பதிவுகள் இணையத்தில் கிரிதரன் குறிப்பிட்டிருப்பது போன்று இன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் எழுத்தாளர் மட்டுமல்ல, அவர் சிறந்த வாசகர். அத்துடன் நல்ல நினைவாற்றலும் பல்துறை ஆற்றலும் மிக்கவர்.தினமும் அவர் நூல்கள் படிப்பவர். அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். அவர் சினிமாவுக்கு வந்தது ஒரு விபத்து. தொடர்ந்து கல்லூரியில் படித்து பட்டம் பெறுவதற்கே விரும்பியிருந்தவர். தாய் நடிகை சந்தியாவிடம், பத்மினி பிக்ஷர்ஸ் பந்துலுவும், சித்ராலய ஶ்ரீதரும் கேட்டதனாலேயே அம்மு என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா தமிழ்த் திரையுலகிற்கு வந்தார்.
பந்துலுவின் எம். ஜி. ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன், ஶ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை முதலான படங்களே அவருடை முதல் தமிழ்ப்பட வரிசையில் இடம்பெற்றவை. 1961 இலேயே அவர் Epistle என்ற ஒரு ஆங்கிலப்படத்திலும் நடித்தவர். 1961 – 65 காலப்பகுதியில் அவர் கன்னடம், ஹிந்தி, தெலுங்குப்படங்களில் நடித்துவிட்டிருந்தார். ஆனால், அவர் எம்.ஜி. ஆருடன் திரையுலகில் இணைந்து அரசியலுக்கு வராமல் விட்டிருந்தால், சிலவேளை சிறந்த எழுத்தாளராகியிருப்பார்.
அவருடைய ஆங்கில இலக்கியப்புலமை பற்றி சாருநிவேதிதாவும் எழுதியிருக்கிறார். சட்டசபையில் ஒரு தடவை, ஒரு தி.மு.க. உறுப்பினர், தமது தலைவர் கலைஞர் செய்த தியாகங்கள் பற்றி பட்டியலிட்டுப்பேசியபோது, நேரு பிரதமராக இருந்த காலப்பகுதியில் தமிழக மாநில காங்கிரஸ் அரசு , தமிழ்நாட்டில் கல்லக்குடி என்ற பெயரை டல்மியாபுரம் என்று பெயர் மாற்ற முனைந்தபோது அங்கு ரயிலுக்கு முன்னால் படுத்து போராட்டம் நடத்தியதையும் சொன்னார். அவருக்கு பதில் அளித்த ஜெயலலிதா, உங்கள் தலைவர் கருணாநிதி ஓடும் ரயிலுக்கு முன்னால் படுக்கவில்லை. தரித்து நின்றுகொண்டிருந்த ரயிலுக்கு முன்னால்தான் படுத்தார். ஆதாரம்: கவியரசு கண்ணதாசன் எழுதிய வனவாசம் நூல். வேண்டுமானால் எடுத்துப்படித்துப்பாருங்கள் என்றார். இந்தச்செய்தி அப்பொழுது ஊடகங்களில் வெளியானதும், பலரும் சென்னை தி. நகரில் இருக்கும் கண்ணதாசன் பதிப்பகத்திற்கு படையெடுத்தனர். ஆனால், பிரதிகள் கைவசம் இல்லாத நிலையில் மீண்டும் ஒரு பதிப்பாக கண்ணதாசனின் வனவாசம் வெளியிட நேர்ந்தது என்று ஒரு தடவை கண்ணதாசனின் மகனும், பதிப்பகத்தின் அதிபருமான திரு. காந்தி கண்ணதாசன் குறிப்பிட்டார் இதுவரையில் வனவாசம் சுமார் 40 பதிப்புகளைக்கண்டுவிட்டது.
படப்பிடிப்பில் கிடைக்கும் ஓய்வுநேரங்களிலும் அவர் நூல்கள் படித்தார். அவருக்கு இசை ஞானம் இருந்தது. பரத நாட்டிய அரங்கேற்றம் செய்தவர். இவ்வாறு பல்துறை ஆற்றல் மிக்கவர்தான் ஜெயலலிதா. சினிமாவும் அரசியலும்தான் அவரை திசைமாற்றியவை.
– letchumananm@gmail.com