ஆயிரத்தித் தொழாயிரத்தித் தொண்ணூறுகளில் மல்லிகைப் பந்தல் வெளியீடாகக் கவிஞர் தில்லைச்சிவன் ‘நான்’ என்றொரு கையடக்கப் புத்தகத்தை வெளியிடுகிறார். அந்தப் புத்தகம் என்னிடம் கனடாவில் இருக்கிறது. வேலணை, வங்களாவடிச் சந்தியை மையமாக வைத்து, ஒரு மூன்றுமைற் கற்கள் விட்டத்தில் ஒரு ஆரை கீறினால், அதற்குள் வரலாறாக இருக்கும் ஐம்பது புலவர்கள் என்ற பதிவைக் கொண்ட ‘வேலணைப் புலவர்கள் வரலாறு” தான் அந்த நூல். அந்நூல் வெளிவந்த உடனேயே விற்றுத் தீர்ந்தது என்ற தகவலையும், கவிஞர் தில்லைச்சிவன் எனக்குத் தந்தார்.
புத்தகத்தில் எனது பெயரும் பதிவாகி இருப்பதைப் பார்த்தேன். கவிதையும், கல்வியும் சிறந்த வேலணையில், பள்ளம்புலம் சார்ந்த பகுதியில் இரண்டு சைவ ஆலயங்கள் பிரசித்தமானது. ஒன்று பள்ளம்புலம், முருகமூர்த்தி கோவில், மற்றையது மயிலப்புலம் திருப்பொலி ஐயனார் கேவில். இந்தப் பாடல்பெற்ற தலங்களின் பதிவில் முதலில் வருபவர் வித்துவான் வேந்தனார் ஆகும்.
வித்துவான் வேந்தனார்
சரவணை கிழக்கு, வேலணையில் பள்ளம்புலம்தான் வித்துவான் வேந்தனார் தோன்றிய இடம் ஆகும். வித்துவான் வேந்தனார் எழுதிய கட்டுரைகள் மட்டும் ஆயிரக்கணக்கானவை. அவர் தான் இருந்து கல்விகற்ற ஐயனார் கோவில் ஆலமர நிழலை பின்வருமாறு ஒரு வெண்பாவில் குறிப்பிடுகிறார்.
‘உள்ளம் உவகையுற ஊக்கமுடன் வீற்றிருந்து
அள்ளுசு வைத்தேனை ஆர்ந்திடல்போல்-விள்ளுஞ்சீர்
தெய்வமார் செந்தமிழைத் தேர்ந்துநான் கற்றவிடம்
ஐயனார் கோவிலடி ஆல்! ”
என்பது விசாலித்து விசுவரூபமாகி நிழல்கொடுத்து நின்ற அந்த ஆலடி ஐயனாரது அருள்பெற்றவர் என்பதற்குச் சான்றான வெண்பாவாகும். வித்துவான் வேந்தனாரது ஆளுமைக்கு எல்லையே கிடையாது. தமிழ்மறைக் கழகத்தின் திருக்குறள் மாநாடு, வேலணை கிழக்கு, அம்மன் கோவில் தென்மாட வீதியிலே நடைபெற்ற போது, எனக்குப் பன்னிரண்டு வயது. ஐம்பத்தெட்டுக் கலவரம் நடந்த துயரம் மாறமுன்பு இந்த மாநாடு நடைபெற்றது. எனது பாடசாலை செல்வதாகக் கூறி, அந்த அரசியல் பகல் மாநாட்டுக்குச் சென்றிருந்தபோது எனது தாயார் என்னைத் தேடிவந்தார். வேந்தன் பேசிக்கொண்டிருந்தார். ஆயிரமாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட
தமிழைச் சொல்ல அந்த ஆயிரத்தை ஆயிரம் தடவை சொல்லிய மாதிரி நீண்டு உரத்து ஆற்றிய உரை என்நெஞ்சமதில் இன்னும் இருக்கிறது. வேந்தன் ஒரு தமிழ்கடல். நான் கல்விகற்ற போது எனது தராதர வகுப்புக்கு இருந்த பாடநூல்கள், சமயம் இலக்கியத்துக்கென்று இருந்தவை முழுவதும் வேந்தனார் அவர்களால் எழுதப் பெற்றவை ஆகும். சைவசமயத் திரட்டு, சீதை சிறையிருந்த சுந்தரகாண்டம், இன்னும் எண்ணற்ற நூல்கள் அந்நாளய அரசாங்க அங்கீகாரம் பெற்ற நூல்களாய் அவை இருந்தன.
அந்நூல் ஒன்றில் அவர் எழுதிய சமர்ப்பணப் பாடல் ஒன்று தருகிறேன் பாருங்கள். முற்றிலும் எனது ஞாபகத்திருந்து இச்சமர்ப்பணத்தை உங்களுக்குத் தருகிறேன்.
‘பிறந்த அன்றே பெற்ற அன்னையை
இழந்த என்மேல் உற்ற அன்பைச் சொரிந்து
என்னை வளர்த்தெடுத்து ஆளாக்கிய
சரவணையூர்த் தளையசிங்கம் அவர்களுக்கு
இந்நூல் காணிக்கை”
வேந்தனாரை வளர்த்தெடுத்தவர் சரவணையூர்த் தளையசிங்கம், அவரது பேரனார் என்பதாக எனது தாயார் கூறியிருக்கிறார். நிற்க, வேந்தனார் பற்றி கவிஞர் தில்லைச்சிவன் என்ன கூறுகிறார் என்றுபாருங்கள்.
‘சொந்தவொரு முயற்சியினால் தமிழைக் கற்று
துலங்குமருட் பெருங்குணத்தால் உலகுக் கெல்லாம்
தந்தகவி ‘அம்மா’இந் நாட்டின் செல்வத்
தமிழ்ச்சிறுவர் மழலையெல்லாம் தவழ வைத்தாய்!…..”
வேந்தனாரைத் தமிழ் அன்னை துரத்தித் துரத்திப் படிக்க வைத்த காரணத்தால் தமிழகம், ஈழம் எங்கும் தமிழைப் போதிக்கும் தகை பொருந்தியவராகத் தரணி எங்கும் பதிவாகினார்.
வேந்தனார் அவர்களின் கூற்றில் இருந்து பதியப்பட வேண்டியவை ஏராளம். இளந்தமிழர்களுக்கு அவரது அறைகூவல் காலத்தின் தேவை கருதிய பாடமாக இருக்கிறது.
‘இளந்தமிழர்களே! உங்கள் உடம்பிலே ஓடுகின்ற குருதியின் ஒவ்வொரு துளியும், தமிழ் மொழிக்குத்தான் உரியது. தமிழைக் காப்பதுவே நீங்கள் செய்கின்ற அறம். தமிழுக்காக வாழ்வதே நீங்கள் ஈட்டுகின்ற பொருள். தமிழின் விடுதலை கண்டு மகிழ்வதே நீங்கள் அடைகின்ற இன்பம்”… என்ற அவரது அறைகூவலில், இரு வரிகள் மட்டுமே மேலே கூறப்பட்டவை ஆகும்.
தமிழுக்காக வாழ்பவன், தடுக்கப்படவும் அழிக்கப்படுபவனுமாக இருப்பதற்குத் தமிழனே ஏதுவாக இருப்பதே இந்தக் காலக் கணிப்பாக இருக்கிறது.
‘அம்மா என்றன் அம்மா
அருமையான அம்மா!
பள்ளிக்கூடம் விட்ட நேரம்
பாதி வழிக்;கு வந்து
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கித்
தோளிற் போடும் அம்மா! “
என்பது அவரது அம்மா என்ற தலைப்பினால் ஆன பாட்டு. இந்தப் பாட்டினால் சிறுவர்களுக்கான அரச பாடப் புத்தகங்களில், குழந்தைகளைத் துள்ள வைத்த பெருமை வேந்தனாருககே உரியது.
வித்துவான் வேந்தனார் அவர்கள் பெரும் ஆசான்களாற் பாராட்டுப் பெற்றவர். ‘இனி இரசிகமா மணிகளே சோமசுந்தரப் புலவரின் வாரிசு ஆகிய கவிராயரின் நாமத்தை உரக்கக்; கூறிப் பவனி வாருங்கள். வேந்தனார் அவர்களுக்கு இன்னும் பல பட்டங்கள் பேரறிஞர்களால் வழங்கப் பெற்றுள்ளன…” என்று பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களாற் குறிப்பிடப்படுதல் பெரும் பாக்கியமன்றோ.!
‘பாடுகின்றோர் எல்லோருங் கவிஞ ரல்லர்
பாட்டென்றாற் பண்டிதர்க்கே உரிமை அல்ல
ஓடுகின்ற பெருவெள்ளப் பெருக்கே போல
உணர்ச்சியிலே ஊற்றெழுந்த ஒளியால் ஓங்கி
வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள
மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல்
கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு
குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான். “
வித்துவான் வேந்தனாரது இந்த வரிகள் கவிஞர்களைத் தட்டி எழுப்புவை யாகும்.
வேந்தனாரது மேற்படி கவிதையை யான் இன்றே கண்ணுற்றேன். எனது காலத்தின் பணி மனையில் என்னையான் திரும்பிப் பார்த்தேன். இவரது பாடல் என்னை உசுப்பிய போது, எங்கோ இருந்தும் வருகின்ற சில கருத்துக்கள் எனது வரிகளிலே உயிர்த்து நிற்பதைப் பார்க்கிறேன். சிறுவயதிலேயே தமிழ்ப்பற்றும் தமிழைக் கற்பதில் பெற்ற உத்வேகமும் ‘ நாகேந்திரம்பிள்ளை ‘ எனத் தந்தையார் இட்ட பெயரை, தனித்தமிழ் ஈடுபாட்டினால், தனது பதினாறாவது வயதில், தனது
பெயரை ‘வேந்தனார்’ என மாற்றினார்.
வேலணையின் மகத்துவத்தில் வேந்தனாரது ஆற்றலும் அறிவும், என்றும் உயிர்ப்போடு இருக்கும் என்பதில் ஐயமில்லை.
‘காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா!
புழுதி துடைத்து நீரும் ஆட்டிப்
பூவுஞ் சு10ட்டும் அம்மா
அழுது விழுந்த போதும் என்னை
அணைத்துத் தாங்கும் அம்மா “
என்னும் வேந்தனார் பாடலைப் பாடவைப்பதின் மூலம் தமிழ்மொழியையும், பண்பாட்டையும் அரும்புப் பருவத்திலேயெ எமது குழந்தைகளுக்கு ஊட்டிவைப்போம்.
vela.rajalingam@gmail.com