தமிழ் – சிங்கள மொழிப்பரிவர்த்தனையில் அயராது உழைக்கும் மடுளுகிரியே விஜேரத்ன! சுவாமி விபுலானந்தரை சிங்கள மக்களிடம் அறிமுகப்படுத்தியவர்!

Letchumananm@gmail.comவவுனியாவின் எல்லையில்   மடுக்கந்தை என்ற  அந்த  அழகிய  கிராமத்தில்  வசித்த  மக்கள்  துயில்  எழுந்திருக்காத   புலராத பொழுதிலே,  அந்தச்சிறுவன் அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து, கால்நடையாக  சுமார் 6 மைல் தூரம்   ஒற்றையடிப்பாதையிலும்  வயல் வரப்புகளிலும்  நடந்து  சமணங்குளம்  தமிழ்ப்பண்டிதரிடம்  வருவான்.  அவ்வேளையில் அவன் வவுனியா இரட்டைப்பெரிய குளத்தில்  தனது  ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்துகொண்டிருந்தான். தாய் மொழியும் வீட்டு மொழியும் சிங்களம். ஆங்கிலம் படிக்க சரியான வசதி  வாய்ப்புகள்  இல்லை.  அயல் கிராமங்களில் வாழ்ந்தவர்கள்  தமிழர்கள். அதனால், அவர்களுடன் பழகி உறவாடும் சந்தர்ப்பங்களும்  அச்சிறுவயதில்  அவனுக்கு  கிடைக்கிறது. தமிழைப்பேசவும்  புரிந்துகொள்ளவும் பழகிவிடுகின்றான். ஆங்கிலம் அந்நிய தேசத்திலிருந்து வந்த மொழி. அருகிலேயே தொன்மையான தமிழ் மொழி வாழ்கிறது. இதனைவிட்டு விட்டு எதற்காக அந்நியமொழிக்காக ஏங்கவேண்டும்  என்ற  சிந்தனை அந்த இளம் உள்ளத்தில்  பிறக்கிறது. அயலில் சமணங்குளத்தில் பண்டிதர் கந்தையா என்றொருவர் ஆசிரியராகவும்  அதேசமயத்தில்  விவசாயியாகவும்  வசிப்பதாக அறிந்துகொள்கின்றான். அவரைத்தேடி  நடந்த  சென்று, தனக்கு தமிழ் சொல்லித்தரும்படி கேட்கின்றான். அவர்  ஒரு  நிபந்தனை  வைக்கிறார். “என்னிடம் தமிழ் படிக்கவருவதாயிருந்தால்,  அதிகாலை 4 மணிக்கு முன்பே வந்துவிடவேண்டும்.  நான் காலை 6 மணிக்கெல்லாம் வயலுக்குப்போய்விடுவேன். அதன் பின்னர் பாடசாலைக்குச்செல்வேன். மாலையில்  வீடு திரும்பினாலும் உனக்கு தமிழ்ப்பாடம் சொல்லித்தருவதற்கு எனக்கு நேரம் இல்லை. மீண்டும் வயல், தோட்டம்  என்று  போய்விடுவேன். அதனால் உனக்கு தமிழ் சொல்லித்தருவதற்கு  அதிகாலை  வேளைதான்  உகந்தது. அதற்கு சம்மதமாயிருந்தால்  நாளை முதல் வந்துவிடு.”  அதிகாலைக்குளிரில்  வீட்டில்  போர்த்திப்படுத்திருக்கவேண்டிய அச்சிறுவன்  தமிழ் மீது  கொண்டிருந்த காதலினால், ” காலை எழுந்தவுடன்  படிப்பு”  என்று  பாடிக்கொண்டே  காடு, மேடு,  குளம், குட்டை  கடந்து  ஒற்றையடிப்பாதையால்  வந்து  பண்டிதர்  கந்தையா அவர்களிடம்  தமிழ்  எழுதவும்  பேசவும் கற்றுக்கொள்கின்றான். பாரதியிலிருந்து  தமிழை  எளிமையாகச்சொல்லிக்கொடுத்த அந்தப்பண்டிதரும்,  செய்யுள்கள்,  இலக்கணம்,  நன்னூல், பத்துப்பாட்டு, திருக்குறள்,  சிலப்பதிகாரம்,  கம்பராமாயணம்  எல்லாம்  சொல்லிக்கொடுக்கிறார். இளைமையில்  கல்வி  சிலையில்  எழுத்து  என்பார்களே… அவ்வாறே தனது  பால்ய காலத்திலேயே  தமிழை ஆழ்ந்து நேசித்துக் கற்று தமிழ்ப்பண்டிதர்  பரீட்சையிலும்  தேறி  பின்னாளில்  எழுத்தாளராகவும்  சிறந்த  மொழிபெயர்ப்பாளராகவும், நூலாசிரியராகவும்   மிளிர்ந்திருப்பவர்தான்  மடுளுகிரியே விஜேரத்தின.

தனக்கு  தமிழ் கற்பித்துத்  தந்த பண்டிதர் கந்தையா  தன்னை தமது மகன்போன்று  அன்புசெலுத்தியதை  நினைவுபடுத்துகிறார். அந்த அதிகாலைவேளையில் அவரிடம் சென்றால்,  பசியோடு வரும்  எனக்கு  அவர் தோசை, இடியப்பம், புட்டு முதலான  காலை உணவும் தந்து  உபசரித்தார்  எனவும்  நன்றியோடு  கூறுகிறார்  மடுளுகிரியே விஜேரத்தின. அதென்ன  மடுளுகிரியே என்று உங்கள் பெயரின் முன்னால் ஒரு சொல்வருகிறதே  எனக்கேட்டேன். உடனே  அவர், ” மாவை நித்தியானந்தன், மாவை  சேனாதிராஜா, திக்குவல்லை  கமால்,  சில்லையூர்  செல்வராசன்,  முல்லை மணி, வாகரை வாணன்,  காவலூர்  இராசதுரை  என்றெல்லாம்  தங்களது  இயற்பெயர்களுக்கு  முன்னால்  தாங்கள் பிறந்த ஊரின்  பெயரையும் வைத்துக்கொள்வதில்லையா…?  அதுபோலத்தான்  எனது பிறந்த ஊர் மடுக்கந்தை.  அதன்  அர்த்தம்  மடுளுகிரிய. ” எனச்சொன்னவரிடம் முழுப்பெயரும்  கேட்டபொழுது,  அவர் மீதான வியப்பு மேலும் பன்மடங்காகியது. அவரே சொன்னார்: சுபசிங்ஹ முதியான்சலாகே கம்மஞ்சிராலகே நங்ஹமிகே விஜேரத்ன.

அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 17 ஆவது தமிழ் எழுத்தாளர்  விழாவில்  இடம்பெறும் மொழிபெயர்ப்பு அரங்கில் உரையாற்ற  வந்திருக்கிறார் இந்த தமிழ் அபிமானி.   எதிர்வரும்  06 ஆம் திகதி சனிக்கிழமை  (06-05-2017)  மெல்பனில் Mulgrave  Stirling Theological  College Auditorium   மண்டபத்தில் மாலை 5 மணிக்கு இந்த விழா நடைபெறுகிறது. இலக்கணச்சுத்தமாக  தமிழில் பேசும் மடுளுகிரியே விஜேரத்ன வியப்புக்குரிய  மனிதர். வியப்பு  ஏற்படுவதற்கு காரணம் இருக்கிறது. அக்காரணத்தைத்தேடி பின்னோக்கி  பயணிக்கின்றேன்.

இலங்கை  முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1970 களில் தமிழ் – சிங்கள நல்லிணக்கத்திற்காக  தேசிய ஒருமைப்பாட்டு  மாநாட்டை  தலைநகரிலும்,  கருத்தரங்குகளை  சிங்களப்பிரதேசங்களிலும் நடத்தியபோது, மொழிபெயர்ப்பாளர்களின்  பணி  முக்கியமாக  கருதப்பட்டது. எம். கே. இராகுலன், சிவா சுப்பிரமணியம், ரத்னவன்ஸ தேரோ முதலான விரல்விட்டு எண்ணத்தக்க  சிலரே  பெரிதும்  உதவினர். மாநாட்டிலும்,  கருத்தரங்குகளிலும்  எழுத்தாளர்களாவது நல்லிணக்கத்திற்கு  கடுமையாக  உழைத்து  பாடுபடவேண்டும்  என்ற குரல்  இரண்டு  தரப்பிலிருந்தும்  எழுந்தது. ஆயினும்,  அவ்வேளையில்  மல்லிகை  இதழ் பல சிங்கள சிறுகதைகளையும்  கட்டுரைகளையும்  தமிழில்  மொழிபெயர்த்து பிரசுரிக்க  ஆவன செய்தது.  அதனால், மார்ட்டின் விக்கிரமசிங்கா, ஜி. பி. சேனாநாயக்கா, குணசேன விதான, கே. ஜயத்திலக்க முதலானோரின்  பல  படைப்புகளை  நாம்  தமிழில் படித்தோம். வீரகேசரி பிரசுரம் கருணாசேன ஜயலத்தின் நாவல்களை தமிழில் வெளியிட்டது.  தம்பிஐயா தேவதாஸ் மொழிபெயர்த்திருந்தார். சரோஜினி அருணாசலம்  (சோமசுந்தரப்புலவரின் பேத்தி)  டி. பி. இலங்கரத்னாவின்   படைப்புகளை  தமிழுக்குத்தந்தார். மல்லிகை பல சிங்கள இலக்கிய ஆளுமைகளை மல்லிகையின் முகப்பில் பதிவுசெய்து,  அவர்கள் பற்றிய நேர்காணல்களையும் அறிமுகக்கட்டுரைகளையும்  வெளியிட்டுவந்தது. தமிழ் – சிங்கள  இன நல்லுறவை சித்திரிக்கும் குணசேன விதான எழுதிய பாலம  என்ற  சிறுகதையை ஆங்கில மொழியில் படித்திருந்த ஜெயகாந்தன்,  அதனை  தமிழில்  மொழிபெயர்த்து, தாம் ஆசிரியராக இருந்த  கல்பனா இதழில் வெளியிட்டார். வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றிய  கே. நித்தியானந்தன்,  மார்டின் விக்கிரமசிங்காவின் மடோல் தூவ நாவலை   மடோல்த்தீவு என்ற பெயரிலும்  கம்பெரலிய நாவலை கிராமப்பிறழ்வு என்ற பெயரில் கலாநிதி எம். உவைஸும்  மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

இந்தப்பின்னணிகளுடன்  தேசிய ஒருமைப்பாடு  என்பது ஒரு வழிப்பாதையல்ல   என்ற  குரலையும்  நாம்  முன்வைத்தோம். இக்காலப்பகுதியில்  வவுனியாவின்  எல்லைக்கிராமமான மடுக்கந்தையில்   ஆரம்பப்பாடசாலையில்  படித்துக்கொண்டிருந்த 15 வயது  மாணவர்தான்  விஜேரத்ன. வவுனியா இரட்டைபெரிய குளத்தில் 1956 ஆம் ஆண்டு பிறந்த இவருடைய வாழ்விடம் தமிழ் சூழ்ந்த பிரதேசமாக  இருந்தமையால், பால்ய காலத்திலிருந்தே தமிழில் பேசும்  இயல்பும்  வந்திருக்கிறது. தனது  ஆரம்பக்கல்வியை  இரட்டைப்பெரிய குளம், மற்றும் உளுக்குளம்  அரசினர் பாடசாலைகளிலும்  உயர் வகுப்பை வவுனியா காமினி வித்தியாலயத்திலும்  பயின்ற விஜேரத்ன, வவுனியாவில் தமிழ்சங்கத்தின்  தமிழ்ப்பண்டிதர் பரீட்சைக்கும் தோற்றியிருக்கிறார். களினி பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் பயின்ற கலைப்பட்டதாரியுமாவார்.   பேராதனை, கொழும்பு பல்கலைக்கழகங்களில்  தொலைத்தொடர்பு மூலம்  பட்டங்களை (Post Graduate ) பெற்றுக்கொண்டிருக்கும் இவர், முதுகலைமானிப்பட்டத்தை  ஶ்ரீ ஜெயவர்தன புர பல்கலைக்கழகத்திலும்,  தத்துவம் தொடர்பான  கற்கை நெறியில் கலாநிதிப்பட்டத்தை  களனியா பல்கலைக்கழகத்திலும் பெற்றிருப்பவர்.  தமது வாழ்நாளில் பெரும்பகுதியை கற்றலிலும் மொழிபெயர்ப்பிலும் செலவிட்டிருக்கும் மடுளுகிரியே விஜேரத்ன, சந்தைப்படுத்தல் (Higher Diploma in Marketing)  மற்றும் வங்கித்துறையிலும் (Higher Diploma in Banking ) பயின்று தேர்ச்சி பெற்றிருக்கின்றார்.  தேடல் மனப்பான்மையுடன் அயராமல் இயங்கியிருக்கும் இவர்  பழந்தமிழ் இலக்கியங்களையும்  நவீன தமிழ் படைப்பிலக்கியங்களையும்  தொடர்ந்து படித்துவந்தவர்.
தான் படித்து  மொழிபெயர்க்க விரும்பிய தமிழ் நூல்களையும் சிங்கள மொழிக்கு  வழங்கியிருக்கிறார். 

இலங்கை   தமிழ்ச்சிறுகதைகள் சிலவற்றை  தெரிவுசெய்து  உருமைய ( உரிமை) என்ற பெயரிலும் தந்திருக்கும்  இவர்  மொழிபெயர்த்த  இதர  தமிழ்  நூல்கள் பின்வருமாறு:

மமதா ஒபமவெமி ( நான் என்னும் நீ – எம். எச். எம் அக்ரோஸ் எழுதியது) சுவாமி விபுலானந்தர் வாழ்க்கைச்சரிதம், பத் பிட ( இலங்கைத்தமிழ்ச்சிறுகதைகள்) நிராய ( துன்பக்கேணியில் – செ. யேகாநாதன் எழுதிய நாவல்) ஒகய ( கானல் – நாவல் – கே. டானியல் எழுதியது) சமணலவெவ ( வண்ணாத்திக்குளம் – நாவல் – நடேசன் எழுதியது) ஹிம வெஸி ராத்திரிய ( பனிபெய்யும் இரவுகள் – ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதியது) மலேசியன் ஏர்லைன் ( சிறுகதைகள் – நடேசன் எழுதியது)  ரத்தரங் ஹிரகெதர வெசன மினிஸ்ஸு – (பொற்சிறையில் வாடும் புனிதர்கள் நாவல் – தெணியான்)  அபார யாத்ரா – நீண்ட பயணம் ( நாவல் – செ. கணேசலிங்கன்) ரது அஹச ( செவ்வானம்  நாவல் – செ. கணேசலிங்கன்)  யாப்பணே ராத்திரி (யாழ்ப்பாணத்து ராத்திரிகள் – கதைகள் – செங்கைஆழியான்)

இவை தவிர பல சிங்கள எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழுக்கும் மொழிபெயர்த்துள்ளார். சிறந்த சிங்களச்சிறுகதைகளை தெரிவுசெய்து தமிழுக்கு வழங்கியிருக்கும் மடுளுகிரியே விஜரத்ன, அதற்கான சுதந்திர இலக்கிய விருதினையும்  1990  இல் பெற்றவர்  பேராசிரியர் சோமரத்ன பாலசூரிய, சேபாலி மயாதுன்ன, குணசேகர குணசோம, குணசேன விதான, சிபில் வெத்தசிங்க, வண. கங்கொடவில சோம தேரர், தெனகம ஶ்ரீவர்தன, கமால் பெரேரா, வண. போதி பாலதேரர் ஆகியோரின் நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்தவர்.

அத்துடன் தமிழ் கிராமியக்கதைகளை இரண்டு பாகங்களில் சிங்களத்திற்கு வரவாக்கியிருக்கிறார். சிங்கள மொழி பேசுவோர், இலகுவாக தமிழைக்கற்கும் வகையில் பயிற்சி நூல்களும் எழுதியவர். இவ்வாறு மொழிபெயர்ப்பு பணிகளுக்கிடையே படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டு,  தமது தாய்மொழியில் ஆறு சிறுகதைத்தொகுதிகளையும், இளையோருக்கான இரண்டு நாவல்களையும் சிறுவர் இலக்கியம் சார்ந்த நூலும் எழுதியிருக்கிறார். தமிழ் – இந்து கலாசார நூல்களின் வரிசையில் மகா சிவராத்திரி, தைப்பொங்கல், தீபாவளி, நவராத்திரி, சிங்கள – தமிழ் புதுவருடப்பிறப்பு ஆகியன பற்றியெல்லாம் எழுதியிருக்கும் மடுளுகிரியே விஜேரத்ன,  மகாகவி பாரதி, அழ. வள்ளியப்பா  கவிதைகள் சிலவற்றையும்  சிங்கள வாசகர்களுக்கு  வரவாக்கியிருக்கும் இவரை பன்னூல் ஆசிரியர் என்றே சுருக்கமாக குறிப்பிடலாம்.

இலங்கையிலும் இந்தியாவிலும் இவரது பணிகளுக்காக விருதுகளும் கிடைத்துள்ளன. இரண்டு மொழிகளிலும் தேர்ச்சியிருந்தமையால், இன நல்லிணக்கம் தொடர்பாக வடக்கு – கிழக்கு உட்பட தென்னிலங்கையில்  நடைபெற்ற பல நிகழ்ச்சிகளிலும் உரையாற்றியவர்.  சிறந்த  சிங்களப்படங்களுக்கான  தேர்விலும் நடுவராக  பணியாற்றியவர்.

தமது வாழ்நாளில் பெரும்பகுதியை மொழிபெயர்ப்பிற்கும், படைப்பிலக்கியத்திற்கும் இன நல்லிணக்கத்திற்கும் அர்ப்பணித்திருக்கும் மடுளுகிரியே விஜேரத்ன, இலங்கை வங்கியில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றுகிறார். வவுனியாவின்  எல்லைக்  கிராமத்திலிருந்து வந்த ஒரு சிங்கள மைந்தனை தமிழ்  இலக்கிய உலகம்  திரும்பிப்பார்க்கின்றது.   தமிழ் – சிங்கள  தேசிய ஒருமைப்பாடு என்பது  இருவழிப்பாதை என்பதை  முழு இலங்கைக்கும்  உணர்த்தியிருக்கும்   இவரின் உள்ளார்ந்த  நல்லெண்ணங்களும்,  அர்ப்பணிப்பு மிக்க  உழைப்பும் தமிழ் – சிங்கள  மொழித்தொண்டுகளும்  மற்றவர்களுக்கு முன்மாதிரியானவை.

Letchumananm@gmail.com