– இக்குறுநாவல் இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் ‘ஞானம்’ சஞ்சிகையின் ஆகஸ்ட் 2019 இதழில் வெளியாகியுள்ளது. என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. சுமணதாஸ பாஸைப் பொறுத்தவரையில் ஒரு முக்கிய உண்மையைக் கூறத்தான் வேண்டும். வன்னிமண்ணில் நாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் எங்கள் வீட்டிற்கருகில் ஒரு சிங்கள பாஸ் குடும்பம் இருக்கத்தான் செய்தது. அந்த பாஸ் குடும்பத்தவர்கள் நாங்கள் அம்மண்ணிற்குப் போவதற்கு முன்பிருந்தே அம்மண்ணுடன் பிணைந்து வாழ்ந்து வந்தவர்கள். எங்களுடன் நெருங்கிப் பழகியவர்கள். சுக துக்கங்களில் பங்கு பற்றியவர்கள் ஒருமுறை எங்கள் வீட்டிற்கருகிலிருந்த குளமொன்றில் மூழ்கும் தறுவாயில் தத்தளித்துக் கொண்டிருந்த என்னையும், சாந்தா என்ற சிங்கள இளைஞனையும் துணிச்சலுடன் காப்பாற்றியவர் அந்த சிங்கள் பாஸ்தான். நாங்கள் 70களில் யாழ்ப்பாணம் திரும்பி விட்டோம் அதன்பிறகு எங்களிற்கும் அவர்களிற்குமிடையிலிருந்த தொடர்பு விடுபட்டுப்போனது. 1983 இலிருந்து மாறிவிட்ட நாட்டு நிலைமையைத் தொடர்ந்து, தமிழ் மக்களின் போராட்டம் கனன்றெரியத் தொடங்கி விட்டது. இந்தக் காலகட்டத்தில் விடுதலைக்காகப் போராடும் அமைப்பொன்றினால் அந்தச் சிங்கள பாஸ் குடும்பமே முற்றாக அழிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? வழக்கம்போல் பலவிதமான வதந்திகள், ஊகங்கள். அந்த சிங்கள பாஸ்தான் ‘சுமணதாஸ பாஸாக’ இக்கதையில் உருப்பெற்றிருக்கின்றார். நான் இன்று உயிருடன் இருப்பதற்குக் காரணமானவர் அந்தச் சிங்கள பாஸ். அதனை என்னால் ஒரு போதுமே மறக்க முடியாது. – வ.ந.கிரிதரன் –
1.
சிந்தனையில் மூழ்கிவிடும் போதுதான் எவ்வளவு இனிமையாக, இதமாக விருக்கின்றது. மெல்ல இலேசாகப் பறப்பதுபோல் ஒரு வித சுகமாகக் கூடவிருக்கின்றது. எனக்கு இன்னமும் சரியாக ஞாபகமிருக்கின்றது. 1963ம். ஆண்டு மாரிகாலம் தொடங்கி விட்டிருந்தது. என் பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். அப்பா ஆங்கில வாத்தி, அம்மா தமிழ் டீச்சர். இருவரிற்குமே வவுனியாவிற்கு மாற்றலாகியிருந்தது. அம்மாவிற்கு வவுனியா மகாவித்தியாலயத்திற்கும் அப்பாவிற்கு நகரிலிருந்த இன்னுமொரு பாடசாலைக்கும் மாற்றல் உத்தரவு கிடைத்ததுமே அப்பா முன்னதாக வவுனியா சென்று, வாடகைக்கு வீடு அமர்த்திவிட்டு வந்திருந்தார். வீட்டுச் சாமான்களையெல்லாம் ஏற்றி வர ஒரு லொறியை ஏற்பாடு செய்துவிட்டு அப்பா லொறியுடன் வர, நானும் அம்மாவும் அக்காவும் தம்பியும் மாமாவுடன் சோமர் செட் காரொன்றில் வன்னி நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது எனக்கு வயது ஐந்துதான். அந்தப் பயண அனுபவம் இன்னமும் பசுமையாக நெஞ்சில் பதிந்து கிடக்கின்றது. முதன் முதலாக பிறந்த இடத்தை விட்டு இன்னுமொரு இடத்திற்கான பயணம். நெஞ்சில் ஒருவித மகிழ்ச்சி, ஆர்வம் செறிந்து கிடந்தது. கார் பரந்தன் தாண்டியதுமே வெளியும், வானுமாகத் தெரிந்த காட்சி மாறிவிட்டது. சுற்றிவரப் படர்ந்திருந்த கானகத்தின் மத்தியில் பயணம் தொடங்கியது.
வன்னி மண்ணின் அழகு மெல்ல மெல்ல தலைகாட்டத் தொடங்கிவிட்டது. மரங்களிலிருந்து செங்குரங்குகளும், கறுத்த முகமுடைய மந்திகளும் எட்டிப் பார்க்கத் தொடங்கி விட்டன. பல்வேறு விதமான பட்சிகள் ஆங்காங்கே தென்படத் தொடங்கி புதிய சூழலும், காட்சியும் என நெஞ்சில் கிளர்ச்சியை ஒருவித ஆவலை ஏற்படுத்தின. பயணத்தை ஆரம்பித்த பொழுது இருண்டு கொண்டிருந்த வானம், இடையிடையே உறுமிக் கொண்டிருந்த வானம், நாங்கள் மாங்குளத்தைத் தாண்டியபொழுது கொட்டத் தொடங்கிவிட்டது. பேய் மழை அடை மழை என்பார்களே அப்படியொரு மழை, சூழல் எங்கும் இருண்டு, ‘சோ’ வென்று கொட்டிக்கொண்டிருந்த மழையில் பயணம் செய்வதே பெரும் களிப்பைத் தந்தது. அன்றிலிருந்து கொட்டும் மழையும் அடர்ந்த கானகமும் பட்சிகளும் எனக்குப் பிடித்த விடயங்களாகிவிட்டன. ஒவ்வொரு முறை மழை பொத்துக் கொண்டு பெய்யும் போது, விரிந்திருக்கும் கானகத்தைப் பார்க்கும்போதும், அன்று முதன்முறையாக வன்னி நோக்கிப் பயணம் செய்த பொழுது ஏற்பட்ட அதேவிதமான கிளர்ச்சி, களிப்பு கலந்த உணர்வு நெஞ்சு முழுக்கப் படர்ந்து வருகின்றது. பேரானந்தத்தைத் தந்து விடுகின்றது.
நாங்கள் வவுனியாவை அடைந்த பொழுது பேயாட்டம் போட்டுக் கொட்டிக் கொண்டிருந்த வானத்தின் கோரம் குறைந்து விட்டிருந்தது. நாங்கள் செல்லவேண்டிய பகுதிக்கு பெயர் ‘குருமண் காடு’. வவுனியா நகரிலிருந்து, ஒன்றரை மைல் தொலைவில் மன்னார் வீதியில் அமைந்திருந்தது. இன்று அபிவிருத்தியடைந்துவிட்ட பகுதி ஆனால் அன்றோ நாலைந்து வீடுகளையும், ஒரு பெரிய ‘பண்ணையையும் கொண்ட காடு. படர்ந்த பகுதி. கண்டுபிடிப்பதுதான் கஷ்டமாகவிருந்தது. காரை மன்னார் றோட்டின் கரையோரம் நிறுத்திவிட்டு, யாரும் தென்படுகின்றார்களா என்று பார்ப்பதற்காக மாமா காரை விட்டிறங்கினார். சிறிது நேரம் ஒருவரையுமே காணவில்லை.
“இந்தப் பேய்க்காட்டுக்குள்ளை போய் உன்ர புருஷன் வீட்டைப் பார்த்தாரே” என்று சலித்தபடி காரை நோக்கி மாமா திரும்பத் தொடங்கியபோதுதான் அந்த மனுஷனைக் கண்டோம். குடும்பி, சறம், இடுப்பில் அகன்ற பெல்ட் சிரித்த செந்தளிப்பான முகம். எனக்கு அந்த மனிதனின் தோற்றம் வித்தியாசமாக விருந்தது. ஆச்சரியமாகவிருந்தது. முதல் பார்வையிலேயே பிடித்தும் விட்டது. அவர்தான் சுமணதாஸ பாஸ்.
மாமா தான் முதன்முதலில் வீட்டிற்குள் நுழையச் சென்றார். சென்றவர் “அக்கா இங்கை பாரணை” என்றபடி துள்ளிக்குதித்தபடி ஓடிவந்தார். எல்லோரும் ஏதோ ஒன்று பதறி விட்டோம். வேறு ஒன்றுமில்லை புடையனொன்று உண்ட மயக்கத்தில் கதவருகில் மயங்கிக் கிடந்திருந்தது. சுமணதாஸ் பாஸிற்குச் சிரிப்பாக விருந்தது. அருகிலிருந்த மரக்கட்டையொன்றை எடுத்து அடித்துப்போட்டு, ஒருபுறத்தில் போட்டுக் கொளுத்தினார். வன்னி மண்ணில் இந்தப் பாம்புகளிற்கு மட்டும் குறைவேயில்லை. இரத்தப் புடையன், கண்ணாடிப்புடையன், நாகம், பச்சைப்பாம்பு, தண்ணிப்பாம்பு, வெங்கணாந்தி, மலைப்பாம்பு என்று பல்வேறு வகையான பாம்புகள்! பறநாகம் பற்றிக்கூட அவ்வூர் மக்கள் அடிக்கடி கதைத்துக்கொள்வார்கள்.
2.
அன்று தொடங்கிய சுமணதாஸ் பாசுடனான நட்பு நாங்கள் வவுனியாவைவிட்டு மாற்றலாகி மீண்டும் யாழ்ப்பாணம் செல்லும் வரையில் பத்து வருடங்களாக நீடித்தது. சுமணதாஸ் பாஸ் 1953லிருந்தே அப்பகுதியில் வசித்து வருவதால் நன்றாகத் தமிழ் பேசுவார். இருந்தாலும் எம்.எஸ்.பெர்னாண்டோவின் குரலின் ஓரத்தில் இடையிடையே ஒலிக்கும் அந்த மழலைத்தமிழ் சுமணதாஸ் பாஸின் குரலிலும் ஒலிக்கத்தான் செய்தது. அந்தக் காலக்கட்டத்திலேயே சுமணதாஸ் பாஸ் ஒரு முற்போக்குவாதியாகத்தான் காட்சியளித்தார். அவரது மனைவி நந்தாவதிக்கு ஏற்கனவே முறை தவறிய தொடர்பொன்றினால் உருவான பெண் குழந்தையொன்று இருந்தது. சுமணதாஸ் பாஸ் அந்த பெண்குழந்தைக்கு எந்தவிதக் குறையும் தெரியாமல் தான் பார்த்து வந்தார். அந்தக் குழந்தை மல்லிகாவிற்கு எங்கள் வயதுதான். மனைவி நந்தாவதி கூட ஒரு நிரந்தரத் தொய்வு நோயாளிதான். சுமணதாஸ் பாஸ் மனைவி நந்தாவதியின் மேலும் குழந்தை மல்லிகா மேலும் அளவு கடந்த அன்பையே வைத்திருந்தார்.
இவர்கள் தவிர ரஞ்சிற் என்ற ஒரு இளைஞனும் சுமணதாஸ் பாசுடன் சேர்ந்து வேலை செய்து வந்தான். அவன் வசித்தது அவர்களுடன்தான். சுமணதாஸ் பாஸ் வீட்டிலேயே மரவேலை செய்வதற்கான சகல வசதிகளையும் வைத்திருந்தார். அப்பகுதியில் இருந்தவர்களுக்கு மலிவான விலையில் தேவையான மரத் தளபாடங்களையெல்லாம் சுமணதாஸ் பாஸ் தான் செய்து கொடுத்து வந்தார். ஒய்வான நேரங்களிலெல்லாம் சுமனதாஸ் பாஸ் எங்களுடன் குழந்தைகளைப் போல் ஆடிப்பாடி விளையாடவும் தயங்குவதில்லை. இன்னமும் என் காதுகளில் அவர் ஒருமுறை சொல்லித்தந்த பாடலொன்றின் வரிகள் ஒலிக்கின்றன.
“தவளைக்குஞ்சுகள் என்ன விநோதம்
ஆடிப்பாடி ஓடி என்ன விநோதம்”
இப்படியொரு தமிழ் பாட்டு ஏற்கனவேயிருந்ததா எனக்குத் தெரியாது. ஆனால் சுமணதாஸ் பாஸ் இந்தப்பாட்டை ஒரு வித மழலைத் தமிழில் பாடிச் சொல்லித் தரும்போது கேட்பதற்கே ஆசையாகயிருக்கும். இனிமையாயிருக்கும்.
3.
நாங்கள் முதன் முதல் சென்றபொழுது குருமண்காடு அபிவிருத்தி குன்றியதொரு பிரதேசமாக இருந்தது. அண்மையில் பட்டாணிச்சுப் புளியங்குளமென்று ஒரு குளம், மாரியில் தாமரைகள் பூத்துக்குலுங்கி அழகாகத் தெரியும். குளக்கட்டில் பாலைகள், வீரைகள் நிழல் தந்துகொண்டிருந்தன. குளத்தின் மறுபுறத்தே வயல்வெளி விரிந்து கிடந்தது. நீர்க்காகங்கள், மீன்கொத்திகள், ஆலாக்களென்று எந்த நேரமும் பல்வேறு வகையான பறவைகளின் வாசஸ்தலமாக அக்குளப்பகுதி காட்சியளித்தது. குளத்தின் இரு பகுதிகளில் படிக்கட்டுக்கள் கட்டி வைத்திருந்தார்கள். மாரியில் குளம் பொங்கினால் வழிவதற்கேற்ற வகையிலான அணை மாதிரிக் கட்டி வைத்திருந்தார்கள். ஜப்பான் மீன், விரால்மீன் என்று பல்வேறு வகையான மீன்களோடு தண்ணிர்ப்பாம்புகளும் அடிக்கடி காணப்பட்டன.
குளத்திற்கு முன்பக்கம் குருமண் காட்டிற்குச் செல்லும் பாதையை அண்டியதாக ஒரு மயானம். முஸ்லிம்களிற்குச் சொந்தமானதொரு மயானம். அந்த மயானத்தைச் சுற்றியும் காடு பரந்து கிடந்தது. முதன்முதலாக அப்பகுதிக்கு வந்தபோது அம்மாவிற்கு மனது சிறிது சரியில்லாததாக யிருந்ததை உணர்ந்தேன். போதாதற்கு இது வேறு அவவின் கலக்கத்தை அதிகப்படுத்திவிட்டது. அதுவும் பெளர்ணமி நாட்களில் இந்தச் சுடலையிலிருந்து நரிகள் ஊளையிடும்போது, நள்ளிரவில் படுக்கையில் புரளும்போது கூட ஓரளவு நெஞ்சு கலங்கத்தான் செய்யும். எனக்கோ முதற் பார்வையிலேயே அப்பகுதி பிடித்துப் போய்விட்டது. மரங்களிலிருந்து ஆங்காங்கே ‘தாட்டன் குரங்குகள்” என்று அப்பகுதி மக்களால் வர்ணிக்கப்படும் கருமூஞ்சிக் குரங்குகளை தெரிந்தன. அவை அடிக்கடி கொப்புகளில் தாவிக்கொண்டன. அவற்றை ஆர்வத்துடன் பார்த்தேன்.
பிரம்மாண்டமாக வளர்ந்திருந்த கருங்காலி மரங்கள், பாலை மரங்கள், முதிரை மரங்கள் எனக்குப் பிரமிப்பைத்தந்தன. ஆரம்பத்தில் கலக்கத்தைத் தந்தாலும் போகப்போக அம்மாவிற்கும் அப்பகுதி பிடித்துப்போனது. முதன் முதலாக சுமணதாஸ் பாஸ் வழிகாட்ட நாங்கள் வாடகைக்கு அமர்த்தியிருந்த வீட்டை அடைந்தபோது நான் அடைந்த அனுபவங்கள் இன்னமும் என் நெஞ்சின் ஆழத்தே பசுமையாகப் பதிந்து போய்க்கிடக்கின்றன. மன்னார் ரோட்டிலிருந்து காட்டினுாடு சென்ற மண் பாதை முடியும் இடத்தில் நான்கு வீடுகள் மட்டுமேயிருந்தன. அதில் நாங்கள் பார்த்திருந்தது முதலாவது வீடு.
பெரிய வளவின் நடுவில் அமைந்திருந்த ஒடு வேய்ந்த வீடு. வளவில் கோவைப் பழ மரமொன்றும், முருங்கைகள் சிலவும், முள் முருக்கையொன்றும் காணப்பட்டன. அதைத்தவிர ‘தகரை என அழைக்கப்படுகின்ற ஒருவிதமான பற்றையாக வளரும் செடி, முழுவளவையும் மூடிப் படர்ந்து கிடந்தது. வீட்டிற்கு முன்பாக, அடர்ந்த காடு படர்ந்து கிடந்தது. புதியவர்களான எங்களைக் குரங்குகள் சில ஆவலுடன் பார்த்துவிட்டு கொப்புகளில் குதித்துக்கொண்டன. மரஅணிலொன்று துள்ளிப் பாய்ந்தது.
4.
எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் ஒன்றரை மைல் தொலைவிலிருந்தது. ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் ‘நடராஜா’தான். அப்பா படிப்பித்த பாடசாலை நகரின் இன்னுமொரு பகுதியிலிருந்தது. நானும் அக்காவும் தம்பியும் அம்மா படிப்பித்த பாடசாலையில் தான் படிக்கத் தொடங்கினோம். தாய்க்கோழி குஞ்சுகளைக் கூட்டித் திரியிற மாதிரி, அம்மாவைச் சுற்றி பள்ளிக்கூடம் சென்று வருவது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். பாடசாலை செல்லும் வழியில் குளங்கள் வயல்களென்று பசுமை செழித்துக் கிடந்தது. அதிகாலை நேரத்தில், மெல்லிய கதிரொளியின் தண்மையில் நடந்து செல்வதே சுகமானதொரு அனுபவம்.
எங்கள் வீட்டின் முன்புறத்தில் றோசா, மல்லிகை, காசித்தும்பை, கனகாம்பரம், செவ்வந்தி யென்று அக்கா ஒரு பூந்தோட்டமே போட்டு விட்டிருந்தார், பின்வளவில் கிணற்றிற் கண்மையில் பாகல், கத்திரி, பூசணி, மிளகாய், புடலங்காய் தக்காளி, அவரை என்று சின்னதொரு காய்கறித்தோட்டம் அம்மா போட்டிருந்தார். ஒவ்வொரு நாளும் விடிய பள்ளிக்கூடம் போவதற்கு முன்பு நான் தான் தண்ணிர் வார்ப்பது வழக்கம். தண்ணிர் வார்க்கும் போது தேன் குடிக்க வரும் சிறிய கரிய தேன் சிட்டுக்களிரண்டை விடுப்புப் பார்ப்பது, வாசல் அருகிலுள்ள மரத்தில் வந்து அடிக்கொருதரம் வாலையாட்டும் கொண்டை விரிச்சான் குருவிகளைப் பார்த்து வியப்பது.இந்தக் கொண்டை விரிச்சான் குருவிகளிற்கு நீண்ட கரிய வால்கள் வாலின் அடிப்புறத்தில் வால் இரண்டாகப் பிளந்து கிடக்கும். ஒவ்வொரு முறை மெல்லியதாக சப்தமிடும்போது வாலை ஒருமுறை அசைக்கத் தவறாத குருவி. அழகான மஞ்சளில் கருப்புக்கோடுகள் இடையிடையே படர்ந்த மாம்பழத்திக் குருவிகளிற்கும் பஞ்சமில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் அதிகமாகக் காணப்பட்ட காகங்களிற்கும் குயில்களிற்கும் தான் பஞ்சம், காகங்கள் இல்லாதபடியால் தான் குயில்களிற்கும். பஞ்சம், குயில்கள் தானே காகக்கூடுகளில் களவாக முட்டையிடும் பட்சிகள். ஆனால் செண்பகங்கள், குக்குறுபான்கள் நிறையவேயிருந்தன. பருந்துகளிற்கும் குறைவில்லை. கொவ்வை மரமிருந்ததால் கிளிகளிற்கும் பஞ்சமில்லை. பருந்தினத்தைச் சேர்ந்த இன்னுமொரு பறவை ஆலா. ஆனால் இவை பருந்தைப்போல் கோழிக்குஞ்சு அதிகம் பிடிப்பதில்லை. கூடுதலாக குளத்தைச் சுற்றியே மீன் பிடிப்பதற்காகத் திரிவதைக் கண்டிருக்கின்றேன். நீர்க்காகங்கள் அதிகாலை அல்லது மாலை நேரங்களில் குளங்களை நோக்கி, விண்ணில் நிரைநிரையாகப் பறப்பதைப் பார்க்கவேண்டும். மிக நேர்த்தியாக அல்லது V வடிவில் அல்லது நேர்கோட்டில் பறப்பதற்கு எங்கு தான் பழகினவோ? குளம்நோக்கி கொக்குகள், நாரைகள், மீன்கொத்திகள் என்று படையெடுக்கும் பறவைகள் பலவிதம்.
இவை தவிர இன்னுமிருவகையான பறவைகள் சுவாரஸ்யமானவை ஒன்று ஆட்காட்டிப் பறவை இவை காடுகளில் வேட்டைக்குப்போகும் மனிதர்களை மிருகங்களிற்குக் காட்டிக் கொடுத்துவிடுமாம். ஆட்களைக் காட்டி விடுவதால் வந்த பெயர்தான் ஆட்காட்டியாம். இவைபற்றி ஒரு கதைகூடச் சொல்வார்கள். இவை சதா சந்தேகத்துடன் வாழும் பறவைகளாம். மரங்களில் தூங்குவதில்லையாம். தூங்கும்போது மரம் அவற்றின் பாரம் தாங்காமல் முறிந்துவிட்டாலென்ற தற்பாதுகாப்பு நடவடிக்கை தான். தரையில்தான் படுப்பினமாம் அப்படிப் படுக்கும்போது வானை நோக்கிக் கால்களை விரித்தபடி மல்லாக்காகத்தான் படுப்பினமாம். தற்செயலாக, நித்திரையாயிருக்கும்போது வானம் இடிந்துவிட்டால் தாங்கிப் பிடித்து விடலாமல்லவா? சரியான சந்தேகராமன்தான் போங்கள். மற்றது ஊர்லாத்திப் பறவைகள். இவை மரத்தில் தங்கி நிற்பது வெகு அபூர்வம். எந்நேரமும் ஊரை உலாத்தியபடி திரிவதால் வந்தபெயர்தான் ஊர்லாத்தி. இவை தவிர காடை, கவுதாரி, காட்டுக்கோழி, மணிப்புறா என்று பல்வேறு பிரிவுகள். தோட்டம் தவிர கோழிகளும் வளர்க்கத் தொடங்கினோம். கோழிக்குஞ்சுகளை பருந்திடமிருந்தும் மரநாய்கள், கீரிகள், நரிகளிடமிருந்து பாதுகாப்பாதுதான் பெரிய சிரமம். ஒரு முறை பெரிய வைற்லெக்கோன் சேவலொன்றை கழுத்தைப்பிடித்து இரத்தம் முழுவதையும் உறிஞ்சிவிட்டு மரநாயொன்று போட்டுவிட்டிருந்தது. மரநாயைப் பொறுத்தவரையில் இரத்ததைக் குடிப்பதோடு சரி. ஆனால் இந்த நரிகளை எனக்கு கொஞ்சம்கூடப் பிடிப்பதேயில்லை. அடிக்கடி சந்திக்கருகிலிருந்து சுடலையைக் கடந்து செல்லும்போது நாலைந்து ஒரு குழுவாகக் கடந்து காட்டினுள் செல்லும்போது சிலவேளை எங்களை ஒருவித பார்வை பார்க்கும். அவற்றின் அந்தப் பார்வை எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காது. நயவஞ்சகமான பார்வை, நடுநிசியில் சுடலையிலிருந்து ஊளையிடுவதாலும் அவற்றை எனக்குப் பிடிப்பதில்லை. எங்கள் வீட்டு வளவில் முயல்வளைகளும் நிறைய இருந்தன. ஆனால் முயல்களைப் பகலில் காண முடியாது. அவை இரவில்தான் வெளியில் வரும்போலும். ஆனால் சில வேளை அவற்றைக் கண்டிருக்கின்றேன். மண்ணிறம் கலந்த சிறிய குழி முயல்கள், இலேசாக இருட்டத் தொடங்கியதுமே வெளவால்கள் பறக்கத் தொடங்கிவிடும். ஆந்தைகள் நத்துகளும் நிறையயிருந்தன. ஒவ்வொரு நாளும் பள்ளிக்குப்போகும்போது வீதியிலுள்ள மின்சார வயர்களில் அகப்பட்டுக் கருகிக் கிடக்கும் வெளவால்களை அடிக்கடி காணலாம். அவற்றின் சிறிய கால்கள் பெரிய உடலைத் தாங்கும். பலமற்றவை மேற்கம்பியில் கால்களைப் பற்றித் தலைகீழாகத் தொங்க முயலும்போது அடுத்த கம்பியில் உடம்பு பட்டுவிட்டால் அதோகதிதான். பார்க்கப் பாவமாயிருக்கும். இவை தவிர வீட்டுவளவில் தும்பிகள், வண்ணத்துப் பூச்சிகள் நிறையவேயிருந்தன. வண்ணத்துப் பூச்சிகள் எத்தனையோ வகைகள், இரவில் விண்னெல்லாம் நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும். மரங்களைச்சுற்றி மின்மினிகள் செயற்கை வெளிச்சம் தந்தபடி படந்து கிடக்கும்.
இரவென்றால் எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. ஈஸிசேரில் படுத்திருக்கும் அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்கி, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் வானத்தைப் பார்த்து மயங்கிக் கிடப்பது. அப்பா நட்சத்திரங்களைப்பற்றி, செயற்கைக் கோள்களைப்பற்றி, சிலவேளைகளில் வானைக் கீறிச்செல்லும் எரிகற்களைப் பற்றியெல்லாம் அலுக்காமல் சலிக்காமல் விளக்கம் தருவார்.
இன்னுமொரு விசயம். இந்தப் பல்லிகள், யாழ்ப்பாணத்தில் சிறிய பல்லிகளைத்தான் காணலாம், ஆனால் இங்கு எங்கள் வீட்டில் இரண்டு விதமான பல்லிகளிருந்தன. ஒன்று வழக்கமான சிறிய பல்லி, ஆனால் இன்னுமொன்றோ பெரிய புள்ளிகளிட்ட சிறிது கருமையான பல்லி. காட்டுப்பல்லியென்று கூறுவார்கள். இந்தக் காட்டுப்பல்லி பார்ப்பதற்குச் சிறிது பயங்கரமாக இருக்கும். இவை தவிர வீட்டைச் சுற்றி அடிக்கடி உடும்புகள், அறணைகள், ஓணான்கள், தேரைகள், தவளைகள் என்று பல்வேறுவிதமான உயிரினங்கள்வளைய வந்தன.
எங்கள் வீட்டிற்கு அடுத்த வீடுதான் சுமணதாஸ் பாஸின் வீடு. சுமணதாஸ் வீட்டு வளவில், எங்கள் வளவிற்கருகாக பப்பா மரமொன்றிருந்தது. அந்த மரத்தைச் சுற்றி எந்நேரமும் செங்குரங்குகளைக் காணலாம். குரங்கு வைத்து வித்தை செய்பவர்கள் கொண்டு திரிவது இந்த வகைக் குரங்கைத்தான். குரங்கைப் பற்றி நினைத்ததும் தான் ஞாபகம் வருகிறது பாம்பாட்டிகள். இந்தப் பாம்பாட்டிகள் குறிசொல்லும் குறவர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், பொய்க்கால் குதிரைவைத்து ஆட்டங்காட்டும் பொம்மலாட்டக்காரர்கள் இவர்களிற்கெல்லாம் குறையேயிருந்ததில்லை. ஒருவர் மாதிரி ஒருவர் வந்து கொண்டேயிருந்தார்கள். இவர்களெல்லாம் வாழ்விற்கு ஒருவித களையை இனிமையை ஊட்டிக்கொண்டிருந்தார்கள்.
5.
இச்சமயத்தில் வவுனியா நகர பொலிஸ் நிலையத்தைச் சுற்றி “சேகுவேரா இளைஞர்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக மண்மூடைகள் ஆங்காங்கே போடப் பட்டிருந்தன. ஒருமுறை இம்மண்மூடைகளை வேடிக்கை பார்த்தபடி வந்துகொண்டிருந்தபோது, வவுனியா நகரசபை மைதானத்தில் மூன்று ஹெலிகொப்டர்கள் வந்திறங்கின. ‘சப்மெஷின்கன்களுடன் சிங்களச் சிப்பாய்கள் நகரசபை மைதானத்தைச் சுற்றியிருந்த கழிவுநீர் செல்வதற்காக வெட்டப்பட்டிருந்த கால்வாய் பகுதிக்குள் மறைந்து நின்று பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். முதன்முதலாக என் வாழ்வில் ‘சப்மெஷின் கன்களைப் பார்த்தது அப்பொழுதுதான். அன்றிலிருந்து புரட்சி அடக்கப்பட்ட காலம் வரை அடிக்கடி புகையிரத நிலையங்களில், வீதிகளில், சிங்களச் சிப்பாய்கள் ‘சப்மெஷின்கன்’களுடன் திரிவதைப் பார்ப்பது பழக்கமாகிவிட்டது. ஒரு சில சமயங்களில் மெஷின்கன் பொருத்தப்பட்ட திறந்த ஜிப்புகளில் சிங்களச்சிப்பாய்கள் செல்வார்கள். அவர்களை அவ்விதம் பார்ப்பது எங்களிற்கொரு வேடிக்கையான அனுபவம். எந்தவிதப் பயமும் எங்களிற்கேற்பட்டதில்லை. அவர்களும் தமிழர்களுடன் அன்பாக, இயல்பாக நடந்துகொண்டார்கள். சிங்கள இளைஞர்கள் விடயத்தில் மட்டும் எச்சரிக்கையாக, சந்தேகத்துடன் நடந்துகொண்டார்கள். இந்த சப்மெஷின்கன்’களைப்பற்றி நெடுநாள் எனக்கொரு சந்தேகமிருந்தது. இதன் குழலைப்பற்றி துளைகள் பல கொண்டதொரு பகுதியிருக்கும். குளிர்தன்மையைத் தருவதற்காக ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் முதன்முறையாக அதனைக் கண்டபோது பலவிதமான கதைகள் எங்களை ஈர்த்தன. அவற்றிலொன்று சமயத்தில் அந்தத் துளைகள் வரியாக ஐநூறு குண்டுகளைச் சுடலாமென்பதுதான். சிங்களப் போலிசாரைப் பொறுத்த வரையில் அவர்களை நான் ‘சப்மெஷின்கன்” களுடன் கண்டதில்லை. வழக்கம்போல் நீண்ட ‘ரைபிள்’ தான் அவர்களது ஆயுதம்,இது அன்று. ஆனால் இன்றோ. .ஒரே மண். ஆனால் எத்தனைவிதமான நிகழ்வுகள். எல்லாவற்றிற்கும் சாட்சியாக அமைதியிலாழ்ந்து கிடக்கும் என் பிரியமான வன்னிமண்.
வன்னிமண், இந்த மண்ணில் கழிந்துவிட்ட என் பால்ய காலத்து நினைவுகள் எல்லாமே நெஞ்சின் ஆழத்தில் பசுமையாகப் பதிந்து கிடக்கின்றன. இந்த மண்ணில் கழிந்து விட்ட காலத்தின் ஒவ்வொரு கணமும் தெளிவான விம்பமாக நெஞ்சில் விரிகின்றது. காடுகள், குளங்கள், வயல்கள் திரும்பிய பக்கமெல்லாம் இயற்கையின் தாலாட்டு. இந்த மண்ணின் மேல் நிற்கும்போது புனிதமானதொரு உணர்வினை, கூடவே இனிமை கலந்ததொரு உணர்வினை நானடைவது வழக்கம். இம்மண்ணின் நினைவுகளும் எனக்கு அதனைத்தான் ஏற்படுத்தி விடுகின்றன. குளங்களென்றதும் தான் ஞாபகத்திற்கு வருகின்றது. இந்த மண் குளங்கள் மலிந்த மண். மூலைக்குமூலை குளங்கள். எங்கள் வீட்டிற்கண்மையில் கூட நிறைய குளங்கள் காணப்பட்டன. பட்டாணிச்சுப் புளியங்குளம், வேப்பங்குளம், நெழுக்குளம், நாவற்குளம், பண்டாரிக்குளம், வைரவபுளியங்குளம், வவுனியாக்குளம், இறம்பைக்குளம், பேயடிச்சான் கூழாங்குளம் இப்படிக் கூறிக்கொண்டே போகலாம். இம்மண்ணின் ஊர்ப்பெயர்கள் கூட மாங்குளம், புளியங்குளம், பாவற்குளமென்று முடிவதைக் காணலாம்.
நாவற்குளம் பல்வேறு நினைவலைகளைத் தோற்றுவித்து விட்டது. இந்தக் குளத்திற்கு அண்மையில் செல்லும் புகையிரத பாதை எங்கள் வாழ்வில் முக்கியமானதொரு விடயத்தைப் பிடித்து விட்டிருந்தது. ஒருபுறம் காடு. மறுபுறம் பெரியதொரு நிலப்பரப்பை உள்ளடக்கிய விவசாயக் கால்நடைப்பண்ணை. இவற்றிற்கிடையில் அமைதியாக நீண்டு கிடக்கும் புகையிரதப்பாதை. தண்டவாளங்களில் காதுகளை வைத்து தொலைவிலேயாவது புகைவண்டி வருகின்றதாவென்று ஆராய்வது எங்களது விளையாட்டுக்களிலொன்று. இன்னுமொரு விளையாட்டு சோடா மூடியை புகையிரதம் வரும்போது வைத்துவிட்டு வேடிக்கை பார்ப்பது. இவ்விதம் விரிவடைந்திருக்கும் சோடா மூடியின் நடுவில் துளைகளிட்டு, நூல்கோர்த்து இரு கைகளாலும் நூலின் இருமுனைகளையும் பற்றியிழுத்து.நடுவில் சுழலும் சோடா மூடியைப் பார்த்து வியந்து நிற்பது. இதுவும் எங்களது பொழுது போக்குகளிலொன்றுதான். ஒவ்வொரு முறை புகைவண்டி அப்பகுதியைக் கடக்கும்போதும் அதுவரை மரங்களில் மெளனமாக இலைகளைச் சப்பிக்கொண்டு, அல்லது பேன் பார்த்துக்கொண்டிருக்கும் குரங்குகளெல்லாம் சத்தம் போட்டபடி கொப்புகளில் துள்ளித் திரிவதைப் பார்க்கவும் வேடிக்கையாகத்தானிருக்கும். இந்தப் புகையிரதப் பாதை இன்னுமொரு விடயத்திற்கும் பிரசித்தம். எனக்குத் தெரிந்து குறைந்தது மூன்று பேராவது இப்பகுதியில் புகைவண்டி முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார்கள். இவர்களில் முதலாவதாகத் தற்கொலை செய்து கொண்டவரின் பெயர் ராமன். இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர். இவரை நான் ஒருமுறைதான் பார்த்திருக்கின்றேன். அப்பொழுது நாங்கள் வவுனியா சென்றிருந்த புதிது. எங்கள் வீட்டிற்கருகாக காடு மண்டிக் கிடந்தது. ஒருமுறை ஏதோ குழப்படி செய்து விட்டு, பிரம்புடன் வந்துகொண்டிருந்த அப்பாவிடமிருந்து தப்புவதற்காக அருகில் மண்டிக்கிடந்த காட்டுப்பகுதிக்குள் ஓடிவிட்டேன்
6.
‘தவளைக் குஞ்சுகள் என்ன விநோதம் ஆடிப்பாடியோடி ஆடும் விநோதம்’.. சுமணதாஸ பாஸின் மழலைக்குரல் இன்னமும் காதுகளில் ஒலிக்கின்றது. தவளைக் குஞ்சுகளில் விநோதத்தைக் கண்ட சுமணதாஸ் பாஸிற்கு என்ன தான் நடந்தது? சுமணதாஸ் பாஸுடன் எனக்கிருந்த அனுபவங்களை எடைபோட்டுச் சீர்தூக்கிப்பார்க்க மனம் முயலத் தொடங்கியது. குறிப்பாக அந்தச் சம்பவம். என்னால் மறக்கவே முடியாத சம்பவம். இன்று நான் உயிரோடிருக்கின்றேனென்றால் அதற்குக் காரணம் சுமணதாஸ் பாஸ். அந்த சுமணதாஸ் பாஸ் இன்றில்லை.
பட்டாணிச்சுப் புளியங்குளம். வித்தியாசமான பெயர். மன்னார் ரோட்டில், குருமண் காட்டுச் சந்தியில், முஸ்லிம் சுடலைக்கு முன்பாகவுள்ள குளம், நான் முதன் முறையாக நீந்தப் பழகியது இந்தக் குளத்தில்தான். நாங்கள் முதன் முதல் வன்னிமண்ணில் காலடியெடுத்து வைத்தபோது இந்தக்குளம் முட்டி மோதிக்கொண்டிருந்தது. முட்டி மோதும் சமயங்களில் வடிவதற்காக குளக்கட்டின் ஒரு புறத்தில் காட்டை வெட்டி, குளத்து நீர்மட்டத்துடன் சேர்த்து சிறியதொரு அணைகட்டி வைத்திருந்தார்கள். தாமரைகள் படர்ந்து குளம் அழகு பெற்றுக்கிடந்தது. குளத்தின் மறுபுறம் வயல்வெளியும் விரிந்து கிடந்தன. வயல் வெளிகளை ஊடறுத்துப் பார்த்தால் எல்லைக்காவலனின் மாளிகை பார்வையில் தட்டுப்படும். குளமும் வயல்வெளியும் சந்திக்குமிடத்தில் தாமரைக் கொடிகள் படர்ந்திருந்தன. கொக்குக்கள் எந்நேரமும் தவமியற்றிக் கொண்டிருந்தன. குளக்கட்டும் மரங்களின் அரவணைப்பில் மயங்கிக் கிடந்தது. மீன் கொத்திகள் மரங்களில் அடிக்கடி கொத்திய மீன்களுடன் காணப்பட்டன.
என்னையும் அக்காவையும் ‘கட்டிலிருத்தி விட்டு அப்பா குளத்தில் மூழ்கியெழுவார். அப்பா அடிக்கடி நீரினுள் காணாமல் போகும் போதெல்லாம் நெஞ்சு பதைக்கும். வியக்கும். நல்ல காலம் நான் அழவேயில்லை. அழுதிருந்தால் என் வாழ்க்கையே மாறிவிட்டிருக்கலாம். அம்மையும் அப்பனும் காட்சி தந்திருக்கலாம். ஞானப்பால் சுவைத்திருக்கலாம். இன்னுமொரு தேவாரச் செல்வர் தமிழிற்கு அழகு சேர்த்திருக்கலாம். எதுவுமே நடக்கவில்லை. நானும் அழவில்லை அதற்குப் பதிலாக வேறொன்று செய்தேன். ஒருமுறை இப்படித்தான் காணாமல் போகும் அப்பாவைக் கண்டு பிடித்தாலென்ன என்றொரு எண்ணம் எழுந்தது. விளைவு நான் காணாமல் போனேன். அக்காதான் முதலில் காணாமல்போன என்னைக் காணவில்லை என்பதைக் கண்டு பிடிச்சா. மூச்சு முட்டக் குடித்திருந்தவனை அப்பா ஒரு மாதிரிக் கண்டுபிடித்துக் கரைசேர்த்தார். நானின்று உயிரோடிருப்பதற்கு முதற்காரணம் அப்பா, ஏற்கனவே நானிவ்வுலகிலிருப்பதற்கே அவர்தான் காரணமாயிருந்தார். அதனுடன் ஒப்பிடும்பொழுது இதன் முக்கியத்துவம் குறைந்து போய்விடுகின்றது. இதனையே எம் குடும்பத்தைச் சேராத ஒருவர் செய்தால் அதற்கு முக்கியத்துவம் வந்துவிடுகின்றது. அதனைத் தான் சுமணதாஸ் பாஸ் செய்தார். அது நடந்தபோது எனக்குப் பதினொருவயது. நீந்துவதற்கு முயன்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் மூக்காலும் வாயாலும் நீர் உள்ளே போய்விடும். இதற்கிடையில் தண்ணி ரென்றால் எனக்கொரு பயம் கூட இருந்தது. அதற்குக்காரணம் எம் பாடசாலை நண்பனொருவன், எனக்குத் தலையில் மூன்று சுழிகள். நண்பன் சொன்னான். ‘மூன்று சுழிக்காரர்கள் தண்ணிரென்றால் கவனமாயிருக்கவேண்டும் நான் சிறிது எச்சரிக்கை. ஆனால் அதையும் மீறி நீந்துவதற்கு மனம் பேரார்வத்துடன் முயன்று கொண்டிருந்தது.
வழக்கம் போல் ஒரு மதியம். சூரியன் உச்சியில் சுட்டெரிந்துக் கொண்டிருந்தான். நீர்கொழும்பு ஆறுமுகத்தின் குடும்பம், சுமணதாஸ் பாஸ், ரஞ்சிற் இவர்களுடன் நானும் தம்பியும் குளத்திற்குப் புறப்பட்டோம். குளத்தில் அன்று அவ்வளவு சனநடமாட்டமில்லை. கொக்குகளும் நீர்காகங்களும் நிறைந்திருந்தன. குமார், பாபு இருவரும் நன்றாக நீந்துவார்கள். ரஞ்சிற்றுடன் சேர்ந்து மரக்குற்றியைப் பிடித்துக் கொண்டு நீந்தியபடியிருந்தார்கள். நானும் குந்தவியும், தம்பியும் நெஞ்சளவு தண்ணில் நின்றுகொண்டு ஒருவரிற்கொருவர் முகத்தில் தண்ணி அடித்து விளையாடிக்கொண்டிருந்தோம். இதில் குந்தவி சரியான கெட்டிக்காரி. அவளுடன் போட்டி போட முடியாது. நீர்கொழும்பு ஆறுமுகம் தன்பாட்டில் பாடியபடி கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அது ஒரு பழைய திரைப்படப் பாட்டு கேட்பதற்கு இனிமையான நாட்டுப் பாட்டு. பாகப்பிரிவினையில் சிவாஜி சரோஜாதேவியைப் பார்த்துப் பாடுவதாகவுள்ள பாட்டு.
“தாழையாம் பூ முடித்து
தடம் பார்த்து நடை நடந்து
வாழையிலை போல வந்த கண்ணம்மா”
ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து நிறைதண்ணியில் வரும் நீர்கொழும்பு ஆறுமுகத்தின் பழைய படப்பாடல்களை வானொலிப் பெட்டிகளில்லாத அப்பகுதி மக்களிற்கு ஒரு வரப்பிரசாதமென்றுதான் கூறவேண்டும். சுமணதாஸ் பாஸ் கரையில் உடம்பிற்குச் சவர்க்காரம் போட்டுக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் கரைப்பக்கம் குற்றியுடன் நீந்தி வந்த ரஞ்சிற் மீண்டும் நடுப்பக்கம் திரும்பத் தொடங்கினான். எனக்கொரு யோசனை…எத்தனை நாள் தான் கரையிலையே கிடந்து பழகுவது. மரக்குற்றியைப் பிடித்து நீந்திப் பழகினாலென்ன ரஞ்சிற் சம்மதித்தான். குற்றியை மட்டும் இறுகப் பற்றிக்கொள்ள, எக்காரணம் கொண்டும் கைப்பிடியை மட்டும் தளரவிட்டிடாதே யென்றான். சரியென்றேன். குற்றியைப் பற்றியடி நீந்தத் தொடங்கினேன். குற்றியின் முன்பக்கத்தில் ரஞ்சிற் பின்பக்கத்தில் நான்.
மரக்குற்றியைப் பிடித்து நீந்துவதிலேற்பட்ட உள்ளக் கிளர்ச்சியில் கரையை விட்டு நீண்ட தூரம் வந்ததே தெரியவில்லை. சுற்றிவரத் தண்ணிர். மேலே நீலவான். பார்ப்பதற்கு அழகாயிருந்தது. என்னையே மெய்மறந்து போனதில் என்பிடியைச் சிறிது நெகிழவிட்டேன். அவ்வளவுதான். .குற்றி என் பிடியைவிட்டு முற்றாகவே விடுபட்டுப் போனது. தண்ணிருக்குள் கைகளை அடித்துக் கொண்டு தத்தளிக்கத் தொடங்கினேன். மூச்சு முட்டியது. நீரை நன்கு குடித்தேன். ஒரு முறை உள்ளே போய் மீண்டபோது ரஞ்சிற் பதைபதைப்புடன் என்னை நோக்கி வருவது தெரிந்தது. அந்தக் கணத்தில் தத்தளிப்பதில் தான் முழுக்கவனம். வேறெந்த யோசனையுமே ஏற்படவில்லை. ஏற்படவும் முடியாது. இரண்டாவது முறை மேலே வந்தபோது ரஞ்சிற் வந்து என் தோள்களைப் பற்றிப்பிடித்தான். அங்குதான் அவன் பிழை விட்டான். நீரில் தத்தளிப்பவனைத் தலையில் பிடித்துத்தான் காப்பாற்ற முயலவேண்டும். தத்தளித்துக் கொண்டிருப்பவன் எது தட்டுபட்டாலும் அதனைப் பற்றியிறுகப் பிடித்து விடுவான். அது தான் இயல்பு. அதனைத்தான் நானும் செய்தேன். ரஞ்சிற்றின் கழுத்தைச் சுற்றிக் கைகளால் அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். பாவம் ரஞ்சிற்; என்னைக் காப்பாற்ற வந்தவன் என்னுடன் சேர்ந்து மூழ்கத்தொடங்கினான். என்னுடன் சேர்ந்து என்னைக் காப்பாற்ற, தன்னைக் காப்பாற்ற தத்தளித்துக் கொண்டிருந்தவனை விட்டு மரக்குற்றியும் தூரத்திற்குச் சென்றுவிட்டது. இருவருமே மூழ்கத் தொடங்கினோம்.
இதற்கிடையில் நாங்கள் தத்தளிப்பதைக் குந்தவி கண்டுவிட்டாள். கரையில் சவர்க்காரம் போட்டுக் கொண்டிருந்த சுமணதாஸ் பாஸிற்கு விசயத்தைக் கூறினாள். கரையில் வேறு பெரிய மனிதர்கள் சிலருமிருந்தார்கள். எல்லோரும் யோசித்தார்கள் ஆனால் சுமணதாஸ பாஸோ யோசிக்கவில்லை. இதுதான் சுமணதாஸ் பாஸின் முக்கியமான குணங்களிலொன்று. ஆபத்துக்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்வது. தத்தளித்துக் கொண்டிருந்த எங்களருகில் வந்தவர் இருவர் கழுத்துகளையும் தனது கைகளால் இறுக்கிப் பிடித்து எங்களை அசையவிடாதபடி நீந்திக்கொண்டு வந்து கரைசேர்த்தார். அண்மையில் கூட எங்கோவொரு நாட்டில் குளமொன்றில் தவறிவிழுந்த குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் நூறுபேர் வரையில் கரையில் நின்று வேடிக்கை பார்த்தார்களென்று பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஏன் அன்று கூட சுமணதாஸ் பாஸைத்தவிர வேறு சிலரும் கரையில் நிற்கத்தான் செய்தார்கள். வேடிக்கை பார்க்கத்தான் செய்தார்கள். ஆனால், சுமணதாஸ் பாஸ் மட்டும் தான் ஒன்றைப் பற்றியும் யோசிக்காமல் எங்களைக் காப்பாற்ற முயன்றவர். ஒருவரைக் காப்பாற்றவே தயங்குவார்கள். அதிலும் தத்தளிக்கும் இருவரைக் காப்பாற்றுவதென்றால் சுமணதாஸ் பாஸ், உனக்கு நெஞ்சுத் துணிவு மிகவும் அதிகம் தான். இன்று உன்னால் உயிர் கொடுக்கப்பட்ட நான் இருக்கிறேன். ஆனால் நீ… பாஸிற்கு என்ன நடந்தது? சுமணதாஸ் பாஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். காரணம் உளவாளி, தமிழர்களிற்கெதிராக சிங்கள இராணுவத்துடன் ஒத்துழைத்தார். அவர் குடும்பத்திற்கென்ன நடந்தது? மனைவி பிள்ளைகள் எல்லோருமே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? சுமணதாஸ் பாஸஸுடன் சேர்ந்து அவர்களும் உளவு கூறினார்களா? சிங்கள இராணுவத்திற்குத் தமிழர்களைக் காட்டிக் கொடுத்தார்களா? சந்தேகத்தின் வித்து இங்கு தான் முளைவிடுகின்றது. விசாரணை நடக்கவில்லை, சாட்சிகள் வரவழைக்கபடவில்லை, முழுக்குடும்பத்திற்குமே தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. பாதிக்கப்பட்டதனால் தான் இன்று எம்மக்களின் போராட்டமே வெடித்துக் கிளம்பியுள்ளது. அதில் நீதியிருக்கின்றது. நியாயமிருக்கின்றது. அந்தப் போராட்டத்தை மாசு படுத்தக் கூடாது. கொச்சைப் படுத்தக் கூடாது. அப்பாவிகளின் உயிர்களிற்கு உத்தரவாதம் தேவை. அவர்கள் யாராயிருந்தாலும் சரி, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும். அரசுடன் சேர்ந்தியங்குகின்றார்கள் என்பதற்காக, தமிழ் இளைஞர்களின் குடும்பங்களையே ஒட்டு மொத்தமாகப் போட்டுக் கொன்றுவிட முடிகிறதா? ஒரு குடும்பத்து உறுப்பினர்களிலேயே பல்வேறுபட்ட கருத்துள்ளவர்கள் இருக்கும் போது.
சுமணதாஸ் பாஸை நான் கடைசியாகச் சந்தித்தது வன்னிமண்ணை விட்டு யாழ் மண்ணிற்குப் பழையபடி திரும்பியபோதுதான். அதன் பிறகு அவரை நான் சந்திக்கவேயில்லை. பல வருடங்கள் ஓடிவிட்டன. நான் அறிந்த சுமணதாஸ் பாஸ் அதன்பிறகு முற்றாகவே மாறிவிட்டிருக்கலாம். உண்மையிலேயே இராணுவத்தின் உளவாளியாக செயலாற்றியிருக்கலாம். சூழல் யாரைத் தான்விட்டது. அல்லது இன உணர்வைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டுவதற்கு அந்தக் குடும்பத்தையே பலியாக்கியிருக்கலாம். ஏனைய சிங்களவர்களை அப்பகுதிக்கு வரக்கூடாதென்று எச்சரிப்பதற்காக அச்செயல் புரியப்பட்டிருக்கலாம். உளவாளியென்று உன்னோடு சேர்ந்து முழுக்குடும்பத்தையும் கூண்டோடு கைலாசமேற்றி அனுப்பிவிட்டார்கள். நியாயப் படுத்துவதற்கா ஆட்களில்லை. எதையுமே நியாயப்படுத்த அடுக்கடுக்காக அள்ளி வீசக் காரணங்களாயில்லை. சொந்தச் சகோதரர்களையே தெருவில் எரித்துப் போட்டுவிட்டு அதற்குமொரு நியாயம் கற்பித்த பரம்பரையைச் சேர்ந்தவர்களல்லவா நாங்கள். வழக்கம்போல் இதற்கும் காரணங்களை அள்ளி வீசுவோம்.
‘பாஸ் இராணுவத்திற்கு உளவு சொன்னான்’ ‘பாஸின்ற மனுசிக்கும் இராணுவத்திற்கும் அப்படியிப்படி ஏதோ தொடர்பாம். விட்டு வைக்க கூடாது’ ‘அவங்கட பிள்ளைகளும் சேர்ந்துதானாம்.” ‘போராட்டப் பாதையில் இதையெல்லாம் விட்டு வைக்ககூடாது’…. ஆனால் எனக்குத் தெரிந்த நீ. என்னைவிட அம்மண்ணுடன் உனக்குத் தான் அதிக சொந்தம், நாங்கள் முதன் முறையாக வந்தபோதே அந்தப் பகுதி காடுமண்டிப் போய்க் கிடந்தது. ஆனால் நீ வந்தபோதோ நான் பிறந்திருக்கவேயில்லை. அந்தப் பகுதி எந்த நிலையில் இருந்திருக்கும். இளைஞனான நீ கனவுகளுடன் கற்பனைகளுடன் புதுமண்ணில் வாழ்க்கையைத் தொடங்கி யிருப்பாய், திட்டங்கள் பல போட்டிருப்பாய். எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. உன் கற்பனைகள் மட்டுமல்ல. இன்று என் கற்பனைகள் கூடத்தான். என் கனவுகள், கற்பனைகள். வாழ்க்கைத் திட்டங்கள் அழிக்கப்பட்ட நிலையில் எனக்கோ அன்னிய நாடொன்றில் அகதிவாசம், உனக்கோ இவ்வுலகிலிருந்தே அன்னிய வாசம், “போராட்டம்” , “இராணுவத் தீர்வு” என்று பெயரில் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகப் போகின்றனவோ? போரில் நேரடியாக ஈடுபட்டவர்களின் அழிவைவிட, இதுவரை அழிந்துபோன , பாதிக்கப்பட்ட அப்பாவி உயிர்களின் எண்ணிக்கைதான் மிகமிக அதிகம். உலகம் முழுவதிலும் நிலைமை இதுதான். இதன் முடிவு தானென்ன.
சுமணதாஸ் பாஸ் உன்னையும், உன் குடும்பத்தையும் “உளவாளி யென்று பரலோகம் அனுப்பி வைத்தவர்களிற்கு உன்னையும் தெரியாது. உனக்கும் அந்த மண்ணிற்கு மிடையிலிருக்கும் பந்தமும் புரியாது. அவர்கள், நீ அந்த மண்ணில் காலடிவைத்து ஆண்டுகள் பல கழிந்து இவ்வுலகில் அவதரித்திருக்கலாம். தெரிந்திருக்க நியாயமில்லைதான். ஆனால் எனக்கு. காடுமேடுகளென்று குளங்களென்று உன்னுடன் அலைந்து திரிந்த எனக்கு உன்னைத் தெரியும், உன் நெஞ்சையும் நல்லாய் புரியும். நான் நிச்சயமாக நம்புகிறேன். நீ உளவாளியாகியிருக்க முடியாது. என் உயிரைக் காப்பாற்றும் போது நான் தமிழன் நீ சிங்களவனென்று நீ நினைத்திருக்கவில்லை. மனிதனென்று தான் எண்ணினாய். அந்த மனிதாபிமானத்தை எனக்கு விளங்கும். என் எதிர்பார்ப்பையும் மீறி உண்மையிலேயே காலம் உன்நெஞ்சிலும் இனஉணர்வுகளை விதைத்து விட்டிருந்தால். அதற்கும் கூட உனக்கும் உன் குடும்பத்தவர்க்கும் கிடைத்த தண்டனை கொடியதுதான். மிகவும் கொடியதுதான்.
“தவளைக்குஞ்சுகள் என்ன விநோதம்
ஆடிப்பாடியோடி ஆடும் விநோதம்”
சுமணதாஸ் பாஸ் குமிண்சிரிப்புடன் மழலைத்தமிழில் பாடிக்கொண்டிருக்கின்றார். வீசும் காற்றில் இறுக்கமான அந்தக் குடும்பிகூட இலேசாக ஆடுகின்றது. அவரைச் சுற்றி நாங்களும் அந்தப் பாடலைப் பாடியபடி ஆடிக்கொண்டிருக்கின்றோம். வாழ்க்கையில் எவ்வளவு அர்த்தம் பொதிந்து கிடக்கின்றது. தவளைக்குஞ்சில் தெரியும் விநோதமாகத் தான் வாழ்வேயிருக்கின்றது. தவளைக் “குஞ்சினோடு வாழ்க்கையை விநோதமாகப் பார்த்தாய் நீ, ஆனால் உன் முடிவே இவ்விதம் விநோதமாக முடியுமென்று யார் கண்டது? சுமணதாஸ் பாஸ் நீ எங்கேயிருக்கின்றாய்? விரிந்து கிடக்கின்றது பிரபஞ்சம், புதிர் நிறைந்து முடிவற்ற தொடராக விரிந்து கிடக்கின்றது தொலைவில் இதன் ஆழங்களிலெங்கோ இருந்தபடி நீ இன்னமும் “தவளைக் குஞ்சுகள் என்ன விநோதம் பாடிக் கொண்டிருக்கலாம். அதே மழலைக்குரலில் அதே குமிண் சிரிப்பில். உன்னைச்சுற்றி உன்னைக் கொன்றவர்களே ஆடிப் பாடிக் கொண்டிருக்கலாம். யார் கண்டது? உண்மையை அறிந்தவர் யாரே? நனவிடை தோய்ந்துவிட்டு நனவிற்கு வருகின்றேன். கண்கள் பனித்துப் போய்க் கிடக்கின்றன. மனம் பாறையாகிக் கிடக்கின்றது. “பியர்சனை நோக்கி ‘எயர் கனடா வொன்று விரைவதை அந்த சிவந்த மேப்பிள் இலை காட்டி நிற்கின்றது. யதார்த்தம் உறைக்கின்றது.
ngiri2704@rogers.com
நன்றி: ஞானம் சஞ்சிகை ஆகஸ்ட் 2019
ஞானம் சஞ்சிகையில் கதையினை வாசித்து உடனடியாகத் தன் எதிர்வினையை என் மின்னஞ்சலுக்கு அனுப்பியிருந்தார் எழுத்தாளர் குரு அரவிந்தன். அவருக்கும் நன்றி. அவரது எதிர்வினை கீழே:
Kuru Aravinthan
To:ngiri2704@rogers.com
Aug. 1 at 10:03 p.m.
அன்பின் கிரிதரன்,
வணக்கம்.
ஞானம் இதழில் வெளிவந்த தங்களின் சுமணதாஸ் பாஸ் பல விடயங்களை எடுத்துச் சொல்லும் குறுநாவலாக இருக்கின்றது.இயற்கை சார்ந்த மரம், குளம், மிருகம், பறவை என்று அந்த மண்ணில் வாழ்ந்தவர்களோடு இணைந்த அத்தனையும் பாத்திரங்களாகி இருக்கின்றன.
கதையில் வருவது போல, அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்குவது அனேகமான சிறுவர்களின் பழக்கமாக அக்காலத்தில் இருந்தது. நானும் இப்படித்தான் அப்பாவின் மடியில் படுத்துக் கொண்டு இருட்டியதும் தென்னிந்தியாவில் இருந்து தெற்கு நோக்கி பறக்கும் மாம்பழ வெளவால்களை நிலவு வெளிச்சத்தில் எண்ணியிருக்கின்றேன். இலுப்பம்பழக் காலத்தில்அதிகமாக பறந்து வரும் இவை காலையில் திரும்பிச் சென்று விடுமாம்.
குறுநாவல் மூலம் பல விடயங்களைத் தெரிய வைத்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
குரு அரவிந்தன்.”