ஆங்கிலத்தில் motion picture, film, cinema என்று பல பெயர்களில் குறிப்பிடப்படுவதை தமிழில் திரைப்படம், சினிமா, சலனப்படம் என்று பல பெயர்களில் குறிப்பிடுவது வழக்கமாகியுள்ளது. நாம் பேசும் இந்தப் புதிய 20- நூற்றாண்டு கலைக்கு, புதிதாகத் தோன்றிய தொழில் நுட்பத்திலிருந்து பிறந்த ஒரு கலைக்கு, திரும்பவும் தொழில் நுட்பமும் கலையாகப் பரிணமித்துள்ள ஒன்றைச் சினிமா என்ற பெயரிலேயே, அதன் தனித்வத்தைத் தனித்துக்காட்ட, குறிப்பிட வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. பொது வழக்கில் இந்தப்பெயர்கள் எல்லாம் அதிகம் சிந்தனையில்லாது பயன்படுத்தப் படுகின்றன. தமிழில் திரைப்படங்கள் தான் வந்துள்ளனவே தவிர சினிமா என்று தொழில் நுட்பம் சார்ந்த கலைப் படைப்பு வெகு அரிதாகவே, ஒன்றிரண்டே தேடினால் கிடைக்கிறது என்று சொன்னால், திரைப்படங்களுக்கும் சினிமா என்று சொல்லத் தகுந்த ஒன்றிற்கும் நான் அர்த்த வேறுபாட்டோடு இச்சொற்களைப் பயன்படுத்துகிறேன் என்பதைப் புரிய வைக்க நான் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. சுமார் எண்பது வருட கால தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தமிழ் மக்களுக்கு பல்லாயிரக் கணக்கில் தரப்பட்டுள்ள, திரைப்படங்கள், சலனப் படங்கள், films எனப்பட்டவை மட்டுமே தெரிந்திருக்கும், ஆனால் சினிமா என்ற கலையை அறியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். நானும் சொல்லி வருகிறேன். ஆனால் திரைப்படத்துக்கும் சினிமா என்ற ஒரு தொழில் நுட்பம் தந்த கலைக்கும் இடையேயான பாகுபாட்டை திரைப்படம் ஒரு வெறியே ஆகிவிட்ட தமிழ் நாட்டில் புரிந்து கொண்டுள்ளார்கள் என்று சொல்ல முடியாது.
புரிய வைக்க எனக்கு உதவி செய்யக் கூடிய ஒரு படைப்பு முதன் முதலாக எனக்குக் கிடைத்துள்ளது 1988-ல் பாலு மகேந்திரா தந்துள்ள வீடு தான். அது தான் அவரது முதல் படமா என்பது எனக்குத் தெரியாது. நான் பார்த்த அவரது முதல் படம் அது தான். அதற்குப் பின் அவரது சமீபத்திய படம் ஒன்று, “அது ஒரு கனாக் காலம்” பார்த்திருக்கிறேன். பின் ”கதா நேரம்” என்று ஒரு தொடர், சமீப காலத் தமிழ்ச் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு தொடராக தொலைக்காட்சிக்குத் தயாரித்துத் தந்துள்ளவை, ஒரு சிலவற்றைத் தவறவிட்டிருப்பேனோ என்னவோ, பார்த் திருக்கிறேன். அறுபதுகளுக்குப் பிறகு திரையரங்குகளுக்குச் சென்று நான் படம் பார்ப்பதென்பது மிக அரிதாகிவிட்டதால் திரையரங்குகளில் இவை தமிழ் ரசிகப் பெருமக்களிடம் பெற்ற வரவேற்பு எத்தகையது என்று எனக்குத் தெரியாது. எந்த ஒரு கலைப்படைப்பும் உடனே ஏதும் பெரிய நில அதிர்வைத் தந்ததாக சரித்திரம் எங்கும் இல்லையாதலால். சாவகாசமாக எங்கோ தற்செயலாகப் பார்த்ததும் இது தந்த அனுபவமும், அந்த அனுபவத்தின் முக்கியத்வமும் எனக்குப் பளிச்சிட்ட கணம் அது. அதன் பின் பாலு மகேந்திராவின் படங்களைப் பார்க்கும் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்ச் சினிமா உலகிற்கு ஒரு கலைஞன் கிடைத்துவிட்ட சந்தோஷம் அது.
இது தான் சினிமா என்ற தொழில் நுட்பம் பிறப்பித்த கலை என்று சொல்லி விட்டேனே தவிர அதைப் பற்றி விவரித்து நான் என் கருத்தை நிருபித்துவிட முடியும், இன்னொருவருக்கு எடுத்து விளக்கிச் சொல்லி புரிய வைத்து விட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. எனக்கு நம்பிக்கை இல்லை. நான் இது பற்றி எழுதும்போது, நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் கொள்ளும் அர்த்தம் ஒன்றாகவும் அந்த வார்த்தைக்கு பொதுவாக தமிழ்க் கலைச் சூழலிலும், குறிப்பாக, தமிழ் திரைப்படச் சூழலிலும் பழகி வரும் அர்த்தங்கள் வேறாகவும் இருக்கின்றன. எனவே படிப்பவர் கொள்ளும் அர்த்தம் முற்றிலும் வேறாகிப் போகும் போது நான் அதோடு போரிட முடியாது. என்னளவில் நான் சொல்ல விரும்புவதைச் சொல்லிச் செல்வது தான் நான் செய்யக்கூடிய காரியம்.
முதலில் அடிப்படையான விஷயம், கலை என்ற சொல்லில், அழகு, உண்மை, உணர்வுகள், மேன் நிலைப்படுத்துதல், ஒரு பழகிய பொருளில் புதிய உலகம் காணல், மறைந்திருக்கும் ஒன்றை வெளிப்படுத்துதல், புதிய அர்த்தங்களைக் காணுதல், என்று அனேகம் பல விஷயங்கள் அடங்கி யுள்ளன. இதற்கெல்லாம் முதற்பாடமாக, எளிமை தான் அழகு என்பது அடிப்படையான ஒரு உண்மை. மெல்லிய, ஒரு தோன்றாப் புன்னகையுடன் அமர்ந்திருக்கும் புத்தரின் சிலை, அல்லது இடது காலை உயர்த்தி நடனமாடும் நடராஜர் சிலை, இவையெல்லாம் மிக எளிய தோற்றங்கள். ஆனால் இவற்றுக்கு ஈடான அழகு வேறு உண்டா என்று நான் யோசித்திருக்கிறேன். விடை இல்லை. சர்வாலங்கார பூஷிதர்களான தெய்வச் சிலைகள் அனேகம் உண்டு. கை கூப்பி வணங்கிப் பின் நகர்கிறோம். சடங்காகி விட்ட பூசனைகள அவை. ஆனால் நடராஜரும் புத்தரும் நம்மை மெய் சிலிர்க்க, நம்மை மறக்கச் செய்துவிடுகின்ற கலா ரூபங்கள். மிக எளிமையான தோற்றங்கள். மிக அழகான தோற்றங்களும். அத்தோற்றங் களுக்கு அப்பால் எங்கோ நம்மை இட்டுச்சென்று விடுகின்றன, நம்மால் பயணிக்க முடியுமானால். ஆக எழுத்தில் நான் வீடு தான், தமிழில் முதல் சினிமா, என்று சொன்னால் அது உறைக்காது. படத்தைப் பார்க்கவேண்டும் என்று சொல்லலாம். கலையை எழுத்தில் சொல்லி நிரூபிக்க முடியுமா? ஆனால் நமது 80 வருட கால வரலாறு, சொல்லும் அனுபவம் வேறு. ஆமாம், இதிலே என்ன இருக்கு என்று உதறிவிடச் சொல்லும் வரலாறு அது.
சினிமா என்றால் நாம் எதெதெல்லாம் எதிர்பார்க்க பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறோமோ, அவை எதுவும் அற்ற, மிக எளிமையான ஒரு படைப்பு தான் பாலு மகேந்திராவின் வீடு. மிக எளிமையான நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களும், சூழலும், தெருக்களும் பிரசினைகளும். எல்லாமே நம் அன்றாட வாழ்க்கையின் காட்சிகள்தான். எளிய வாழ்க்கை. அவ் வாழ்க்கையின் சந்தோஷங்களும், ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும் தான் ஏதும் பெரிய பூகம்ப அதிர்ச்சிகள், ஆரவாரங்கள் இல்லை. பாட்டு, கூத்து கொண்டாட்டங்கள் இல்லை.
ஒரு சின்ன குடும்பம். வாடகை வீட்டில் ரூ 150 மாத வாடகை கொடுத்து வாழும் ஒரு ஓய்வு பெற்ற பாட்டு வாத்தியார் தாத்தா, முருகேசன், வயது 83. தரித்திருப்பது ஒரு நாலுமுழ வேட்டி. வெளியே போனால் ஒரு அரைக்கைச் சட்டை. அவருடைய இரண்டு பேத்திகள். பேத்திகளின் அப்பா அம்மா மறைந்து விட்டார்கள். பேத்திகளில் மூத்தவள், சுதா ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவள். சம்பளம் ரூ 1500. கூட வேலை செய்யும் ஒருவருடன் ஒரு ஒட்டுதல், இருவரும் மனம் ஒப்பி மணம் செய்து கொள்ள இருப்பவர்கள் இது எல்லோருக்கும் தெரியும். இது இரு வீட்டாரும் சகஜமாக ஏற்றுக்கொண்ட ஒன்று. ஒரு சிக்கலான சமயத்தில் தான் தாத்தா, அவனைக் கேட்கிறார்” “ஏம்ப்பா, கல்யாணம் பண்ணிக்குவேல்லியா? கைவிட்டு விட மாட்டியே? சின்னப் பொண்ணு, இந்துவுக்கும் நீதான் ஒரு வழி காட்டணும்” என்று கேட்டு உறுதிப் படுத்திக் கொள்கிறார். இன்னும் எத்தனை நாள் தனது வாழ்க்கை என்ற சந்தேகம் அவருக்கு.
வாடகை வீட்டின் மேல் மாடியில் ஒரு மலையாள குடும்பம். நண்பர். இந்த வீடு சென்னை மின்சார ரயில் போகும் வரும் சத்தம் அடிக்கடி கேட்கும் ரயில் பாதையின் அருகாமையில் உள்ள வீடு. செட் அல்ல. ஒரு அடுக்கு மாடி கட்டிடம் வர விருப்பதால் இவர்கள் ஒரு மாதத்தில் காலி செய்யும் நிர்ப்பந்தம். வாடகை வீடு பார்க்கிறார்கள். அலைகிறார்கள். அவர்களால் கொடுக்க முடியும் வாடகைக்கு ஏதும் கிடைப்பதில்லை. இந்த சந்தர்ப்பத்தில் தாத்தா முருகேசன் எப்பவோ 150 ரூபாய்க்கு வாங்கிப் போட்டிருந்த வளசர வாக்கம் காலி மனை ஒன்று அங்கு வீடு கட்டலாமே என்று ஒரு அன்பர் ஆலோசனை சொல்ல பஞ்சாயத்துக்கு வீடு கட்ட அனுமதி கோரியும், அலுவல கத்துக்கு கடன் வழங்கக்கோரியும் அலைகிறார்கள். கொடுக்க வேண்டியதைக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களுக்குப் புரிவதில்லை. மேல்மாடி அன்பர் தான் புரிந்து கொண்டு கொடுக்கவேண்டியதைக் கொடுத்து சாங்ஷன் வருகிறார். முதல் தவணை கடன் கிடைத்ததும், பூமி பூஜை, கணபதி ஹோமம் எல்லாம் நடந்து அஸ்திவாரம் போட்டாகிறது.
ஒரு வீடு கட்டும் போது எழும் ஒவ்வொரு பிரசினையும் இங்கும் எழுகிறது. பெரிய உத்பாதங்கள் ஏதும் இல்லை. குத்தகைக் காரரும் அவரது வேலையாளும் சேர்ந்து சிமெண்ட் திருடுகிறார்கள். மனையிலேயே குடிசை போட்டு தங்கி இருக்கும் மங்கா என்னும் உதவியாள் கண்டு பிடித்துச் சொல்லிவிடுகிறாள். கண்டிராக்டரை கடுமையுடன் சுதா கண்டித்துக் கேட்க, கண்டிராக்டர் விரசத்தில் இறங்க, மங்கா சுதாவுடன் சேர்ந்து கொள்கிறாள்..மங்கா கண்ட்ராக்டருக்குப் புரியும் பாஷையில், குரல் உச்சத்தில், கைபாவனைகளில் திருப்பிக் கொடுக்கவே, குத்தகைக்காரர் விலக, மங்காவும் மேஸ்திரியும் தாமே மிச்ச வேலையை முடித்து தர முன் வருகிறார்கள். வழக்கமாக வீடு கட்டும்போது தவறாது காணும் காட்சிகள். மேஸ்திரி வேலைக்காரிகளை சைட் அடிப்பார். மேஸ்திரி வேலைக்காரிகளிடம் வாங்கிக் கட்டிக்கொள்வார். வீடு கட்டத் தோண்டிய கிணற்றிலிருந்து அக்கம்பக்கத்து வீடுகளும் தண்ணீர் எடுத்துக்கொள்ள வருவார்கள்.
வீடு கட்டப்படும் காட்சிகளோடு படிப்படியாக, அத்தோடு எழும் பிரசினகளையும் பார்க்கிறோம். ஒன்றை மிகக் கவனமாகக் கவனிக்க வேண்டும். எதுவும், அஸ்திவாரத்திலிருந்து படிப்படியாக எழும் செங்கற் சுவரும் அவரவர் வேலையில் இருக்கும் காட்சிகளும் இயல்பான வேலைத் தளமாகக் காட்சி தருகையில் அங்கு இயல்பாக எழும் ஓசைகளே பின்னணியாக இருந்திருக்கலாம். இளைய ராஜாவின் பின்னணி இசையும், மங்காவின் அதீத அங்க சேஷ்டைகளும் பேச்சுப் பாணியும் படம் முழுதும் எடுக்கப்பட்டிருக்கும் தொனிக்கும் பாவத்துக்கும் ஒத்திசைவாக இல்லை (discordant, disharmonious) எனத் தோன்றுகிறது. எந்த வாத்தியப் பின்னணியும் இல்லாது தளத்திலும், மனையைச் சுற்றிலும் எழும் இயல்பான ஒலிகளும் படத்தின் இயல்பான மெதுவான நகர்வுக்கு ஒத்திருந்திருக்கும். மங்கா போன்ற பெண்களின் பேச்சும் அங்க அசைவுகளும் கூட இயல்பில் அதீதமாகத் தான் இருக்கும். ஆனால் அதீதம் காட்டவேண்டும் என்று அதீதத்தை மேற்கொள்ளும் போது அது carricature ஆகிவிடுகிறது. ஏதும் ஒன்றை நன்கு வெளிப்படக் காட்டவேண்டும் என்று பொதுவில் முயற்சிக்கும் போது அது தன் குணம் இழந்து கார்ட்டூனாகி விடுவது நாம் அரசியலில் சினிமாவில் கண்டிருக்கிறோம். மேடை ஏறி பேசத் தொடங்கியதுமே அரசியல் வாதிகள் சினிமா பிரமுகர்கள் கார்ட்டூன்களாகக் கீழறங்கத் தானே செய்கிறார்கள்.
மிக அழகான, இயல்பாகவும் அமைதியுடனும் சொல்லப்பட்ட காட்சிகள் நிறைய உண்டு. வாடகை வீடு பார்த்த இடத்தில் வாடகை குறைக்க முடியுமா என்று பேத்தி சுதா சொன்னபடி கேட்டு வர தாத்தா முருகேசன் கிளம்புகிறார். கிளம்பும் முன் முதலில் அறையை விட்டு வெளியே முற்றத்தின் வழியாக வானத்தைப் பார்க்கிறார். பின் திரும்பி வந்து குடையை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். கொளுத்தும் வெயிலில் குடை பிடித்துக்கொண்டு தெருவில் நடந்து செல்வதைப் பார்க்கிறோம். போன இடத்தில் காரியம் நடப்பதில்லை. பெரும் ஏமாற்றம் முருகேசனுக்கும். வருத்தமும் ஏக்கம் மனதை அழுத்த தெருவில் நடந்து வருபவருக்கு சுட்டெரிக்கும் வெயில் பற்றிய பிரக்ஞை இருப்பதில்லை. தெருவில் நிழலோரத்தில் கடை பரப்பியிருப்பவன், “ஏ பெரியவரே, வெயிலடிக்கறது தெரியலே? குடை தான் இருக்கே? அதை விரிச்சுப் பிடிச்சிட்டுத்தான் நடவேன்.” என்று சத்தமிட்ட பிறகு தான் அவருக்கு குடையை கக்கத்தில் இடுக்கியிருப்பது தெரிகிறது. குடையை விரித்துக்கொண்டு நடக்கிறார்.
சுதாவும் அவள் கல்யாணம் செய்துகொள்ளவிருக்கும் கோபியும் சுதா விட்டில் காரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இடைகழியில் உடகார்ந்திருக்கும் தாத்தா நாற்காலியை விட்டெழுந்து அவர்கள் இருக்கும் அறைக்கதவண்டை போகிறார். பின் திரும்பி தன் நாற்காலியில் அமர்ந்து கொள்கிறார். இது பாதி நிழல் படிந்தும் பாதி வெளிச்சமாகவும் இருக்கும் வீட்டின் உள்ளே நடக்கும் காட்சி. காமிராவின் கண் இந்நடப்பில் இல்லாதது போல் வெகு காஷுவலான பாவனையில் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி பல காட்சிகள் அன்றாட வாழ்க்கையின் வீட்டினுள் நடப்பவை, வெளியில் தெருவில் நடப்பவை பதிவாகியிருக்கின்றன. இவை கதையின் மையத்தைச் சேர்ந்தவை அல்ல. கரையோர நிகழ்வுகள். கதை மாந்தரின் குணத்தையும் நிகழ்வுகளின் குணத்தையும் சார்ந்து நிகழ்பவை. இந்துவின் சிறு வயது ஆசைகள், பிடிவாதங்கள், கொஞ்சல்கள் எல்லாம் அடிக்கோடிட்டு வலியுறுத்தப்படாமல் இயல்பாக மெல்லிய இழைகளால் வரையப்பட்டவை.
இருவருக்கும் பரிச்சயமான ஒருவர் இறந்ததைப் பற்றி மேல் வீட்டு நண்பர் வந்து முருகேசனிடம் சொல்ல, அவர் சென்ற பிறகு, முருகேசன், தன் பேத்திகளுக்காக தான் சேர்த்து வைத்துள்ள ரொக்கப் பணம், நகைகள் வீடு மனை எல்லாம் தனக்குப் பிறகு யார் யாருக்கு என்ன செய்யவேண்டும், என்று எழுதி பத்திரப்படுத்துகிறார்.
வீட்டு மனையின் ஒரு பாதி விற்கப்படுகிறது அலுவலகத்தில் கேட்ட கடனின் முதல் தவணையை உடனே வாங்கிக் கொடுத்தவர் அடுத்த தவணைக்கு பல்லிளிக்க ஆரம்பிக்கிறார். இனி கட்டிட வேலையைத் தொடங்க முடியாது என்று இருந்த சமயத்தில் தாத்தாவும் தன்னிடமிருக்கும் பணத்தைத் தருகிறார். சுதா நடந்த விஷயத்தைத் தானே சொல்லாவிட்டாலும், ஒரு வாறு யூகித்துக்கொண்ட கோபி தானே மனைக்குச் சென்று அதுகாறும் சுதா மறுத்து வந்த தன் பணத்தைப் போட்டு தானே களம் சென்று கட்டிட வேலை மேற்பார்வையை எடுத்துக் கொள்கிறான். அவ்வப்போது இருவரிடையேயும் சிறு சிறு உரசல்கள் எழும் சுய கௌரவம் மேல் எழும் இருவருக்கும். பின் சமாதானம். விட்டுக் கொடுப்பது கோபியாக இருக்கும். தாத்தாவாக இருக்கும். ஒன்று சுதாவின் சுய கௌரவம். இரண்டாவது காரணம், சுய பாதுகாப்பு. எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம். தாத்தா விட்டுக்கொடுப்பது பேத்தியின் கஷ்டத்தைக் கண்டு இரங்கி. இவை சொல்லாது சொல்லப்படுவனவற்றில் அடங்கும்.
நிகழ்வுகள் எல்லாமே சிறு சிறு மகிழ்ச்சிகளாலும் பூசல்களாலும் ஆனவை தான். எங்கும் பெரிய விபத்துக்கள், பூதாகாரங்கள் இல்லை. பெரிய சோகங்கள், கதறல்கள் இல்லை. அன்றாட பேச்சின் அளவுக்கு மேல் யாரும் குரல் எழுப்புவதில்லை. இரைச்சல்கள் இல்லை. அலங்கார பேச்சுக்களோ நாடக பாணி பிரசங்கங்களோ இல்லை. ஒரு எளிய குடும்பம் வாடகை வீட்டில் வசிக்கும் அநிச்சயத்தையும் எதிர் பாரா இடைஞ்சல்களையும் தவிர்க்க ஒரு சிறிய வீடு தன் சக்திக்குச் சற்று மீறி கட்ட முயலும்போது எழும் இடர்களும், தவிப்புகளும், அவை எந்நிலையிலும் எழும் இடைஞ்சல்கள், தவிப்புகள். இடையிடையே முகம் காட்டும் நம்பிக்கைகளும் மகிழ்ச்சிகளும் தான் வீடு படத்தில் நாம் காண்பது. எல்லோரும் சாதாரண மனிதர்கள் மத்திம வர்க்கத்தினர். யாரும் பேரழகிகளோ பேரழகர்களோ இல்லை. கோரங்களும் இல்லை. அன்றாடம் தெருவில் எதிர்ப்படும் மனிதர்களே. அது அர்ச்சனாவாக இருந்தாலும் சரி. மேக்கப் இல்லாத அர்ச்சனா. ஒரு தாத்தாவுக்கே உரிய சின்ன சின்ன கோபங்களும், அவ்வப்போது சந்தோஷ கணங்களில் சத்தமிடாத பொக்கைவாய்ச் சிரிப்பும். தளர்ந்த குரலில் அவ்வப்போது முணுமுணுத்துக்கொள்ளும் பாட்டு. பேத்திகளின் கஷ்டத்தின் போது தளரும் தன் பிடிவாதம். நேர்மையின் பிடிவாதம். தளர்ந்த குரலில், எளிய வார்த்தைகளில்.
ஒரு நாள் தன் பேத்தி கட்டிவரும் வீட்டை, அது முடிந்துவிட்டது என்று அறிந்து, பார்த்து வரலாம் என்று போகிறார். வழியில் பஸ்ஸில் அயர்ந்து தூங்கிவிடுகிறார். கண்டக்டர் எழுப்ப பஸ்ஸிலிருந்து இறங்கி மனை நோக்கி நடக்கிறார். மனைக்குள் நுழைந்து உள்ளே மனையைப் பார்வையிடுகிறார். ஆர்வமும் சந்தோஷமும். பேத்தி தனக்கென ஒரு வீடு கட்டிக்கொண்டு விட்டாள். தனக்கென ஒரு கணவனையும், சிறு சிறு பூசல்களையும் தாண்டி ஒத்த மனதுடைய, கஷ்டங்களில் பங்கு கொள்ளும் கணவனையும் தேடிக்கொண்டு விட்டாள் இனி என்ன வேண்டும்?. அவரது கவலையும் தீர்ந்தது. வீட்டினுள் சுற்றிப் பார்த்தவருக்கு சந்தோஷம், முகத்தின் சிரிப்பில் தெரிகிறது. திரும்ப வெயிலில் நடக்கும் போது களைப்பில் கால் தடுமாறி வீதியிலேயே விழுந்து விடுகிறார். விழுந்தவர் எழவில்லை.
பிறகு தான், தாத்தா தன்னிடமிருந்த பணம், நகை, வீட்டு மனை எல்லாம் எழுதி வைத்திருப்பது சுதாவுக்குத் தெரிகிறது
ஒரு எளிய கதையை ஒரு அன்றாட வாழ்க்கையின் நிகழ்வு களை, சிறிய சிறிய எதிபார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் சந்தோஷங்களையும் அனுபவிக்கும் சாதாரண மனிதர்களின் ஒவ்வொரு நாள் வாழ்வின் அலைமோதல்களை அலங்காரமற்று, இரைச்சலிடாமல் அந்த வாழ்வின் உண்மையை கண்ணியத்தோடு சொல்ல முடியுமானால் அது மெல்லிய இழைகளாக அலை யோடும் இசையாக அமைதியும் இனிமையுமாக ஒலிக்கும். அதில் அபசுரம் இராது. நாராசம் இராது.
செட்,. டான்ஸ் மாஸ்டர், பாடல்கள், ஸ்டுடியோ, ஃப்ளெஸ் பானர், கோரியோக்ராஃபி, இத்யாதிகளையெல்லாம் விடுங்கள். பவுடர், லிப்ஸ்டிக் செலவு கூட இல்லாமல் பாலு மகேந்திரா ஒரு படம் எடுத்துவிட்டார். வீடு படம் எடுக்க டோரண்டோவோ கிலிமாஞ்சரோவோ போகாது, சென்னை புறநகர் ஒன்றை விட்டு நகராது மிக சல்லிஸாக எடுத்திருக்கிறார். அதை நான் தமிழில் முதல் சினிமா என்று இருபது இருபத்தைந்து வருஷங்களுக்குப் பின் பேச முடிகிறது. ஆனால் ஒற்றை மரம் தோப்பாகாதே. தமிழில் சினிமா என்ற ஒரு சமாசாரம் இல்லை. அது என்ன சமாசாரம் என்று தமிழில் திரப்படம் சம்பந்தப்பட்டவர்க்குத் தெரியுமா என்பது சந்தேகம். தான்.