இன்று நவம்பர் 7, 2015 அன்று தமிழ் இலக்கியத்தோட்டம் மற்றும் காலம் சஞ்சிகை ஏற்பாட்டில் அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகரான வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவாக அஞ்சலிக்கூட்டமொன்று நடைபெற்றது. எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முனைவர் நா.சுப்பிரமணியன், ‘உரையாடல்’ நடராஜா முரளிதரன், ‘காலம்’ செல்வம், முனைவர் வெங்கட்ரமணன், எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் மற்றும் தலைமை வகித்த என்.கே. மகாலிங்கம் ஆகியோர் வெங்கட் சாமிநாதன் பற்றிய தமது கருத்துகளை முன் வைத்தனர்.
வழக்கமாக நடைபெறும் இலக்கியக் கூட்டங்கள் போலன்றி, நிகழ்வில் உரை நிகழ்த்தியவர்கள் தாம் இருந்த இடங்களில் இருந்தபடியே தமது கருத்துகளை எடுத்துரைத்தனர். சபையோரும் தம் கருத்துகளை உரையாடல்களுக்கு மத்தியில் தெரிவிக்கும் வகையில் நிகழ்வு அமைந்திருந்தது பயன்மிக்கதாகவும், ஆரோக்கியமானதாகவும் அமைந்திருந்தது.
எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் அவர்கள் வெங்கட் சாமிநாதனின் கலை, இலக்கியப்பங்களிப்பு குறித்து, ‘பாலையும், வாலையும்’ என்னும் ‘எழுத்து’ சஞ்சிகையில் வெளியான கட்டுரையின் மூலம் தமிழ்க்கலை, இலக்கிய உலகில் வெங்கட் சாமிநாதன் பலரது கவனத்தை ஈர்த்தது பற்றி, ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்கள் எவ்விதம் மஹாகவி போன்ற பலரை ஒதுக்கினார்கள் என்பது பற்றி, அக்காலகட்டத்தில் வெங்கட் சாமிநாதன் கலகக்குரலாக இயங்கியது பற்றி, பிரமிள் மற்றும் கவிஞர் திருமாவளவன் போன்றோர் பற்றி குறிப்பாக கவிஞர் திருமாவளவன் பற்றி எழுதித் தமிழகத்தில் அவர் அங்கீகாரம் பெறக்காரணமாக இருந்தது பற்றி, பிரமிள் டெல்லியில் வெங்கட் சாமிநாதனுடன் சென்று தங்கியிருந்தது பற்றி, பின்னர் இருவருக்குமிடையில் ஏற்பட்ட இலக்கிய மோதல்கள் பற்றி, மடை திறந்த வெள்ளமென பக்கம் பக்கமாக எழுதும் வெ.சா.வின் இயல்பு பற்றி, ஆரம்பத்தில் வெ.சாமிநாதன் என்றே எழுதியவர் பின்னர் வெங்கட் சாமிநாதன் என்ற பெயரில் எழுதத்தொடங்கியது பற்றி, தி.ஜானகிராமனின் எழுத்தில் வெ.சா. கொண்டிருந்த மதிப்பு பற்றி, வெ.சா.வின் ஆங்கில மொழிபெயர்ப்பு, ஆங்கிலக்கட்டுரைகள் மூலமான பங்களிப்பு பற்றி, இவ்விதம் பல்வேறு கோணங்களில் வெங்கட் சாமிநாதனைப்பற்றிய தனது நினைவுகளைப்பகிர்ந்து கொண்டார்.
முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் வெங்கட் சாமிநாதனையும், இலங்கை எழுத்தாளர் மு.தளையசிங்கத்தையும் ஒப்பிட்டுத் தனது உரையினை நிகழ்த்தினார். அத்துடன் வெங்கட் சாமிநாதனின் எழுத்தில் காணப்படும் ஆவேசம் மிக்க இயல்பினைச் சுட்டிக்காட்டினார். மேலும் தமிழகத்தில் நிலவிய பல்வேறு வகைகளிலான இலக்கியபோக்குகளையும் எடுத்துரைத்தார். முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் தமிழகத்தில் நிலவிய நான்கு வகைகளிளான இலக்கியப்போக்குகள் (மார்க்சிய இலக்கியம், திராவிட இலக்கியம், வணிக இலக்கியம் மற்றும் புதுமைப்பித்தன் வழிவந்த இலக்கியப்போக்கு என) பற்றிக்குறிப்பிட்டபோது எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அவை சம்பந்மாகமாகப் பல வினாக்களைத்தொடுத்தார். ‘உரையாடல்’ நடராஜன் முரளிதரனும் வெ.சா. பற்றிய கருத்துகள் பலவற்றைக்குறிப்பிட்டார். வெ.சா மேனாட்டு இலக்கியங்களின் அடிப்படையில் தமிழகத்துப்படைப்புகளை அணுகுவதாக அவர் குறிப்பிட்டபோது , அதனை மறுத்த தலைவர் என்.கே. மஹாலிங்கம் அவர்கள் அவரை அவ்விதம் கூற முடியாது. வேண்டுமானால் சி.சு.செல்லப்பாவை அவ்விதம் கூறலாமென்றார். மேலும் முரளி அடிக்கடி வெங்கட் சாமிநாதனை வாய் தடுமாறி வெங்கட சாமிநாதன் என்று குறிப்பிட்டபோது தலைவர் மற்றும் எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் ஆகியோர் வெங்கட சாமிநாதன் அல்ல வெங்கட் சாமிநாதன் என்று திருத்தியதையும் அவதானிக்க முடிந்தது.
‘காலம்’ செல்வம் வெ.சா.கனடா வந்திருந்தபொழுது அவரைச்சந்தித்த அனுபவங்கள் பற்றி, மீண்டும் தமிழகத்தில் அவரைச்சந்தித்த அனுபவங்கள் பற்றி, வெ.சா.வின் கலை, இலக்கியப்பங்களிப்புகள் பற்றி, ‘சரிநிகர்’ மற்றும் ‘பதிவுகள்’ இணைய இதழில் அவர் தொடர்ச்சியாக எழுதியது பற்றி எனப்பல்வேறு விடயங்களைப்பகிர்ந்துகொண்டார்.
எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரன் தனதுரையில் வெ.சா.வின் பங்களிப்புகள் பற்றிக்குறிப்பிட்டதுடன், ‘சரிநிகர்’ பத்திரிகைக்கு அவரது பங்களிப்புகளையும் நினைவு கூர்ந்தார். அத்துடன் மார்க்சிய எதிர்ப்பாளராகப் பலரால் அறியப்பட்டபோதும் ஓரிடத்திலாவது வெ.சா. மார்க்சியத்துக்கு எதிராகத்தன்னை வெளிப்படுத்தியவரல்லர் என்றும் குறிப்பிட்டார்.
முனைவர் வெங்கட்ரமணன் அவர்கள் வெங்கட் சாமிநாதன் அவர்கள் பிற மாநிலத்தவர்களுக்குத் தமிழர்களின் பக்தி இலக்கியம் போன்ற காலத்தால் தொன்மையான இலக்கியப்படைப்புக்ள் பற்றியெல்லாம் தெரிவித்து எடுத்துரைத்து, தன் எழுத்துகள் மூலம் தமிழ்க்கலை ,, இலக்கியப்பங்களிப்புக்ளை வேற்று மாநிலத்தவரும் அறியச்செய்தவர் வெ.சா. என்னும் கருத்துப்படவும், நாகார்ஜுனன் போன்றவர்களின் மூலமாகத்தான் தான் முதன் முதலில் அவரைப்பற்றி அறிய வந்ததாகவும், கூத்து, நாட்டாரிலக்கியம், சினிமா, இலக்கியம் என்று சகல துறைகளிலுமான அவரது பங்களிப்பு முக்கியமானது என்னும் கருத்துப்படவும் தன் கருத்துகளை முன் வைத்தார்.
நிகழ்வில் எழுத்தாளர்களான ரதன், செழியன், அ.கந்தசாமி, மீராபாரதி, மெலிஞ்சி முத்தன், எழுத்தாளர் மணி வேலுப்பிள்ளை, ஓவியர் கருணா மற்றும் வானொலியில் பணிபுரியும் யோகலிங்கம் கைலாசநாதன் எனப்பலரைக் காண முடிந்தது. நீண்ட நாள்களுக்குப்பின்னர் இந்நிகழ்வில் கவிஞர் செழியனைச் சந்தித்திருந்தேன்.
வெங்கட் சாமிநாதனுக்கான அஞ்சலி நிகழ்வு மிகவும் ஆக்கபூர்வமாக நடைபெற்றது. அவருக்கான நல்லதோர் அஞ்சலியாகவும் அமைந்திருந்தது.