தனைத் துளிகள்
என் வியர்வை
கவிதையென வடிக்கின்றது
நாசிக்குள் தடுமல் பிடித்த தும்மல்
கவிதை
கட்டுரை
கதை
பாடல்
விமர்சனம்
நாவல் ஊற்றெடுத்துப்
பாய்கின்றன.
குருதி ஊற்று …!
ஈரமாகின்றது
முக நூல்
இணையத் தளங்கள் நிரம்பி வடிகின்றன
போட்டி பொறாமைகளால்…!
விமர்சனங்களில் தொற்றுநோய் பரவி
வாட்டி வதைக்கின்றது
கொசுத்தொல்லை வேறு.
பெரிசுகள் தடை
இளசுகள் வளரும் வரை ….!