மார்க்ஸை மறுவாசிப்பு செய்ய இதைக்காட்டிலும் உகந்த தருணம் இருக்க முடியாது. 1989 ம் ஆண்டு பெர்லின் சுவர் இடிந்ததும், கிழக்கு ஐரோப்பாவை பொறுத்தவரை பொதுவுடமையும் உடன் இடிந்ததென சொல்லவேண்டும். குடியில்லாத வீட்டில் குண்டுபெருச்சாளி உலாவும் என்பதுபோல பாசாங்குகாட்டி பொதுவுடமையை சுற்றிவருகிற நாடுகளும் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்கின்றன. இவற்றுக்கெல்லாம் மார்க்ஸை குறை சொல்ல முடியுமா? சோவியத் நாட்டில் காம்ரேட்டுகள் தோற்றதற்கு சோவியத் மார்க்ஸிஸம் (லெனினிஸமும், ஸ்டாலினிஸமும்) காரணமேயன்றி கார்ல்மார்க்ஸின் மார்க்ஸிஸம் காரணமல்ல என்பதை நினைவுகூர்தல் வேண்டும். இன்றைக்கும் எதிர்கால வல்லாதிக்க நாடுகள் என தீர்மானிக்கபட்டிருக்கிற இந்தியாவிலும் சீனாவிலும்(?) என்ன நடக்கிறது, ஏன் இந்த நாடுகளைத் தேடி மேற்கத்தியநாடுகளின் மூலதனம் வருகிறது? மார்க்ஸிடம் கேட்டால் காரணம் சொல்வார். தொழிலாளிகளின் ஊதியத்தை முடிந்த மட்டும் குறைத்து உபரிமதிப்பை அதிகரிப்பதென்ற விதிமுறைக்கொப்ப முதலாளியியம் தொழிற்பட இங்கு சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன என்பதுதான் உண்மை.
ஆக மார்க்ஸின் தீர்க்க தரிசனம் சாகாவரம்பெற்றது, ஆனால் பாதி கிணறுமட்டுமே தாண்டுகிறது. முதலாளியியமோ நெருக்கடியிலிருந்து மீளும் சாமர்த்தியம் பெற்றதாக உள்ளது. எனவே யோசிக்க வேண்டியிருக்கிறது. இவ்வுண்மைகளின் அடிப்படையில் மார்க்ஸ் அன்றைய காரணகாரியங்களின் அடிப்படையில் கட்டமைத்த கருத்தாக்கத்தை மாறுபட்ட இன்றைய சூழலில் மறு ஆய்வுசெய்வது அவசியமாகிறது. அவர் கருதுகோள்களில் சில இன்றைக்கு ஒத்திசைவானவை அல்ல. உ.ம். மார்க்ஸ் காலத்தில் ஓரிடத்தின் இயற்கை மூலகூறுகளை சரக்காக மாற்றும் போக்கு, உற்பத்தி நிகழ்முறையாக இருந்தது. உலகமயமாக்கல் என்ற பெயரில் இன்று உற்பத்திநிகழ்முறையில் பங்கெடுப்பவர்களையும், இறுதியில் இலாபம் பார்ப்பவர்களையும் அத்தனை சுலபமாக அடையாளபடுத்திவிடமுடியாது. தொழிலாளிகளுக்கு எதிராக முதலாளிகள் என்றவரிசையில் இடைத்தரகர்களாக செயல்படும் அரசியல்வாதிகள் போன்றோரையும் கணக்கிற்கொள்ளவேண்டும்.அதுவன்றி ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்கின்றன.
பொதுவுடமையை வீழ்த்தியதாக பரணிபாடும் முதலாளியியம் வென்றிருக்கிறதென்று உருதியாய் சொல்வார்களா என்றால், இல்லை. எத்தைத் தின்றால் பித்தம் தெளியலாம் என்ற நிலமை. மேற்கத்திய நாடுகளும்; தன்னை வெல்வார் இல்லையென இருமாந்திருந்த அமெரிக்காவும் தலையில் கைவத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. சீனாவும் இந்தியாவும் பிரேசிலும், ரஷ்யாவும் இவர்களுக்கு கைகொடுத்து கரையேற்றவேண்டிய கட்டாயம் நாளை நிகழலாம். ஆக மார்க்ஸை மறுவாசிப்பு செய்து மாற்று வழிமுறைகளை கண்டெடுத்தாக வேண்டிய சூழலில் உலகம் இன்றிருக்கிறது. நூலாசிரியர் டெனிஸ் கொலன் தன் பங்கிற்கு சிலவற்றை முன்வைக்கிறார்.
தத்துவ பேராசியராக பணியாற்றிவரும் டெனிஸ் கோலன்(Denis Collin). கார்ல்ஸ் மார்க் சிந்தனையில் தோய்ந்தவர். மார்க்ஸிய சிந்தனையை பழமைவாதிகளிடமிருந்து விடுவித்து நவீன காலத்திற்கொப்ப மாற்றங்களை கொண்டுவர நினைக்கும் சிந்தனாவாதி. பதினைந்துக்கு மேற்பட்ட அவரது நூல்கள் (தத்துவம் மற்றும் மார்க்ஸிய சிந்தனையை மையமாகக்கொண்டவை) அனைத்துமே உலகின் கவனத்தைப் பெற்றவை, விவாதத்திகுரியவை.
மார்க்ஸின் கொடுங்கனவு -தனியுடமையென்பது தொடர்கதையா (Le Cauchemar de Marx Le capitalisme est-il une histoire sans fin ?, Max Milo னditions, 2009) இந்த நூல் நிச்சயம் வரவேற்பை பெறுமென்பதில் ஐய்யமில்லை. இந்திய மொழிகளில் ஏனைய மொழிகளுக்கு கிடைக்காத வாய்ப்பு தமிழுக்கு கிடைத்திருக்கிறது. நூலுக்க்காக திரு தியாகுவின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த தமிழ் ‘மூலதனம்’ நூலையும், பிரெஞ்சு மொழி பெயர்ப்பில் வெளிவந்த ‘Le Capital’ நூலையும் படிக்கவேண்டியிருந்தது. நூலின் வெற்றிக்கு தியாகுவும் மறைமுகமாக உதவி செய்திருக்கிறாரென சொல்லவேண்டும். அவருக்கு நன்றிகள். இந்நூலின் பதிப்பிற்கு வழிவகுத்த காலச்சுவடு பதிப்பகத்திற்கும் நண்பர் கண்ணனுக்கும், வழக்கம்போல அரிய யோசனைகளை வழங்கி மொழிபெயர்ப்பு சிறப்பாக அமைய காரணமாகவிருந்த மரியாதைக்குரிய திரு.எம்.எஸ் அவர்களுக்கும் நன்றிகள் பல.
“மனிதன் என்பவன் இயல்பிலேயே தனித்தவன் பிறருடனான சூழலில் மகிழ்ச்சிகொள்பவனல்ல” என்ற ரூஸ்ஸோ வின் வரிக்கும் இந் நூலுக்கும் நிறையவே தொடர்புள்ளது அன்னாருக்கு இந்நூல் சமர்ப்பணம்.
(மார்க்ஸின் கொடுங்கனவு – தனியுடமை என்பது தொடர்கதையா ? நூலுக்கு மொழிபெயர்ப்பாளர் முன்னுரை)
மார்க்ஸின் கொடுங்கனவு
– தனியுடமை என்பது தொடர்கதையா ?
விலை ரூ 200
Kalachuvadu Publications Pvt.Ltd.
669 K.P. Road, Nagarcoil -629001