தமிழர் சால்பு வழக்காறும் மரபுகளும் – ஒரு நோக்கு

ஆய்வு: சங்க இலக்கிய உடன்போக்குப் பாடல்கள் வெளிப்படுத்தும் வன்முறைப் பதிவுகள்!த.சிவபாலுஒரு வழக்காற்றைத்தான் மரபு என்ற சொற்பதத்தால் பெரிதும் குறிப்பிடப்படுகின்றது. வழக்காறு அல்லது மரபு என்பது பெருந்தொகையான மக்களால் செய்யப்படும் ஏதாவது நடைமுறைச் செயற்பாடுகளைக் குறிப்பதாக அமைகின்றது. வழமையாக ஒரு நாட்டிற்கு இன்னொரு நாட்டில் இருந்து வந்த ஓரின, பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்கள், சமயத்தைப் பின்பற்றும் மக்களால் மேற்கொள்ளப்படும் தொன்றுதொட்டுப் பின்பற்றப்பட்டுவந்த அதேமுறையில் பின்பற்றப்படுமானால் அதனை ‘வழக்காற்று முறை’ என்று குறிப்பிடலாம்.

எனவே பண்பாட்டையும் வழக்காற்றையும் தனித்தனியாகப் பிரித்துவிடமுடியாது. வழக்காறு அல்லது மரபு என்பது மக்கள் வாழ்வியலைக் குறித்து நிற்பதாகும். மக்களின் பாரம்பரிய நடைமுறைகளைப் பின்பற்றி வாழும் முறைமை மரபுகளைப் பின்பற்றி வாழுவதாகக் கொள்ளலாம். வழக்காறு அல்லது மரபு என்பதற்கு ஆங்கிலத்தில் ‘Custom’ என்ற பதம் அல்லது ‘Tradition’ என்றப பதம் பயன்படுத்தப்படுகின்றது. Custom can also mean changed to suit better: altered in order to fit somebody’s requirements.  வழக்காறு என்பது ஒன்றிற்குப் பொருந்தும் வகையில் மாற்றப்படக்கூடியது என்ற பொருளையும் நடைமுறையையும் தன்னகத்தே அடக்கியுள்ளது. வழக்காறுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன அல்ல காலும், நேரம், இடம் கருதி மாற்றம் பெற்றே வருகின்றன என்பது வெளிப்படை. இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

வழக்காறுகள் அல்லது மரபுகள் மாற்றம் பெறுகின்றன என்றால் புதிய அல்லது வேறுமரபுகள் வந்து சேருகின்றன என்பது பொருளாக அமைகின்றன. எனவே நடைமுறையில் இருந்துவந்த அல்லது பின்பற்றப்பட்ட மரபுகள் நடைமுறியில் இருந்து விலகிப்போவதனைத் கட்டி இழுத்துப பற்றி நிற்க முடியாது என்பது நடைமுறை உண்மை. பண்டய நடைமுறைகளை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பது இன்று எம்முன் எழுகின்ற முக்கிய கேள்வியாகும். பண்டைய பாரம்பரியங்களை நாம் அப்படியே இறுகப்பிடித்துக்கொண்டிருந்தால் மனித சமூகம் முன்னேற்றம் கண்டிருக்க முடியாது. எடுத்துக்காட்டாக, சாதிய மரபு முறைகள் எம்மத்தியில் இருந்து அகற்றப்பட நீண்டகாலப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கல்வியறிவு வளர்ச்சியின் பயனாக சாதியத்தைப் பேணும் மரபுகள் மருவி அல்லது அருகி வருகின்றன என்பதனை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.  பண்டைத் தமிழகத்தில் இருந்த அல்லது பேணப்பட்டுவந்து பழந்தமிழர் மரபுகள் அருகி அல்லது மங்கிப்போனதற்கு அவற்றைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்க வேண்டிய தேவை சமூகவளர்ச்சியின் காரணமாக இல்லாதொழிந்து போனது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம்.

தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங்களிலும் இந்த நிலைப் பாடுகள் இடம்பெற்றுவந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என நன்னூல் தந்த பவணந்தி முனிவர் சொன்னதன் உண்மைக்கருத்தை, அதன் நிதர்சனத்தை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது வெளிப்படை. மரபுகள் என்பன காலங்காலமாக நம்முன்னோரால்; எமக்குக் கடத்தப்பட்டுவந்த நடைமுறைப் பழக்கவழக்கங்கள் ஆகும். இவையனைத்தையும் நாம் அப்படியெ ஏற்றுக்கொண்டு நடக்கின்றோமா? அல்லது ஒரு வரையறையை ஏற்படுத்திக்கொண்டு அதற்குள்ளேதான் எம்மை அடைத்து வைத்திருக்கின்றோமா? என்ற கேள்விகளுக்கு என்ன விடை கிட்டப்போகின்றது? அது நிட்சயமாக இல்ல பல மரபுகளைப் பாரம்பரியங்களை உடைத்தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம் என்பதனை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

தமிழர் வழக்காறு மிகவும் மேன்மையானது சிறப்பானது என்றெல்லாம் பேசுகின்றோம், மதிக்கின்றோம், போற்றுகின்றோம். ஆனால் எமது வழக்காற்றை நிலைநிறுத்தத்தான் முடியுமா? அல்லது எமது எதிர்காலச் சந்ததியினரிடம் அதனைக் கடத்திவிடத்தான் முடியுமா என்பதேஇன்று எம்முன்னே எழுந்துள்ள பூதாகரமான கேள்வியாகும். ‘ஒரூருக்கு ஏச்சும் இன்னோரூருக்குப் பேச்சும் என்பார்கள்” மொழி வழக்கிலும் சரி நடைமுறைகளிலும் சரி சமூகத்திற்குச் சமூகம், இடத்திற்கு இடம், நாட்டிற்கு நாடு, இனத்திற்கு இனம் வேறுபாடுகள் உள்ளன. இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலைதாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு. ஆனால் இன்ற அந்த மரபு மங்கித்தான் போய்விட்டதே! ஏன் அதனை நாம் வாழும் நாட்டின பழக்கத்திற்கு ஒத்துப்போகவில்லை என்பதுதான அர்த்தம். ஸ்லாமிய மதம் மனிதனை மனிதன் வணங்கக்கூடாது என்னும் மரபைக் கொண்டுள்ளது. சில நாட்டவர் கைகுலுக்கி வரவேற்கின்றனர். நாம் வாழும் மேலை நாட்டு வழக்காறாக அது இடம்பெறுகின்றது. “மீன் உண்ணும் ஊருக்குப்போனால் நடுமுறி எனக்க வேண்டும்” என்று நிற்கவேண்டும் என்பது எமது நாட்டு முதுமொழி. அதன் பொருள் என்ன எங்கு நாம் செல்கின்றோமோ அங்குள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதுதானே பொருள். ஒரே ஊரில் பிறந்தவர்களாக இருந்தாலும் சமயம் வேறுபட்டவர்களாக இருக்கும்போது அவர்களின் எழுத்துக்களில் வேறுபாடான மரபுகளின் தாக்கத்தைக் காணலாம். கனடாவில் வாழ்ந்துவரும் தமிழ் அறிஞர் முருக வே. பரமநாதன் அவர்களின் எழுத்து மரபு வைணவ ஆழ்வார்களினதும் சைவசமய குரவர்களினதும் சங்க இலக்கிய மரபு சார்ந்தும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்து கந்தபுராண சமுதாய மரபின் தாக்கமும் தமிழர்களின எழுத்த மரபில் தாக்கத்தைக் கொண்டுள்ளமை குறிப்பிடற் பாலது.

எமது நாட்டில் தேசவழமைச் சட்டம் உள்ளது என்பதனால் அந்த நடைமுறையை நாம் இங்கு கொண்டுவரமுடியுமா அல்லது பின்பற்றத்தான் முடியுமா? நாம் இப்பொழுது கொண்டாடும் தைப் பொங்கலை எடுத்துக்கொள்வோம் நாம் பாரம்பரியமாகப் பின்பற்றி வந்த முற்றத்தில் பொங்குதல், மாட்டுச் சாணத்தால் மெழுகுதல், மாவிலைத் தோரணம் வெளியே கட்டுதல் என்பனவற்றை நடைமுறைப்படுத்த முடியுமா? தமிழர்களாலர் கொண்டாடப்பட்டுவந்த நான்குநாள் கொண்டாட்டம் மட்டுமல்ல பொங்கலன்று கூட விடுமுறை எடுத்து கொண்டாடத்தான் முடிகின்றதா? எனவே எமது மரபுகள்மங்கிச் செல்கின்றன மாற்றம் மடைகின்றன என்பதுதான் உண்மை.

எமது பாரம்பரிய உடைகள் வேட்டி,  சால்வை, பெண்கள் சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? அணிந்துதான் இந்தக் கடுங்குளிரில் வெளியே செல்லத்தான் முடியுமா? உடையில் மாற்றம் எற்பட்டது ஏன். நாம் பொருத்தமானவற்றை ஏற்றுக்கொண்டதனால் அல்லவா? தமிழரின் பாரம்பரிய உடை வேட்டி சாலலை என்றால் இந்தக் குளிரில் யாருமே வெளியே செல்ல முடியாது. மேலங்கி இல்லாமல் இங்கிலாந்தில் சென்ற மகாத்மா காந்திக்கு என்ன நடந்தது என்பது உலகம் அறிந்த ஒன்று. அரை நிர்வாணப் பக்கிரி எனக் கேலிசெய்யப்பட்டார். இந்த நிலையை யாரும் ஏற்றுக்கொள்ளுவார்களா? அந்தப் பாரம்பரியம் மங்கிவிட்டதா இல்லையா?

தைப்பொங்கல் புத்தாண்டு நாட்களில் பெரியவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் வாழ்த்துக்களையும் மதிப்பையும்; பெற்று அவர்களின் மனங்களைக் குளிரவைப்பது மட்டுமன்றி அவர்களுக்கு பரிசில்கள், வழங்கியும் வரக் கற்றுத்தந்தது எமது பண்பாடு. ஆனால் இன்று தைப் பொங்கலாக இருந்தாலும் சரி, சித்திரைப் புத்தாண்டாக இருந்தாலும் சரி, தீபாவளித்திருநாளாக இருந்தாலும்சரி அண்ணன் தம்பி, அப்பா, பெரியப்பா, சித்தி சித்தப்பா, மாமா, மாமி, ஊர்ப்பெரியவர்கள் என உறவுமுறை கொண்டாடிச் சென்று அவர்களிடம் ஏதாது பெற்று வருகின்றனரா அல்லது அவர்களின் நன்மதிப்பையாவது பெற்றுக்கொள்கின்றார்களா எமது பிள்ளைகள் என்றால் இல்லை என்று கூறும் நிலை தோன்றியுள்ளது. அந்தப் பாரம்பரியம் மங்கியே போய்விட்டது.

உறவுமுறைகள், சொல்லலாமா பெயரைச் சொல்லலாமா கணவன் பெயரைச் சொல்லலாமா” என்று இருந்த மரபு முறைகள் எங்கே? பெரியண்ணா, சின்னண்ணா, பெரியதம்பி, சின்னத்தம்பி, பெரியக்கா, சின்னக்கா, மூத்தத்தான், அல்லது பெரியத்தான், சின்னத்தான்,  மச்சான், பெரியமச்சாள், சின்னமச்சாள், பெரியம்மா, பெரியப்பா, பெரிய சித்தி சின்னச்சித்தி, அல்லது ஆசையம்மா, ஆசைஐயா, குஞ்சியப்பு, குஞ்சியம்மா, குஞ்சியாச்சி, ஆச்சி, என்று உரிமைபூண்டு அழைத்த முறைமைகள் எங்கே மறைந்துவிட்டன? பெயர் சொல்லி அழைக்கும் முறைதானே தலைவிரித்தாடுகின்றது. ஆசிரியர்களைத் தெய்வமாக மதித்துவந்தது எமது இனம், ஆனல் இன்று எமதுபிள்ளைகள் பெயர் சொல்லி அழைக்கின்றார்கள் அது அவர்களின் தவறல்ல இந்த நாட்டின் வழக்காற்றைப் பின்பற்றும் நிலை. அதனால் எமது வழக்காற்றையே மறந்து, அல்லது தெரியாது இருக்கின்ற  நிலைமைதானே உள்ளது.  மாதா, பிதா, குரு, பெரியோர் மூத்தோர் போன்றோரை மிகுந்த மரியாதையோடு மதித்து வந்தது எங்கள் இனம். இன்று பிள்ளைகள் சொல்வதைக் கேட்டு வாய்மூடி அடங்;கி நடக்கும் பெற்றோரைத்தானே காண்கின்றோம்?  எமது பாரம்பரியம் பேணப்படுகின்றதா அல்லது பேணப்படுமா? மங்கிச் செல்கின்றதே என்று எம்போன்றவர்கள் பெருமூச்சுவிட்டு கவலை கொள்வதனைவிட வேறொன்றும் அறியாதவராக வாழ்ந்துவருகின்றனர்.

திருமணப் பாரம்பரியங்கள், வழக்காறுகள், பூப்புனித நீராட்டு விழாக்கள், பிறந்ததின விழாக்கள் என்பன சினிமாப் பாணியில் மாற்றம் பெற்றுவருகின்றதே! இதற்கு அடிமைப்படவேண்டிய நிலையில் நாம் எமது பழக்கவழக்கங்களை விட்டுக்கொடுத்து “கண்ட பாவனையில் கொண்டை போடும்” நிலைமைக்கு மாறவேண்டிய நிற்பந்தம் ஏற்பட்டுள்ளது. முக்கிய குடும்பச் சடங்குகள் பெரயவர்களின் வழிகாட்டலில் ஒரு ஒழுங்குமுறையைப் பின்பற்றியதாக இடம்பெற்றுவந்தமை இன்று நிழற்பட அல்லது தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர்களின் கைகளுக்கு மாறிவிட்டது. திருமண மண்டப உரிமையாளர்களின் வாக்குக்களுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் சினிமாப்பாணியில் நடத்தும் நாடகமேடையாக இச்சடங்குகள் மாறிவிட்டன.

“கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன், கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (தொல்: பொருள்: கற்பியல் 140)

எனத் திருமண மரபிற்கு இலக்கணம் கற்பித்துள்ளார் தொல்காப்பியர். தொல்காப்பியம் உணர்த்தும் மனையறம் என்பது பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டுவரும் தமிழரின் மரபு பற்றிக் குறிப்;பிடுகின்றது. பெற்றோர் தாம் விருப்போடு மணம் பேசித் திருமணம் செய்யும் மரபினைத் தொல்காப்பியர் காலத்தில் கைப்பிடிக்கப்பட்டுள்ளமை தெளிவு.
மாறாக களவுமுறையான தலைவனும் தலைவியும் தாமே சந்தித்திப் பேசிப் பழகிப் பெற்றோர் அறியாவண்ணம் உடன்நெல்லல் வழி இடம்பெறும் மணமுறையும் களவியற் கற்பு எனப்போற்றப்பட்டுள்ளது.  காதலினால் கட்டுண்டு தலைவனும் தலைவியும் தாமாக விளைந்து சென்று மணம்புரியும் மரபுவழியும் பண்டைய தமிழகத்தில் இடம்பெற்றுள்ளமையை பின்வரும் தொல்காப்பியச் சு10த்திரம் எடுத்துக்காட்டுகின்றது.

“களவின் வழிவந்த கற்பிற் புணர்ச்சி
கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே
உடன்போய் வரைதலும் உண்மையான”

பெண்களுக்கு அச்சம், நாணம், மடம், பயிற்பு என்னும் நாற்குணங்களும் உள்ளன என்பதனையும் பின்வரும் தொல்காப்பிய வரிகள் விதந்துரைக்கின்றன. சங்க இலக்கியங்கள் இத்தகைய களவுவழி உடன்போக்கு மணவினைகளை விதைந்துரைப்பதனைக் காணலாம். அவ்விம் தலைவனுடன் சென்ற தனது மகளை நினைந்து பெற்றெடுத்த தாய் இறைவனை வேண்டி ஆராதிக்கும் நிலையம் காணப்படுகின்றது. உடன்போக்கு பாலை நிலத்திற்குரிய பண்பாகக் கொள்ளப்படுகின்றது. வெளியிடத்தில் இருந்து வந்த தலைவன். தான் காதல்கொண்ட தலைவியை அவளின் பெற்றோர் அறியாவண்ணம் கூட்டிநச் செல்கின்றாள். அவளும் தலைவனோடு உடன்போகின்றாள். அதனை அறிந்த தாயின் நிலையை இப்பாடல் எடுத்துக்காட்டுகின்றது;

ஈன்று புறந்தந்த வெம்மு முள்ளாள்
வான்றோ யிஞ்சி நன்னகர் புலம்பத்
தனிமணி யிரட்டுந் தாளுடைக் கடிகை
நுழைநுகி நெடுவேற் குறும்படை மழவர்
முனையாத் தந்து முரம்;பின வீழ்த்த
வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பலி சூட்டிக் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரந்
துணந்துபிற ளாயின ளாயிநு மணிந்தணிந்
தார்வ நெஞ்சமோ டாய்நலனளை இத்தன்
மார்புதுணை யாகத் துயிற்றுக தில்ல
துஞ்சா முழவிற் கோவற் கோமா
னெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப்
பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கு
நெறியிருங் கதுப்பினென் பேதைக் ஷ
கறியாத் தேஎத் தாற்றிய துணையே.
அம்மூவனார். (அகநானூறு -35)

வானளாவ உயர்ந்த மதிலை உடைய பெரும் மாளிகை தனித்து நிற்க, அன்போடு பெற்றெடுத்து வளர்த்த எம்மையும் மனதில் நினையாதவளாக சென்றுவிட்டாளே இறiவா! அவள் காடுமேடுகள் வழிச் சென்று பழக்கமற்றவள். செந்நெல் அரிசி சமைத்து இளம் ஆட்டைப் பலிகொடுக்கும் புலால் மணம் வீசம் காட்டுவழி செல்லத் துணிந்தனளே எனது மகள். அவளது துயரத்திற்காக வருந்தும் தாயின் புலம்பலை மிக அழகாகச் சிந்தரிக்கும் இப்பாடல் அக்கால பாலை நிலத்திற்குரிய காதல் ஒழுக்கத்தைப் படம்பிடித்துக் காட்டுகி;ன்றது.

“அச்சமும், நாணும், மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப” (தொல்: பொருள்: 86)

என தொல்காப்பியர், அச்சம், நாணம், மடம் ஆகிய மூன்றையும் பெண்களின் அணிகலன்களாகக் கூறுகின்றார். அத்தோடு கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை என்பதனை தமிழர்கள் தலையாகக் கொண்டு பொற்றி வந்துள்ளனர். தான் குறிப்பிட்ட நிலையில் இருந்து தவறாது இருத்தல் என்னும் பொருளைக் கொண்டுள்ளது கற்பு. அதனை உயிரினும் மேலாகப் பேணி வந்துள்ளனர் தமிழர்கள் என்பதற்குச் சான்றாகப் பின்வரும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் உள்ள வரிகள் எடுத்தியம் புகின்றன.

“உயிரினும் சிறந்தன்று நாணே, நாணிணும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்த தன்றெனத்
தொல்லோர் கிளவிப்புள்ளிய நெஞ்சமொடு” (தொல்: பொருள்: 111)

நாணுதல், பெண்களுக்கு உயிரைவிடச் சிறந்தது எனக் கூறும் தொல்காப்பியர், அதனினும் சிறந்தது கற்பு எனக்கூறுகிறார். ஐரோப்பியப் பண்பாடுகள் அனைத்தும் திரிந்த பண்பாடுகளே. கற்பு நெறியைக் கடைப்பிடிப்பதற்காக அச்சமூகங்கள் பெண்களுக்கு அல்குல்பூட்டு போடுவது போன்ற கடுமையான வழிமுறைகளைக் கடைப்பிடித்தன. இத்தகைய வழக்கத்தை திருக்குறள் தெளிவாக நிராகரிக்கிறது.

“சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்
நிறைகாக்கும் காப்பே தலை” (குறள்: 57)

மகளிரை சிறைவைத்துக் காக்கும் காவலால் பயன் இல்லை. அவர் தாமே கற்பு நெறியில் நின்று தம்மைக் காத்துக் கொள்வதே சிறந்தது என்பது இதன் பொருளாகும். தமிழ்ப் பெண்களுக்கு கற்பு நெறியில் ஒழுகுவதற்கு அவர்களுக்குத் தமிழர் சால்பு அல்லது மரபு போதித்துள்ளது. சமூகமே ஒருவரின் ஒழுக்கத்தின் நிலைக்கழனாக இடம்பெறுகின்றது.

“நிறையில் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா
பெண்டிர் தம்குடி” (மணிமேகலை: காதை 18: வரி 100-102)

கற்பு நெறியில் தன்னைக் காத்துக்கொண்டு, பிறர் தன்னைக் காணாமலும், பிறரைத் தான் காணாமலும் வாழும் பெண்கள்; கணவனைத் தவிர பிற தெய்வத்தை வணங்காத பெண்கள் பத்தினிப் பெண்டிராவர் என்கிறது மணிமேகலை. இத்தகைய மகளிர்க்குக் கணவனே உயிர் போன்றவன் என குறுந்தொகை கூறும்.

“வினையே ஆடவர்க் குயிரே
மனையுறை மகளிர்க்கு அவரே உயிர்” (குறுந்தொகை -135)

தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தெய்வமாகக் கொள்ளும் பத்தினிப் பெண்டிர் பெய்யென கூறினால் மழை பெய்யும் என்கிறார் வள்ளுவர்.

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை” (குறள்: 5)

மணிமேகலையும், மழை பெய்விக்கும் கற்புடைப் பெண்டிர் பற்றி குறிப்பிடுகின்றது.

“வான் தரு கற்பின் மனை உறை மகளிரின்
தான் தனி ஓங்கிய தகைமையன்” (மணிமேகலை: காதை16: வரி 77-78)

கற்புடைய பெண்டிர் பற்றிய சிறப்புகளைத் தமிழ் இலக்கியங்கள் ஏற்றிக்கூறும் அளவிற்கு பிற பண்டைய இலக்கியங்களில் காணமுடிவதில்லை. பண்டைய அரேபியர், பெண்களைச் சிறை வைத்து, முக்காடிட்டு, பல கட்டுப்பாடுகளை விதித்துக் கற்புநெறியில் ஒழுகச் செய்வர். 1400 ஆண்டுகளுக்கு முந்திய அரேபிய பெண்களின் நிலை பற்றி கவிஞர் பாப்ரியா கூறுவது கவனத்துக்குரியது.

‘தந்தையின் மறுதார மனைவி அவன் இறந்தபின் மகனுக்கு உரியவள். மகன் விருப்பமிருந்தால் அவளை மணம் செய்யலாம். அல்லது தனது விருப்பப்படி வேறு யாரையோ அவள் மணம் புரிய வற்புறுத்தலாம்” என்கிறார் பப்ரியா. இது அநாகரிகமானது என்பது தமிழர் மரபின் நிலைப்பாடு. தமிழர் சால்பு ஒருவனுக்கு ஒருத்தி என்பதோடு தான் கொண்டு கணவனொடு தன்னைப் பிணைத்துக் கொண்டு மனையறம் காத்து ஒழுகுதல் குடும்பப் பெண்டிரின் அழகாகக் கொள்ளப்பட்டள்ளது. மனைவியை இல்லத்தரசி எனப்போற்றினர் பண்டைத்தமிழர். ஆம் இல்லத்தை ஆளுபவள். அவளே அரசி, அவளே இல்லத்தின் சட்டதிட்டங்களை வகுத்துப் பேணிப் பாதுகாப்பவள். வீட்டில் அவள் இட்டதுதான் சட்டம் என ஒழுகி சிறந்த மனையறத்தைப் பேணிக்காத்தவர்கள் தமிழ்த்தாயர்.

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் கணவன் இறந்த பின் பத்தினிப் பெண்டிர் செய்யும் செயல்களை மணிமேகலை பின்வருமாறு விவரிக்கின்றது.

“காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி
ஊது உலைக் குருவின் உயர்த்து அகத்து அடங்காது
இன் னுயிர் ஈவர்; ஈயார் ஆயின்
நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்,
நளிஎரி புகார் ஆயின், அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்படுவர்
பத்தினிப் பெண்டிர்” (மணிமேகலை: காதை 2: வரி 42 – 48)

இதன் பொருள், பத்தினிப் பெண்டிர் கணவன் இறந்தான் என்ற சொல்லைக் கேட்டவுடனேயே இறந்துவிடுவர்; கொல்லன் உலையிலே நெருப்பை மூட்ட ஊதுகின்ற துருத்தியைப் போல அனல் கக்கும் பெருமூச்சு விடுவர்.; உயிர், உடம்பினுள் அடங்கி நிற்காது அந்த முதல் மூச்சிலேயே தமது உயிரைத் துறப்பர். என்பதற்கு எடுத்துக்காட்டாக கோவலைனை கொலை செய்துவிட்டேனே, பெரும் தவறு இழைத்துவிட்டேனே என ஏங்கி அதன்வழி இறந்துபடுகின்றான் பாண்டிய மன்னன். ஆனால் அவனது பிரிவைத்தாங்காது தானும் உயிர்நீத்தாள் பாண்டிமாதேவி என்றால் தீயில் தன்னை நிறுத்தித் தற்கொலை செய்யாமலே உடன் உயிரைத் துறந்தாள் என்றால் கற்பின் திண்மை எத்துணை வைராக்கியம் நிறைந்தது என்பதனை எடுத்துக்காட்டுகின்றது சிலப்பதிகாரம்.

கணவர் இறந்ததைக் கேட்டவுடன் இவ்வாறு உயிர் விடாதவர்கள் தீ மூட்டுவர்; அந்தத் தீ நன்றாக எரியும் போது அதனுள்ளே சாதாரணமாக நடந்து சென்று தீயோடு கலந்துவிடுகின்ற நிலை பண்டைய தமிழக சமுதாய மரபாகப் பேணப்பட்டுள்ளது என்பதனை சிலப்பதிகாரம் எடுத்தியம்புவதிலிருந்து அறியமுடிகின்றது.

நாம் வாழும் சு10ழ்நிலை, பழக்கவழக்கங்கள் மட்டுமன்றி பொருள்தேடும் முனைப்பு,அவற்றின் முறைமைகள் எல்லமே எமது நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டே செல்கின்றன. “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்றார் வள்ளுவர். அதனை நாம் பின்பற்றுகின்றோமா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். உணவுப் பழக்கத்திலும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிய மரபினை எம்மினம் கொண்டிருந்தது என்பதற்கு சங்க இலக்கியங்களும் திருக்குறளும் தக்க சான்றுகளாக அமைகின்றன.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (குறள் -322)

எனக் குறள் கூறுவதில் இருந்து கொண்டும்கொடுத்தும் உதவியும் இல்லாதோர்க்கு இரந்தும் வாழ்ந்தவன் தமிழன் என்பதற்கான சான்றாக அமைந்துள்ளது. அதற்கு மேலாக இல்வாழ்க்கையில் உள்ள ஒருவன் துறவிகள், தவமுனிவர்கள், பிரமச்சாரிகள் ஆகியவர்களுக்கு நல்ல துணைவனாக இருக்கவேண்டும் என்தன்மூலம் கொடைக்சிறப்பு குறிப்பிடப்படுகின்றது.

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை (குறள்-42)

இல்வாழ்க்கையின் கண் நீங்கி பிரமச்சாரிய வாழ்வினை மேற்கொண்டவர்களுக்கும், நல்கூர்ந்தாருக்கும் ஒருவரும் இல்லாத நிலையில் தன்னிடம் வந்து இரப்பவர்களுக்கும் குடும்பத்தன் எப்போதும் கொடுக்கும் பண்பினைக் கொண்டிருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தவதன் மூலம் தமிழர்களின் மரபில் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பதனன் உட்போருளைத் தெளியத் தருகின்றது.

எம் இனத்தின் பண்பாடு புலம்பெயர் மண்ணில் நிலைக்குமா என்பது கேள்விக்குறியே? வயதில் மூத்தவர்கள் எதனைச் சொன்னாலும் மதித்துச் செய்துவந்த மரபைப் பின்வற்றி வந்தவர்கள் நாம். எதற்கும் இல்லை என்ற சொல்லே வாயில் வராத அளவிற்கு பண்பாடாக நடந்தவர்கள். இன்று எமது இளையர்களின் வாய்களில் மிக இலகுவாக இல்லை அல்து முடியாது என்ற சொல் வருவதற்குக் காரணம் என்ன எமது வழக்காறுகள் மங்கிவிட்டன என்பதுதானே பொருள். பெரியர்வளை மட்டுமல்ல சகபாடிகளையும் ஏனையவர்களையும் மதிக்கவேண்டும் என்பதுதான் பொதுவாகக் கற்றுத்தரப்படும் பாடமாக அமைந்தாலும் எமது இளந்தலைமுறையினர் அவ்விதம் நடந்துகொள்கின்றனரா என்பதனை உற்றுநோக்கும்போது மனதிற்கு கவலையளிக்கின்றது. சகிப்புத்தன்மையோடு எதனையும் ஆமோதித்து வாழுகின்ற போக்கினை மேலை நாடுகள் எமக்குக் கற்றுத் தருகின்றன. போராட்டத்திற்காக பதின்ம வயதினரை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாட்டிலும் பெரரியோருக்கு மதிப்பளிக்கப்படும் நிலை குறைவடைந்து செல்வதனைக் காணலாம். தாம் சொல்வதைக் கேட்கவேண்டும் என்னும் எண்ணம் இளையர்களிடையே முனைப்புப் பெற்றுவருவதனையும் காண்கின்றோம்.

இன்று வாழ்வியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்தான் இவற்றிற்கு முக்கிய காரணிகளாக அகின்றன. நாம் ஒவ்வொருவரும் ஆடம்பரமான வாழ்க்கைக்காக போராட்டம் நடத்துகின்றோம். இதற்காக எவற்றைச் செய்யவேண்டுமோ அவற்றைச் செய்கின்றோம். இதனால் எமது பண்பாடு, பாரம்பரியம் அனைத்தையும் கைவிட்டுவிடுகின்றோம். 

நல்ல உளப்பாங்கு, மற்றும் ஆத்மீகம் தொடர்பான பெறுமதியினை அல்லது விழுமியங்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. இந்திய சமுதாய அமைப்பில் கொடுக்கப்பட்டு வந்த இந்த முக்கியத்துவம் நல்ல சமூகக் கட்டுக்கோப்பையும் பண்பையும்வளர்த்து வந்துள்ளது. ஆனால் அவை இன்று புறத்தொதுக்க்பபடுவது எமது பாரம்பரியங்களை நாம் மறந்துவிடும் நிலையினை அண்மித்துக் கொண்டிருப்பதாக எண்ணத்தோன்றுகின்றத.  வாழ்க்கையை ஆடம்பரமாக்கவேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தையும் நற்பண்பினையும் மறந்துவிடுகின்றார்கள். இதனால் தாம்செய்யும் பணிக்கு மேலாக எதனையும செய்வதற்கு கையூட்டை எதிர்பார்;க்கும் அரச அலுவலர்களைக் காண்கின்றோம். இதனால் சமுதாயத்தில் கையூட்டு என்னும் பணத்தால் சாதிக்கும் நிலைமை தலைவிரித்து ஆடுகின்றது. காலங்காலமாக நாம் கட்டிக்காத்துவந்த பாரம்பரியங்கள், மிக உயர்ந்த ஒழுக்கப் பண்புகளை  காற்றில் பறக்கவிடுகின்றோம்.அவற்றை எமது இளந்தலைமுறைக்குக் கடத்த நாம் எந்த முயற்சியையும் எடுப்பதில்லை. சமுதாயத்தில் ஒழுக்கக்கேடு தலைவிரித்தாடுகின்றது. இவற்றிற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் மரபுகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனை காண்கின்றோம். தொன்மையான விளையாட்டுக்களாக “புனல் விளையாட்டு”, பொழில் விளையாட்டு”, பந்தாட்டம், மல்லாடல், கழைக்கூத்து, வல்லாட்டம் என்பனவற்றை இன்று தொன்மையான இலக்கியங்களில் காணமுடிகின்றதேயொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை. அண்மைக் காலம் வரை விளையாடப்பட்டுவந்த விளையாட்டுக்களில் பல இன்று மறைந்துவருவது குறிப்பிடத்தக்கது. ஓணப்பந்து, கிட்டிபுள்ளு, கிளித்தட்டு (தாச்சி), சடுகுடு அல்லது கபடி அல்லது ஒப்பு, எட்டுக்கோடு, வழுக்கு மரம் ஏறல், கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல் (உறியடி), பாரிவேட்டை, கிளிக்கோடு பாய்தல், போர்த்தோங்காய், பல்லங்கழி, இரட்டை மாட்டுப் பந்தயம், (வண்டிச்சவாரி) மோடி விளையாட்டு, கண்ணாமூச்சி, குழை எடுத்தல், பேணி அடித்தல், போன்ற மரபுரீதியான விளையாட்டுக்கள் இன்று சமுதாயத்தை விட்டு ஒழிந்து போயுள்ளன. இதனைத்தான் “புதியன புகுதலும் பழையன கழிதலும் வழுவல கால வகையினானே” என தொல்காப்பியர் இயம்பினாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. காலத்தின் ஓட்டத்தில் சில மரபுகள் மறைந்துபோகப் அவற்றின் இடத்தில் புதிய புகுந்துகொள்வது இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகள் கூத்து, பாட்டு என்னும் பரிமாணங்களில் தமிழர்களிடையே தொன்றுதொட்டு நிழ்ந்துவந்துள்ளது. கூத்துக் கொட்டகைகள், அல்லது அம்பலங்களில் இடம்பெற்றுவந்த கலை நிகழ்ச்சிகள் தமிழரின் பாரம்பரியக் கலைகளாகப் போற்றப்பட்டு வந்தன. ஆனால் சினிமாவின் தாக்கத்தினால் கூத்துக்கள் ஆடப்பட்ட களரிகள், அல்லது அரங்கங்கள் சினிமாக் கொட்டகைகளாக பட்டி தொட்டியெல்லாம் மாற்றம் பெற்றன. இதனால் பாரம்பரிய கலைவடிவங்கள் தங்கள் சாயல்களை மாற்றிக்கொண்டதோடு அவை படிப்படியாக மறைந்தும் போயின. சத்தியவான் சாவித்திரி, பூதத்தம்பி, ஏழுபிள்ளை நல்லதங்காள், அரிச்சந்திரா, குசேலர், நந்தனார், காத்தவராயன், பொம்மலாட்டம், குதிரையாட்டம், மகுடி போன்ற கலை நயம்மிக்க நிகழ்வுகள் இன்று அழிந்துபோயுள்ளமை தமிழரி;ன பாரம்பரிய கலைகள் பேணிப்பாதுகாக்கப் படாதமையும் நவீன தொழில் நுட்பமுறையில் திரைப்படத்துறை அனைத்தையம் விழுங்கிவிட்டமையுமே காரணம் எனலாம்.

avan.siva55@gmail.com