கடந்த சில மாதங்களாகவே அப்பலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வர் விரைவில் பூரண குணம் பெற்று வருவாரென எதிர்பார்த்திருந்த நிலையில் மாரடைப்பினால் அவர் மறைந்த செய்தியினை அப்பலோ மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. தமிழகத்தின் ஏன் இந்தியாவின் வசீகரமான மக்களின் மனங்கவர்ந்த அரசியல் தலைவர்களிலொருவராக அவர் எப்பொழுதும் நினைவு கூரப்படுவார். தமிழகத்தின் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் முதலமைச்சர் என்ற வரலாற்றுச்சிறப்பும் அவருக்குண்டு. ஆழ்ந்த வாசிப்பும், பன்மொழி அறிவும் மிக்கவராக விளங்கியவர் ஜெயலலிதா. இவர் எழுத்தாளர், பத்திரிகையாளரும் கூட. கலையுலகைப் பொறுத்தவரையில் சிறந்த நடிகை மட்டுமல்லர் சிறந்த நாட்டியக் கலைஞராகவும் விளங்கியவர்
அரசியலுக்கு அப்பால் எம்ஜிஆர்/ஜெயலலிதா சினிமாவில் கோலோச்சிய காலகட்டத்தில் அவர்களது திரைப்படங்கள் பார்த்து வளர்ந்தவர்கள் பலர்.
அரசியலில் எவ்விதம் எம்ஜிஆரின் சத்துணவுத்திட்டமோ அவ்விதமே ஜெயலலிதா ஆட்சியில் பெண் சிசுக் கொலையினைத்தவிர்ப்பதற்காக அவர் அறிமுகப்படுத்திய தொட்டில் திட்டம், மாணவர்களுக்கு அவர் அறிமுகப்படுத்திய பல்வேறு நலத்திட்டங்கள், வறிய மக்களுக்காக அறிமுகப்படுத்திய குறைந்த விலை உணவுத்திட்டங்கள், மற்றும் திருமணம் செய்யவிருக்கும் குடும்பங்களுக்கு உதவும் திட்டங்கள் போன்றவையும்.
ஆணாதிக்கம் நிலவிய சினிமா மற்றும் அரசியல் உலகில் அவர் தனித்து, தைரியமாக , சவால்களை எதிர்த்து நின்ற துணிச்சல் வியப்புக்குரியது. மானுடர்கள் யாருமே நிறைவானவர்கள் அல்லர். அனைவருமே குறை. நிறைகளுடன் கூடியவர்கள்தாம். ஜெயலலிதாவும் விதிவிலக்கானவரல்லர். தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்களின் அபிமானத்துக்குரிய அரசியல் தலைவர்களிலொருவர் அவர். அம்மக்களின் உணர்வுகளை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். இத்தருணம் அவரது நல்ல பக்கங்களைப்பார்ப்போம். பாராட்டுவோம்.நினைவு கூர்வோம்.