அனைவரிடமும் ஏதோ ஒரு கதையோ அல்லது பல கதைகளோ இருக்கும். ஆனால், இவர்களில் சிலர்தான் அதனை எழுத்தில் தருகிறார்கள். மற்றவர்கள் உரையாடலின் பொழுது சொல்கிறார்கள். உரையாடல்களில் ஒருவர் சொன்ன கதை கேட்கப்பட்ட மற்றும் ஒருவரினால் வேறு ஒரு இடத்துக்கு காவிச்செல்லப்படும் பொழுது அதன் வடிவம் மாறிவிடும். கண்வைத்து காது வைத்து மெருகூட்டி வதந்தியாகவே அது பரவிவிடும். கேட்கப்பட்ட வதந்தியின் அடிப்படையிலும் ஒரு புதிய கதை உருவாகிவிடும். உதாரணத்துக்கு – அவுஸ்திரேலியாவில் ஒரு சம்பவம் நடந்தால் அதனை தொலைக்காட்சி ஊடகங்களில் பார்த்து – வானொலிகளில் கேட்டு – பத்திரிகைகளில் படித்துவிட்டு அச்சம்பவம் பற்றி எதுவுமே தெரியாத வீட்டுக்கு வந்த உறவினரிடம் அல்லது நண்பரிடம் அதனைச்சொல்லும்பொழுது பார்த்த – கேட்ட – வாசித்த அச்சம்பவம் வேறு ஒரு வடிவத்தில் ஒரு கதையாகவே பின்னப்பட்டு சொல்லப்படுவது அன்றாட நிகழ்ச்சி.
சினிமாவுக்கு கதை கிடைப்பதும் இப்படித்தான். முன்னர் இந்தியாவில் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் தத்தமக்கென ஒரு கதை இலாகாவே வைத்திருந்தார்கள். உதாரணமாக மனிதர்களை – மிருகங்களை நாயகராக்கியதுடன் மட்டும் நின்றுவிடாது தெய்வங்களின் அதிசயங்களையும் தனது படங்களில் சொன்ன சின்னப்பாதேவர் – சந்திரலேகா – அவ்வையார் – வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படங்களை எடுத்த ஜெமினி வாசன் முதலானோர் ஒரு கதை இலாகாவை வைத்திருந்தனர். ஆனால், சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருந்த நடிகர் பாலாஜி அவ்வாறெல்லாம் கதை இலாகா வைத்திராமல் வடக்கே சென்று ஹிந்திப்படங்களைப் பார்த்துவிட்டு வந்து, அந்தப்படங்களின் அடிப்படையில் ஏ.எல். நாராயணன் என்பவரிடம் கதை சொல்லி வசனம் எழுதவைத்து படம் எடுத்துவிடுவார்.
தமிழ் சினிமாவுக்கு கதைகள் கிடைத்த வரலாறு மிகவும் சுவாரசியமானது. சினிமா இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல அது உருவான நூற்றாண்டு முதலே வலிமையான ஊடகமாகத்தான் வளர்ந்து வந்திருக்கிறது. தொடக்க காலத்தில் சினிமா பேசவில்லை. தமிழ் சினிமா என்னும்பொழுது இந்தியாவைத்தான் முன்னோடியாக சுட்டிக்காட்டும் நிலையிலிருக்கின்றோம். இந்திய மொழிகளில் தமிழும் ஒன்றென்பதனால் இந்திய சினிமா 1931 இல் பேசத்தொடங்கியதனால் நாம் இந்தியாவைத்தவிர்த்து தமிழ் சினிமா பற்றி பேச முடியாது. ஆரம்பத்தில் சொன்னவாறு ஒவ்வொரு மனிதரிடத்திலும் கதைகள் இருந்தன. இருக்கின்றன. இருக்கும். சிறுகதையிலும் நாவலிலும் சொல்லப்பட்ட அவரவர் கதைகள் நாடகமாகும்பொழுதும் திரைப்படமாகும் பொழுதும் அதன் வடிவம் மாறித்தான் போய்விடுகிறது. வால்மீகி ஒரு வேடன். மான் – மரை பறவைகளை வேட்டையாடி வாழ்ந்த அவர் ஒரு வழிப்பறித்திருடனாகவும் வாழ்ந்திருக்கிறார். எப்பொழுதும் ஒரு மிருகத்தை வேட்டையாடுவதற்காக அதனைத்துரத்திக்கொண்டு ஓடும்பொழுதும் மரா மரா என்றுதான் சத்தம் எழுப்பிக்கொண்டு ஓடுவாராம். மரா என்றால் கொல். கொலை செய். என்று அர்த்தம். ஒருநாள் வால்மீகி, அந்தக் காட்டுவழியாக மரா மரா எனச்சொல்லிக்கொண்டு ஓடியபொழுது அவரை குறுக்கிட்டு மறித்த ஒரு முனிவர் – இங்கே வா. மரா மரா என்று சொல்லிக்கொண்டு ஒரு உயிரைக்கொல்ல ஓடுகிறாயே, தொடர்ந்து மரா மரா என்று சொல் என்றாராம். வால்மீகியும் மரா மரா மரா மரா என்றாராம். எங்கே சொல்லிப்பாருங்கள். ராம ராம ராம என்று அந்தத்தொனி உங்களை அறியாமலேயே மாறும். ராமனின் கதையை எழுதப்பா? என்று சொல்லி ராமனின் கதையை வால்மீகிக்குச்சொல்லி, அவரது வேட்டையாடும் – கொள்ளையடிக்கும் பழக்கத்தையே மாற்றினாராம் அந்த முனிவர். இராமாயணம் எழுதினார் வால்மீகி. அதற்கு இலக்கியச்சுவை ஏற்றினார் கம்பர். எமக்கு கம்பராமாயணம் கிடைத்தது. காலப்போக்கில் நாம் இந்த இலக்கிய காவியத்திலிருந்து சம்பூர்ண ராமாயணம் – லவ குசா முதலான சினிமாக்களைப்பார்த்தோம். தற்காலத்தில் இராமாயணம் பல அங்கங்களில் தொலைக்காட்சி சீரியலாகவும் வந்துள்ளது. ஹிந்தியில் எடுக்கப்பட்டு ஏனைய இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது.
வியாசர் படைத்த மகாபாரதத்திலிருந்து நாம் வீர அபிமன்யூ – கர்ணன் முதலான சினிமாக்களைப்பார்த்தோம். வீர அபிமன்யூ என்ற பெயரில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் வந்துள்ளன. ஒன்றில் எம்.ஜி.ஆர் சிறிய தோற்றத்தில் நடித்தார். பின்னர் ஏவி.எம் ராஜன் நடித்த வீர அபிமன்யூ வந்தது. கர்ணன் படம் சிவாஜியின் உணர்ச்சிகரமான நடிப்பில் பந்துலுவின் இயக்கத்தில் சக்தி கிருஷ்ணசாமியின் வசனத்தில் வந்தது. தற்காலத்தில் அதனை டிஜிட்டலில் நவீன தொழில்நுட்பங்களுடன் பதிவுசெய்து திரையரங்கு நிரம்பிய காட்சியாக காண்பித்திருக்கிறார்கள்.
ஒரு காவியம் – வால்மீகி – கம்பரிலிருந்து — ராஜாஜி – சோமு வரைக்கும் செய்யுளாக கவிதையாக உரைநடையாக திரையில் வசனமாகியிருக்கிறது. வியாசர் விருந்தும் ராஜாஜியின் உரைநடைக்கு வந்து சக்திகிருஷ்ணசாமியின் வசனத்துக்கு வந்தது. பத்துக்கட்டளைகள் – பென்ஹர் முதலான சினிமக்களை எடுத்த சிசில் பீடி மெல்லிடம் ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டார்களாம், ” நீங்கள் உங்கள் திரைப்படங்களுக்கு எங்கேயிருந்து கதைகளை எடுக்கிறீர்கள்?” தான் கதைகளுக்காக எங்கேயும் செல்வதில்லை தனக்குத்தேவையான கதைகள் தாராளமாக பரிசுத்த வேதாகமத்தில் இருக்கிறது என்று சொன்னார் சிசில் பீடி மெல்.. ஏராளமான மேற்கத்தைய சினிமாக்கள் முதலில் இலக்கியமாக வாசிக்கப்பட்டவையாகத்தான் இருக்கின்றன. போரும் சமாதானமும் – கடவுளும் கிழவனும் – குற்றமும் தண்டனையும் – ரோமியோ ஜூலியட் – கிளியோபாட்ரா – அன்னா கரினா – டொக்டர் ஷிவாகோ, – லேடி சார்ட்டர்லீஸ் லவ் என்பன இவற்றில் முக்கியமானவை. ஆங்கில நாடக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியரின் பெரும்பாலான நாடகங்கள் திரைப்படமாகியிருக்கின்றன. இதுவரையில் 250 முறைக்கும் மேலாக பல்வேறு மொழிகளில் ஷேக்ஸ்பியரின் கதைகள் சினிமாவகியிருக்கின்றன.க்ஷ்இலங்கையிலும் ஒரு தமிழ்ப்படம் கடமையின் எல்லை என்ற பெயரில் வந்தது.
வங்காளத்திரைப்பட மேதை சத்தியஜித்ரேயின் முதல் படம் பதேர் பாஞ்சலி. 1955 இல் வெளியானது. பிபிதிபூஷண் பணர்ஜியின் நாவல். ரேயின் பல படங்கள் இலக்கியப் படைப்புகளிலிருந்து வந்தவைதான். அரேபிய இரவுகள் கதைகளில் ஒன்றுதான் நாம் பார்த்த எம்.ஜி.ஆர் – பானுமதி – வீரப்பா நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும். இதே பெயரில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நடித்த கருப்பு – வெள்ளைப்படமும் முன்னர் வந்திருக்கிறது. எம்.ஜி. ஆர் நடித்த அலிபாபா கேவா கலரில் எடுக்கப்பட்டது. ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி கதையை நான் சிறுவயதில் படித்திருக்கின்றேன். நல்ல விறுவிறுப்பான கதை. இந்தக்கதையும் அதே பெயரில் படமாகியிருக்கிறது. இவ்வாறு பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
நவீன தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரையில் கல்கி கிருஷ்ணமூர்த்தி – அண்ணாத்துரை, – கலைஞர் கருணாநிதி – அகிலன்- மு.வரதராசன் – புதுமைப்பித்தன் – உமாசந்திரன், ஜெயகாந்தன் – மகரிஷி – இதயம்பேசுகிறது மணியன் – சிவசங்கரி – தி. ஜானகிராமன் – சுஜாதா – கி. ராஜநாராயணன் – பொன்னீலன் – கந்தர்வன் – சுஜாதா – ஜெயமோகன் ஆகியோரின் நாவல்கள் – சிறுகதைகள் திரைப்படங்களாகியிருக்கின்றன. இலங்கையில் செங்கை ஆழியானின் வாடைக்காற்று – காவலூர் ராசதுரையின் பொன்மணி ஆகிய நாவல்களும் திரைப்படமாகின.
குறும்படங்கள் தொலைக்காட்சி நாடகங்களின் வருகையினால் அவற்றுக்கும் பலரது படைப்புகள் தீனி போட்டுள்ளன என்பதையும் மறப்பதற்கில்லை. அகிலனின் சித்திரப்பாவை – தீபம் நா. பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் ஜெயகாந்தனின் பாரிசுக்குப்போ – ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் என்பன தொலைக்காட்சி நாடகங்களாக தயாரிக்கப்பட்டன.
தொலைக்காட்சி நாடகங்கள் ரப்பர் போன்று மாதக்கணக்கில் வருடக்கணக்கில் இழு இழு என்று இழுபட்டுக்கொண்டிருந்த வேளையில், பாலுமகேந்திரா மிகச்சிறந்த – என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய பணியொன்றை செய்தார். மீடியா ட்ரீம்ஸ் தயாரிப்பில் பல சிறந்த சிறுகதைகளை தெரிவுசெய்து கதை நேரம் என்ற வரிசையில் பல தரமான குறும்படங்களைத்தந்தார். சுந்தரராமசாமி – திலகவதி – சமுத்திரம் – பிரபஞ்சன் உட்பட பலரது சிறுகதைளை கலை நேர்த்தியுடன் குறும்படங்களாக காண்பித்தார். அண்மையில் மறைந்த மகேந்திரன் பற்றி அறிந்திருப்பீர்கள். அவரை முள்ளும் மலரும் மகேந்திரன் என்றுதான் அழைப்பார்கள். அவரிடம் ஒரு வித்தியாசமான குணமுண்டு. படித்த இலக்கியப்படைப்பை நெடுங்காலம் உள்வாங்கியிருந்துவிட்டு அதற்கு திரைக்கதை வடிவம் கொடுப்பார்.
அவர் சிறந்த வாசகர். அத்துடன் எழுத்தாளர். பத்திரிகையாளராக இனமுழக்கம் – துக்ளக் ஆகிய இதழ்களிலும் பணியாற்றியவர். ஒரு சந்தர்ப்பத்தில் கல்கியின் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க விரும்பினார் எம்.ஜி. ஆர். கதையை கல்கியின் மகன் இராஜேந்திரனிடமிருந்து விலைக்கு வாங்கினார். அதற்கு திரைக்கதை வசனம் எழுதுவதற்காக மகேந்திரனை அழைத்து தனது வீட்டிலேயே தங்கியிருந்து எழுதுவதற்கும் வசதி செய்துகொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அந்தக்கதை அன்று திரைப்படமாகவில்லை. சமகாலத்தில் அதனை மணிரத்தினம் படமாக்கவிருப்பதாகவும் நடிகர் தேர்வு நடப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. ஏற்கனவே மகேந்திரன் பல மேடை நாடகங்களுக்கு வசனம் எழுதியவர்தான் . செந்தாமரை என்ற நாடக நடிகரின் தங்கப்பதக்கம் நாடகத்திற்கு வசனம் எழுதியவர் மகேந்திரன். சிவாஜி கணேசன் அந்த மேடை நாடகத்தைப்பார்த்து – விட்டு அதனை திரைப்படமாக்கவிரும்பி, தானே கதாநாயகனாக நடித்தார். படம் வெள்ளிவிழா கண்டு வெற்றிபெற்றது. அதற்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் மகேந்திரனிடம் இருந்த பழக்கம் முக்கியமானது. தன்னைக் கவர்ந்த இலக்கியப்படைப்பை படமாக்குவதற்கு விரும்புவார். புதுமைப்பித்தனின் சிற்றன்னையை உதிரிப்பூக்கள் என எடுத்தார்.
கல்கி இதழின் வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நாவல் போட்டியில் உமாச்சந்திரனின் முள்ளும் மலரும் முதல் பரிசினைப்பெற்றது. ரா.சு.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம் இரண்டாம் பரிசையும் பி.வி.ஆ ரின் மணக்கோலம் மூன்றாம் பரிசினையும் பெற்றுக்கொண்டன. முதல் பரிசுபெற்ற முள்ளும் மலரும் நாவலுக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார் மகேந்திரன். பாலுமகேந்திரா அதற்கு ஒளிப்பதிவு செய்தார். ரஜினிகாந்த் – ஷோபா – படாபட் ஜெயலட்சுமி நடித்த முள்ளும் மலரும் தமிழ்த்திரைப்படங்களில் தரமான படம் என்று இன்று வரையில் பேசப்படுகிறது. வசூலில் கோடி கோடியாக சம்பாதித்துக்கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்திடம் நீங்கள் இதுவரையில் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்தமான படம் எது? என்று கேட்டால் அவர் உடனே முள்ளும் மலரும் என்றுதான் சொல்கிறார். மகேந்திரன், எழுத்தாளர் கந்தர்வனின் சாசனம் என்ற சிறுகதையையும் அதே பெயரில் படமாக்கினார். ஆனால் பல மாதங்கள் தாமதத்தின் பின்னர்தான் இத்திரைப்படம் வெளியானது.
கல்கியின் பொன்னியின் செல்வனுக்கும் புதுமைப்பித்தனின் சிற்றன்னைக்கும் (உதிரிப்பூக்கள்) உமாச்சந்திரனின் முள்ளும் மலரும் நாவலுக்கும் கந்தர்வனின் சாசனம், சிவசங்கரியின் நண்டு பொன்னீலனின் உறவுகள் (பூட்டாத பூட்டுக்கள்) தென்னரசுவின் வாழ்ந்து காட்டுகிறேன் முதலான கதைகளுக்கும் திரைப்பட வடிவம் கொடுத்த மகேந்திரன், அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் விலங்கு மருத்துவர் நடேசன் எழுதிய வண்ணாத்திக்குளம் – முழு நாவலுக்கும் ( இது தொடர்கதையல்ல) திரைக்கதை வசனம் எழுதினார்.
காட்சிக்கோணங்கள் என்பனவற்றை பதிவுசெய்து முடிக்கப்பட்ட அந்த திரைப்படச்சுவடியை பார்த்திருக்கின்றேன். அதில் மகேந்திரனின் உழைப்பு தெரிந்தது. ஆனால் – அந்தக்கதை நிகழும் களம் இலங்கை. இலங்கையின் அரசியல் சூழ்நிலைகளினால் தயாரிப்பு முயற்சி வெறும் எண்ணத்துடன் முற்றுப்பெற்றது.
சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை படமாக்கியிருக்கும் பாலுமகேந்திரா சுந்தரராமசாமியின் பிரசாதம் என்ற கதையை படமாக்கிய விதத்தில் தனக்கு போதிய திருப்தி இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். தமிழ் சினிமா மற்றும் உலகசினிமா பற்றியெல்லாம் தொடர்ச்சியாக எழுதிவரும் இங்கிலாந்தில் வசிக்கும் விமர்சகர் யமுனா ராஜேந்திரன் தமிழில் படைப்பு இலக்கியங்களை சினிமாவாக்கும் கலைஞர்கள் குறித்து சொல்லியிருக்கும் கருத்து மிகவும் முக்கியமானது.
திரைப்படம் மனித நடத்தையை விளக்க முயலும் காட்சி ரூப மொழியிலானது. இலக்கியம் மனித உளவியலை விளக்க முயலும் குறியீடுகளான சொற்களால் ஆனது. திரைப்படத்தில் மனிதர்களின் உடல்மொழி அடிப்படையானது எனில் – இயற்கை அதனது துணைப்பிரதி. மௌன இடைவெளி திரைப்படத்தில் பெரும் அர்த்தம் உளவியல் மொழியிலானது. இலக்கியத்தில் மௌன இடைவெளி கற்பனைக்கு உரிய இடம். ஸ்பரிச அனுபவம் என்பதனை திரைப்படம் பாவனைகளாலும் இலக்கியம் சொற்களாலும் பற்றிப் பிடிக்க முனைகிறது. இரண்டும் தத்தம் அளவில் வெகுதூரம் – காலம் பயணம் செய்து தமக்கென தனித்தனி தர்க்கங்களையும் கொண்டிருக்கிறது. ஓன்றைவிடப் பிறிதொன்று மேன்மையானது என இதன் இரண்டினதும் வரலாற்றினையும் சாதனைகளையும் கொடுமுடிகளையும் அறிந்த எவரும் சொல்ல மாட்டார்கள். இப்படிச் சொல்ல முனையும் இலக்கியவாதியை திரைப்படக் கலையை அறியாதவன் எனவும் – திரைப்பட இயக்குனரை இலக்கியம் அறியாதவன் எனவுமே சொல்ல முடியும்.
இவ்வாறு சொல்லியிருக்கும் யமுனாராஜேந்திரன்,
இலக்கியத்தரம் கொண்ட திரைப்படங்கள் இந்திய அளவில் மேற்கு வங்கத்திலிருந்தும் – ஆந்திரா கர்னாடகா – கேரளம் – மராட்டியம் – ஒரிசா போன்ற மாநிலங்களில் இருந்தும் வந்தன. ரித்விக் கடக் முதல் கிரிஷ் கர்னாட் ஈராக எம்.டி.வாசுதேவன் நாயர் வரை இலக்கிய சிருஷ்டியாளர்களாகவும் திரைப்படக் கலைஞர்களாகவும் சாதித்தவர்களை இவ்வாறு வரிசைப்படுத்த முடியும். எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சரி – இனி தமிழில் பார்த்தோமென்றால் இலக்கியப்படைப்பாளிகளாகவும் சினிமாத்துறையில் ஈடுபட்டவர்களாகவும் விளங்கியவர்களின் வரிசையில் ஜெயகாந்தன் – தங்கர்பச்சான் ஆகியோரை குறிப்பிடலாம்.
ஜெயகாந்தனின் சிறுகதைகளை நாவல்களை – அவர் பெரும்பாலும் தொடர்கதைகள்தான் – எழுதினார்.
அவரது தொடர்கதைகளான உன்னைப்போல் ஒருவன் – யாருக்காக அழுதான் – காவல் தெய்வம் – சில நேரங்களில் சில மனிதர்கள் – ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – ஊருக்கு நூறுபேர் – புதுச்செருப்பு கடிக்கும் என்பன திரைப்படங்களாகின. ( முக்கிய குறிப்பு: புதுச்செருப்பு கடிக்கும் திரைக்கு வரவேயில்லை)
எஸ்.வி.சுப்பையா ஜெயகாந்தனின் பிரம்மோபதேசம் கதையை வாங்கி படமாக்க முயன்று அந்த முயற்சியை கைவிட்டார்.
பாரிசுக்குப்போ நாவல் நல்லதோர் வீணையாகவும் – மௌனம் ஒரு பாஷை அதே பெயரில் தொலைக்காட்சி நாடகமாகவும் வெளியாகின.
ஆரம்பத்தில் தனது கதைகளுக்கு (உன்னைப்போல் ஒருவன் – யாருக்காக அழுதான் ) ஜெயகாந்தனே திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வெளியிட்டார். ஒரு தயாரிப்பாளரிடம் சென்றால் அவருடன் சமரசம் ஏற்படுவது தவிர்க்க முடியாது என்று ஆரம்பத்தில் நினைத்த ஜெயகாந்தன் பின்னர் எஸ்.வி. சுப்பையா மற்றும் பிம்சிங் ஆகியோரிடம் சமரசம் செய்துகொள்ளவேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்.
இங்கு ஒரு சுவாரஸ்யமான தகவலை உங்களுக்குச்சொல்லமுடியும்.
யாருக்காக அழுதான் கதையை முதலில் படமாக்க விரும்பியவர் ஸ்ரீதர். இவரைப்பற்றி உங்களுக்குத்தெரியும். நெஞ்சு என்ற முதல் எழுத்துக்களில் சில படங்கள் எடுத்தவர்.
நெஞ்சில் ஓர் ஆலயம் – நெஞ்சம் மறப்பதில்லை – நெஞ்சிருக்கும் வரை. அத்துடன் கல்யாணப்பரிசு – கொடிமலர் – சுமைதாங்கி – முதலான சோகப்படங்களையும் தேன்நிலவு – காதலிக்கநேரமில்லை – ஊட்டிவரை உறவு முதலான பொழுதுபோக்கு நகைச்சுவைச்சித்திரங்களையும் தந்தவர்.
யாருக்காக அழுதான் ? கதையில் இறுதிக்காட்சியில் திருட்டுமுழி ஜோசப் குமுறிக்குமுறி அழுவான். அத்துடன் கதை முடிகிறது.
அந்தக்கதையில் அவன் இறுதியில் ஒரு வாழைத்தோட்டத்தில் ஒரு சிலுவைக்கு முன்னால் மண்டியிட்டு அழுதவாறு இறந்துவிடுவதாக அதனை மாற்றி படம் எடுக்கிறேன் என்றாராம் ஸ்ரீதர்.
அதற்கு ஜெயகாந்தன் – வேண்டுமானால் படத்தின் பெயரையும் யாருக்காக செத்தான் ? என்று மாற்றிக்கொள்ளுங்கள் என்று கோபத்துடன் சொல்லி திருப்பி அனுப்பியிருக்கிறார். ( ஒரு இலக்கியவாதியின் கலை உலக அனுபவங்கள் – நூல் – ஜெயகாந்தன்)
ஒரு இலக்கியப்படைப்பினை படமாக்கும் பொழுது அதன் மூலக்கதையை எழுதியவருக்கும் – திரைப்படமாக்க முனையும் இயக்குநருக்கும் இடையில் ரசனையில் சமச்சீர் இருந்தால்தான் இலக்கியப்படைப்பை உயிர்சிதையாமல் படத்தில் காண்பிக்க முடியும்.
ஸ்டுடியோ எல்லைக்குள் படப்பிடிப்பு தளத்தில் நின்ற கெமராவையும் நடிகர்களையும் பசுமை நிரம்பிய கிராமத்துக்கு அழைத்துச்சென்று மண்வாசனை கமழ படம் எடுத்தவர் பாரதிராஜா. அவரது படங்களைப்பார்த்தவர்களில் சிலர் நீங்கள் ஏன் ஜெயகாந்தனின் கதைகளை படமாக்க முயற்சி செய்யவில்லை ? எனக் கேட்டார்கள்.
” இலக்கிய உலகில் அவர் ஒரு சிங்கம். நான் திரையுலகில் சிங்கமாக மாறிக்கொண்டிருப்பவன். இரண்டு சிங்கங்களும் மோதமுடியாது. ” என்று இலக்கிய வடிவமும் திரை வடிவமும் ஒத்திசைவாவதில் நேரும் சங்கடத்தை சாமர்த்தியமாகச் சொன்னார்.
தில்லானா மோகனாம்பாள் எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு. அவர் பாவமன்னிப்பு உட்பட சில பழைய படங்களில் நடித்துமிருக்கும் ஒரு பாடலாசிரியர் – கலைஞர். தில்லானா மோகனாம்பாள் கதை படமாக்கப்பட்டாலும், அதனை தனது வாழ்நாளில் பார்க்காமலேயே மனக்கசப்புடன் மறைந்தார் கொத்தமங்கலம் சுப்பு என்ற தகவலையும் படித்திருக்கின்றேன். அவரது ராவ்பகதூர் சிங்காரம் என்ற கதைதான் சிவாஜி பத்மினி நடித்த தீராதவிளையாட்டுப் பிள்ளையாகியது. அகிலனின் வாழ்வு எங்கே நாவல் சிவாஜி – சரோஜாதேவி நடடித்த குலமகள் ராதையாகியது. ஏ.பி.நாகராஜன் இவற்றை கதை வசனம் எழுதி இயக்கினார்.
தமது சினேகிதி நாவலை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சாரதா என்ற பெயரில் எடுத்துவிட்டார் என்று அகிலன் நீதிமன்றம் வரையில் சென்று போராடினார்.
கமல்ஹாசன் தனது கல்லுக்குள் ஈரம் நாவலைத்தான் தழுவி ஹேராம் எடுத்தார் என்ற புகரைச் சொன்னார் அதனை எழுதிய ரா.சு. நல்லபெருமாள்.
தனது குருதிப்புனல் நாவலை, இயக்குநர் ஶ்ரீதர்ராஜன் கண்சிவந்தால் மண் சிவக்கும் என்ற பெயரில் திரைப்படமாக்கி, தனது கதையின் போக்கையே மாற்றிவிட்டார் என்று மனக்குறைப்பட்டார் இந்திராபார்த்தசாரதி.
குருதிப்புனல் தஞ்சை கீழ்வெண்மணியில் நடந்த விவசாயிகள் படுகொலையை சித்திரித்த கதை.
மணிச்சித்திரத்தாழ் என்று ஒரு படம் மலையாளத்தில் வெளியானது. அதனைத்தான் தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் எடுத்தார்கள். மலையாளத்தில் ஷோபனா நடித்த பாத்திரத்தில் தமிழில் ஜோதிகா நடித்தார். தமிழ்ப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் தந்தது. ஆனால், மூலக்கதை எழுதிய அந்த கேரள படைப்பாளிக்கு கிடைத்த சன்மானம் சொற்பமானது. அவரும் ஜெயகாந்தன் போன்று உரத்துப்பேசியிருந்தால் அவரது கதை படமாகியே இருக்காது.
தங்கர்பச்சான் சிறுகதை எழுத்தாளர். அத்துடன் சிறந்த ஒளிப்பதிவாளர் – இயக்குநர். தி.ஜானகிராமனின் மோகமுள் படத்தை ஞான ராஜசேகரன் எடுத்தபொழுது , அதற்கும் அதே ராஜ ஞானசேகரன் எடுத்த பாரதி – பெரியார் படங்களுக்கும் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான்.
தனது கதைகளான சொல்ல மறந்த கதை – ஒன்பது ரூபா நோட்டு – பள்ளிக்கூடம் ஆகியனவற்றை படமாக்கினார். அதனால் அவருக்கு சமரசங்கள் – சங்கடங்கள் இருக்கவில்லை எனக்கருதலாம்.
இலங்கையை எடுத்துக்கொண்டால் எழுத்தாளர் செங்கை ஆழியானின் வாடைக்காற்று காவலூர் ராஜதுரையின் பொன்மணி ஆகியன திரைப்படங்களாகின. இரண்டு கதைகளும் இலங்கையின் வடபகுதியை களமாகக்கொண்டவை. செங்கை ஆழியான் ஒரு உதவி அரசாங்க அதிபராக சிறிது காலம் நெடுந்தீவில் பணியாற்றியவர். அந்தத்தீவுக்கு ஒரு பருவகாலத்தில் பறந்து வரும் கூழைக்கடா பறவை இனம்போன்று அந்தப்பிரதேசத்திற்கு கடல் தொழில் நிமித்தம் வேறு பிரதேசத்திலிருந்து வருபவர்களுக்கும் இடையில் தொழில்போட்டியுடன் காதலும் வளர்ந்தது எனச்சித்திரித்த கதை. ஆனால் வாடைக்காற்று திரைப்படமாக்கப்பட்ட களம் மன்னார் பேசாலை.
காவலூர் ராஜதுரை வானொலி ஊடகவியலாளர். அவர் கதைகள் குறுநாவல்கள் எழுதியிருப்பவர். தமது பொன்மணி கதைக்கு அவரே திரைவடிவம் கொடுத்தார். இக்கதையும் யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பை சித்திரித்த படம்தான்.
இலக்கியத்தில் படைப்புமொழி – சினிமாவில் திரைமொழி இருக்கிறது. இரண்டும் இணைவதில்தான் கதையொன்று படமாவதில் வெற்றி தங்கியிருக்கிறது.
இந்தப்பதிவின் தொடக்கத்தில் சொல்லப்பட்டதுபோன்று, எம்மெல்லோரிடமும் கதைகள் இருக்கின்றன. ஆனால், எல்லோராலும் அதனை எழுத முடியாது. நாடகமாகவோ, படமாகவோ தயாரிக்கமுடியாது. ஆனால் மற்றவர்கள் சொல்லும் கதைகளை வைத்து திரைக்கதை வசனமும் எழுதி சினிமாவாக்க ஒரு சிலரால் முடியும். முடிந்திருக்கிறது.
உதாரணத்துக்கு ஒன்றைச்சொல்லலாம். சந்தோஷ் சிவன் பற்றி அறிந்திருப்பீர்கள். டெரரிஸ்ட் – அசோக்கா உட்பட சில படங்களை எடுத்தவர். இலங்கை வந்த பொழுது ஒரு வீட்டுக்கு விருந்தினராகச் சென்றிருக்கிறார். அங்கே சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுவகைகளினால் அவற்றின் வித்தியாசமான சுவையினால் அவர் ஆச்சரியமுற்று யார் சமைத்தது? எனக்கேட்டாராம். அங்கே இருந்த ஒரு ஒரு சமையற்காரப்பெண்ணைக் காட்டியிருக்கிறார்கள். வித்தியாசமான ருசியுள்ள உணவை சமைத்திருந்த அந்தப்பெண்ணிடம் சந்தோஷ் சிவன் பேச்சுக்கொடுத்துள்ளார். அந்தப்பெண் ஒரு அகதி. அவளிடம் மேலும் உரையாடி ஒரு கதையையே உருவாக்கிவிட்டார் சந்தோஷ்சிவன். அதற்கு திரைவடிவமும் தந்துவிட்டார். படத்தின் பெயர் இனம். இந்தப்படம் ஆங்கிலத்திலும் வெளியாகவிருக்கிறது.
குறிப்பிட்ட பெண் ஒரு கதை சொல்லி மாத்திரம்தான். இலக்கியப்பிரதி எழுதும் படைப்பாளி அல்ல.
மகேந்திரனின் நெஞ்சத்தைக்கிள்ளாதே சுஹாசினியின் முதல் படம். அவர் அசோக்குமார் என்ற ஒளிப்பதிவாளரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த திரைப்படத்துறை மாணவி. அவர் திரையில் நடிக்கவராமல் விட்டிருந்தால் ஒரு சிறந்த கெமராவுமனாகத்தான் வந்திருப்பார்.
நெஞ்சத்தை கிள்ளாதே கதை எவ்வாறு உருவானது என்று சினிமாவும் நானும் என்ற தமது நூலில் விபரிக்கிறார் மகேந்திரன். ஏதோ ஒரு கதையை வைத்துக்கொண்டு புதுமுகநாயகியைத் தேடி பம்பாய்க்கு சென்ற வேளையில் ஒரு ஹோட்டலில் தயாரிப்பு நிருவாகியுடன் தங்கியிருந்திருக்கிறார்.
காலையில் எழுந்து யன்னல் ஊடாக வெளியே கடற்கரையை பார்த்திருக்கிறார். ஒரு யுவதி தேகப்பயிற்சிக்காக ஓடிக்கொண்டிருந்திருக்கிறார். அவளது ஓட்டம்தான் அவருக்கு மின்னலாக பதிந்திருக்கிறது. அந்த ஓட்டத்தின் பின்னால் ஒரு பெண்ணுக்குரிய வாழ்வியல் ஓட்டங்களை மனதில் கதையாக எழுதத்தொடங்கியிருக்கிறார்.
நெஞ்சத்தை கிள்ளாதே படத்தை முடிந்தால் மீண்டும் ஒரு முறை பாருங்கள்.
யாரோ முன்பின் தெரியாத ஒரு யுவதியின் காலைநேர ஓட்டப்பயிற்சிதான் அவருக்குரிய திரைப்படத்தின் கதையாகியிருக்கிறது.
படம் வெற்றிபெற்றது. அந்த யுவதிக்கு அதெல்லாம் தெரியாதுதான். அவளுக்குரிய ரோயல்டியும் இல்லைத்தான்.
ஆனால், ஏ.ஆர் .ரஹ்மானுக்கு ஒஸ்கார் விருதும் பெற்றுக்கொடுத்து பல விருதுகளையும் பெற்ற Slumdog Millionaire (2008) படத்தில் காண்பிக்கப்பட்ட அந்த சேரிப்புறத்துக்கும் அதில் நடித்த சிறுவர்களுக்கும் அந்தப்படத்தினால் மறுவாழ்வு கிடைத்தது.
எத்தனையோ படங்கள் எடுத்திருந்தும் (கோகிலா – அழியாத கோலங்கள்- மூன்றாம் பிறை – நீங்கள் கேட்டவை – சதிலீலாவதி – மறுபடியும் – இரட்டை வால் குருவி – ஜூலி கணபதி – மூடுபனி – வண்ண வண்ண பூக்கள்) தனக்கு மிகவும் பிடித்தமான படங்கள் மூன்றே மூன்றுதான் எனச்சொல்லியிருக்கிறார் பாலுமகேந்திரா.
அவை: வீடு – சந்தியாராகம் – தலைமுறைகள்.
தனது படங்களில் பாடல்காட்சிகளை விரும்பாத பாலுமகேந்திரா தயாரிப்பாளர்களுடன் சமரசம் செய்துகொள்ள நேரிட்டத்தையும் கவலையுடன்தான் சொல்லிவிட்டுப்போயிருக்கிறார்.
படைப்பு மொழி – திரைமொழி பற்றி அவர் இப்படிச்சொல்கிறார்:
சினிமாவும் ஒரு மொழி. ஓவியம் போல – சிற்பம் போல— ஒவ்வொரு படைப்பிற்கும் உருவம் – உள்ளடக்கம் இருக்கிறது. சினிமா மொழியில் அதனைச்சொல்கிறேன். எழுத்தில் வந்த ஒரு கதையை சினிமாவுக்குக் கொண்டு போகும் போது ஏற்படுபவற்றைப் பார்ப்போம். எழுத்தாளனுடைய மிகப்பெரிய பலம் ஒரு விஷயத்தை எடுத்துச்சொல்கிற விதம். அவனுடைய தனித்தன்மை. அவனுடைய சொல்லாண்மை. தமிழ் பலம். அவனுடைய படைப்பை சினிமாவுக்கு கொண்டு போகும்போது அவனுடைய பலமாகக் கருதக்கூடிய ஆளுமை – சொற்தேர்வு – சொற் சிக்கனம். ஒரு வாக்கியத்தை அமைக்கும் விதம் – லாவகம் போன்றவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு கதையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை சினிமா என்ற எனது மொழி மூலம் சொல்லப்போகிறேன். எழுத்தாளனுடைய பலம் என்று சொல்லப்படுபவை சினிமாவுக்குத் தேவை இல்லை. எனவேதான் இலக்கிய உன்னதங்கள் என்று சொல்லப்பட்ட சிறுகதைகள் சினிமாவுக்கு உகந்தவை அல்ல.
கோபி செட்டி பாளையத்தில் ஒரு கிராமத்தில் காதலிப்பார்கள் பிறகு சுவிட்சர்லாந்தில் நியூசிலாந்தில் கனடா அமெரிக்க அவுஸ்திரேலியாவில் பின்னணியில் பல பெண்களும் ஆண்களும் ஆட தங்கள் காதலை உரசி உரசி வெளிப்படுத்துவார்கள். இந்த நிலை வேண்டாம் என்று குரல் கொடுத்தார் பிலிம்ரோலில் படம் எடுத்துவந்த பாலுமகேந்திரா.
அவர் இறுதியாக நடித்து இயக்கிய படம் தலைமுறைகள். பிலிம் சுருள்கள் தயாரிக்கும் கோடெக் நிறுவனம் முற்றாக மூடப்பட்ட பின்னர் சில வருடங்கள் கழித்து டிஜிட்டல் முறை ஒளிப்பதிவைக்கற்றுவிட்டு அவர் எடுத்த படம் தலைமுறைகள்.
அதனை அவர் தமது வாழ்வின் இறுதிப்பகுதியில் தமிழ்த்திரையுலகத்திற்கு சமர்ப்பணம் செய்துள்ளார் என்றுதான் கருதவேண்டும்.
மகேந்திரன் இலக்கியப்படைப்பாளிகளின் கதைகளை படமாக்கியபோது அதற்கான மூல வடிவத்தையே முற்றாக மாற்றியவர். புதுமைப்பித்தனின் சிற்றன்னையை அவர் உதிரிப்பூக்கள் படமாக மாற்றியபோது – மூலக்கதைக்கும் திரைப்படத்திற்குமிடையே பாரிய வேறுபாடு இருந்தது. அதனால் இலக்கிவாதிகள் மற்றும் புதுமைப்பித்தனின் தீவிர வாசகர்களின் கோபத்திற்கும் ஆளானார்.
உமாசந்திரனின் கல்லுக்குள் ஈரம் தொடர்கதை மகேந்திரானல் படமாக்கப்பட்டபோதும் மூலக்கதையிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தார்.
மூலக்கதையின் வடிவம் வேறு திரை வடிவம் வேறு என்பதுதான் மகேந்திரனின் வாதம், அதற்கு அகிலனின் பாவை விளக்கு படமாகி தோல்விகண்டதை சொல்கிறார்.
இச்சந்தர்ப்பத்தில், இலங்கையில் பிரபல்யமான சிங்கள் நாவல்கள் கம்பெரலிய, மடோல் தூவ, யுகாந்தய ( மார்டின் விக்கிரமசிங்க ) அக்கர பஹா ( மடவள எஸ் ரத்நாயக்க) கொளு ஹதவத்த ( கருணாசேன ஜயலத் ) முதலானவற்றின் மூலம் சிதையாமலேயே அவற்றை அதே பெயரில் திரைப்படமாக இயக்கி வெற்றியும் கண்டு தேசிய – சர்வதேச விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற (அமரர்) லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் குறித்து, தமிழக திரையுலம் தெரிந்துகொள்ளவேண்டும்.
திரைப்படங்கள் நமக்குள் உருவாக்கும் கனவுகள் மிக அந்தரங்கமானவை. அது நம் கூடவே வளர்ந்துகொண்டேயிருக்கிறது. சிலநேரங்கள் அந்தக்கனவுகள் பகிரங்கமாகின்றன. பல நேரம் அப்படியே மனதினுள் மூழ்கிப்போய்விடுகின்றன. ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு சினிமா மறக்க முடியாத நினைவு ஒன்றின் பகுதியாகி இருக்கிறது. – என்ற தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் ( இவரும் படைப்பிலக்கியவாதி ரஜனியின் “பாபா” உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியவர்) கூற்றுடன் இந்தப் பதிவை தற்போதைக்கு நிறைவு செய்கின்றேன்.
letchumananm@gmail.com