– யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், விக்டோரியா, ஆஸ்திரேலியாவின் ‘கானமழை 2017’ சஞ்சிகையில் வெளியான கட்டுரை இது. –
‘ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் தவறென்ன’ என்று ஆக்ரோசமிடுவதுடன் திருப்தியுறும் தமிழர்களிடமுள்ள முக்கியமான குறைபாடுகளிலொன்றாக நான் கருதுவது தமிழ்ப்பகுதிகளில் காணப்படும் வரலாற்றுச்சின்னங்களைப் பாதுகாப்பதில் , பேணுவதில் காணப்படும் ஆர்வமின்மை ஆகும். மாறிவரும் காலத்தின் ஓட்டங்களுக்கேற்ப மாறிவரும் சமுதாயச்சூழலில் இனமொன்றின் தனித்துவத்தையோ அல்லது அதன் பண்பாட்டின் வளர்ச்சியையோ பேணுவது அவசியமாகும். அவ்வாறு செய்யாவிடின் அக்காலத்தின் வளர்ச்சியும், காலத்தின் கோலத்திற்கேற்ப கட்டெறும்பாகத் தேய்ந்து மறைந்துவிடும். மேலும் ஓரினத்தின் வரலாறு தெளிவின்றியிருக்குமாயின் அதன் வரலாற்றிலொரு தெளிவினை ஏற்படுத்துவதும் மிகவும் முக்கியமாகும். ஈழத் தமிழினத்தைப்பொறுத்தவரையில் அதன் வரலாற்றிலோ தெளிவற்ற ஒரு குழப்ப நிலை நிலவுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. வரலாற்றினை நிரூபிப்பதற்குரிய சான்றுகளோ கவனிப்பாரற்ற நிலையில் புறக்கணிக்கப்பட்டுக்கிடக்கின்றன. ஒரு வெளிநாட்டவரோ அல்லது நம்மவர் ஒருவரோ பார்க்க விரும்பினால் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளென்று அழைத்துச்சென்று காட்டக்கூடிய பகுதிகள் எத்தனையுள்ளன? இருக்கும் பகுதிகள் கூட கவனிப்பாரற்ற நிலையில், அவை பற்றிய போதிய தகவல்களற்ற நிலையில்தாமே இருக்கின்றன. இவ்விதமானதொரு சூழலில்தான் பழமையின் சின்னங்கள் பேணப்படுதலின் அவசியம் அதிகமாகின்றது. வரலாற்றுரீதியான ஆய்வுகளுக்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பழமையின் சின்னங்களும், சிதைந்த நிலையில் காணப்படும் அழிபாடுகளும் பேணப்பட வேண்டியது மிகவும் அவசியமான, தவிர்க்க முடியாததொன்றாகின்றது.
உதாரணத்துக்கு நல்லூர் நகரை எடுத்துக்கொள்ளுங்கள். ஈழத்தமிழர்களின் கடைசித்தமிழ் மன்னர்களான ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் இராசதானியாக, அமோகமான புகழுடன் விளங்கிய நகர் நல்லூர். இன்றைய நிலை என்ன? காலத்தின் கோலத்துக்கேற்ப விரைவாக மாறுதலடைந்துள்ள நிலையில் உண்மையில் அந்நகரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளெல்லாம் முறையாகப் பேணப்படாத நிலையில், காலவெள்ளத்தில் அடியுண்டு போகும் நிலையில்தானுள்ளன. இதுவரையில் இவ்விதம் இராஜதானியாக விளங்கிய நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஒரேயொரு ஆய்வு நூல்தான் வெளியாகியுள்ளது. அது தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம், மங்கை பதிப்பகம் (கனடா) இணைந்து வெளியிட்ட எனது நூலான ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ என்னும் நூல்தான். 1996இல் வெளியானது.
நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றி ஆராய முற்பட்டபோதுதான் தமிழர்களாகிய நாம் எம் வரலாறு பற்றிய போதிய ஆய்வுகளற்ற நிலையில் இருக்கின்றோம் என்பதை உணர முடிந்தது. உண்மையில் நல்லூர் இராஜதானியாக விளங்கிய காரணத்தால், இப்பகுதியில் காணப்படும் வரலாற்று முக்கியம் வாய்ந்த பகுதிகள் பற்றி (குளங்கள் உட்பட) , காணப்படும் வரலாற்றுச் சின்னங்கள், அவற்றின் சிதைவுகள் பற்றி, அவற்றின் வரலாறு பற்றியெல்லாம் விரிவாக , ஆராயப்பட்டு, அவை நூல்களாகப் போதிய அளவில் வெளிவந்திருக்க வேண்டும். அவ்விதம் வெளிவரவில்லை. நல்லூர் நகரானது எவ்விதம் பெளத்தர்களுக்கு அநுராதபுரம் போன்ற தென்னிலங்கை இராஜதானி நகர்களெல்லாம் புனித நகர்களாகக் கருதப்பட்டு, அங்கு காணப்படும் பழமையின் சின்னங்கள் பேணப்படுகின்றனவோ அவ்விதமே கருதப்பட்டு முறையாகப் பேணப்பட்டிருக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் வட, கிழக்குப் பகுதிகளிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்களெல்லாம் , பேணப்பட வேண்டிய நகர்களாகக் கருதப்பட்டு, அந்நகர்களின் வரலாற்றுச்சின்னங்கள், வரலாற்றுக்குறிப்புகள் எல்லாம் ஆய்வுக்கண்ணோட்டத்தில் பேணப்பட்டு, இவை பற்றிய போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியிலும், ஆள்வோர் மத்தியிலும் ஏற்படுத்தப்பட்டு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
உதாரணமாக நல்லூர் நகரானது ஈழத்தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்களிலொன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, அங்கு ஒரு நூதனசாலை அமைக்கப்படலாம். அதில் அப்பகுதியில் காணப்படும் வரலாற்றுச் சிதைவுகள், வரலாற்றுச்சின்னங்கள், வரலாற்றினை வெளிப்படுத்தி நிற்கும் நீர்நிலைகள், வளவுகள் போன்றவை பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படலாம். இருக்கும் வரலாற்றுச்சின்னங்களை முறையாகப் பேணுவதற்குரிய நடவடிக்கைகள் மாகாண அரசு சார்பில் அல்லது இலாப, நோக்கற்று இயங்கும் தனியார் அமைப்புகள் சார்பில் எடுக்கப்படலாம். அவ்விதம் எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி வரலாற்று அறிஞர்கள் வற்புறுத்தலாம். ஆலோசனைகள் வழங்கலாம். ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு உதவிகளைக் கோரலாம். இதன் மூலம் நல்லூர் நகர் பற்றிய வரலாற்றுச்சின்னங்கள் பேணப்படுவதனூடு, ஈழத்தமிழர்களின் வரலாறு ஆதாரபூர்வமாக நிறுவப்படுவதோடு, அது அப்பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கும் மிகுந்த பயனளிப்பதாகவிருக்கும். அத்துடன் சுற்றுலாப்பயணிகள் மூலம் அதிகளவு வருவாயையும் மாகாண அரசு பெற முடியும். புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.
ஈழத்தமிழர்கள் எவ்வளவுதூரம் வரலாற்றுப்பிரக்ஞை அற்று இருக்கின்றார்கள் என்பதைச் சிறு உதாரணம் மூலம் விளக்கலாம். சுவாமி ஞானப்பிரகாசர் நாற்பதுகளில் கோப்பாய்க்கோட்டை இருந்ததாகக் கருதப்படும் ‘பழைய கோட்டை’ என்றழைக்கப்படும் பகுதிபற்றி, அக்கோட்டையின் அகழியாக இருந்திருக்கக் கூடிய அப்பழைய கோட்டையைச்சுற்றியுள்ள கோட்டை வாய்க்கால் பற்றியெல்லாம் கட்டுரையொன்றினை எழுதியிருக்கின்றார். பின்னர் எண்பதுகளில் நல்லூர் இராஜதானி பற்றி ஆராயும்பொருட்டு, கலாநிதி கா.இந்திரபாலாவை யாழ் பல்கலைக்கழகத்தில் சந்தித்த வேளையில் அவர் இக்கோட்டை பற்றியும், சுவாமி ஞானப்பிரகாசரின் மேற்படி கட்டுரை பற்றியும் குறிப்பிடிருந்தார். அது பற்றி மேலதிகமாக அறிவதற்காக அக்கோட்டை இருந்த பகுதிக்குச்சென்று அது பற்றி ‘கோப்பாய்க்கோட்டையின் பழைய கோலம்’ என்றொரு கட்டுரையும் வீரகேசரியில்; எழுதியிருந்தேன். இடைப்பட்ட நாற்பது வருட காலத்தில் ஒருவருக்குச் சொந்தமாகவிருந்த அப்பழைய கோட்டைப்பிரதேசம் , பல துண்டுகளாகிப் பலருக்குச் சொந்தமாகியிருந்தன. உண்மையில் அப்பகுதி முழுமையாகப் பேணப்பட்டு பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய பகுதி. அது பற்றிய ஆய்வுகள் மேலும் ஆற்றப்பட்டிருக்க வேண்டும். எதுவுமே நடக்கவில்லை. இலங்கையின் அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டாலும், அவற்றின் உதவிகள் கிடைக்காது போனாலும், இவ்விதம் காணப்படும் வரலாற்றுச்சின்னங்களைத் தமிழர்கள் நினைத்திருந்தால் முறையாகப்பேணுவதற்குச் செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கலாமல்லவா? ஏன் முன்னெடுக்கவில்லை.
இவ்விதம் வட, கிழக்குப் பகுதிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள் பல உள்ளன. வல்லிபுரம், திருவடிநிலை, பூநரிப்பிரதேசம், முல்லைத்தீவுப்பிரதேசம். கிழக்கின் பல பகுதிகள், மன்னார்ப்பகுதிகள் என்று பல உள்ளன. இவைபற்றிய விழிப்புணர்வு இனியாவது தமிழர்களின் கவனத்தை ஈர்க்கட்டும்.
வரலாற்றுச்சின்னங்கள் பேணப்படுதல் என்னும்போது அரசர்களின் இராசதானிகள், கட்டடங்கள் மட்டுமே பேணப்பட வேண்டுமென்பதில்லை. மக்களால் அன்றாடம் பாவிக்கப்பட்ட வரலாற்றுச்சின்னங்கள் (சுமை தாங்கிகள், மடங்கள் போன்றவை), பிறதேச அரசுகளால் உருவாக்கப்பட்ட வரலாற்றுச்சின்னங்கள் (அவை தமிழர்களின் அடிமை நிலையை வெளிப்படுத்தினாலும், ஒரு குறிப்பிட்ட கால கட்டடத்து வரலாற்றைப் பதிவு செய்பவை என்ற வகையில் பேணப்பட வேண்டியவை), ஒரு குறிப்பிட்ட கட்டடக்கலையினை வெளிப்படுத்தும் கட்டடங்களை உள்ளடக்கிய பிரதேசங்கள் (உதாரணமாக, யாழ் நகரின் கிட்டங்களிகள் உள்ள பகுதி, அதனை அண்மித்த பகுதி, ஆகியவற்றில் டச்சுக்கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் கட்டடங்கள் (யாழ் கோட்டை உட்பட) பலவற்றைக் காணலாம். தமிழ்ப்பிரதேசங்களுக்குரிய பாரம்பரியக் கட்டடக்கலையினைப்பிரதிபலிக்கும் கட்டடங்கள் (உதாரணத்துக்கு யாழ்ப்பாணப்பாரம்பரிய வீடுகள் அங்கு நிலவிய காலநிலைக்கேற்ப நாற்சார வீடுகளாக அமைக்கப்பட்டன. பின்னர் இந்த நாற்சார அமைப்பினை உள்வாங்கி, டச்சுக்கட்டடக்கலை அம்சங்களையும் சேர்த்துப் பல வீடுகள் யாழ் மாவட்டத்தில் கட்டப்பட்டன. இவற்றில் பல அழிந்து விட்டன. ஆனால் இருக்கும் வீடுகளில் முக்கியமானவை பேணப்படும் கட்டடங்களாக அங்கீகரிக்கப்பட்டு பேணப்படுவதவசியம். ஏனென்றால் அவை ஒரு காலகட்டத்தைப்பிரதிபலிக்கும் வரலாற்றுச்சின்னங்கள்). இவை போன்றவையெல்லாம் கவனத்திலெடுக்கப்பட வேண்டும்.
ஒருமுறை யாழ் நகரிலிருந்து வெளியான் ஈழநாடு பத்திரிகையில் ‘பழமையின் சின்னங்கள் பேணப்படுவதன் அவசியம்’ பற்றிக் கட்டுரையொன்றினை எழுதியிருந்தேன். அதில் யாழ் பழைய சந்தையின் முக்கிய பகுதியாகவிருந்த ‘கங்கா சத்திரம்’ பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றிக் குறிபிட்டிருந்தேன். ஆனால் அதன் பின்னர் அக்கட்டடம் யாழ் மாநகரசபையினரால இடிக்கப்பட்டது துரதிருஷ்ட்டவசமானது.
அதே சமயம் பேணப்படுதல் ஏற்படுத்தும் நடைமுறைச்சிக்கல்களுமில்லாமலில்லை. கிராமப்புறங்களிலுள்ள பழமையின் சின்னங்களைப் பேணுவதைவிட நகரப்புறப் பழமையின் சின்னங்களைப், பேணுவதிலுள்ள முக்கியமான பிரச்சினை என்னவென்றால்.. நகரிலுள்ள மக்களுக்குரிய குடியிருப்புகளின் தேவை, அதிக பெறுமதியுள்ள நில மதிப்பு இவற்றின் காரணமாகப் பேணப்படுதல் நகரங்களைப்பொறுத்தவரையில் அதிகச்செலவினை ஏற்படுத்துபவை. அதே சமயம் பழமையின் சின்னங்கள் பேணப்படுதலும் அவசியமானது. இந்நிலையில் பேணப்படுதலுக்கும், மேற்கூறப்பட்ட நிலமதிப்பு போன்ற காரணிகளுக்குமிடையில் ஒருவித ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வொன்று அவசியம். வரலாற்று, தொல்பொருள் அறிஞர்களால் பரிந்துரை செய்யப்பட வரலாற்றுச்சின்னங்களே பேணப்படவேண்டும். இதற்கு மக்களினது ஒத்துழைப்பும் அவசியம். மக்கள் மத்தியில் வரலாற்றுச்சின்னங்கள் பேணப்படுதலின் அவசியம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் தனிப்பட்டவர்கள் தம்மிடமுள்ள வரலாற்றுச்சின்னங்கள் பற்றிய விபரங்களை அறியத்தருவார்கள். தமக்குச்சொந்தமான வரலாற்றுச்சின்னங்களை உள்ளடக்கிய காணிகளைப் பிளவு படுத்தி, துண்டுகளாக்கி புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கு முன்னர் சிறிதளவாவது சிந்திப்பார்கள்.
எனவே வரலாற்றில் போதிய தெளிவின்றியிருக்கும் ஈழத்தமிழர்கள், தம்மிடமுள்ள வரலாற்றினை வெளிப்படுத்தும் பழமையின் சின்னங்களைப் பேணுதலின் முக்கியத்துவம் பற்றி போதிய கவனத்தைச்செலுத்த வேண்டும். இதுவரையில் இத்துறையில் அவரது சாதனைகள் கேள்விக்குறியே. சங்கிலியன் சிலையை கட்டுவதற்குப் பதில், இருக்கும் வரலாற்றுச்சின்னங்களைப்பேணும் செயற்பாடுகளே மிகவும் அவசியமானவை என்பதை உணர்ந்து செயற்படுவோம்.
ngiri2704@rogers.com
நன்றி: கானமழை 2017 : http://www.jhcobamelbourne.org.au/images/Articles/GM2017.pdf