டானியல் நினைவலைகள்…! வி. ரி. இளங்கோவன்

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த 14-ம் திகதி வெள்ளிக்கிழமை (14 – 01 – 2011) மாலை இடம்பெற்ற ‘இலக்கியக் களம்” நிகழ்ச்சியில் ‘டானியல் நினைவலைகள்;” என்ற தலைப்பில்  எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் (பிரான்ஸ்) நிகழ்த்திய உரையின் சுருக்கம். ‘ஞானம்” சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன் இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்தார். டானியல் யார்? என்ன அவர் சாதனை? அவரை  இன்றும் நினைத்துக்கொள்ள, அவர் என்ன செய்துவிட்டார்? டானியல் ஓர் அற்புதமான மனிதர் – கலைஞர் – மனிதாபிமானி – எல்லாவற்றுக்கும்மேலாய் தமிழில் ஓர் அருமையான படைப்பாளி – நாவலாசிரியர் – சமூக விடுதலைப் போராளி – தடம்புரளாத அரசியல்வாதி.

 

ஈழத்தமிழர் மத்தியில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் பிறந்து வறுமையோடு தவழ்ந்து, சமூகக் கொடுமைகளுக்கு முகங்கொடுத்து, கடுமையாகப் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களின் தளைகளை அறுத்தெறிந்து அவர்களைச் சகமனிதர்களுடன் சமானமாக நிலைநிறுத்துவதற்குத் தன் உடல் பொருள் ஆவி என அத்தனையையும் அர்ப்பணித்துப் பணியாற்றியவர் தான் டானியல்.  

என் இளமைக் காலத்தில் என் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்திச் சரியான சமூகப் பார்வையுடன் பேனா பிடிக்க  வழிகாட்டியவர்களில் முக்கியமானவர் கே. டானியல். சுமார் பதினான்கு ஆண்டுகள் அவரோடு    இணைந்து பணியாற்றியதும், அவரது இறுதி மூச்சு பிரியும் வேளையுpலும் உடனிருந்து உதவியதும் என்னால் மறக்க முடியாதனவாகும்.

தலித் இலக்கியம் தற்போது தமிழ் இலக்கியப் பரப்பில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. விவாதிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த   நாடுகளிலும் நம்மவர் மத்தியில் இதுகுறித்து சர்ச்சைகள் நோக்குகள் கூர்மையடைந்து விவாதத்திற்குரியனவாகின்றன. தலித் இலக்கியப் பிதாமகர், முன்னோடி எனத் தமிழக விமர்சகர்களாலும்  ஈழத்து இலக்கியக்காரர்  பலராலும் டானியல் விதந்துரைக்கப்படுகிறார். இதில் ஒரு விடயம் சுலபமாக மறக்கடிக்கப்படுவதாகத் தெரிகிறது.

டானியல் ஒடுக்கப்பட்ட மக்களில் அடிமட்டச் சமூகத்தில் பிறந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே போராடியவர், எழுதியவர் என்பதாக மட்டுமே உணர்த்தப்படுகிறது. அவரது பொதுவுடமைக் கட்சிப் பணி மறைக்கப்படுவதாக எண்ணத் தோன்றுகிறது. டானியல் இன்று உயிருடன் இருந்தால் நிச்சயமாக இத்தகைய பார்வையை ஏற்றுக்கொள்ளமாட்டார்.

டானியல் பொதுவுடமைக் கட்சியின் தொடர்பு காரணமாகவே சமூகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியவர்.  பொதுவுடமைக் கட்சியினை    வடபகுதிக்கு அறிமுகஞ்செய்து மக்கள் மத்தியில் பரவலாக்கி இறுதிவரை அதற்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் தோழர் மு. கார்த்திகேசன். அவரது தொடர்பு டானியலைப் பொதுவுடமை அரசியல் ரீதியாகவும், எழுத்துத்துறையிலும் வளப்படுத்தியது எனலாம்.

இளமைக் காலத்தில் வறுமையில் துவண்டபோதிலும், திருமணத்தின் பின்பும் வறுமையும், இடர்பாடுகளும் வாட்டிவதைத்தபோதிலும் அவர் கட்சிப் பணிகளிலிருந்து தன்னை ஒதுக்கிக்கொண்டவரல்ல. பொதுவுடமைக்கட்சியினது வடபிரதேசக் கிளையின் முழுநேரச் செயற்பாட்டாளராகப் பல வருடங்கள் பணியாற்றிவர் டானியல்;.

60-களின் நடுப்பகுதியில் சர்வதேசரீதியாகப் பொதுவுடமை இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு இலங்கையிலும் எதிரொலித்தது. இதன் காரணமாகச் சோவியத்சார்பு, சீனச்சார்பு எனப் பிளவு இலங்கைப்  பொதுவுடமை இயக்கத்திலும் ஏற்பட்டது. பெரும்பாலான உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், கலை இலக்கியவாதிகள் தோழர் என். சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கட்சியினை ஆதரித்தனர். டானியலும் தோழர் சண் பாதையிலேயே இயங்கியவர்,

1971-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விஜயவீரா தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியினர் தொடங்கிய கிளர்ச்சியினால் பொதுவுடமைக்கட்சி (சீனச் சார்பு) பல பின்னடைவுகளை, அடக்குமுறைகளை, சீர்குலைவுகளை எதிர்கொண்டது. முன்னணித் தலைவர்கள் பலரும் சிறையிடப்பட்டனர். டானியலும் சுமார் ஒரு வருடம் சிறையிடபட்டார். நீரிழிவு நோயாளியான அவர் பல வேதனைகளை சிறையில் அனுபவித்தார். சந்தர்ப்பவாதிகளால் கட்சியில் பிளவுகள் ஏற்பட்டபோதிலும் நேர்மைமிக்க தலைவரான தோழர் சண்முகதாசனின்  ;பாதையிலேயே டானியல் இறுதிவரை செயற்பட்டார்.

1979-ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் பிரமாண்டமான முழுநாள் மாநாடு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளால் மண்டபம் நிரம்பி வழிந்தது. இம்மாநாட்டின் வெற்றிக்காக இரவுபகலாக டானியல் இயங்கியதை யான் அறிவேன். தோழர் சண் வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தார். டானியல், எஸ். ரி. என். நாகரத்தினம், கே. கிருஸ்ணபிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேராசிரியர் நந்தி, பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், லைஞர் சிசு நாகேந்தரா, கலைஞர் குத்துவிளக்கு பேரம்பலம் உட்படப் பல கலை இலக்கியவாதிகள் மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

‘எனக்கு ஓர் அரசியல் பாதை உண்டு. அதற்கு உந்துசக்தியாகவே எனது படைப்புகளைத் தருகிறேன்’ என டானியல் சொல்வதுண்டு. டானியல் அரசியல் செயற்பாட்டாளர். சமூக விடுதலைப் போராளி. எழுத்தாளர். பேச்சாளர். ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அந்த வடிவத்தை அடையாளம் கண்டு எதிர்க்கின்ற பக்குவமும் துணிவும் ஆற்றலும் டானியலுக்கு இருந்தது. அதனால் யாழ் குடாநாட்டில் எந்தக் குக்கிராமத்தில் வாழும் மனிதனும் தனக்குச் சாதியின் பெயரால் அல்லது ஏதாவது வகையில் ஒடுக்குதல் – நெருக்கடி ஏற்பட்டால் அதற்கான பரிகாரம்தேடி ஆலோசனைபெற, ஆதரவுபெற டானியலைத்தேடி வருவதை  யான் பல வருடங்களாகப் பார்த்திருக்கிறேன். அந்தவகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் மனதில் நிறைந்த ஒரு மனிதனாக டானியல் விளங்கினார். அவரது செயற்பாடுகளுக்கு பேருதவியாகக் கட்சித் தோழர்கள் இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சமூக குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத்தை அமுல்படுத்தக்கோரி 1966-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் திகதி சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்க அந்த ஊர்வலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் முற்போக்கு எண்ணங்கொண்ட சகல மக்களும் – முஸ்லீம் மக்களுட்படக் கலந்துகொண்டனர். பொலிசாரின் தாக்குதலுக்குள்ளாகியும் நிலைகுலையாத ஊர்வலம் யாழ்நகர் நோக்கிச்சென்றது. இந்த ஊர்வலத்திற்குத் தலைமை கொடுத்துச் சென்றவர்களில் டானியலும் ஒருவர்.

இதன் பின்னரே தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் உதயமானது. இது ஒரு சாதிச்சங்கம் அல்ல. சாதியத்தையும் தீண்டாமையையும் எதிர்த்துநின்ற சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்த ஒரு பரந்த வெகுஜன இயக்கமாகவே முன்னெடுக்கப்பட்டது. பல வெற்றிகளைக் கண்டது. கட்சி தென்னிலங்கை முற்போக்கு சக்திகளின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்தது. அன்று இலங்கைப் பாராளுமன்றம் முதல் சீன வானொலிவரை இந்த இயக்கத்தின் செயற்பாடுகள் பேசப்பட்டன. குடாநாட்டின் இருண்ட பகுதிகளுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் செயற்பாடுகள் அத்தனையிலும் டானியலின் பங்களிப்பு முக்கியமானது.

தலித்துகள் மட்டும் தான் தலித்துகளுக்காகப் போராடவேண்டும் என்ற சிலரது கூற்று சரியானதல்ல. வடபகுதியில் அன்று நடந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டம் அத்தகைய கருத்தைக் கொடுக்கவில்லை. அது தோழர் சண்முகதாசன் தலைமையிலான பொதுவுடமைக் கட்சியின் பூரண ஆதரவுடன் சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து நடைபெற்றது. பல்வேறு கலை இலக்கியப் படைப்பாளிகள்
இதற்கு உறுதுணையாகச் செயற்பட்டார்கள். பேராசிரியர் கைலாசபதி, பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், முருகையன், இளங்கீரன், அம்பலத்தாடிகள் குழுவினர் மற்றும் இளந்தலைமுறையைச் சேர்ந்த பல கலை இலக்கியப் படைபாளிகள் தலித்துகள் அல்ல. ஆனால் அவர்கள் உறுதுணையாகச் செயற்பட்ட மார்க்ஸிசவாதிகள்.

இலங்கையில் ஈழகேசரி, மறுமலர்ச்சி மற்றும் வீரகேசரி, தினகரன் ஆகியவற்றில் எழுதத்தொடங்கிய டானியல் தமிழ்நாட்டில் வெளிவந்த சிறந்த இலக்கிய இதழான சரஸ்வதியிலும் தம் படைப்புகளை வெளியிட்டார். சரஸ்வதியின் மிக முக்கியமான மூன்று படைப்பாளிகளில் ஒருவராய் ஜெயகாந்தன், சுந்தரராமசாமி ஆகியோருடன் இலங்கை எழுத்தில் முதற் படைப்பாளியாய் சரஸ்வதியில் தொடர்ந்து சிறுகதைகளைப் படைத்தாரெனப் பிரபல எழுத்தாளர் தஞ்சைப் ப்ரகா~; குறிப்பிட்டுள்ளார். சரஸ்வதி இதழில் டானியலின் உருவம் முகப்புப் புகைப்படமாய் அட்டையில் 1951-ல் பிரசுரம் செய்யப்பட்டு பாராட்டப்பட்டார்.

அத்துடன் ப. ஜீவானந்தம் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த தாமரை கலை இலக்கிய ஏட்டிலும் எழுதினார். டானியல் கதைகள் (சிறுகதைத் தொகுதி) பஞ்சமர் – நாவல் இருபாகங்கள்) உலகங்கள் வெல்லப்படுகின்றன (சிறுகதைத் தொகுதி)  போராளிகள் காத்திருக்கின்றனர் – நாவல், இலங்கையிலிருந்து ஓர் இலக்கியக் குரல் – பேட்டி, மற்றும் கோவிந்தன், அடிமைகள், கானல், தண்ணீர், பஞ்சகோணங்கள் ஆகிய பஞ்சமர் வரிசை நாவல்கள், நெடுந்தூரம், மையக்குறி, முருங்கையிலைக் கஞ்சி, பூமரங்கள், சா நிழல் ஆகிய குறுநாவல்கள், என் கதை – கட்டுரை என்பன நூலுருவில் வெளிவந்த டானியலின் படைப்புகளாகும்.

டானியலின் படைப்புகள் ஜப்பான், இந்தியா, இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றன. டானியலின் படைப்புகளை ஆய்வுசெய்து பண்டிதர் செ. திருநாவுக்கரசு உட்படப் பலர் கலாநிதிப் பட்டங்களையும், முதுகலைமாணிப் பட்டங்களையும் பெற்றுள்ளனர்,

 1981-ம் ஆண்டு சென்னை கிறிஸ்தவ இலக்கிய சபை (சி. எல். எஸ்) சாதியமும் வறுமையும் என்ற பொருளில் நடாத்திய கருத்தரங்கில் டானியலின் பஞ்சமர் நாவல் (முதலாம் பாகம்) தனிஅமர்வில் ஆய்வுக்கெடுத்துக்கொள்ளப்பட்டது, பேராசிரியர் கா. சிவத்தம்பி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யான் டானியலின் படைப்புகள் குறித்து கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினேன். டானியல் தனது அனுபவங்கள் – படைப்புகள் குறித்துச் சிறப்புரையாற்றினார்.

டானியலின் படைப்புகளில் குடாநாட்டின் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேற்பட்ட பகுதியின் வரலாற்று ஓட்டத்தைச் சமூக நகர்வைக் கவனிக்கலாம். குடாநாட்டின் யாரும் காட்டியிராத இருண்ட பகுதிகளை வெளிச்சம் போட்டுக்காட்டியவர் டானியல். இதனால் தானோ சிலருக்கு அவர் வேண்டாதவராக ஒதுக்கப்படவேண்டியவராகத் தென்பட்டார் போலும்… அவரை ஒழித்துக்கட்டவும் பல முயற்சிகள் நடந்ததுண்டு. அவரோடு பல இடங்களுக்கும் சென்றுவந்தபோது இத்தகைய ஒருசில நடவடிக்கைகளை என்னாலும் உணர்ந்துகொள்ள முடிந்தது. சிறை வாசத்தையும், பல மாதங்கள் தலைமறைவு வாழ்க்கையையும் கண்டவர்.

1981-ம் ஆண்டு தமிழகம் சென்றபோது தஞ்சைப் ப்ரகா~pன் அழைப்பின்பேரில் தஞ்சை சென்றதும் அவர் பார்க்க விரும்பியது உயர்ந்த கோவில்களோ, அரண்மனைகளோ பெரிய மனிதர்களென இருந்தவர்களையோ அல்ல. கீழ்வெண்மணியில் உயிருடன் கொளுத்தப்பட்ட ஏழைமக்களின் நினைவிடத்தைத் தான் பார்க்க விரும்பினார். தஞ்சைப் ப்ரகா~;, எழுத்தாளர் சி. எம். முத்து ஆகியோருடன் அங்கு சென்று பார்த்தோம். பலமணி நேரம் அங்குள்ள நசுக்கி ஒடுக்கப்பட்ட கிராமத்து மக்களைச் சந்தித்து அவர் பேசியமை இன்றும் எனக்கு ஞாபகம்.

இறுதிக் காலத்தில் கண்பார்வை குன்றிவந்த நிலையில் நீரிழிவு நோய்க்கு வைத்திய சிகிச்சை பெறும்பொருட்டு;ம் கானல், பஞ்சகோணங்கள் நாவல்களை அச்சேற்றும் பொருட்டும் பேராசிரியர் அ. மார்க்ஸ் மற்றும் தோழமை பதிப்பகத் தோழர்களின் அழைப்பின்பேரில் தமிழகம் செல்ல முடிவெடுத்தார். தமிழகம் செல்லும் முன்னர் கொழும்பில் தோழர் சண் வீட்டில் தங்கியிருந்து பல்வேறு விடயங்கள் குறித்து உரையாடினார். பஞ்சகோணங்கள் நாவல் குறித்து தோழர் சண் குறிப்பிட்ட விடயங்களையும் கவனத்திலெடுத்துக்கொண்டார்.

உடல்நலம் குன்றிய நிலையிலிருந்த அவரை 30- 01 – 1986-ல் தமிழகம் அழைத்துச் சென்றேன். நீரிழிவு நோயின் முதிர்நிலைப் பாதிப்புகள் அவரை வாட்டின. தோழர்களின் ஏற்பாட்டின்படி சிகிச்சைகள் நடந்தன. உடனிருந்து கவனித்து வந்தேன். உடல்நிலையைப் பாராது பல்வேறு இடங்களுக்கும் சென்று தோழர்களைச் சந்திக்க ஆவலாயிருந்தார். திருச்சி, தஞ்சை, சென்னை, மதுரை, பாண்டிச்சேரி, கும்பகோணம் ஆகிய இடங்களுக்குச் சென்றோம்.  கூட்டங்களில் உரையாற்றினார். பலரையும் சந்தித்து உரையாடினார். தஞ்சை தங்கசாரதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டானியலுக்கு 23 – 03 – 86 காலை 8. 30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டார். டாக்டர்களும் தாதிமாரும் உடனின்று சிகிச்சையளித்தனர். எனது கையைப் பற்றிப்பிடித்தவாறு ஷதம்பி…. தம்பி….| என ஏதோ சொல்ல விழைந்த முடியாத நிலையில் அவரது உயிர் பிரிந்தது. இந்நிகழ்வு என்மனதில் என்றுமே மறக்கமுடியாத வேதனைப் பதிவாகிவிட்டது.

படைப்பாளிகளை மிகவும் நேசித்தவர் டானியல். இளம் எழுத்தாளர்களை அரவணைத்து வழிப்படுத்தியவர். பலருக்கு விளம்பரமின்றி நல்ல உதவிகள் செய்துள்ளதை என்னால் அறியமுடிந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் படைப்பாளிகளை வரவேற்று உபசரித்தவர். இதனை எழுத்தாளர்கள் வ. அ. இராசரத்தினம், லெ. முருகபூபதி, அந்தனி ஜீவா ஆகியோருட்படப் பலர் டானியல் காலமாகியதை அறிந்ததும் கண்ணீர் சிந்த எழுதியுள்ள பதிவுகளில் காணலாம். 

இறுதிவரை இலட்சியம் குன்றாத, எந்தவித விட்டுக்கொடுப்புகளுமற்ற நம்பிக்கையான போராளியாகப் படைப்பாளியாகத் திகழ்ந்த டானியல் மறைவு குறித்து இலங்கைப் பொதுவுடமைக் கட்சிப் பொதுச்செயலாளர் என். சண்முகதாசன் அன்று  எழுதியுள்ள வரிகள் குறிப்பிடத்தக்கன.

“இளமைக்காலம் முதல் பொதுவுடமைக் கட்சியின் வடபிரதேசக் கிளையின் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்புச் செய்தவர் டானியல். அறுபதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட வெகுஜன இயக்க எழுச்சிக்குத் தலைமை கொடுத்தவர்களில் ஒருவர். அவரது இழப்பு இந்த நாட்டின் இலக்கியத்துறைக்குப் பேரிழப்பு. அவர் துணிவுமிக்க போராளி. நேர்மைமிக்க தோழர். நான் நல்ல தோழனை, அன்பு நண்பனை இழந்துவிட்டேன்” எனத் தோழர் சண் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மானிட நேசனின், மக்கள் விடுதலைப் போராளியின், கூர்ந்த சமூகப் பார்வையுள்ள படைப்பாளியின் நாமம் என்றும் நிலைத்து நிற்கும்.

. thambirajah elangovan <vtelangovan@yahoo.fr>